«

»


Print this Post

நாமக்கல் புதிய வாசகர் சந்திப்பு – கடிதங்கள்


ko2

காலை ஆறு மணிக்கு நமக்கலில் இறங்கியதில் இருந்து இந்த கட்டுரையை தொடங்குவது அடித்து துவைத்து காயவைக்கப்பட்ட தேய்வழக்காம். வேறு எங்கிருந்து தொடங்குவது? என்ன எழுதுவது? எப்படி எழுதுவது? யாருக்காக எழுதுவது? எதை எழுதக்கூடாது? எப்படி எழுதக்கூடாது? எதற்கு எழுதுவது? இப்படி ஓராயிரம் கேள்விகளுக்கு பதில்த் தேடி தான் நாமக்கல் புதிய வாசகர் சந்திப்பிற்கு சென்றிருந்தேன்!

பொட்டிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் ஏற்கனவே சில நண்பர்கள் காத்திருந்தார்கள், இலக்கிய விவாதமும் தொடங்கிவிட்டிருந்தது. புதிய வாசகர்களின் படைப்புகள் முதல் விஷ்ணுபுரம் வரை அவரவர் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தோம்.

அமைப்பாளர்கள், பேருந்து நிலையத்திலிருந்து சந்திப்பு அரங்கிற்கு வாகனம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.  முதல் சவாரியில் நாங்கள் 13 பேர் அரங்கை அடைந்தோம்.

மொத்த ஊரே ஒரு பெரிய பண்ணைத் தோட்டம் போல் தான் இருந்தது. தொடக்கத்தில் வயல்களில் மரவள்ளிக் கிழங்கு செடிகள். உள்ளே செல்ல செல்ல மாதோட்டங்கள். வாகனத்தில் இருந்து இறங்கியதும் மயில் ஒன்று தோகை விரித்து எங்களை வரவேற்றது!

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை, தொட்டுவிடும் தூரத்தில் மலை, இடைவிடாத பறவைகளின் ஒலி இலக்கியம் பேச இதைவிட சிறந்த சூழல் அமைந்துவிடுமா என்ன?

நாங்கள் குளித்து தயாராக, மற்ற நண்பர்களும் வந்து சேர்ந்தனர். காலை உணவு, கோதுமை ரவா உப்புமா, தேங்காய் சட்னியுடன் தயாரானது. நாங்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும்பொழுதே, ஜெமோ எழுந்தருளினார்!நலம்விசாரிப்புகளின் இடையே, தன்னிச்சையாக நகுலன் பற்றி பேச்சு திரும்பியது. அதுவே சந்திப்பிற்கு தொடக்கமாகவும் அமைந்துவிட்டது. இரண்டு நாட்களுக்கு நீண்ட கேள்வி பதில் அமர்வாகவே இந்த சந்திப்பை பார்க்கிறேன்.

அதிகாரப்பூர்வமாக, சந்திப்பு ஞாயிறு மதியம் முடிவடைந்தாலும், இரவு ரயில் ஏறும் வரை ஜெமோ வாசகர்களுடன் தான் இருந்தார். உள்ளறையில் கட்டில் இருந்தாலும், சனி இரவு எங்களுடன் முற்றத்தில் தான் உறங்கினார். எதுவும் பேசாவிட்டாலும், ஒரு ஆளுமையுடன்,அளுமை அருகில் இரண்டு நாட்கள் இருப்பதின் மூலமாக மட்டுமே நாம் அடையக்கூடியது மிகப்பெரியது.

இந்த வாய்ப்பை ஏற்படுத்திய விஷ்ணுபுரம் நண்பர்களுக்கும் சந்திப்பை ஒருங்கிணைத்த நண்பர்கள் வரதராஜன் மற்றும் மகேஷ் அவர்களுக்கு எங்கள் அனைவர் சார்பிலும் நன்றிகள். அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த இருவரின் கைப்பக்குவத்தில் ஐந்து வேளையும் சுவையான உணவு. போதுமென்ற சொல்லே செவிக்கொள்ளாது, அள்ளிப் பரிமாறிய விருந்தோம்பல் நிறைவளித்தது.

ஜொமோவும் கிட்டத்தட்ட அதே மனநிலையில் தான் இருந்தார். அனைத்துக் கேள்விகளுக்கும் மிக ஆழமான பதில்கள், அனுபவ பகிர்வுகள் என ஒருவர் சாதாரணமாக உள்வாங்கக்கூடியதை காட்டிலும் பன்மடங்கு செறிவான  தகவல்களை பகிர்ந்துக் கொண்டு இருந்தார். (நல்ல  வேலை நான் குறிப்பு எடுத்துக்கொண்டேன்!). கேள்விகளுக்கு, நேரடியாக மட்டும் பதில் அளிக்காமல், அந்த கேள்விகள் எங்கிருந்து எழுகிறது என ஊய்த்துணர்ந்து அதற்கும் சேர்த்தே பதிலளித்தார்.

இந்த இரு நாட்களில், நான் கற்றுக்கொண்டது, எனது கேள்விகளுக்கு பதில் அவரிடம் இல்லை. என்னுள் நானே தேடி கணடடைய வேண்டியவை அவை என்பதே!

சந்தோஷ் சரவணன்

 IMG-20190318-WA0022

அன்புள்ள ஜெ,

வணக்கம். நான் தங்களது புதிய வாசகர் சந்திப்பில் கலந்து கொண்டேன். பள்ளி பருவதிலே ஆர்வமாக புத்தங்களை படித்தஎனக்கு,நான் படித்த சுசீந்திரம் பள்ளியில் சிறந்த புத்தங்களை யாரும் அறிமுகம் செய்து வைக்கவில்லை.எனக்கு கிடைத்த சிலநாவல்கள் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்தவைகளாக மட்டுமே இருந்தன. பள்ளி பருவத்தில் அதன் மீது மிகப் பெரிய ஈர்ப்புஏற்ப்பட்டது.

பள்ளியில் நான் பல பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பரிசுகளைப் பெற்று உள்ளேன். ஆயினும், என்னை முறையாய் வழி நடத்திச் செல்ல குடும்பத்தினரோ ஆசிரியர்களோ முன் வரவில்லை. ஏனெனில், நான் நன்றாய் படிக்கும்மாணவி ஆதலால் படிப்பின் மீதான கவனம் குறைந்துவிடக் கூடாது  என்பதற்காக.‌ வாசிப்பின் மீதான என்னுடைய ஈர்ப்பை  யாரும் ஊக்குவிக்கவில்லை. இது புத்தகங்களுக்கும் எனக்கும் மிக பெரிய இடைவெளியை உருவாக்கியது.

நான் தற்போது பணிபுரியும் அலுவலகத்தின் நிறுவனர் இலக்கிய ஆர்வமுள்ளவர். இலக்கியக்  குழு ஒன்றை அமைத்துப் பலபுத்த‌கங்களை வாங்கி எங்களிடையே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கியுள்ளார்.

அதன் வழியே தங்களின் எழுத்துகளை படிக்கும் வாய்ப்பு அமைந்தது. நான் படித்த உங்களின் புத்தகங்கள் எனக்குள் இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்தச் சந்திப்பு எனக்குள் ஒரு தேடலையும் புத்தக வாசிப்பைப் பற்றிய தெளிவையும் ஏற்படுத்தியது. உங்களின் அபரிமிதமான தன்னம்பிக்கையும்,சக்தியும்(Energy) என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியது.

உங்களிடம் கேள்வி கேட்பதற்கே நான் அதிகம் படித்து இருக்க வேண்டும் என தோன்றியது. இதை ஒர் நல்ல தொடக்கமாக எடுத்துக்கொண்டு அதிக இலக்கியப் புத்தங்களை வாசித்து நல்ல கேள்விகளுடன் அடுத்த முறைச் சந்திக்கின்றேன்.

சிறந்த  கடிதங்களை  அதிகம் பார்த்த தாங்கள்  இக்கடித‌த்தை ஒரு குழந்தையின் கிறுக்கல் என எண்ணிக் கொள்ளுமாறுக்கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,

மாதவி சிவதாணுபிள்ளை

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/119401