யானை – கடிதங்கள்

anojan

அன்புடன் ஜெயமோகன் அவர்களுக்கு,

தமிழினியில் வெளிவந்த அனோஜனின் “யானை’  ஈழத்தமிழ் படைப்புலக சூழலில் முற்றிலும் வித்தியாசமாக வெளிவந்திருக்கும் கதை என்பது எனது கணிப்பு. கதை குறித்த எனது முகநூல் பதிவை இங்கு தருகிறேன்.

 யானை – அனோஜன்

தமிழினியின் இம்மாதப்பதிப்பில் வெளிவந்திருக்கும் “யானை” என்ற அனோஜனின் சிறுகதை சமகால இலக்கிய பிரதிகளில் மிக முக்கியமானதொன்று. இந்த கதை இரண்டு கோணங்களில் பார்வைக்கு உட்படுத்தப்படவேண்டியதாக கருதுகிறேன். ஒன்று, கதை மையம் சார்ந்தது. மற்றையது அனோஜனின் இலக்கியப்பார்வை சார்ந்தது.

“யானை” சமகால கதைமொழிகளிலிருந்து சற்று விலகி அகவுணர்ச்சிகள் சார்ந்து செதுக்கியிருக்கும் ஒரு பிரதியாக தன்னை முன்னிறுத்துகிறது. இலங்கையில் தொடர் இடராக காணப்படுகின்ற காணாமலாக்கப்பட்டவர்கள் பிரச்சினையை யானை என்ற படிமத்திற்குள் கொண்டுவந்திருக்கும் அனோஜன், அது சமூகத்தில் செலுத்துகின்ற ஆழமான அரசியல் – சமூக – பொருளாதார தாக்கங்களை அகவுணர்ச்சிகள் சார்ந்து அடுக்கிச்செல்கிறார். கதையின் மையமாக சடைத்து நிற்கும் யானை, கதையின் ஆரம்பத்திலேயே மிகக்கூர்மையாக செதுக்கப்பட்டு வாசகனோடு இரண்டறக்கலந்து விடுகிறது. பின்னர், அந்த யானை சுயாந்தனுடைய அக அலைக்கழிப்புக்களின் ஊடாக வாசகனிடம் தொடர் உரையாடலை நிகழ்த்துகிறது. காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள சிதைவு, அது ஈழச்சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் ஆழமான தாக்கங்கள் என்பவற்றையெல்லாம் குறுக்குவெட்டுமுகமாக கதை பேசிச்செல்கிறது. ஈற்றில், குட்டியானை செய்கின்ற பிளிறலின் வலி உயிர்க்குலையை கொத்தாக பிடித்துவைத்து கதை மையத்தை எடுத்துச்சொல்கிறது.

அனோஜனின் இந்த கதை முழுவதுமே பௌத்த ஞான நூலான “தம்ம பதத்தின் ஒரங்களை பிடித்தவண்ணம் பயணிப்பது இன்னொரு சிறப்பம்ஸம். பௌத்த பேரினவாதம் என்பது வேறு பௌத்த மெய்ஞானம் என்பது வேறு என்பது இந்த கதையின் அடி நதியாக வருடியோடுவது கதை முடிந்த பின்னரும் அகவருடலொன்றை நிகழ்த்தியவண்ணமுள்ளது. அதாவது, பௌத்த மெய்ஞ்ஞானம் என்பது மிகப்பெரிய அறிவுப்பரப்பின் ஊடாக ஞானத்தை கண்டடைவதாக தன்னை விசாலமான எல்லைகளின் வழி நீட்டிவைத்திருப்பது. கிறீஸ்தவம் போல விசுவாசத்தின் வழி பக்தியைக்கோரும் மார்க்கம் அல்ல. மதம் சார்ந்த படிமங்களை இலக்கிய பிரதிகளுக்குள் கொண்டுவரும்போது அநேகம்பேர் தவறவிடுகின்ற இந்த அடிப்படைப்புரிந்துணர்வு “யானை” கதையில் மிக நேர்த்தியாக படிமமாக்கப்பட்டிருப்பதன் மூலம், தமிழ் இலக்கிய சூழலில் இந்த கதை தனக்குரிய இடத்தை தானே தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.

இரண்டாவதாக “யானை” கதை ஏன் இலக்கிய பிரதியாக மாத்திரம் பார்க்கப்படாமல் அனோஜன் ஊடாகவும் பார்க்கப்படவேண்டும் என்பது பற்றியது.

ஈழத்துப்பிரதிகள் சார்ந்த அனோஜனின் அண்மைக்கால கருத்துக்கள் தமிழ் இலக்கியச்சூழலில் பலவகையான விமர்சனங்களை – முகச்சுளிப்புக்களை – ஏற்படுத்தியிருந்தன. அதாவது, அரசியலை அப்படியே வடித்து ஊற்றுவதற்கு இலக்கியத்தில் இடமில்லை. இலக்கியம் எப்போதும் அழகியல் சார்ந்துதான் இயங்கவேண்டும், இலக்கியம் மீதான ஒட்டுமொத்த பார்வை எனப்படுவது எப்போதும் ரசனை சார்ந்த ஒன்றாகவே அமையவேண்டும். அந்த அடிப்படையை இழந்த பிரதிகள் எப்போதுமே இலக்கியத்திற்கான தகுதியைக்கொண்டிருக்காது என்று அனோஜன் சீறிச்சினந்தார். சிலர் மீது சினைப்பர் அடித்தார். பதிலாக அவர் மீது ஆட்லறிகளே வந்து வீழ்ந்தன.

இப்படியானதொரு நிலையில், அனோஜன் எழுதியிருக்கும் “யானை” சிறுகதையானது அனோஜன் திரும்ப திரும்பக்கூறிவந்த இலக்கியத்தினை இரத்தமும் சதையுமாக வெளிக்காட்டியிருக்கிறது என்பது எனது கணிப்பீடு. ஈழத்தின் மிகப்பெரியதொரு அரசியல் பிரச்சினையை – அது மக்கள் மீது செல்வாக்கு செலுத்தும் நிகர் அனுபவத்தை – இந்த சிறுகதை பேசியிருந்தாலும்கூட, அது எவ்வளவுதூரம் அழகியல் சார்ந்து – அக உணர்வுகள் சார்ந்து – அழகியலோடு இலக்கியமாக வார்த்து ஊற்றப்பட்டிருக்கிறது என்று பார்க்கும்போது, அனோஜன் கதிரை நுனியிலிருந்து திரும்ப திரும்ப குழறித்தீர்த்த தனது இலக்கியத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

இலங்கை இராணுவம் என்றும் விடுதலைப்புலிகள் என்றும் பேசாமலேயே ஈழத்தின் தீராச்சிக்கலொன்றை பேசுவதற்கு இலக்கியத்தில் இடமுண்டு என்பது முதல் கொண்டு பலவற்றை இந்த கதை ஊடாக அனோஜன் நிகழ்த்தி காண்பித்திருக்கிறார்.

இலக்கியத்திற்காக அவர் கூறுகின்ற இந்த அனுமதி பத்திரங்கள் – அங்கீகாரங்கள் எல்லாம் இன்னொரு தரப்பினால் தவறென்று வாதிடப்படலாம். ஆனால், தான் கூறும் இலக்கியம் இதுதான் என்பதை நிறுவும்வகையில், இந்தக்கதையை நேர்த்தியாக முன்வைத்திருப்பது அனோஜனின் ஆகப்பெரிய வெற்றி என்று சொல்வேன்.

தெய்வீகன் பஞ்சலிங்கம்

***

அன்புள்ள ஜெ

அனோஜன் பாலகிருஷ்ணனின் யானை ஓர் அழகான சிறுகதை. ஒரு நல்ல கதைக்கு வேண்டிய அடிப்படைக் குணாதிசயங்களில் ஒன்று இன்னொஸென்ஸ்தான். புத்திபூர்வமாக ரொம்பப் பயணம் செய்தால் அது இல்லாமலாகும். வெறும் வடிவத்தைக்கொண்டு சோதனை செய்வது அல்லது எள்ளல் நையாண்டி என்றுதான் அந்த எழுத்து அமையும். இந்தக்கதையில் உள்ள அந்த கள்ளமற்ற தன்மை அழகான கலையம்சத்துடன் உள்ளது.

இதனை நான் சொன்னபோது ஒருவர் ‘கலை அப்படியெல்லாம் கள்ளமற்றது அல்ல’ என்றார். எனக்கு உண்மையாகவே ஆச்சரியமாக இருந்தது. எவ்வளவு அப்பாவிகளாக இருக்கிறார்கள்.  கதை எழுதும்போது மட்டும் இந்த அப்பாவித்தனம் எங்கே போய்விடுகிறது? கதாசிரியனோ கலையோ அப்பாவிதனமானது அல்ல. அது உள்ளடுக்குகள் மிக்கது என்றுதான் அழகியல் விமர்சனமும் சொல்லும். ஆனால் கற்பனை எழும்போது அதற்கு ஒரு குழந்தைத்தனம் தேவை. அப்போதுதான் ஆசிரியனை மீறி கதை வளரும். இதெல்லாம் இலக்கியவிவாதம் பேசிச் சலித்துப்போன விஷயங்கள். மார்க்ஸிஸ்டுக்கள் இப்போதுதான் அங்கே மெல்ல வந்துசேர்கிறார்கள். என்னது காமராஜ் செத்துப்போய்ட்டாரா என்ற மாதிரி கேள்வி கேட்கிறார்கள்

சம்பந்தப்பட்ட நண்பர் முகநூலில் சோபா சக்தி எழுதிய ஒரு குறிப்பைக் கொண்டு வந்து காட்டினார். அதாவது இலக்கியத்தில் அழகியல் என்று ஒன்றும் கிடையாது, வர்க்க அரசியல் மட்டும்தான் உண்டு என்று நிறப்பிரிகை தமிழிலே நிரூபித்துவிட்டதாம், அனோஜனுக்கு அது தெரியவில்லையாம். சோபா சக்தி எந்த ஊரில் இருக்கிறார் ? நல்ல பகடிக்கதைகள் எழுதியவர் இவ்வளவு ‘களங்கமில்லாமலா”   இருப்பார்? இலக்கியவிமர்சனத்திலேயே நிறப்பிரிகை சொன்னவை எல்லாம் ஜீவா வானமாமலை கைலாசபதி காலம் முதல் சொல்லி வந்தவைதான். நிறப்பிரிகை சொன்னதெல்லாம் வழக்கமான மார்க்ஸிய அரசியலுக்கு பின்நவீனத்துவ பாவலாக்களை சேர்த்துக்கொண்டதுதான். அதெல்லாம் அவை தோன்றிய இடத்திலேயே கடந்துபோய் காலம் கால் நூற்றாண்டு ஆகிறது. இவர்கள் மார்க்ஸியத்திலேயே ஒண்ணாப்பு பாஸ் கேஸ் போல.

ஈழத்தில் எழுதப்படும் இலக்கியச் சண்டைகளை பார்க்கையில் அங்கே அரசியல் கதை  நையாண்டிக் கதை தவிர ஒன்றுமே முளைக்காது என்ற எண்ணமே இருந்தது. அனோஜனின் கதை ஒரு பெரிய இனிய அதிர்ச்சி. அப்படியெல்லாம் அழகியலை மழுங்க வைத்துவிட முடியாது, ஒருசிலர் கிளம்பி வந்துகொண்டுதான் இருப்பார்கள் என்ற எண்ணம் வந்தது. வாழ்த்துகள் அனோஜன்

எஸ்.ராமச்சந்திரன்

அன்புள்ள ஜெ

யானை ஒரு முக்கியமான சிறுகதை. படிமங்களை பெரிதாக அழுத்தாமல் சொல்வது, முக்கியமான விஷயங்களை சாதாரணமாகச் சொல்லிச் செல்வது, நீண்ட கால அளவைச் சொல்கையில் அலைபாயாமல் சொல்வது இதெல்லாம் சற்று தேர்ந்த கதையாசிரியரால்தான் எழுத முடியும் விஷயங்கள். அனோஜன் அதைச் செய்திருக்கிறார். இந்தக்கதையில் உள்ள அந்தச் சின்னப்பையனின் உலகம்தான் முக்கியமானது. சின்னக்குழந்தைகள் ‘யானைபெரிசு’ விஷயங்களை மிக மிக ஆச்சரியமாகச் சொல்வார்கள். [என் பையன் சொல்லும் வார்த்தை அது] யானைபெரிசை நோக்கிச் செல்ல ஆசைப்படுவார்கள். ஆனால் அந்த யானைபெரிசு என்ன? அது அவர்கள் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு பெரியது. அவர்கள் அதை அடைந்தால் அது வெறும் இருட்டு என்றுதான் நினைப்பார்கள். பெரிசை நோக்கிச் செல்லும் ஒரு  சிறுவனின் தவிப்பும் பெரிசாக ஆக ஆக அவன் காணும் இருட்டும்தான் கதை. எந்த அலட்டலும் இல்லாமல் எளிய ஒழுக்காக கதையைச் சொல்லியிருக்கிறார் அனோஜன். ஈழ இலக்கியத்தில் கலையமைதி கைகூடிய கதைகள் குறைவு. பகடி என்ற பேரில் புகழப்படும் பல கதைகளை அதிகப்பிரசங்கம் என்றே நான் நினைப்பதுண்டு. இந்தக்கதையின் அமைதி ஜானகிராமன் கதைகளில் உள்ள ஒன்று.

எஸ்சத்யமூர்த்தி

அன்புள்ள ஜெ

சுயந்தனின் யானை என்பது இருட்டுதான். அத்தனை சின்ன வயசிலேயே தெய்வம் போல வந்து அவனை ஆட்கொண்ட அந்த இருட்டுக்குள் அவன் முழுமையாக சென்று மூழ்கிவிடுகிறான்.  எல்லாமே தெரிந்த விஷயங்கள். அரசியல் எல்லாம் சொல்லிச் சொல்லி சலித்தவை. போரேகூட சலிப்பூட்டும் விவரிப்பாக ஆகிவிட்டது. ஆனால்  அந்த சின்னபையனின் கனவு புதிசாக இருக்கிறது. கருவறைக்குள்ளேயே இருட்டை கனவுகாண சபிக்கப்பட்ட ஒரு தலைமுறையின் வாழ்க்கை. அதை ஈஸியான ஒரு கோடு போலச் சொல்லிவிட்டார். பாராட்டுக்கள் அனோஜன். நீங்கள் ஈழத்தின் முக்கியமான கதைசொல்லி

டி.ராஜசேகர்

 ***

முந்தைய கட்டுரைபடைப்புமுகமும் பாலியல்முகமும் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகற்றலெனும் உலகம்: பத்மநாப ஜைனி!