ஒரு சிறுகதை விவாதம்

நக

நாகப்பிரகாஷ் இக்கடிதத்தையும் உடனிருக்கும் கதையையும் அனுப்பியிருந்தார். வாசகர்கள், நண்பர்கள் தங்கள் விமர்சனங்களை, ஆய்வை எழுதலாம். மீண்டும் ஒரு கதை விவாதம் நிகழ உதவியாக இருக்கும்

ஜெ

ஜெ,

இது என்னுடைய ஏழாவது சிறுகதை. ஆனால் இதுவும் நண்பர்கள் அனைவராலும், எழுதுகிறவர்களாலும் நிராகரிக்கப்பட்டது. தெளிவாக இல்லை, பெரும்பாலானவர்களுக்குப் புரியாது. எதுவுமே புதிதாக இல்லை.

இனி வேறு எப்படிச் சிறுகதை எழுத என்று எழுதியதெல்லாம் மூட்டை கட்டி ஓரம் வைத்துவிட்டுப் படிக்க வேண்டும் போலிருக்கிறது. ஆனால் என் எழுத்தில் என்னதான் பிரச்சனை என்று பிடிப்பதற்கு முடியவில்லை. இத்தனைக்கும் மொழியை நான் திருகிக் குழப்பவில்லை. இதற்கு முன் நேர்கோட்டில் மட்டுமே எழுதிய நான், இக்கதையில் மட்டுமே அதிலிருந்து விலகியிருக்கிறேன். அதுவுமே கதையின் தேவை என்று உள்ளுணர்ந்ததால் தானே நடந்தது. ஆனால் அதே நேரம் வெளியே இதைவிடவும் சுமாரான கதைகள் பலவும் கொண்டாடப்படுவதைப் பார்க்கிறேன்.

ஒரே தவிப்பு. ஏனெனில் ஒருவரும் என்னை ஏற்றுக்கொள்ளச் செய்யும்படியான விமர்சனத்தை முன்வைக்கவே இல்லை. மேலும் எவருக்கும் கதை புரிவது போலவும் தெரியவில்லை. வேலைக்கு விண்ணப்பிக்கும்போது முகப்புக் கடிதம் வைப்பது போல விளக்கப் பத்திகள் எழுதும் அளவிலேயே என் கதைகள் இருக்கின்றன போலும். ஆனால் ஏன் அப்படி என்பது தெரியாததே என் ஆகப்பெரிய இயலாமை.

பேரன்புடன்,

நாகபிரகாஷ்

சகடம்

அப்பா சொன்ன கடை இன்னும் திறக்காததால் ஷட்டருக்கு முன் படிக்கட்டில் அமர்ந்தேன். கடை திறக்கும் நேரத்தில் அப்பா வருவதாகச் சொன்னார். சாலையின் மறுபக்கம் எனக்கு எதிரே ஒரு செந்நிற நாய் கட்டிட நிழலில் உடல் நீட்டிப் படுத்திருந்தது. அரைத் தூக்கத்தில் சற்றே திறந்த கண்களால் சாலையில் செல்லும் வண்டிகளின் சக்கரங்களின் சுழற்சியைப் பார்த்துக் கிறங்கியபடி வாலாட்டிக் கொண்டிருந்தது. அந்தப் பக்கம் நடக்கிறவர்களின் செருப்பு நுனிகள் அதற்குத் தெரியும். நீலம், வெள்ளை, கருப்பு, அரிதாக சிவப்பு, பச்சை. மெல்லிய ரப்பர் வார் வைத்தது. மேலே பாதங்களை முழுவதும் முடியிருப்பவை. அவற்றில் புள்ளிகளாகவோ வேறு வடிவங்களிலோ துளைகள் கொண்டவை. ஒன்றிரண்டு ஜோடிச் சின்னஞ்சிறு கால்களின் புழுதிபடிந்த ஷூக்கள். அந்த நாயின் மயிரடர்ந்த கழுத்தில் வருடிக் கொடுக்கலாம். அதையே பார்த்தபடி இருந்தேன். அந்த நாயின் அருகிலேயே வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டுவந்து ஸ்டாண்ட் இட்டார் ஒருவர். இடக்காலை நிலத்தில் ஊன்றி இறங்கினார். உடலை விருப்பப்படி ஊதிப்பெருக்கி வனைந்த பலூன் போல் ஆக்கிருந்தார். நாய் அப்படியே படுத்திருந்தது. அதன் வால் அசையாமல் இருந்தால் உயிரற்றது போலத் தோன்றும். என்ன நினைத்தாரோ நாயைப் பார்த்தபடி வண்டியிலிருந்து இறங்கியவர் தன் வலது காலால் ஓங்கி அதன் தலையில் உதைத்தார். அது மெல்லிய குரலில் ஓலமிட்டபடி எழுந்துத் தாவி நடந்தது. அப்படியே தலையை என் கால்களுக்கிடையில் புதைத்து மறைந்து கொண்டேன். வெளிச்சம் புகவே கண்களை மூடிக்கொண்டு கைகளால் முழங்காலைக் கட்டிக் கொண்டேன்.

‘ஏய், இங்கே என்ன வேலை? அந்தாண்ட போய் ஒக்காரு’

எவரோ சொன்னதைக் கேட்டதும் கைகளை விடுவித்தபடி எழுந்தேன். கடைக்காரர்

உங்க கடைக்குத்தான் வந்தேன். அப்பா வந்துட்டிருக்காரு…’

‘அப்படியா. உள்ள வந்து உக்காரு. கடையைத் தொறக்கறேன். ஒரு நிமிஷம்’

எங்களுக்குப் பக்கத்தில் வெறொருவர் நின்றிருப்பதைப் பார்த்தேன். அவரும் கடைக்கு வந்தாரோ இல்லை இந்த முதலாளியோடு வந்தவரோ. கடையின் முதற்பாதியை மட்டுமே திறந்து எங்களை அனுமதித்தார் அதன் முதலாளி. நான்கு நாற்காலிகளும் எதிரே இரண்டடி உயர மேசைமேல் நகை சோதனையிடும் பொருட்களும் சில ரசாயனக் குப்பிகளும் மட்டும் அங்கிருந்தன. கடையின் மறு பாதியில் பூட்டப்பட்டிருக்கும் கிரில் கதவுகளுக்கு அப்பால் நகைகளும் பணமும் வைப்பதற்கான நான்கு பகுப்புகள் கொண்ட அலமாரி. அதற்கு அருகிலும் ஒரு நாற்காலி. அதன் முதலாளி அமர்வதற்காக மட்டுமாக இருக்கும். வேறு எவரும் அதற்குள் போவதில்லை. ஒருவர் ஏற்கெனவே உள்ளிருக்கையில் அப்படிப் போவதும் கடினம். சிறிய கடை. அதில் பாதி என்பதால் இன்னும் சிறிய அறை. சுவரை ஒட்டி வைத்திருக்கும் அலமாரி. வெளியிலிருந்து கைநீட்டினாலும் எட்டாது. இருந்தாலும் பூட்டப்பட்டிருக்கும்.

அப்பா இன்னும் வரவில்லை. அருகிலிருந்த மெலிந்த மனிதரும் நானும் காத்திருந்தோம். இப்போது வருகிறேன் என்று கடைக்குத் தேவையான சில பொருட்களை வாங்க முதலாளி இறங்கிச் சென்றிருந்தார். ஒட்டடை படிந்த மின்விசிறி மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது. சுவற்றோரம் படிந்து சென்ற மின்சார வயர்களின் ஒன்று கீழிறங்கி எங்கோ மறைந்துபோக மற்றொன்று வெளியே வாசலுக்கு மேலே சென்று கூம்பிய பிளாஸ்டிக் தொப்பிக்குள் இறங்கி விளக்கை அடைந்தது. அருகிலிருந்த மனிதரின் மென்னையான உறுதியான கைகளைப் பார்த்தபடி இருந்தேன். அவற்றை இடுப்புக்கு அருகில் நாற்காலியில் இருபக்கமும் சற்றே மடக்கி ஊன்றியிருந்தார். நான் பார்ப்பதால் புன்னகைத்தார். என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. அவர் ‘யோகா’ என்றார். என் முகத்தில் ஆச்சர்யத்தை கவனித்திருப்பார். ஏதேனும் நான் சொல்வேன் என்று காத்திருந்தார். அமைதியாக அவரை கவனித்தேன்.

‘யோகப் பயிற்சி செய்யறவன். உடம்பு அவ்வளவு இறுகாது. ஆனா பலமும் ஆரோக்யமும் இருக்கும்’

எனக்கும் அவரிடம் பேச வேண்டும் போலிருந்தது. இப்போதுதான் நான். சில வாரங்களாக மட்டுமே.

‘எங்க ஸ்கூல்லயும் யோகா சொல்லித் தர்றாங்க. நானும் கத்துக்கறேன். ஏழு ஆசனம் வரைக்கும் கத்துகிட்டேன்’

அவர் முயன்று சிரித்துக் கொண்டே என்னிடம் பேசத் தொடங்கினார். அந்த கடைக்காரர் இன்னும் வந்திருக்கவில்லை. அப்பாவும் எப்போது வருவார் தெரியவில்லை. அவரோடு எனக்குத் தெரிந்த ஆசனங்கள் குறித்துப் பேசினேன். செய்து காட்டுகிறேன்.

இன்று வேலை முடிந்த பிறகும் சம்பளம் வாங்குவதற்கு பரமேஸ்வரன் காத்திருந்தார். கிழமை தெரியாமல் இருக்காது. ஆனாலும் ஒரு பொறுப்பில்லாமை. பெரும்பாலும் இப்படி நடப்பதுதான். முதலாளி கிளம்பிச் சென்றிருந்தார். அவர் மனைவி இவற்றில் எப்போதும் தலையிடுவதில்லை. வேண்டுமானால் திங்களன்று வந்து வாங்கிக் கொள்ளுங்களேன் என்பதே அவர் பதில். ஒருவேளை கையிருப்பில் பற்றாக்குறை இருந்தால் சமாளிப்பதற்காக இப்படிச் செய்வார்கள். சிலர் நாளை விடுமுறை என்பதால் நேரத்துக்குள் கிளம்பி பேருந்து பிடித்து ஊர் போய்சேரவே பார்ப்பார்கள். ஆனால் அப்படியான உற்சாகமெல்லாம் பரமேஸ்வரனுக்கு வாய்ப்பதில்லை. வீட்டுக்குப் போவது. அங்கு போயும் இதே மனநிலையில் நின்றாக வேண்டும். இதைப் புரிந்தும் புரியாமலும் வரவேற்கும் வயதிலிருக்கிறவர்கள் உள்ள வீடு. அவரவர்க்கு வேண்டிய விதத்தில் விளக்க வேண்டும். அதையும் முடித்து இருப்பதை உண்டதும் கிடந்தால் மறுநாள் சீக்கிரம் விடிந்திருக்கும். அதை சமாளிக்க வேண்டும். வெறுத்துப்போய் முகத்தை எப்போதும் போல வைத்துக்கொண்டு முதலாளியம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்புப்போது பதினொன்றரை. பரமேஸ்வரன் நாளை என்ன செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார்.

போக்குவரத்து பெரும்பாலும் அடங்கிய மஞ்சள் விளக்கொளி மங்கிய சாலையோரமாக நடந்தார். சிலர் ஆட்டோக்களில் பேருந்துக்காக காத்திருக்காமல் வீடுகளுக்கு விரைந்து கொண்டிருந்தார்கள். அருகிலிருந்த குடியிருப்புவாசிகளில் இருவர் கொசுவர்த்திப் பாக்கெட்டுகள் வாங்கிக் கையில் பிடித்துக்கொண்டு ஒற்றை பீடியைப் பகிர்ந்து இழுத்தபடி எதிரில் வந்தார்கள். இவர்களில் ஒருவன் என்றாவது என்னுடன் வேலைக்குப் போட்டியிட்டு அன்றைக்கு என்னை சும்மா உட்கார வைத்திருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டார். இருவரும் சேர்ந்தே அவர் எடை. எப்படியும் பரமேஸ்வரன் அதிகம் உடல் பெருத்தவரில்லை. ஒரு நாளும் வேலையில் சோர்ந்ததில்லை. ஆனாலும் ஏதோ பிறர் உணவையும் பங்கிடுபவர் போலவே பணியிடத்தில் நடத்தப்படுவார். என்ன ஆனாலும் இந்த உடலில் பலமிருக்கிறவரை பரமேஸ்வரனை எவரும் கீழே தள்ளி மிதித்துவிட முடியாது. எமனாயினும் என்று அவரே சொல்வார்.

அடுத்த சந்திப்பில் பாதை மையச்சாலையில் சேரும் என்பதால் முன்னரே அந்தப் பக்கம் கடந்து போக நினைத்தார். இருபுறமும் வண்டிகள் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கடந்தார். அப்போது எதிரேயிருந்து வேறொரு கருத்த மனிதர் கடப்பது தெரிந்தது. கையில் என்னவோ சிறு அட்டைப் பெட்டிகள் அடுக்கிய பை. பரமேஸ்வரன் பார்க்கும்போதே மையச்சாலையிலிருந்து வந்த ஒரு இருசக்கர வாகனம் எதிரிலிருந்த நபரின் பையை உரசிச் சென்றது. அவர் தடுமாற பை விழும்போது சட்டைப் பாக்கெட்டிலிருந்த சில காகிதங்களும் பணத்துடன் சிதறியது. அவர் சுதாரித்து எழுந்தாலும் முதலில் பையிலிருந்து உருண்ட அட்டைப் பெட்டிகளையே எடுத்து சாலையோரம் வைத்தார்.

அதற்குள் அருகில் சென்றுவிட்டிருந்த பரமேஸ்வரன் உதவி செய்யத் தொடங்கினார். அருகில் விழுந்து படபடத்த ரூபாய் நோட்டுகளை தன்னிச்சையாக கவனித்தவர் எவரும் பார்க்காமல் எடுக்க வேண்டும் என்று தன்னறிவின்றியே நகர்ந்தார். அவருக்கும் முன்பாக வேறொரு கை அதனருகில் வருவதை தடுமாறிய மனிதர் கவனித்து வேகமாக நகர்ந்து பணத்தை நோக்கித் தாவினார். அந்நொடியே பரமேஸ்வரன் சுதாரித்து நின்றிருந்தார். ஆனால் தாவிய கருப்பு மனிதர் சற்றே ஓரடி முன்னால் சென்று அதைச் செய்திருக்கலாம். அவர் கைகள் சற்றே நெருங்குவதைத் தவற விட்டிருந்தன. அரை அடி தூரம். அந்த நோட்டுகளின் அருகில் வந்த கை எடுத்துக் கொண்டு உடனே ஓடியது. கீழே மிச்சமிருந்தது பத்தே ரூபாயும் சில நாணயங்களும். எடுத்தவனிடம் எப்படியும் ஆயிரம் ரூபாய்க்கும் குறையாமல் சிக்கியிருக்கும் என்று நினைத்தபடி பரமேஸ்வரன் கீழேயே சாய்ந்து கிடந்தவரைத் தூக்கிவிட்டார். அந்தக் கைகள் நெகிழ்வாக விரிந்து வருவதை உணர்ந்தார். ஒருவேளை இப்படிக் கைகள் முயன்றபோது நீண்டிருந்தால் பணத்தைத் தொட்டுவிட்டிருக்கலாம் என்று தோன்றியது. அந்த மனிதர் வேகமாக சூழ்நிலையைச் சமாளித்துக் கொண்டார். சிரித்தபடி பரமேஸ்வரனுக்கு நன்றி சொல்லிவிட்டு மிச்சமிருந்த சில்லரையைப் தேடி எடுத்துக்கொண்டு பையில் பெட்டிகள் அடுக்கியதும் கிளம்பிவிட்டார்.

அங்கிருந்து பொருளற்று எவற்றையோ சிந்தித்தபடி நகர்ந்து பரமேஸ்வரன் தன் இடது கையிலிருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். இது நாளை பேருந்துக்குப் பயன்படட்டும்.

அப்பா வேர்த்துக் களைத்துப்போய் கடைக்குள் வந்தபோது நான் திவாகரன் செய்து காட்டிய உத்தியானாசனத்தை நினைத்து நடுங்கியபடி உட்கார்ந்திருந்தேன். அவர் முதுகெழும்பைத் தொடு என்றபோது கூச்சமாக இருந்தது. அங்கே வயிறு இருக்கவேண்டிய இடத்தில் வெறும் குழி. அங்கே மரம் வளர்ந்தது போல சதைக்கடியில் அது. அதற்குப் பிறகும் வயிற்றில் இடவலமாக உறுப்புகளை சுழற்றி மாற்றிக் காட்டினார்.

என்னை திட்டினார் அவர். ஒவ்வொரு ஆசனத்திலும் ஏதாவது தவறு செய்திருந்தேன். உடலை இறுக்கினேன். வெறொரு முறை காலைத் தவறாக மடங்கித் தொட்டேன். சக்கராசனம் செய்கிறேன் என்று கீழே விழப்போனேன். அவர் உடனே இருக்கையிலிருந்து எழுந்து கைகளை நீட்டி என்னை தாங்கிப் பிடித்தார். ஏதோ யோசித்தபடி எல்லா ஆசனங்களையும் மீண்டும் செய்யச் சொல்லி என் தவறுகளை தொட்டுத் திருத்தினார். எனக்கு தயக்கமாக இருந்தது. சிரிப்பும் வந்தது. அந்த கடைக்காரரையும் காணோம். அப்பாவும் வந்திருக்கவில்லை. அப்போதே அவர் தான் சில ஆசனங்கள் செய்து காட்டுகிறேன் என்றார். அதற்கு முன்னர் பலமுறை நான் ஆசனங்கள் செய்வதையே விட்டாலும் சரி ஏன் இப்படித் தவறாகச் செய்யக்கூடாது என்று விளக்கினார். அவர் ஒவ்வொரு ஆசனமாகச் செய்யச் செய்ய எனக்கு பயம் அதிகமானது. இதெல்லாம் எனக்கு பள்ளியில் சொல்லித் தரப்போவதில்லை. எப்படியும் எனக்கும் செய்ய வராது. எதற்காகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர் மேலிருந்து என் கண்களை எடுக்க முடியவில்லை. இறுதியாக உத்தியானாசனத்துக்கும் பிறகு பேசுவதற்கே பயந்து உட்கார்ந்திருந்தேன்.

அப்பாவும் திவாகரனும் ஒருவரை ஒருவர் பழைய நண்பர்கள் மீண்டும் சந்தித்ததைப்போல பார்த்துக் கொண்டார்கள். அவன் தானோ அது என்கிற குழப்பம் இருக்கிற நண்பர்கள். ஆனால் அப்பாவுக்கு இப்படி ஒரு நண்பர் இருந்திருந்தால் எனக்குத் தெரிந்திருக்கும். என்னிடம் அப்பா சொல்லாவிட்டாலும் அம்மா எப்போதாவது அவரோடு கோபித்துக் கொள்ளும்போது இப்படி எதையாவது சொல்லத் தொடங்குவாள். எனக்கு ஒரே கதையை மீண்டும் சொல்லக்கூடாது. அம்மாவுக்கோ பத்து நிமிடம் நான் அவள் அருகே உட்கார வேண்டும் போல இருந்தால் எதாவது கதை சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் அவள் யாரிடம் போய் பேசப் போகிறாள். எனக்கு கொஞ்சுவதற்கு எங்கள் தெரு வழியே போகிற நாய்க்குட்டிகளும் பூனைகளும் தேவைப்படுவது போலவே அம்மாவுக்கு நான் வேண்டும்.

ஆனால் அப்பா திவாகரனிடம் ஒன்றும் பேசவில்லை. சற்றே தயக்கத்துக்குப் பிறகு இருவரும் சிரித்துக் கொண்டதும் என்னருகே வந்து அப்பா அமர்ந்தார். அந்த நேரம் கடைக்காரரும் வரவே ஒவ்வொருவரையாக அழைத்து எதிரில் அமரச் செய்தார். முதலில் திவாகரன் போகவே நாங்கள் காத்திருந்தோம். அவரும் எங்களைப்போலவே நகை வைக்கத்தான் வந்திருந்தார். அப்பாவிடம் நான் என்ன நடந்தது என்று சொல்லத் துவங்கினேன்.

எப்போது கடன் வாங்கினோம் என்பது வீட்டில் எல்லாருக்கும் நினைவில் இருந்தது. அவர்கள் வந்து சேர்ந்த நேரத்தில் பரமேஸ்வரன் அன்றைய தினத்தை எப்படிச் சமாளிப்பது என்கிற குழப்பத்தில் கருந்தேனீர்க் குவளையை கையில் வாங்கியிருந்தார். ஒரு கால் லீட்டர் பாக்கெட் பால் வாங்கவாவது கையில் காசிருந்திருக்கலாம் என்று அவருக்கு யோசனை. வீட்டு முன்னால் மூன்று பேர் நின்று கத்தத் தொடங்கினார்கள். எட்டு மணிகூட ஆகவில்லை. எப்படியோ அவர்களை நாளை வரச்சொல்லி பேசிச் சமாளித்து அனுப்ப வேண்டியிருந்தது. நேற்றே அவர் மனைவி பத்திரப்படுத்தி வைத்திருக்கிற ஒரு பவுன் சங்கிலியை அடகு வைப்பது என்று முடிவெடுத்திருந்தார். இப்படி நடக்கும் என்று அவர் ஊகித்திருந்தார். எத்தனை நாள் அவர்கள் வட்டியிலும் குறைவாக வாங்கிக் கொண்டிருப்பார்கள்.

வேறொரு நண்பனிடம் கொஞ்சம் பணம் கேட்கவும் செய்திருந்தார். உடனே அமுதனை அழைத்து நீ கடைக்குச் சென்று காத்திரு நான் வருகிறேன் என்று ஐந்து ரூபாயைத் தந்தார். எந்த அடகுக் கடை என்று விவரம் சொல்லி பேருந்து நிறுத்தம் வரை மகனுடன் நடந்தவர் அவனை பேருந்திலும் ஏற்றிவிட்ட பின்னர் பேருந்து போன திசையிலேயே நடக்கத் தொடங்கினார். அவர் பார்க்க விரும்பிய நண்பன் வீடு அதே அடகு கடைக்குப் போகும் வழியில் இருந்தது.

முன்பொரு நாள் பள்ளி முடிந்து போய் ஊரும் சுற்றிவிட்டு அமுதன் திரும்பியபோது வீட்டில் விளக்கு ஏற்றாமலிருந்தது. ஆனால் அம்மா எங்கே என்று ஆச்சர்யத்துடன் படிக்கட்டுகளில் ஏறி வீட்டுக் கதவை கவனிக்கையில் அது பூட்டப்பட்டிருக்கவில்லை. உள்ளே சென்று இவன் பார்க்கும்போது அம்மா சமையலறைக்கு முன்னால் விழுந்திருந்தாள். எப்படியும் வெகு நேரத்துக்கு முன்னரே அவளுக்கு கைகளால்கள் இழுத்துக் கொள்ளத் தொடங்கியிருக்கும். அவள் அருகிலிருந்த பொருட்களை பற்றிக் கொள்ள முயன்று அவை நழுவிச் சென்று கிடப்பது தெரிந்ததும் அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைவுக்கு வந்தது. சற்று நேரத்தில் அவன் ஆம்புலன்ஸுக்கு அழைத்த பின்னர் பரமேஸ்வரனின் பணியிட மேற்பார்வையாளரை அழைத்துச் சொன்னான். அவன் அம்மாவின் வீங்கிய முகத்தை மடியில் கிடத்தி அணைத்தபடி அமர்ந்திருந்தான். இங்கிருந்து ஓடிவிடவேண்டும் என்றே அவன் மனம் சொல்லிக் கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் சத்தம் தொலைவிலேயே துல்லியமாக அவனுக்குக் கேட்கத் தொடங்கியதும் அழைத்துவர இறங்கி ஓடினான்.

அதே நேரம் எவருடைய வண்டியிலோ இறக்கிவிடக் கேட்டு பரமேஸ்வரன் அங்கு வந்திறங்கினார். அமுதனுக்கு சினுங்கலுடன் கோபம் வந்தது. ஆனால் அவன் அம்மாவை மாடியிலிருந்து இப்போது இறக்கியாக வேண்டும். ஆம்புலன்ஸிலிருந்து ஒரு ஸ்ட்ரெச்சருடன் இருவர் இவனுடன் கேள்வி கேட்டபடி வந்தார்கள். அதில் ஒருவர் அண்டை வீட்டாரிடம் ஏதோ விளக்கிச் சொல்லி உதவி செய்ய ஆட்கள் வேண்டும் என்று கேட்டுக்கொண்டு படிக்கட்டில் ஏறினார். ஆனால் வேறு யாரும் மாடி ஏறி வரவில்லை. அமுதனின் அம்மாவை அவர்கள் ஸ்ட்ரெச்சரில் தூக்கி வைக்கும்போது பாத்திரம் ஒடுக்கு எடுப்பது போன்ற சத்தம் கேட்டது. ஒரு பக்கம் பரமேஸ்வரனை பிடிக்கச் சொல்லி இன்னொருவர் மறு பக்கம் பிடித்துக்கொள்ள மற்றவர் ஸ்ட்ரெச்சருக்கு முன்னால் இறங்கிச் சென்று படிக்கட்டுகளின் திருப்பங்களிலும் தடுமாற்றங்களிலும் தாங்கிக் கொடுத்தார். அவர்களுக்குப் பின்னால் இறங்கப்பார்த்த அமுதன் உடனே திரும்பி வீட்டை அப்படியே சாத்திக் கொண்டி மட்டும் போட்டு இறங்கினான்.

அவன் அப்பா நடுங்கிப் போயிருந்தார். அவர் சட்டையில் வேர்வையும் உடலின் உப்பு வாடையும். அமுதன் ஆம்புலன்ஸ்காரரின் முதுகுப்பக்கம் நின்று தன் அம்மாவைத் தொடுவது போல இறங்கும்போதும் மேலே வந்து வீசியது. இன்னும் ஒரு திருப்பமும் கொஞ்சம் படிகளும் மிச்சமிருக்கையிலேயே பரமேஸ்வரன் சோர்ந்து போனார். அவர் கைகள் சிவந்து உடலில் அதிர்ந்தபடி ரத்தம் பாய்ந்தது. விரல்களும் மூட்டுகளும் நடுங்குவது போல் உணர்ந்தார்.

அவர் இன்னும் எத்தனை தூரம் என்று பயத்துடன் திரும்பிப் பார்த்தவாறு இறங்கி முடிப்பதற்குள்ளாகவே பலமிழந்து போனார். ஸ்ட்ரெச்சரோடு வைத்து அவன் அம்மாவைக் கட்டியிருந்த சேலை இதற்குள் அவிழ்ந்து போக, அவளைச் சரிந்துவிடாமல் பிடிக்க வேண்டியிருந்தது. அமுதனும் தன்னால் இயன்றவரை பிடித்துக் கொண்டான். அப்படியும் அடுத்த திருப்பத்தில் எவருக்குமே முடியாமல் போக கைப்பிடியின் மேல் முட்டுக் கொடுத்து ஸ்ட்ரெச்சரை நிறுத்தினார்கள். ஸ்ட்ரெச்சர் விழாது என்று தெரிந்ததும் பரமேஸ்வரன் கைகளை எடுத்துக்கொண்டு சுவரில் முதுகைச் சாய்த்து தளர்ந்து போய் சரிந்து அமர்ந்தார். அந்த குறுகிய படிக்கட்டுத் திருப்பத்தில் அவர் கால்களை மடக்கி உடலைக் குறுக்கி அமர வேண்டியிருந்தது. அமுதன் இப்போது அப்பா அப்பா என்று அரற்றிக் கொண்டிருந்தான். எப்படியோ இரண்டு பேர் அருகிலிருப்பவர்கள் அப்போது வந்து சேரவே அமுதனின் அம்மாவை ஸ்ட்ரெச்சரிலிருந்து இறக்கி ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டார்கள். ஆனால் அமுதனுக்கு அம்மா நிச்சயம் பிழைத்துக் கொள்வாள் என்று தெரிந்திருந்தது.

முந்தைய கட்டுரைஇரவு – திறனாய்வு
அடுத்த கட்டுரைபடைப்புமுகமும் பாலியல்முகமும் – கடிதங்கள்