பங்கர் ராய்- கடிதங்கள்

pan

அன்பின் ஜெ.

The Lost River Paperback – Michel Danino, Saraswati: The River that Disappeared by K.S. Valdiyaவின் நூல்களோடு கோவை ஈஷா கடந்த ஆண்டு முன்னெடுத்த “நதிகளைக் காப்போம்” பிரச்சார இயக்கம் அளித்த கவன ஈர்ப்புடன் பங்கர் ராய் குறித்து தாங்கள் அண்மையில் எழுதியதை படித்தேன். இந்த நிலையில் “தண்ணீர் மனிதன்” என்று அறியப்பட்டிருந்த ராஜேந்திர சிங்கை சந்திக்க பத்தாண்டுகளாக காத்திருந்த நேரத்தில் இங்கு சென்னை எழும்பூர் இக்ஸா அரங்கில் உரையாற்ற கடந்த சனிக்கிழமை (மார்ச் 16) வந்திருந்தார். “Social activities of youth in 21-st Century” என்கி|ற பெயரில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து ஏறக்குறைய 100 இளைஞர்கள் ஒன்றுதிரண்டிருந்தது நம்பிக்கையை தந்தது.

தமிழக இலக்கிய பதிவுகளில் வட மாவட்டம் பற்றிய பதிவுகள் குறைவாக உள்ளது என தங்களின் வலைதளத்தில் ஒருமுறை எழுதியிருந்தீர்கள். அது உண்மையும்கூட. அப்படிப்பட்ட சமூகச் சூழல் எங்கள் மாவட்டத்தில் நிலவியபோதிலும், ஒரு ஒளிக்கீற்றாக, நம்பிக்கையின் துளியாக கடந்த மாதம் தங்களின் “உரையாடும் காந்தி” கூட்டு வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதும் இருபது – முப்பது வயதுள்ள நூறு இளைஞர்கள் கலந்துகொண்ட இந்த (சென்னை) கூட்டத்தில் “உரையாடும் காந்தி” கொண்டிருந்த வீச்சு வியப்பைத் தருகிறது.

விக்கிபீடியா சுட்டியிது. https://en.wikipedia.org/wiki/Rajendra_Singh

முசோரியிலுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பயிற்சி அகாடமியிலும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வகுப்பெடுத்த ராஜேந்திரசிங் தமிழக தலைநகரில் உற்சாகம் கொப்பளிக்க இளைஞர்களை நெறிப்படுத்தினார். “நதிகளை இணைப்பது மாபெரும் கனவு, செலவு பிடிக்கக் கூடியது, அதைவிட முக்கியமாக மக்களை நதிகளுடன் இணையுங்கள்” என்பது நடைமுறை சாத்தியுள்ளதே.

தண்ணீரின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதும் தண்ணீருக்கான மரியாதையை வழங்குவதும், தண்ணீர் மீது பற்று வைப்பதுமே வறட்சியைப் போக்க தற்போதுள்ள ஒரே உடனடித் தீர்வாகும். இன்று தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த புரிதல் இல்லை. நீர் மீதான பற்று இல்லை என்று சொன்ன ராஜேந்திர சிங் சொந்த சாதி, மத, மொழி அபிமானத்தில் வாக்களிப்பதை கைவிட்டு தண்ணீர் போன்ற வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க விடுத்த வேண்டுகோளுக்கு நாம் அளிக்கும் பதில் பழைய தொல்குடி எச்சங்களா அல்லது நாகரிக மனிதர்களா என்பதை காட்டும் போல தெரிகிறது.

இதன் பொருட்டு நீண்டதொரு பயணம் செய்து வந்திருந்த மூத்த செயல்பாட்டாளர் கொடிக்கால் சேக் அப்துல்லா உண்மையில் அரிதானதொரு ஆளுமை.

கொள்ளு நதீம்

***

அன்புள்ள ஜெ,

வணக்கங்கள்.

நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் பலப்பல பங்கர் ராய்கள் அடையாளம் காணப்படாமலேயே  மறைந்து கொண்டிருக்கிறார்கள். தன்னார்வ தொண்டில் ஈடுபட்டு வரும் என் போன்ற பலருக்கு அவர் பற்றியும் அருணா ராய் பற்றியும் இருபது ஆண்டுகளாக தெரியும். அருணா ராய் அவர்கள், தகவல் உரிமைச் சட்ட வடிவமைப்பிலும் நடைமுறைபடுத்துவதிலும் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார்.

barefoot college என்பதை வெறும் பாத கல்லூரி என்று மொழிபெயர்ப்பதை என்னால் சகிக்க முடியவில்லை. barefoot engineer, barefoot doctor, barefoot technician. . .இப்படி நீண்டுகொண்டே போகிறது பட்டியல். வெறும் பாத மருத்துவர், வெறும் பாத பொறியாளர், வெறும் பாத தொழில் நுட்ப உதவியாளர் ஏதாவது பொருந்துகிறதா? இந்த இடத்தில் அது எளிமையான அல்லது சிக்கனமான அல்லது துரிதமான ஒரு குறிப்பிட்ட தேவைக்கு ஏற்ற குறுகிய கால பயிற்சி என்று பொருள்படுமாறு ஒரு சொல் வேண்டும்.

இன்னொரு மிக முக்கியமான விஷயம் (பங்கர் ராயே ஒத்துக்கொள்வார் என நினைக்கிறேன் ) சிறுசிறு வட்டார பொருளாதார எல்லைகளுக்கு உள்ளே மட்டுமே இது வெற்றிகரமாக செயல்பட வேண்டும் / முடியும். உதாரணமாக சூரிய ஒளி மின்பலகைகளை கிராமத்து தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்வது. இந்த மின்பலகைகள் அருகாமையில் விற்கப்பட்டு பொருத்தப்பட்டால் மட்டுமே பராமரிக்க முடியும் – பராமரிப்பு மிக அதிகம் தேவைப்படும் – அடிப்படை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால். வேறு மாநிலங்களுக்கோ நாடுகளுக்கோ ஏற்றுமதி செய்ய இயலாது – கிராமப்புர வருமானத்தை பெருக்கலாம் என்று சொல்ல முடியாது.

பல முயற்சிகள் அளவுக்கு அதிகமாய் “புகழ் வழிபாடு” பெரும்போது அவற்றின்

இயல்பிலிருந்து, தற்சார்பு நிலையிலிருந்து விலகிச் செல்வதை பலப்பல உதாரணங்கள் காட்டுகின்றன. பங்கர் ராயின் அடிநிலை பயிற்சி பள்ளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

ராமசுப்ரமணியன்

தேக்கம்பட்டு.

***

முந்தைய கட்டுரையானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை
அடுத்த கட்டுரைஆழத்து விதைப் பரப்பு