அஸ்வத்தாமன் அணுகி வருந்தோறும் புரவிக்கனைப்பொலி பெருகிப் பெருகி வந்தது. அது நான்குபுறங்களிலும் இருந்து எழுந்து அவர்கள் அனைவரையும் சூழ்ந்தது. சகதேவன் அச்சத்துடன் “மூத்தவரே…” என்றான். யுதிஷ்டிரர் “யாதவனே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கூவினார். “காத்திருப்போம்” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் “அவர் போர்முகம் கொண்டு வருகையில் அமைந்திருந்தேன் என்னும் பெயர் எனக்குத் தேவை இல்லை…. நாம் முன்னெழுந்து செல்வோம்” என்றான். யுதிஷ்டிரர் சீற்றத்துடன் “அறிவிலி… அவன் சொல்வதை கேள். உன் எண்ணத்தை இங்கே எவரும் கோரவில்லை” என்றார். அர்ஜுனன் “எழுக! முன்னெழுக!” என்று கூவினான். இளைய யாதவர் தேரை முன்னெடுக்க யுதிஷ்டிரர் “யாதவனே…” என்றார். “நான் பாகன், வீரனின் ஆணைக்கு கட்டுப்பட்டவன்” என்றார் இளைய யாதவர்.
யுதிஷ்டிரர் “வேண்டாம்… அந்தப் புரவிக்கனைப்பொலியே அச்சமூட்டுகிறது” என்றார். சகதேவன் “அவர் கொண்டிருக்கும் அம்புகள் என்ன என்று தெரிந்த பின்னர் எழுவோம், யாதவரே” என்றான். பீமன் “எதை அஞ்சுகிறீர்கள்? உங்கள் பழியின் வடிவென எழுந்து வருகிறதா அந்த வாளி? அவ்வண்ணம் என்றால் அதன் முன் ஆண்மையுடன் சென்று பணிவதே முறை. ஆம், நாம் பெரும்பழி செய்தவர்கள். வேறெவ்வண்ணமும் நம்மை கற்பனையில் வடிவமைத்துக்கொள்ள வேண்டியதில்லை” என்றான். “மந்தா, நீ உன் வாயை மூடு… இனி நீ பேசினால் என்னால் பொறுத்துக்கொள்ள இயலாது” என்றார் யுதிஷ்டிரர். நகுலன் “அது புரவிக்கனைப்பொலி அல்ல” என்றான், “ஊழித்தீ எழுகையில் புரவிக்கனைப்பொலியாகவும் பரவுகையில் யானைப்பிளிறல் போலவும் அமைகையில் சிம்மக்குரல் எனவும் ஒலிக்கும் என்று நூல்கள் சொல்கின்றன.”
அர்ஜுனனின் தேர் முன்னால் செல்ல யுதிஷ்டிரர் கண்ணீருடன் “என்ன நிகழவிருக்கிறது? இன்றுடன் நம் குடி அழிகிறதா?” என்றார். சகதேவனிடம் “அவனை எவ்வண்ணமேனும் தடு… செல்க… அவனை தடுத்து நிறுத்துக!” என்று பதறினார். சகதேவன் முன்னால் செல்ல “வேண்டாம்… அவனுடன் செல்லாதே… இங்கேயே நில்” என்றர். “மந்தா, நீ செல்… உன் இளையோனுடன் நில்” என்றபின் “வேண்டாம், உனக்கும் விற்கலை தேர்ச்சி இல்லை. நீ ஒன்றும் செய்ய முடியாது” என்றார். “மூத்தவரே, ஏதேனும் செய்யமுடியும் என்றால் இளைய யாதவரால் மட்டுமே… அவரிடம் நம்மை அளித்து காத்திருப்போம்” என்றான் சகதேவன். யுதிஷ்டிரர் “எவரேனும் அப்படி காத்திருக்க இயலுமா? வருவது குடியழிவு… பெருந்தழல்…” என்றார். “ஆம், தெய்வத்திற்கு தன்னை அளித்து முற்றாக உளம் இன்றி அமர்ந்திருக்கும் அடியார் எவர்? அவ்வண்ணம் உளமடங்கியோருக்கு துயர் என ஏதேனும் உண்டா?” என்றான் பீமன். “மந்தா” என யுதிஷ்டிரர் கூவினார்.
அஸ்வத்தாமன் தோன்றுவதற்கு முன்னரே அவனை அவர்கள் கண்டுவிட்டிருந்தார்கள். அவன் வந்த வழியில் அலறல்களும் கூச்சல்களும் எழுந்தன. புயல்காற்று காட்டை விலக்கி வகுந்து அணைவதுபோல அவன் படைநடுவே வரும் வழி தெரிந்தது. யுதிஷ்டிரர் “தெய்வங்களே, மூதாதையரே, காத்துகொள்க… பிழை பொறுத்து எங்களுடன் நிலைகொள்க!” என்று கூவினார். பீமன் விழிசுருக்கி நோக்கியபடி நின்றான். சகதேவன் அறியாமல் தன் வில்லை எடுத்தபடி முன்னே செல்ல நகுலனும் தொடர்ந்தான். “என்ன செய்கிறாய்? அறிவிலி, நில்” என்று யுதிஷ்டிரர் கூவினார். “இங்கே நின்றிருப்பது என்னை கூசவைக்கிறது. நான் மூத்தவருடன் நின்றிருக்கவேண்டும்” என்றபடி சகதேவன் முன்னால் செல்ல நகுலன் தொடர்ந்தான். “நீ செல்… மந்தா, நீயும் செல்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “அதனால் எப்பயனும் இல்லை” என்றான் பீமன்.
அஸ்வத்தாமன் இடிவிழுந்து எரிந்துகொண்டிருக்கும் மரம் என தேரில் தோன்றினான். அவன் தேரின் புரவிகள் வெறிகொண்டவைபோல பற்களை இளித்து கழுத்துக்களை வெவ்வேறு கோணங்களில் தூக்கி திமிறிக்கொண்டிருந்தன. அவற்றின் குளம்புக்கால்கள் தரையை ஓங்கி ஓங்கி அறைந்தன. தரையின் அதிர்வில் தேர்களிலிருந்து புழுதி உதிர்ந்தது. யானைகள் அஞ்சி உடலதிர பிளிறலோசை எழுப்பி பின்னடைந்தன. அஸ்வத்தாமனின் உடலின் ஒளி எதனால் என பீமன் உடனே கண்டடைந்தான். அது அவன் தலையில் இருந்த அருமணி ஒன்றிலிருந்து எழுந்தது. அது நெய்க்குடம் வெடித்து எரிவதுபோல சுடர்விட்டது. அந்த ஒளியில் அவன் குழல்கற்றைகள் தழல்களாயின. முகம் கனலென்று சீற, தாடி கொழுந்துவிட்டு பறந்தது. . அவன் விழிகளும் இரு மணிகளென எரிந்தன.
“அது அவன் தந்தை அளித்த மணி” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “அந்தச் சிரோமணியுடன் அவன் பிறந்தான் என்று நிமித்திகர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். அது ருத்ரமணி. அனல்வண்ணனின் நுதல்விழி மண்ணில் எழுந்தது. அவனை காலருத்ரனாக ஆக்கும் ஆற்றல் கொண்டது. இளையோனே, சிவவடிவென எழுந்து வருகிறான். அவனை எதிர்கொண்டு வெல்ல எவராலும் இயலாது. அவனிடம் சென்று அடிபணிவது ஒன்றே நாம் செய்யக்கூடுவது…” பீமன் “அடிபணிந்து என்ன சொல்வது? அறப்பிழை செய்தோம், பொறுத்தருள்க என்றா? அவனால் கொல்லப்படுவோம் என்றால் அதுவே நாம் விண்ணேகும் வழி… அதுவே நிகழ்க!” என்றான். யுதிஷ்டிரர் “நான் என்ன செய்வேன்! தெய்வங்களே! மூதாதையரே…” என்று கூவினார். அஸ்வத்தாமனின் தேர் மலைமேலிருந்து பாறை உருண்டு விழுவதுபோல் அணைந்தது. விழிகளை மின்னல் ஒன்று நிரப்ப வெண்ணிறவிழியின்மையால் அனைவரும் திசையழிந்தவர்களானார்கள். அவர்களைச் சூழ்ந்தது செவிகளை முற்றழித்த இடியோசைத்தொடர்.
பார்பாரிகன் சொன்னான்: அஸ்வத்தாமன் தன் உடல் ஒளிகொண்டிருப்பதை தேரின் உலோகப்பரப்பில் விழுந்த தன் பாவையின் செந்நிற மின்னில் இருந்தே உணர்ந்தான். ஒருகணம் தன்னுடன் பிற எவரோ இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது. வலப்பக்கமும் இடப்பக்கமும் அவனை அனல்வண்ண ருத்ரர்கள் சூழ்ந்திருந்தனர். அவர்கள் நின்று கொழுந்தாடினர், மாபெரும் நாவுகள் என. பின்னர் அவன் தன் நெற்றியில் சூடிய தலைமணியின் ஒளியே அது என புரிந்துகொண்டான். அவன் உள்ளம் பெருகி எழுந்தது. சிவசிவசிவ! சிவமே யாம்! சிவமே யாம்! சிவமே யாம்! என அவன் அகம் கூவி ஆர்ப்பரித்தது. ஹரஹரஹர மகாதேவ்! அழிப்பவனே, பெருந்தேவனே! முழுமுதலே, மூவிழியனே! இதோ நான். இதோ நீ!
அவன் பிறந்தபோதே அந்தத் தலைமணி அவன் நெற்றியில் இருந்தது என்று கதைகள் சொல்லின. அவன் அன்னை குனிந்து பிறந்த மைந்தனைப் பார்த்தபோது நெற்றியில் இருந்த சிறிய பள்ளத்தை நோக்கி “என்ன ஆயிற்று? எவர் நகமேனும் பட்டதா?” என்றாள். அது நகக்கீறல் போலவும் தோன்றியது. “அல்ல, அன்னையே. அது மைந்தரின் பிறப்பியல்பு” என்றாள் வயற்றாட்டி. துரோணரிடம் அவன் அளிக்கப்பட் போது “என்ன இது, மைந்தனேதானா? நான் ஏதோ குதிரைக்குட்டி பிறந்துள்ளது என்றல்லவா எண்ணினேன்?” என்று நகைத்தபடி குனிந்து நோக்கி “இது என்ன? நெற்றியில்? செந்தூரம் அணிவித்தீர்களா? அவ்வழக்கம் உண்டா?” என்றார். “அது அவர் தலையில் பிறப்பிலேயே இருந்தது. குழவிகளுக்கு அவ்வண்ணம் பிறப்புத்தடங்கள் பல அமைவதுண்டு” என்றாள் வயற்றாட்டி.
நிமித்திகரை வரவழைத்து நோக்கச் செய்தார் துரோணர். “அந்தணரே, இம்மைந்தன் சிவக்கூறு. சூரியனின் கதிர்பட்ட வைரம். இது அவன் நுதல்விழி” என்று நிமித்திகர் சொன்னார். “பதினெட்டு நாட்களில் இது மறைந்துவிடும். ஆனால் எப்போதும் இருந்துகொண்டுமிருக்கும்… இவரை வெல்ல மண்ணில் எவராலும் இயலாது. என்றும் குன்றா இளமை இவர் தோள்களில் திகழும்.” துரோணர் நிலையழிவுடன் சற்று தயங்கி “ஆனால்…” என்றார். அவர் கேட்க வருவதை உணர்ந்த நிமித்திகர் “ஆம், அழிக்கப்பிறந்தவர்” என்றார். “எவரை?” என்றார் துரோணர். “அதை நாம் அறிய இயலாது. அது மேலும் பல்லாயிரவர் பிறவிநூல்களுடன் தொடர்புள்ளது” என்று முது நிமித்திகர் சொன்னார். தந்தை அவனிடம் அதை ஒருமுறை சொன்னார். “ஒவ்வொருவருக்கும் பிறவிப்பணி ஒன்றுள்ளது. உன் பணி உன் நெற்றியில் உறங்கெரி வடிவில் உறைகிறது.”
அஸ்வத்தாமன் எப்போதுமே அந்த எரிநெற்றியை தன்னில் உணர்ந்திருந்தான். சினமெழுகையில் இரு புருவங்களுக்கு நடுவே ஒரு எரிகுளம் உருவாவதுபோல். உடலெங்கும் அதன் வெம்மை பரவுவதுபோல. அது தன்னை முற்றாக நிலை மாற்றுவதை கண்டான். கல்வியும் பிறவிப்பண்புகளும் அகன்று வெற்றுவிலங்கு என நின்றிருக்கச் செய்தது அது. அவன் அர்ஜுனனிடம் இறுதியாக அம்புகோத்துக்கொண்ட அந்நாளில் அவனுக்கென எழுந்த அர்ஜுனனின் அம்புபட்டு அந்த யானைக்குழவி அலறியபடி நீரில் விழுந்ததைக் கண்டபோது அவனுக்குள் அந்த அனல் முற்றணைந்தது. அவன் உடல் குளிர்கொண்டு நடுங்கிக்கொண்டிருந்தது.
அவன் அன்று மாலை அந்த யானையைக் காண கொட்டிலுக்குச் சென்றிருந்தான். அவன் காலடியோசை கேட்டு அது அஞ்சி ஓலமிட்டது. “அது மிக அஞ்சியிருக்கிறது, உத்தமரே. எவரும் அருகணைய இயலாது” என்றார் யானைக்கொட்டில் காவலரான சூர மதங்கர். அவன் யானையை நோக்கியபடி நின்றான். அதன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது, நீர்ப்பரப்பில் காற்று விழுவதுபோல. “இதற்கு பெயர் என்ன?” என்றான். மதங்கர் தயங்கினார் “ஏன்?” என்றான் அஸ்வத்தாமன். “அதாவது…” என அவர் மேலும் தயங்க அருகே நின்றிருந்த இளம் மதங்கன் “தங்கள் பெயர்தான்… இதுவும் இளமையில் குதிரைபோல் கனைத்தது” என்றான். அவன் தன் உடல்மேல் ஒரு குளிர்ந்த அறை விழுந்ததுபோல் அதை உணர்ந்தான். பற்கள் கிட்டித்துக்கொண்டன. விழிகள் நீர்கோக்குமளவுக்கு உடல் விதிர்ப்பு கொண்டு கூசியது. அங்கிருந்து உடனே திரும்பி விட்டான்.
அதன்பின் அந்த எரியை அவன் அஞ்சினான். தன் ஊழ்கமனைத்தைக்கொண்டும் அதை அணைக்கவே முயன்றான். அம்பு பயில்தலையே அவன் தன் ஊழ்கச்செயல் என கொண்டிருந்தான். மிகக்கூரிய அம்புகளால் மிகமிக நுண்ணிய இலக்குகளை அடித்து அடித்து தன் அகத்தை தீட்டிக்கொண்டே சென்றான். அதை மறந்தான், கடந்து அப்பால் சென்றான். ஆடியில் அவன் தன்னை நோக்கிக்கொள்வதே இல்லை. விழிமூடாமல் நீர்ப்பரப்பை நோக்கி குனிவதுமில்லை. ஆயினும் என்றேனும் அவன் தன்னை அறியாது மென்பரப்பில் நோக்கிக் கொண்டால் அவன் விழிகள் நுதல்மையத்தையே நாடின. அங்கே சிறிய குழியாக அந்தத் தலைமணியை அவன் உணர்ந்தான். நெஞ்சு திடுக்கிட விழிவிலக்கிக்கொண்டான். அதிலிருந்து தனக்கு மீட்பில்லை என பின்னர் அறிந்துகொண்டான்.
அவன் உத்தரபாஞ்சாலத்தின் அரசனாக அரியணை அமர்ந்த அன்று அவன் தந்தை ஓர் அருமணிகட்டிய சரடை அவனிடம் அளித்தார். அது இளஞ்செம்மை நிறத்தில் எளிய கல்போல தோன்றியது. “இது உன் அன்னைவழி தாதை சரத்வான் உன் அன்னைக்கு அளித்தது. மைந்தன் பிறந்தால் அவனுக்குரியது என அவர் கூறியிருந்தார். எங்களுக்கு எவ்வகையிலும் இது பயனற்றது என்பதனால் குடுக்கைக்குள் இருந்து எடுத்து நோக்கியதே இல்லை. உன் அன்னை இதை அஞ்சினாள். இது உன்னை அறத்திலிருந்து வழுவச்செய்யும் என்று அவளுக்கு ஐயம். அருமணி சூட அந்தணர்க்கு உரிமை இல்லை. நீ ஷத்ரியன் ஆவதை அவள் வெறுக்கிறாள்” என்றார். அவன் ஒன்றும் சொல்லவில்லை. “உனக்குரியது இது. இதைச்சூடுக!” என்றார் துரோணர். “இது துவாரகையின் சியமந்தகத்திற்கு நிகரானது. பிறிதொன்றிலா அருமணி அரசர்களுக்கு பெருமை சேர்ப்பது.”
அவன் அந்த அருமணியை சூடியபடி மணிமுடி சூட்டிக்கொண்டான். அதை ஆராய்ந்த மணிதேருநர் “அரசே, இது செந்நிற மணி. ஷாத்ர குணம் கொண்டது. மண்வெல்வது, குருதி கோருவது, ஒருபோதும் விழைவடங்காதது. இதற்கு நிகராக பொற்குவைகளும் மணித்திரள்களும் வைக்கப்பட்டாகவேண்டும்” என்றார்கள். பூசகர்கள் “இது ருத்ரமணி. இதை சிவ வடிவெனக் கண்டு நாளும் பூசை செய்யவேண்டும். மலரும் நீரும் அன்னமும் கொண்டு நிறைவுசெய்யவேண்டும்” என்றார்கள். ருத்ரமணி உத்தர பாஞ்சாலத்தில் ஆலயம் ஒன்றில் வைக்கப்பட்டது. அதற்கு மூவேளை பூசெய்கை நிகழ்ந்தது. ஒவ்வொரு கருநிலவு நாளிலும் அவனே சென்று அதை வணங்கி மீண்டான்.
போருக்கென எழுந்தபோது அவன் தந்தையின் தூதுடன் வந்த மாணவனாகிய சுதமன் “ஆசிரியர் தாங்கள் தந்தை அளித்த தலைமணியை அணிந்து வரவேண்டுமென விழைகிறார்” என்றான். அஸ்வத்தாமன் திடுக்கிட்டான். “ஆனால் அது இங்கே பூசனைத்தெய்வமாக உள்ளது” என்றான். “அதைத்தான் ஆசிரியர் சொன்னார், பூசனைத்தெய்வம் படைக்கலமாகும் தருணம் இது என உங்களிடம் சொல்லும்படி சொன்னார்.” அவன் அமைச்சர்களிடம் கேட்டான். “ஆம் அரசே, காவல்தெய்வமெனத் திகழும் அருமணிகளை போர்க்களத்தில் சூடிச்செல்லும் மரபுண்டு. அவற்றில் எழும் தெய்வம் நம் குடியை காக்கும்” என்றார் அமைச்சர். அவன் அதை தன்னுடன் கொண்டு வந்தான். ஆனால் எங்கும் அணிந்துகொள்ளவில்லை.
குருக்ஷேத்ரத்தில் அவன் போருக்கெழுந்தபோது துரோணர் “அந்தத் தலைமணியை அணிந்துகொள்” என்றார். அவன் பேசாமல் நின்றான். “அது உனக்கு காவல்” என்றார். பின்னர் “உன்னைக் காக்க அதனால் மட்டுமே இயலும்” என்று சேர்த்துக்கொண்டார். அவன் மீண்டும் பேசாமல் நின்றிருக்க “இது என் ஆணை” என்றார். அவன் முதல்நாள் போரில் தலையில் அதை அணிந்திருந்தான். ஆனால் எளிய கல் எனத் திகழ்ந்த அது எவர் விழிகளையும் கவரவில்லை. அவனே இருநாட்களில் அதை முற்றாக மறந்துவிட்டிருந்தான். கிருபர் மட்டுமே ஒருமுறை அதை நோக்கினார். “அது ருத்ரமணி அல்லவா?” என்றார். “ஆம்” என்றான். “அதில் ருத்ரன் எழாமலேயே இப்போர் முடிவடைக!” என்றார்.
ஏகாக்ஷர் சொன்னார்: அரசி, நான் களத்தில் பெருந்தழல் என எரிந்தெழும் அஸ்வத்தாமனை காண்கிறேன். அவனைக் கண்டு அஞ்சி பாண்டவப் படைகள் சிதறி விரிந்தகல எதிரில் காண்டீபத்துடன் அர்ஜுனன் மட்டும் நின்றிருந்தான். அவனை துணைக்க தேரில் வந்த நகுலனும் சகதேவனும் அவ்வனலுரு கண்டு அஞ்சி பின்னடைந்தார்கள். அஸ்வத்தாமன் வெறிக்குரலில் “சொல்லும் வில்லும் அளித்த ஆசிரியனை வஞ்சத்தால் வீழ்த்தியவன் எவன்? ஆண்மையிருந்தால் நான் எனச்சொல்லி அவன் எழுக!” என்றான். அர்ஜுனன் “நான்! நான் அதை செய்தேன்” என கைதூக்கி கூவினான். “இந்த காண்டீபத்தால் அவரை நான் கொன்றேன். என் குலக்கொடி அடைந்த அவைச்சிறுமைக்கு அவரும் பொறுப்பே என்பதனால். என் ஆசிரியனின் மெய்வேதம் இங்கு திகழ அவர் தடை என்பதனால்” என்றான்.
“அறப்பிழையால் நிலை நிறுத்தப்படுவதா உன் வேதம்?” என்றான் அஸ்வத்தாமன், “உன் குலத்திற்கு இழைக்கப்பட்ட சிறுமையை பிறருக்கு சிறுமையிழைத்தா நீ நிகர்செய்வாய்? கீழ்மகனே, உன் குடிக்கு தீராப்பழி சேர்ந்தது இப்போது… எடு வில்லை. உன்னை அறம் எரித்தழிப்பதை நான் காட்டுகிறேன்.” அர்ஜுனன் காண்டீபத்தைத் தூக்கி “ஆம், நாம் இறுதியாக இக்களத்தில் எதிர்நிற்கிறோம். ஓங்கிய வாளும் இலக்குநோக்கப்பட்ட அம்பும் தாம் மறப்பதில்லை” என்றான். “பேசாதே” என்றபடி அஸ்வத்தாமன் அவனை அனலம்பால் அறைந்தான். அதை நீரம்பால் அர்ஜுனன் முறித்தான். சிம்மத்தை யானை எதிர்கொண்டது. கூகையை செம்பருந்து. இடியை சிதறடித்தது புயல். மின்னலை மூடியது முகில். அவர்களின் போர் எரிந்து எரிந்து எழுந்தது. அர்ஜுனனின் கை எழுந்தது.
“அழிக உன் குலம்! அழிக உன் குடி!” என்று கூவியபடி அஸ்வத்தாமன் நாராயணாஸ்திரத்தை எடுத்தான். அவன் கைவிரல்கள் அலைமுத்திரை கொண்டபோதே ஆழிவாளி எழுகிறதென்பதை அனைவரும் கண்டனர். விண்ணில் இடித்தொடர் எழுந்தது. மின்னல் சாட்டைகள் சுழன்று சுழன்று ஒளிர்ந்தன. அவர்களை எரியும் புகைமுகில்களும் முற்றாகச் சூழ்ந்தன. அஸ்வத்தாமன் “விண்ணில் இருக்கும் எந்தையே, இதோ உங்கள் வஞ்சத்திற்காக…. உங்கள் அழல் அவிக! உங்கள் விழைவென எழுக இவ்வாளி!” என்று கூவினான். அவன் கையில் அலையம்பு எழுந்தபோது அங்கிருந்த அனைவரும் விழிமயங்கினர். அவர்களின் கண்முன் காற்று சிற்றலைகளாகியது. கண்களை மூடி செவிகளை பொத்திக்கொண்டு தலை தாழ்த்தி அவர்கள் கூச்சலிட்டனர். பலர் மயங்கி விழுந்தனர். செவிகள் உடைந்து குருதி வழிய, மூச்சுத் திணறி துடித்தனர். மூக்கிலும் வாயிலும் குருதி பெருக விழுந்து வலிப்பு கொண்டனர். நிலத்தில் தலையை அறைந்து அறைந்து ஓலமிட்டனர்.
நுண்சொல்லை உரைத்து அஸ்வத்தாமன் நாராயணவாளியை எடுத்ததும் இளைய யாதவர் உரக்க “அனைவரும் படைக்கலங்களை கைவிடுக! தேர்களில் இருந்தும் விலங்குகளிலிருந்தும் இறங்குக! நிலத்தில் மண்டியிடுக…” என்று கூவினார். அவர் சொற்களை நகுலனின் கையசைவால் அறிந்து திருஷ்டத்யும்னனின் முரசுகள் வானில் நிறைத்தன. படைவீரர்கள் தேர்களிலிருந்தும் புரவிகளில் இருந்தும் யானைகளில் இருந்தும் மண்ணில் பாய்ந்தனர். வேல்களையும் விற்களையும் அம்புத்தூளிகளையும் வீசினர். “சிறு படைக்கலம்கூட எஞ்சக்கூடாது…. இது ஆணை. சிறு படைக்கலம் கூட எஞ்சலாகாது” என முரசுகள் ஆணையிட்டன. குறுவாட்களையும் கத்திகளையும் பொய்நகங்களையும் கொக்கிப்பிடிகளையும்கூட எடுத்து வீசினர். கைமுட்களையும் கால்கூர்களையும் அகற்றினர். அவை உலோக ஓசையுடன் மண்ணில் சிதறின.
யுதிஷ்டிரர் படைக்கலங்களை வீசிவிட்டு நிலத்தில் குப்புற விழுந்தார். அப்பால் நகுலனும் சகதேவனும் விழுந்தனர். அர்ஜுனன் காண்டீபத்தை வீசிவிட்டு ஓடிச்சென்று மண்ணில் முழந்தாளிட்டான். இளைய யாதவர் கடிவாளங்களை வீசிவிட்டு வெறுங்கையுடன் நின்றார். யுதிஷ்டிரர் பீமன் கையில் கதையுடன் அசைவிலாது நிற்பதை கண்டார். “மந்தா, அறிவிலி, என்ன செய்கிறாய்?” என்று அவர் கூவினார். “நகுலா, அவனிடம் சொல். படைக்கலங்களை வீசிவிட்டு மண்ணில் விழச்சொல்” என்று கதறினார். நகுலன் “அவர் ஆசிரியருக்கு தலைகொடுக்க துணிந்துவிட்டார், மூத்தவரே” என்றான். “மந்தா! அறிவிலி… படைக்கலம் துறந்து மண்ணில் விழு… இது என் ஆணை! மந்தா!” என்று யுதிஷ்டிரர் கண்ணீருடன் அலறினார்.
செம்மண் புயல் சுழித்தெழுவதுபோல வந்தது நாராயணாஸ்திரம். ஆனால் அது தொட்ட தேர்களெல்லாம் அனல்கொண்டு கொழுந்துவிட்டன. கொடிகள் சருகுகள்போல் பற்றிக்கொண்டன. உலோகத் தேர்மகுடங்கள் மெழுகென உருகி உருவழிந்தன. படைக்கலங்கள் அனைத்தும் வெயிலில் புழுக்கள்போல உருகி நெளிந்தன. வெங்காற்றின் சுழலுக்குள் செம்மண் சுழிப்பு. அதன் உச்சியில் புழுதியும் புகையும் இணைந்த வளையம். அச்சுழிப்புக்குள் ஆயிரம் சிறு மின்னல்கள் அதிர்ந்தன. உச்சியில் இடியோசை எழுந்து எதிரொலிகளாக பெருகியது. அச்சுழிப்பின் மையம் அனல்தூணாலானது. காற்று வளையம் பற்றி எரிந்த தேர்களை தூக்கிச் சுழற்றி மேலெழுப்பி மண்ணில் வீசியது.
“ஆசிரியர் துரோணரை வாழ்த்துக… ஆசிரியர் அடிபணிக!” என்று இளைய யாதவரின் ஆணை எழுந்தது. படைவீரர்கள் அனைவரும் திரண்ட பெருங்குரலில் “ஆசிரியர் வாழ்க! பரத்வாஜர் மைந்தர் வாழ்க! எந்தையே, சொல்லளித்த வள்ளலே, விண்வாழும் மெய்வடிவனே, எங்கள்மேல் சினம் ஒழிக! எங்கள் பிழைகளை பொறுத்தருள்க!” என்று கூவினர். அர்ஜுனன் கைகூப்பி கண்ணீருடன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். திருஷ்டத்யும்னனும் நிலத்தில் தலைசேர்த்து கண்களை மூடி உதடுகளை இறுக்கி உள்ளத்தால் “ஆசிரியரே, பொறுத்தருள்க! ஆசிரியரே, உங்கள் மாணவனுக்கு அருள்க!” என்று கூவிக்கொண்டிருந்தான். பீமன் மட்டும் கதையை தோளில் வைத்து இடையில் மறுகை ஊன்றி நிமிர்ந்த தலையுடன் வெறித்து நோக்கியபடி நின்றான்.
“மந்தா! மந்தா!” என யுதிஷ்டிரர் கூவினார். அவரை புழுதிப்புயல் சூழ்ந்துகொண்டது. அவர் கண்களும் வாயும் புழுதியால் நிறைந்தன. மூச்செங்கும் புழுதி நிறைய அவர் ஓங்கி இருமினார். அவர் செவிகளை கொதிக்கச் செய்தபடி, புருவத்தையும் தாடிமயிர்ப் பிசிறுகளையும் பொசுக்கியபடி அனல் கடந்து சென்றது. “மந்தா! என் மைந்தா!” என்று கூவியபடி அவர் பீமன் நின்றிருந்த திசை நோக்கி ஓடினார். கால் தடுக்கி விழுந்து எழுந்து மீண்டும் ஓடினார். புயல்சுழிப்பு களமெங்கும் சுழன்று மெல்ல விசை அவிந்து இளைய யாதவரை அணுகி அவர் காலடியில் மெல்லிய புழுதிச்சுழிப்பாக மாறி அணைந்தது. குழியானையின் கூடுபோன்ற அந்தச் சின்னஞ்சிறிய மென்புழுதிக்குழியை நோக்கியபடி புன்னகையுடன் இளைய யாதவர் நின்றிருந்தார்.
யுதிஷ்டிரர் “மந்தா!” என்று கூவியபடி பீமனை நோக்கி சென்றார். அவன் தலைமயிர் பொன்னிறமாக ஒளிவிடுவதைக் கண்டு திகைத்து நின்றார். அது எரிதழல் எனக்கண்டு “மந்தா!” என்று கூவியபடி அருகே ஓடினார். அவன் உடல் மெல்லிய நீலநிறத் தழலால் மூடப்பட்டிருந்தது. அவன் தோலாடை எரிந்து கரிப்படிவாக தெரிந்தது. தோல்பட்டைகள் எரிய நெகிழ்ந்து இறங்கிய கவசங்கள் உருகி நெளிவும் வழிவும் குமிழ்வுமாக புகைவிட்டுக்கொண்டிருந்தன. அவன் எதையும் அறியாதவன்போல அஸ்வத்தாமனை நோக்கிக்கொண்டிருந்தான்.
யுதிஷ்டிரர் “மந்தா…” என கூவியபடி அவனை அணுகி அவன் கைகளை தொடப்போனார் “தொடவேண்டாம்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவர் உடலில் நுண்ணனல் கூடியிருக்கிறது… நீங்கள் அதை தாளமாட்டீர்கள்.” இளைய யாதவரை நோக்கி ஓடிய யுதிஷ்டிரர் “யாதவனே, என் மைந்தன்… என் இளையோன்” என்று கண்ணீருடன் கூவினார். “அஞ்சவேண்டாம், அவரை அது ஆற்றல்கொண்டவராக்கும். அது ஆசிரியரின் நல்வாழ்த்து. இக்களத்தில் துரோணர் உளம்குழைந்து வாழ்த்தியது அவரைத்தான்” என்றார் இளைய யாதவர்.
அரவான் சொன்னான்: குருக்ஷேத்ரக்களத்தில் இருந்து தேரைத் திருப்பி விரைந்த அஸ்வத்தாமனைத் தொடர்ந்து சென்றனர் பதினொரு ருத்ரர்கள். அனல்போல் எரிந்த உரு கொண்டவர்கள். அஸ்வத்தாமனின் ஆடிப்பாவை என்றே வடிவம் எடுத்தவர்கள். சினம் கொண்ட ரைவதன், சூலம் ஏந்திய அஜன், புலித்தோல் அணிந்த பவன், நுதல்விழிகொண்ட பமன், உடுக்கொலிக்கும் வாமன், நாகம் அணிந்த உக்ரன், சடை விரித்த வ்ருஷாகபி, மான் ஏந்திய அஜைகபாத், மழு சூடிய அஹிர்புத்ன்யன், மண்டையோட்டு மாலையுடன் பஹுரூபன், சாம்பல் மூடிய மஹான்.
“மீண்டு செல்… மீண்டுமொருமுறை அந்த அம்பை ஏவுக…. நாங்கள் அழிக்கிறோம் இவ்வுலகை” என்றான் அஜன். “எங்கள் சினம் ஆறவில்லை. நாங்கள் களமெழுந்தாகவேண்டும்” என்றான் பவன். “உன் தந்தையால் நாங்கள் கட்டுண்டோம்… எங்களை விடுவித்து போர்க்களம் மீள்க!” என்றான் அஜைகபாத். “இனி எங்களுக்கு தருணம் இல்லை” என்றான் வாமன். “உன் சினம் கொண்டு எழுக! உன் வஞ்சத்தால் களம் மீள்க!” என்றான் உக்ரன். “உன் தந்தையைக் கடந்து செல்க… உனக்காக வில்லெடுத்து நிலைகொள்க!” என்றான் பஹுரூபன்.
அஸ்வத்தாமன் அவர்களை மாறிமாறி பார்த்தான். பின்னர் தன் வில்லை தேரில் ஓங்கி அறைந்து வீசியபின் ‘செல்க… விலகிச்செல்க!” என்று தன் பாகனுக்கு ஆணையிட்டான். அவனுக்குப் பின்னால் பாண்டவப்படைகளின் உவகைக்கூச்சல்கள் முழக்கமாக எழுந்து அலைபெருகிக்கொண்டிருந்தன. அவன் தேர்த்தட்டில் இறுகிய உடலுடன் வெறித்த நோக்குடன் நின்றிருந்தான்.