சிதம்பரம் நாட்டியாஞ்சலி

ka

சிதம்பரம் நாட்டியாஞ்சலி 2008

இனிய ஜெயம்

நேற்று நாட்யாஞ்சலி. கடந்த நான்கு வருடங்களாக,நாட்யாஞ்சலி சுதி குறைந்து கொண்டே போகிறது. உள்ளே நாட்யாஞ்சலி நிர்வாகத்தில், கொள்கை வேறுபாடு காரணமாக கருத்து வேறுபாடு முற்றி, நிர்வாகம் இரண்டாக கிழிந்து,ஒன்று கோவிலுக்குள்ளும்,மற்றொன்று ராஜ வீதியிலும் என இரு வேறு தரப்பாக இயங்கத் துவங்கி இருக்கிறது. கோவிலுக்குள் இருப்பது, எதோ தீட்சிதர்கள்  நாட்யாஞ்சலி டிரஸ்ட்.வெளியே உள்ள கோஷ்டியைக் காட்டிலும்,வெளுத்து வாங்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். விளைவு. இந்த வருடம் இந்தியாவின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த நாட்டிய மாணவர்கள் ஒன்று கூடி,கோவில் வளாகத்தில் நாட்டியமாடி, எட்டாயிரம் பேர் இணைந்து ஆடிய ஒரே நிகழ்ச்சி எனும் கின்னஸ் சாதனையை கோவில் குழு நிகழ்த்தி இருக்கிறது.  சாதனைகள் தொடரும் போல தெரிகிறது.

அடுத்தடுத்த பள்ளிகளை சேர்ந்த நிகழ்சிகளும், உட்டேனா பார் வகையிலேயே அமைந்திருந்தது. சிவனை ஒன்று முதல் பத்து வரை அவரது லீலைகளை [திருவிளையாடல்களை என்று அல்லவோ சொல்ல வேண்டும்]  பாடி,ஆடும் நிகழ்வு. இருளில் இருந்து மேடை ஒளி எழும் தருணம் ஒரு பிள்ளை ஊர்த்துவ தாண்டவ நிலையில் ஒரு நிமிடம் நின்றிருந்தது. மற்றொரு பள்ளியின் பிள்ளை தனது உடல் கொண்டு தானே எட்டு போட்டு காட்ட, மற்றொரு பள்ளியின் பிள்ளையோ பதினெட்டே போட்டு காட்டியது. பாவம் யார் பெற்ற பிள்ளையோ.

இடையில் இரவு ஏழு மணி முதல்,நிகழ்வுகளை ஓரம் கட்டி வைத்து விட்டு,ஒரு ஒன்றரை மணிநேரம் நேற்றைய கின்னஸ் சாதனைக்கு,உறுதுணையாக நின்றவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்ய துவங்கினார்கள். போர்த்திக்கொண்டே இருந்தார்கள். வெளியே சொல்லாத கின்னஸ் சாதனை. முடித்து, ட்ரஸ்ட் நிர்வாகிகள், ஒரு ஆறேழு பேர், இந்த மூன்றே வருடத்தில் இந்த ட்ரஸ்ட் நிகழ்த்திய அறிய பெரிய சாதனைகளை எடுத்து இயம்பினார்கள்.இடையே அவ்வப்போது வடிவேலு நகைச்சுவைகளை மேடையர்கள் சொல்ல,ஒரே ஜனரஞ்சகமாக சென்றது நிகழ்ச்சி. இடையே கூட்டத்தில் ஊடுருவி ஐஸ்க்ரீம் பாப்கார்ன் விற்பனை செய்பவர்கள்,கால் கவுட்டி இடையே கண்டு களித்த நிகழ்வு ஒருவாறு நிறைவடைந்து, திருநாளைப் போவார் சரிதத்தை நாட்டிய நிகழ்வாக நிகழ்த்த, பத்மா சுப்ரமண்யம் அவர்கள் மேடையேறினார்.

எங்கணும் உயர்ந்தன நூறு நூறு மொபைல் போன்கள். எல்லாமே ஸ்மார்ட் மொபைல்கள்.அதை வைத்திருக்கும் எந்த  மடையரையும் அது தவிக்க விடாது. எல்லா வேலையும் அதுவே பார்த்துக் கொள்ளும். நூறு நூறு வண்ணக் குறுஞ் சதுரங்களில்,இடைக்கு இடை, இடைவெளியில் ”நேரிலும்” தெரிந்த பத்மா சுப்ரமண்யன் அவர்களின் நிகழ்ச்சி நன்றாகவே இருந்தது.  பெரும்பாலும் நிகழ்சிகள் யார் வீட்டு எழவோ,பாயப் போட்டு அழவோ என்று நடந்துகொண்டிருந்ததால், நட்டுவனார் யார், பாடுபவர் யார், அவர் என்ன பாடுகிறார், என்ன ராகம்,என்ன தாளம் என்பது பெரும்பாலும் அறிவிக்கப்படாமல் அது பாட்டுக்கு திடுதிப் என துவங்கி, நிகழ்ந்து திடுதிப் என முடிந்து கொண்டு இருந்தது. ஒரு பிள்ளை பாடிய சிவானந்த லகரி பிரமாதமாக இருந்தது.

ஒரு பிள்ளை இடுப்பையே அசைக்காமல் அரைமணி நேரத்துக்கும் மேலாக ஆடியது. இத்தகு களேபரங்கள் இடையேதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. பத்மா சுப்ரமண்யம் அவர்களின் மாணவி, மகதி, வெறும் பதினைந்தே நிமிடம், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள், அந்த சிறு பொழுதுக்குள், சுற்றத்தை முற்றிலும் மறந்து, தனதுடலை கூத்தபிரான் எடுத்துக்கொள்ள,ஒப்புக் கொடுத்து விட்டாள். அற்புதம்,பரவசம் அதை தவிர வேறு வார்த்தைகள் இல்லை. இந்த நிறைவு போதும் என்றெண்ணி நள்ளிரவில் கோவிலை விட்டு வெளியேறினேன்.

ஏதேதோ இனிய சிதம்பர  நினைவுகள். நண்பர்கள் கூட இங்கே மகிழ்ந்திருந்தது, நண்பரின் குழந்தை இதய அறுவை சிகிச்சை முடிந்து,நலம் பெற வேண்டி,அந்த நண்பருடன் இந்த கோவில் வெளி பிரகாரத்தை நூற்றி எட்டு முறை சுற்றியது, ஜெயமோகன் அவர்களை முதன் முதலாக நேரில் பார்த்தது, ஐஸ்வர்யாதனுஷ் அவர்களின் அரங்கேற்றத்தை நேரில் காணும் பாக்கியம் பெற்றது, இப்படி ஏதேதோ, இடையே இளையராஜாவும்,மாணிக்கவாசகரும்,திருச்சாழலும், கவிஞர் கண்டராதித்தனும் நினைவில் எழுந்தார்கள்.

நான்குகட்டு ஓடுவேய்ந்த

ஏகாம்பரம் இல்லாத வீட்டில்

ஏகாம்பரம்  ஏகாம்பரம்  என்றேன்

ஏகாம்பரம் இல்லாத

வீட்டிலெல்லாம்  மூதேவி

உன் கட்டைக்குரல்தான்  முட்டுகிறது

கேடு ஏகாம்பரத்திற்கா  ஏகாந்தத்திற்கா

என்றது உள்ளிருந்து வந்த குரல்.

கவிதை நினைவில் எழ புன்னகைத்துக் கொண்டேன்.   அது ஏகாம்பரம் இருந்த வீடு. இப்போது அங்கே அவர் இல்லை. அவர் இல்லாத வீட்டிலெல்லாம் சென்று,கட்டைக் குரலில் அவனை அழைப்பது யார்?  கண்டராதித்தனின் கவிதைகளில் மரபு மீதான விமர்சனமும், அதை விமர்சிக்கும் ஆளுமை மீதான பகடியும், தூக்கலாக நிகழ்ந்த கவிதை இது. கடவுள் அகன்று போன வீட்டில் மூதேவிதான் குடி புகுவாள். எனில் உள்ளிருந்து வரும் குரல் மூதேவி உடையது. அது ஏகாம்பரத்தை தேடுபவனை கட்டைக் குரல் மூதேவி என்கிறது.  கேடு யாருக்கு என்று வேறு கேட்டு விசனப் படுகிறது.

வாரச்சந்தைக்கு காய்கறி

வாங்க வந்த பெண்ணிற்கு

நான்கைந்து பிள்ளைகள்.

நாலும் நாலு திசையை

வாங்கித்தர கைகாட்டின.

அவள் கைக்குழந்தைக்கு

பொரியுருண்டை வாங்கித்தந்தாள்.

பொடிசுகள் பின்னேவர

பொரியுருண்டை கீழே விழுந்து

பாதாளத்தில் உருண்டது.

ஏமாந்த குடும்பம் எட்டிப் பார்க்க

பாதாள பைரவி மேலெழுந்து

குழந்தையின் கன்னத்தைக்கிள்ளி

நல்லசுவை நல்லசுவை என

நன்றி சொன்னது.

கண்டார்  விமர்சிக்கும் மரபு இப்படித்தான் பாதாளத்தில் கிடக்கிறது. அது பாதாள பைரவியாக எழுந்து வந்து முன்தோன்றுவது, இன்னும் கருத்தறியாத ஒரு மழலை முன்பு.  கண்டார் விமர்சிக்கும் மரபு, அதன் இருண்ட பகுதிகளோடு பாதாளத்தில் கிடக்கிறது. சிந்தனையாக மாறாத ஏதேதோ எண்ணச் சிதறல்கள். பயணக் காற்று முகத்தை வருட, அண்ணாந்து வானம் நோக்கி நிலாவைத் தேடினேன். அமாவாசை வானம். அங்கேஎங்கோதான்  தான் இருக்கும் நிலா . ஒளி இழந்து,இருளுக்குள். கண்டார் விமர்சிக்கும் மரபைப் போல. கண்டராதித்தனும் நிலவின் அழகைத்தான் பாடுகிறார். அவரது நிலா அமாவாசைக்குள் இருக்கிறது.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-85
அடுத்த கட்டுரைகாடு – கடிதம்