படைப்பு முகமும் பாலியல் முகமும்

two

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

‘முதலில் வாசித்த தங்களின் படைப்பு. அதன் பின்பு, சமூக ஊடகங்களில் தங்களைப் பற்றி தொடர்ந்து நிகழ்ந்துவரும் பரப்புரைகளைக் கவனித்தேன். தாம் ஒரு ‘இந்துத்துவ பயங்கரவாதி’, ‘ஆர் எஸ் எஸ் கைக்கூலி’ என்ற பிம்பத்தையே அப்பதிவுகள் என்னுள் உருவாக்கின. ‘ஒருத்தனுக்கு நெறைய எதிர்ப்பு இருக்குன்னா, ஒன்னு அவன் ரொம்ப நல்லவனா இருக்கணும், இல்லாட்டி ரொம்ப அயோக்கியனா இருக்கணும்’னு என் பள்ளிக்கூட வாத்தியார் சொல்லியிருக்கிறார். தங்களின் வலைதளப் பதிவுகளைப் படிக்கத் துவங்கிய பின், அவை சமூக ஊடகத்தால் என்னுள் உருவான பிம்பத்தை ஒண்ணுமில்லாமல் செய்தன.

அன்று தொடங்கி இன்று வரை, காலையில் கண் விழித்ததும் தங்களின் வலைப்பதிவுகள்தான் எனக்குப் பூபாளம். தங்களின் வலைப்பதிவுகளைத் தொடர்ந்து, ‘அறம்’, ‘விஷ்ணுபுரம்’ அகியவற்றை வாசித்தேன். ‘காடு’ வாசிக்க வாங்கி வைத்திருக்கிறேன். ‘அறம்’ புத்த்கத்திலுள்ள ஒவ்வொரு கதையை வாசித்த பின்னரும், உள்ளம் பூரித்து, தங்களுக்குக் கடிதம் எழுத நினைத்ததுண்டு. ஏனோ எழுதவில்லை.

நீங்கள் அடிக்கடி குறிப்பிடுவது போல், நானும் வழிதவறி இலக்கியம் படிக்கத்தொடங்கியவன் தான். நான் என்றோ தற்கொலை செய்து மடிந்திருக்க வேண்டியவன். உலகில் அதிகமுறை தற்கொலை முயற்சி செய்தவர்களை பட்டியல் போட்டால், முதல் நூறு நபர்களில் எனக்கும் இடமுண்டு என்று நம்புகிறேன். பாருங்கள், ஒழுங்காக தற்கொலை செய்துகொள்ளக்கூட முடியாத கோழைதான் நான். ஆனால், இப்போதெல்லாம் தற்கொலை குறித்த எண்ணம் தோன்றுவதில்லை. காரணம் இலக்கியம். இலக்கியம் எனக்கு வாழ்வதற்கான நம்பிக்கையைக் கொடுக்கவில்லை; வாழவேண்டும் என்ற ஆசையைக் கொடுத்தது.

எங்கள் ஊர் அரசுப்பள்ளியில் நிறைய புத்தகங்களுண்டு, ஆனால் நூலகம் இல்லை. புத்தகங்கள் பிள்ளைகளின் கைகளை அடைந்து கிழிபடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், பெரிய பெரிய மரப்பெட்டிகளில், பாச்சைகளுக்கும் கரையான்களுக்கும் இரையாக்கி வைத்திருந்தது பள்ளி நிர்வாகம். எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டுருந்த சமயம், புதிதாக வந்திருந்த பள்ளித் தலைமையாசிரியர், பெட்டியில் கிடந்த புத்தகங்களுக்கு விடுதலை அளித்து, எல்லா வகுப்பறையிலும் ஒரு கயிற்றைக் கட்டி, புத்தகங்களை அதில் தொங்கவிடச்செய்து, வகுப்பறை நூலகம் என்ற ஒன்றை உருவாக்கினார். அப்படித்தான் நான் முதன் முதலில் சுஜாதாவின் எழுத்துகளுக்கு என் வகுப்பாசிரியர் மூலம் பரிட்சயப்படுத்தப்பட்டேன். அந்த வயதில் இலக்கியம் குறித்த சுரணையெல்லாம் கிடையாது. ஏதோ நல்லாயிருந்தது படித்தேன்.

வாசிப்பு நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. புத்தகங்களிருந்தால் அதற்கு எதிரிகள் உண்டல்லவா? பள்ளி வேளைநேரம் முடிந்ததும் ஒருநாள், சில அதிமேதாவிகள் ஒரு வகுப்பறையிலிருந்த புத்தகங்களுக்கு எப்படியோ தீ வைத்துவிட்டனர். இதற்கு முன்பாகவே அந்த தலைமையாசிரியரும் மாற்றலாகி வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டார். இதுதான் சமயம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தது போல் மீண்டும் அப்புத்தகங்கள் சிறைவைக்கப்பட்டன.

அத்துடன் நானும் பத்தாம் வகுப்பு வந்தேன். பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால்தான் வாழ்க்கை என்று சொன்னார்கள்.  பத்து பதினொன்று பனிரெண்டு, மூன்று ஆண்டுகள் வகுப்பறை சிறைவாசம். தலை நிமிர்த்திச் சொல்லுமளவுக்குக் கொஞ்சம் நல்ல மார்க் வாங்கி அருகிலிருந்த நகரிலேயே ஒரு நல்ல கல்லூரியில் படிக்க சீட்டும் கிடைத்தது. பனிரெண்டாம் வகுப்புவரை தமிழ்வழிக்கல்வி. கல்லூரியில் காணுமிடமெங்கும் ஆங்கில மயம். ஆங்கிலம் தெரியாத குற்றவுணர்வு, குறையுணர்வு. ஆங்கிலம் கற்கவேண்டும் என்ற வைராக்கியத்தோடு ஆங்கிலப்புத்தகங்களை, ஆங்கிலத்தில் கிடைத்த இலக்கியப்புத்தகங்ககளை, குறிப்பாக அகாதா கிறிஸ்டி நாவல்களை, நகரின் ரயில் நிலையத்திற்கு வெளியே மலிவு விலை  புத்தகக் கடைகளில் வாங்கிப்படித்தேன். இல்லை டிக்ஸ்னரி உதவியுடன் கற்றேன். கிட்டதட்ட ஒரு வருடத்தில் ஆங்கிலம் கொஞ்சம் கைவசமானது.

பின்னர், அந்நகரில் இருந்த ஓர் அமைப்பில் சேர்ந்து ஆங்கிலம் கற்றேன். என் ஆங்கிலப் புலமை மெருகேறியது. பள்ளிப்படிப்பை நான் தமிழ் வழியில்தான் படித்தேன் என்று இப்போது சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். இவ்வாறு ஆங்கில புத்தகங்களைப் படித்ததில் ஆங்கிலப் புலமையோடு சேர்ந்தே கொஞ்சம் இலக்கிய ரசனையும் கிடைத்தது. அகாதா கிறிஸ்டியைக் கடந்து, Tolstoy, Dastovsky, George Orwell, Pablo Neruda, Alfred Camus, Franz Khafka, R K Narayan, Arundhati Roy ஆகியோரின் படைப்புகளைப் படித்தேன். பிற மொழியில் எழுதும் (எழுதிய) இந்திய எழுத்தாளர்களான தாகூர், மாகாஸ்வேதா தேவி, எம்.டி, தகழி, இஸ்மத் சுக்தாய், மான்டோ, அனந்தமூர்த்தி ஆகியோரின் எழுத்துகளும் எனக்கு ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலமே அறிமுகம்

இப்படி, ஆங்கிலத்தின் வழியாகத்தான் எனக்கு இலக்கிய ரசனையே வந்தது. அதன் பின்பு தான், தமிழில் தீவிர இலக்கியங்கள் என்று சொல்லத்தக்க படைப்புகளைப் படிக்கத் தொடங்கினேன். முதலில் வாசிக்கத்தொடங்கிய தமிழ் இலக்கியப் படைப்புகள் கி.ரா வினுடையவை. பின்னர் மௌனி, லா.ச.ரா, தி.ஜா, அசோகமித்திரன். தற்போது தாங்களுடைய படைப்புகளை படிக்கத் தொடங்கியுள்ளேன். இலக்கியம் தவிர்த்து அதிகம் வாசித்தவை அரசியல் சம்பந்தமான புத்தகங்கள், வரலாறு, தத்துவம், பொருளாதாரம், வாழ்க்கை வரலாறு, தன்வரலாறு போன்றவை.

ரசனை, தேடல் என்பதெல்லாம் ஒருபுறமிருந்தாலும், நான் புத்தகம் வாசிக்க முழுமுதற் காரணம் ‘தனிமை’. சமூகத்தால் தள்ளிவைக்கப்பட்டாலும் தனிமைதான், சமூகத்துடன் ஒட்டவிரும்பாவிட்டாலும் தனிமைதான், சமூகத்துக்கு ஒவ்வாதவனாகத் தோன்றினாலும் தனிமைதான்.

என் பெயர் எஸ். வயது 21. கீழ்நடுத்தரக் குடும்பப் பின்புலம். இப்போது இன்னொரு பெருநகரில் பட்ட மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறேன் (அதானால் தான் தங்களின் சமீபத்திய இலக்கிய நிகழ்வுகளான விஷ்ணுபுரம் விழா, புதிய வாசகர் சந்திப்பு எதிலும் பங்கேற்க முடியவில்லை). வெளியில் சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத, என் பெற்றோர் உற்றார் உறவினர் நண்பர் என எவருக்கும் தெரியாத ‘பிரச்சினை’ ஒன்று எனக்குண்டு.

இளம்வயதில், அதாவது பதின்மவயதில், ஓடிப்பிடித்து விளையாடும்போது சகதோழர்களின் உடல் என்மீது பட்டால் ஒரு இனம்புரியாத உணர்வு மனதில் எழும். கூச்சம் உண்டாகும். எனக்கு இளையவர்கள் உண்டு. எங்கள் இருவருக்கும் ஒரே படுக்கைதான். அவன் கைகால் என்மீது பட்டால் கூட கூச்சமாக இருந்தது. டிவியில் படம் பார்க்கும்போதுகூட அரைகுறை ஆடையில் வரும் ஆண்களைப் பார்க்கக் குறுகுறுப்பாக இருந்தது. உற்ற நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூட கூச்ச சுபாவம் அனுமதிக்கவில்லை. தணலிலிட்ட புழுவாய்த் தவித்தேன். உள்நோக்கி ஒடுங்கினேன். சதாசர்வ நேரமும் குழப்பம் உயிரைப்பிய்த்துத் தின்றது. விளையாடச் செல்லவில்லை. எதிலும் பிடிப்பில்லை. இந்த குழப்பத்தை எப்படி அடையாளப்படுத்திகொள்வது என்றுகூடத் தெரியவில்லை. போதாக் குறைக்கு என் நடவடிக்கைகளைப் பார்த்து என் அக்கம் பக்கத்தினர் எனக்கு பல பட்டங்களைக்கொடுத்தனர் – ‘பேடி’ ‘ஒம்போது’ போன்றவை அவற்றுள் சில. சொல்ல முடியாத மன அழுத்தம்.

என் உடலில் கொஞ்சம் உப்பு அதிகம். உள்ளங்கையும் உள்ளங்காலும் எப்போதும் வியர்த்துக்கொட்டும். பரீட்சை எழுதிய பேப்பர் கூட, தண்ணீரில் தோய்த்தெடுத்து உலர்த்தியது போலிருக்கும். உப்பு உடம்பு என்பதாலோ என்னவோ, என் வயதொத்த தோழர்களைவிட சீக்கிரமாகவே என் உடலின் அங்கங்களிலும் அந்தரங்க உறுப்புகளிலும் ரோமம் அரும்ப ஆரம்பித்தது. டி.வி யில் பார்த்தால் எந்த கதாநாயகன் மாரிலும் முடியில்லை. என் வயதொத்த நபர் எவரைச் சந்திக்க நேர்ந்தாலும், அவரின் கண்ணைப் பார்த்து பேசாமல், முகத்தில் மீசை இருக்கிறதா, மார்பில் முடி முளைத்திருக்கிறதா என்று தான் கவனித்தேன். ஒரு கட்டத்திற்கெல்லாம் பித்து பிடித்தவனைப் போலானேன். குழப்பத்தில், வீட்டில் அப்பா உபயோகிக்கும் சவரக்கத்தியைக் கொண்டு, கை கால் முகம் மற்றும் பிறப்புறுப்புகளில் அரும்பிய முடிகளை சிரைக்கத்தெரியாமல் சிரைத்து காயம் பண்ணிக்கொண்டேன்..இறுதியில் முடி வளரும் பகுதிகளில் மஞ்சள் பூசிக்கூடக் குளித்துப்பார்த்தேன். ஒரு மாற்றமுமில்லை. சலித்து விட்டுவிட்டேன்.

எங்கள் ஊருக்குப் பக்கத்தில் ஒரு தனியார் கல்லூரி உண்டு. கல்லூரிக்குப் புறத்தே ஒரு சிறிய ‘கரடு’ உண்டு. ஒருநாள், அக்கல்லூரி மாணவன் ஒருவன், கரட்டில் கொல்லப்பட்டு இறந்து கிடந்தான். அடுத்த நாள் பேப்பரில், இரண்டு மாணவர்கள் கரட்டிற்கு மது அருந்தச் சென்றதாகவும், கொல்லப்பட்ட மாணவன் உடன் சென்ற மாணவனுடன் ‘ஒருபால் சேர்க்கை’யில் ஈடுபடத் துணிந்ததாகவும், உடன் சென்றவன் ஆத்திரத்தில் தள்ளிவிட இவன் தலையில் அடிபட்டு இறந்ததாகவும், செய்தி வந்தது. இந்த ‘ஒருபால் சேர்க்கை’ என்ற சொல் என்னை என்னவோ செய்தது. அதுவறை அப்படியொரு வார்த்தையை நான் கேள்விப்பட்டதில்லை. யாரிடம் இதைப்பற்றி கேட்பேன். அப்போதெல்லாம் எனக்கு இன்டர்னெட், கம்ப்யூட்டர் குறித்தெல்லாம் ஒன்றும் தெரியாது. அதற்கெல்லாம் வசதியுமில்லை.

ஒருவழியாக, எப்படியோ நகரில் படிக்க இடம் கிடைத்தது. நல்ல கல்லூரி என்பதைவிட, ஊரைவிட்டு 200 கிலோமீட்டர் தள்ளியிருக்கப்போகிறோம் என்ற நினைப்புதான் ஆசுவாசம் தந்தது. புதிய இடம், புதிய தோழர்கள். இந்த நூற்றாண்டில்கூட, ஒருவன் கல்லூரிக்குச் சென்றுதான் இன்டர்னெட் உபயோகிக்க, கம்ப்யூட்டர் இயக்கக் கற்றுக்கொண்டான் என்றால் நம்ப சிரமமாக இருக்குமோ என்னவோ. ஆனால், கல்லூரிக்குச் சென்றுதான் நான் கற்றுக்கொண்டேன். Gay, LGBT போன்ற சொற்களை இன்டர்னெட் மூலம்தான் தெரிந்துகொண்டேன். இவற்றைப்பற்றி இணையத்தில் தேடித்தேடி படித்ததில், என்னுடைய குழப்பங்கள் அனைத்தையும் ஒரே சொல்லில் அடக்கி அர்த்தப்படுத்திக்கொள்ள முடிந்தது. குழப்பங்களுக்கு ஒரு அடையாளம் கிடைத்தது. என்னைப்போல் இன்னும் பலர் உள்ளனர் என்று தெரிந்தது.

ஆனால் இந்த அடையாளம் எனக்கு அமைதியைத்தரவில்லை. சொல்லப்போனால் அவமானமாகத்தான் உணர்ந்தேன்; சுயவெறுப்பு. ஓரினச்சேர்க்கை, ஒருபால்சேர்க்கை, சுயபோகி –போன்ற சொற்களில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை. ‘ஊனமுற்றோர்’ என்ற வார்த்தைக்கும் ‘மாற்றுத்திறனாளி’ என்ற வார்த்தைக்கும் எவ்வளவு இடைவெளியுண்டு. ‘திருநங்கை’ என்ற வார்த்தைக்கும் ‘ஒம்போது’ என்ற வார்த்தைக்கும் எவ்வளவு இடைவெளியுண்டு.

நகரில் படிப்பு முடித்த கையோடு இப்போதிருக்கும் பெருநகரில் பட்டமேற்படிப்புக்கு சீட் கிடைத்தது; கொஞ்சம்கூட யோசிக்காமல் கிளம்பி வந்துவிட்டேன். நான் நிம்மதியாக இருந்த (இருக்கின்ற) நாட்களென்றால் அவை இங்கே இருந்த (இருக்கின்ற) நாட்கள்தான். இந்நகருக்கு வந்த ஆறு மாதத்தில் தெலுங்கு சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டேன். இதற்கு மூன்று காரணங்களுண்டு – 1. வந்த புதிதில் நான் மட்டுமே இங்கு தமிழ், 2. இங்கு என்னுடைய நண்பர்களில் பெரும்பாலானோர் தெலுங்கு, 3. அரவிந்தருக்கு ஒரு டஜன் பாஷைகள் தெரியும் என்று வா.ரா பாரதியின் வாழ்க்கைவரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு பத்து மொழிகளில் புலமை உண்டென்று அவரின் வாழ்க்கைவரலாறான ‘Half Lion’ புத்தகத்தில் படித்திருக்கிறேன்.

தற்கால வங்க-சினிமாவின் சிறந்த டைரக்டர்களான Rituparno Ghosh, Goutam Ghose, Aparna Sen, Kaushik Ganguly ஆகியோரின் திரைப்படங்களைப் பார்க்கத்தொடங்கினேன். நான் பார்த்த முதல் இரண்டு ‘வங்க’ப்படங்கள் ரொம்பவே சுவாரஸ்யமானவை. முதல் படம் ‘ஆஷா ஜவோர் மாஜே’ (Labour of Love). ஆதித்யா விக்ரம் சென்குப்தா இயக்கி 2014ல் வெளியான அவரின் முதல் திரைப்படம் (இவரின் அடுத்த படங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை). இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் – படத்தில் வசனமேயில்லை. இரண்டாவதாக பார்த்த படம் – ரித்துபர்ன கோஷ் இயக்கத்தில் வெளியான ‘The Last Lear’ திரைப்படம். இப்படத்தில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே பெங்காளியில் வசனம் வரும், படம் முழுக்கவே ஆங்கிலம். பெங்காளி கற்கவேண்டும் என்று வங்கப்படங்களைப் பார்க்கத் தொடங்கிய என் நிலையைப் பாருங்கள்.

ஆனால் ‘The Last Lear’ படம் என்னை ரொம்பவே கவர்ந்தது. இப்படத்தின் டைரக்டர் குறித்த விவரங்களை அறிய இன்டர்னெட்டில் தேடியபோதுதான் – 2013ல் மாரடைப்பில் இறந்த ரித்துபர்ன கோஷ், வெளிப்படையாக தான் ஒரு gay என்று அறிவித்துக்கொண்டார், மரணம் வரை LGBT சமூகத்தின் பேராளுமையாகத் திகழ்ந்தார் என்று தெரிந்தது. இந்தத் தகவல்கள் தந்த உந்துதலில் இவரின் பிற படங்களையும் பார்த்தேன். ‘Memories in March’, ‘Chitrangada’, ‘Arekti Premer Golpo’ ஆகிய இவரின் படங்கள் ‘கே’ கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட சிறந்த கலைப்படைப்புகள். இவரின் படைப்புகளில் அசட்டுத்தனம், முதிரா-முற்போக்கு, பிரச்சாரம் போன்ற குப்பைகள் எதுவுமே கிடையாது; முழுமையான அசல் கலை-படைப்புகள். இவரின் படைப்புகள் 12 தேசிய விருது மற்றும் பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளன.

இவரைப்போல வாழ ஒரு அசாத்தியமான தைரியம் வேண்டும். தன்னுடைய அடையாளத்தை வெளிப்படையாக வெளியில் சொல்லியிருக்கிறார். மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். என்னுடைய இந்த அடையாளம் குறித்து என் பெற்றோரோ, உற்றார் உறவினரோ, நண்பரோ எவரும் அறிந்திலர். தெரிந்தால் எப்படி ஏற்றுக்கொள்வர் என்றும் தெரியவில்லை. சமயங்களில் என்னுடைய இந்த அடையாளத்தை என்னாலேயே ஏற்றுக்கொள்ள முடியாதபோது பிறர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் நினைப்பது அபத்தமாகத்தான் படுகிறது. கண்ணுக்குமுன் நிற்கும் எதிரிகளைக்கூட எதிர்கொள்ளலாம், ஆனால் மனதினுள் சதா சர்வநேரமும் போரிடுவது? இதுவரை எப்படியோ காலம்தள்ளிவிட்டேன், அல்லது காலம் என்னைத் தள்ளிக்கொண்டு வந்துவிட்டது. இதற்குமேல்? எல்லாம் சூன்யமாகத்தான் தெரிகிறது.

நண்பர் ஒருவர் ஒருமுறை சொன்னார் – ‘மனுசன் எதுக்கு கோயிலுக்கு போறான்னு தெரியுமா? நம்ம கொறைய கேட்டவுடனே சாமி நிவர்த்திபண்ணிடும் கொற தீந்துடுங்கறதுக்காக இல்ல. நம்மளோட அவஸ்தைகள காது குடுத்து கேக்க ஒருத்தன் இருக்கான்ற நம்பிக்கையிலதான், சொன்னதுக்கப்புறம் கெடக்கிற திருப்திலதான்’. என்னுடைய அவஸ்தைகளை யாரிடம் சொல்ல? எனக்கு தெய்வநம்பிக்கை இல்லை. நான் நாத்திகனும் அல்லன். தங்களை தெய்வத்தின் ஸ்தானத்தில் வைத்து என்னுடைய அவஸ்தைகளைச் சொல்கிறேன் ஜெமோ. அருந்ததி ராய் ஒரு பேட்டியில் ‘பாலினம் என்பது ஒரு பெரிய ஒளிக்கற்றை போன்றது. அதில் ஆண் பால், பெண் பால் என்பவை இருவேறு புள்ளிகள். வெறும் இரு புள்ளிகள் ஒரு ஒளிக்கற்றையை உருவாக்குவதில்லை’ என்றார். எவ்வளவு ஆழமான வாதம்.

என் வலிகளை முழுமையாக இல்லாவிட்டாலும், முடிந்தவரை இழைத்து எழுதிவிட்டேன். என் அவஸ்தைகளை பால் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு எழுதும் தங்களைப்போன்ற எழுத்தாளர்களால், இலக்கியவாதிகளால் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன். காலை 10 மணிக்கு எழுதத் தொடங்கினேன். இப்போது மணி மாலை 7. காலையிலிருந்து இன்னும் ஒரு பருக்கை கூட சாப்பிடவில்லை. எழுதுகையில் இடையிடையே மனது சொல்லமுடியா வேதனையில் தத்தளித்தது. என் அவஸ்தைகளுக்கு வரிவடிவம் கொடுக்கமுடியுமா என்று தெரியவில்லை. ஏதோ எழுதிவிட்டேன். இதுநாள்வரை யாருக்கும் காட்டாமல் மனதுக்குள் மூடிவைத்திருந்த பக்கங்களை, தங்களிடம் சொல்ல இன்று திறந்ததில், புலப்படாத பல பக்கங்கள் இன்று விளங்கின. மனது கொஞ்சம் ஆசுவாசம் கொள்கிறது.

ஆனால் எனக்கு தெரியும் இந்த அமைதி நிரந்தரமல்ல. ‘எதைத்தின்றால் பித்தம் தெளியும்’ என்று பலவற்றையும் முயற்சித்திருக்கிறேன். எதுவும் நிரந்தர அமைதியை எனக்குத் தந்ததில்லை. தங்களிடமிருந்து எதிர்பார்ப்பதெல்லாம் இதுதான் ஜெமோ – ஏதவது சொல்லுங்கள். வான்முட்டும் அளவுக்குக் கனவுகள் உண்டு எனக்கு. கனகவுளைத்தின்று வாழ்பவன் நான்; வழிகாட்டுங்கள் ஜெமோ. ஒரு சொல்லோ ரெண்டு சொல்லோ எதுவாயினும் சரி, என் மனம் நிரந்தர அமைதிகொண்டிருக்க, என் கனவுகளை நோக்கிப் பயணப்பட ஏதாவது சொல்லுங்கள் ஜெமோ.

நம்பிக்கையுடனும், அன்புடனும்

எஸ்

அன்புள்ள எஸ்,

நீங்கள் இருப்பது ஒரு  ஒரு தனித்துவம் கொண்ட நிலை. ஓரளவு தன்பால் ஈர்ப்பு எல்லா ஆண்களுக்கும் உண்டு. குறிப்பாக பதின்பருவங்களில். இருபத்தைந்து வயது கடக்கும்போது, ஒருவன் தன்னை முழுமையான ஆண் என உணர ஆரம்பிக்கும்போது, அது இல்லாமலாகிவிடும். [ஓரத்தில் கொஞ்சம் இருந்துகொண்டும் இருக்கும். பலருக்கு முதிய அகவையில் மீண்டும் தோன்றும் என்கிறார்கள்].

உங்களிடம் இருக்கும் இந்தக் கூறு எந்த அளவுக்கு இருக்கிறது என நீங்களே கவனித்துக்கொண்டிருங்கள். அது சராசரிக்கும் மேல் என்றால், உங்களால் கட்டுப்படுத்த முடியாதநிலை என்றால், நீங்கள் அதற்கு உங்களை ஒப்புக்கொடுக்கவேண்டும். அதை உங்கள் ஆளுமையாக எடுத்துக்கொள்ளவேண்டும். இயல்பாக, சாதாரணமாக, அத்தனைபேரும் அவரவர் பாலியல் இயல்புகளை எப்படி எடுத்துக்கொள்கிறார்களோ அப்படி. உங்கள் மூளையை நீங்கள் ஒன்றும் செய்யமுடியாது அல்லவா?

நீங்கள் வாசகராகவும் இலக்கிய ஆர்வலராகவும் இருக்கிறீர்கள். உங்கள் மொழிநடை நன்றாக இருக்கிறது. நீங்கள் இயல்பாக சிறந்த எழுத்தாளராக வரக்கூடும். இந்த அலைகளை கடந்துவிட்டால் தமிழில் என்றென்றும் பெயர்விளங்கும் பெரும்படைப்பாளிகளில் ஒருவர் நீங்கள். அதையே உங்கள் முதன்மை அடையாளமாக எண்ணிக்கொள்ளுங்கள். அதை நோக்கி செல்லுங்கள், அதை வளர்த்தெடுங்கள்.

பாலியல் தனித்தன்மை எவருக்கும் பொதுஅடையாளம் அல்ல. அது ஓர் அந்தரங்கம் மட்டுமே. அது எப்படி இருந்தாலும் பொதுவாழ்க்கையில் உங்கள் அடையாளம் இலக்கியம் என்பதாகவே இருக்கக்கூடும் என நினைக்கிறேன். உங்கள் வெற்றி இருப்பது அங்கேதான். இந்த மன அலைச்சல்கள் கொந்தளிப்புகளால் நீங்கள் அந்த இலக்கை இழந்துவிட்டீர்கள் என்றால்தான் உண்மையில் மிகப்பெரிய இழப்பை சந்தித்தவராவீர்கள். அதை தலைக்கொள்ளுங்கள்.

எந்த ஒரு கலையிலும் உண்மையான வெற்றியை அடையவேண்டும் என்றால் அதற்குரிய கடும் உழைப்பு தேவை. ஆயிரம் மணிநேர கடும் உழைப்பு என்பார்கள். இலக்கியத்திற்கு கூடுதலாக அறிவுத்தகுதியும் தேவை என்பதனால் நான் பத்தாயிரம் மணிநேரம் என்பேன். அதை தவறவிட்டுவிடவேண்டாம். உங்கள் அகவையை வைத்துப்பார்த்தால் நீங்கள் வாசித்தவை மிகுதி. எழுதும் மொழி கூரியது. என் 21 அகவையில் நான் இப்படித்தான் இருந்தேன்.

உங்களை இரண்டாக பகுத்துக்கொள்ளுங்கள். ஒன்றை வெளியே காட்டுங்கள். அது நீங்கள் வடித்துக்கொண்ட, நடிக்கும் ஆளுமையாக இருக்கட்டும். அது ஒரு வகை கப்பம் கட்டுதல், புறவுலகினருக்காக. அதை அவர்கள் வைத்துக்கொள்ளட்டும். அது நேர்த்தியாக, பிறர்  ஒவ்வாமை கொள்ளாததாக, எந்தக்கூட்டத்திலும் இயல்பாக கரைந்து மறையக்கூடியதாக இருக்கட்டும். அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. எழுத்தாளர்கள் கதைமாந்தரை நடிப்பவர்கள். ஒரு கதைமாந்தரை உங்களுக்காகவும் உருவாக்கிக்கொள்ளுங்கள், அவ்வளவுதான். துரத்தும் நாய்களுக்கு ஒரு துண்டு ஊன் அது.

உள்ளூர உங்களுக்கு நிகழ்வதை கூர்ந்து கவனித்துக்கொண்டிருங்கள். என்ன ஆகிறது? உடலுக்கும் உள்ளத்திற்கும் என்னதான் உறவு? இது ஒருவகையில் ஒரு நல்வாய்ப்பு அல்லவா? பிறருக்கு இல்லாத சில அவதானிப்புகளை அடைவதற்கான வழி அல்லவா? பிறர் எழுதாத ஒன்றை எழுத உங்களால் இயலும் அல்லவா? இளமையில் என் குடும்பத்தில் பெரிய இழப்புகள் உருவானபோது இந்த எண்ணமே என்னை கரையேற்றியது. மெய்யாகவே  நான் அடைந்த அகதரிசனங்கள் அதனூடாக உருவானவை. என் ஆளுமை அந்த உளக்கொந்தளிப்பை நான் கூர்ந்து கவனித்ததன் வழியாக அடைந்தது.

உங்கள் எழுத்துக்களில் மட்டுமே நீங்கள் எவர் என பிறர் அறியவேண்டும். தன்னை ஒளித்துக்கொள்ள எழுத்தாளனுக்கு உரிமை உண்டு. அதிலும் பிறர் அறியாதவற்றை அறிபவனுக்கு அது அவசியத்தேவை.

என்றாவது இந்தியாவிலிருந்து ஐரோப்பா அல்லது அமெரிக்காவுக்கு செல்லமுடியும் என்றால் இந்த சமூகத்திற்கான முகமூடி தேவை இல்லை. அங்கே நீங்கள் இயல்பாக இருக்கலாம். அதற்காக முயலுங்கள். இயலவில்லை என்றால் இங்கே இன்னொருவராக நீடியுங்கள்.

ஏன் ஆளுமையை முன்வைத்து போரிடக்கூடாது? அதற்காக நாணவேண்டுமா? அது இழிவானதா? அப்படி அல்ல. உங்கள் இலக்கு ஒரு சமூகசீர்திருத்தவாதியாக ஆவது என்றால் அவ்வாறு செய்யலாம். எதிர்ப்புகளுடன் போரிடலாம். உங்கள் தரப்பை நிலைநாட்டலாம். எழுத்தாளன் என்றால் அது தேவையற்ற உணர்ச்சி வீணடிப்பு. நேர வீணடிப்பு. ஒரு ரிதுபர்ணோ கோஷ் ஆக நீங்கள் உங்களை உருவாக்கிக் கொண்டபின் ஆம் நான் அவ்வாறுதான் என சமூகத்திற்கு முன்னால் வந்து நில்லுங்கள். உங்கள் படைப்பூக்கம் எவ்வகையிலும் அப்போது பாதிக்கப்படாது. ஏனென்றால் உங்கள் வெற்றி அளிக்கும் ஆணவம் அப்போது கவசம்போல நின்று காக்கும்.

உங்களுக்கு சிறந்த உதாரணமாக சுட்டவேண்டிய எழுத்தாளர் ஸக்கி [எச் எச் மன்றோ]. அவரைப்பற்றி எழுதியிருக்கிறேன். அவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பின்னரே அவர் ஒருபாலுறவினர் என்பது தெரியவந்தது. ஏனென்றால் அன்றைய பிரிட்டிஷ் சூழலில் அது இழிவாகவும் சட்டபூர்வமான குற்றமாகவும் கருதப்பட்டது.

உங்களை எப்படி வகுத்துக்கொள்வது, எப்படி முன்வைப்பது என்பதெல்லாம் ஒன்றும் பெரிய பிரச்சினை அல்ல. அது சாதாரணர்களின் சிக்கல். நீங்கள் எழுத்தாளர். ஆகவே உங்களை எப்படி புரிந்துகொள்வது என்பதே உங்கள் சிக்கல். உங்களை ஒரு வகைமாதிரியாகக் கொண்டு இந்த மானுடநிலைமையை புரிந்துகொள்வது, இதனூடாக மானுடத்தை புரிந்துகொள்வதுதான் உங்கள் சவால். அதை எதிர்கொள்ளுங்கள்.

எனக்குப் பிடித்தமான இயக்குநர் ரிதுபர்ணோ கோஷ். இந்தியாவின் வங்கச் சினிமாமேதைகளின் வரிசையில் இறுதியாக வந்த ஆளுமை. அவரைப்பற்றி எழுதியிருக்கிறேன். நீங்கள் ஸகி ஆக இருக்கலாம். ரிதுபர்ணோ கோஷ் ஆக இருக்கலாம். உங்களில் இருந்து எழத்துடிப்பவர் சற்றே வேறுபட்ட ஒரு பாலியல் ஆளுமை அல்ல என உணர்க! ஒரு கலைஞன், எழுத்தாளன் என கண்டடைக!

எழுத்தாளனுக்கு கலைஞனுக்கு உடல், வாழ்க்கை என்பதெல்லாம் ஒரு பயிற்சிக்கருவியே. அவனுக்கு அவற்றுடன் உணர்வுரீதியான உறவு இருக்கவேண்டும். உரிய விலக்கமும் இருக்கவேண்டும். அப்போதுதான் அவற்றை அவன் அணுகி அறியமுடியும்.

வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் பற்றி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87