நமது குற்றங்களும் நமது நீதியும்

kolai

பிரபலக் கொலைவழக்குகள் வாங்க

ஒவ்வொருமுறை நான் மக்களின் உணர்ச்சிகளை கொந்தளிக்கச் செய்யும் செய்திகளை வாசிக்கையிலும் அந்த வழக்குகள் பின்னர் என்ன ஆயின என்றே யோசிப்பேன். இந்திய நீதிமுறை என்பது மிகப்பெரிய ஒரு மோசடி என்பதிலும் பெரும்பாலான காவலதிகாரிகளும் நீதிபதிகளும் அறவுணர்வே அற்றவர்கள் என்பதிலும் இங்கு இத்தனை குற்றங்கள் பெருகுவதற்கு அவர்களே முழுமுதற்காரணங்கள் என்பதிலும் ஒவ்வொருநாளும் என் உறுதி பெருகியே வருகிறது.

பொள்ளாச்சி பாலியல்கொடுமைச் செய்திகள் இணைய உலகை கொந்தளிக்கச் செய்துகொண்டிருந்தபோது மாத்ருபூமி நாளிதழ் வெளியிட்ட செய்தியை வாசித்துக்கொண்டிருந்தேன். சென்ற ஆண்டு மார்ச் மாதம் லாட்வியாவைச் சேர்ந்த லிகா என்னும் பெண் பயணி ஒருவர் கோவளத்தில் போத்தங்கோடில் ஓர் ஆயுர்வேத சிகிழ்ச்சை விடுதியில் தங்கியிருந்தபோது இரவில் கடற்கரைக்குச் சென்றிருக்கையில் காணாமலானார். அவருடைய அக்கா லாட்வியாவிலிருந்து வந்து போலீஸில் புகார் அளித்தார். போலீஸ் பொருட்படுத்தவே இல்லை. மாறாக அந்த அக்காவை அலைக்கழித்தனர். 50 நாட்களுக்குப்பின் லாட்வியப் பெண்ணின் சடலம் கோவளத்திற்கு அருகே மங்குரோவ் காடுகளில் அழுகிய நிலையில் கிடைத்தது.

கேரளம் கொந்தளித்தது. ஊடகங்கள் விம்மி வெடித்தன. போலீஸ் இருவரை கைதுசெய்தது. உமேஷ், உதயன் என்ற இருவரும் ஊடகங்கள் முன் நிறுத்தப்பட்டார்கள். விரைவாக துப்பறிந்த போலீஸ்காரர்களுக்கு உயரதிகாரிகள் பாராட்டும் தெரிவித்தனர். ஊடகங்களும் மக்களும் ஓய்ந்தன. ஓராண்டுக்குப்பின் இறந்த பெண்ணின் அக்கா கேரளத்திற்கு வந்திருக்கிறார். ஓராண்டுகாலமும் அந்த வழக்கை பின்தொடர அவர் லாட்வியாவிலிருந்து முயன்றிருக்கிறார். எந்தச்செய்தியையும் பெற முடியவில்லை. கைதுசெய்யப்பட்டவர்கள் சில நாட்களிலேயே ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அதே போதைப்பொருள் வணிகத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். உதயன் மீண்டும் சிறுகுற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

lat

 [கொல்லப்பட்ட லாட்வியப் பெண்  லிகா]

வழக்கு? அது ஆரம்பிக்கவே இல்லை. அதைப்பற்றி எவருக்கும் அக்கறை இல்லை. இறந்த பெண்ணின் தமக்கை தொடர்ச்சியாக முயற்சிசெய்வதனால்தான் வழக்கு எண்ணாவது கிடைக்கிறது. இல்லையேல் வழக்கு அங்கேயே முடிந்துவிட்டிருக்கும். இனி அவ்வழக்கு நிகழும், சாட்சிகள் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. ஏனென்றால் இன்று அங்கிருக்கும் காவலர்களுக்கு வழக்கைப்பற்றி ஒன்றுமே தெரியாது.  இறந்த பெண்ணின் தமக்கை இந்திய நீதிமுறையைப் பற்றி கண்ணீர்வடிக்கிறார்.

ஜனவரி 2014-iல் பதினெட்டு வயதான ஒரு ஜெர்மானிய மாணவி சென்னை மங்களூர் ரயிலில் பயணிகளால் பாலியல் வன்முறை செய்யப்பட்டார். கர்நாடகத்தில் ஒரு பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர். ஒரு ஜெர்மானிய தன்னார்வச் சேவை நிறுவன ஊழியர். அவர் முறைப்படி ரயில்வேபோலீஸில் புகார் அளித்தார். வழக்கு பதியப்பட்டது, குற்றவாளிகள் என சிலர் கைதுசெய்யப்பட்டனர். இன்னும் விசாரணை நிகழவில்லை. ஐந்தாண்டுகள் கடந்துவிட்டன. இவற்றை எவரேனும் பின்தொடர்கிறார்களா? குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை நம் சமூகம் கண்காணிக்கிறதா? சிலர் கைதுசெய்யப்படுவது மக்களின் கவனத்தை திசைமாற்றவே. பெரும்பாலும் அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை.

இதுதான் இந்தியாவின் நீதி. இந்த உளநிலையில் வாசிக்கநேர்ந்த நூல் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட பிரபலக் கொலைவழக்குகள் [எஸ்.பி.சொக்கலிங்கம்] சுவாரசியமான சுருக்கமான விவரணைகள் கொண்டது. விஷஊசி வைத்தீஸ்வரன் வழக்கு, ஆளவந்தார் கொலைவழக்கு போன்றவை ஏற்கனவே பலகோணங்களில் நான் வாசித்தவை. எம்ஜிஆர் சுடப்பட்ட வழக்கு, லட்சுமிகாந்தன் கொலைவழக்கு போன்றவை அனைவரும் அறிந்தவை. ஆனாலும் மீண்டும் வாசிக்கமுடிகிறது.

இப்போது வேறுசில கண்ணுக்கு படுகின்றன. பணம் வைத்திருப்பவர்களை நீதிக்காவல்துறை என திட்டம்போட்டு ஏமாற்றி அழைத்துச்சென்று கழுத்தை நெரித்தும் விஷ ஊசி போட்டு கொன்றும் கொள்ளையடித்திருக்கிறார்கள் வைத்தீஸ்வரன் குழுவினர். ஈவிரக்கமில்லாமல் கொலைசெய்வதில் தக்கி குழுவினரைப்போலவே அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் செய்த கொலைகள் ஐயம்திரிபற நிரூபிக்கப்பட்டிருக்கின்றன நீதிமன்றத்தில். சிறிய அளவில் சான்றுகளில் ஐயமிருந்தபோதுகூட சிலரை விடுவித்துவிட்டிருக்கிறது நீதிமன்றம்.

ஆனால் அவ்வாறு மரணதண்டனை அளிக்கப்பட்டவர்கள் மன்னிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டார்கள். ஏன்? அவர்களின் கருணை மனு மேல் முடிவெடுக்க பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டது அரசு. அவர்கள் அதற்காக அடைந்த உளத்துயரே ஒரு தண்டனை என கருதப்பட்டது. பலவழக்குகளில் அறுதியாக மேல்முறையீட்டில் மிகமிகக்குறைந்த தண்டனையே வழங்கப்படுகிறது. இந்தியாவில் குற்றவாளிகள் பெரும்பாலும் தப்பிவிடுகிறார்கள் என்ற சித்திரத்தையே நூல் அளிக்கிறது.

nana1

இவ்வழக்குகளில் இப்போது ஆர்வமூட்டுவது, நேரு காலகட்டத்தைச் சேர்ந்த ஒரு வழக்கு. நானாவதி கொலைவழக்கு. இதன் உண்மையான ‘வில்லி’ நேருவின் தங்கை விஜயலக்ஷ்மி பண்டிட்தான். நேருவின் வரலாற்றில் மிகப்பெரிய கறை இந்த அம்மையார். எந்த அடிப்படை அறவுணர்வும் தேசநலன் சார்ந்த எண்ணமும் அற்ற உயர்குடிப் பெண்மணி. எந்த வகையிலும் தேசிய இயக்கத்துடன் தொடர்பற்றவர் நேருவின் தங்கை என்பதனாலேயே உயர்பதவிகளை வகித்தார். தன் உறவினர் அனைவருக்கும் உயர்பதவிகளை வாங்கிக்கொடுத்தார். அவர்கள் ஊழலில் திறமையின்மையில் திளைத்தபோது எந்த அறச்சார்பும் இல்லாமல் அவர்களை பாதுகாத்தார். எவ்வகையிலும் தன் பதவிக்குரிய பணிகளை ஆற்றவில்லை. ஊழல், ஊதாரித்தனம் இரண்டின் வடிவம். இச்சித்திரத்தை மிக வலுவாகக் காட்டுவது எம்.ஓ.மத்தாயின் ‘நேருவுடன் எனது நாட்கள்’ என்னும் நூல்.

விஜயலக்ஷ்மி பண்டிட்டுக்கு மிகநெருக்கமானவர் கவாஸ் மெனெக்‌ஷா நானாவதி. குடும்ப நண்பர். பார்ஸி குலத்தைச் சேர்ந்தவர். கடற்படையில் முதன்மைப்பொறுப்பில் இருந்தார். இந்திய ராணுவ அமைச்சகத்தின் உயர்மட்டக்குழுவிலும் இருந்தார். இத்தகைய ஒருவர் அயல்நாட்டுப் பெண்ணை மணம்புரியக்கூடாது, ஆனால் நானாவதி லண்டனுக்குச் சென்றபோது சில்வியா என்ற பெண்ணை காதலித்து அரசு அனுமதிபெற்று மணந்தார்.  1949-ஆம் ஆண்டு இத்திருமணம் நிகழ்ந்தது. விஜயலக்ஷ்மி பண்டிட்டின் குடும்பவிருந்துகளில் எப்போதும் பங்கெடுத்துவந்தார்.

பிரேம் பகவான்தாஸ் அகுஜா என்பவர் ஒரு பெண்பொறுக்கி. சிந்தி சமூகத்தை சேர்ந்தவர், தொழிலதிபர். அவர் சில்வியாவை காதல்வலையில் வீழ்த்தினார். அவர்கள் சில ஆண்டுகள் உறவு கொண்டனர். 1951-இல் இது நானாவதிக்கு தெரியவந்தது. மனைவியையும் குழந்தைகளையும் ஒரு திரையரங்கில் அமரச்செய்துவிட்டு அகுஜாவின் இல்லத்திற்குச் சென்ற நானாவதி அகுஜாவை கைத்துப்பாக்கியால் சுட்டார். மூன்று குண்டுகள் பாய்ந்து அகுஜா இறந்தார். அப்போது அவர் குளிக்கச் செல்வதற்காக இடையில் துண்டு மட்டும் அணிந்திருந்தார்.

நானாவதி நேராக கடற்படையில் உயரதிகாரியிடம் சென்று தன் குற்றத்தைச் சொல்லி சரண் அடைந்தார். அவருடைய ஆலோசனையின்பேரில் பின்னர் காவல்துறையிடம் சென்று சரண் அடைந்தார். அவருடைய துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது. வழக்கில் அன்றைய பம்பாய் மாகாண ஆளுநராக இருந்த விஜயலக்ஷ்மி பண்டிட் நேரடியாக, வெளிப்படையாக தலையிட்டார் என நூல் சொல்கிறது . நானாவதியை சிறையில் வைக்கக்கூடாது, கடற்படையின் காவலில், அதாவது அவருடைய ஊழியர்களின் காவலில், வைக்கவேண்டும், அங்கே அவர் வழக்கம்போல நடத்தப்படவேண்டும் என அவர் ஆணையிட்டார். இச்செயல் நீதிமன்றமும் ஆளுநர் மாளிகையும் முரண்படவும் கடுமையான விவாதம் உருவாகவும் வழிவகுத்தது.

nana2
நானாவதி, சில்வியா

நானாவதி குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது. அவர் அகுஜாவிடம் பேசுவதற்காகவே சென்றார், அகுஜா சுடமுயன்றபோது அவர் தடுத்தார், அதில் குண்டுபட்டு அகுஜா இறந்தார், அது விபத்துதான் என நானாவதியின் தரப்பில் வாதிட்டார்கள். அன்று ஜூரி முறை இருந்தது. ஜூரிகள் அரசால் நியமிக்கப்படுபவர்கள். ஜூரிகளில் எட்டுபேர் நானாவதி நிரபராதி என தீர்ப்பளித்தனர். ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளித்தார்.

மும்பை அமர்வு நீதிமன்றம் ஜூரியின் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. வழக்கை பம்பாய் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தது. கொலைக்கு பயன்படுத்தப்பட்டது கடற்படையின் கைத்துப்பாக்கி. நானாவதி கொலைக்கு முந்தையநாள் கடற்படைக்குச் சென்று அந்த கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டதற்கு சான்றுகள் இருந்தன. சுட்டுவிட்டு நானாவதி தப்பி ஓடியதை அகுஜாவின் சகோதரி பார்த்திருக்கிறார். அகுஜாவின் இடையிலிருந்த துண்டு அவிழவே இல்லை, ஆகவே கைகலப்பு நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. இந்த வாதங்கள் எதையும் ஜூரி கருத்தில்கொள்ளவில்லை.

நானாவதிக்காக அன்றைய மும்பையின் மிகப்பெரிய வழக்கறிஞர் கரல் கண்டல்வாலா வாதாடினார். அகுஜா தரப்பில் ராம்ஜெத்மலானி வாதாடினார். உயர்நீதிமன்றம் அகுஜாவை நானாவதி திட்டமிட்டு கொலைசெய்திருக்கிறார் என்பதை ஏற்றுக்கொண்டது. அவர் கடற்படைப் பயிற்சி எடுத்தவர், ஆகவே விளைவுகளை அறியாமல் செய்திருப்பார் என்னும் வாதமும் பொருளற்றது என கருதியது. உயர் நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை அளித்தது. நானாவதி உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தார். அங்கு தண்டனை உறுதிசெய்யப்பட்டது.

நீதிமன்றம் நானாவதிக்கு சிறைக்காவல் விதிக்க தன் ஆணை வழியாக அதை விஜயலக்ஷ்மி பண்டிட் தற்காலிகமாக நிறுத்திவைத்து நானாவதியை கடற்படைக்கே அனுப்பினார் என்பது விவாதமாகியது . நானாவதி கடற்படை பாதுகாப்பில்தான் இருந்தார். அதைமீறி அவரை சிறைக்கு அனுப்பியது உச்சநீதிமன்றம். ஆயினும் நானாவதி நெடுநாள் சிறையில் இருக்கவில்லை. விஜயலக்ஷ்மியின் செல்வாக்கால் விரைவிலேயே அவரை ‘கருணை’ அடிப்படையில் விடுதலைசெய்தது அரசு.

சிந்தி இனத்தவரின் சீற்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காக சிறையிலிருந்த சிந்தி பிரமுகர் ஒருவரையும் சேர்த்தே பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்தார்கள். பாய் பிரதாப் என்னும் அந்த சிந்தி பிரமுகர் ஒரு விடுதலைப்போராட்ட வீரர். ஏற்கனவே கடற்படை காவலில் இருந்த காலகட்டமும் தண்டனைக்காலமாக கருதப்பட்டு 1963-இல் விடுதலைசெய்யப்பட்ட நானாவதி இந்தியக்குடியுரிமையை உதறி சில்வியாவுடன் கனடாவில் குடியேறினார். அங்கே குடியுரிமை பெற்று வாழ்ந்து மறைந்தார்.

vijaya
விஜயலட்சுமி பண்டிட்

நேரு அரசாண்ட காலகட்டத்தில், இந்தியாவின் இலட்சியவாதம் உச்சத்திலிருந்த சூழலில், நாடே கவனித்த ஒரு வழக்கில் இது நிகழ்ந்தது. இதன்பின்னரே ஜூரி முறை இந்தியாவில் ஒழிக்கப்பட்டது. நீதிமன்றக் காவல் போன்றவற்றில் கவர்னரின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டது.  இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட வழக்குகளில் ஒன்று இது. இந்தியாவில் நீதிமன்றங்களை எந்த அளவுக்கு அதிகார வர்க்கம் அழுத்தி வளைக்கமுடியும், தேவையென்றால் கேலிக்குரியதாகவே ஆக்கமுடியும் என்பதற்கான முதல் உதாரணம். இன்றுவரை இதுவே நிலைமை.

முன்னத்தி ஏர் என்பார்கள். சட்டம், நீதிமன்றம், அறம் அனைத்துக்கும் அப்பாற்பட்டது தன் அதிகாரம் என நினைக்கும் விஜயலக்ஷ்மி பண்டிட் போன்றவர்கள்தான் இந்தியாவின் இன்றையச் சூழலை வடிவமைத்தவர்கள். வெள்ளையருக்குப் பதிலாக அதே அதிகாரத்திற்கு தாங்கள் வந்திருப்பதாக அவர்கள் எண்ணினார்கள். அவ்வெண்ணமே இந்தியாவின் உயர்குடிகளை ஆள்கிறது. உயர்குடிகளாக மாறும் புதுப்பணக்காரர்களும் அதை சென்றடைகிறார்கள். நீதிமன்றங்கள் அவர்களுக்கு சேவை செய்கின்றன. பிற அனைத்து நெறிகளையும் நிரந்தரமாக மூடி நிலவறைக்கு அனுப்பிவிட்டு அமர்ந்திருக்கின்றன.

நானாவதி கொலைவழக்கு

சில்வியா பற்றி ஒரு கட்டுரை

2 held for rape-murder of latvian woman in Kerala

A German national was raped in a moving train in Chennai

முந்தைய கட்டுரைசதுரங்கக் குதிரைகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-85