‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-83

ele1அர்ஜுனன் தேரில் தலைதாழ்த்தி அமர்ந்திருக்க இளைய யாதவர் அவனை நோக்கி “உன் உள்ளம் இன்னும் விசைகொள்ளவில்லை” என்றார். “யாதவரே, நான் அந்த யானையை பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றான். இளைய யாதவர் “ஆம், நானும் எண்ணினேன்” என்றார். “அதற்கும் எனக்கும் ஒரே அகவை. அஸ்வத்தாமனும் நானும் இணையகவை கொண்டவர்கள்” என்றான் அர்ஜுனன். “எங்களுக்கிடையே அது எவ்வண்ணமோ வந்துவிட்டது.” இளைய யாதவர் சொல் என்பது போல நோக்கினார். “நெடுங்காலம் முன்னர், நானும் அவரும் ஆசிரியரின் குருநிலையில் சாலைத்தோழர்களாக பயின்றபோது…” என அர்ஜுனன் தொடர்ந்தான். “அன்று நான் அவர் மேல் போட்டியுணர்வும் காழ்ப்பும் கொண்டிருந்தேன். எனக்கு அளிக்காத எதையோ அவருக்கு ஆசிரியர் அளிக்கிறார் என்ற ஐயத்தால் ஒவ்வொரு கணமும் துடித்துக்கொண்டிருந்தேன்.”

“அஸ்வத்தாமருக்கும் எனக்கும் முதல் நெடும்போர் அன்று கங்கைக்கரையில் நிகழ்ந்தது” என அர்ஜுனன் சொன்னான். “அதுவரை நூறுமுறை ஓங்கி தாழ்த்திய வில். ஆயிரம் முறை இலக்கடையாது உள்ளத்திலேயே அமைந்த அம்புகள். போர் எவ்வண்ணம் தொடங்கியது என நினைவில்லை. ஆசிரியருக்கு பணிவிடைகள் செய்வதில் நான் முன்னிற்பதனால் அவன் சினம்கொண்டான். ஆனால் நீராடச் செல்கையில் அதை ஆசிரியரின் சிறுமை என காட்டினான். அரசகுடியினருக்கு பணிவிடை செய்ய ஆசிரியர்களுக்கும் தெரியும் என்றான். அச்சொல்லால் சீண்டப்பட்டேன். நாங்கள் போரிட்டோம். அவனை கொல்லும்பொருட்டு அம்பு ஒன்றை எடுத்தேன். அதை எய்தபோது நடுவே ஓர் யானைக்குட்டி நீரிலிருந்து எழுந்தது. அதன்மேல் அம்பு பாய்ந்தது.”

“அந்த யானையின் பெயர் அஸ்வத்தாமன் என பின்னர் அறிந்தேன்” என்றான் அர்ஜுனன். “பிறந்ததும் குதிரைக்குட்டிபோல ஒலியெழுப்பியமையால் முதுமாதங்கர் அதற்கு அஸ்வத்தாமன் என்று பெயரிட்டிருந்தனர். அன்றுவரை மானுடரிலிருந்து அன்பை மட்டுமே அறிந்துவந்தது அந்த வேழம். மானுடரிலிருந்து முதல் புண்ணைப் பெற்றதும் அதன் உள்ளம் திரிந்துவிட்டது. அந்தப் பிழையை நிகர்செய்யும்பொருட்டு நான் யானைமுகக் கடவுளுக்கு நோன்பிருந்தேன். நோன்புகள் என்பவை உண்மையில் நமது பிழைகளை நாமே கடக்கும்பொருட்டு எண்ணிக்கொள்பவை மட்டுமே. அந்நோன்பினூடாக நான் அதை முற்றாக மறந்தேன். அந்த யானை பெருஞ்சினமும் கட்டின்மையும் கொண்டதாக வளர்ந்தது. பின்னர் வேண்டுமென்றே அதை மாளவ அரசனுக்கு கொடையாக அஸ்தினபுரியில் இருந்து அளித்தனர் என தெரிந்துகொண்டேன்.”

“யாதவரே, இதோ அதை கொல்லப்போகிறார் மூத்தவர். அதை நான் கொல்லத்தொடங்கி ஐம்பதாண்டுகள் கடந்துவிட்டன. ஒவ்வொரு நாளுமெனக் கொன்று இதோ கொன்று முடிக்கவிருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “ஆம், ஊழால் அனைத்து உயிர்களும் பின்னப்பட்டிருக்கின்றன” என்றார் இளைய யாதவர். “உன் ஆவநாழியில் அந்த இறுதி அம்பு ஒருங்கியிருக்கிறதல்லவா?” அர்ஜுனன் “அதை நான் எடுத்தால் என்னிடம் அம்பென ஏதும் எஞ்சாது. காண்டீபத்தை கீழே வைத்துவிடவேண்டியிருக்கும்” என்றான். “சுனையை முற்றிறைத்தாலொழிய புதிய நீர் ஊறுவதில்லை” என்றார் இளைய யாதவர். “அது அரியது… மிக மிக கூரியது. யாதவரே, தளிர்க்கொடி முனைபோல் மென்மையானது. ஒருபோதும் நெஞ்சத்து இருளிலிருந்து நான் வெளியே எடுக்காதது. அதை எடுத்துவிட்டால் அதன்பின் நான் எஞ்சமாட்டேன். அது என் இறப்பு” என்றான் அர்ஜுனன். உரக்க நகைத்தபடி இளைய யாதவர் சொன்னார் “பார்த்தா, இறக்காதவர் பிறப்பதில்லை.”

அர்ஜுனன் மேலும் சொல்லெடுக்காமல் அமர்ந்திருந்தான். தேர் படைகளினூடாகச் சென்றது. புகை சூழ்ந்திருந்த போர்முகப்புக்குள் நுழைந்தது. அர்ஜுனன் இருமி துப்பினான். அவன் விழிகளை புகை மறைத்தது. “என்னால் இயலாதென்றே தோன்றுகிறது, யாதவரே” என்றான். “எனில் உயிர்விடுக! நீ செய்வதற்கு வேறொன்றில்லை” என்றார் இளைய யாதவர். “யாதவரே, அஸ்வத்தாமன் என்னும் யானையை நான் வென்ற மறுநாள்தான் என்னை பரத்வாஜ குருநிரையின் முதன்மை மாணவனாகவும் தன் கலையனைத்திற்கும் வழித்தோன்றலாகவும் ஆசிரியர் அறிவித்தார்” என்று அர்ஜுனன் சொன்னான். “ஒருபோதும் எனக்கு நிகராக இன்னொருவனை அவர் வைக்கப்போவதில்லை என்றார். என்னை தன் வடிவமாகவே கண்டு வணங்குக என ஆணையிட்டார். எனக்கு எதிராக சொல்லப்படும் ஒவ்வொரு சொல்லும் அவரை நோக்கியே, என் மேல் எழும் ஒவ்வொரு வில்லும் அவருக்கு எதிராகவே என வஞ்சினம் உரைத்தார்.”

“அதற்கு முன் உன்னிடம் சொல்பெற்றுக்கொண்டார்” என்றார் இளைய யாதவர். “ஆம், ஒரு தருணத்திலும் நான் அவர் மைந்தனை கொல்லலாகாது, எதன் பொருட்டும் என்று ஆணையிட்டார். அவர் குரல் நடுங்கியதை உணர்கிறேன். ஒருவேளை மானுடர் கற்பனைக்கே அப்பாற்பட்ட பெரும் அறப்பிழையை அஸ்வத்தாமர் செய்தாலும் என் வில் எழலாகாது என்றார். அவர் குரலை சொல் சொல்லென நினைவுறுகிறேன். அத்தனை பெரிய நாள் அது என அன்று எண்ணியிருக்கவில்லை. நாளை என் குலத்துக்கும் உனக்கும் பெரும்பழியை அவன் அளித்தாலும், உன் பிதாமகர்களையும் அன்னையரையும் உடன்பிறந்தாரையும் மைந்தர்களையும் உன் கண்ணெதிரே அவன் கொன்றாலும் உன் கை அவனை கொல்லக்கூடாது… அவர் விழிகளை நினைவுகூர்கிறேன். நான் மூதாதையரும் மும்மூர்த்திகளும் ஆணையிட்டாலும் மீறமாட்டேன் என அவருக்கு சொல்லளித்தேன்.” அர்ஜுனன் “யாதவரே, அன்று அவர் விழிகளில் பிறிதொருவரை கண்டேன். அவர்தான் இதோ அனைத்து அறங்களையும் மீறி களம்நின்றிருக்கும் ஆசிரியர்” என்றான். “வந்தடைந்துவிட்டாய்…” என களம் நடுவே தேரை கொண்டுசென்று நிறுத்தினார் இளைய யாதவர்.

ele1துரோணரை நோக்கி சென்றபோது அர்ஜுனன் தன்னுள்ளிருந்து ஒரு புதிய ஆற்றல் எழுவதை உணர்ந்தான். அவர் முன்னிருந்து தோற்று தேர் எரிய விலகிச் சென்றபோது அவர் வெல்லமுடியாதவர் என்றும் அவர் முன் முற்றாக தோற்றுவிட்டதாகவும் அவன் உணர்ந்தான். ஆனால் மீண்டும் அணுகியபோது எரிச்சலும் கசப்பும் முற்றாக விலகி உள்ளம் அமைதி கொண்டது. அவன் அவருடைய புதிய விழிகளையே எண்ணிக்கொண்டிருந்தான். எத்தனை பழகிய நோக்கு! எத்தனை ஆயிரம் முறை எண்ணத்தில் எழுந்தது! அதை அழுத்தி அழுத்தி ஆழத்தில் செலுத்திக்கொண்டுவிட்டிருக்கிறான். இங்கு இவ்வண்ணம் எழுந்து தோன்றுவதற்காகவே அவை அங்கே இருந்திருக்கின்றன. இதோ இக்களத்தில் வில்கொண்டு நின்றிருப்பவர் என்னுள் இருந்து எழுந்தவரா என்ன?

அவன் தேர் போர்முனைக்கு சென்று நின்றது. நகுலனும் சகதேவனும் அவனுக்கு சகடத்துணையாக வந்தனர். ஆனால் சூழ்ந்திருந்த புகைமூட்டத்தால் அவர்கள் அகற்றப்பட்டார்கள். விழுந்து எரிந்துகொண்டிருந்தனர் பாண்டவப் படையினர். தேர்கள் கொழுந்தாடி வெடித்துக்கொண்டிருந்தன. புழுதியும் புகையும் சூழ்ந்து காற்றில் அலைப்புண்டன. வாழ்த்தொலிகளை எழுப்ப எவரும் அங்கிருப்பதாக தெரியவில்லை. மிக அப்பால் சாத்யகியின் ஆணைகள் வானில் அலைந்து வீணாகி சிதறிக்கொண்டிருந்தன. எந்த ஓசையும் இல்லாமல் அவர்கள் போர்முகம் கொண்டனர். தெய்வங்கள் நோக்குகின்றனவா விண்ணிலிருந்து? இப்புகைப்பரப்புக்குள் கந்தர்வர்கள் உலவுகின்றனரா?

அவனைக் கண்டதும் தொலைவிலிருந்தே துரோணர் உரக்க எக்காள ஒலி எழுப்பினார். பற்கள் தெரிய நகைத்தபடி “செல்க! செல்க!” என்று கைசுட்டி ஆணையிட்டார். வில்லும் குடுவையும் கொண்ட கொடி காற்றில் எழுந்து பறக்க அவருடைய தேர் அவனை நோக்கி வந்தது. அவன் காண்டீபத்தை ஊன்றியபடி அவரை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். அவருடைய விழிகளை சந்திக்க விழைந்தான். அவை அணுகி அணுகி வந்தன. நோக்கு மட்டுமென திகழ்ந்து இரு புள்ளிகளாகி ஒருகணத்தில் விழிக்கூரை அவன் விழி சந்தித்தது. அவன் மெய்ப்பு கொண்டான். சற்று நேரத்தில் கொல்லப்படவிருப்பவர் அவர் என்பது அக்கணமே அவனுள் உறுதியாகியது.

சூழ்ந்திருந்த வீரர்கள் அவர்கள் போரிடுவதை அறியவில்லை. புகையால் புழுதியால் அனலால் அவர்கள் மூடப்பட்டிருந்தனர். அவர்கள் பிறிதெவரும் இல்லாத விரிந்த வான்வெளியில், சூழ்ந்த வெறுமைக்குள் நின்றுகொண்டிருந்தனர். பிற விழிகள் அறியாத போர். அது மெய்யாகவே நிகழ்கிறதா? அன்றி தன் அகத்துக்குள், கனவின் ஆழத்திலா? என்றும் அது அங்கு அவ்வண்ணம் நிகழ்ந்துகொண்டே இருந்ததா? இது இங்கு முடியப்போவதில்லையா? கனவில் எழும் அம்புகள் எவரையும் கொல்வதில்லை. எனில் அவை ஏன் எழுகின்றன? அவை சென்று தைப்பது எவரை?

முதல் அம்பை எடுத்து அவரை நோக்கி தொடுத்த கணமே அவன் உணர்ந்தான், அவனுக்கு அந்நம்பிக்கை ஆற்றலை அளித்தது அவன் ஒன்றை கரந்திருக்கிறான் என்பதுதான். ஒன்றை கரந்திருப்பவன் பிறர் அறியாத படைக்கலமொன்றை கொண்டவன். ஆகவே பிறரைவிட ஆற்றல் மிக்கவன். நீங்கள் என்னை முழுதறியவில்லை என்று இவ்வுலகனைத்திடமும் சொல்லும்போது மட்டுமே மானுடன் தன் ஆற்றலின் உச்சத்தை அடைகிறான் போலும். வருக! வருக, ஆசிரியரே! நீங்கள் அறியாத ஒருவனிடம் போரிட வந்திருக்கிறீர். கரவினூடாக உங்களைக் கடந்த ஒருவனிடம். அணுகுக! அணுகுக! அவர் அவன் அம்புவட்டத்திற்குள் வந்ததும் அவன் நாணிழுத்து முதல் அம்பை தொடுத்தான். அவருடைய அம்பு எழுந்து அதை முறித்தது. அந்த ஒலியுடன் இணைந்தே அடுத்த அடும்பு வந்து அவன் தேர்க்குவைமுகடை அடித்தது.

தான் தொடுத்த ஒவ்வொரு அம்பும் தன்னுள் வாழ்ந்த அக்கரவிலிருந்து எழுந்தது என அர்ஜுனன் அறிந்திருந்தான். ஆகவே ஒவ்வொன்றிலும் துரோணர் அறியாத ஒன்று கூடியிருந்தது. ஒரு திரும்பல், ஓர் அசைவு, ஒரு துள்ளல், ஒரு சிறு முழக்கம். அது துரோணரை எச்சரிக்கை கொள்ளச்செய்தது. அவனை நோக்கி அவர் எய்த அம்பு வெடிப்போசை எழுப்பியபடி மேலெழ அக்கணமே அதை தன் அம்பால் விண்ணிலேயே வெடித்துச் சிதற வைத்தான். விண்மீன்கள் தெறிப்பதுபோல் வானெங்கும் தீப்பொறிகளை பரப்பியபடி அது ஒளிர்ந்து கருகி அடங்கியது. சீற்றம் கொண்டு பற்களைக் கடித்தபடி, உறுமியபடி, பொறுமையிழந்து கூச்சலிட்டபடி துரோணரும் மேலும் மேலும் அம்புகளை அவன் மேல் எய்தார். ஒவ்வொரு அம்பையும் அவன் மண்ணுக்கு வருவதற்கு முன்னரே அறைந்து தெறிக்கவிட்டான். அவர் அவன் ஆவக்காவலனை கொன்றார். அவனுடைய தேர்மகுடமும் கொடியும் உடைந்தன. அவர்களின் போரைக் கேட்டு மெல்ல எழுந்து சூழ்ந்தனர் பாண்டவப் படையினர்.

பின்னர் துரோணர் மெல்ல பின்னடைந்தார். அது மேலும் ஆற்றல் கொண்ட அம்புகளை எடுப்பதற்காகவே என்று அவன் உணர்ந்தான். அவருடைய விழிகள் தன் முகத்தை துழாவுவதை அறிந்தான். அவன் கொண்ட அந்த ஆற்றல் என்ன என்று அவர் எண்ணுகிறார். அவன் கரந்திருப்பது ஒன்று உண்டென்று கண்டுகொண்டிருக்கிறார். அவருடைய அத்தனை அம்புகளையும் அந்தக் கரவின் எதிர்பாராத தன்மை பொருளிழக்கச் செய்தது. ஓர் அணுவிடை திசை மாற்றியது. ஒரு கணம் பிந்த வைத்தது. ஒரு துளி ஆற்றல் குறையச் செய்தது. அந்த அணுக்கணத்தின் துளித்துமியில் புகுந்து அவரை அவன் வென்றுகொண்டிருந்தான். முற்றிலும் நிகர்நிலைகொண்ட போர் என்றே சூழ்ந்திருந்தவர்கள் எண்ணினர். அவர்கள் அறிந்திருந்தனர், அம்புகள் நிகழ்த்தும் அந்த உரையாடலில் ஒரு சொல் அவனிடம் மிகுந்திருப்பதை.

துரோணர் மெல்ல அந்த தன்னம்பிக்கை நிறைந்த சிரிப்பை அடக்கி விழிகூர்ந்தார். தொங்கிய இமைகளிலும் மடிந்த உதடுகளிலும் மீண்டும் முதுமை வந்து படிந்தது. ஆனால் அவன் அறிந்த அந்தக் கனிவும் மென்மையும் அங்கு முற்றாகவே தென்படவில்லை. கற்பிக்கையில் மட்டுமே அவை அவர் முகத்தில் எழுகின்றன. சொல்திரள்கையில் மட்டுமே அவர் ஆசிரியர். அப்போது அவரில் புதிய எண்ணங்கள் எழுகின்றன. ஆயிரம் கைகளால் தன் மாணவரின் தலை தொட்டு வாழ்த்துகிறார். முலையூட்டும் அன்னையென, தலையில் மைந்தரை தூக்கி வைத்திருக்கும் தந்தையென, நெஞ்சிலேற்றி விளையாடும் மூதாதையென, உடலெங்கும் முளை எழுந்து காடாகிச் சூழும் நீத்தோரென மாறுகிறார். கரவின்றி அளிக்கிறார். எல்லையின்றி வாழ்த்துகிறார். இதோ வில்லெடுத்து என்னை எய்பவர் பிறிதொருவர். அச்சமும் தனிமையும் கொண்டவர்.

தன் அம்புகளால் அவருடைய அம்புகளை அறைந்து ஒவ்வொரு கணமாக எதிர்கொள்கையில் அவன் அவருடைய வீச்சும் விசையும் மிகுந்துகொண்டிருப்பதை உணர்ந்தான். எதிர்நிற்பவரின் விசை மிகுவது நன்று. அது அதில் வீழ்ச்சியும் உண்டென்பதற்கான சான்று. எழுதலும் விழுதலுமின்றி நிகழ்ந்துகொண்டிருக்கும் வில்திறனே வெல்லற்கரியது. இவர் சினம் கொள்கிறார். எனில் எழும் அம்பை கணக்கிடுகிறார், தவறும் அம்பைக் கண்டு உளம் பதைக்கிறார். நிகழ்வனவற்றில் இல்லை அவருடைய உள்ளம். அது முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறது. நிகழில் நின்றிருப்பதே யோகம். முந்துவதும் பிந்துவதுபோலவே பிழைதான். பிழைகள் ஆற்றலை அழிக்கின்றன. பிழையின்மையே யோகம். வெல்லமுடியாதவன் யோகி மட்டுமே. பிற அனைவரும் வில்லில் இருந்து வானுக்கு எழும் அம்புகள் போல. அவர்கள் எத்தனை விசைகொண்டிருந்தாலும் விழுந்தாகவேண்டும். யோகி ஒளி. அவன் சென்றுகொண்டே இருப்பவன்.

அவர் உள்ளத்தின் ஒரு நுனி வேறெங்கோ இருக்கிறது. காற்றில் பறக்கத் துடிக்கும் பட்டின் ஒரு முனை முட்கூரில் சிக்கிக்கொண்டதுபோல். அது என்ன? அந்தணன் எனப் பிறந்த இவரை மண்விழைவென வந்து பற்றிக்கொண்ட தெய்வம் எது? இங்கு இவ்வாறு ஆட்டிவைப்பதுதான் என்ன? மைந்தன்மேல் கொண்ட பற்றா? ஆனால் மானுடருக்கு மைந்தர் விலங்குகளுக்கு குழவிகள்போல் இயல்பான குருதிநீட்சி அல்ல. பொருளேற்றப்பட்ட சொற்கள் அவர்கள். அவருக்கு அஸ்வத்தாமன் யார்? அவன் அவருடன் கணம்கணமென போரிட்டுக்கொண்டிருந்தான். அவனுள் விலகிநின்று அவரை கூர்ந்து நோக்கிக்கொண்டும் இருந்தான். ஒருபோதும் அப்படி அவரை அணுகியறிய முயன்றதில்லை. அவருக்கு இனியவனாக கால்வருடி பணிசெய்து குருநிலையில் இருந்தபோதும்கூட. இருளுக்குள் அவர் குரல்மட்டுமே ஒலிக்க கங்கைக்கு செல்லும்போதுகூட.

ஓர் அம்பு அவரை கடந்து செல்ல துரோணர் உடல் வளைத்து எழுந்து பிறிதொரு அம்பால் அவனை அறைந்தார். அது முழக்கமிட்டபடி வந்து தன் தேர்த்தூணை உடைத்து தேர் முகடை சரியவைத்தபோது அக்கணத்தில் அவ்வசைவில் உடைத்து திறக்கப்பட்டதுபோல் அவன் ஒன்றை உணர்ந்தான். இளமையில் எங்கோ, சிறுவன் என வாழ்ந்த தொடக்க நாளில் உள்ளத்தில் பட்ட ஒரு வடுவிலிருந்தே அனைத்தும் முளைத்தெழுந்துள்ளன. அவருடைய ஆற்றல்களுக்கு அதுவே ஊற்று. எனில் அந்த ஆற்றலுக்கு எல்லை வகுப்பதும் அதுவே. விதையிலிருந்து பெற்ற நஞ்சிலிருந்து பெருமரங்களும் விடுதலை கொள்ள இயல்வதில்லை. அதுவே நிலம் மீதான பற்று. அதுவே மைந்தன் மேலான சார்பு. அதுவே இப்புவியில் கட்டி நிறுத்தும் தளை.

“இன்று உங்களை விடுபடச்செய்கிறேன், ஆசிரியரே” என்று அவன் கூவினான். துரோணரின் கை அதிர்வதை, விழி துடித்து அமைவதை அவன் கண்டான். “இன்று உங்கள் தளைகளை அறுக்கிறேன். ஆம், இன்று உங்களை முற்றாக விடுவிக்கிறேன்!” என்று மீண்டும் மீண்டும் கூவினான். உதடசைவாகவே அவரை சென்றடைந்த அச்சொல் அவரை நிலையழியச் செய்வதை உணர்ந்து உரக்க நகைத்தபடி மீண்டும் மீண்டும் சொன்னான். “நீங்கள் எனக்களித்த அத்தனை சொற்களுக்காகவும் இதை நான் உங்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும். இது என் கொடை! ஆசிரியரே, இதைப் பெற்று என்னை வாழ்த்துக! இது என் பரிசில்.” அவன் அவர் விழிகளை நோக்கி கூச்சலிட்டான் “இன்று விடுதலைகொள்வீர், ஆசிரியரே! என்னை அதற்கென்றே இயற்றினீர்!”

துரோணர் “என்ன சொல்கிறாய், அறிவிலி? என்ன சொல்கிறாய்?” என்றார். “இதன் பொருட்டே என்னை மைந்தனுக்கு நிகராக வளர்த்தீர்கள். இதன்பொருட்டே எனக்கு வில்லளித்தீர்கள். ஆசிரியரே, இங்கிருந்து உங்களை விடுவிப்பது நான். அங்கு உங்களை அன்னமும் நீரும் அளித்து நிலைநிறுத்துவது அவன். புத் எனும் நரகுலகுக்கு செல்லாது உங்களைக் காப்பவன் அவன். புவி எனும் நரகத்திலிருந்து உங்களை மீட்பவன் நான்!” துரோணர் அவன் உளச்சொற்களை துளி மிஞ்சாமல் கேட்டார் “கீழ்மகனே! அறிவிலி!” என்று கூவியபடி அவனை அம்புகளால் மேலும் மேலும் அறைந்தார். அவனைச் சூழ்ந்து கூகைகள்போல், பருந்துகள்போல் கூச்சலிட்டபடி சென்றன அம்புகள். பன்றிகள்போல், எருதுகள்போல் உறுமின. சிம்மக்குரல் எழுப்பின. நரிகளைப்போல் ஊளையிட்டன.

அப்போது தொலைவில் முரசொலி எழுந்தது. அவ்வோசையைக் கேட்டதுமே துரோணரின் வில் நின்றது. கைகள் நடுங்க வில் நின்று அதிர்வதை காணமுடிந்தது. பாண்டவர் தரப்பிலிருந்து “வீழ்ந்தார் அஸ்வத்தாமர்! அஸ்வத்தாமர் வீழ்ந்தார்! விண்ணேகினார் அஸ்வத்தாமர்!” என்று திரளொலிகள் எழுந்தன. அர்ஜுனன் உரக்க நகைத்து “ஆம், இதோ களம்பட்டார் உங்கள் மைந்தர். இனி விண்ணிலிருக்கும் உங்களுக்கு நீர்க்கடன் அளிக்கவேண்டியவனும் நானே!” என்றான். உடல்பதற அங்குமிங்கும் நோக்கியபடி துரோணர் தேரில் நின்றார். கௌரவப் படையின் ஒலிகள் எழுந்தன. “பரத்வாஜ குடியின் அஸ்வத்தாமர் களம்பட்டார்! உத்தரபாஞ்சாலர் களம்பட்டார்! துரோணாசிரியர் மைந்தர் வீழ்ந்தார்! வெல்க மாவீரர்! விண்ணேகுக பெருவில்லவர்!” துரோணர் கால்கள் தளர தேரின் தூணை பற்றிக்கொண்டார்.

“ஆசிரியரே, உங்கள் மைந்தர் களம்பட்டார். அஸ்வத்தாமர் மூத்தவர் பீமசேனரால் கொல்லப்பட்டார். கதையால் தலையறைந்து கொல்லப்பட்டார்! இதோ முழங்குகின்றன முரசுகள்! இதோ கேளுங்கள் கூக்குரல்களை!” என்றான் சகதேவன். “இல்லை. அவனைக் கொல்ல பீமனால் இயலாது” என்றபின் தன் தேரை திருப்பி அப்பால் நின்ற யுதிஷ்டிரரை நோக்கி சென்றார் துரோணர். “யுதிஷ்டிரா, நீ சொல். ஒருபோதும் பொய்யுரைக்காத உன் நாவால் கூறுக, அஸ்வத்தாமன் களம்பட்டானா?” என்றார். யுதிஷ்டிரர் ஒருகணம் அவரை நோக்கிய பின் நாவால் உதடுகளை நனைத்து மூச்சிழுத்து “ஆம் ஆசிரியரே, அஸ்வத்தாமன் பீமனால் கொல்லப்பட்டான்” என்றார்.

தன் கையிலிருந்த அம்பை கீழே வீழ்த்தி, வில்லை மடியில் வைத்து தேர்த்தட்டில் காலோய்ந்து அமர்ந்து கண்களை மூடினார் துரோணர். “ஒரு கணம்தான்! இதோ இக்கணம். பார்த்தா, அவர்கள் செய்தி உணர்ந்து மறுஅறிவிப்பு எழுப்புவதற்குள் உன் வில் எழுக!” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் தன் ஆவநாழிக்குள் கைவிட்டபோது ஒற்றை அம்புமட்டுமே அங்கே எஞ்சுவதை உணர்ந்தான். அவன் உடல் மெய்ப்பு கொண்டது. அதை எடுத்தபோது இருமடங்காகியது. நாண் இழுத்துப் பூட்டியபோது பத்துமடங்கெனப் பெருகியது. துரோணரின் நெஞ்சை நோக்கி குறிவைத்துச் செலுத்தியபோது நூறு சிம்மங்களின் ஓசையை எழுப்பியபடி சென்று சென்று அவர் நெஞ்சில் அறைந்தது.

துரோணரின் கவசம் இரண்டாக உடைந்து விழ அவர் நெஞ்சில் ஆழ இறங்கி நின்று சிறகதிர்ந்தது அர்ஜுனனின் அம்பு. துரோணர் மல்லாந்து தேர்த்தட்டில் விழுந்தார். கால்கள் இழுத்து துடித்தன, கைகள் தேர்த்தட்டில் கிடந்து அதிர்ந்தன. ஒருகணம் அவர் எழ முயல்வதுபோலத் தோன்ற அர்ஜுனன் இயல்பாக தன் ஆவநாழியை நாடி கையை கொண்டுசென்று அது நிறைந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். அதன் எடை மிகுந்தபடியே வந்தது. தோள் தாளாமலாக அவன் ஆவநாழியைக் கழற்றி தேர்த்தட்டிலிட்டான். அவன் நோக்கி நிற்க அது பெருகிக்கொண்டிருந்தது. அவன் அவருக்கு திருப்பி அளித்த அம்புகள் அனைத்தும் அதற்கே மீண்டு வந்தன. அவன் வில்லை தேர்த்தட்டில் இட்டு இரு கைகளையும் கூப்பினான். விழிகள் நிறைந்து முகத்தில் வழிந்து நெஞ்சில் சொட்ட நின்றான்.

சூழ்ந்திருந்த படைகள் சொல்லவிந்து விழிகளாக மாறி நின்றிருந்தன. அத்தருணத்தில் படைகளுக்குப் பின்னாலிருந்து புரவியில் விரைந்தோடிவந்த திருஷ்டத்யும்னன் அதே விசையில் குதித்து துரோணரின் தேர்த்தட்டில் ஏறினான். “என்ன செய்கிறான்! அடேய் அறிவிலி, நில்!” என்று யுதிஷ்டிரர் கூவினார். “அவனை தடு… நகுலா, அவனை பிடி… இளையோனே, அவனை அம்புதொடுத்து வீழ்த்து!” திருஷ்டத்யும்னன் தோல்பட்டையால் கொண்டையாகக் கட்டப்பட்ட தலைமுடியை தன் கையால் பற்றி வலக்கையிலிருந்த வாளால் ஓங்கி அவர் தலையை வெட்டி தூக்கி எடுத்தான். அதை மேலே காட்டியபடி “துருபதரின் வஞ்சம்! இதோ துருபதரின் வஞ்சம்! பாஞ்சாலத்தின் வஞ்சம் இதோ! பழி கொண்டது பாஞ்சாலக்குருதி! பழி கொண்டது பிருஷதனின் குருதிமரபு!” என்று கூவினான்.

பாண்டவப் படையிலிருந்து முதிய வீரன் ஒருவன் “கீழ்மகன்!” என்று கூவி திருஷ்டத்யும்னனை நோக்கி ஓங்கி துப்பினான். “இழிமகனே, உனக்கும் உன் குலத்திற்குமாக இது!” என்று கூவியபடி ஓடிவந்து தன் கழுத்தை வாளால் வெட்டிக்கொண்டு முகம் திரும்ப கால்கள் மடிந்து உடல் முன்படிந்து விழ துடித்தான். “கீழ்மகனே, கீழ்மகனே” என்று கூவியபடி இன்னொரு வீரன் அவ்வண்ணமே ஓடிவந்து தன் தலை கொய்து வீழ்ந்தான். “பழிகொள்க! உன் குடி அழியா பழிகொள்க!” என்று கூவியபடி மேலும் மேலும் பாண்டவ வீரர்கள் வந்து தலைகொடுத்து விழுந்தனர். திகைத்து நின்ற திருஷ்டத்யும்னன் “ஆம், நான் பழிகொள்கிறேன்! இப்பழியை நானே கொள்கிறேன்! நான் இதன்பொருட்டே பிறந்தேன். எந்தை என்னை ஈன்றதும் வளர்த்ததும் இதற்காகவே!” என்று கூவினான்.

அர்ஜுனன் தேர்த்தட்டில் அமர்ந்து தன் தலையை இரு கைகளாலும் அழுந்தப் பற்றிக்கொண்டான். யுதிஷ்டிரர் தேரில் நினைவிழந்து சரிய நகுலன் பாய்ந்து அவரை பற்றிக்கொண்டான். திருஷ்டத்யும்னன் வெட்டுண்ட தலையைத் தூக்கி தன் முகத்திலும் மார்பிலும் குருதியை வீழ்த்தியபடி அமலையாடினான். “நான் காலன்! நான் ருத்ரன்! நான் காளன், சண்டன், பிரசண்டன்!” என்று ஆர்ப்பரித்தான். “என் குடி அழிக! என் கொடிவழி முற்றழிக! என் முன்னோர் பழிசூடுக! என் தெய்வங்கள் எரிந்தெழுந்து அகல்க! நான் நாணவில்லை. இது எந்தைக்காக என் கடன்!” என்று கூவினான். துரோணரின் தலையை தூக்கி வீசிவிட்டு தேரிலிருந்து இறங்கி தன் புரவிநோக்கி சென்றான்.

முந்தைய கட்டுரைஎழுதுக!
அடுத்த கட்டுரைகட்டண உரை இன்றும் நேற்றும்