தமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு

vallalar

அன்புள்ள ஜெ,

அண்மையில் ஷௌக்கத்தின் ‘ஹிமாலயம்’ வாசித்து முடித்தேன். மனதிற்கு நெருக்கமான நூல். அதில் “மதம் ஏதானாலும் மனிதன் நன்றாக இருந்தால் போதும்” எனும் நாராயண குருவின் வரி மனதை ஆழமாக தொந்தரவு செய்தது. நாராயண குரு என்றல்ல காலனிய காலகட்டத்து இந்திய ஆன்மீக மரபுகள் அனைத்தின் பொதுவான கவலை இதுவாகவே இருந்திருக்கும் எனத் தோன்றியது. வள்ளலார், அய்யா வைகுண்டர் என தமிழக மெய்ஞான மரபுகளுடன் சேர்த்து இவ்வரியை விரித்துக்கொள்ள முடியும். பஞ்சத்திலும் பாராமுகத்திலும் மறந்து போகும் முகங்களை கண்டு உருவான ஆன்மீக மரபு மனித மீட்பையே கொள்கையாக கொண்டிருக்க முடியும்.

மெய்வழிச்சாலை, வள்ளலார், அய்யா வைகுண்டர் என காலனிய காலகட்டத்து தமிழக பிராந்திய ஆன்மீக மரபுகள் பற்றி தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அயோத்திதாசரை கூட இதே வரிசையில் வைக்கலாம்.  இயன்றால் ஒரு புத்தகம் எழுத முடியுமா என பார்க்கலாம்.

இவைத் தவிர்த்து வேறு மரபுகள் தமிழகத்தில் உள்ளனவா? இந்திய அளவில் வெவ்வேறு பிராந்தியங்களில் இவற்றுடன் ஒப்பிடத்தக்க அமைப்புகள் வேறு எங்கெங்கு உள்ளன?

சுனீல் கிருஷ்ணன்

akila

அன்புள்ள சுனீல் கிருஷ்ணன்,

இந்தக் கடிதம் ஓர் அதிர்ச்சியான எண்ணத்தை உருவாக்கியது. இன்று எவ்வளவு பிரம்மாண்டமான அறிவியக்கப்பணிகள் எஞ்சியிருக்கின்றன! உண்மையில் நம் தலைமுறையில் அறிவியக்கப்பணி என்பது தொடங்கப்படவே இல்லையோ? மெய்யான அறிவியக்கப்பணி என்பது மிகச்சீராக, தொடர்ச்சியாக செய்யப்படுவது. ஒரு முழுவாழ்நாளையும் கோருவது. நம் தலைமுறைக்கு முந்தைய தலைமுறையில் மிகச்சிலரே பெரும்பணிக்கு தங்களை அளித்துக்கொண்டவர்கள். மிஞ்சியவர்கள் வெறுமனே உதிரி ஓசைகளை வெளிப்படுத்தியவர்கள். வெறுமனே புரணியும் அரட்டையும் பேசிக்கொண்டிருந்தவர்கள்.

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கடுமையான உழைப்பைக் கோரும் பெரும்பணிகளின் மேல் ஒவ்வாமை உள்ளது. ஏனென்றால் அவர்கள் நம் இயலாமையை, சிறுமையை தங்கள் இருப்பாலேயே சுட்டிக்காட்டுகிறார்கள். ஆகவே பெரும்பணிகளை செய்பவர்களை நாம் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை. அல்லது அவர்களை நம் சிறுமையால் இழிவு செய்கிறோம். நையாண்டிகள், குறைசொல்லல்கள் வழியாக கடந்துசெல்கிறோம்.

சென்ற தலைமுறையில் தமிழ்ச்சூழலில் வாழ்நாள் பணியாக அறிவியக்கத்தில் செயல்பட்டவர்களைப் பற்றி அறிந்துகொள்ள இணையத்தில் தேடினால் பெரும்பாலும் என் தளத்திற்கே திரும்ப வந்து சேர்கிறேன். இதுதான் இன்றைய சூழல். ஆகவே பணியாற்றுவதைவிட அரட்டைகளில் முந்தியிருப்பதே புகழும் இடமும் பெறுவதற்குரியது என்னும் எண்ணம் இங்கே வலுவாக நிறுவப்பட்டுள்ளது.

ஒவ்வொருநாளும் நிகழ்ந்துகொண்டிருக்கும் அரட்டையே அறிவியக்கச் செயல்பாடுகளின் மிகப்பெரிய தடை. ஒரு சூழலில் அத்தனைபேரும் ஒன்றையே பேசிக்கொண்டிருப்பதுபோல அறிவுச்செயல்பாட்டுக்கு எதிரான ஒன்று வேறில்லை. ஆய்வாளர் என்பவர் தன் ஆய்வுக்குள் மட்டுமே ஆழச்செல்பவர். அதன்பொருட்டு பிற வாயில்களை முற்றாக மூடிக்கொள்பவர். எளிய சமூக பொது அலைகளால் பாதிக்கப்படாதவர். அத்தகையோர் எழவேண்டும் இங்கே.

mey
மெய்வழிச்சாலை ஆண்டவர்

தமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு ஒன்றை எழுதுவது எவ்வளவு மகத்தான வேலை! அப்படி ஒன்று எளியமுறையில்கூட எழுதப்படவில்லை. அதை எவரேனும் எழுத முற்பட்டால் அத்துறையில் அவரே முன்னோடி என அறியப்படுவார். என்றேனும் இங்கே ஓர் அறிவியக்கம் மெய்யாகவே தொடங்கும் என்றால் ஒரு வழிகாட்டியாக கருதப்படுவார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்துமறுமலர்ச்சி உருவாகியது. அதற்கான காரணங்கள் பல. முதன்மையானது மேலைநாட்டுக் கல்வி. அது ‘அனைவருக்கும் பொதுக்கல்வி’ என்னும் ஓரு வழக்கத்தை உருவாக்கியது. ஆங்கிலக் கல்வி நம்மை வெளியுலகுடன் தொடர்புறுத்தியது. இரண்டாவதாக ஐரோப்பிய அறிஞர்கள் நம்மை ஆராய்ந்து நம் மரபின் செய்திகளை தொகுத்து அளித்தது. இந்தியவியல் என்னும் அறிவியக்கத்தின் தொடக்கம்.

புறக்காரணிகள் என போக்குவரத்து, தபால், அச்சு முறைகளின் வளர்ச்சியை சொல்லலாம். இதழ்கள் தொடங்கப்பட்டன. அனைவருக்கும் உரிய நூல் என்னும் வடிவம் உருவாகி வந்தது. அத்துடன் பெரும் பஞ்சங்களால் சமூகக்குலைவு உருவாகி இந்தியச்சூழல் மறு அமைப்புக்கு ஆளானதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

விளைவாக இந்திய ஆன்மிகம் பல அடிப்படைக் கேள்விகளை கேட்டுக்கொள்ளத் தொடங்கியது. மதம், சடங்குகள், தத்துவம், நம்பிக்கை, யோகம், ஊழ்கம், மெய்யியல் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள் அக்கேள்விகள் வழியாக உருத்திரளத் தொடங்கின. நெடுநாட்களாக தேக்கமுற்றிருந்த மரபான மதநிறுவனங்களுக்கு மாற்றாக புதிய நிறுவனங்கள் உருவாகி எழுந்தன. ஒட்டுமொத்தமாக உருவான இந்த மறுமலர்ச்சி வெவ்வேறு வகைகளில் நம் ஆன்மிகச்சூழலை மறுகட்டமைப்பு செய்தது.

இந்தியா முழுக்க நிகழ்ந்த இந்து மறுமலர்ச்சியின் விளைவாகவும் அதன் ஒருபகுதியாகவுமே தமிழக ஆன்மிக மறுமலர்ச்சி உருவாகியது. அதன் இயக்கங்களையும் ஆளுமைகளையும் ஒட்டுமொத்தமாக நோக்கி மதிப்பிட்டு ஒற்றைவரலாறாக எழுதும் முயற்சி எதுவும் இன்றுவரை செய்யப்படவில்லை. என் சென்னை உரையில் சுருக்கமாக ஓர் ஒட்டுமொத்த வரைபடத்தை அளிக்கமுடியுமா என்று முயன்றிருந்தேன்.

அவ்வாறு தொகுப்பதற்கு தடையாக உள்ளவை என்னென்ன? ஒன்று, மதம்சார்ந்த உளநிலைதான். ஒவ்வொரு தரப்பும் தங்கள் நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் ஆளுமைகளையும் மிகைப்படுத்தி, உச்சப்படுத்தி எழுதி வைத்திருக்கிறது. மிகையுணர்ச்சிகள், தொன்மங்கள் என அவை பின்னிப்பிணைந்து கிடக்கின்றன. அவற்றை நவீன ஆய்வுமுறைகளைக் கொண்டு, உண்மையாக ஆராய்ந்து மதிப்பிட்டு எழுதுவது எளிய செயல் அல்ல. குறைநிறைகளுடன் எழுதுவதற்கு மிகப்பெரிய முதிர்ச்சி தேவை. சில்லறை எதிர்ப்புகளை கொசுத்தொல்லை என கடந்துசெல்லவேண்டும்.

இரண்டாவதாக, ஆன்மிக வரலாற்றை பிற அரசியல், பண்பாட்டு வரலாறுகளுடன் பிணைத்து விரிந்த பகைப்புலம் அளித்து எழுதுவதற்கு ஓர் முழுமைநோக்கும் கடுமையான உழைப்பும் தேவை. அதற்கு பல ஆண்டுகளாகலாம். அதற்கான சூழல் இங்கில்லை. ஆனால் அவ்வாறான நோக்கு இல்லாமல் எழுதினால் ஒவ்வொரு பகுதியும் முழுமை பெறாமலேயே இருக்கும்.

ஆனால் முழுத்தகுதி பெற்றபின்னரே எழுதவேண்டும் என்றில்லை. எழுத ஆரம்பிக்கலாம். ஒருவர் எழுத இன்னொருவர் தொடர பல படிகளாகவே வரலாற்றெழுத்து முழுமை அடைகிறது. இன்றாவது எவரேனும் தொடங்குவது நல்லதுதான்.

vaikundar
வைகுண்டர் – உருவகப்படம்

ஆன்மிக வரலாற்றை எழுத முதலில் அவற்றின் ஒட்டுமொத்தத்தையும் அவற்றின் வகைப்பிரிவுகளையும் நிகழ்த்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் இப்படி வரையறை செய்வேன். எவ்வகையிலேனும் தமிழக ஆன்மிக சிந்தனைகளை பாதித்த, மாற்றியமைத்த, அவற்றுடன் உரையாடிய அனைத்துத் தரப்புகளும் ஆய்வின் ஒட்டுமொத்த வட்டத்திற்குள் வரும். அதன்பின்னரே வகைப்பாடுகள். அவற்றை இப்படி வகுத்துக்கொள்வேன்

அ. மரபார்ந்த ஆன்மிக-மத அமைப்புகள் ஒரு பிரிவு. நம் சைவமடங்கள் போன்றவை உதாரணம். இந்த மடங்கள் இக்காலகட்டத்தில் பல பிரிவுகளாக தனியாட்சி கொண்டன. நிர்வாக அடிப்படையிலும் தத்துவநோக்கிலும் பல மாற்றங்களுக்கு உள்ளாயின. சில மடங்கள் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டன.

ஆ. புதிதாக எழுந்த மத அமைப்புகள் இன்னொரு பிரிவு. வள்ளலார், வைகுண்ட சாமி, மெய்வழிச்சாலை,  போன்றவை. இவற்றில் அறியப்படாத கடையம் ஆவுடையக்கா மடம் போன்ற பல அமைப்புக்கள் உள்ளன.

இ. மேலைநாட்டு நோக்கு கொண்ட மதச்சீர்திருத்த அமைப்புக்களும் ஆளுமைகளும். சுவாமி சகஜானந்தர் போன்றவர்கள் உதாரணம்.

ஈ. தேசிய அளவிலான புதிய ஆன்மிக இயக்கங்களின் தமிழகச் செல்வாக்கு. ஆரியசமாஜம், ராமகிருஷ்ண இயக்கம், பிரம்மஞான சபை போன்றவை

உ. மதங்களை மறுகட்டமைப்பு செய்யும் இயக்கங்கள். அயோத்திதாசரின் புதிய பௌத்தம் ஓர் உதாரணம்.

ஊ. நவீன ஆன்மிக அமைப்புக்கள். உதாரணம் ஈஷா யோக மையம் போன்றவை.

எ. உதிரிகளான சித்தர்கள், ஆன்மிகச்செல்வர்கள். பல சித்தர்களின் பெயர்கள் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றன. உதாரணமாக குமரிமாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட இருபதாம்நூற்றாண்டு சித்தர்களின் சமாதிகள் உள்ளன.

எ. முழுமையான மதமறுப்பாளர்கள் ஐந்தாம் தரப்பு. ஈ.வெ.ராமசாமி அவர்கள்.

இந்த எல்லையை மேலும் விரித்துக்கொண்டால் தமிழ் இஸ்லாம் பற்றியும் எழுதவேண்டும். சதக்கத்துல்லா அப்பா அவர்களிடமிருந்து தொடங்கிய தமிழ் இஸ்லாமின் பண்பாட்டு- ஆன்மிக தனித்தன்மைகள், வெவ்வேறு சூஃபிகளின் வரலாறுகள். ஆனால் அதை தனியாக எழுதுவதே சிறந்தது.

அதேபோல தமிழ் கிறித்தவத்தின் வரலாறும் எழுதப்படலாம். வீரமாமுனிவர், இரேனியஸ் அய்யர் முதல் தமிழ்த்தன்மை கொள்ளத்தொடங்கிய ஒரு கிறிஸ்தவ மரபு இங்குண்டு. முழுக்கமுழுக்க ஐரோப்பிய நோக்கிலேயே நின்ற மரபு கால்டுவெல் அவர்களில் தொடங்கி நீள்கிறது. அதுவும் தனியாக எழுதப்படவேண்டிய ஒன்று.

இப்படி ஒரு விரிந்த வட்டத்தை பல பிரிவுகளாகப்பிரித்துக்கொண்டால் வரலாற்றெழுத்துக்கான ஒரு கட்டமைப்பு உருவாகிவிடுகிறது. சில தளங்களில் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ராமகிருஷ்ண மடத்தின் வரலாறு பெ.சு.மணி போன்றவர்களால் விரிவான செய்திகளுடன் எழுதப்பட்டுள்ளது. வள்ளலாரின் இயக்கத்தின் வரலாறும் நம்மால் நூல்களில் இருந்து தொகுக்கப்படக்கூடியதே. ஆனால் வைகுண்டரின் வரலாறோ மெய்வழிச்சாலை வரலாறோ தேடிச்சென்று அவர்களின் எழுத்துக்களில் இருந்து மீட்டமைக்கப்படவேண்டும்.

வள்ளலாரைப் போன்றவர்கள் இந்தியா எங்கும் வெவ்வேறு மத- பண்பாட்டுச் சூழல்களில் இருந்து உருவாகியிருக்கிறார்கள். உதாரணம் நாராயண குரு, சுவாமி நாராயண் இயக்கத்தின் முதல்வரான சுவாமிநாராயண் [சகஜானந்தர்] அவர்களுக்கிடையே ஒற்றுமை உண்டு, அதேசமயம் அவர்கள் தனித்துவம் கொண்டவர்கள். அந்த ஒற்றுமை, தனித்துவம் இரண்டையுமே நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

பெரிய பணி. அக்கனவு உங்களுக்கு எழுந்தமைக்காகவே வாழ்த்துக்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைபட்டி நாயும் பாட்டுநாயும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-84