‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-82

ele1வெடியோசைகள் எழுந்து எதிரொலித்துக்கொண்டிருந்த களத்தில் திருஷ்டத்யும்னனை அகற்றி உள்ளே கொண்டுசெல்ல முயன்றுகொண்டிருந்தனர் மருத்துவர். பீமன் தன் தேரிலிருந்து இறங்கி திருஷ்டத்யும்னனை நோக்கி ஓடினான். சாத்யகி திருஷ்டத்யும்னன் மேல் அருகே கிடந்த தேர்ப்பலகை ஒன்றை எடுத்து வைத்தான். அருகே பற்றி எரிந்துகொண்டிருந்த தேர் வெடித்து எரிய பீமன் உடல் தாழ்த்தி ஒழிந்து அருகே அணைந்தான். அவர்களுக்கு அருகே வந்து விழுந்த துரோணரின் எரிவாளி வெடித்து நான்கு புறமும் வீரர்களின் உடல்கள் உடைந்து தெறித்தன. புகையும் புழுதியும் கலந்து குடையென எழுந்து சுருண்டு சிவந்த மரம்போல் வானில் பறந்து காற்றில் அள்ளிச் சிதறடிக்கப்பட்டு முகில்களை நோக்கி எழுந்தன. அவர்களின் மேல் மண்ணும் புழுதியும் பொழிய உடல் வளைத்து நிலம் நோக்கி குனிந்து அதிலிருந்து தப்பினர்.

கற்களும் சிதைந்த தசைச் சிதர்களும் உடல் உறுப்புகளும் அவர்கள் மேல் விழுந்தன. மருத்துவர் திருஷ்டத்யும்னனை மரவுரியால் மூடி மேலும் உள்ளே இழுத்துச்சென்றனர். பீமன் தன் தோள் மேல் விழுந்த சிதைந்த கையொன்றை பற்றி எடுத்து நோக்கிய பின் அப்பால் எறிந்துவிட்டு உதட்டில் படிந்த புழுதியை துப்பியபடி அருகணைந்து “யுயுதானரே, என்ன நிகழ்கிறது இங்கே?” என்றான். இருமியபடி “நேற்று நம் மைந்தன் அவர்களை அழித்தான். இன்றுடன் இவர் நம் படையை முற்றழித்துவிடுவார் போலும்” என்று கூவினான். சாத்யகி “பார்த்துக் கொள்ளுங்கள்… நான் படைமுகப்புக்குச் சென்று நம் படைகளை ஒருங்கிணைத்து பின்னிழுக்க முயல்கிறேன்” என்றபின் எழுந்து புழுதிக்குவைக்குள் ஓடி அகன்றான். மருத்துவ ஏவலர் “இங்கிருந்து மேலும் அகற்றவேண்டும். வெந்த உடலில் புழுதி ஆழப் பதிந்தால் மிகத் தீங்கு” என்றார்.

மாபெரும் கரிய போர்வையைத் தூக்கி அவர்கள்மேல் மூடியதுபோல இருள் பரவியது. யானைத்தோல் கூடாரக் கூரை என வானம் அண்மையில் வளைந்திருந்தது. கருமைக்குள் நூற்றுக்கணக்கான செம்மலர்கள் என துரோணரின் வாளிகள் வெடித்தன. அலறல்கள் நீருக்குள் என கேட்டன. நிலம் அதிர பீமன் மல்லாந்து விழுந்தான். அவன்மேல் மேலும் சிலர் விழுந்தனர். யானை ஒன்று அலறியபடி தன்னைத்தான் சுழன்றது. கையூன்றி எழுந்தபோது பீமனின் உடலுக்குள் நீர்மை குலுங்கிக்கொண்டிருந்தது. மருத்துவ ஏவலர் திருஷ்டத்யும்னனின் உடலில் கொக்கிச் சரடை தொடுக்க அதை உள்ளிருந்து பாண்டவப் படையினர் இழுத்தனர். அவன் மேலும் மேலும் அப்பால் கொண்டுசெல்லப்பட்டான்.

பீமன் கண்களை மூடிக்கொண்டு அந்தப் புழுதியாலான இருளை தன்னுள் இருந்து அகற்றினான். ஒலிகளாலேயே களத்தை அறிந்தான். எதிர்த்திசையில் ஓடி அங்கிருந்த இடைவெளியினூடாக பாய்ந்தான். விழிதிறந்தபோது அவன் விட்டுவந்த பகுதி பெரிய குடைபோல் புழுதியால் மூடப்பட்டிருந்தது. அதற்குள் நெருப்பு எரிந்து தழலாட நிழல்கள் எழுந்து புழுதியாலான வானில் அசைந்தன. உள்ளிருந்து வில்லுடன் நகுலனும் சகதேவனும் ஓடிவந்தனர். சகதேவன் பீமனை நோக்கி “மூத்தவரே, இளையவர் மீண்டும் துரோணரை எதிர்க்கக் கிளம்பியிருக்கிறார்… நாம் அனைவரும் இணைந்து அவருக்கு படைத்துணை அளிக்கவேண்டும் என மூத்தவரின் ஆணை” என்றான். செம்புழுதி அவர்களை மூடியிருந்தது. நகுலன் இருமி துப்பிக்கொண்டிருந்தான். “அவரிடம் அனலம்புகள் நிறைந்திருக்கின்றன… அவனால் அவரை எதிர்க்கமுடியாது” என்றான் பீமன்.

பீமன் சகட ஓசை கேட்டு திரும்பிப்பார்த்தான். இளைய யாதவர் ஓட்டிய தேரில் வில்லேந்தியபடி வந்த அர்ஜுனனை நோக்கி பீமன் திகைத்தான். கன்னங்கரிய சேற்றில் மூழ்கி எழுந்தவன் போலிருந்தான். “என்ன ஆயிற்று? இளையோனே!” என்று கூவினான். “எரிக்கு மருந்து… புரவிக்குருதி” என்றான் அர்ஜுனன். தேர் விசையழிய அவன் “பாஞ்சாலர் எங்கே?” என்றான். “படைப்பின்புலத்திற்குள் இழுத்துச்சென்றுவிட்டார்கள்.” அர்ஜுனன் “உயிர் எஞ்சுமா?” என்றான். “வாய்ப்பில்லை. நினைவு எழவில்லை. உடல் முற்றாகவே வெந்துள்ளது. புழுதியில் இழுபட்டு குருதியும் புண்ணும் சேறாகிவிட்டிருக்கின்றன. தொடைகளில் வெள்ளெலும்பு தெரிகிறது.” அப்பால் சாத்யகியின் கொம்போசை எழுந்தது. “யாதவர் படைகளை ஒருங்கு திரட்ட முயல்கிறார். ஆனால் நம் படைகளின் செவிப்புலன்கள் முற்றாகவே அழிந்துவிட்டிருக்கின்றன. வெடியோசைகள் உடற்குகைக்குள் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன” என்றான் பீமன்.

வலப்பக்கமிருந்து விரையும் தேரில் அவர்களை நோக்கி வந்த யுதிஷ்டிரர் செவிகளை கைகளால் பொத்தியபடி உடல்நரம்புகள் புடைக்க “என்ன நடக்கிறது இங்கு? இளைய யாதவனே, இத்தகைய மாயங்கள் எதற்கும் இப்போரில் இடமில்லையென்றல்லவா போருக்கு முன்னெழுந்த சொல்?” என்றார். பீமன் திரும்பி “போருக்கு முன்னெழுந்த சொற்கள் இங்கு முறையாக பேணப்படுகின்றனவா என்ன?” என்றான். யுதிஷ்டிரர் தத்தளித்து திரும்பிப் பார்க்கையில் பிறிதொரு அம்பு சென்று விழுந்து வெடிக்க வீரர்களின் உடல்களும் புரவிகளின் உடல்களும் தேர்களின் மரத்துண்டுகளும் வானில் சிதறி நாற்புறமும் வளைந்து சென்று விழுந்தன. புகைமுகில்களை நோக்கிய பின் “இது போரே அல்ல! இது தெய்வங்களின் தீச்சொல்லுக்கு நிகரானது. இது எவ்வகையிலும் அறமல்ல. நான் நேரில் சென்று அவர் முன் நிற்கிறேன். என் நெஞ்சு காட்டி நிற்கிறேன். இது அறமல்ல ஆசிரியரே என்று அவரிடம் கூறுகிறேன்” என்றார்.

பீமன் “அனைத்து நெறிகளையும் கடந்து உங்களை சிறைகொண்டு செல்ல மும்முறை முயன்றவர் அவர். இதோ துருபதரின் மைந்தனை தன் தேர்க்காலில் கட்டி இழுத்தார். அவன் உடலை சற்றே உயிர் எஞ்சியிருக்க மீட்டுக்கொண்டு வந்திருக்கிறோம்” என்றான். அர்ஜுனனை திரும்பிப் பார்த்த பின் யுதிஷ்டிரர் “தேர்க்காலிலா?” என்று கேட்டார். “ஆம், தேர்க்காலிலேதான். இப்போது களத்திலிருக்கும் துரோணர் நாம் அறிந்தவரே அல்ல. அவர் முகத்தில் தெரியும் நகைப்பைப் பற்றி வீரர்கள் சொன்னார்கள். அது அவரில் பிறிதொரு தெய்வம் குடியேறியதால் எழுந்தது என்கிறார்கள்” என்றான் பீமன். யுதிஷ்டிரர் “துண்டுகளாக சிதறிக்கிடக்கிறார்கள் நம் படைவீரர்கள். எந்த உடலையும் தனித்தனியாக மீட்க இயலாதென்றனர்” என்றார். செவிகளைப் பற்றியபடி “என் தலைக்குள் முழக்கம் நிறைந்திருக்கிறது. என்னால் நிலைகொள்ள இயலவில்லை” என்று சொல்லி தேர்த்தட்டில் அமர்ந்தார்.

இளைய யாதவர் “பீமசேனரே, துரோணரை நாம் இப்போதே வென்றாக வேண்டும். அரைநாழிகைக்குள். அதாவது மேலும் ஐம்பது அம்புகளை அவர் ஏவுவதற்குள். அதற்குப் பிந்தினால் இங்கு படைகளுமிருக்காது, பாண்டவ ஐவரும் மைந்தரும்கூட எஞ்சமாட்டார்கள்” என்றார். “என்ன செய்வது அதற்கு?” என்றபின் சீற்றத்துடன் பற்களைக் கடித்தபடி திரும்பிய பீமன் அர்ஜுனனை நோக்கி பொருளில்லாத கோபம் பெருக “இவனால் என்ன செய்ய முடியும்? அதோ மறு எல்லையில் அங்கன் நமது படைகளை அழித்துக்கொண்டிருக்கிறான். அவனுக்கு எதிர் நிற்க இயலாமல் சிகண்டியும் சாத்யகியும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இவன் அங்கனிடமும் தோற்றவன். இங்கே இவர் முன்னாலிருந்தும் ஓடிவந்தவன்” என்றான்.

சகதேவன் “மூத்தவரே…” என்றான். “அப்பால் போ!” என அவனை நோக்கி கூச்சலிட்டான் பீமன். “இவனால் அவரை கொல்ல இயலாது… இவனால் அங்கனையும் வெல்ல இயலாது. அதை கண்ணெதிரே கண்டோம். இவன் வில் ஆற்றல் மிக்கது. உள்ளம் ஒவ்வொருவர் முன்பும் முன்னரே மண்டியிட்டுவிடுகிறது.” சினத்துடன் உடலெழுந்த அர்ஜுனனை கையசைவால் இளைய யாதவர் தடுக்க யுதிஷ்டிரர் “இவன் அவரை கொல்வான். அவ்வாறு நிமித்திகர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்றார். பீமன் வெறுப்புடன் பல்தெரிய நகைத்து “அதாவது நிமித்த நூலை நோக்கிய பின்புதான் களம் புகுந்தீர்கள், இல்லையா?” என்றான். யுதிஷ்டிரர் விழிதாழ்த்தி “மெய், என்னால் நோக்காமலிருக்க இயலவில்லை. நான் கடையன். ஆனால் இவன் தன் ஆசிரியனை கொல்வான் என்று கண்டேன்” என்றார்.

இளைய யாதவர் “ஆசிரியனை கொல்லாதவனுக்கு தனது மெய்மை சிக்குவதில்லை என்பார்கள்” என்றபின் உரக்க நகைத்து அர்ஜுனனைப் பார்த்து “செல்க, உன் ஆசிரியனின் நெஞ்சுக்கு அம்புகளை செலுத்துக!” என்றார். அர்ஜுனன் “அதற்கு எனக்கு தயக்கமேதுமில்லை, யாதவரே. அத்தயக்கம் எனக்கு சற்றேனும் வரக்கூடாதென்பதற்காகத்தான் போலும் தெய்வங்கள் அவரை இத்தனை கீழிறங்கச் செய்கின்றன. இதோ என் குடியினர் இறுதிச்சடங்குக்கும் உடல் எஞ்சாமல் குருதிச்சிதறல்களாக கிடக்கிறார்கள். இப்போது என் ஆசிரியரின் முகத்தில் காண்பது நானறிந்த ஆசிரியரை அல்ல. அக்கீழ்மகனின் சிரிப்பை நோக்கி அம்பெய்வதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்றான். “பிறகென்ன, எழுக!” என்று இளைய யாதவர் சொன்னார். “ஆனால்…” என்றபின் “என்னிடம் எஞ்சுவது ஒற்றை அம்பு” என்றான் அர்ஜுனன்.

மீண்டும் வெடியோசை எழ அவர்கள் மேல் புழுதியும் சிதைந்த உடற்தசைகளும் துண்டுபட்ட உறுப்புகளும் பொழிய அவர்கள் குனிந்து நிலம்படிந்தனர். அர்ஜுனன் உடலெங்கும் புழுதிமூட அமர்ந்திருந்தான். நிமிர்ந்து உடலையும் ஆடைகளையும் சீரமைத்த பின்னர் இளைய யாதவர் “எழுக!” என்றார். அர்ஜுனன் அசைவிலாதிருந்தான். “எழுக, இதுவே தருணம்!” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் உடலில் படிந்த புழுதி அவன் மேலிருந்த தேன்மெழுக்கில் நனைந்து சேறாகிக்கொண்டிருந்தது. பீமன் “அவரை இவன் நேர்நின்று வெல்ல இயலாது, யாதவரே. இவனை இவ்வாறு போருக்கு அனுப்புவது பெரும்பிழை” என்றான். “நாமனைவரும் சென்று சூழ்ந்துகொள்வோம். நேருக்குநேர் நின்று போரிடுவோம். அவரை நாம் கொன்றால் நம் படைகள் உயிர் பிழைப்பர். நம்மை அவர் கொன்றால் இப்போர் நின்றுவிடும்” என்றான்.

“அவரை நாமனைவரும் சேர்ந்தாலும் வெல்ல இயலாது” என்றார் இளைய யாதவர். “அவருடைய அம்புகளுக்கு மாற்று அம்பு நம் எவரிடமும் இப்போதில்லை.” பீமன் தளர்ந்து “எனில் நாம் முற்றாக அழிவதுதானா ஒரே வழி?” என்றான். உடனே வீம்புகொண்டு “அதுவே ஊழ் எனில் செல்வோம். அவர் அம்புகளால் களம்படுவோம். அது ஆண்மை. இங்கே புகைக்கும் புழுதிக்கும் நடுவே ஒளிந்து நின்றிருக்கும் கீழ்மையால் எப்பொருளும் இல்லை” என்றான். உறுதியான குரலில் “நாம் வென்றாகவேண்டும்” என்றார் இளைய யாதவர். “எப்படி?” என்றான் பீமன். இளைய யாதவர் “அவர் சற்றேனும் தளரவேண்டும். வில் தாழ்த்தி அமரவேண்டும். அன்றி அவரை வெல்ல இயலாது. அதற்கு ஒரு வழி மட்டுமே உள்ளது” என்றார். “சொல்க!” என்று பீமன் முன்னெழுந்தான். “எதுவாயினும் இனி நமக்கு வேறுவழி இல்லை… இந்தக் கொலைக்களத்தில் இனி நெறிகளே இல்லை.”

“முன்னர் யுதிஷ்டிரர் சென்று வணங்கியபோது அவரே உரைத்தது அந்த வழி” என்று இளைய யாதவர் சொன்னார். அப்பேச்சை அப்போது புதிதாகக் கேட்பதுபோல யுதிஷ்டிரர் விழி அதிர்ந்து நோக்கை விலக்கிக்கொண்டார். “அதை அவர் நம்மிடம் சொன்னதனாலேயே இப்போது நாம் அதைச் செய்வதை அவர் ஏற்கிறார் என்றுதான் பொருள்” என்றார் இளைய யாதவர். குழப்பத்துடன் அவரையும் அர்ஜுனனையும் பார்த்தபடி “என்ன?” என்று பீமன் கேட்டான். “யானை உணவுண்பதை நிறுத்திக்கொள்வதைப் பற்றி சொன்னார்” என்ற இளைய யாதவர் பீமன் பேசுவதற்குள்ளாகவே “தன் மைந்தன் இறந்தால் பின்னர் அவர் வாழமாட்டார். அக்கணமே அம்பு தாழ்த்தி வில் வைத்து அமர்வார். அவர் வில் ஒருமுறை தாழ்ந்தால் போதும். அவர் நெஞ்சறுத்து உயிர் பறிக்க பார்த்தனால் இயலும்” என்றார்.

“ஆனால் அஸ்வத்தாமனை கொல்வது அவரைக் கொல்வதைவிட கடினம். தன் அனைத்து அம்புகளாலும் அவர் அவனுக்கு காவலிட்டிருக்கிறார்” என்று பீமன் சொன்னான். “மேலும் அர்ஜுனன் அவனை கொல்வதில்லை என்று தன் ஆசிரியருக்கு சொல்லளித்திருக்கிறான். அவன் அளித்த சொல் நம்மையும் ஆள்வதே.” சகதேவன் உரக்க “சொற்கள் அனைத்தும் காற்றில் பறக்கும் தருணம் இது. தொல்நூலின் சொற்களின்படியா அவர்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள்? இதோ எழும் அனல் போர்நெறியா என்ன?” என்றான். பீமன் அவனை நோக்கிய பின் “ஆம், நாம் அஸ்வத்தாமனை சூழ்ந்துகொள்வோம். இக்களத்திலேயே அவனை கொல்வோம்” என்றான்.

“அஸ்வத்தாமனை கொல்வதும் நம்மால் இயல்வதே” என்றார் இளைய யாதவர். “ஆனால் ஒரு நாழிகைக்குள் அல்ல. இன்று அந்திவரைக்கும் கூட ஆகலாம். முதலில் கௌரவர்களின் பெருவீரர்களிடமிருந்து அவரை தனியாக பிரித்துக்கொண்டு வரவேண்டும். நம் தரப்பினரின் அனைத்து வீரர்களும் அவரை சூழ்ந்துகொள்ள வேண்டும்.” பீமனை கூர்ந்து நோக்கி “ஆனால் மைந்தன் சூழ்ந்துகொள்ளப்பட்டதை அறிந்து தன் கையிலிருக்கும் எரியம்புகளுடன் துரோணர் வருவாரெனில் அது இயல்வதல்ல” என்றார் இளைய யாதவர். “ஆம்” என்று பீமன் தளர்ந்தான். அவர் முகத்திலிருந்து விழிவிலக்கியதுமே அவர் விழிகள் தன்னுள் எழ அவருள் ஓடும் எண்ணத்தின் நுனியை சென்று தொட்டு விழிதூக்கி அவர் முகத்தை சில கணங்கள் நோக்கிய பின் “தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், யாதவரே?” என்றான்.

“அஸ்வத்தாமன் இறந்தான் எனும் செய்தி அவர் செவிக்குச் சென்று விழுந்தால் போதும். அஸ்வத்தாமன் எனும் பெயரில் அவர் மைந்தன் மட்டும் இருக்க வேண்டியதில்லை” என்றார் இளைய யாதவர். “அஸ்வத்தாமன் எனும் பெயர் பிற எவருக்குமில்லை. அது அவர் தன் மைந்தனுக்கிட்ட விந்தைப் பெயர். அது இங்கு அனைவருக்கும் தெரியும்” என்றான் பீமன். “அதே விந்தையுணர்வுடன் முன்பொரு யானைக்கும் அப்பெயரிடப்பட்டது” என்றார் இளைய யாதவர். பீமன் ஒருகணம் கழித்தே புரிந்துகொண்டு ஓர் அடி எடுத்து இளைய யாதவரை அணுகி “ஆம், அந்த யானையை நான் அறிவேன். விழிநோக்கு குறைந்தது. இளஅகவையிலேயே புண்பட்டு மானுடர் மேல் ஐயமும் வெறுப்பும் அடைந்தது. ஆகவே எப்போதும் எரிச்சலுடன் நிலைகொள்ளாதிருக்கும். இப்போது மாளவப் படைகளில் உள்ளது அந்த யானை. இருமுறை இக்களத்திலேயே அதை எதிர்கொண்டிருக்கிறேன்” என்றான்.

“அதை கொல்ல உங்களால் இயலுமல்லவா?” என்று இளைய யாதவர் கேட்டார். கைதூக்கி “அரை நாழிகை போதும்” என்றான் பீமன். “அதன் விழிப்பிழையை நான் நன்கு அறிவேன். அதற்கு போக்குகாட்டி எழுந்து அணுகி தலை அறைந்து பிளப்பேன்.” இளைய யாதவர் “அவ்வண்ணம் நிகழ்க! களத்தில் பார்த்தன் துரோணருடன் நின்று போரிடுகையில் அஸ்வத்தாமன் இறந்தான் எனும் செய்தியை உங்கள் தூதர் வந்து அறிவிக்கட்டும். நமது படைமுரசுகள் முழங்கட்டும். அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான் எனும் கூச்சலும் வாழ்த்தொலிகளும் எழட்டும். வெற்றிக்கூச்சல் நமதாகவும் வாழ்த்தொலிகள் கௌரவர்களுடையதாகவும் தோன்றட்டும்” என்றார். ஐயத்துடன் “அது அத்தனை எளிதென்று எண்ணுகிறீரா, யாதவரே?” என்றான் பீமன். “நாம் களத்தில் செய்த போர்சூழ்ச்சிகள் பல. அதிலொன்றே இது என துரோணர் எண்ணுவார்.”

“ஆம், நீங்களோ உங்கள் இளையோரோ சொன்னால் அவ்வண்ணமே எண்ணுவார். சொல்லவேண்டியவர் உங்கள் மூத்தவர் யுதிஷ்டிரர். அவர் சொன்னால் ஆசிரியர் நம்புவார்.” யுதிஷ்டிரர் எதிர்பாராத சீற்றத்துடன் “நான் எந்நாவால் இதுவரை பொய்யுரைத்ததில்லை” என்றார். மூச்சுவாங்க கைகளை வீசி “இல்லை, இதற்கு நான் உடன்படமாட்டேன். இது என் அறுதி முடிவு… இதற்கு எவ்வகையிலும் நான் துணைநிற்கமாட்டேன்” என்றார். அத்தருணத்தில் அதை அறிந்தவராகத் தோன்றினார். “என் நாவில் அச்சொல் எழாது… ஆம், என்னால் இயலாது.” மூச்சிரைக்க “பொய்யுரைத்து வென்ற நாட்டை ஆளவேண்டுமா நான்? என் குருதியினருக்கு அதைவிடப் பெரிய இழுக்கென ஏதுள்ளது? அது என்னால் இயலாது” என்றபோது அவர் குரல் உடைந்தது. அழுவதுபோல் முகம் நெரிபட “என்னை அவ்விழிவுக்கு செலுத்தவேண்டாம், இளையோனே” என்றார்.

பீமன் “இக்களத்தில் இதுவரை முற்றிலும் அறம்நின்றுதான் நாம் போரிட்டோமா? அறவழுவுக்கு நீங்கள் ஒப்புதலே அளிக்கவில்லையா?” என்றான். “ஒவ்வொன்றுக்கும் ஒரு நெறியை நாம் கண்டடைந்திருக்கிறோம். அவ்வண்ணமே இப்போதும் காண்போம்.” சீற்றத்துடன் கைநீட்டி “மந்தா!” என கூவி யுதிஷ்டிரர் நடுங்கினார். இளைய யாதவர் “அரசே, இன்னும் ஒரு நாழிகைப் பொழுதுக்குள் ஆசிரியர் களம்படவில்லையெனில் நாம் எஞ்சப்போவதில்லை. உங்கள் இளையோர் எஞ்சமாட்டார்கள். மைந்தர்கள் வாழமாட்டார்கள். இக்களத்தில் பாண்டவர் என ஒருவரும் எஞ்சமாட்டார்கள். உங்களை நம்பி வந்த இக்குடிகள் அனைத்தும் முற்றழியும். நோக்குக!” என கை சுட்டிய இடத்தில் வானளாவ எழுந்த புகைத்தூண்கள் காட்டின் அடிமரங்கள் என நின்றிருந்தன. அச்சத்துடன் நிமிர்ந்து பார்த்து சொல்லமைந்து நின்றார் யுதிஷ்டிரர். “இன்னும் இவ்வண்ணம் நூறு அம்புகள் செலுத்தப்படுமெனில் இங்கு எவர் எஞ்சுவார்?” என்றார் இளைய யாதவர்.

“ஆனால் அதன் பொருட்டு பொய் சொல்வதென்றால்…” என்று சொன்ன யுதிஷ்டிரர் நெடுந்தொலைவு தன்னுள் ஓடிச் சென்று நின்று மூச்சிரைக்க முடிவெடுத்து விழிநீர் வழிய “இல்லை. நான் பொய் சொல்லப்போவதில்லை. எந்நிலையிலும் அதை சொல்லப்போவதில்லை” என்றார். பீமன் சலிப்புடன் “நீங்கள் எதை நிறுவிக்கொள்ள முயல்கிறீர், மூத்தவரே? எவருக்கு முன்?” என்றான். யுதிஷ்டிரர் கைகளை நெஞ்சில்கூப்பி உடல்குனித்து “நான் எதையும் நிறுவவில்லை. இந்தக் களத்தில் கீழ்மகனாக, சிறுமையாளனாக நின்றிருக்க எனக்கு இனி எத்தயக்கமும் இல்லை. நான் அஞ்சுவது இதை அல்ல” என்றார். “மைந்தா, நான் இந்தப் பொய்யை சொல்லப்போவதில்லை. இதை எங்கேனும் நிறுத்தியாகவேண்டும். சற்றுமுன் நகுலனிடம் பேசியபோது நான் இதை உணர்ந்தேன். வரும் வழியில் என் உள்ளம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. நீங்கள் பேசிக்கொண்டிருக்கையில் நெஞ்சில் கதையால் அறைபட்டதுபோல் ஓர் உண்மையை தெளிந்தேன்.”

“கீழ்மை எதுவும் தனித்து அணைவதல்ல. ஒரு கீழ்மை நம்மை சற்றே தாழ்த்துகிறது. அங்கே மேலும் கீழ்மை வந்தமைகிறது. ஒரு சிறு கீழ்மைக்கு இடமளித்தவன் அத்தனை கீழ்மைகளுக்கும் ஒப்புதல் அளிக்கிறான். அறுதியாக நாம் முற்றிலும் பிறிதொருவராக, நம்மால் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றைச் செய்தவராக மாறி நின்றிருப்போம்” என்றார் யுதிஷ்டிரர். “இதோ நின்றிருக்கிறான், என் இளையோன் நகுலன். இப்புவியில் புரவிக்கிணையாக எதையுமே கருதாதவன். தன் தெய்வத்தை புரவியில் கண்டுகொண்டவன். இனி அவனால் ஒரு புரவியை உளம்நிறைந்து தொட இயலுமா? அன்னையின் கையை மகவு என அதை இனி புரவிகள் ஏற்றுக்கொள்ளுமா? புரவியை இழந்தபின் இனி அவனுக்கு இந்தப் புவியில் அடைவதற்கு ஏதுள்ளது?”

நகுலன் இறுகிய முகத்துடன் நின்றான். மிக அப்பால் சாத்யகியின் கொம்போசை எழுந்து மன்றாடிக்கொண்டிருந்தது. இளைய யாதவர் “நான் இனி ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். பீமன் “நமக்கு வேறு வழியில்லை. அஸ்வத்தாமன் எனும் யானை இறக்கட்டும். அச்செய்தி பாண்டவர்களால் களத்தில் அறிவிக்கப்படட்டும். களத்தில் தன் முன் நிற்கும் துரோணரிடம் அதை உறுதி செய்யும் பொறுப்பை நாம் அரசருக்கே விடுவோம். அவர் இங்கு சொன்ன முடிவை அங்கு நின்றும் எடுக்கட்டும். தன் மைந்தரையும் குடியினரையும் படையினரையும் கைவிட்டு பொய் சொல்லா நெறியையே தலைக்கொள்ள அவர் முடிவெடுக்கிறார் எனில் அவ்வண்ணம் ஆகுக! இக்களத்தில் அவர் சொல்லின்பொருட்டு இறப்பது நமக்கு பெருமையே. அன்றி நம்மை காக்க வேண்டுமென்னும் பொறுப்பை அவர் எடுத்துக்கொண்டாரெனில் நாம் வெல்வோம், வாழ்வோம்” என்றான்.

“இது என்ன? என்னை பேரிடருக்கு முன் நிறுத்துகிறீர்கள்!” என்று யுதிஷ்டிரர் கூவினார். “ஆம் மூத்தவரே, நாங்கள் வாழ்வதும் இறப்பதும் உங்கள் சொல்லால் முடிவெடுக்கப்படட்டும். அதுவே உகந்தது” என்றான் பீமன். “ஆம், அதை செய்வோம்” என்றபின் இளைய யாதவரிடம் சகதேவன் “இனி சொற்கள் வேண்டியதில்லை, யாதவரே” என்றான்.  அர்ஜுனனிடம் “ஏறிக்கொள்க, தனஞ்ஜயா!” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் தன் தேரில் மீண்டும் ஏறிக்கொள்ள அவர் கையூன்றி தாவி அமரத்திலேறி அமர்ந்து கடிவாளத்தை எடுத்துக்கொண்டார். மெல்லிய சீழ்க்கை ஒலியால் புரவிகளை விதிர்த்து செவி பின்னடையச்செய்து பிறிதொரு சீழ்க்கை ஒலியால் அவற்றை முன்னோட்டிச் சென்றார். பீமன் யுதிஷ்டிரரிடம் “இதுவரைக்கும் முடிவுகளின் பொறுப்பு எதையும் தாங்கள் ஏற்றுக்கொண்டதில்லை, மூத்தவரே. இம்முறை அதை சூடுங்கள்” என்றபின் தன் தேரை நோக்கி சென்றான்.

முந்தைய கட்டுரைகாந்தியின் காதலி
அடுத்த கட்டுரைபட்டி – கடிதங்கள்