பங்கர் ராய் – கடிதங்கள்

pan

பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா

பங்கர் ராய்

அன்புள்ள ஜெயமோகன்,

பங்கர் ராய் குறித்து பாலா எழுதிய கட்டுரையை வாசித்தேன். ஐந்து ஆண்டுகளாக வாசித்து வரும் வெண்முரசு இந்திய நிலத்தில் தங்களை உணர்ந்து துளித்துளியாய்த் திரட்டிக் கொண்டு பேரலைகளாக எழுந்து மானுடத்துக்கு மகத்தான பங்களிப்பை ஆற்றிய பல்வேறு மக்கள் திரள்களைப் பற்றிய உயிரோட்டமான சித்திரத்தை அளித்து வருகிறது. ஒரு நல்லரசு மக்களைப் பயிற்றுவிக்கும். மக்களுக்கு வாழ்க்கைக்கல்வி கிடைக்க வேண்டும் என நினைக்கும் அரசே ஆள்வதற்கு குறைந்த பட்ச தகுதி கொண்டது. நம் நாட்டின் சாமானியர்களுக்கு பொருளாதாரப் பற்றாக்குறை உருவாக்கும் தாழ்வுக்குச் சமமானது அவர்கள் கல்வியின்மை அவர்களை உணரச் செய்யும் துயர். ஓர் எளிய உபகரணத்தை அவர்கள் உருவாக்குவதன் மூலம் அவர்கள் அடையும் இன்பம் அவர்களை அறிவின் நம்பிக்கையின் ஒளியில் நிறுத்துகிறது. ‘’வெறும் பாதக் கல்லூரி’’ முறை நாடெங்கும் வெவ்வேறு விதத்தில் வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு அமைப்புகளால்  முன்னெடுக்கப்பட வேண்டும். பெரும் மன எழுச்சியை உருவாக்கிய கட்டுரை.

எஸ். ராமகிருஷ்ணன் தனது தளத்தில் பங்கர் ராய் குறித்து ‘’வெறும்கால்வாசிகள்’’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதன் இணைப்பு: http://www.sramakrishnan.com/?p=2911

அன்புடன்,

பிரபு மயிலாடுதுறை

அன்புள்ள ஜெ

பங்கர் ராய் பற்றிய கட்டுரை மிகச்சிறப்பு. எதிர்மறைச் செய்திகளால் செய்தித்தாளை நாடவே மனமில்லாமல் இருந்தேன். நான் உண்மைகளை அஞ்சுபவன் அல்ல. ஆனால் இங்கிருப்பது உண்மைக்கான தேடல் அல்ல. எதிர்மறைச் செய்திகளைக் கண்டு மகிழும் மனநிலைதான். ஆகவே தீமைகளை வேண்டுமென்றே பெருக்கிக் கொள்கிறார்கள். இருட்டைக் கண்டு அஞ்சுவதுபோலவோ பாதிக்கப்பட்டவர்களைப்பற்றி பரிதாபம் கொள்வதுபோலவோ நடித்துக்கொண்டே அதைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். நுணுகி நுணுகி ஆராய்கிறார்கள். அதற்குத்தான் எல்லா மீடியாவும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. நம்பி வாழவும் ஏற்று ஒழுகவும் எதையும் சுட்டிக்காட்டுவதில்லை.

அந்தமாதிரிச் சூழலில்தான் பங்கர் ராய் போன்றவர்களைப்பற்றிய செய்திகள் மிகப்பெரிய ஒரு உறுதியை அளிக்கின்றன. இங்கே பெரிய விஷயங்களுக்கு இடமிருக்கிறது, நம்பிக்கை கொள்ள இடமிருக்கிறது, இலட்சியவாதம் இனிய ஒரு வாழ்க்கையை கண்டிப்பாக அளிக்கும் என்னும் நம்பிக்கை உருவாகிறது. அதற்காகவே உங்கள் தளம் முக்கியமானது.

நான் பார்த்தவரை இந்தமாதிரி எதிர்மறைச் செய்திகளை கொண்டாடி கூச்சலிடுபவர்கள் ஆக்கபூர்வமாக எதையும் செய்பவர்கள் அல்ல. முழுக்கமுழுக்க இந்த ஊடகங்களிலேயே கிடந்து உழல்பவர்கள். வாசிக்கக்கூடியவர்கள் அல்ல. எழுதுபவர்களும் அல்ல. அரசியல்தரப்புகளை மட்டுமே அறிந்தவர்கள். எதையுமே செயல்பாடாக மாற்றாதவர்கள். ஏனென்றால் கொஞ்சமேனும் நம்பிக்கையும் இலட்சியமும் இருந்தால்தான் செயலாற்ற முடியும். எதிர்மறை மனநிலை இருந்தால் வெறுமே கூச்சலிட மட்டுமே முடியும். பங்கர் ராய் கட்டுரை வழியாக மீண்டுவிட்டேன். நன்றி ஜெ

லக்ஷ்மணன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-84
அடுத்த கட்டுரைசதுரங்கக் குதிரைகள்