பட்டினமும் பட்டணமும்

patta

பட்டி

அன்புள்ள ஜெ,

பட்டினம் என்ற சொல்லுக்கும் பட்டிக்கும் இடையேயான உறவைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். பட்டினம் என்பது கடற்கரை ஊர்களை மட்டுமே குறிக்கும் சொல். பட்டணம் என்பதுதான் நகரத்தைக் குறிக்கும் சொல். பட்டினத்தி பட்டினத்தான் என்று பரதவர் குறிப்பிடப்படுகிறார்கள். இந்த வேறுபாடு முக்கியமானது.

எஸ்.ஆர். ராமச்சந்திரன்

patti44

அன்புள்ள ராமச்சந்திரன்,

அதற்குள் சொல்லாராய்ச்சியா? அக்கட்டுரை மெல்லிய பகடி கலந்தது என அதை வாசித்தாலே தெரியும். ஒரு சொல்லில் இருந்து வெவ்வேறு விஷயங்களை ஊகித்து எப்படி பண்பாட்டுச் சித்திரமாகக் கொள்ளலாம் என்று மட்டுமே அது பேசுகிறது. அது ஆராய்ச்சி அல்ல. எனக்குச் சொல்லாராய்ச்சிகளில் நம்பிக்கை இல்லை. அதை பலமுறை எழுதியிருக்கிறேன். கேலியாகவும், தீவிரமாகவும்.

சொல்லாராய்ச்சி வழியாக பண்பாடு சார்ந்த அறுதி முடிவுகளுக்கு வர முடியாது. அதற்கு ஒர் ஆய்வு முறைமை உண்டு.

அ. ஒவ்வொரு படிநிலையிலும் அதற்குத் திட்டவட்டமான நூல் சான்றுகள், வழக்குச் சான்றுகள் வேண்டும்.

ஆ. கல்வெட்டுச்சான்று போன்ற புறவயச் சான்றுகளுடன் அது ஒத்துப்போகவேண்டும்.

இ. அந்தப் பொருட்கோடல்முறைக்கு அறிவியல் சார்ந்த ஏற்பு வேண்டும். அது ஏற்கனவே செய்யப்பட்டிருப்பதற்குச் சான்றுகள் தேவை.

ஆகவே சொல்லாராய்ச்சிகளை ஆய்வாளர் மட்டுமே செய்யவேண்டும். பிறர் சும்மா பேசிப்பார்க்கலாம், அவ்வளவுதான்.

பட்டினம் என்னும் சொல் தொல்தமிழில் கடற்கரை ஊர்களை மட்டுமே சுட்டியது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பட்டினத்தி போன்ற பிறசொற்கள் அதிலிருந்து வந்தவை. பட்டி என்பதும் காரணமாக இருக்கலாம். ஊர் மன்று என்ற பொருளில் பட்டி முன்னரே இருந்தது. பட்டணம் என்னும் சொல் தொல்தமிழில் இல்லை. அது பட்டினம் என்ற சொல்லின் மரூஉ மட்டுமே. பட்டினம் என்னும் தமிழ்ச்சொல் பிராகிருதத்திற்கு பட்ணா என மருவிச்சென்று திரும்ப தமிழுக்கு பட்டணம் என வந்து சேர்ந்தது.

பொதுவாக இடைக்காலப் பேச்சுவழக்கிலும் அவ்வப்போது நூல்களிலும் பட்டினம் பட்டணம் இரண்டும் மாறிமாறிப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் சென்னையைக் குறிக்கும் சொல்லாகவே பட்டணம் உள்ளது [சென்னப்பட்னா சென்னப்பட்டினம் ஆகி பட்டணம் ஆக மாறியது]

பொதுவாக தமிழில் ஒரு சொல்லில் இருந்து முழுவரலாற்றையுமே உருவாக்கிக்கொள்ளும் வழக்கம் நமக்குண்டு. அது ஒருவகை அரட்டை என்பது வரை நல்லதுதான், ஆய்வாகக் கொள்வதென்றால் பிழை

ஜெ

முந்தைய கட்டுரைஉரையாடும் காந்தி – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன்