நாய் பாடும் பாடல் நலமாக வேண்டும்
அன்பின் ஜெ..
பட்டி படித்தேன். கடிதங்களும்.. சமவெளிக்கு வந்து கொண்டிருக்கிறீர்கள்..இதோ என் பங்குக்கு எங்களூர்ச் செய்தி..
செய்தித் தாள்களில், agony aunt என்னும் ஒரு பத்தி உண்டு. அதில் உங்களது அந்தரங்கப் பிரச்சினைக்கு, கடிதம் எழுதித் தீர்வு காண முயலலாம். அப்படி ஒரு கடிதம் – நைஜீரியத் தினசரி ஒன்றில் வந்தது.
கேள்வி:
அன்புள்ள சகோதரி டோலெப்போ,
நான் இபேயில் குடியிருக்கிறேன். திருமணமாகிப் பதினேழு வருடங்களாகின்றன. எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வரும்போதெல்லாம், அவர் என்னிடம் இருந்து காசை வாங்கி, ஐகரோடுவில் வசிக்கும் தன் மூன்று சகோதரர்களை வரவைத்து, என்னை அடித்துத் துவைக்கிறார். நான் என்ன செய்வது? நிறைய பணமும் செலவாகிறது
பதில்:
அன்புள்ள குன்லே,
உங்கள் நிலையை என்னால் முற்றிலும் உணர முடிகிறது. பேசாமல் ஐகரோடுவுக்கே குடிமாறிப் போய்விடுங்கள். காசாவது மிச்சமாகும்!
பாலா
அன்புள்ள ஜெ
நாய்பாடும் பாடல் நலமாகவேண்டும் படித்தேன். எங்கள் நாய் சோனி குக்கர் விசில் அடித்தால் சின்ன வயசிலேயே சேர்ந்து விசிலடிக்கும். கிட்டத்தட்ட குக்கர் விசில் மாதிரியே இருக்கும். பின்னர் அதற்கு போர் அடித்தால் சும்மாவே குக்கர் விசில் அடிக்கும். என் மனைவி குளியலறையிலிருந்து பாதி உடையுடன் ஓடி வந்து சமையலறைக்குள் போனால்தான் விஷயம் தெரியும். அதன்பின் இவளை இப்படி ஓடி வரச்செய்ய எளிய வழி விசிலடிப்பதுதான் என்று கற்றுக்கொண்டுவிட்டது.
ஏழு வருஷம் வாழ்ந்தது. எப்போது விசில் அடிக்கும் என்றே தெரியாது. [லாப்ரடார்] முகம் குழந்தை மாதிரி அப்பாவித்தனமாக இருக்கும். பிறகு என் மனைவி குக்கர் விசில் அடித்தாலும் போக மாட்டாள். குக்கர் வெடித்து மேலே போய் அறைந்து சமையலறை முழுக்க கறி சிதறியது. சோனி பயந்து விட்டது. அதன்பின்னர் விசில் அடித்தபின் நேராக ஓடி கட்டிலுக்கு அடியில் பதுங்கிக்கொள்ளும். ஒரு நாள் குக்கரை மிகமிக எச்சரிக்கையாக அணுகி மோந்து பார்ப்பதைக் கண்டேன். சகபோட்டியாளரை புரிந்துகொள்ள முயல்கிறது…
எஸ்.நாராயணன்
அன்புள்ள நாராயணன்,
நாய்கள் புரிந்துகொள்ளும் விதம் சிலசமயம் குழந்தைகளுக்குரிய அப்பாவித்தனமான கூர்மை கொண்டது. சிலசமயம் நாம் அறியாத நுட்பம் கொண்டது. என் நாய் டோரா நான் எந்த வண்டியில் வந்தாலும் சாலைமுனை திரும்பும்போதே உணர்ந்து குரைக்க ஆரம்பித்துவிடும். ஏஸி வண்டிக்குள் இருந்தாலும். ஆகவே அது மணத்தால் அல்ல. வேறு எப்படி என புரிந்துகொள்ளவே முடியாது.
டோரா பொதுவாக மனிதர்களை பொருட்படுத்துவதில்லை. ஆனால் பூனைகள் கடும் எதிரிகள். அவை வேண்டுமென்றே டோராவை சீண்டி விளையாடுகின்றன
ஜெ
அன்புள்ள ஜெ,
ஷோபா சக்தி உங்கள் பட்டி கட்டுரைக்கு எதிர்வினை ஆற்றியிருந்தார். படு சீரியஸாக. உண்மையில் அவர் எழுதி சமீபமாகச் சிரிப்பு வந்த கட்டுரை அதுதான்
அவருக்கெல்லாம் இப்படிப்பட்ட தன்னம்பிக்கை எப்படி வருகிறது? காலையில் பத்துநிமிடம் எதையாவது படிக்கலாமே என புதிதாக ஆரம்பித்துவிட்டாரா என்ன?
ராஜ்குமார்
அன்புள்ள ராஜ்
கொஞ்சம் வயதானால் எழுத்தாளர்கள் தன்னம்பிக்கை கொள்வதுண்டு. அதற்கு படிக்க ஆரம்பிக்கவேண்டும் என்றில்லை. ஷோபா இனி இந்த வயதில் மூச்சுப்பிடிப்பும் உயிராபத்தும் ஏற்படும் புதிய பழக்கங்களில் ஈடுபடவேண்டியதில்லை.
ஜெ