கட்டண உரை இன்றும் நேற்றும்

urai 2

கட்டண உரை – கடிதங்கள்

மேடை உரை பற்றி…

கட்டண உரை – எதிர்வினைகள்

கட்டண உரை, ஐயங்கள்

அன்பிற்கினிய ஜெயமோகனுக்கு வணக்கம்.

கட்டண உரை பற்றிய பதிவுகளைப் படித்து வருகிறேன். தி.மு.க மாநாடுகளில்தான் முதன்முதல் அக்காலத்தில்நுழைவுக்கட்டனம் வைத்திருந்தார்கள். தொண்டர்கள் தொகை செலுத்தி தம் தலைவர்களின் பேச்சைக் கேட்கும் ஆர்வத்துடன்வந்தார்கள். நாளடைவில் காலமாற்றத்தால் எல்லாமே மாறிப் போயின.

நான் கடலூர் கூத்தப்பாக்கத்தில் “இலக்கியச்சோலை” என்னும் அமைப்பை நண்பர்கள் உதவியுடன் 1994-ல் தொடங்கிநடத்தி வருகிறேன்.168 நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. சிவ. மாதவன், குறிஞ்சிவேலன், தங்கப்பா, ஆயிஷா நடராசன், தங்கப்பா,பாவண்ணன். நாஞ்சில்நாடன் போன்றோர் வருகை தந்து உரையாற்றி உள்ளனர்.ஒரு தட்டச்சகத்தின் மாடியில் முப்பது பேர்அமரும் வசதி உள்ள இடத்தில் மாதாமாதம் கூட்டங்கள் நடக்கும். தமிழின் எல்லாத் தளங்களையும் தொட்டுப் பேச்சாளர்கள்உரையாற்றுவார்கள். நிகழ்ச்சி கண்டிப்பாக ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நீளாது.

தொடங்கிய புதிதில் முதல் நான்காண்டுகள் ஒரு திறந்த வெளியில் ஆண்டு விழாக்களை இரவு ஏழு மணிமுதல் ஒன்பதுவரை பட்டி, மன்றம் கவியரங்கம் என நடத்தினோம். அவ்விழாக்களுக்கு பலரிடம் நிதி வசூலித்துத்தான் நடத்தினோம். இலக்கியஆர்வத்தால் தருபவர், எங்கள் தொடர்பால் தருபவர், வந்துவிட்டார்களே என்று தருபவர் என அவர்களில் பலரைச் சொல்லலாம்.ஆனால் நன்கொடை தந்தவர்களில் பலர் விழாவிற்கு வருவதில்லை. ஆனால் விழாக்களுக்குக் கூட்டம் நிரம்பவே வந்தது.இருந்தாலும் பொதுவெளியில் நடத்துவதால் ஜனரஞ்சகமான தலைப்புகளில் நடத்த வேண்டி வந்ததாலும் நிகழ்விற்கேவராதவர்களிடம் பணம் வாங்கிறோமே என்ற எண்ணத்தாலும் விழாக்களைத் தவிர்த்து விட்டோம்.

முன்னர் விழாக்களில் மிச்சமாகும் பணத்தை வைத்து மாதாமாதம் நிகழ்ச்சிகளை நடத்தினோம். விழாக்கள் நின்றபிறகுமாதக் கூட்டங்களுக்கு வருபவர்களிடம் அந்தந்த மாதக் கூட்டத்திற்கு வரும்போது நன்கொடைகள் வேண்டினோம். நிகழ்ச்சிக்குவருபவர் கையொப்பமிடும் பதிவேட்டிலேயே தான் அளிக்க விரும்பும் தொகையை எழுதி அதிலேயே பணத்தையும் வைத்துவிடுவார். இருபதுரூபாய்க்குக் குறைந்து யாரும் வைக்கமாட்டார்கள். நிகழ்ச்சி நடக்கும் சிரமத்தை அறிந்தவர்கள் நூறு ரூபாயும்வைப்பதுண்டு.

இப்படியே போய்க்கொண்டிருந்த போது ஒருவர் கூத்தப்பாக்கம் இலக்கியச்சோலைக்குப் போனால் ரூபாய் தரவேண்டிஇருக்கும் என்று சொன்னதாகக் கேள்விப்பட்டோம். இத்தனைக்கும் அவர் அதிக அளவிற்குக் கூட்டங்களுக்கு வராதவர்.இருந்தாலும் மாத நன்கொடை கேட்பதை கடந்த ஆறு ஆண்டுகளாக நிறுத்தி விட்டோம். உறுப்பினராகச் சேர்பவர்களுக்குமட்டும் ஓராண்டுக்கு நூறு ரூபாய் என வசூலித்து வருகிறோம்.

கட்டண உரை என வரும்போது நிகழ்ச்சி அமைப்பாளர்க்குப் பெரும்பொறுப்பு உள்ளது. வாங்கும் காசிற்குத் தகுதியானஉணவு மற்றும் சிற்றுண்டி அளிக்க வேண்டிய பொறுப்பு உள்ள விடுதி நிலை உரிமையாளர் நிலையில் அவர் அமைகிறார்.வருவோர்க்குச் சுவையுடன் கருத்தைப் பரிமாற உரையாளரும் தக்கதயாரிப்புடன் வரவேண்டிய பொறுப்பிற்கு ஆளாகிறார்.அந்நிகழ்ச்சிகளில் சரியான நேரத்திற்குத் தொடக்கமும் முடிவும் அமைந்தால்தான் நல்லது. தங்கள் கட்டண உரை நிகழ்ச்சிகள்இரண்டிலுமே இவை நன்கு அமைந்துள்ளன எனப் பதிவுகளிலிருந்து நான் தெரிந்து கொண்டேன். இந்த நிகழ்ச்சிக்கே வரவிரும்பாதவர், இது போன்ற நிகழ்ச்சிகள் முறையாக நடப்பது கண்டு பொறாமைப்படுபவர் போன்ற ஒரு சிலர் ஏதேனும் குறைசொல்லவேண்டுமே எனச் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். இதுபோன்ற கட்டண உரை நடத்த இன்று யாரேனும் வேறு ஓர்எழுத்தாளருக்குத் துணிவு இருக்கிறதா என்று பார்த்தால் யாருமே இல்லை. இது தங்கள் தனித்துவத்திற்குக் கிடைத்தவெற்றியாகும்.

வளவ துரையன்

அன்புள்ள ஜெ

கட்டண உரைகளின் வெற்றி என்பதே அதைப்பற்றி பரவலாகப் பேசவைத்ததில் உள்ளது என நினைக்கிறேன். நம்முடைய மேடைப்பேச்சுக்கலை பற்றி ஒரு திறந்த சிந்தனைக்கான அழைப்பு இது

நான் மேடைப்பேச்சுக்கலையில் ஆர்வம் உள்ளவன். மேடைப்பேச்சுக்கள் எந்தத் தயாரிப்பும் இல்லாமல் வெறும் நகைச்சுவைகளாக உள்ளன என்பது ஓர் உண்மை. மிக எளிமையான நிகழ்ச்சிகளும் பரவலாகத் தெரிந்த கருத்துக்களும்தான் சொல்லப்படுகின்றன. ஆழமான விவாதங்களோ கருத்துக்களோ இல்லை.

ஆனால் அதையெல்லாம்விட மோசம் பார்வையாளர்கள். பாதிப்பேச்சு நடக்கும்போதும் வந்துகொண்டே இருப்பார்கள். பேச்சு தொடங்கும்போது 30 சதவீதம்பேர் கூட வந்திருக்க மாட்டார்கள். எத்தனை பெரிய பேச்சாளர்களானாலும் இதுதான் நிலைமை. ஆகவேதான் எல்லா சொற்பொழிவுகளும் தாமதமாகத் தொடங்குகின்றன. மிகத்தாமதமாக முடிகின்றன

பேச்சுக்கு நடுவே அரங்கில் இருப்பவர்கள் அரட்டை அடிப்பது, செல்போனில் பேசுவதும் சாதாரணம். முன்னணியில் விஐபிக்கள் வந்து அமர்வார்கள். எழுந்து செல்வார்கள். அவர்களுக்கு மரியாதை செய்ய சிலர் சென்றுகொண்டே இருப்பார்கள். நிம்மதியாக ஒரு சொற்பொழிவைக் கேட்ட அனுபவமே எனக்கு இல்லை. எவ்வளவு முயற்சி செய்தாலும் பொறுமை போய்விடும்

ஒரு மேடைப்பேச்சை பொறுமையாகக் கேட்கும் வழக்கமே இங்கே இல்லை. இன்னொருவருக்கு தொந்தரவாக ஆகக்கூடாது என்ற நினைப்பும் சுத்தமாக கிடையாது. இவர்களுக்கு ஏன் மதிப்பு இல்லை என்றால் பேச்சு சும்மா கிடைக்கிறது. தண்ணீர் போல. ஆகவே வீணடிக்கிறார்கள். தண்ணீருக்கு விலை வைத்தால்தான் தண்ணீர் சேமிக்கப்படும். பேச்சுக்கு விலை வைத்தால்தான் அதன் மதிப்பை உணர்ந்தவர்கள் வருவார்கள்

எம்.சத்யமூர்த்தி

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-83
அடுத்த கட்டுரைபட்டி நாயும் பாட்டுநாயும்