உரையாடும் காந்தி – கடிதங்கள்

உரையாடும் காந்தி

உரையாடும் காந்தி வாங்க

அன்புள்ள ஜெ,

ஏற்கெனவே நான் “உரையாடும் காந்தி” தொகுப்பு பற்றி வேலூரில் நடக்கவிருந்த வாசகசாலை நிகழ்வு பற்றி உங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதிருந்தேன்.

இந்த கடிதம் அந்த நிகழ்வு நடந்த விதம் மற்றும் நிகழ்வின் வெற்றி பற்றியது

நிகழ்வு மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. முக்கியமாக வாசகசாலை பார்வையில் பேசிய மூன்று தோழர்களில் இரண்டு தோழர்கள் உரையாடும் காந்தி தொகுப்பை முன்வைத்து தங்களது வாசிப்பு அனுபவங்கள்.

தாங்கள் இந்த தொகுப்பிலிருந்து கற்றுக் கொண்ட விடயங்களை சிறப்பாக முன்வைத்து பேசினார்கள்.

முக்கியமாக காந்தி பற்றி தங்களது அறிதல் எந்தளவுக்கு இந்த கட்டுரை தொகுப்பின் வழியே உயர்ந்துள்ளது என்பதை சரியாக பேசினார்கள்.

(இந்த இரண்டு தோழர்களும்  ஆராய்ச்சி மாணவர் மற்றும் இளங்கலை மாணவர் என்பது சிறப்பு)

மற்ற தோழர்(தன்னை பெரியாரிஸ்ட் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு இந்த தொகுப்பை அதுவும் காந்தியையும் உங்கள் கருத்துகளை நிராகரித்து எதிர் வினை செய்தார்.)

கடைசியாக சிறப்புரை செய்த போரசிரியர் சுஜாதா அவர்கள் சிறப்பான முன்னுரை வழங்கினார். முக்கியமாக உங்கள் தொகுப்புக்கு எதிர்வினை செய்த தோழருக்கு முடிந்தவரைக்கும் காந்தி கருத்துக்களின் வழியே பதில்களை அளித்தார்.

தொகுப்பிலிருந்து முக்கியமான கருத்துக்களை பார்வையாளர்களுக்கு சரியான முறையில் விளங்கினார்.

மொத்தத்தில் கிட்டத்தட்ட 25 நபர்கள் அதில் பாதி பேர் மாணவர்கள் கலந்துக் கொண்டு நிகழ்வை மிகச்சிறப்பான நிகழ்வாக மாற்றினார்கள்.

மொத்தத்தில் உரையாடும் காந்தி தொகுப்பை முன்வைத்து இந்த உரையாடலை வேலூரில் நடத்தியதற்கு வேலூர் வாசகசாலை பெருமையும் அன்பும் கொள்கிறது.

மேலும் இந்த நிகழ்வை பற்றி உங்கள் இணையதளத்தில்  பதிவு செய்ததற்கு நன்றிகள்.

என்றும் அன்புடன்,

க.விக்னேஷ்வரன்,

வாசகசாலை வேலூர் ஒருங்கிணைப்பாளர்.

***gan

அன்புள்ள ஜெ

உரையாடும் காந்தி நூலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். நான் பல சமயங்களிலாக எழுப்பிக்கொண்ட கேள்விகள் இதில் பதிலுடன் உள்ளன. சுருக்கமான ஆழமான பதில்கள். காந்தியை அப்பாவித்தனமாக நேரடியாக புரிந்துகொள்ள முயல்வதனால் விளையும் கேள்விகள் என புரிந்துகொண்டேன். காந்தியை ஒரு பெரிய குறியீடாகப் புரிந்துகொண்டால் அவரை நோக்கிச் செல்ல முடியும். காந்தியை அணுகுவது மன எளிமை இருந்தால் மிக எளிது. காந்தியை பற்றிய எதிர்ப்புகள் பெரும்பாலானவை அரசியல்கொள்கைகளால் ஆனவை அல்ல. அவரை புனிதர் என நினைத்துக்கொண்டு, புனிதமானவை என நினைப்பவற்றின்மேல் கசப்புகளை வளர்த்துக்கொள்ளும் மனிதர்களால் முன்வைக்கப்படுபவை. அருமையான நூல்

நன்றி

ஜெகதீஷ்குமார்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-80
அடுத்த கட்டுரைபட்டினமும் பட்டணமும்