சமண வழி – கடலூர் சீனு

samana1

சென்ற வெள்ளி மாலை, நண்பர் இதயத்துல்லா அழைத்திருந்தார் உங்கள் தளத்தில் மேல் சித்தாமூர் சார்ந்த பதிவுகளையும்,வாசகர்களின் பயணக் கடிதங்களையும் வாசித்திருக்கிறார்.”சார் இங்கதான் சார் இருக்கு போலாமா” என்று வினவினார். சனிக்கிழமை காலை ஏழரை மணி அளவில் பண்ருட்டியில் இருந்து, இருசக்கர வாகனத்தில் புறப்பட்டோம்.

மார்ச் மாத வெக்கை துவங்கி,காற்று உறைந்து நின்று விட்ட புழுக்கம் நிலவும் தட்பவெப்பம். கிளம்பினோம். வழக்கமான பாதைகளை தவிர்த்து குறுக்குப் பாதைகள் எதேனும் உண்டா என்று கூகிள் வரைபடத்தை துழாவ, அது பண்ருட்டி, செஞ்சி,திண்டிவனம் இந்த மூன்று ஊர்களையும் முக்கோணம் ஒன்றின் மூன்று முனைகளில் வைத்து, செஞ்சிக்கும் திண்டிவனத்துக்கும் நடுவே இருக்கும் மேல் சித்தாமூருக்கு, பண்ருட்டியில் இருந்து நேர்கோட்டில் இயங்கும், உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே, இடதுபுறம் பேரணி எனும் கிராமத்தில் துவங்கும்,கிராமத்து சாலை ஒன்றைக் காட்டியது.

டோல்கேட் கடந்து, பேரணி கிராமம் நோக்கி திரும்புகையில் எதேச்சயாக, சமணர் சங்கம் வைத்திருந்த வழிகாட்டிப் பலகையை கண்டேன். அருகே பதினைந்து கிலோ மீட்டரில் மேல் கூடலூர் எனும் கிராமத்துக்கு அருகே எண்ணாயிரம் சமணர் மலை எனும் குன்றில்,சமண முனிவர்கள் ஆசிரியர்கள் வாழ்ந்த குகையும்,அவர்களுக்கான படுக்கைகளும் இருப்பதாக அந்தப் பலகை தெரிவிக்க,முதலில் அதைப் பார்த்து விடுவோம் என முடிவு செய்தது, மேல் கூடலூரை தேடி பயணத்தை துவங்கினோம்.

வானம் பார்த்த மஞ்சள் வண்ண பூமி. ஆங்காங்கே விவசாயம் கைவிடப்பட்ட  நிலங்கள், சிலபோது அடுத்த நடவுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலங்கள், இடையிடையே கடலை விவசாயம், அவற்றுக்கு இடையே,அகழ்ந்து பறிக்க இயலா நிலையில் நிலைபெற்று விட்ட பெரும்பாறைகள் பார்வையில்  தென்பட்டன. இரு இடங்களில்,கிராமத்தின் தலை வாயிலில்,  பிரும்மாண்ட செங்கல் சூளைகள்  தகித்துக் கொண்டிருந்தன.

samana2

ஒரு கிராமச் சாலை சந்திப்பில் இருந்த சிறிய கடையில்,ஓரத்தில் நிரந்தரமாக குவித்து வைக்கப்படிருந்த பூரிகளில் மூன்றை,உடைத்து நொறுக்கி நீர் கொண்டு விழுங்கி,காலை உணவை முடித்து விட்டு,அங்கிருந்தே வழி கேட்டு, [ வழி சொன்ன விவசாயி போன தீபாவளிக்கு அப்புறம் கைல சேந்தாபோல ஒரு ஆயிரம் ரூபாய பாக்கவே முடியல என வேறொருவரிடம் புலம்பிக் கொண்டிருந்தார்] வழியை தொலைக்கும் வேலையை துவங்கினோம். இறுதியாக,மேல் கூடலூர் தாண்டி, முப்புறமும் குன்றுகள் சூழ்ந்த இடம் ஒன்று கண்டோம் நிச்சயமாக,இந்த குன்றில் ஏதோஒன்றுதான் எண்ணாயிரம் மலை. கண்ணில் பட்ட பாட்டி, கரிய திருமேனி கொண்டு, மஞ்சள் வண்ண நாமம் தரித்திருத்தாள். மங்களகரமாக இருக்கிறார் அவரிடம் கேட்போம் என்று உற்சாகமாக சென்று, இதயத்துல்லா வழி கேட்டார்,

”அம்மணக்குண்டி சாமி மலைதானே…அதோ அந்தா இருக்குல்ல…” என்று ஸ்டைலாக ஊன்றுகோலால் சுட்டிக் காட்டினார் பாட்டி. காய்ந்த விரி வெளித்  திடலில் ஒரே ஒரு பச்சை சதுரத்தில் மல்லாட்டை எனப்படும் நிலக்கடலை விவசாயம் நடந்துகொண்டிருக்க, ஒற்றை மேகத்தால் மறைந்த சூரியனின் ஊமை வெயிலின் ஒளிப்  பின்னணியில் எண்ணாயிரம் மலை.

இந்த திருவண்ணாமலை மலைத் தொடர் வரலாற்றுக்கு முன்பு  ஒரு காலத்தில் எரிமலையாக இருந்து இப்போது உறைந்து படிமமாகி விட்ட பாறைகளால் ஆன ஒன்று என்பது மண்ணியலாளர்கள் கூற்று. பாறைகளின் இந்த தன்மை காரணமாக இங்கே தொல்லுயிர் எச்சகள் ஏதும் கிடைக்காது,அந்த அளவு பழமை கொண்டது இந்த பூமி. இந்த நிலத்தின் மலை காண்பதற்கு கோலி குண்டுகளை குவித்து வைத்ததைப் போல பாறைகளின் குவியலாக,ஒவ்வொரு பாறையையும் விலக்கினால் மொத்த மலையும் காணாமல் போய்விடும் எனும்  வேடிக்கையான தோற்றத்தில் இருக்கும்.

நமது வன  மூதாதையர் திரிந்த நிலம். கீழ்வாலை செத்தவரை, குகை ஓவியங்கள் வழியே, தமிழ் நிலத்தில்,  முன்தோன்றி மூத்த குடியின்  முதல் சேதி நமக்கு விட்டுச் செல்லப்பட்ட நிலம். முதல் பார்வையில் குன்றினைக் கண்ட அந்த கணமே,அருகர்களின் பாதை நாட்கள் மொத்தமும் நினைவில் எழ, பரவசம் கொண்டு விட்டேன். எனது பரவச கூச்சலை இதயத்துல்லா விநோதமாக பார்த்தார். கோலிகுண்டு பாறைகள் குவிந்து உருவான குன்று. ஒவ்வொரு கோலிகுண்டும் ஒன்று முதல் மூன்று யானை பருமன். குன்றின் வலது மேல் மூலையில் சதுரமான பெரும் பாறை ஒன்று இதோ இக்கணம் சரியப் போகிறேன்,எனும்படி நின்றிருக்க, குன்றின் மையத்தில் ஒரு நூற்றி ஐம்பது படிகள் உயர்ந்து தொட்ட வாயில், சமணர்களின் இருப்பிடத்தின் துவக்கத்தில் சென்று முடிந்தது.

குகை அல்ல. பாறைகள் இயற்கையாக அமைந்து உருவான,இருபதுக்கு இருபது சதுர  அரங்கம். மூன்று புறமும் பெரும்பாறை. அவற்றை கூரை என இணைக்கும், அவற்றுக்கு மேலே அமைந்த ஒற்றைப் பெரும்பாறை. பதினைந்துக்கும் மேற்பட்ட படுக்கைகள். புடைப்பு சிற்பமாக மூன்றடி உயர பார்ஸ்வநாதர் அருகேநின்று  சாமரம் வீசும் தேவி. அது தாமரை மொக்கு எனில் பத்மாவதி.  அங்கிருக்கும் கல்வெட்டின் படி, ஒன்பதாம் நூற்றாண்டில் பராந்தக சோழன்,சமணர்களுக்காக அதை சீரமைத்து தந்தான் என  இனைய தளம் சொல்கிறது.  தியோடார் பாஸ்கரன் அவர்களின் கூற்றுப் படி, இத்தகு நிலையங்கள், கிடைக்கும் வரலாற்றுத் தடயத்துக்கு முற்பட்ட காலமாகவே இருக்கும். உதாரணமாக இத்தகு குகைகள்,சமணர் பள்ளிகளாக மாறுவதற்கு முன்பு, ஆசீவக மரபின் தியானிகள் இந்த குகைகளை பயன்படுத்தி இருக்கலாம்,இப்படிப் பல.

பிரும்மாண்ட பாறைகளின்,காற்று பீறிடும்  இடைவெளிகள் வழியே, அந்த குன்றை குறுக்கே ஊடுருவி,பாறைகள் செறிந்த, குன்றின் மறு சரிவு வரை சென்று பார்த்தோம். பாறைகளின் புதிர்வழிகளில் வீசிய காற்று,எங்கிருந்து வந்திருக்கும் எனும் ஐயத்தை கிளப்பும், ஒரு சிறு பறவை ஒலி கூட இல்லாத, சிறு பாறைப் புல்லும் அசையாத,அருகனின் தியான அமைதி நிலவிய சரிவில் சற்று நேரம்,பொழியும் ஊமை வெயிலின் கீழ் நின்றிருந்து விட்டு,மீண்டும் பள்ளிக்குள் வந்தோம்.

யார் யாருடன் காதலில் கலவியில் கிடக்கிரார்கள் எனும் வரலாற்றுக் குறிப்புகள், பெய்ன்ட் கொண்டு எழுதப்பட்ட, சமண முனிவர்களின் படுக்கை ஒன்றினில் படுத்தோம். ”சார் தலை,கழுத்து,முதுகு எல்லாம் பெர்பெக்டா பதியுற மாதிரி வெட்டிருக்காங்க சார், உடம்பு எங்கயுமே அழுத்தல,எப்புடி சார் இது ” என்று அதிசயபட்டார் இதயத்துல்லா. குளிர்ந்த கல்லிருக்கையில் புரண்டபடி, இந்த நிலம் சார்ந்த கதைகளை பேசிக்கொண்டிருந்தோம்.

samana3

உயிர் பலிகள் கோரும் சாக்தமும், சைவத்தின் இருள் முக மரபும் செழித்திருந்த நிலம் இந்த பாரத நிலம். திருவண்ணாமலை தொட்டு, காளஹஸ்தி தொடர்ந்து, காசி கேதார்நாத் வரை இருள்முக சைவம் இயங்கிய நதிவழியை, அதன் தடங்களை இன்றும் காணலாம். பதிமூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த மதுரா விஜயம் நூலில்,  மண்டை ஓடு செருகிய சூலங்களை கொண்டு எழுப்பிய வேலிக்குள்,ஊருக்கு வெளியே வாழ்ந்த உக்ர சைவர்கள் குறித்த குறிப்புகளை காண்கிறோம். இத்தகு சூழலில்தான் பெருங்கருணை மழை என பௌத்தமும் சமணமும் வந்து இந்த நிலத்தில் வீழ்கிறது. சற்றே திரும்பிப் பாருங்கள். எல்லையில் போர்ப் பதற்றம், உள்ளே ரத்தம் ரத்தம் என்று கோரி சாமியாடும் நூறு நூறு ஆசாமிகள். நெடிய பண்பாட்டின் பின்புலத்தில் இன்றும் தணியாத அந்த ரத்தப் பசிக்கு பல கோடி நியாயமான காரணங்களை கற்பித்துக் கொள்கிறது நமது தர்க்க மனது. இவற்றுக்கு வெளியே,அக ஆழத்தில் இருப்பது தூய்மையான ரத்த வெறி அன்றி வேறில்லை என்பதுதானே நிதர்சனம். இந்தப் புள்ளியில் நின்று, பாரதப் பண்பாட்டை திரும்பி நின்று நோக்கினால் மட்டுமே,அந்தக் கருணையின் பேரறம் என்ன என்பது சற்றேனும் விளங்கும். இன்றே இந்த நிலை எனில் ஆயிரம் வருடங்களுக்கு முன் இத்தகு விஷயங்களின் தீவிரம் என்னவாக இருந்திருக்கும்?

ஐந்தாம் நூற்றாண்டில் காஞ்சியை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட சமணப் பண்பாடு, அமைதியும் கல்வியும்  பரப்பும் பொருட்டு, இந்த ஆற்காடு மலைச் சரிவு பகுதியை அடைகிறது. குருதி பலி கேட்கும் மார்கங்கள் வாழும்,ஊருக்கு வெளியே ‘தீர்த்தங்காரர்கள்’ வந்து அமைகிறார்கள். மருத்துவமும் கல்வியும் பரவுகிறது. இதோ நாமிருக்கும் இடத்துக்கு மிக அருகே விழுக்கம் எனும் கிராமத்தில் குணசாகரர் எனும் சமண ஆசிரியர் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கிறார், வந்தவாசி அருகே பொன்னூரில் குந்தங் குந்தாச் சாரியார் வாழ்ந்திருக்கிறார், சீயமங்கலத்தில் ஐந்தாம் நூற்றாண்டில் ஆசிரியர் வஜ்ர நந்தி வாழ்ந்திருக்கிறார். நூறு நூறு ஆசிரியர்கள் பொலிந்து செழித்த மண் இது.

உணர்ச்சி மேலிட தரையை அறைந்து சொன்னேன். இது நமது ஆசிரியர்கள் உருவாக்கி நமக்களித்த பாரதம். சொற்கள் அறுந்து மௌனத்தில் சற்று நேரம் கிடந்தோம். வினோதமான ஒலி [என்ன பறவையோ] மீட்க, மேல் சித்தாமூர் கிளம்புவோம் என முடிவெடுத்து குன்றின் கீழ் வந்து சேர்ந்தோம். இங்கிருந்தே மேல் சித்தாமூர் செல்ல ஏதேனும் வழி இருக்குமா. கடலைக் காட்டில், கடலைக்கான சிருஷைகளில் ஈடுபட்டிருந்த இளைஞரை அணுகி விசாரித்தோம். அவர் வினோதமான பாதை ஒன்றைக் காட்டினார். அந்தப் பாதை நிலத்துக்கு நீர்ப்பாசனம் கொண்டு வரும் வாய்கால். அதற்குள் இரண்டு கிலோமீட்டர் பயணித்தால், நேரே சித்தாமூர் கொண்டு சேர்க்கும் சாலையில் தான் அது முடியும் என்றார். விடை பெறுகையில், வயலுக்கு வந்துட்டு வெறுங்கையோட போறீங்களே கொஞ்சம் கடலை பரிசிக்கிட்டு போங்க என்றார். இதையா பரவசம் கொண்டு,இரண்டு கொத்து கடலை பறித்துக்கொண்டு நன்றி சொன்னார்.புறப்பட்டோம்.

samana5

ஏன் அந்த நண்பர் வாய்க்காலை காட்டினார் என்று அப்போதுதான் புரிந்தது. அந்த வாய்காலில் பராந்தக சோழன் காலத்துக்குப் பிறகு தண்ணீர் ஓடி இருக்க வாய்ப்பே இல்லை. அதில் சவாரி செய்தோம். பாசி மணி போல மணல் செறிந்த வாய்கால். அருகன் அருளால் இரண்டு முறை விழுந்து,உருண்டு எழுந்தோம். மைய சாலைக்கு வந்து சேர்ந்து,வழமை போல சாலையை தொலைத்து, திண்ணைக் கடை ஒன்றில், விறகு வாசனையுடன் தேநீர் அருந்தி ஆசுவாசம் கொண்டு, மீண்டும் வழி தேர்ந்து,  நன் மதியத்தில் மேல் சித்தாமூர் வந்து சேர்ந்தோம்.

மடத்தின் வாசலிலேயே மடாதிபதி, ஸ்ரீ லட்சுமி சேன பட்டாரக அமர்ந்திருந்தார்.  சென்று எங்களை அறிமுகம் செய்து கொண்டோம். சமையல் அறைக்கு செல்லும் பாதைக்கு வெளியே கட்டிப் போடப்பட்டிருந்த சிம்மப்பட்டி அய்யய்யோ அவனை நம்பாதிங்கோ ஐயோகியப் பயல் என்று கூப்பாடு போட்டு  எச்சரித்ததை சுவாமி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஜெயமோகனை,அருகர்களின் பாதை நூலை அறிந்திருந்தார். அந்த புஸ்தகம் இப்போ கைல வெச்சிருக்கீங்களா என்று வினவினார். முதல்ல போய் சாப்புடுங்க என்று உபசரித்தார்.

சமணம் உணவில்  எவற்றை விலக்குகிறதோ,அவை நீக்கப்பட்ட ருசியான சாம்பார் சாதம். உண்டு முடித்து தட்டுக்களை கழுவி அதற்க்கான இடத்தில் வைத்து விட்டு வந்து, சுவாமி காலடியில் அமர்ந்து சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ”பொதுவா அடி வாங்குன ஆளுகதானே,நாங்கள் எவ்வாறு ஒடுக்கப்படோம் அறிவீர்களா இது நியாயமா அப்டின்னு கேட்டு வரலாறு எழுதுவாங்க.இங்க நேர் தலைகீழா இருக்கு. நான் வாசித்து, பேசி அறிந்து கொண்ட வரையில், சைவர்களால் சமணர்கள் ஒடுக்கப்பட்ட குறிப்புகள் ஏதும் தமிழ் சமணத்தில் இல்லை. அப்புறம் ஏன் இப்போதும் இந்த சமண வெறுப்பு என்று தெரியவில்லை. அன்பே சிவம் அப்டிங்கறாங்க.அது எந்த சிவமோ” சொல்லி விட்டு புன்னகைத்தார். இப்படி பல விஷயங்களை,சுவராஸ்யமாக,[தொண்டை சரி இல்லாததால்] துண்டு துண்டாக பேசிக்கொண்டிருந்தார்.

வேறொரு பணி இடையில் வர, நாங்கள் கோவிலுக்குள் சென்றோம். ஒருவருமே அற்ற கோவிலில், வாயிலில் உயர்ந்து நின்றது மானசஸ்தம்பம். ஒரே கல். ஐம்பதடி உயரம்.[எனில் தரைக்குள் பதினைந்து அடி புதைக்கப்படிருக்கும்]  பார்ஸ்வநாதர், நேமிநாதர், ஜுவாலா மாலினி, தர்மதேவதை, குஷ்மாந்தினி தேவி, என ஒவ்வொரு சன்னதியாக பார்த்தோம். ஜீனவாணி முன் நீண்ட நேரம் நின்றிருந்தேன். ஒவ்வொரு தூணாக அதன் ஜைன புராண புடைப்பு சிற்பங்களை ரசித்தோம். அனைத்தயும் கைவிட்டு சும்மா ஒரு கால் மணிநேரம் கோவிலை சுற்றி வந்தோம். எதிர் வரும் விழா ஒன்றுக்காக கோவில் தயாராகிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே பணிகள் நடந்து கொண்டிருக்கும் தடயம். கோவில் வாசலில் விழாவுக்காக தேர், மறு சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு மரச் சிற்பமாக தனித் தனியாக பார்த்தோம்.

ஒஒய் தேரை விட்டு தூரம் போ,உன்னை பிடிக்கல, கழட்டி விட்டா வந்து முதல்ல உன்னைத்தான் கடிப்பேன் என்றது சிம்மப்பட்டி. இருடா வரேன் என்று கருவி அவனை அணுகினேன். கிர்ர்ரர்ர்ர் எனும் ஒலியின் வெவ்வேறு கார்வைகள் வழியே, வேணாம் கிட்ட வராத என்றான். நான் முன்னாள் சென்று என் உள்ளங் கைகளை நீட்டினேன். வாசனை பிடித்தான். பாதங்களை முகர்ந்தான்.  நாம நினைச்ச அளவு இவன் டேஞ்சர் இல்ல போலேயே என சந்தேகம் தட்ட, விடைத்த காதுகளுடன் சற்றே தலை சாய்த்து புட்டி வழியே எனது கண்களை நோக்கினான்.இப்போது சற்றே மட்டுப்பட்ட கிரர்ர்ர்ர் வழியே தொடாத நான் கடிப்பேன் என்றான். தொடமாட்டேன் ஆனால்…. சட்டென அவனை கட்டிப் பிடித்தேன்.

ஒரு கணம் விதிர்த்துத் துள்ளியவன்,மறுகணம் மேலே விழுந்து புரண்டான். விழுந்து புரள சங்கிலி தடுக்கும் தோறும், துள்ளிப் புரண்டு சங்கிலி தளைத்திருந்த தூணைப் பார்த்துக் குலைத்தான். காலைத் தூக்கி தோளில் போட்டு,நிறுத்தாம கொஞ்சு என்றான். அவனை உதறி சும்மா விலகுவது போல் பாவனை காட்டினேன், போகாத கடிப்பேன் என குலைத்தான். தாவி கட்டிக் கொண்டேன். அவனிடமும் சுவாமி வசமும் விடைபெற்றுக் கொண்டு, புத்தகங்களை மீண்டும் அவரை சந்திக்க வந்து கையளிக்கிறேன் என உறுதியளித்துவிட்டு கிளம்பினோம்.

அருகே மயிலம். மயிலம் வழியே புத்துச்சேரி சென்றுவிடலாம் என முடிவு செய்து புறப்பட்டு மயிலம் வந்தோம். மிக மிக சிறிய வயதில் அப்பாவின் கை பிடித்தபடி இந்த கோவிலை சுற்றி இருக்கிறேன். அன்றெல்லாம் நிறைய மயில்கள் உலவும். இந்த ஸ்தலத்தில்தான் சூரபத்மன்,வராக நதிக்கரையில் தவம் இருந்து, மயில் உருவம் பெற்று, முருகனின் வாகனமாக மாறினார் என்பது  புராணம். பொம்மபுர ஆதீனத்தின் [வீர சைவ மரபு] பராமரிப்பின் கீழ் இருக்கும் கோவில்.அந்த ஆதீனத்தின் ஸ்தாபகர் பால சித்தர் இந்த குன்றில் தவம் இருந்தார். அவர்க்கு இங்கே முருகன் கல்யாணக் கோலத்தில் காட்சி அளித்ததாக ஐதீகம்.

நாலைந்து திருமண மண்டபங்கள். இருநூறுக்கு குறையாத சாலை ஓர கடைகள் என கிட்டத்தட்ட பழனி அடிவாரம் போல இருந்தது கோவில் குன்றின் சரிவு. அகலமான படிகளில் உயர்ந்து கோவில் போனோம். ஆளில்லா கோவிலில்,ஆங்காங்கே குரங்குகளும், இளம் காதலர்களும் கண்ணில் பட்டனர். சுற்றி வந்தோம். கோ சாலையில் ஒரு பசு தலையை நீட்டி, மடிக்காம்பென என் விரல்களை சப்பிப் பார்த்து,தூ தூ என்று விட்டு முறைத்தது, பிறந்து சில வாரங்களே ஆன,பத்துக்கும் மேலான கன்றுக் குட்டிகள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன.

காதலர்களுக்கு இடைஞ்சல் அளிக்காமல் விரைவிலேயே, கோவிலை விட்டு வெளியேறினோம். வழியில் இதயா சொன்னார் ”சார் ஒண்ணு கவனிச்சீங்களா,  கிளம்புன நேரத்துல இருந்து, அந்த மேகம் சூரியன மூடிக்கிட்டே இருக்கு, நேரா நம்ம மேல வெயில் விழவே இல்ல, போன இடத்துல சோறு, வழி கேட்ட இடத்துல கூட கை நிறைய சாப்ட குடுத்து அனுப்புறாங்க இப்டிலாம் நான் பாத்ததே இல்ல ”என்றார். நான் சொன்னேன். அதன் பெயர் ”அருகர்களின் கருணை”.

முந்தைய கட்டுரைஈழ இலக்கியம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாந்தியின் காதலி