எழுதுக!

cyril

ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம். சென்ற ஆண்டு உங்கள் ஐரோப்பியப் பயணத்தின் பொழுது, நான், என் கணவர் மாதவன் இளங்கோ மற்றும் மகன் அமிர்த சாய் மூவரும் உங்களைச் சந்திக்க ஜெர்மனி வந்திருந்தோம். இன்று வரை நீங்கள் எழுதிய எல்லா நூல்களின் தொகுப்பும் வீட்டிலுள்ளது. மாதவன் உங்களைத் தொடர்ந்து வாசித்து வருபவர். எழுத்தாளர்களைத் தன்னுடைய துரோணர்களாகக் காண்பவர். அன்று அங்கிருந்தவர்கள் அனைவருமே தங்களின் அதிதீவிர வாசகர்கள். ஆனால்  நானோ தங்களை நிறைய வாசித்ததில்லை. தங்களின் “அறம்” சிறுகதைத் தொகுப்பையும், என் மகனுக்கு வாசித்துக் காட்டும் பொருட்டு “பனிமனிதன்” புத்தகத்தையும் வாசித்திருக்கிறேன். தீவிர இலக்கியத்தில் எனக்குப் பரிட்சயமில்லை.  அதனால் அன்று என்னுடைய இருப்பு அந்தக் கூடுகைக்கு ஏதாவது அசௌகரியத்தை ஏற்படுத்துமா என்கிற நடுக்கம் எனக்கு இருந்தது. ஆகையால் நான் வாயே திறக்கவில்லை.

நேற்று மின்னஞ்சலில் தோழி லோகமாதேவி 1500 படிகள் கொண்ட கொல்லிமலைக்கு சென்ற பொழுது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை என்னிடம்  பகிர்ந்திருந்தார்.

<<இயற்கையென்னும் பெரும்சக்தியின் முன்னால் நம் வாழ்வு எத்தனை பொருளற்றதுன்னு உணர்ந்த கணம் அது ’அத்தனை களைப்பிலும் அந்த அருவி எனக்கு கொடுத்த உள எழுச்சியை கிளர்ச்சியை அங்கிருந்த  என்மீது தெளித்த நீர்த்திவலைகள் என்னுள் உருவாக்கிய கொண்டாட்டத்தை  சொற்களில் எழுதிவிடவே முடியாது

ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்கள் அப்படி ஒரு பேரரருவியைபோல் எனக்கு

அதில் கம்பியை பிடித்துக்கொண்டு நீராடுபவர்கள் இருக்கிறார்கள். அத்தனை படிகளையும் குதித்து இறங்கி அருவியின் மையத்தில் நின்று அட்டகாசமாய் குளிப்பவர்களும் இருக்கிறார்கள் படியிறங்காமலேயே மேலிருந்து அருவியை கற்பனை செய்துகொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள். நான் இனிமீட்பே இல்லையென்னும் ஆயாசத்திலும் பிரமிப்பிலும் அந்த அருவியை அசந்துபோய் பார்த்துக்க்ண்டிருப்பவள் தெறித்து என்னை குளிர்விக்கும் திவலைகளுக்கே நன்றி சொல்லிக்கொள்பவள்>>

நான் அருவியின் உயரத்தைப் பார்த்து பிரமித்து பயந்து ஒதுங்கியே இருந்தேன். நீங்கள் நடமாடும் என்சைக்ளோபீடியா (சாய் அவ்வாறு குறிப்பிட்டான்) போல் தகவல்களை ஜெர்மனியின் காற்றில் கலக்க விட்டுக்கொண்டிருந்தீர்கள். நிற்கும் போதும், நடக்கும் போதும், சாப்பிடும் போதும் அறிவுசார் உரையாடல்களாக நிகழந்து கொண்டிருந்தது. சிந்தனைக்கு மட்டுமல்ல, சிரிப்புக்கும் பஞ்சமில்லாது இருந்தது. மாதவனின் தாடியை நீங்கள் கிண்டல் செய்தது இன்னும் நினைவிலேயே இருக்கிறது. அந்த டெக்கினிக்குகளை அவர் மீது இன்னும் பிரயோகிக்கவில்லை. நான் நினைத்து வைத்திருந்த ஜெமோவின் பிம்பம் வேறானது. பழகுவதற்கு இவ்வளவு எளிமையாகவும், இயல்பாகவும் இருப்பீர்கள் என்று எண்ணவில்லை. இருப்பினும் உங்களை நெருங்கிப் பேச நான் இன்னும் தகுதி பெறவில்லை என்ற அச்சம்கொண்டு விலகியிருந்தேன். எப்படியோ காரில் நாம் தனியாகப் பயணித்த பொழுது ஒருவாறு துணிவை வரவழைத்துக்கொண்டு உங்களிடம், “பொது வாழ்க்கையில் கீழ்மைத்தனத்துடன் வரும் எதிர்ப்புகளை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “இருபது வருடங்களுக்கு முன்பு என்னை எதிர்த்தவர்களை இப்போது காணமுடியவில்லை. இன்று எதிர்த்துக்கொண்டிருப்பவர்களும் இன்னும் சில வருடங்களில் காணாமல் போய்விடுவார்கள். ஆனால் நான் இன்னும் முன்னூறு ஆண்டுகள் இருப்பேன்” என்று கூறினீர்கள். அந்தப் பேச்சில் இருந்த நம்பிக்கை எனக்குப் பிடித்திருந்தது.

மற்றபடி அருண்மொழி அக்காவுடன் இணைந்துகொண்டு, ஆகச்சிறந்த கேள்விகளான “காதல் மலர்ந்தது எப்படி?”, “திருமணம் கைகூடியது எப்போது?”, “எழுத்தாளர்கள் எல்லோருமே கனவுலக சஞ்சாரிகள் ஆயிற்றே; கணவராகவும் தந்தையாகவும் ஜெமோ நேரம் ஒதுக்குவதுண்டா?” என்று பேட்டிக் கண்டுகொண்டிருந்தேன். இப்படியாக அத்தினம் கழிந்தது எனக்கு. இன்றும் நானும் அவர்களும் தொடர்பிலிருக்கிறோம்.

கதைசொல்லியாக நான் உங்களை முழுதும்  தெரிந்து கொண்டவளில்லை எனும் போதிலும், தங்கள் வலைத்தளத்தை  சத்தமின்றி பின்தொடர்கிறேன். அநேகமாக எல்லா நாட்களும் நான் பின்பற்றுகின்ற சடங்கு அது. அதன் மூலம் நான் அறிந்து கொண்ட ஜெமோவின் ஆளுமை மீது எனக்கு மிகப்பெரிய ஈர்ப்பும் மரியாதையும்  உண்டு. தங்கள் தளத்தில் வாழ்வெனும் பெரிய புதிருக்கான எல்லா விடைகளும் மறைந்திருப்பது போலவே எனக்குத் தோன்றும். அங்கு பேசப்படாத எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை.

குழந்தைகள் முதல் தெய்வங்கள் வரை, மதங்கள் முதல் சடங்குகள் வரை, காதல், காமம்,  திருமணம், இல்லறம், சமூகம், அரசியல், அறிவியல், கொள்கைகள், கோட்பாடுகள், பெண்கள், பெண்ணியம், இலக்கியம், எழுத்தாளர்கள், மார்க்சியம் என பறந்து விரிந்ததொரு உலகமது. நான் எல்லாவற்றையும் தேடிப் படித்து மகிழ்ந்திருக்கிறேன். இனங்கண்டுக்கொள்ளமுடியாத உணர்வுநிலைகளுக்கு எழுத்தின் வடிவம் கொடுத்திருப்பீர்கள். அதில் உள்ள ஜெமோவின் சிந்தனைகளும் பார்வைகளும் எனக்கொரு புதிய பரிமாணத்தையும் தெளிவையும் வாழ்வின் மீது நம்பிக்கையையும் கொடுத்துக்கொண்டிருக்கிறது. உங்கள் தளம் எனக்கு ஒரு சிறந்த வழிகாட்டி; கையேடு. ஒரு பதிவை படிக்கச் சென்று அதிலிருந்து தொடர்புடைய பதிவுகள் என்று மூன்று முதல் நான்கு மணி நேரமெல்லாம் நான் என்னை மறந்திருந்திருக்கிறேன்.

“குழந்தைகளுக்கு புராணங்களைக் கற்றுக்கொடுக்கலாமா?” என்ற உரையாடல் இந்திய – ஐரோப்பிய சூழலில் குழந்தைகளை வளர்ப்பதில் சிக்கித்  தவிக்கும் என்னைப் போன்ற எத்தனையோ பெற்றோர்களுக்கு ஒரு கையேடு. தெளிவாக தீர்க்கமாக தர்க்கரீதியாக நீங்கள் கொடுக்கும் விளக்கம்

அவ்வளவு நம்பிக்கையையும் தெளிவையும் தருகிறது.

“தீபாவளி” பதிவு பண்டிகைகளை ஏன் கொண்டாட வேண்டும் எனவும் பண்டிகைகளின் சாராம்சம் என்ன என்பதையும் அழகாக விளக்கும்.

அதனுடே வாழ்க்கையின் நிதர்சனங்களையும் நீங்கள் கூறிவிடுவதுண்டு

<< நித்யா சொல்வதுண்டு, ”மனிதர்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்பதல்ல பிரச்சினை, மகிழ்ச்சியாக இருப்பதெப்படி என்று தெரியவில்லை என்பதேஎன்று. நம்மில் ஒருவரை நிறுத்தி நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக இருப்பீர்கள் அதற்கு உங்களுக்கு என்ன தேவை?” என்று கேட்டால் பெரும்பாலும் நம்மிடம் பதில் இருக்காது >> 

“நீர்க்கடன்” பதிவு சடங்குகளை பற்றி நான் கொண்டிருந்த சந்தேங்களை நீக்கியது.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆகஸ்டு மாதம் 18, 2017-ல் வெளியான “கடிதம் என்னும் இயக்கம்” என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய இந்த வரிகளுக்கு என்னை உதாரணமாக  கொள்ளலாம்.

<< கடிதம் எழுதாமல், ஆனால் இக்கடிதங்களை தாங்கள் எழுதியதாக எண்ணி, வாசிக்கும் வெளித்தெரியாத வாசகர்கள் பலர் உள்ளனர். ஒவ்வொரு பயணத்திலும் அப்படிச் சிலர் அறிமுகமாகின்றனர். அவர்களுக்காகவே இவை பிரசுரமாகின்றன >> 

இப்படி மறைமுகமாகதான் நான் உங்களை அணுகி இருக்கிறேன். ஆனால் உங்களுடைய எழுத்தையோ, எஸ்ரா அவர்களுடைய எழுத்தையோ வாசித்துவிட்டு மாதவனிடம் பேசும்போதெல்லாம் அவர் “நீ ஏன் அவர்களுக்கே கடிதம் எழுதித் தெரிவிக்கக்கூடாது? மகிழ்ச்சியடைவார்கள்.” என்று பலமுறை கூறியிருக்கிறார். அவர் மூலமாக தாங்கள் உட்பட, வெங்கட் சாமிநாதன், ஞாநி, திலீப்குமார் என்று பல எழுத்தாளர்களை சந்தித்திருந்தாலும் இதுதான் ஒரு எழுத்தாளருக்கு நான் எழுதும் முதல் கடிதம். இப்பொழுது தோன்றும் ஒரு ஐயத்தை உங்களிடம் கேட்டுத் தெளிவு பெறவேண்டுமென்கிற ஆவலிலும் எழுதுகிறேன். தோழி லோகமாதேவிக்கு மிக நீண்ட மின்னஞ்சல்கள் அனுப்பத் தொடங்கி, அவரின் தூண்டுதல்;  ஊக்குவித்தலின் எதிர்விளைவாக  இப்பொழுது  நிறைய எழுத வேண்டுமென்கிற ஒரு ரெஸ்ட்லெஸ்னஸ் எனக்குள் எழுந்துள்ளது. புனைவுகள் அல்ல. சிறிய கட்டுரைகள், குறுந் தகவல்கள், என் வாழ்வின் பக்கங்கள், மனிதர்களின் பலதரப்பட்ட குணாதிசயங்கள், உணர்வுநிலைகள் இவற்றை எழுத்தில் கொண்டுவர ஆவலாக உள்ளது. எழுதுவது தியானம் போலுள்ளது. கடந்த சில வருடங்களாக எந்த வேலையையும்  என்னால் முழுகவனத்துடன் செய்ய முடிந்ததில்லை. வாசிக்கும் போது கூட கிளை சிந்தனைகள் முளைத்து  மனம் நழுவிச் சென்று விடும். ஆனால் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் போது  எந்தவித  கவனச் சிதறல்களும்  இல்லமால் மனம் அதிலேயே  லயித்துக் கிடக்கிறது.

ஆனால் வழமை போல் மனதினுள் தர்க்கமும் ஆரம்பித்து விட்டது. புதிதாக என்ன எழுதி விடப்போகிறாயென்று? ஆம் – வேண்டாம் என்கிற நிலைப்பாட்டின் தொகுப்பையே வாழ்வென்று கூறுகிறோமா என ஆச்சர்யமாக உள்ளது. எப்பொழுதுமே மனது இசைந்துக் கொடுப்பதற்கும் மறுதலிப்பதற்குமான போராட்டத்தை நிகழ்த்திய வண்ணமே உள்ளது. எந்த ஒரு சார்பு நிலையையும் எடுத்த பிறகு அதற்கு தகுந்தாற் போல காரண காரியங்களை ஜோடித்துக் கொள்கிறது. நன்மையும் தீமையும் அதன் பொருட்டு விளைகிறது. விளைவு எதுவாயினும் என் எழுத்து உலகத்தை உய்விக்கப் போவதில்லை. இருப்பினும் எழுத ஆசையாய் உள்ளது.

சுந்தர ராமசாமியின்  கவிதை தொகுப்பில் படித்தது 

உன் கவிதையை நீ எழுது
எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது
எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று என்னைக் கேட்காமலேனும் இரு.  

இந்த வரிகளை பல பரிமாணங்களில் புரிந்துகொள்ளலாமென்றாலும் நான் எனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளப் போகிறேன்.

என்னுடைய ஏழாம் வயதில் சாலை விபத்தொன்றில் என் அப்பா அகால மரணமடைந்தார். அவருடனான என் தருணங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக வெறும் பிம்பங்களாக மட்டுமே மனதில் பதிந்துள்ளது. அவரைப் பற்றி நான் தெரிந்து கொண்டதெல்லாம் மற்றவர்களின் மூலமாகவே. மகனாக, கணவராக, அப்பாவாக, சித்தப்பாவாக, மாமாவாக இப்படி மற்றவர்களின் பார்வையில் சுவாமிநாதன் யாரென்ற புரிவு அது. ஆனால் அது அவர்களுடைய அனுமானம். அவர்களுக்கு அவர் மேல் இருந்த அபிப்ராயம், கருத்து அல்லது ஏதோவொன்று. ஒருவேளை அவர் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருந்தால் அவரைப் பற்றி எனக்கும்கூட ஒரு அபிப்பிராயம் இருந்திருக்கும். ஆனால் அவரைப் பற்றி அவராகவே சொன்னாலொழிய உண்மையில் அவர் யார் என்பதை அறியவே முடியாது அல்லவா? அவர் ஒரு சிறிய டைரியையாவது விட்டுச் சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமென நான் பலமுறை எண்ணி இருக்கிறேன். நம் குழந்தைகளோ, “உலகமே என் வீடு” என்றதொரு சூழலில் வளர்கிறார்கள். நாளை எனக்கு வரப்போகும் நாட்டுப்பொண் எந்த நாட்டு பெண்ணோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இப்படியாக ஓரிரு தலைமுறைகள் கழிந்ததென்றால் அவர்களுக்கு என்னைப் பற்றியோ என் முன்னோர்களைப் பற்றியோ தெரிந்துகொள்ள எதுவும் இருக்காது. பரவலாக உலக வரலாற்றைத் தெரிந்துகொள்ள ஆயிரம் நூல்கள் இருக்கிறது. ஆனால் நம் குடும்ப வரலாற்றை, முன்னோர்கள் கடந்து வந்த பாதை இவற்றையெல்லாம் அறிந்துகொள்ள நாமே எதையாவது ஆவணப்படுத்தி விட்டுச் சென்றால்தானே உண்டு. இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒரு நடுத்தர வர்க்க இந்தியத் தெரிவையின் வாழ்க்கை ஐரோப்பாவில் எப்படி இருந்தது? அவள் எதிர்கொண்ட சவால்கள் என்ன, ஆசைகள் என்ன, அச்சங்கள் என்ன என்று தெரிந்துகொள்ள உதவலாம்தானே!

மாதவன், “ஒரு பக்கம் எழுதும் முன் நுறு பக்கங்களை வாசி” என்கிறார். கல்கி, சாண்டில்யன், சுஜாதா என்று ஆரம்பித்த நான், பிறகு அசோகமித்திரன், தி.ஜா, கு.பா.ரா, திலீப்குமார், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரது படைப்புகள் வரை அறிமுகமாகியிருக்கிறேன். யதார்த்தமான கதைளும், மனித மனங்களின் உணர்வுநிலைகளைப் படம் பிடித்துக் காட்டும் பாங்கும், இலகுவான மொழிநடையும் வாசிப்பதற்கு எனக்கு சுலபாக உள்ளது.

மார்ச்சு மாதம் 19, 2011-ல் “எழுதுதல்” கடிதங்களில் நீங்கள் இவ்வாறு குறிப்பிட்டிருந்தீர்கள்:

<<கதைகள் வாழ்க்கைமேல் ஒரு விசாரணையை முன்வைக்கின்றன. அந்த விசாரணையில் நேர்மையாக இருக்கின்றன. ஒரு கருத்தைச் சொல்ல வாழ்க்கையை செயற்கையாக சித்தரிப்பதில்லை. உங்களை மகிழ்விப்பதற்காக எதையும் உருவாக்குவதில்லை. எது வாழ்க்கையோ அதை ஆசிரியனின் அக அனுபவத்தை ஒட்டி அவை முன்வைத்து மேலே சிந்திக்கும்படி உங்களிடம் கோருகின்றன>>    

சீரிய இலக்கியங்களில் என்னை என்னால் ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லை; கவனம் சிதறி விடுகிறது. ’நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்’, ‘எழுதும் கலை’ இவை இரண்டும்தான் நான் அடுத்து வாசிக்கப் போகும் புத்தகங்கள்.

முகநூல் வந்ததிலிருந்து தடியெடுத்தவர்களெல்லாம் தண்டல்காரனை போல எல்லோருமே எழுதி தள்ளுகிறார்கள். வலைப்பதிவாளர்களுக்கும் பஞ்சமே இல்லை. இவற்றையெல்லாம் பார்க்கும் போது உங்களைப் போன்ற மூத்த எழுத்தாளர்களின் மனநிலை எப்படியிருக்குமென்று நினைத்துக் கொள்வேன். எழுதித்தான் ஆகவேண்டுமா என்கிற கேள்வி எழுவதற்கு இதுவும் ஒரு காரணம். இதில் தங்களின் நிலைப்பாடு என்ன? எப்பொழுதுமே எழுதச் சொல்லி ஊக்குவிப்பவர்தான் நீங்கள் எனினும்,  உங்கள் பார்வையில் எழுதுவதற்கு குறைந்தபட்ச தகுதியென்ன? சாகித்ய விருதுக்கு என்னைத் தயார் செய்துகொள்வது போல மிகைப்படுத்துகிறேன் என நினைக்கவேண்டாம். பொதுவாக இதில் தங்களின் கருத்து என்னவென்று  அறியும் பொருட்டே கேட்கிறேன்.

மிக நீண்ட கடிதத்திற்கும், ஏதாவது பிழையும் இருப்பின் மன்னிக்கவும்.

அன்புடன்,

பிரியா இளங்கோ

பெல்ஜியம்

அன்புள்ள பிரியா

எழுதுவதற்கான முதன்மை நோக்கம் ஒன்றே, நம்மை வெளிப்படுத்துவது. இங்குள்ள ஒவ்வொரு உயிருக்கும் வெளிப்பாடு கொள்வதே உண்மையான இன்பமாக உள்ளது. ஏனென்றால் இருக்கிறேன் என்பதையே நாம்  வெளிப்பாடு என்கிறோம். நாம் எப்படி வெளிப்படுகிறோமோ அதுவே நம் இருப்பு.

பலசமயம் நாம் நம்மை தன்னிச்சையாக, கட்டின்றி வெளிப்படுத்துகிறோம். தற்செயலாக வெளிப்படுகிறோம். அது நாம் அல்ல. ஆனால் அந்த வெளிப்பாட்டை நாம் என்று நாம் ஏற்றுக்கொண்டாகவேண்டியிருக்கிறது. பின்னர் அதற்கு ஏற்ப நம்மை நாம் மாற்றிக்கொள்கிறோம். நமக்குப் பிடிக்காத ஒரு முகம் நம் மீது வந்து அமைகிறது.

அதன்பின் வாழ்நாள் முழுக்க ‘நான் நீங்கள் நினைப்பதுபோல் அல்ல’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம். எண்ணிப்பாருங்கள், நம்மைச்சுற்றி நிகழும் உரையாடல்களில் பெரும்பாலானவை அந்த ஒற்றை வரியின் வெவ்வேறு வடிவங்கள்தான்.

அந்த முரண்பாடு காலப்போக்கில் எரிச்சலாகிறது. நம்மை நாமே வெறுக்கக் காரணமாகிறது. நம்மை அன்னியப்படுத்துகிறது. அதிலிருந்து மீள ஒரே வழி நம்மை நாம் சரியாக வெளிப்படுத்திக்கொள்வதுதான். கலை வழியாக, செயல்கள் வழியாக.

வெளிப்படுத்துவது என்பது நம் அகத்தை சீரமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறது. நம்மை குவித்துக்கொள்ளவேண்டியுள்ளது. வெளிப்படுவதற்கும் நமக்கும் இடையே உள்ள இடைவெளி நம்மை தொந்தரவு செய்கிறது. ஆகவேதான் மேலும் மேலும் கச்சிதமாக நம்மை ஆக்கிக்கொண்டே செல்கிறோம்.

எழுதுவது முதன்மையாக இதற்காகத்தான். யாரும் வாசிக்கவில்லை என்றாலும் சரி. எந்த அங்கீகாரமும் இல்லை என்றாலும் சரி. இது நான், இவ்வாறுதான் நான் என நாம் சொல்கிறோம். அவ்வாறு நம்மை கண்டடைகிறோம். ஆகவே எழுதத் தோன்றினால் எழுதுக! செயலாற்றத் தோன்றினால் செயலாற்றுக! முழுமையாக வெளிப்படுக!

நம்மை ‘முழுமையாக’ தயாரித்துக்கொண்டபின் எழுதுவது இயலாதது. கலை வழியாக வெளிப்பட அக்கலையில் ஓர் அடிப்படைப் பயிற்சி தேவை, அவ்வளவுதான். இலக்கியம் என்னும் கலையை தெரிந்துகொள்ளும் அடிப்படைப் பயிற்சி போதுமானது. அதன்பின் எழுத எழுத நாமே மேலும் மேலும் கற்றுக்கொள்வோம்

செய்யவே கூடாதது, எழுத ஆரம்பிக்கும்போதே அங்கீகாரம் தேடும் செயலிலும் ஈடுபடுவது. எழுத்தாளன் என்னும் அடையாளத்தை சூடிக்கொள்வது. அதையொட்டி கருத்துக்களை உருவாக்கிக் கொள்வது. அவற்றின் வழியாக நாம் கெட்டிப்பட்டுவிடுவோம். நம்மால் நினைத்தாலும் வெளிவர முடியாது. அதெல்லாம் தானாகவே தேடிவரவேண்டும். நாம் முழுமையாக வெளிப்பட்டால் அது நிகழும்.

ஆகவே எவருக்காகவும் இல்லாமல் பிரியா பிரியாவாக வெளிப்பட, நிலைகொள்ள எழுதுங்கள்!

வாழ்த்துக்களுடன்,

ஜெ

முந்தைய கட்டுரைநெருப்பு தெய்வம், நீரே வாழ்வு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-83