பட்டி – கடிதங்கள்

patti2

பட்டி

ஜெ,

பட்டி வாசித்து முடித்த்தும் இளம் ப்ருவ பள்ளி சென்ற நாட்கள் நினைவில் வந்தது. அப்போதெல்லாம் கோபால சமுத்திரத்திலிருக்கும் பள்ளிக்கு த்ருவையிலிருந்து ந்டைப்பயணம் தான். திருநெல்வேலியில் பட்டியைக் கிடை என்றுதான் சொல்வார்கள்.

மாலையில் பள்ளியிலிருந்து பசியுடன் வீடு திரும்புகையில் சில சமயம் பட்டியில் கஞ்சி பனையோலில் சின்ன வெங்காயத்துடன் கிடைக்கும்.

படித்து முடித்ததும் கிடைக்கஞ்சிக்காக மனம்  ஏங்கியது.ஊருக்கு சென்று வர வேண்டும்.

அன்புடன்

சேது வேலுமணி

சென்னை

அன்புள்ள ஆசிரியருக்கு,

தங்களின் ‘பட்டி’ பற்றிய பதிவை வாசித்தேன். வரிக்கு வரி அர்த்தம் பொதிந்த பதிவு. அதாவது உலகையே ஒரு பட்டிக்குள்  அடைத்து வைத்ததைப் போன்று. எனக்கு பல பயனுள்ள செய்திகள் அதில் உள்ளன. குறிப்பாக…

நான் இப்போது வசிப்பது சென்னையில், ஆனால் என் பூர்வீகம் மதுரை மாவட்டத்தில் உள்ள சொக்கம்பட்டி என்ற கிராமம். பொதுவாக என் ஊர் பெயரை சிறிது தயக்கத்துடனேயே சொல்வேன். காரணம், எனக்கு அதன் அர்த்தம் தெரியாது. பெயரை கேட்கின்ற ஐவரில் ஒருவர், பெயர் காரணம் கேட்டு, சிரிப்பார். நான் பதில் தெரியாமல்  முழிப்பேன்.

அதனால் யார் விசரித்தாலும் ‘ நமக்கு மதுரை’ என்பேன்.’மதுரைனா? டவுன்லயா?’

‘இல்லங்க, பக்கத்துல ஒரு கிராமம்’ . ‘அது எங்க?’. ‘மேலூருக்கு முன்னாடி.. திருச்சில இருந்து மதுரை போற வழில’.’ஓ, அங்கயா ம்ம்ம்’ என்றால் அப்படியே விட்டுவிடுவேன்.

அந்தச் சுற்றுப்பகுதியை தெரிந்தவர்களாக இருந்தால் ‘ஓ, சரியா எங்க? துவரங்குறிச்சி தாண்டிய இல்ல கொட்டாம்பட்டி தாண்டியா?’ என்பர். குதூகலம் தொற்றிக்கொள்ளும்.

‘உங்களுக்கு கொட்டாம்பட்டி தெரியுமா? அது என் அம்மா ஊரு. அங்க இருந்து ஒரு 6 km. தொந்திலிங்கபுரம் போர வழில. வலச்சேரிப்பட்டி தாண்டினா எங்க ஊரு. அங்களாம் நீங்க வந்திருக்கீங்களா? நாங்க விசேஷங்களுக்கு போறதுண்டு’ என உரையாடல் மேலும் விருவிருப்பாய் தொடரும். ஏனென்றால் அவர்களுக்கு ‘பட்டி’ ஒரு பழகிப்போன பெயராய் இருக்கும் அல்லது அவர்களும் ஏதோவொரு பட்டியை சேர்ந்தவர்களாக இருப்பர்.

தங்களின் பதிவால் ‘பட்டி’-க்காண காரணம் தெரிந்தவிட்டது. மீதமுள்ள ‘சொக்க’-த்திற்கான காரணத்தை/ விளக்கத்தை தேடத் தொடங்கிவிட்டேன், ஒரு முழுமைக்காக.

பி.கு: இனி யாரேனும் என் ஊர் பெயரைக் கேட்டுச் சிரித்தால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் :-)

அன்புள்ள,

சூர்ய பிரகாஷ்

சென்னை [சொக்கம்பட்டி]

அன்பிற்கினிய ஜெயமோகனுக்கு

பட்டி பற்றி எழுதியதைப் படித்தேன். அதில் சொல்லாத சில செய்திகள் உண்டு

அந்தக் காலத்தில் எங்கள் கிராமத்தில் பட்டி என்று ஓர் இடம் உண்டு. அது நாற்புறமும் ஓராள் உயரத்திற்கு மதில் சுவரல்சூழப்பட்டிருக்கும். உள்ளே இருப்பதைப் பார்க்க சிறு சிறு பொந்துகள் இருக்கும். ஒரு மாடு நுழையும் அளவிற்கு ஒரு சிறு வாசல்அமைக்கப்பட்டு அதற்குக் கதவு இருக்கும். அக்கதவு பூட்டப்பட்டு அதன் சாவி அந்த ஊரின் மணியக்காரரிடம் இருக்கும்.

மணியக்காரர் என்பது கிராமத்தில் பொறுப்பான மிக உயர்ந்த பதவி. மாத ஊதியம் இல்லாத பதவி அது. சிலகிராமங்களில் அது பரம்பரையாகவும் வருவதுண்டு. பெரும்பாலும் ஊரில் வசதிபடைத்தவர்தான் அப்பொறுப்பில் இருப்பார்.ஊரில் உள்ள புறம்போக்கு நிலங்கள் மற்றும் ஊர் மக்களில் யார்யாருகு எங்கெங்கு வீடு வயல்கள் இருக்கின்றன எல்லாம்அவருக்கு நினைவிலேயே இருக்கும். சாதி, வருவாய், பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்கு அவரே அடிஒப்பம் இட வேண்டும்.அப்பொழுதுதான் தாசில்தார் சான்றிதழ்களில் ஒப்பம் இட்டு அரசு முத்திரை இடுவார். அவருக்கு உதவியாகப் பதிவேடுகளைப்பராமரிக்க ஒரு கணக்குப்பிள்ளையும், இதர பணிகளையும் ஏவல்களையும் செய்ய ஒரு தலையாரி என்பவரும் இருப்பார்கள்.மணியக்காரரிடமிருந்து எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் ஒரே இரவில் பதிவேடுகள் பறிக்கப்பட்டு பொறுப்பிலிருந்துவிடுவிக்கப்பட்டுக் கிராம நிருவாக அலுவலர் என்னும் அரசுப் பதவி உருவாக்கப்பட்டு நியமிக்கப்பட்டனர்.

ஊரில் ஆடு, மாடுபோன்ற கால்நடைகள் யாருடைய வயல் விளைச்சல்களாவது மேய்ந்து விட்டால் அவை நிலத்திற்குஉரியவரால் பிடிக்கப்பட்டு மணியக்காரரிடம் ஒப்படைக்கப்படும். அவர் அவற்றைத் தலையாரியின் மூலம் பட்டியில் அடைத்துவிடுவார். ஆடு மாடுகளுக்கு உரியவர் எல்லா இடங்களிலும்  தேடி இறுதியில் பட்டியில் இருப்பதைக் கண்டறிவார்.மணியக்காரரிடம் உரிய தண்டத் தொகை செலுத்தி அவர் தங்கள் கால்நடையை மீட்டுக்கொண்டு போவார். இத்தண்டம்ஒவ்வொருவரின் பொருளாதார வசதிக்கேற்ப அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்.

இப்பொழுதோ வயல் பரப்புகளும் குறைய, கால்நடைகளும் அதிகமாக இல்லாததால் பட்டிகளும் மறைந்து போயின.

வளவ துரையன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-82
அடுத்த கட்டுரைநெருப்பு தெய்வம், நீரே வாழ்வு