ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன்

mutha

ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள்

தனிப்பட்ட வாழ்கையில் அலைக்கழிப்பும் துயரம் நிறைந்த அனுபவமும் இருந்தால் நல்ல இலக்கியம் பிறக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. டால்ஸ்டாய், ஜெயமோகன்,ஷோபாசக்தி, மிலன் குந்தேரா, ஹனீப் குரேஷி வரை அதற்கான முன்னோடிகள் இருக்கிறார்கள்தான். ஆனால் வெறுமே துயரும் அலைக்கழிப்பும் மட்டுமே நல்ல இலக்கியத்தைப்படைப்பதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. நல்ல உதாரணம் ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கங்கள். ஈழம் என்றாலே போர், கண்ணீர், இனப்படுகொலை என்ற எண்ணமே மனதில் வரும். அதெல்லாம் சரிதான், ஆனால் அவற்றை முன்னிறுத்தி எழுதப்படும் படைப்பில் இலக்கியத்தரம் இருக்கிறதா என்பதே இலக்கியத்திற்கான அடிப்படை. இலக்கியம் என்பதே நிகர் அனுபவத்தைக் கொடுக்கக்கூடியது. அது ஆசிரியரின் தேடலின் ஊடாக தனக்கான கண்டடைதலை நிகழ்த்தும் ஒரு களம். அதென்ன இலக்கியத்தரம் என்ற வினா காலங்காலமாக எழுப்பப்படுவது. அதற்கான பதில்களும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட பின்னரும் மறுபடியும் முதலிலிருந்து எழுப்பப்படுவது வழமை. அப்படி ஒரு நோயுற்ற சிதிலம் அடைந்த உடல்தான் ஈழ இலக்கிய உலகம். அதேநேரம் லௌகீக உலகில் அலைக்கழிப்பு இன்றி அகத்தத்தளிப்பில் நல்லிலக்கியம் படைத்தவர்களும் இருக்கிறார்கள்தான். ஆ.மாதவன், சுந்தரராமசாமி, பூமணி, அ.முத்துலிங்கம், இமையம், கலாமோகன் என்று ஒரு வரிசையை அதற்குச் சொல்லமுடியும். அலைக்கழிப்பும் அனுபவங்களின் செறிவும் ஒருபோதும் இலக்கியத்தின் முக்கிய அடிப்படையாகக் கொள்ள இயலாது.

ஈழ இலக்கியம் என்பதே அரசியலால் பிணைக்கப்பட்டதாக மாறிவிட்டது, அரசியலைப் பேசும் வெளிதான் ஈழ இலக்கியம் என்றான பின்பு இங்கே வெறும் ஒற்றைப்படையான பிரச்சாரங்களே இலக்கிய அந்தஸ்தைப் பிடித்துவிடுகிறன. வெறுமே ஓர் இனத்தின் துயரைச் சொல்வதோ அவர்களின் விடுதலையைப் பாடுவதோ இலக்கியத்தின் இடம் அல்ல. இதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியுள்ளது.

நாவலுக்கும் நெடுங்கதைக்கும் வித்தியாசம் உள்ளது. நாவல் விரிவுத்தன்மையால் தன்னை விரித்துச் செல்லும். கதாமாந்தர்களின் வாழ்வியலின் வரலாறுகள் அவற்றினூடாகச் சொல்லப்படும். நிறைய கதை மாந்தர்கள் உலாவருவார்கள். நாயகன் நாயகி என்கிற இரண்டு சட்டகங்கள் மட்டுமே இருப்பதில்லை. பல்வேறு முரண்பாடுகளுக்கு இடையால் மானுடர்களின் இருப்பையும் அதன் சுழற்சியையும் விவாதிக்கும். நாவலின் அடிப்படையே மற்றமையின் மற்றையை தரப்பையும் விவாதிப்பதே. அடிப்படையில் அவை தத்துவநோக்கைக் கொண்டிருக்கும். நெடுங்கதையில் கதாமாந்தர்களின் வரலாறுகள் இருப்பதில்லை. அதீத தத்துவத் தேடல்களும் இருப்பதல்லை. குறைந்த கதாமாந்தர்களின் விசாரணை ஊடாக நகர்வது. நாவலில் இருந்து வரலாறுகள் பிய்த்து எறியப்படும் போது நெடுங்கதையாக மாறிவிடுகின்றது. இமையம் எழுதிய ‘எங்ககெத’ நாவல் இல்லை. அது நெடுங்கதை. இதேபோல் இலக்கிய அழகியலின் வகைமைப்பாடுகள் நிறையவே உண்டு. அவற்றைப் பற்றிய விவாதங்கள் இல்லாமல் பொத்தாம் பொதுவாக எல்லா இலக்கிய ஆக்கங்களையும் ஒரே தராசில் வைத்து எடை போட இயலாது.

யதார்த்தவாத எழுத்து, இயல்புவாத எழுத்து, மிகை புனைவு வாதம், செவ்வியல்  என்று இன்னும் இன்னும் இலக்கிய அழகியலை விவாதிக்கலாம். அவை இன்னும் சுவாரஸ்யமானது. இக்கட்டுரையின் நோக்கம் அவற்றை விவாதிப்பதல்ல என்பதால் அவற்றை இங்கே தவிர்த்துவிடுகிறேன். இந்த அழகியல் நிலைப்பாடுகள் கருத்துருவாக்கங்களால் உருவாக்கப்படுபவை. முன்னோடிகள் இதுவரை உருவாக்கிய விவாதங்களின் தொடர்ச்சியில் இருந்து அடுத்த தலைமுறை விவாதித்தும் மறுத்தும் கொண்டு செல்ல வேண்டியவை. உலக இலக்கியத்தில் மாஸ்டர் படைப்புகளாகக் கொள்ளப்படுபவையுடன் ஒப்பிட்டே இவற்றை விவாதிக்க இயலும். இவை எல்லாம் ஈழத்தில் நிகழ்கிறதா என்பதே இக்கட்டுரையின் முதன்மையான நோக்கம்.

***

நமது ஈழத்து இலக்கிய வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் இவ்வாறு வகுத்துக்கொள்ளலாம். மு.தளையசிங்கத்தின் ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’, மு.பொன்னம்பலத்தின்‘திறனாய்வு சார்ந்த பார்வைகள்’  புத்தகத்தின் வாசிப்பின் மூலம் எனது புரிதல்களை அவர்களின் புரிதல்களின் ஊடாக என் சிந்தனையை இவ்வாறு தொகுக்கிறேன்.

அ. 1930-1940  ஈழ இலக்கிய முயற்சிகளின் ஆரம்பகாலம்.

ஆ. 1940- 1950 ஈழ இலக்கியப் போக்குகளில் தீவிரம் கூடிய மறுமலர்ச்சிக்காலம்.

இ. 1950-1965 ஈழ முற்போக்கு இலக்கியம் எழுச்சியுற்ற காலம்.

ஈ. 1965-1975 ஈழ முற்போக்கு, நற்போக்கு இலக்கியத்தின் விவாதங்கள் மோதல்கள் உருவாகிய காலம்.

உ. 1975-1985 இலங்கைவாழ் இனங்களுக்கு இடையிலான மோதல்கள் விரிவடைந்து இனப்பிரச்சினை விரிவடைந்த காலம்.

ஊ. 1985-2009 போர்ச்சூழலுக்கு உரிய காலம்.

எ. 2009 க்குப் பின்னர் பின்போர்ச்சூழலுக்கு உரிய காலம்.

ஈழ எழுத்தாளர்கள் சிறுகதைகள் எழுத ஆரம்பித்த போது பெரும்பாலும் அவை தமிழக இதழ்களிலேயே ஆரம்பத்தில் வெளியாகத் தொடங்கின. கிராம ஊழியன், கலைமகள் போன்ற பத்திரிகைகளில் இவை அதிகம் வெளியாகியுள்ளன. இருந்தபோதிலும் ஈழத்துக்கு என்ற தனித்தன்மையைக் கொண்டிராமல் தமிழக எழுத்தாளர்கள் எழுதும் கதைகளின் பாணியை ஒட்டியே அவை இருந்திருக்கின்றன. இந்திய சுதந்திர எழுசியின் மீதான ஈர்ப்பு, காந்தியின் மீதிருந்த பெரும் பற்று போன்றவை அவ்வாறான எழுத்துமுறைக்குள் தள்ளியதாக மு.பொ குறிப்பிடுகிறார்.

அதற்குப்பின் தோன்றிய மறுமலர்ச்சிக் காலத்தில் ஈழத்து நிலப்பரப்பில் நிகழும் கதைகளாகப் பரிமாணிக்கத் தொடங்கின. சுயாதீனமாகத் தமது நிலம் சார்ந்த சிக்கல்களையும்வாழ்வியலையும் எழுத்துக்குள் புகுத்தும் முயற்சி இக்காலப்பகுதில் நிகழ்ந்துள்ளன. இது ஒருவகையான மறுமலர்ச்சியை இலக்கியத்தில் உண்டு செய்ததாகக் கருதப்படுகின்றது.

இதன்பின்னர் ஏற்பட்ட முற்போக்கு இலக்கியம் என்பது பெரும் வீச்சில் நிகழ்ந்த ஒன்று. இதுவரை வடக்கில், கிழக்கில் ஏற்பட்டிருந்த சாதிய ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரலாகவும் வர்க்கப் பிரச்சினையை முதன்மைப்படுத்தி தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான இலாப நட்டக் கணக்கை கேள்விக்கு உட்படுத்தி தொழிலாளர்களுக்கான விடிவே மானுடத்தின் முழுமையான விடுதலை என்ற நோக்கை நோக்கி எழுதப்பட கதைகளாகவும் அவை இருக்கின்றன. முற்போக்கு இயக்கங்களின் தேவைகள் இன்றுபோலவே அன்றும் தேவையாக இருந்த சூடான காலப்பகுதி (இதனை ஓரளவு விரிவாகப் புரிந்துகொள்ள ‘எழுநா’ வெளியீடான அ.கௌரிகாந்தன் எழுதிய‘யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலாந்தரும்’ என்ற ஆய்வு நூலை வாசிக்கலாம்). யாழ்ப்பாணக் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கல்வி கற்க உள்வாங்கப்பட்டபோது அதனை எதிர்த்து உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். எனினும் அந்தப்பாடசாலையின் அதிபரின் பிடிவாதத்தால் உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களின் பகிஷ்கரிப்பு தோல்வியிலே முடிந்தது.  இவ்வாறான பகிஷ்கரிப்புச் சம்பவத்தால் சீற்றம் அடைந்த அந்தப் பாடசாலையின் முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்ட பழைய மாணவர்கள், யாழப்பாண மேட்டிமைச் சமூகத்தின் ‘பிற்போக்குச் செயற்பாடுகளை’ எதிர்க்க ஓர் அமைப்பாகத் திரண்டனர். பின்னர் அதுவோர் சமூக இயக்கமாக விரிவடைந்தது. பின்னர் அவ்வமைப்பு யாழ்ப்பாண ‘வாலிபர் காங்கிரஸ்’ என்று அழைக்கப்பட்டது. இவ்வமைப்பில் இருந்த பலர் இடதுசாரிச் சிந்தனைகளைக் கொண்டிருந்தனர். இந்த அமைப்பின் செயற்பாடுகளும் சிந்தனை அலைகளும் இலக்கியம் வரை நீண்டதாகப் புரிந்துகொள்ள இயல்கிறது. இந்த அமைப்பிலிருந்தவர்களால் நேரடியாக இலக்கிய எழுத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா என்று அறியமுடியவில்லை. எனினும் இவர்களது தாக்கம் முற்போக்கு இலக்கிய எழுத்து முறைக்கு அடிப்படையாக இருந்துள்ளது என்பதை மறுக்கவியலாதாகிறது.

க.கைலாசபதி 1957-இல் ‘தினகரன்’ பத்திரிகையின் ஆசிரியராக வந்தபின்னர், முற்போக்கு எழுத்தாளர்களுக்கு இன்னும் வாய்ப்புக்கள் குமிந்தன. ஒருகட்டத்தில் முற்போக்கு எழுத்தாளர்களின் கதைகள் எல்லாமே பிரச்சாரமாக அமைய ஆரம்பித்தன. எந்தவித இலக்கியத் தகுதிகளும் இன்றி வெறுமே சாதிய, வர்க்க விடுதலையைப் பேசுகின்றன என்ற உள்ளடக்கத்துக்காக அவை பிரசுரிக்கப்பட்டன. ஈழ இலக்கியம் இலக்கிய அந்தஸ்தை இழந்து குப்பைக்காடாக மாறிக்கொண்டிருந்தது. இவற்றையெல்லாம் க.கைலாசபதி தன் மார்சிய பார்வையால் “இதுதான் சரியான கலை” என்று திறனாய்வுக் கட்டுரைகளையும் எழுதி எழுதிக் குமிக்க ஆரம்பித்திருந்தார்.

இலக்கியத்தின் அடிப்படையில் வாழ்க்கை சார்ந்த தேடல் இருக்கும். இருப்பையும் பிரபஞ்ச இயக்கத்துக்கான தத்துவார்ந்த கேள்விகளுக்கான விடைகளையும் நோக்கிச் செல்லும். ஒரு வாழ்க்கையை வெறுமே முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான இலாப நட்டக் கணக்கிலிருக்கும் சமத்துவத்ததின் ஊடகப் பார்க்க இயலாது. சரியான ஊதியப் பகிர்வும்,அந்தஸ்தும் கிடைத்தால் ஊழியர்கள் விடுதலை அடைந்துவிடப் போவதும் இல்லை. வாழ்க்கை என்பது எண்ணற்ற கேள்விகளாலும் தனிப்பட்ட அகங்கார மோதல்களாலும் நிரம்பியது. உண்மை என்று நாம் நம்பும் ஒன்று பாதிதான் உண்மை; மிச்ச உண்மை மற்றைய தரப்பிலிருப்பது. இதனைத் துழாவிக் கண்டடைய வைப்பது இலக்கியம். இந்தப் புரிதலின்றி வெறுமே சூத்திரங்கள் ஊடாக அணுகிப்பார்க்கும் பார்வையைக் கொண்டது கைலாசபதியின் அணுகுமுறை. இந்த அணுகுமுறையில்தான் செ.கணேசலிங்கனின் செவ்வானத்தை மிகச்சிறந்த நாவல் என்பதோடு நில்லாமல், புதுமைப்பித்தனின் கதைகளில் வரும் பிச்சைக்காரர்கள் எப்படி வர்க்கரீதியாகச் சுரண்டப்பட்டு பிச்சைக்காரர்களாக ஆக்கப்பட்டார்கள் என்பதைச் சொல்லவில்லை என்று புதுமைப்பித்தனை நிராகரிக்கிறார். இது போன்ற அணுகுமுறையாலும், கைலாசபதியின் அரவணைப்புடனும் எண்ணற்ற பிரச்சாரங்களை எல்லாம் சிறுகதைகள் என்று வெளியிட்டது தினகரன்.

கைலாசபதி
கைலாசபதி

கைலாசபதியின் இலக்கிய அணுகுமுறைக்கு எதிராகக் குரல்கள் அன்றைய காலத்திலும் எழத்தான் செய்தன. அதில் வலிமையாகத் தன் கருத்துகளைப் பதிந்தவர்களில் முக்கியமானவர் மு.தளையசிங்கம். ‘விமர்சக விக்கிரகங்கள்’ என்ற தன் கட்டுரையில் மு.தளையசிங்கம் ஏ.ஜே கனகரந்தினா, செந்தில்நாதன், சிவகுமாரன், சில்லையூர் செல்வராசா,காவலூர் ராசதுரை, எஸ்.பொன்னுத்துரை, கைலாசபதி, கா.சிவத்தம்பி பற்றி அவர்களது விமர்சன முறைமையில் உள்ள ஆழமற்ற தன்மையையும் இலக்கியம் மீதான நுண்ணுணர்வுப் போதாமையையும் காரசாரமாகக் குறிப்பிட்டு விவாதிக்கிறார். அதற்கான உதாரணங்களை அந்தந்த எழுத்தாளர்கள் எழுதியவற்றோடு சேர்ந்து வாசித்தால் இன்னும் திறப்புகள் கிடைக்கும். இதில் கவனிக்க வேண்டியது மு.தளையசிங்கம் அவர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டி எழுதிய கட்டுரைகளை ‘தினகரன்’வெளியிட மறுத்ததுதான். தங்களுக்கு எதிராக எழும் தர்க்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையிலே கைலாசபதியும் சிவத்தம்பியும் இருந்திருக்கிறார்கள். இதனால் தான் மு.தளையசிங்கம் கல்விமட்டங்களில் உயர்பதவியில் இருக்கும் பேராசிரியர்களை ‘துரைமார்கள்’ என்று அழைத்துச் சீண்டிப் பார்க்கிறார். சமூக மட்டத்தில் தங்களுக்கு இருக்கும் கௌரவம், எழுத்துலகில் தாம் தான் சிறந்த சிந்தனைவாதிகள் என்பதை அடுத்த தலைமுறை அவர்களின் போதாமையைச் சுட்டிக்காட்டி விவாதிக்கும்போது அல்லது உடைக்கும்போது அந்தக் கருத்துகளை அடியோடு ஒலிக்காமல் செய்யும் பாசிஸ நடவடிக்கைகளைத்தான் செய்திருக்கிறார்கள். இந்த வராலாறுகளை விளங்கிக்கொள்ளாமல் கைலாசபதியையும், சிவத்தம்பியையும் தூக்கிப்பிடிப்பவர்கள் நம் சூழலில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவ்வாறு இன்று பேசுபவர்கள் ஈழத்துக்கு என்று விமர்சன மரபு இன்னும் இருக்கிறது என்று அப்பாவித்தனமாக நம்புகிறார்கள். ( எது? தன் கருத்துகளுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டு விவாதிக்க வருவதை முற்றாக நிராகரிப்பதா ஈழத்து விமர்சன மரபு?)

ஆரம்பத்தில் முற்போக்கு எழுத்தாளர் அணியில் எஸ்.பொன்னுத்துரை இருந்தாலும், அவரது தனிப்பட்ட தேடல் என்பது வெறுமே வர்க்கம் , சாதீயம் சார்ந்த ஒன்றல்ல. யாழ்பாண இடை நிலை வர்க்கத்து அகவுலகத்தை நுண்மையாகக் காட்சிப் படுத்துவதில் அவர் எழுத்து வென்ற ஒன்று. காமம்  x வாழ்க்கை சார்ந்து அவர் எழுதியவை முற்போக்கு எழுத்தாளர்களால் கடுமையாக மறுக்கப்பட்டன. இவை மஞ்சள் பத்திரிகை வகையான எழுத்து என்று அன்றைய காலப்பகுதியில் ஒதுக்கப்பட்டது. இதனால் சீண்டப்பட்ட எஸ்.பொ முற்போக்கு முகாமிலிருந்து வெளியேறி நற்போக்கு முகாமை உருவாக்கினார். உண்மையில் இந்த முகாம் முற்போக்கு எழுத்தாளர்களைச் சீண்டிப்பார்ப்பதிலே அதித நேரத்தைச் செலவிட்டது. தன்னைக் கலகக்காரனாகக் காட்டிக்கொள்ள சிகரெட் பிடிக்கும் புகைப்படத்தைத் தன் நாவல் பின்னட்டையில் எல்லாம் பிரசுரித்தார். இதுவோர் ஆரோக்கியமான விவாதமாக இருக்காமல் இலக்கியப் பூசலாகவே அதிகம் இருந்ததாக மு.தளையசிங்கம் குறிப்பிடுகிறார். அதேநேரம் முற்போக்கு அணியின் தலைமைப் பொறுப்பை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் ஒதுக்கப்பட்டதாலே எஸ்.பொ விலகினார்; அதுவே அந்தரங்க காரணமாக இருக்கிறது – என்று மு.தளையசிங்கம் “ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி” நூலில் குறிப்பிடுகிறார். இன்று எஸ்.பொவை திரும்பி வாசிக்கும்போது இயல்புவாத அழகியலில் ஈழ இலக்கியத்தின் முன்னோடி என்று புரிந்துகொள்ள இயலும். “சடங்கு” நாவலில் காட்டும் சித்திரம் ஓர் தேர்ந்த ஆணின் உளவியல் மடிப்பின் கீறல்கள். இருந்தபோதும் ‘நனவிடை தோய்தல்’ என்ற ஆக்கமே எஸ்.பொவினது குறிப்பிடத்தக்க ஆக்கம் என்பது என் எண்ணம். அன்றைய யாழ்ப்பாணத்தின் நுணுக்கமான சித்திரமாக இன்றும் மீள்வாசிப்புச் செய்ய இயல்கிறது.

இந்த முற்போக்கு, நற்போக்கு குழுமோதலின் போது மு.தளையசிங்கம் மெய்யுள் எனும் கோட்பாட்டை முன்வைக்கிறார். மெய்யுளை ஓர் கோட்பாடாக முன்வைத்தாலும் உண்மையில் அது இலக்கியத்தை, வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கான ஓர் சிந்தனை முறைமைதான் என்றே கொள்ள வேண்டியுள்ளது. முற்போக்கு முகாமில் இருக்கும் எழுத்தாளர்களையும் சரி, நற்போக்கு அணியில் எஸ்.பொவுடன் இருந்த எழுத்தாளர்களையும் சரி தனக்குரிய இலக்கியப் பார்வையில் மிகக்கறாராகவே அணுகினார் தளையசிங்கம். அன்றைய காலத்தில் இவ்விரண்டு முகாங்களை விமர்சிக்கவும் புதிய சிந்தனையை உருவாக்கவும் மு.தளையசிங்கம் வைத்த கோணத்தை மூன்றாம் கோணம் எனலாம். உண்மையில் முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற பெயரை தங்களுக்குத் தாங்களே சூட்டிக்கொண்டாலும் அது உண்மையில் ‘முற்போக்கு’ எழுத்துத்தானா? என்பதை மு.த விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார். அவை அவ்வாறு இருப்பதில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். (முற்போக்கும், கலாச்சாரமும் பத்து வருடத்துக்கு ஒருமுறை மாறிக்கொண்டு இருக்கும் ஒன்றல்லவா!) எஸ்.பொன்னுத்துரையின் எழுத்துப் பாணியைத் தழுவி எழுதியவர்களும் முற்போக்கு அணியில் இருந்ததை ஆதாரத்துடன் முன்வைக்கிறார். கிட்டத்தட்ட எல்லாமே ஒன்றுதான் என்ற பார்வையும் பல இடங்களில் மு.தளையசிங்கதிடன் வெளிப்படச் செய்கின்றது.  கடுமையாகவே க.கைலாசபதியை நிராகரிக்கும் விவாதங்களை இன்று வாசிக்கும்போது அதன் எதிர்கால இலக்கிய நிலைமை எப்படி இருக்கும் என்ற தளையசிங்கத்தின் ஊகங்கள் இன்று நிஜமாகி இருப்பதை வியப்புடன் நோக்க முடிகிறது.

“கைலாசபதியின் இலக்கியப் பார்வை ஆழம்தான். ஆரம்பத்தில் விரிந்து தெரிந்த ஒரு தரமான இலக்கியப்பார்வை ‘முற்போக்கு’ இலக்கியப் பார்வையாக மாறியபோது தன்னை ஓர் குறுகிய கட்சிக்குள்ளும் கொள்கைக்குள்ளும் திணிந்துத் தானும் குறுகிக்கொண்டது, பழைய தமிழ் இலக்கிய அறிவுமட்டுமல்ல மற்றைய நாட்டு இலக்கியங்களைப் பற்றித் தெரிந்திருக்கும் ஓர் ஒப்பிலக்கியப் பார்வையும் தேவை என்ற நல்ல கொள்கையும் அதனால் தேயத் தொடங்கிவிட்டது. பின்பு பின்னர் வந்த பிஞ்சுகளிடம் பின்பு  அகப்பட்ட போது தேய மட்டும் செய்யவில்லை தேய்ந்து சிதைந்து கோராமாகியும் விட்டது.” –  என்று குறிப்பிடும் தளையசிங்கத்தின் வரிகள் இன்றும் உண்மையுடனேயே ஈழ இலக்கியப்பரப்பில் இருக்கிறது.

பகீதரன் ஈழத்து முற்போக்கு எழுத்துக்களை வாசித்துவிட்டு, “தமிழ்நாட்டில் எழுதப்படும் இலக்கியங்களை விட  பத்துவருடங்கள் பின்தங்கி இருக்கிறது ஈழத்து இலக்கியம்” –  என்ற ரீதியில் ஒரு கருத்தை வெளியிட்டார். இது அப்போது பெரும் சீண்டலை அனைத்துத் தரப்பு ஈழத்து எழுத்தாளர்களுக்கு இடையில் உருவாக்கியது. அதற்கான எதிர்வினைகள் வழமைபோல் சாணிபூசும் மொழியில் இருந்தன. மு.தளையசிங்கம் கூட “பகீதரனுக்குப் பைத்தியம்” என்றார்.

ஏறக்குறைய இதே காலப்பகுதியில் வண்ணநிலவன் ஈழத்து முற்போக்கு எழுத்துகள் என்று அடையாளப்படுத்தப்படும் எழுத்துகளை வாசித்துவிட்டு மிகவும் நொந்துபோய் “ஈழத்துமுற்போக்கு எழுத்துகளுக்கு பூச்சிமருந்து அடிக்கவேண்டும்”-  என்றார். மேலும் ‘கோட்பாடுகளால் பாலைவனமாக்கப்பட்டது’ ஈழ இலக்கியம் என்றார். இன்று ஈழ இலக்கிய வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது பகீதரன், வண்ணநிலவன் சொன்னவை எத்தகைய கூர்மையான கூற்று என்பதை அரசியல் பூசல்களுக்கு அப்பால் சிந்திக்கும் திறமையான இலக்கிய வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்.

இலங்கையில் வசிக்கும் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள், தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது பாரிய கனத்துடன் எழுந்தது. தமிழரசுக்கட்சி  சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தது. மு.பொ மற்றும் சு.வில்வரத்தினம் இணைந்து எழுதிய மு.தளையசிங்கத்தின் ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’ நூலின் முன்னுரையில் “சமஷ்டி ஆட்சியின் தேவையை இடதுசாரிகள் உணர்ந்தபோதும், பலவித அரசியல் காரணங்களுக்காக அவர்கள் அதைப் புறக்கணித்து ஒற்றை ஆட்சி தேசியம் பேசித் தமிழ் மக்களின் ஏகோபித்த குரலை நசுக்கினர். இதுவே பொதுப் பின்னணி” என்று குறிப்பிடுகிறார்கள். அதனால்தான் இன முரண்பாடுகள் உச்சத்தை நோக்கி நகர்ந்த போதும் கம்னியூனிஸ்ட் கட்சிக்குள் அகப்பட்டிருந்த முற்போக்கு எழுத்தாளர்களாலும் கைலாசபதியாலும் இனப்பிரச்சினை சார்ந்து தங்களது உள்ளார்ந்த உண்மையை வெளியே வைக்க முடியாமல் போனது. இவர்கள் கட்சிக்காக இனமுரண்பாடுகள் நோக்கி தங்கள் தேடலை விரிக்காமல், மீண்டும் ஆலைத்தொழிலாளி x முதலாளி பிரச்சினை என்று எழுதிக்கொண்டிருந்தார்கள். அப்போதையை இனவுணர்ச்சியின் வீரியம் மக்களிடம் அதிகம் பரவத் தொடங்க, அது சார்ந்த தெளிவான பார்வையை இடதுசாரிகளால் முன்வைக்க இயலாமல் செல்ல அவர்களின் இடம் சரிந்தது என்பது வரலாற்றின் ஒருப்பக்க உண்மையாக இருக்கிறது.

இனப்பிரச்சினையின் வீரியம் கூடிப் போர்ச்சூழல் உருவாகிய ஈழ  இலக்கியத்தின் காலப்பகுதியின் பேசுபொருளை எழுச்சியூட்டல், துயரைப்பாடுதல் என்ற இரண்டு தனிப்பெரும் பிரிவாக பிரிக்கலாம். நட்சத்திரன் செவ்விந்தியன்,  அஸ்வகோஸ், எஸ்.போஸ் போன்ற அன்றைய கால இளைஞர்கள் இன்னுமொரு புதுத்தலைமுறையாக எழுந்து வந்தார்கள். இவர்கள் எழுதிய கவிதைகள் நேரடியாக உணர்வுகளைப் பேசுவதோடு எளிமையான சொற்களுடன் நின்றுவிடக்கூடியன. புதிய அழகியல் சாத்தியங்களைத் திறந்துவிடக்கூடியன. அவ்வாறேஇந்தக் கவிதைகளை அப்படியே இன்றைய தளத்திலிருந்து மதிப்பிட முடியும். இவர்கள் எழுதிய ஆக்கங்கள் எவ்வாறு விமர்சனத்துக்கு உள்ளாகின என்று தேடினால் இப்போதிருக்கும் தளத்திலிருந்து பார்க்க துன்பமே கிட்டுகிறது.

உதாரணத்துக்கு மு.பொன்னம்பலத்தின் விமர்சனங்கள் சிலவற்றைப் நோக்குவது மேலும் சில புரிதல்களுக்கு இட்டுச்செல்லும்.

1

சோலைக்கிளியின் கவிதைப் பாணி பற்றி ஏற்கனவே விரிவாக எழுதப்பட்டுள்ளதால் அது பற்றி விவபரிக்கத் தேவையில்லை. அவரது கவிதைகள்அஃறிணைப் பொருட்களை மனித குணாம்சங்களுக்குள் இட்டு உருவகப்படுத்துவதும்இத்தகைய  உருவகப்படுத்தல்களால் ஏற்படுத்தப்படும் ஒருவகைப் படிமமும் மினுக்கமுற வெளிவருவன. சில நன்றாக வந்து வாய்ப்பதும் உண்டு. சில எல்லாவற்றையும் கெடுத்து விடுவதும் உண்டு. அண்மையில் இவர் எழுதிய கவிதை ஒன்றுக்கு வைத்த தலைப்பு வறுக்க வறுக்க மணக்கும் பூச்சிஎன்பதாகும். சில பூச்சிகளைத் தொட்டாலே வயிற்றைக் குமட்டும் நாற்றம் அவ்விடத்தை விட்டு அகல அதிக நேரம் எடுப்பதுண்டு. அப்படிப்பட்ட பூச்சிகளை வறுத்தால் என்னவாய் இருக்கும் எம் நிலைஎனக்கு வயிற்றைக் குமட்டும் அந்த நாற்றத்தின் மீட்டலால் அக்கவிதையைப் படிக்கக் கஷ்டமாய் இருந்ததோடு படித்த பின்பும் அந்த நாற்றந்தான் கவிதைகளின் கருத்தை மீறி மிதப்பதாய் இருந்தது. சுடச்சுட வெண்மை தரும் சங்கு” என்று பழைய கவிஞர்கள் சொன்னதில் இருந்த பொருத்தப்பாட்டை புதிதாய் கவிதை பண்ணும் நாம் யோசிக்க வேண்டாமா?

மு.பொன்னம்பலம்-

மு.பொவுக்கு படித்தவுடன் குமட்டல் கொடுத்த சோலைக்கிளியின் அந்தக் கவிதை இதுதான்.

வறுக்க வறுக்க மணக்கும் பூச்சி

என்னை வறுக்க வறுக்க

நாணர் முறுகி மணப்பேன்.

கருகேன்!

ஒரு சின்னப் பூச்சி நான்.

இந்த உலகத்தில் மிதந்து

இயன்றால் வானத்தை எட்டுவது,

இல்லையென்றால் போவதென்ற

பெரிய கங்கணங்கள் கட்டாத

ஒரு சின்னப் பூச்சி நான்!

சூரியனைத் திருப்பி என் பக்கம் வைக்க

எனக்கும் ஆசையுண்டு, ஆனாலும்

பிறரின் ஒளியை நான் ருசிக்க விரும்பவில்லை.

என் வீட்டிற்குள் விளக்கும் பிறர் இல்லத்துள் இருளுமைன்று,

நான்–

இந்த உலகத்தில் மிதக்க ஆசையில்லை.

எண் சிறகில் இந்த உலகத்தை ஒட்டி

எங்கோ பறந்து கொண்டுபோய் வைத்து

குப்பை கூழன்களை அகற்றி,

மிகச் சுத்தமான ஒரு நிலத்தை

அதில் சிரித்த முகங்களுடன் மிருகங்களை

ஆக்கிப் பார்க்க ஓர் ஆசையுணர்டு, அதற்காக

இந்த உலகத்தில் மிதக்கின்ற ஒரு பூச்சி!

இன்னும் ஒட்டவில்லை எண் சிறகில் உலகம்.

நான் மிதக்க மிதக்க

வெயில் இறைத்து வெயில் இறைத்து

எண் நீர்நிலைகள் வற்ற

முறுக வறுக்கிறது, ஏனோ தெரியவில்லை,

நானும் கருகவில்லை!

சோலைக்கிளி- (எக்ஸில் இதழ் 4-இல் வெளியாகியது)

solai
சோலைக்கிளி

இங்கு மு.பொ சோலைக்கிளி எழுதியது கவிதை அல்ல என்று மறுப்பதில் நமக்கு பிரச்சினை இல்லை. மு.பொ சொல்லவருவதை விளங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால், மனித மன விவகாரங்களைப் படிமமாக பயன்படுத்தும் போது, இங்கு வரும் பூச்சி போல அது ஏன் கலை ரீதியாக வெல்கிறது அல்லது தோற்கிறது என்பதை புறவயமாக விளக்கமுடியவில்லை மு.பொவால். இங்குவரும் பூச்சி ஏன் இக்கவிதையில் சரியான படிமமாக உருவாகவில்லை என்பதைத் தன்தரப்பில் தெளிவாகச் சொல்ல முடிவதில்லை. அதற்கு அவர் கொடுக்கும் விளக்கம் “வயிற்றைக் குமட்டும் அந்த நாற்றத்தின் மீட்டலால் அக்கவிதையைப் படிக்கக் கஷ்டமாய் இருந்ததோடு படித்த பின்பும் அந்த நாற்றந்தான் கவிதை களின் கருத்தை மீறி மிதப்பதாய் இருந்தது” இதைச் சொல்ல ஓர் இலக்கிய விமர்சகர் தேவையா என்ன?

2

நாம் சில அவதானிப்புகளை முன்வைக்க வேண்டும். அப்போதுதான் 90களில் மிதந்துள்ள கவிதைப் போக்குகளை அவதானிக்கவும் இனி வரப்போகும் ஆரோக்கியமான போக்குகளைக் கணக்கிலெடுத்துப் பேணவும் முடியும்.

90களில் வெளிவந்த வாசுதேவனின் வாழ்ந்து வருதல்”நட்சத்திரன் செவ்விந்தியனின் வசந்தம் 91’, ஜபாரின் தரப்பட்டுள்ள அவகாசம்‘, ஓட்டமாவடி அறபாத்தின் எரிநெருப்பிலிருந்த”,சுபத் திரனின் ‘சுபத்திரன் கவிதைகள்‘, அஸ்வகோஸின் வனத்தின் அழைப்பு ஆகிய தொகுதிகளின் கவிதைகள் ஏற்கனவே நான் குறிப்பிட்ட பாணிக் கவிதைகளில் இருந்து வேறுபட்டவையாகவும்இனிவரும் போக்குகளை நோக்கிய உணர்கொம்புடையனவாகவும் உள்ளனவென்றால் மிகைப்படுத்தலாகாது.

93இல் வெளியான வாசுதேவனின் வாழ்ந்து வருதல்’ தொகுப்பில் உள்ள கவிதைகள் இப்புதிய போக்கின் வருகைக்கு அடிக்கல் லிட்டு பாதை அமைத்தவையாக நிற்கின்றன. ஒரு மாலையும் நானும் என்னும் அவரின் கவிதை பின்வருமாறு ஆரம்பிக்கிறது.

வானம் இருளடைந்து காற்றுபலமாய் வீசும் இந்த மாலையில் நான் பெருக்கெடுக்கிறேன். நான் நிம்மதி இழக்கிறேன். துயரில் நெஞ்சு கசிகிறது. காரணம்புரியாது அடிவற்றில் கத்திகள் பாய்கிறது.

படிமம்உருவகம்உவமை என்று எந்தவித ஆரவாரமும் இல்லாமல் சாதாரணமாக பெய்யப்படும் வார்த்தைகளால் கவிதை ஊற்றெடுப்பதை இக்கவிதையில் காண்கிறோம். நான் பெருக்கெடுக்கிறேன்’, ‘காரணம் புரியாது அடிவயிற்றில் கத்திகள் பாய்கின்றன’ –  என்னும் வார்த்தைப் பிரயோகங்கள் அத்தகையன.

-மு.பொன்னம்பலம்-

மு.பொவுக்குப் படிமம், உருவகம், உள்ளடக்கம் என்பவையெல்லாம் ஆரவாரமாகத்தான் தெரிகின்றன. கவிதையில் ஏன் படிமங்கள் தேவை, அவை எப்படி கனவுத் தன்மையாக விரிகின்றன என்பதையெல்லாம் அவரால் விளக்கவும் முடியவில்லை. கடைசிவரை மு.பொவினால் படிமம், உருவகம், உவமை இல்லாமல் எப்படி கவிதை சிருஷ்டிகரம் கொள்கிறது என்பதை விளக்கவே முடியவில்லை. கவிதையில் வாசகர் கவனிக்க மறந்த கோணம், அது அரூபமாக உணர்த்தும் அகவய உணர்வை புறவயமாக எழுத்தில் கொண்டுவருவது. விவரிப்பதே விமர்சகனின் கடமை.; அவையெல்லாம் முபொவுக்கு கிஞ்சித்தும் வரவில்லை என்பதை இங்கே நோக்கலாம்.

***

இக்கட்டுரையில் ஏன் தொடர்ச்சியாக மு.பொவை மட்டுமே கருத்தில் கொள்கிறீர்கள்?  வேறு விமர்சகர்கள் இல்லையா என்று கேட்கலாம்.

கைலாசபதி ஏன் ஓர் விமர்சகர் இல்லை என்பதை மேலே குறிப்பிட்டாகிவிட்டது. அவர் சமூகத்தை அளக்க இலக்கியத்தை பயன்படுத்த முனைந்தாரரே தவிர இலக்கிய விமர்சகர் இல்லை. மு.தளையசிங்கம்  கைலாசபதி உட்பட அந்தக்காலத்தில் இருந்த விமர்சக விக்கிரங்களளின் போதாமைகளை தெளிவாகச் சுட்டிக்காட்டி துகிலுரித்துவிட்டார். ஆனால், அவரின் தம்பியான மு. பொன்னம்பலம் பற்றி யாரும் அதிகம் பேசியதில்லை. அதேநேரம் மு.பொன்னம்பலம் ஈழத்து விமர்சன மரபில் தனக்கு ஓர் இடம் இருப்பதாக இன்னும் நம்புகிறார். ஆக அவர் நம்புகின்ற அவரது தகுதி மீதான விமர்சனங்களை முன்வைக்கக்கூடிய சுநதந்திரமும் எங்களுக்கு கிடைக்கிறது.

மு.பொவுக்கு ஒரு மனக்குறை இன்றுவரை உள்ளது. தமிழியல் வெளியீடாக வந்த யதார்த்தமும் ஆர்மார்த்தமும்’ என்கிற தனதுபுத்தகம் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை என்பதுதான் அது. உண்மையில் மு.பொவின் குறிப்பிடத்தக்க புத்தகங்களில் ஒன்று அது மட்டும்தான் என்பதே என் எண்ணம். ஆனால்அப்புத்தகத்திலுள்ள “மஹாகவி, நீலவாணன்” பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள்கூட புறவயமான தர்க்கங்களுடன் நின்றுவிடுகின்றன. இன்று திரும்பிப் பார்க்கும்போது மேலதிக புரிதல்களுக்குச் செல்லவே இயலாத தன்மையுடன் வறட்டு மொழியுடனும் அக்கட்டுரைகள் மேற்கோள்களுடனும் அமைந்திருக்கின்றன என்பது துக்கரமானதே. மு.பொன்னம்பலம் ஈழத்து இலக்கியத்தில் யார் யார் பங்குபற்றினார்கள் என்ற வரலாற்று ஆவணப்படுத்தல் வேலையைத்தான் செய்தாரே தவிர, ஒரு படைப்பை ஆழமாகச் சென்று தொட்டு இன்னுமொரு புதிய கோணத்தை வாசகருக்குக் காட்டிவிடும் விமர்சனத்தைச் செய்யவே இயலவில்லை. முயன்று முயன்று பார்த்து தோல்வியுற்றவர்.

இன்னுமொரு மு.பொன்னம்பலத்தின் கூற்றை சுட்டவேண்டியுள்ளது. கீழே பார்க்கவும்.

“50களில் பகீரதன்ஈழத்து எழுத்தாளர்கள் தமிழ்நாட்டைவிட பத்து வருடங்கள் பிந்தியுள்ளார்கள் என்று கூறியபோது அது அவரது அறியாமை”  என நாம் சாடினோம். இன்று அதேவகைக்குரல் ஜெயமோகன் மூலம் மீண்டும் ஒலிக்கிறது. நமது சிறுகதைகள் தமிழ்நாட்டுச் சிறுகதைகளைவிட பின்தங்கி நிற்பதாகவும்ஒற்றைப் பரிமாணமுடைய தட்டையானவையாக இருப்பதாகவும் அவர்  கூறியுள்ளார். இக்கூற்றைப் பகீரதனுடையதுபோல நாம் ஒதுக்கிவிட முடியாது. இதில் கணிசமான உண்மை உண்டென்பதை நாம் ஒப்புக்கொள்வது எமது இலக்கிய ஆரோக்கியத்துக்கு அவசியம்”.

 –மு.பொன்னம்பலம்-

ஜெயமோகனின் கூற்றை பலமாக ஆமோதிக்கும் மு.பொன்னம்பலம் இன்று முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களுடன் உலாவருகிறார். இதை ஜெயமோகனின் “பூச்சிமருந்து”விவாதத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

சு.வில்வரத்தினம் கவிதைகளின் படைப்புலகம் சார்ந்து ‘அகமெரியும் சந்தம்’ என்ற   கட்டுரையை ஜெயமோகன் ‘காலம்’ இதழ்-27 இல் எழுதியிருந்தார். அதில் வில்வரத்தினத்தை விதந்தோதி, தாழ்த்தி சில பொதுமைப்படுதல்களால் ஈழக் கவிஞர்கள் பற்றி ஜெயமோகன் தரக்குறைவாக ஏதோ சொல்லிவிட்டார் என்ற ரீதியில் மு.பொன்னம்பலம் அதற்கு எதிர்வினையாக காலம் இதழ் 28 & 29 இல் ‘அகமெரியும் சந்தத்தில்’ அடியோடும் நிராகரிப்பு” என்று ஒரு கட்டுரை எழுதினார். (கட்டுரையின் ஆரம்பம் இப்படி ஆரம்பிக்கும் : ஜெயமோகன் ஈழத்துக் கவிஞர் சு.வில்லரத்தினம் ‘அகமெரியும் சந்தனம்’ என்ற தலைப்பில் காலம்-27 இதழில் எழுதிய விமர்சனத்தை வாசித்தபோது மகிழ்ச்சி அடைந்தேன். காரணம் எந்தத் தமிழ்நாட்டு எழுத்தாளனும் ஈழத்துக் கவிஞர் ஒருவரை விமர்சன ரீதியாக ஆய்வுசெய்து பாராட்டி எழுதியதில்லை) இன்று மு.பொவின் அக்கட்டுரையை வாசிக்கும்போது வழமைபோல் மேற்கோள்களுடனும் அகவய உணர்வுகளுக்குள் நுழையாத புறவய தர்க்கங்களுடன் எழுதப்பட்ட கட்டுரையாக இருப்பதையே சலிப்புடன் நோக்க இயலுகிறது. அதில் அடுத்த தலைமுறையில் எக்கசக்கமான கவிகள் உண்டு,  அவற்றை ஜெயமோகன் கருத்தில் கொள்ளவில்லை என்ற ரீதியில் குறிப்பிடுகிறார்.

குறிப்பிடுவதோடு நில்லாமல் ஒரு பட்டியலையும் கொடுக்கிறார்:  கருணாகரன்,  யேசுராசா,  புஸ்பராஜன்,  அரவிந்தன்,  சிவசேகரம்,  சோலைக்கிளி, வாசுதேவன், ஜபார், நிலாந்தன், செழியன், முல்லைகமால், அமரதாஸ்,என்.கே .மகாலிங்கம்,   பலாகணேசன்,  சிவரமணி, ஊர்வசி,  சங்கரி,  ஒளவை,  ஆழியாள், ……….. என்று அந்தப்பட்டியல் நீள்கிறது.  அதற்கு ஜெயமோகன் நகைச்சுவையாக ஓர் பதில் பொதுவெளியில் அளித்தார். (மு.பொ குறிப்பிடும் கவிஞார்களில் பொருட்படுத்தத்தக்கவர்களின் கவிதைகளை ஜெயமோகன் மு.பொன்னம்பலத்தைவிட ஆழத்துக்குச் என்று எழுதியிருக்கிறார் என்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது). அதாவது, ஜெயமோகன் பட்டியலின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மு.பொ அனைவரையும் ஒரே பாயில் அமரரைவைப்பதில் இருக்கும் சமரசத்தையே வண்ணநிலவனின் பாணியில் – “அத்தனை கவிகள் நாட்டில் இருப்பின் பூச்சிமருந்து அடிக்கவேண்டும்” –  என்ற ரீதியில் நகைச்சுவையாகச் சீண்டும் தன்மையில் –  குறிப்பிட்டு இருந்தார்.

மு பொன்னம்பலம்
மு பொன்னம்பலம்

அதற்கு முன்னரும் இதேவிடயத்தை ஜெயமோகன் தனது  பல்வேறு கட்டுரைகளிலும் உரையிலும்  இதைப் பலதடவைகள்  முன்னமே திரும்பத் திரும்ப குறிப்பிட்டுள்ளார். ஆனால், திடீரென்று இப்போதுதான் ஓர் உரையில் இதைக் கண்டுபிடித்து நமது அன்பர்கள் பேசியிருக்கிறார்கள். நம்மவர்களுக்கு எப்போதுமே எல்லாமே கொஞ்சம் பிந்தித்தான் தெரியவரும். இது கொஞ்சம் அதிகம்தான்; சரி இருக்கட்டும். ஒரு நகைச்சுவையையும் அதற்குள்ளிருக்கும் மெலிதான சீண்டலையும் புரிந்துகொள்ளக்கூட முடியாமல் இங்கிருந்து எழும் எதிர்வினைகளைப் பார்க்க வெட்கமாகவும் சலிப்பாகவுமே இருக்கிறது.

இங்கே வசைகளைக் கொட்டிக்கொண்டிருப்பவர்கள் தாங்களும் இலக்கியவாதிகள் தான் என்று நினைக்கிறார்கள். சிலர்  வருடத்துக்கு ஒரு கதை என்ற பேரில் சிலவற்றையும்,விமர்சனம் என்ற பெயரில் கதைகளைச் சுருங்க மீண்டும் சொல்பவர்களாகவும் இருப்பவர்கள். சிலர் அதுவுமல்ல.

ஒரு காலத்தில் எஸ்.பொ “புலம்பெயர் இலக்கியம் தான் தமிழ் இலக்கியத்தை இனிமேல் ஆளும்” –  என்று சொன்னபோது சுந்தர ராமசாமி ஓர் எதிர்வினை வைக்க, இதேபோல் ஓர் கூச்சல் எழுந்தது. வெறுமனே சிற்றிதழ்களின் எண்ணிக்கையை வைத்து சொல்லப்பட்ட மிக மேம்போக்கான உணர்ச்சிக் கூற்று எஸ்.பொவினது என்பது பிற்பாடு தானாகவே தெரியவந்தது.

இன்று சாதாரணமாக ஓர் ஈழ இலக்கிய இதழைப் புரட்டினாலே அதனைத் தெரிந்து கொள்ளலாம். காரணம் நம் சூழலில் இலக்கியச் செயல்பாடு என்பது பலருக்கு ஆர்மார்த்தமானதாகஇல்லை. நிறைவேற்ற முடியாத அரசியல் ஆதங்கங்களைக் கரைக்கக் காகிதங்கள் தேவையாக இருந்தன என்றளவிலே இன்று ஈழத்தின் இலக்கிய சிற்றிதழ்களை “நூலகம்” தளத்தில் திரும்பிப் பார்க்கும்போது புரிந்துகொள்ள இயல்கிறது. இன்று புலம்பெயர் இதழ்கள் ஒன்று இரண்டு தான். அவற்றில்கூட எழுத முடியாதவர்களின் வெற்றுக் கூச்சலாகத்தான் இன்றைய இலக்கியத்திற்கு சம்பந்தம் இல்லாத கூக்குரல்களை நோக்க வேண்டியிருக்கிறது.

பட்டியலின் தேவையையும், இலக்கியத் தராதரத்தைப் பற்றிபேசும் போது இங்கே இந்தக் கூச்சல்கள் எப்பவும் ஒலிப்பவைதான். ஜெயமோகன் ஈழக் கவிஞர்களில் பலரை நிராகரிக்கிறார் என்றால், இங்கிருப்பவர்கள் “இல்லை ஜெயமோகன் சொல்பவர்களைத் தவிர்த்தும் இங்கே கவிகள் உண்டு,  இவர்களை இன்ன இன்ன கோணத்தில் பொருட்படுத்த வேண்டும்” –  என்று ஒரு கட்டுரையை முன்வைக்க வேண்டும்;.  உரையாடலைத் திறக்க வேண்டும். இந்தச் சீண்டலுக்கு பின்னுள்ளதும் அதுதான். ஆனால், அதைச் செய்ய இங்கிருப்பவர்களுக்கு வாசிப்பும் இல்லை, இலக்கிய  அறிவும் இல்லை. வெறுமனே வசைகளைத்தான் வழமைபோல் வைக்க இயல்கிறது. முகநூல் விருப்பக் குறிக்காக மலிவான உரையாடல்களைப் பெருக்க முடிகிறது. அவர்களால் முடிந்தது அவ்வளவு தான். ஆனால், உண்மையில் ஈழ இலக்கியம் சார்ந்து வாசிப்புள்ளவர்களால் அப்படியான கட்டுரையை எழுத முடியுமா என்பதும் சந்தேகமே. அங்கும் தீர்க்கமான பட்டியல் உருவாகும்; ஏனென்றால் உண்மையில்  அப்படி இலக்கியத் தரத்துடன் கவிதைகள் எழுதக் கூடியவர்கள் இங்கிருக்க வேண்டுமல்லவா. இங்கே தொடர்புகள் மூலம் ஓரளவுக்கு அறியக்கூடிய இதழ்களில் திரும்பத் திரும்ப ஒரே படிமத்தை வளைத்து வளைத்து மூக்குச் சிந்தவைப்பவைதானே கவிதைகள் என்ற பெயரில் அதிகமாக எழுதப்படுகின்றன.

“பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்” என்ற தொகுப்பை எம்.ஏ. நுஃமான் மற்றும் அ.யேசுராசா தொகுத்த போது சில எதிர்வினைகள் வரத்தான் செய்தன. ஆனாலும் அத்தொகுப்பிலுள்ள கவிதைகள் இன்றும் ஈழத்துக் கவிதைகளின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை தரக்கூடியன. அவ்வாறானதொரு சிறந்த பட்டியலிட இன்றும் இங்கே எவரும் இல்லை என்பது நம் சோகோல்ட்-கவிகளுக்கு வரப்பிரசாதம் தான்.

ஈழத்து எழுத்தாளர்கள் தமக்குள்ளே முந்தைய தலைமுறை ஈழத்து எழுத்தாளர்கள் பற்றியோ, சக எழுத்தாளர்கள் பற்றியோ என்ன விரிவாக எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்தால் வசைகளையும் மேம்போக்கான விமர்சங்களையும் தான் நோக்க இயல்கிறது.

இன்று, ஈழ இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளான மு.தளையசிங்கம்,  கா.சிவத்தம்பி,  எஸ்.பொன்னுத்துரை,  அ.முத்துலிங்கம்,  சு.வில்வரத்தினம் , சேரன்,  தெளிவத்தை ஜோசப் உடற்பட ஏராளமானோர் பற்றி மிகவிரிவாக எழுதியவர் ஒருவராக ஜெயமோகனே இருக்கிறார். ஆழியாள், அனார், பஹீமா ஜகான் போன்றவர்களின் கவிதைகளைப் பற்றி எழுதிய‘மறுபக்கத்தின் குரல்கள்’ அளவுக்குக் கூட பெண்-கவிகள் சார்ந்து இன்னும் விரிவான கட்டுரைகள் ஈழத்திலிருந்து எழுதப்படாமலே இருக்கின்றன. இங்கே சோம்பேறிகளும்வறட்டுப்பிடிவாதம் கொண்டவர்களும்தான் அதிகம். முன்முடிவுகளுடன் வாசிப்பு எதுவும் இன்றி வசைகளை உமிழ்பவர்கள்; அல்லது நுண்ணுணர்வுகளால் கனவை விரித்து வாசித்துப் புரிந்துகொள்ள முடியாதவர்கள்.

இலக்கியம் சார்ந்த அறிவுச்செயற்பாடு என்பது ஈழ இலக்கியப் பரப்பில் கிஞ்சித்தும் இல்லை என்பதே வரலாற்று உண்மையாக இருக்கிறது. இலக்கியம் என்பது தனி அறிவுத்துறையாகவும், அறிதல் முறையாகவும் பார்ப்பதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் சொல்லவேண்டியிருக்கிறது. இந்த உரையாடல்களை அடித்துத் திறக்கும்போது மூர்க்கமான அரசியல் விவாதங்கள் அவற்றை விழுங்கிவிடுகின்றன.

ஈழத்தில் இருக்கும் வாசகர்களும் சரி, எழுத்தாளர்களும் சரி அநேகமானவர்கள் கருத்துத்தளத்தில் செயல்படுபவர்கள். எந்தத் தடிமனான புத்தகத்தைக் கொடுத்தாலும் அதைச் சுருக்கி ஒற்றைத் வரியில் புரிந்துகொள்ள முயல்பவர்கள். தங்களது அறிவுக்கு எட்டிய வகையில் ஓர் கருத்துநிலையை உருவாக்கி அதுதான் இந்தப்புத்தகம் சொல்லவருவதாக உருட்டியும் பிரட்டியும் நினைப்பவர்கள். இதையே புனைவு படைப்புகளுக்குள்ளும் செலுத்திப் பார்க்கிறார்கள். இறுதிவரை கவித்துவ தருணங்களையோ, சொல்லாமல் உணர்த்தும் உணர்வுகளையோ அகவயமாக புரிந்து கொள்ள இயலாதவர்கள். எனவே அவர்களால் இலக்கியத்தைப் புரிந்துகொள்ளவே இயல்வதில்லை. இறுதிவரை அரசியல் சரி, பிழை நிலைகளுக்குள்ளே முடங்கிவிடுகிறார்கள். நேரடியாகப் பேசும் கருத்து நிலைகளையே இலக்கியமாக நினைக்கிறார்கள். பெரும் துன்பம் தான்.

பார்த்தீனியம், ஜெப்பான பேக்கரி போன்றவை வெறும் அரசியல் காரணக்களுக்கா உடனடியாகப் பேசப்படுகின்றன. இலக்கிய தரத்தை அடைந்ததைப் போல பாவனை செய்து பிரகாசிக்கின்றன.  பின்னர் அந்தப் பிரகாசம் காலப்போக்கில் தானாகவே மங்கிச் செல்கின்றது. நல் இலக்கிய வாசகர்கள் இலக்கியம் என்பதற்குள்ளே அவற்றை பொருட்படுத்தப்  போவதில்லை. சிலகாலம் கழித்து எந்த இலக்கிய விவாதங்களிலும் அவை நினைவு கூறப்படப் போவதும் இல்லை. ஒற்றைப்படையான அரசியல் கருத்துகளை மிகையுணர்ச்சி கூட்டி எழுதப்பட்டு நாவலாகவே சிருஷ்டிகம் கொள்ளாதவை எப்படி நினைவில் நிக்கும். நாவல் என்ற விரிவுத் தன்மைக்குள் நுழையவே நுழையாதவை அவை. ஆனால், இவற்றை அவர்கள் ஈழத்தின் மானுட சாட்சியமாக முன் வைக்கிறார்கள். ஓர் புனைவை மானுடத்தின் சாட்சியமாக முன்வைப்பதில் இருக்கும் அடிப்படை வழுவே எழுத்தாளர்களுக்கும் சேர்த்து பலருக்கும் புரிவதில்லை. புனைவு என்பதே எழுத்தாளர் தன் தத்தளிப்பு சார்ந்து கண்டடையை எழுதும் அந்தரங்க வெளி. தன் உள உள்ளுணர்வு, தேடல், புரிதல், போதாமை ஊடக எழுந்துவருவது. அதில் கண்டடைவதை வாசகருக்கு உணர்தினாலே அந்த ஆக்கம் இலக்கிய ரீதியில் வெல்கிறது. அதுவொரு புனைவு என்ற ரீதயில் அதை தனி அறிதல் துறையாக எடுத்துக்கொண்டு விவாதிப்பதும் மதிப்பிடுவதுமே இலக்கியத்தில் செல்லுபடியாகும். அதை வரலாற்றின் உண்மையாக ஒருபோதும் வைக்க இயலாது. அது என்ன அரசியலை பேசினாலும் அதன் எல்லை மட்டுப்படுத்தப்பட்டதே. மற்றமையின் மற்றையை தரப்பை தன் உள்ளுணர்வாலும் ஆழ் உள்ளதாலும் நெருங்கிச் சென்று கனவை விரித்து எழுத முடியாதவையாக தொக்கி நிக்கும் ஆக்கங்களே பின்போர் சூழலில் ஈழத்தில் அதிகம் வெளியாகின்றன. அதனை விமர்சிக்கும் விமர்சகர்களும் வரலாற்றுத் தளத்தில் நின்று உண்மையைத் தேடுவதையே விமர்சனமாக நினைக்கிறார்கள் (இங்கு உண்மை என்று குறிப்பிடுவது தரிசனத்தை அல்ல) இதுவோர் படைப்பை அணுகும்முறை அல்ல என்பதை திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியுள்ளது. இந்த அரசியல் தளத்திலே விவாதம் செய்பவர்களுக்கு காசியானந்தன் தான் பெரும்கவியாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

ஈழத்தில் இந்த இலக்கிய நுண்ணுணர்வு இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் தொடர்ச்சியாக இலக்கியம் சார்ந்து எழுதி கருத்துக்களை உருவாக்கி இலக்கிய இயக்கமாகவோ,சிந்தனைக்கூடமாக ஆக்கியவர்கள் என்று ஈழத்தில் எவரும் இல்லாமல் போனதே என்ற முடிவுக்கே இன்றைய தலைமுறை (இலக்கியப் பற்றும், தேடலும் உள்ளவர்கள்) வரவேண்டியுள்ளது. அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி போன்றவர்களிடம்கூட இந்தக் குறைபாட்டைச் சுட்ட முடியும். கைலாசபதி, சிவத்தம்பியின் மார்சிய விமர்சன முறையைக்கூட அவர்களின் மாணவர்கள் வளர்த்தெடுத்தார்களா என்ன? அந்தச் சிந்தனைப் பள்ளியிலிருந்து யார் யார் எழுத வந்தார்கள்?, எழுதுகிறார்கள்? ஈழத்திலிருந்து இவர்கள் (விமர்சன மரபு உள்ளது என்பவர்கள்) எவரைச் சுட்ட முடியும் என்றால் மௌனத்தைத்தான் பதிலாகச் சொல்ல வேண்டியுள்ளது.

மு.தளையசிங்கத்தின் அசல் சிந்தனைகளை விரிவாக்கியவர்கள் ஈழத்தில் யார்? இங்கே அதை அடுத்த தலைமுறையிடம் எடுத்துச்சென்று ஒரு சிந்தனை முறையாக வளர்த்தெடுத்தவர்கள் யார்? என்.கே மாகாலிங்கம் போன்றவர்களால் கூட அதைச் செய்ய முடியவில்லை. வெறுமனே மொழிபெயர்ப்பாளர்களாக மட்டுமே சுருங்க முடிந்தது. நம்மவர்களுக்கு அவற்றைப் புரிந்துகொள்ள ஆற்றலும் இல்லை, வளர்த்து ஓயாமல் எழுதியும் விவாதித்தும் அதனை ஓர் அறிவியக்கமாக எடுத்துச் செல்ல திறனும் கிடையாது என்பதையே வெட்கத்தைவிட்டுச் சொல்லவேண்டியுள்ளது.

இலக்கியம் சார்ந்த கருத்துருவாக்கங்களும், சிந்தனை முறைகளும் ஈழத்தில் உருவாகவே இல்லை (விதிவிலக்கு மு.தளையசிங்கம்). அதற்கு வாசிப்புப் பின்புலம் கொண்ட சிந்தனைவாதிகளும் இல்லை. வெறுமே வாய்சாடல் தான். அதன் பிரதிபலன்களைத் தான் இன்று பார்க்கிறோம். (மு.தலையசிங்கம் முன்னமே இதனை எதிர்வுகூறியிருந்தார்!)

இவர்களிடம் சென்று அடுத்த தலைமுறை யதார்த்தவாதத்தின் அழகியலுக்கும், இயல்புவாதத்தின் அழகியலுக்கும் இடையிலான வேறுபாட்டைப் பற்றி பேச இயலுமா? தேவகாந்தனின் அழகியல் இயல்புவாதத்திற்குள் வருமா என்று விவாதிக்க முடியுமா என்ன? நாவலுக்கும் நெடுங்கதைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஈழ மூத்த எழுத்தாளர்கள் முகநூலில் விமர்சனம் என்ற பெயரில் “ஆறாவது அத்தியாயம் படித்தவுடனே புத்தகத்தை மூடிவைத்துவிட்டேன்; ‘நெஞ்சு கனக்குகிறது’ என்ற வகையில் டெம்பிளேட் பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் நம் முன்னோர்களின் இலக்கிய அறிவும் தெளிவும். கஷ்டம் தான்.

anojan
அனோஜன் பாலகிருஷ்ணன்

அதேபோல் நம் சூழலில் நடக்கும் இலக்கியக்கூட்டங்களில் இலக்கியம் சார்ந்து ஏதும் பேசப்படுகிறதா என்றால் அபூர்வமே, எல்லாமே அலுப்பூட்டக்கூடிய அரசியல் தான். சிலகாலம் முதல் ஓர் அமைப்பு கனடாவில் நடத்திய தேவகாந்தனின் “கலிங்கு” நாவல் விமர்சனக் கூட்டத்தை காணொளிப்பதிவாக இணையத்தில் பார்த்தேன். ஒரு விமர்சகர் தேவகாந்தனின் சிந்தனை என்பது “காவியகால கீழைத்தேயத் தத்துவங்கள் பண்பாடு மற்றும் சிந்தனைகளின் பின்னணியில் வளர்த்தெடுக்கப்பட்ட நவீனகால தமிழ் படைப்பாளிக்கு உரிய தனித்துவமான சிந்தனை” என்றார். நானும் நிமிர்ந்து முள்ளந்தண்டு சிலிர்க்கப் புதிதாக ஏதோ சொல்லப் போகிறார் என்று அமர்ந்தேன். ஆனால், அந்தச் சிந்தனை எப்படி படைப்பில் வெளிப்படுகிறது? அந்தச் சிந்தனையை எப்படி வரையறுக்கலாம் என்று ஒரு சுருக்கமான விளக்கத்தைக் கூட கொடுக்க முடியவில்லை. இறுதிவரை கமராவை பார்த்து வெட்கப்பட்டுக்கொண்டே பேச முடிந்தது அவரால்; என்னோடு சேர்ந்து இன்னும் ஏழு நபர்கள்தான் அந்தக் காணொளிப்பதிவைப் இன்றுவரை பார்த்திருக்கிறார்கள். இப்படியான மேம்போக்கான உரையாடல்களைப் பேசித்திரிந்தால் எப்படி அடுத்த தலைமுறை இவர்களிடம் இருந்து எதையாவது கற்றுக்கொள்ள முடியும்? உரைகளைக் கேட்க வருவார்கள்?

புலம்பெயர் தேசங்களில் ஆங்காங்கே பத்துபேர் கொண்ட இலக்கியக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. இளைய தலைமுறையே வர அஞ்சும் வகையில் சலிப்பூட்டக்கூடிய உரையாடல்களே நடைபெறுகின்றன. தத்தமது புத்தகங்களைத் தாங்களே பணம் கொடுத்து அச்சடித்துப் பத்துப்பத்துப் புத்தகமாக நான்கு நாடுகளில் வெளியீடு செய்தால் போதும் என்பதுதான் இங்கிருக்கக் கூடியவர்களின் இலக்கிய இலட்சியம். ஏதாவது ஒரு சீண்டல் நடந்தால் கண்டன அறிக்கை எழுதிவிட்டு முகநூலில் கையெழுத்து வைக்க ஆள்பிடிப்பது. இதைத்தான் இலக்கிய இயக்கமாக நினைக்கிறார்கள். சமகால இலக்கியம் சார்ந்து இவர்களிடம் என்ன வாசிப்பும் தெளிவும் இருக்கிறது என்பதை நினைக்கவே கடும் வேடிக்கையாக இருக்கிறது. கூறுவது போல ‘வாழையடி வாழையாக என் வாசகர்கள் வருவார்கள் அவர்களுக்காகவே எழுதுகிறேன்’ –  என்பதற்கு இணங்க ஈழ இலக்கியம் சார்ந்த சலிப்பில் இருந்துவிடுபட்டு எழுத எதிர்காலம் நோக்கியே சிந்திக்க வேண்டியுள்ளது. அவர்களுக்காகவே இக்கட்டுரையை எழுத வேண்டியுள்ளது. ஒரு மறுப்பின் குரல் இருக்கத்தான் வேண்டும். இல்லையெனில் வரப்போகிறவர்களுக்கு இவர்கள் சொல்லும் வசைகளும் திரிபுகளுமே வரலாறாகிவிடும். இலக்கிய இயக்கத்தில் நம் முன்னோடிகளில் இருந்து கருத்துக்களைப் பெற்று நம் சிந்தனையை பெருக்கிக் கடந்து செல்லவேண்டும். ஆனால், ஈழத்தில் அடுத்த தலைமுறை முன்னைய தலைமுறை மிதித்துத்தான் செல்ல வேண்டியுள்ளது என்பது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், வேறு வழியில்லை.

அனோஜன் பாலகிருஷ்ணன்-

கா.சிவத்தம்பி, தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைபட்டினமும் பட்டணமும்
அடுத்த கட்டுரைஇந்தக் காலையின் ஒளி