பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா

bun

பங்கர் ராய்

நாலந்தா பல்கலைக்கழகம், பண்டைய இந்தியாவின் பெருமிதங்களுள் ஒன்று.  1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அங்கே இறையியல், தத்துவம், மொழியியல், மருத்துவம் போன்ற பலதுறைகளில் கல்வி கற்பிக்கப்பட்டது. மத்திய ஆசிய நாடுகள் மற்றும் அண்டை நாடுகளில் இருந்தெல்லாம், ஆசிரியர்களும், மாணவர்களும் இங்கே வந்து, இருந்து கல்வி பயிற்றுவித்து/ பயின்று செல்லும் அளவுக்கு புகழ் பெற்று விளங்கியது.

ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள டிலோனியா என்னும் சிற்றூரில், வெறும் பாதக் கல்லூரி என்னும் பெயரில் ஒரு கல்லூரி இயங்கி வருகிறது. இங்கும், உலகின் 81 நாடுகளில் இருந்து மாணவிகள் வந்து, ஆறு மாதம் தங்கிப் பயில்கிறார்கள். சமத்துவம், ஊரகத் தன்னிறைவு, இணைந்து செயல்படுதல், எளிமை போன்ற காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றும் இந்தக் கல்லூரி, கல்வி, நீர் மேலாண்மை, சுகாதாரம், சக்தி போன்ற தளங்களில் 1972 ஆம் ஆண்டு முதல் செயலாற்றிவருகிறது. இந்தக் கல்லூரியில் படிப்பவர்களுக்கு டிகிரிகளோ / சான்றிதழ்களோ வழங்கப்படுவதில்லை. வாழ்க்கைக்கான செயல்முறைக் கல்வி மட்டுமே.

1945 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 2 ஆம் தேதி, ஒரு உயர் மத்திய வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவர் சஞ்ஜித் ராய் என்னும் பங்கர் ராய். (மூத்த அண்ணன் பெயர் சங்கர் என்பதால், தம்பி, பங்கர் என பெங்காலி வழக்கபடி பட்டப் பெயர் வைத்து அழைக்கப்பட்டார் என்கிறது ஒரு கதை). உயர்தட்டு மக்கள் பொறாமைப்படும்படியான இளமைக்காலம் அவருடையது. டேராடூனின் புகழ் பெற்ற டூன் பள்ளியில் கல்வி. பின்னர், தில்லி செயிண்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரியில் மேற்படிப்பு. மூன்றாண்டுகள், இந்தியா நாட்டின் ஸ்க்வாஷ் விளையாட்டின் தேசிய சேம்பியன். உலக ஸ்க்வாஷ் போட்டிகளில் இந்தியாவின் பிரதிநிதி.. ஐ.ஏ.எஸ்/ஐ.எஃப்.எஸ் அல்லது மேல்நாட்டில் படிப்பு /வேலை என ஒரு வெற்றிகரமான எதிர்காலம் அவருக்காகக் காத்திருக்கையில், சித்தார்த்தன் புத்தன் ஆனது போல ஒரு தருணம் அவர் வாழ்க்கையில் குறுக்கிட்டது.

1967 ஆம் ஆண்டு, அவர் கல்லூரி முடிக்கையில், பீஹாரில் பெரும் பஞ்சம் வந்தது. பீஹாருக்கு வந்து, நிவாரணப்பணிகளில் உதவுமாறு படித்த இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் ஜெயப்ரகாஷ் நாராயண். அதை ஏற்று, கிராமங்களைப் பார்க்கும் ஆர்வத்தில், பீஹாருக்குச் சென்றார் பங்கர் ராய். அங்கே தங்கியிருந்த சில வாரங்களில், நெஞ்சை உருக்கும் பசியையும், மரணங்களையும் நேரில் கண்டார். வீடு திரும்பிய பங்கர் ராய், தன் அம்மாவிடம், தான் மேலே படிக்கப்போவதில்லை என்று அறிவித்தார். வேறு என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்ட அன்னையிடம், தான் ஒரு கிராமத்தில் வசிக்கப்போகிறேன் என்று சொன்னார். என்ன வேலை செய்யப்போகிறாய் எனக் கேட்க, கிணறு வெட்டும் கூலி வேலை எனப் பதிலளித்தார். அதிர்ச்சியில் வாயடைத்துப் போன அவர், அதன் பின் பல ஆண்டுகள் பங்கரிடம் பேசவில்லை.

கிட்டத் தட்ட 5 ஆண்டுகள், ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீர் பகுதியில், கிணறு தோண்டுபவராக உடல் உழைப்பில் ஈடுபட்டார். பின்னார், 1972 ஆம் ஆண்டு, டிலோனியா கிராமத்துக்கு வந்தார். அங்கே அவரைக் கண்ட ஊர்ப் பெரியவர்கள், இவரை, போலீஸ் தேடும் குற்றவாளியாக அல்லது படிப்பில் தோல்வியடைந்த அல்லது வீட்டை விட்டுச் சண்டை போட்டுக் கொண்டு வந்துவிட்ட ஒரு ஆளாகத் தான் பார்த்தார்கள். கிராமத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று சொன்ன பங்கர் அவர்களுக்குப் புதிதாகத் தெரிந்தார்.

கிராமத்துக்காக ஒரு கல்லூரி துவங்கவேண்டும் என்னும் அவரது எண்ணத்தை அவர், அந்த ஊர்ப் பெரியவர்களிடம் சொன்னார். ஒருவர், ‘செய்.. ஆனால், நகரத்தில் இருந்து படித்தவர்களைக் கொண்டு வராதே’, எனச் சொன்னார் ஒரு முதியவர். அந்த அறிவுரையின் பின்புலத்திலிருந்து உருவாகத் துவங்கியது, சமூக நலன் மற்றும் ஆராய்ச்சி நிலையம் (Social Welfare and Research Centre (SWRC)). இது பின்னர் வெறும்பாதக் கல்லூரியாகப் பரிணமித்தது.

இந்த முயற்சியைத் துவங்கும்போதே, அவர், நிபுணத்துவம் (professionalism) என்பதைப் புதிதாக வரையறுத்தார். நிபுணர் என்பவர், ஒரு தொழிலில், திறனும், நம்பிக்கையும் உடையவராக இருக்கவேண்டும் என்பது அவர் வரையறை. அவரது வரையறையில், நிலத்தடி நீரோட்டம் பார்த்துச் சொல்பவர் நிபுணர். பிரசவம் பார்க்கும் கிராமத்து மருத்துவச்சி, பல் நோய் நீக்குபவர், குயவர், நெசவாளி, உழவர் என அனைவரும் நிபுணர்களே. இவர்களை இணைத்து, ஊரக மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் முயற்சிகள் துவங்கப்பட்டன.

மெல்ல உருவாகத் துவங்கிய வெறும் பாதக் கல்லூரிக்கான கட்டிடத்தை உள்ளூர் கட்டிடக் கலைஞர்களே கட்டினார்கள். கட்டிடத்தின் மாடியை, நீர்க்கசிவு இல்லாமல் செய்ய பெண்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு உள்ளூர் ரகசியத் தொழில் நுட்பம் உபயோகிக்கப்பட்டது, கட்டி முடிந்து 35 ஆண்டுகளாக, நீர்க்கசிவு ஏற்படவேயில்லை என்பதே அதன் வெற்றி, என்கிறார் பங்கர். இந்தக் கட்டிடம், சிறந்தக் கட்டிடக் கலைக்கான ‘ஆகா கான் விருது’, பெற்றது.  ஆனால், இந்தக் கட்டிடத்தை உள்ளூர் மக்கள்தான் கட்டினார்களா என சந்தேகித்தது ஆகா கான் நிறுவனம். விருதையும், 50 ஆயிரம் டாலர் விருதுப்பணத்தையும் மறுத்து, திருப்பி அனுப்பி விட்டார் பங்கர்.

வெறும் பாதக் கல்லூரி, நீர், கல்வி, சுகாதாரம், சூரிய ஒளிச் சக்தி, கைவினைப் பொருட்கள் எனப் பல தளங்களில் பணியாற்றி வருகிறது.

  1. நீர்:

நீர் ஆதாரங்களைப் பெருக்க மூன்று வழிகள் முன்னெடுக்கப்பட்டன.  மழை நீர் சேகரிப்பு, சிறு அணைகள் கட்டுதல் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுதல்.  மழை நீர் சேகரிப்பு மூலம், 18 மாநிலங்களில், 50 கோடி லிட்டர் நீர் சேகரிக்கும் கட்டமைப்புகளை அமைத்துள்ளார்கள். இது கிட்டத்தட்ட 20 லட்சம் மக்களுக்குப் பயன் தரக்கூடியதாகும்.  20 கிராமங்களுக்குப் பயன் தரும் வகையில், 4 அணைகளைக் கட்டியுள்ளார்கள். இவற்றில், 6.5 கோடி லிட்டர் நீர் சேமிக்கப்படுகிறது.  ஆழ்துளைக் கிணறுகளைப் பெரும்பாலும் பள்ளிகளிலும், தாழ்த்தப்பட்ட குடியிருப்புகளிலும் அமைத்துள்ளார்கள். இந்த ஆழ்துளைக் கிணறுகளைப் பராமரிக்கும் பயிற்சிகளை உருவாக்கி, இதுவரை, 1700 ஆழ்துளைக் கிணறு பராமரிக்கும் பயிற்சி பெற்ற தாழ்த்தப்பட்ட பெண் பொறியாளர்களை, வெறும் பாதக் கல்லூரி உருவாக்கியுள்ளது.

அஜ்மீர் மாவட்டத்தில் சாம்பார் என்னும் ஏரி உள்ளது. 230 சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்திருக்கும் இந்த ஏரியின் நீரில் உப்பு இருக்கிறது. இதிலிருந்து, வருடம் 2 லட்சம் டன் உப்பு தயாரிக்கப்படுகிறது. இதனால், இதன் அருகில் உள்ள கிராமங்களில், நல்ல குடிநீர் கிடைப்பது கடினம். சூரிய ஒளியில் இயங்கும்11 நீர்ச் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து, இங்குள்ள மக்களுக்கு, குடிநீர் வழங்கப்படுகிறது. இந்தச் சுத்திகரிப்பு நிலையங்கள், அதி நவீன சவ்வூடு முறையில் இயங்குகின்றன. இவற்றைப் பராமரிப்பதற்காக, உள்ளூரைச் சேர்ந்த ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்ப்ட்டு, அவருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே, ஒரு முறை, இந்த நீர்ச் சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தப்பட்டவுடன், அந்தக் கிராமமே அதன் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது.

இது தவிர, கிராமப்புறத்தில் உள்ள நீராதாரங்கள் பற்றிய தகவல்களை எளிதில் அணுகக் கூடிய அளவில், தகவல்கள் திரட்டப்பட்டு, ஒரு செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. உள்ளூரில் கிடைக்கும் நீரின் தரத்தை அறிந்து கொள்ள உள்ளூர்ப் பெண்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு, அதற்கான வசதிகள் கிராம அளவில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.  இது www.neerjaal.org என்னும் வலைத்தளம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

உபதேசத்தை ஊரோடு நிறுத்திவிடாமல், வெறும்பாதக் கல்லூரி, தன் கல்லூரி வளாகத்திலும் இதைக் கடைபிடிக்கிறது. கல்லூரியில் கூரைகள் மற்றும் நிலங்கள் வழியாக, மிகக் குறைவாகப் (ராஜஸ்தானில் மழை அளவு இந்தியாவிலேயே மிகக் குறைவு) பெய்யும் மழையை,  4 லட்சம் லிட்டர் கொள்ள்ளவு கொண்ட நிலத்தடி நீர் கிடங்கில் சேமிக்கிறது. நான்கு ஆண்டுகள் தொடர்ந்து மழை பெய்யவில்லையெனினும், நீர்ப் பற்றாக்குறை இருக்காது என்கிறார் பங்கர் ராய். ராஜஸ்தானின் வரலாற்றில், நான்கு ஆண்டுகளுக்கு மேல் மழை பொய்த்ததில்லை – எனவே நான்காண்டுகளுக்கான நீர் சேமிப்பு.

2.கல்வி:

கிராமங்களில், ஏழை, தலித் குழந்தைகள் குறிப்பாகப் பெண்குழந்தைகளுக்கு கற்கும் வாய்ப்புகள் இருப்பதில்லை. ஏனெனில், பகலில், தங்கள் பெற்றோருக்குத் துணையாக ஆடு மாடு மேய்த்தல், உழவுத் தொழில் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். இதற்கு ஒரு தீர்வாக, சூரிய ஒளி விளக்குகளில் இயங்கும் இரவுப்பள்ளிகள் துவங்கப்பட்டன. கிட்டத்தட்ட 700 கிராமங்களில், 6 லிருந்து 14 வயது வரையிலான குழந்தைகளுக்காக இந்தப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. பங்கரின் வார்த்தைகளில், ‘இந்தப் பள்ளிகள், மாணவர்களின் வசதிக்காக இயங்குகின்றன; ஆசிரியரின் வசதிக்காக அல்ல’.

இந்தப் பள்ளிகளில், வாழ்க்கைக் கல்வி கற்றுக் கொடுக்கப்டுகின்றன.  அடிப்படை அறிவியல், வாழ்க்கைக்கான சுகாதாரம், மக்களாட்சி முறை, கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு போன்றவை. குழந்தைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவரை கிட்டத் தட்ட 75000 குழந்தைகள் இப்பள்ளிகளில் பயின்றிருக்கிறார்கள். அவர்களில், 4000 பேருக்கும் மேல், இந்தப் பள்ளி முடிந்ததும், வழக்கமான பள்ளிகளில் சேர்ந்து கல்லூரி வரையில் படிக்கச் சென்றிருக்கிறார்கள். அவர்களில் 1250 பேர் பெண்கள். இவர்கள் அனைவருமே ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த இரவுப்பள்ளிகள் அனைத்துமே, இங்கே பயிலும் மாணவி/மாணவர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இதன் நிர்வாகம், தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களில், ஒருவர் பிரதமராகவும், மற்றும் சிலர் பல்வேறு துறைகளைப் பார்த்துக் கொள்ளும் மந்திரிகளாகவும் பொறுப்புக்களை ஏற்று, தங்கள் பள்ளிகளின் பல்வேறு தேவைகளைக் கவனித்து, நிர்வகிக்கிறார்கள். இது மக்களாட்சியின் அடிப்படைகளை மாணவர்களுக்குச் செயல்வழியாகக் கற்றுத் தருகிறது.

கிராமங்களில், ஏழைப் பெண்கள், தங்கள் பிரசவம் முடிந்தவுடன், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால், அவர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல், வீட்டு வருமானம் குறைகிறது. இது அவர்களை மேலும் ஏழமையில் தள்ளி விடுகிறது. இதைத் தவிர்க்க, 60 பால்வாடிகள் நடத்தப் படுகின்றன. இதனால், வருடம் 2000 குடும்பங்கள் பயனடைகின்றன.

  1. சுகாதாரம்:

சுகாதாரத்துக்கான முதல் படி, பெண்கள் மாதவிலக்கு பற்றிய கல்வியில் இருந்து துவங்குகிறது. அந்த சமயத்தில் பின்பற்றப் படவேண்டிய சுகாதார முறைகள், மாதவிலக்கு தொடர்பான மூட நம்பிக்கைகள், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து வெறும்பாதக் கல்லூரியின் செயல்கள் துவங்குகின்றன.

ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் இரண்டு பெண்கள், ஒருவர், சுகாதார நலப் பணியாளர் (Healthcare worker); இன்னொருவர், மருத்துவச்சி (mid-wife), என இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்றுவிக்கப் படுகிறார்கள்

அவர்கள் தங்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட கிராமங்களில், பெண்களுக்கான பயிற்சிகள், பாலியல் கல்வி முதலியவற்றை நடத்துகிறார்கள். பெண் கருவுறும் காலங்களில், இந்தியா முழுவதும் ஏற்படும் ரத்தச் சோகை நோயைத் தடுக்க, உள்ளூரில் கிடைக்கும் விலை மலிவான, ஊட்டச் சத்துக்கள் நிறைந்த பொருட்களைக் கொண்டு, ‘அம்ரித் சூரணம்’, என்னும் ஒரு ஊட்டச் சத்து, அவர்களுக்குத் தரப்படுகிறது.

பெண்கள் கருவுற்ற உடனேயே, அவர்களைப் பற்றிய தகவ்ல்களை, சுகதார நலப் பணியாளர் பதிந்து கொள்கிறார். துவக்கத்தில், இது காகிதப் பதிவேடுகளில் பதியப் பட்டது. சமீபத்தில், ஸ்கோல் ஃபவுண்டேஷன் (skoll Foundation) என்னும் உலக சமூக முனைப்பு முதலீட்டு நிறுவனம் வழியாக, ‘மெடிக் மொபைல்’, என்னும் கை பேசி வழி செயலி வழியாக இதை நிர்வகிக்கத் துவங்கியிருக்கிறார்கள். மிக அடிப்படை வசதிகள் கொண்ட மொபைல் போன் / ஸ்மார்ட் போன் வழியாக, கருவுற்ற மகளிர் பற்றிய அடிப்படைத் தகவல்களைப் பதிந்த உடன், அவை சேமிக்கப்பட்டு விடுகின்றன. பின்னர், கருவுற்ற மகளிர் செய்து கொள்ள வேண்டிய சோதனைக்கான சமயம் வந்தவுடன், அவர்களுக்கு நினைவூட்டும் வகையில் செய்திகள் செல்கின்றன. அச்செய்திகள், கருவுற்ற மகளிர், சுகாதார நலப் பணியாளர் மற்றும் மருத்துவச்சி  என அனைவருக்கும் செல்வதால், கருவுற்ற பெண், சரியான நேரத்தில் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பின், பரிசோதனையின் முடிவுகளும் தொலைபேசியில் பதியப்படுகின்றன. இதன் மூலம், ஒரு கிராமத்துக்குச் செல்லாமலேயே, கருவுற்ற பெண்ணின் உடல் நிலையை, ஒரு மையம் கவனிக்க ஏதுவாகிறது. இந்த்த் தகவல் தொழில் நுட்பம், உயர் மருத்துவ உதவியை, பெரும் மக்கள் கூட்டத்துக்கு மிகக் குறைந்த விலையில் அளிக்க உதவுகிறது.  இந்த செயலி, ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க கண்டங்களில், 23 நாடுகளில், 14000 சுகாதாரப்பணியாளர்கள் மூலமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்தப் பணியாளர்கள், அரசின் மருத்துவமனைகள் மற்றும் செவிலியர்களுடன் இணைந்து பணியாற்றி, சமூகத்தின் விளிம்பில் இருக்கும் ஏழைப் பெண்களுக்குத் தேவையான, நல்ல மருத்துவ வசதிகள் பெற உதவுகிறார்கள்.

இதன் தலைமையகமாக, டிலோனியா வளாகத்தில் பத்து படுக்கைகள் கொண்ட ஒரு  மருத்துவமனையும், மருத்துவர்களும் உள்ளார்கள். வருடம் கிட்டத்தட்ட 7000 நோயாளிகள் இங்கே சிகிச்சை பெறுகிறார்கள்.

  1. சூரிய சக்தியும் அன்னையரும்சோலார் மாமாஸ் (Solar Mamas):

ராஜஸ்தானில் பெண்கள் இரண்டு விஷயங்களுக்காகத் தம் வாழ்வின் பெரும்பகுதியைச் செலவிடுகிறார்கள். ஒன்று நீர். இன்னொன்று விறகு.  பல மைல் தூரம் சென்று, விறகைத் தம் தலையில் சுமந்து வருகிறார்கள். பின்னர், வீட்டுக்குள் இருக்கும் அடுப்பில் சமைக்கத் துவங்குகிறார்கள். பெரும்பாலும், புகை போக்கி வசதிகள் இல்லாத சிறுவீடுகளில் இவர்கள் வசிப்பதால், இது, பெண்களின் உடல்நலத்துக்குப் பெரும் எதிரியாக உள்ளது. அது போக, இரவில் மின் வசதிகள் இல்லாததால், பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.

இதைத் தவிர்க்க, சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகளயும், சூரிய ஒளிச் சமையல் அடுப்புகளையும் ஏழைகளுக்கு வழங்க முடிவெடுத்தது வெறும்பாதக் கல்லூரி. இதை அவர்கள் வெறுமனே, இலவசங்கள் வழங்கும் ஒரு நடவடிக்கையாகத் துவங்கவில்லை. மின்சாரமே எட்டாத, எட்டவே வாய்ப்பில்லாத, சிறு குக்கிராமங்களை முதலில் தேர்ந்தெடுத்தார்கள். அந்த ஊரில் இருக்கும், படிக்காத, முதிர்ந்த ஒரு பெண்மணியை, டிலோனியா அழைத்து வந்து, அவருக்கு சூரிய ஒளிச் செல்களை இணைத்து, சூரிய ஒளி விளக்குகளைத் தயாரிக்கும் பயிற்சியை அளித்தார்கள். அதன் பின்னர், அந்தக் கிராமத்துக்குத் தேவையான, சோலார் பேனல்களையும், சூரிய விளக்குகளையும் இலவசமாக அளித்து அனுப்பி வைத்தார்கள். அங்கே செல்லும் அந்தப் பெண்மணி, அந்தக் கிராமத்தின் எல்லா வீடுகளிலும் சூரிய ஒளி பேனல்களை வீட்டுக் கூரையில் அல்லது நல்லபடியாக சூரிய ஒளி வரும் இடத்தில் நிறுவுவார், வீடுகளுக்கு சூரிய ஒளி விளக்குகள், கைபேசி சார்ஜ் செய்யும் ப்ளக்குகள் முதலியவற்றைப் பொருத்தித் தருவார்.

வெறும்பாதக் கல்லூரியில், சூரிய ஒளி பேனல்களைத் தயாரித்தல், பொருத்துதல் போன்ற பயிற்சிகளை அளிப்பவர் 8 ஆம் வகுப்பு வரையே படித்துள்ள உள்ளூர் கோவில் பூசாரி.  இதற்காகப் பயிற்சி பெற, துவக்கத்தில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து, அது வரை ஊரை விட்டே வெளியேறியிராத, படிக்காத பெண்மணிகள் வந்தார்கள். ஒருவர் பேசும் மொழி, இன்னொருவருக்குப் புரிவது கடினம். ஆனல், ஆறு மாதங்கள் நடக்கும் இந்த பயிற்சி, செயல் வழிக் கல்வி என்பதால், மொழி என்பது பெரும் தடையாக இல்லை. பயிற்சி முறைகள், மொழி என்னும் ஊடகத்தைத் திட்டமிட்டுத் தவிர்த்து படிக்காத மக்களுக்குப் புரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

வந்த சில நாட்களில், நடக்கும் ஒன்றும் புரியாமல் விழிக்கும் இந்த வயதான பெண்மணிகள், ஆறு மாத இறுதியில், மிக எளிதாக, இந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டு விடுகிறார்கள். இந்தப்பயிற்சிக்கு ஏன் வயதான பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்னும் கேள்விக்கு, பங்கர் ராய் அளிக்கும் விளக்கம் மிகவும் சுவாரசியமாகவும், ஆழ்ந்த பொருள் கொண்டதாகவும் உள்ளது.

‘ஆண்களுக்குப் பயிற்சி அளித்தல் மிகக் கடினம். பொறுமையற்றவர்கள். பெரும் குறிக்கோள்களை நோக்கி நகரக் கூடியவர்கள். ஒரு டிகிரியை எதிர்பார்ப்பவர்கள். கிடைத்தவுடன், அருகில் உள்ள நகரத்துக்கு, அதை வைத்துத் தொழில் செய்யக் கிளம்பி விடுவார்கள். ஆனால், பெண்கள், அதிலும் வயதானவர்கள், தங்கள் சமூகத்துடன் வசிப்பவர்கள். எனவே அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி, சமூகத்துக்கு நீடித்து நிலைத்துப் பயன் தருகிறது’, என்பது அவரது உறுதியான நிலைப்பாடு.

முதலில் இந்தியாவின் பல மாநிலங்களில் துவங்கப்பட்ட இத்திட்டம், மெல்ல மெல்ல அருகில் உள்ள நாடுகளுக்குச் சென்றது. பின்னர், 2008 ஆம் ஆண்டு, இந்தப் பயிற்சி, இந்திய அரசின் வெளியுறவுத்துறையின் உதவியோடு, உலகின் பல வளரும் நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேற்கு, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் முதலில் இந்த முயற்சிகள் துவங்கின. இந்திய வெளியுறவுத்துறையின் உதவியோடு, மின்சார வசதிகள் சென்றடையாத, சென்றடைய வாய்ப்புகளே இல்லாத அத்துவானக் கிராமங்கள் முதலில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பின்னர், வெறும்பாதக் கல்லூரியிலிருந்து ஒருவர் சென்று, அங்கே, இருக்கும் வயதான பெண்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார். அவர் இந்தியா வந்து, ஆறு மாதங்கள் பயிற்சி பெற்றுத் திரும்புவதற்கான செலவுகளை, இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது. இந்த உதவி, இத்திட்டத்தின் மிக முக்கிய அங்கம் என்கிறார் பங்கர் ராய். இதன் பிண்ணனியில் ஒரு வரலாறு உள்ளது.

பங்கர் ராயின் பங்களிப்பை அறிந்த, ராஜீவ் காந்தி, அவரை, திட்டக் கமிஷனின் உறுப்பினராக நியமிக்கிறார்.  அங்கு பணியாற்றுகையில், அரசின் திட்டங்களில், சிவில் சமூக முன்னேற்றத்தில் ஈடுபட்டிருக்கும் உண்மையான தொண்டு நிறுவனங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்னும் ஒரு திட்டத்தை முன் வைக்கிறார். அரசின் திட்டங்களில் உள்ள நிதியை, அதிகாரத்தைப் பங்கிடுதை, யாரும் விரும்பவில்லை. ஆனால், ராஜீவ் காந்தி தலையிட்டு, இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செயல்படுத்த ஆனையிட்டார். இன்று அரசின் திட்டங்கள் பலவற்றிலும், உண்மையான சிவில் சமூகத் தொண்டு நிறுவனங்கள் பலவும் ஈடுபடுகின்றன. உதாரணமாக, அரவிந்த் கண் மருத்துவ நிறுவனம் போன்ற இலவசமாகச் செய்யும் கண் மருத்துவ அறுவை சிகிச்சைகளுக்கு இன்று அரசு மானியம் கொடுக்கிறது. இதன் மூலமாக, பொது மக்களுக்கு, மிகக் குறைந்த செலவில், தரமான சிகிச்சை கிடைக்க அரசு மருத்துவமனைகள் தவிர பிறவழிகள் திறக்கின்றன.

சமூக முன்னேற்றத்தில் இந்தத் திட்ட்த்தின் பங்களிப்பை அறிந்த சியரா லியோன், டான்சானியா போன்ற நாடுகள், தங்கள் நாட்டில், இந்த சூரிய ஒளிச் சக்தியைப் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கும் மையங்களை நிறுவியுள்ளன. இந்த மையங்கள் தற்போது, தங்கள் அருகில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பெண்களுக்கும் பயிற்சி அளிக்கின்றன.

இந்த நாடுகளில், இதுபோன்ற தொலைதூரக் கிராமங்களில், மண் எண்ணெய் போன்ற விளக்கு எரிக்க, சமைக்கத் தேவைப்படும் பொருட்களின் விலைகள், நகரங்களை விடப் பல மடங்கு அதிகம். எடுத்துக்காட்டாக, பெலைஸ் (Belize) என்னும் தென் அமெரிக்க நாட்டில், கிராமங்களில், மண் எண்ணெய் லிட்டர் 180 ரூபாய். இந்த விலை கொடுத்து வாங்க முடியாத குக்கிராமங்கள் இருளில் வாழ்கின்றன.

உலகெங்கும், சிறு கிராமங்களில் வாழும் ஏழைப் பெண்களின் நிலை ஒன்றுதான். பகல் முழுதும் உழைத்தல். மாலையில் உணவு சமைத்தல். இரவில், கணவனுக்கு பாலியல் கைப்பொருள். கல்வி பயிலவே முடியாத சூழல். வறுமை, மேலும் வறுமையை மட்டுமே உருவாக்கும் சூழல். சூரிய ஒளி விளக்குகள் திட்டம், நகர்களை விட்டு, தொலைவில், எந்த வசதிகளும் எட்டாத கிராமங்களுக்கு, முதல் நம்பிக்கையைக் கொண்டு வருகிறது. இரவில் விளக்குகள், கண் தெரிந்து சமைக்கவும், குழந்தைகள் படிக்கவும் உதவுகிறது. அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய பெட்ரோலிய எரிபொருள் தேவையைக் குறைக்கிறது. சூரிய ஒளி விளக்கு என்னும், ஏழைகளால், ஏழைகளுக்காக நடத்தப்படும் ஒரு குறுந்தொழில் இந்தக் குக்கிராமங்களில் துவங்குகிறது.

இதுவரை, உலகின் 81 நாடுகளில் (ஆப்பிரிக்கா (39), தென் அமெரிக்கா (19), ஆசியா (13), பசிப்ஃபிக் தீவுகள் (10)), 600 க்கும் மேற்பட்ட சோலார் மாமாக்கள் பயிற்சி பெற்றுச் சென்றிருக்கிறார்கள். உலகின் மிக ஏழ்மையான 18000 குடும்பங்கள் சூரிய ஒளி மூலம் வெளிச்சம் பெற்றிருக்கின்றன. இவற்றின் பொருளியல் பயன்களையும், பெண்களின் நிலை மாற்றத்தையும் வெறும் டாலர்களைக் கொண்டு அளந்து விட முடியாது. அதற்கான எடுத்துக்காட்டாக, ஜோர்டான் நாட்டில் இருந்து வந்த ரஃபேயாவின் கதை, இந்தக் காணொளியில் உள்ளது.

https://www.youtube.com/watch?v=XSjp4Tv3Wmc

இந்தத் திட்டத்தை, முதன் முதலில், ஆப்கானிஸ்தானில் செயல்படுத்த முயன்ற போது, வயதான பெண்மணியின் கணவர் அவர் மனைவியைத் தனியே அனுப்ப மறுத்து விட்டார். எனவே, பங்கர் அவர் கணவரையும் உடன் அழைத்து வந்து பயிற்சி அளித்தார். ஆப்கானிஸ்தானில் மட்டும் தற்போது 700 குக்கிராமங்கள் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்குகின்றன. அதற்கான மொத்த செலவு, பயிற்சி, பயணம் உட்பட, 1.5 லட்சம் டாலர். இது, ஆப்கானிஸ்தானின் இயங்கும் ஐ.நா சபையின் ஆலோசகர் ஒருவரின் வருட சம்பளம் என்கிறார் பங்கர். அந்த நாட்டில் மட்டுமே, அது போல, பல நூறு ஆலோசகர்கள் உள்ளார்கள் என்பதுதான் கசப்பான நிஜம்.

வெறும்பாதக் கல்லூரியின் எதிர்காலம்?

2008 ஆம் ஆண்டு, இந்திய அரசின் துணையோடு, சோலார் மாமாஸ் திட்டத்தை உலகின் ஏழை நாடுகளுக்கு எடுத்துச் செல்லத் துவங்கினார் பங்கர். 2011 ஆம் ஆண்டு, மேகன் ஃபலோன் என்னும் நியுசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நிர்வாகி, வெறும் பாதக்கல்லூரியின் தலைமை நிர்வாகியாக இணைந்துள்ளார். இவரின் கீழ், உலகளாவிய முயற்சிகள், ஊரக மக்களின் உற்பத்தியைச் சந்தைப் படுத்துதல் முதலியன துவங்கியுள்ளன. சோலார் மாமாஸ் திட்டம் மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது

வெறும்பாதக் கல்லூரியின் முயற்சிகள்  பல்வேறு திட்டங்களாகத் தெளிவாக வகுக்கப்பட்டு, Education, Enterprise and Empowerment by and for Rural women என்னும் குறிக்கோளை முன்வைத்துச் செயல்படுத்தத் துவங்கியுள்ளது.

உலகில் பாலினச் சமத்துவம் சரி செய்யப்படுமானால், அது மட்டுமே, உலகப் பொருளாதாரத்தை, 12 ட்ரில்லியன் டாலர் (இந்தியப் பொருளாதாரத்தை விட நான்கு மடங்கு அதிகம்) அளவுக்கு மேம்படுத்தும் என, மெக்கின்ஸி நிறுவனத்தின் ஆய்வு ஒன்று கூறுகிறது. ‘எனவே, ஏழை ஊரகப் பெண்களே, பணத்துக்குச் சிறந்த வருவாயை ஈட்டித் தரும் முதலீடு’, என்கிறார் ஃபெலோன்.

வெறும்பாதக் கல்லூரியில் பணிபுரியும் ஊழியர்களின் மாதச் சம்பளம் 7000 மட்டுமே.

சமத்துவம், தன்னிறைவு, இணைந்து செயல்படுதல், எளிமை என்னும் காந்தியக் கொள்கைகளுடன், அஜ்மீர் மாவட்டத்தின் டிலோனியா என்னும் குக்கிராமத்தில் இருந்து, உலகின் 81 நாடுகளின் கடைநிலையில் வாழும் ஏழை மக்களைக் கடைத்தேற்றும் பெரும்பணியை, அமைதியாகச் செய்து வருகிறது வெறும் பாதக் கல்லூரி.

வழக்கமாக, தொண்டு நிறுவனங்கள், முன்னேறிய நாடுகளில் இருந்து நிதியையும், திட்டங்களையும் உலகெங்கிலுமுள்ள வளர்ந்து வரும் நாடுகளுக்குக் கொண்டு செல்லும். ஆனால், வெறும் பாதக் கல்லூரி, வளர்ந்து  வரும் நாடு ஒன்றிலிருந்து உலகெங்கும் தன் திட்டங்களைக் கொண்டு செல்கிறது. காந்தியம் என்னும் கொள்கையின் வீரியமும், பங்கர் என்னும் காந்தியரின் அர்ப்பணிப்புமே இதற்கு முக்கியக் காரணம்.

இவரின் துணை அருணா ராய் ஒரு தமிழர். ஐ.ஏ.எஸ் அதிகாரி. இருவரும் கல்லூரித் தோழர்கள். சில ஆண்டுகள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி விட்டு, அதன் விதிகளுக்கு உட்பட்டு வேலை செய்ய  விரும்பாமல், அதிலிருந்து விலகி, கணவர் பங்கருடன் பல ஆண்டுகள் இணைந்து பணியாற்றினார். பின்னார் 1987 ஆம் ஆண்டு, அதிலிருந்து விலகி, தேவ்துங்ரி என்னும் கிராமத்திற்குச் சென்று, மஜ்தூர் கிஸான் சக்தி சங்கடன் (உழைப்பாளர், உழவர் சக்தி இயக்கம்) என்னும் மக்கள் உரிமைகளை மீட்டெடுக்கும் இயக்கும் ஒன்றைத் தன் தோழர்கள் மூவருடன் இணைந்து துவங்கினார். தகவல் அறியும் சட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற வெற்றிகரமான திட்டங்களில் பெரும் பங்களிப்பை நிகழ்த்தியவர்

முந்தைய கட்டுரைபால் இரு சுட்டிகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-80