அடேய் குடிகாரா!

dri1

அட பைத்தியக்கார மோகன் என்ற எழுத்தாளரே கொல்லைப் புறமாக வந்து மதுவை வரவேற்க வேண்டாம்.எவனோ ஒருவனுடன் விபச்சாரத்திற்காக மது அருந்தியதை நீங்கள் ஏன் குறிப்பிட்டு தமிழ் இந்து பத்திரிகை நாசம் செய்கிறீர்கள்.வேறு ஏதாவது நல்ல விஷயங்கள் இருந்தால் எழுதுங்கள்.மதுவுக்கு ஆதரவு தெரிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது இது முட்டாள்தனம் தனம் உங்களின் கேடுகெட்ட தனம் உங்களின் வக்கிர புத்தி.

கணேஷ்குமார்

[email protected]

dr2

அன்புள்ள அறிவியல்கணேஷ்குமார்

நன்றி

ஆனால் மோகன் என்ற பேரில் மது அருந்தாத அப்பாவிகளும் இப்புவியில் உலவக்கூடும் என்பதை அறிவியல் நோக்கில் ஆராய்ந்தால் நீங்களே நாலைந்தாண்டுகளில் கண்டுபிடிக்கக்கூடும். நீங்கள் ஒழுக்கவாதி என்பதனால் நாலைந்து நாள் முன்னதாகவே கூட கண்டடைந்துவிடுவீர்கள்.

வாழ்த்துக்கள்

ஜெயமோகன்

dr3

இனிய ஜெயம்

பவா செல்லத்துரை இவ்வாறு எழுதியிருந்தார்.

பேரன்பு படபிடிப்பில் மன்னவனூர் ஏரிக்கரை அனுபவங்களை இருநூறு பக்கங்கள் எழுதலாம்.ம்ம்முட்டி ஒரு நகைச்சுவையான மலையாள கவிதையை தன் போனிலிருந்து வாசித்துகாட்டி இதை ஷைலஜா தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமென கேட்க அது அவ்விதமேயானது. ஶ்ரீஜித் மாதிரியான அரங்கத்தை நவீனமாக்கியிருக்கும் யாராவது இக்கவிதையை அரங்கத்திற்க்குள் கொண்டுவந்தால் தமிழுக்கு ஒரு நகைச்சுவையான நாடகம் கிடைக்கும். பாலுமகேந்திராவின் யாத்ரா கூட ஒரு ஹங்கேரிய கவிதையின் நீட்சிதான்.

dr34

நான் குடிக்கும்போது மட்டும் ரிஸ்க் எடுப்பதில்லை…

அன்று அலுவலகத்திலிருந்து நேராக வீட்டிற்கு வந்தேன்…

மனைவி அடுக்களையில் சமைத்துக் கொண்டிருந்தாள்…

அடுக்களையிலிருந்து உருளும் பாத்திரங்களின்

சத்தம் கேட்டபடியிருந்தன…

நான் சத்தமெழுப்பாமல் வீட்டின் படியேறி வந்தேன்.

கருநிற அலமாரியிலிருந்து பாட்டிலை மெல்ல  வெளியே எடுத்தேன்…

தாத்தா மட்டும் ஃபோட்டோ ஃபிரேமிலிருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால் இப்போது நான் என்ன செய்கிறேனென்று

யாருக்கும் தெரியாது

காரணம் நான் குடிக்கும்போது ரிஸ்க் எடுப்பதில்லை…

பழைய சிங்கின் மேலே

அலமாரியிலிருந்து

கவிழ்த்து வைக்கப்பட்ட டம்ளரை எடுத்து ஒரு பெக் அடித்தேன்.

டம்ளரைக் கழுவி, மீண்டும் அலமாரியின் உள்ளே சரியாக வைத்தேன்…

பாட்டிலை அதே இடத்தில் பத்திரப்படுத்தினேன்.

தாத்தா மட்டும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

நான் மெல்ல சமையலறைக்குள்ளே நுழைந்தேன்.

மனைவி உருளைக்கிழங்கை வெட்டிக் கொண்டிருந்தாள்.

இதுவரை நான் என்ன செய்கிறேனென்று

யாருக்கும் தெரியாது,

காரணம்,

நான் குடிக்கும்போது ரிஸ்க் எடுப்பதில்லை…

என் மனைவியிடம் மிக இயல்பாய் கேட்டேன்

‘நம்ம நாயர் மக கல்யாணம் என்ன ஆச்சு?’

மனைவி : அது ஒண்ணும் கைகூடி வரல பாவம் அந்தப் பொண்ணு,

ரொம்பப் பரிதாபம் இப்பவும் அவளுக்கு மாப்பிள்ளை

பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்

நான் சட்டென வெளியே வந்தேன்.

கறுத்த அலமாரியிலிருந்து

மெலிதான ஒரு சத்தம் வந்தது.

ஆனால் பாட்டிலை எடுத்தபோது  கொஞ்சமும் சத்தம் வராமல் பார்த்துக்கொண்டேன்.

மீண்டும் சிங்கின் மேலிருந்த ரேக்கிலிருந்து டம்ளரை எடுத்தேன்

படபடவென ரெண்டு ரகசிய பெக் அடித்தேன்.

பாட்டிலைக் கழுவி சிங்கிலும் கறுத்த டம்ளரை அலமாரியிலும் வைத்தேன்.

ஆனால் இப்போதும் யாருக்கும் நான் என்ன

செய்கிறேனென்று தெரியாது,

காரணம் நான்… நான்…

குடிக்கும்போது ரிஸ்க் எடுப்பதில்லை.

மீண்டும் நான் மனைவியிடம்

“இல்ல அந்த நாயர் பொண்ணுக்கு இப்ப என்ன வயசிருக்கும்?” என்றேன்.

மனைவி : என்ன மனுஷன் நீ? இதுகூடத் தெரியாம, 28 முடிஞ்சிடுச்சாம்.

இப்ப வயசான எருமையப்போல ஆயிட்டாளாம்…

நான் : ஓ… அப்படியா  ம்…

நான் மீண்டுமொரு சந்தர்ப்பத்தை உருவாக்கினேன்.

அலமாரியிலிருந்து

ஓர் உருளைக்கிழங்கை எடுத்தேன்.

இதெப்படியடா கடவுளே!

அலமாரி சத்தமில்லாமல் இருக்கிறது?

நான் ரேக்கிலிருந்து அந்த பாட்டிலைக் கவிழ்த்து

சிங்கில் ஒரு பெக் ஊற்றி

ஒரே மூச்சில் அடித்தேன்

தாத்தா இப்போது சத்தமாய்ச் சிரிப்பது எனக்கு மட்டும் கேட்டது

நான் அவசரமாய் ரேக்கை எடுத்து உருளைக்கிழங்கில் வைத்தேன்…

தாத்தாவின் ஃபோட்டோவைக் கழுவி

கறுத்த அலமாரியின் உள்ளே வைத்தேன்…

இவள் என்ன செய்கிறாள்? சிங்கை எடுத்து

அடுப்பின் மேலே வைக்கிறாள்!

ஆனால் இப்போதும் நான் என்ன செய்கிறேனென்று

யாருக்கும் தெரியாது,

காரணம் நான்… நான்… குடிக்கும்போது ரிஸ்க் எடுப்பதில்லை

(இதென்ன கடவுளே விக்கல் வருது!

யார் என்னை நினைக்கிறார்கள்)

நான் கோபமாக மனைவியிடம் : நீ எதுக்காக

அந்த நாயரை எருமைன்னு சொன்னே?

இனி நீ அப்படி பேசினா நான் உன் நாக்கை அறுத்துடுவேன்

மனைவி : அய்யோ நான் இப்ப என்ன சொன்னேன்

நீ இப்ப வெளியப்போறதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது.

நான் உருளைக்கிழங்கிலிருந்து பாட்டிலை எடுத்தேன்.

கறுத்த அலமாரிக்குள்ளே போய்

ஒரு பெக் அடித்து

சிங்கைக் கழுவி ரேக்கின் மேலே வைத்தேன்.

இப்போது மனைவி ஃபிரேமிலிருந்து என்னைப் பார்த்து

சிரித்துக் கொண்டிருக்கிறாள்

தாத்தா அடுக்களையில் அவசரமாய் சமைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இப்போதும் நான் என்ன செய்கிறேனென்று

யாருக்கும் தெரியாது

காரணம் நான்… நான்…

குடிக்கும்போது ரிஸ்க் எடுப்பதில்லை.

நான் மனைவியிடம் இயல்பாய் சிரித்தபடி :

இல்ல இந்த நாயர் போயும் போயும் ஏன்

ஒரு எருமையக் கல்யாணம் பண்ணப் போறார்?!!!

மனைவி : அய்யோ என்ன மனுஷன்யா நீ? மொதல்ல மொகம் கழுவிட்டு வா.

நான் மீண்டும் அடுக்களைக்குப் போய்ச் சத்தமெழுப்பாமல்

ரேக்கின் மேலே  உட்கார்ந்தேன்

ஆஹா…

ரேக்கின் மேலேயே அடுப்பிருக்கிறதே.

வெளியே அலமாரியிலிருந்து பாட்டில்

அசையும் சத்தம் கேட்கிறது.

நான் எட்டிப் பார்த்தபோது,

அவள் சிங்கின் மேலே உட்கார்ந்து

ஒரு பெக் ஊற்றி

ரசித்துக் குடித்தபடியிருக்கிறாள்!

ஆனால் இதுவரை ஒரு எருமைக்குக் கூட

நான் என்ன செய்தேனெனத் தெரியவில்லை

காரணம், தாத்தா ஒரு போதும் குடிக்கும்போது ரிஸ்க் எடுப்பதில்லை

நாயர் எருமை இப்போது என் வீட்டுச் சமையலறையில் சமைத்துக் கொண்டிருக்கிறார்

நான் ஃபோட்டோ ஃபிரேமிலிருந்து  என் மனைவியைப் பார்த்து

சிரித்துக்கொண்டிருக்கிறேன்.

காரணம்…காரணம்…நான் ஒரு போதும்…என்னானாலும்..

ஒரு போதும் உருளைக்கிழங்கை மட்டும் தொட மாட்டேன்.

*

dr4

எனக்கொரு நண்பர், போதையில் ஏமாந்து விடகூடாது எனும் ஜாக்ரதை உணர்வு அதிகம் கொண்டவர். ஆகவே குடிக்காத நான் சிக்கினால், அவரது ஜாக்கிரதை உணர்வை என்னிடம் ஒப்படைத்து விட்டு, அவர் நிதானம் இறங்கி அடிக்கத் துவங்குவார்.  கொஞ்சம் அதிகமாகிப் போனால், பாரின் வண்ண விளக்குகளுடன் உரையாடத் துவங்கி விடுவார். ஒரே ஒரு முறை, அவர் இடை உயரத்தில் நின்ற அலங்கார விளக்குடன் கலவி புரிய முயன்றார்.

மற்றொரு நண்பர் போதை எகிற,ஆஃபாயில் தட்டை அப்படியே தூக்கி சர்வர் முகத்தில் எறிந்தார்.

”……………..ளி மப்புல இருக்கேன்னு தெரிஞ்சுகிட்டு ஏமாத்த பாக்குறான்மாப்ள, ஆஃபாயில மைதா மாவுல போட்டு எடுத்துகிட்டு வந்துருக்கான் மாப்புள்ள”  அன்றைய ரகளை ஓய நெடுநேரம் ஆனது.

மற்றொருநாள் போலிஸ் வசம் மாட்டிக் கொண்டோம். வாகனம் ஓட்டத் தெரியாத என்னை, முழு போதையில், வாகனத்தில்  வீடு கொண்டு விடும் பொறுப்பை அன்று அவர் எடுத்திருந்தார்.

உரையாடலின் நடுவே காதில் விழுந்தது.

போலிஸ்..  குடிச்சிட்டு வண்டி ஓட்றது தப்பு.

நண்பர்… ஆமா சார். அதான் நிப்பாட்டிட்டேன்.

குடித்து விட்டு வாகனம் ஒட்டியதற்கு பைன் போட காவலர்  இறுதி வரை போராட,  அது தப்புன்னு தெரிஞ்சு  வண்டியை நிப்பாட்டி விட்டேன் என்று இவர் அளிச்சாட்யம் செய்ய, நான் நகரப் பேருந்து பிடித்து தப்பித்து ஓடிவிட்டேன்.

வேறொரு நண்பர். அறைக்குள் முழு போதை எகிற, கட்டிலிலிருந்து எழுந்தோடி, பாத்ரூம் கதவு திறந்து, வாஷ் பேசினில் வாந்தி எடுத்து, பின்னர் மயங்கி விழுந்தார். எல்லாம் சரியாக இருந்திருக்க வேண்டியது .. சற்றே தவறி விட்டது.அவர் திறந்தது வாசல் கதவு, காரிடர் வழியே வெளியே வாந்தி எடுத்து விட்டார், நேர் கீழே ரிஷப்ஷன், அதிலிருத்தவர் வரவேற்பாளினி,  போதையில் தான் நண்பர் மயங்கி விழுந்தாரா, அல்லது அவள் விட்ட வசையை தாங்க இயலாமல் மயங்கி விழுந்தாரா என்பது,இன்று வரை எனக்கு குழப்பமே.

பல்வேறு நினைவுகள் புரள,புன்னகை கொண்டு துவங்குகிறது  இன்றைய பொன்னொளிர் மாலை

கடலூர் சீனு

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-79
அடுத்த கட்டுரைவெண்முரசு விவாதக்கூட்டம் சென்னை