திருவையாறு கடிதங்கள்

இன்று காலை திருவையாறு/தஞ்சாவூரிலிருந்து பெங்களூர் திரும்பினோம்.திருவையாறுபற்றிய உங்களின் பதிவையும் படித்தேன். எங்களுக்கு இந்த ஆராதனைஅனுபவம் முதல்முறையானதால் நிறை/குறைகள் தெரியவில்லை !.

ஆனாலும் உங்களின் பதிவைப் படிக்கும்போது, நீங்கள் எழுதியது உண்மை என்றே உணர்ந்தேன் !! (ஆராதனைக்கு முன்னால் 30 நிமிடம் என்று நிகழ்ச்சிநிரலில்போட்டிருந்த்த மங்கல இசை (தவில், நாதஸ்வரம்) 1 மணி நேரம் நீண்டது !!இரண்டு பெயரைத்தவிர, உச்ச நிலை பாடகர்களை ஆராதனையின் நிகழ்ச்சியில் காணவில்லை !

பஞ்சரத்தின கீர்த்தனைகளை நூற்றுக்கனக்கானவர்கள் பாடும்போது, பந்தலில்நேரடியாகக் பாடகர்களின் குரல்களில் கேட்கலாம் என்றுதான் நேரில் சென்றேன்!! – ஒலிபெருக்கியின் வழியே, ஒலிவாங்கியின் அருகில் உள்ளவர்களின்குரல்கள்-மட்டும்தான் பந்தலின் உள்ளும் கேட்க முடிந்தது !

இசைக்காகவும், இந்த அறக்கட்டளையை நம்பியும் வரும் ரசிகர்கள், தரம்குறைந்தால் தன் மனத்திலேயே வருந்தி, நிகழ்ச்சிக்கு வருவதை நிறுத்திவிடுவார்கள். தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புகள். ஒரு நல்ல சமூக அடையாளத்தைஅழித்துவிடக்கூடாது !! தியகராசர்தான் அருள்புரிய வேண்டும் !!

வெ கண்ணன்
பெங்களூர்

அன்புள்ள கண்ணன்

அப்படியெல்லாம் அழிந்துவிடாதென்றே நினைக்கிறேன். அதற்கு முதலில் தமிழ்பிராமணப்பாடகர்கள் தியாகராஜரை மனதில் கொண்டு அவர்களின் புறக்கணிப்பை விலக்கிக்கொள்ளவேண்டும். அமைப்பாளர்கள் இது வெறும் சாதிய விஷயமல்ல என்று புரிந்துகொள்ள வேண்டும்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களுடைய திருவையாறு அனுபவப்பயணம் வாசித்து மகிழ்ந்தேன். சீர்காழிசிவசிதம்பரம் உறுமல் படித்து வாய்விட்டு சிரித்தேன். இப்படித்தான் பிரபலர் பலர் மற்றவர்களை கழுத்தறுப்பதை ஒரு கலையாகவே கொண்டிருக்கின்றனர். சில தொழிற்சங்க தலைகளின் கூடத்துக்கு போய் மாட்டிக்க்கொண்டாலும் இதுதான் நிலை, சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டு. சிலசமயம் எழுந்து சென்று பளாரென்று ஒரு அறைவிடலாமா என்றும் தோணும்.

தங்கள் பயண அனுபவங்களை படிக்கையில் நானும் உங்கள் குழுவுடன் வந்ததுபோல் இருக்கிறது.

அன்புடன்

கெ.குப்பன்
சிங்கப்பூர்

அன்புள்ள குப்பன்,

நான் என்றுமே குறுக்கும் நெடுக்குமாக தமிழகத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இப்போது இணையம் இருப்பதனால் ஒருசாரார் என்னுடன் வருகிறார்கள். இன்னொருசாரார் வாசிக்கிறார்கள், அவ்வளவுதான்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம். முடிந்தவரை கடிதம் எழுதுவதை தவிர்த்து படிப்பதை செய்கிறேன். உங்களது கட்டுரையில் நாதஸ்வரம் என்பது நாகஸ்வரம் என்றிருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.
காவிரியில் குளிப்பது என்பது வானத்தையும் சேர்த்து என்பது சரியான நினைவூட்டல். என்று குளிப்பதோ!

அன்புடன்
ரமேஷ் கல்யாண்

அன்புள்ள கல்யாண்

அதைப்பற்றி நிறைய விவாதங்கள். இருதரப்புகளுமே உள்ளன. இரு தரப்புக்குமே பெரிய பதிவு ஆதாரங்கள் இல்லை. பேச்சு வழக்கு ஆதாரம் மட்டுமே உள்ளது

சுவாதித்திருநாள் காலம் முதலே எங்கள் ஊரில் நாதஸ்வரம் என்றே சொல்லப்படுகிறது

ஜெ

ஜெ,

பஜனை சம்பிரதாயம் செவ்வியல் இசைக்கான ஒரு வெகுஜன களமாக இருந்தது/இருப்பது பற்றி சீனு நரசிம்மன் என்பவர் சொல்லியிருக்கும் கருத்து தெளிவாக, அருமையாக இருந்தது. எனக்கும் அது போன்ற ஒரு கருத்து உண்டு..

இன்றைக்கு சம்பிரதாய பஜனைகளில் ஈடுபடுவோர் பெரும்பாலர் பிராமணர்களாகவே இருப்பதை அவர் தொட்டுக்காட்டி இருக்கிறார். இது ஒருவித வரலாற்று/கலாச்சார முரண். ஏனெனில் பஜனைப் பாடல்களை எழுதிய பக்திக் கவிஞர்கள், இசைவாணர்கள், தாசர்களிலேயே பெரும்பாலர் பிராமணர்கள் அல்ல. மேலும், சடங்குரீதியான மத வழிபாட்டுக்கு எதிரிடையாகத் தான் இத்தகைய உணர்ச்சிமயமான பக்தி கீதங்களையே அவர்கள் புனைந்தார்கள் என்பது வரலாறு. உதாரணமாக, ஞானேஸ்வர் வரலாற்றில் ஒரு வேதப் பண்டிதரின் செருக்கை அடக்க ஒரு எருமை மாட்டை வேதம் சொல்ல வைத்து அது எவ்வளவு சாதாரண விஷயம் என்று காண்பித்தவர், இறைவனின் நாமத்தைப் பாடுபவரே உயர்ந்தவர் என்றூ பிரசாரம் செய்தவர்.

ஆனால், இந்த வெகுஜன பக்தி இசை மரபு கூடத் தமிழகத்தில் தஞ்சை பிராமணர்களால் தான் போஷிக்கப் பட்டு, காப்பாற்றப் பட்டு வந்திருக்கிறது. 16,17,18ம் நூற்றாண்டுகளின் தஞ்சைச் சீமையில் ஒரு cosmopolitan கலாசாரம் தழைத்து வளர்ந்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, ஹிந்துஸ்தானி ஆகிய பாஷைகளைப் பேசுபவர்கள் ஒன்று கலந்து வாழ்ந்திருக்கிறார்கள் – அதனால் தான் அற்புதக் கலவையாக இப்படி ஒரு பஜனை சம்பிரதாயம் உருவாகி வளர்ந்திருக்கிறது. ஒரு கலை வடிவமாகவே, இன்றுவரை தொடர்ந்து வருகிறது.

இந்தியாவில் வேறெங்கும் பல வேறுபட்ட மொழிப் பாடல்களை சரளமாகக் கலந்து பாடும் இது போன்ற ஒரு பஜனை மரபு எனக்குத் தெரிந்து இல்லை. அதிகபட்சம் அந்த பிரதேச மொழி, கூடினால் சம்ஸ்கிருதம் இரண்டு மட்டுமே கலந்து பாடுவார்கள். அவ்வகையில் தமிழக தஞ்சை-பிராந்திய பஜனை மரபு தனித்துவமிக்கது தான்..

இதனை நிகழ்த்தும் பஜனை பாகவதர்கள், முறையாக, ஒரு கலை வடிவமாக இதைப் பயிற்றுவிக்க முன்வர வேண்டும்.. செவ்வியல் இசை வெகுஜன அளவில் ஊடுருவ அது பெரிதும் உதவும்..

அன்புடன்,
ஜடாயு

திருவையாறு 2009

கடிதங்கள் திருவையாறு 1

திருவையாரuு கடிதங்கள் 2

திருவையாரு கடிதங்கள் 3

முந்தைய கட்டுரைஆங்கோர்வாட் பயணம்
அடுத்த கட்டுரைஊட்டி காவிய முகாம் – யுவராஜன்