‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-76

ele1திருஷ்டத்யும்னன் விராடர் களம்பட்ட செய்தியைத்தான் முதலில் அறிந்தான். காலைக் கருக்கிருளுக்குள் அனைத்து ஒளிகளும் புதைந்தடங்கின. கைகளால் தொட்டு வழித்தெடுத்துவிடலாம் என்பதுபோல் இருள் சூழ்ந்திருந்த அப்பொழுதில் படைவெளியில் இருந்த ஒவ்வொருவரையும்போல எங்கிருக்கிறோம் என்ன செய்கிறோம் என்பதையே மறந்தவனாக அவன் இருந்தான். படைக்களம் முழுக்க வெம்மையான ஆவி நிறைந்திருந்தது. குருதியிலிருந்தோ மானுட உடல்களிலிருந்தோ எழுவது. தெற்கிலிருந்து சிற்றலைகளாக அடித்த காற்று குளிராக இருந்தது. அக்குளிரைக் கடந்து சென்றபோது வெப்பம் பிறிதொரு அலையாக வந்து செவிமடல்களை தொட்டது. எங்கும் நிறைந்திருந்த முழக்கமும் குருதிவீச்சமும் கலந்து அனைத்துப் புலன்களையும் நிறைத்திருந்தன.

குருதிவீச்சத்தை குளிராக உடலால் உணரமுடியும் என்பதுபோல், ஏற்ற இறக்கமின்றி கார்வை கொண்டு சூழ்ந்திருந்த ஓசையை இருளலைகளாக விழிகளால் பார்க்க முடியுமென்பதுபோல் தோன்றியது. தேர் வளைவொன்றில் திரும்பியபோது நோக்கும் நிலையும் முரண்பட திருஷ்டத்யும்னன் தடுமாறி தேர்த்தூணை ஒரு கையால் பற்றிக்கொண்டு வயிறு குமட்டி வாயுமிழ்ந்தான். இருமுறை உடல் துள்ள வாயுமிழ்ந்த பின்னர் கண்களை மூடி திறந்து எழுந்து நின்றபோது விரைந்து அணுகி வந்த வீரன் “இளவரசே, விராடர் களம்பட்டார்” என்றான். அவன் வாய்க்குள் கசப்பு நிறைந்திருந்தது. கண்களை இருமுறை மூடித்திறந்து “நன்று” என்றான். அச்சொல்லிலிருந்த பொருத்தமின்மையை உணர்ந்து “அவருக்கு விண்ணுலகம் அமைக! மைந்தருடன் அங்கு மகிழ்ந்திருக்கட்டும்!” என்றான்.

“அங்கே முரசுகள் முழங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் நமது படைகளிலிருந்து ஒற்றை வாழ்த்தொலி போலும் எழவில்லை. ஆகவேதான் படைத்தலைவர் தங்களைப் பார்க்க அனுப்பினார்” என்று வீரன் சொன்னான். திருஷ்டத்யும்னன் எரிச்சலுடன் “படைகள் என்ன நிலையிலிருக்கின்றன என்று பார்த்தாயல்லவா? எவரும் தன்னிலையில் இல்லை. இவர்களிடம் எந்த ஆணையையும் இப்போது நான் விடுக்க இயலாது. செல்க!” என்றான். பிறிதொருமுறை குமட்டி உமிழ்ந்துவிட்டு நெஞ்சு எரிவதை உணர்ந்து மெல்லத் தணிந்து “சரி, சிறப்பு முரசொலி முழங்க ஆணையிடுகிறேன்” என்றான். அவன் தலைவணங்கித் திரும்பியபோது பிறிதொரு வீரன் புரவியில் அணுகுவதைக் கண்டான். தன் ஏவலரை கைசுட்டி அழைத்து “மறைந்த விராட அரசருக்காக சிறப்பு முரசுகள் முழங்கட்டும். நமது வீரர்கள் சிலரேனும் அவருக்கு வாழ்த்து முழக்கமிடச் சொல்க!” என்றான்.

ஏவலன் தலைவணங்கி புரவியில் திரும்பிச்செல்ல வீரன் அருகணைந்து இறங்கி “அரசே, பாஞ்சாலத்து அரசர் விண்ணடைந்தார்” என்றான். திருஷ்டத்யும்னன் சில கணங்களுக்குப் பின் குமட்டி அக்கசப்பை நாவெங்கும் உணர்ந்தபடி “யார்? எங்கு?” என்றான். “சற்றுமுன்னர் அவர் ஆசிரியர் துரோணருடன் பொருதினார். துரோணரை ஏழுமுறை தேர்த்தட்டில் விழவைத்தார். வென்றுவிடுவார் என்றெண்ணிய கணத்தில் தெய்வங்கள் பிறிதொன்று கருதின” என்று வீரன் சொன்னான். திருஷ்டத்யும்னன் காறி உமிழ்ந்துவிட்டு அணுக்க வீரனை நோக்கி நீர் என கைகாட்டினான். “செல்க, நானும் வருகிறேன்!” என்றான். வீரன் விழிகளைக் கண்டதும் அவன் எண்ணுவதென்ன என்று புரிந்துகொண்டு தன் வில்லையும் அம்பையும் எடுத்தபடி சீற்றத்துடன் “எந்தையைக் கொன்ற அம்முதுமகனை இக்களத்திலேயே கொல்வேன். அவன் குருதியாடி மீள்வேன்!” என்றான்.

“பொழுது எழவிருக்கிறது” என்று வீரன் சொன்னான். அவன் என்ன எண்ணினான் என்பது முகத்தில் தெரியவில்லை. சற்று முன் விராடருக்காக தான் உரைத்த சொற்களை நினைவுகூர்ந்து திருஷ்டத்யும்னன் அகத்தில் ஒரு தளர்வை உணர்ந்தான். “தந்தை விண்ணேகும்பொருட்டு முரசுகள் முழங்கட்டும். பாஞ்சாலத்து வீரர்கள் வாழ்த்தொலி எழுப்ப வேண்டுமென்று நூற்றுவர் தலைவர் அனைவருக்கும் தனித்தனியாக ஆணை செல்லட்டும்” என்றான். தலைவணங்கி வீரன் சென்றதும் தேரை துருபதர் விழுந்த இடத்திற்குச் செலுத்தும்படி பாகனிடம் சொல்லிவிட்டு மெல்ல தேர்த்தட்டில் அமர்ந்தான். மீண்டும் நினைத்துக்கொண்டு எழுந்து தன்னைத் தொடர்ந்து வந்த ஏவலனிடம் “மூத்தவர் சிகண்டிக்கு செய்தி அறிவிக்கப்பட்டுவிட்டதா? அவர்தான் இனி நம் குடிக்கு தலைவர்” என்றான். ஏவலன் தலைவணங்கி திரும்பி விரைந்து புரவியிலேறிச் சென்றான்.

திருஷ்டத்யும்னன் மீண்டும் அமர்ந்தான். உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தமையால் அமர இயலவில்லை. மீண்டும் எழுந்து நின்றான். எஞ்சிய படைவீரர்கள் எவருடன் எதற்கு பொருதுகிறோம் என்றறியாமல் போரிட்டுக்கொண்டிருந்தார்கள். இயல்பாக விழிதிருப்பி நோக்கியபோது அது போர் என்றே தோன்றவில்லை. கூத்தில் நிகழும் போர்நடிப்பு போலத் தெரிந்தது. அவர்கள் இருக்கும் அவ்வுலகில் காலம் அழுத்திச் சுருட்டப்பட்டிருக்கிறது. பொழுது சென்று கொண்டிருப்பதை அறியாதவர்கள்போல என்றென்றும் அவ்வண்ணமே என நின்று பொருதிக்கொண்டிருப்பவர்கள்போல் தோன்றினார்கள். அவன் தலை சுழன்று ஆழத்தில் விழும் உணர்வை அடைந்தான். மீண்டும் தொடையில் கையூன்றி தேரிலிருந்து வெளியே வாயுமிழ்ந்தான். இப்போர் இன்று முடிவதற்கு ஒரு வழியே உள்ளது, இக்களத்திற்கு வெளியிலிருந்து ஏதேனும் நிகழவேண்டும். தெய்வ ஆணைபோல. இறுதியில் தெய்வங்களிடம்தான் செல்லவேண்டியிருக்கிறது.

திருஷ்டத்யும்னன் துருபதரின் படுகளத்திற்குச் சென்றுசேர்ந்தபோது அங்கு பாஞ்சால வீரர்கள் பெரிய வளையமாகச் சூழ்ந்து நின்றிருந்தனர். ஆனால் எவரும் வாழ்த்தொலி எழுப்பவில்லை. தேர் அணுகும்போது திருஷ்டத்யும்னன் எழுந்து தேர்த்தூண்களை பற்றியபடி நின்று பார்த்தான். அவர்கள் ஒவ்வொருவரின் விழிகளிலும் விந்தையானதோர் இளிப்பு தென்பட்டது. முன்பொருமுறை ஐந்தாவது பிரயாகையின் கரையில் அடர்காட்டுக்குள் இருந்த ஆலயம் ஒன்றிற்கு அவன் தந்தையுடன் சென்றிருந்தான். தந்தை பிறர் அறியாத கொடுந்தெய்வங்களுக்கு பலிபூசனை செய்துகொண்டிருந்த காலம் அது. எழுயுகத்தின் தலைத்தெய்வமாகிய கலியின் பெண்வடிவமான கலிகையின் ஆலயம் அது என்று மிகப் பின்னர் அவன் அறிந்துகொண்டான்.

கல்லாலும் செங்கல்லாலும் கட்டப்பட்ட நீள்வட்ட வடிவமான அந்த ஆலயத்தின் கருவறைக்குள் கலிகை முழங்காலளவு உயரமான கரிய கற்சிலையாக அமர்ந்திருந்தாள். காகக்கொடியும் கழுதைஊர்தியும் வெறித்த கண்களும் சொல்லொன்று எழும்பொருட்டு சற்றே திறந்த உதடுகளுமாக. அந்த வெறிப்பில் ஒரு புன்னகை இருப்பதாகத் தோன்ற அவன் நடுங்கி அருகே நின்றிருந்த இளைய தந்தை சத்யஜித்தின் ஆடையை பற்றிக்கொண்டான். அவர் தன் கைகளால் அவனை முழங்காலொடு சேர்த்து “வணங்குக, மைந்தா!” என்றார். அவன் கைகூப்பி வணங்கியபின் விழிமூடிக்கொண்டான். பின்னர் திறந்தபோது மேலும் முகங்களைக் கண்டான்.

அந்த ஆலயத்திற்குச் சுற்றும் நூற்றெட்டு பெருஞ்சிலைகள் இருந்தன. அவர்கள் கலிகை அன்னையின் ஊர்திகளென மண்ணிலெழப்போகும் அரசர்கள் என்று அமைச்சர் சுமந்திரர் சொன்னார். அவர்கள் கலிதேவனின் படைத்தலைவர்கள். ஒவ்வொரு சிலையும் ஒவ்வொரு விரல் முத்திரை காட்டிக்கொண்டிருந்தது. ஒன்றென்றும் இரண்டென்றும் மூன்று என்றும். பேரழிவென்றும் வெறுமையென்றும், அனலென்றும் புனலென்றும். ஆனால் அனைத்து விழிகளும் வெறித்து உள்ளிருக்கும் மையத்தெய்வத்தின் அதே ஏளன நகைப்பை கொண்டிருந்தன. ஒவ்வொரு முகத்திலும் அந்தச் சொல் இருப்பதை திருஷ்டத்யும்னன் கண்டான். தன் உளம் குழம்பி நிகழ்வதும் கனவும் ஒன்றுடன் ஒன்று கலந்து பிறிதொரு உலகில் இருப்பதை அவன் நெடுநேரமாக உணர்ந்துகொண்டிருந்தான். எனினும் அவ்விழிகளின் வெறிப்பும் உதடுகளின் இளிப்பும் சித்தத்தால் மோதி மாற்ற முடியாத வெளியுண்மைகள் என்றே தோன்றியது.

அவன் தேரிலிருந்து இறங்கியதும் அனைத்துப் படைகளும் விழிதிருப்பி அவனை பார்த்தன. எவரும் வாழ்த்துரைக்கவில்லை. அனைத்துக் கைகளிலும் படைக்கலங்கள் எழுந்தும் நீட்டியும் இருந்தன. அவன் செல்வதற்காக ஏவலர்கள் அவ்வீரர்களை உந்தி வழி உருவாக்கினர். அவன் எவரென்றே அவர்கள் உணரவில்லை என்று தோன்றியது. இடைவெளி வழியாகச் சென்று நோக்கியபோது வெறுந்தரையில் துருபதரின் உடல் குப்புறக் கிடந்ததைக் கண்டான். மண்ணை ஆரத்தழுவ முயல்வதுபோல. அப்பால் அவரது தலை அவ்வுடலுக்கு தொடர்பற்றதுபோல அண்ணாந்து வானை வெறித்துக்கொண்டிருந்தது. உதடுகள் விரியத் திறந்து, பற்கள் தெரிய, நகைப்பு சூடியிருந்தது. சற்று அப்பால் விராடரின் உடல் கருக்குழவிபோல் ஒருக்களித்து முழங்கால் மடித்து நெஞ்சோடு சேர்த்து சுருண்டுகிடந்தது. இரு கைகளும் மடித்து மார்பில் வைக்கப்பட்டிருந்தன. அவருடைய தலை மண்ணை முத்தமிடுவதுபோல் குப்புறக் கிடந்தது.

அங்கிருந்த அனைவரும் அவ்விரு உடல்களையும் மகிழ்ந்து நோக்கிக்கொண்டிருப்பதாக தோன்ற திருஷ்டத்யும்னன் திரும்பி நோக்கி சீற்றத்துடன் “இங்கே ஏவலர்கள் எவருமில்லையா? உடல்களை முறைப்படி எடுத்து வைக்க தெரிந்தவர்கள் எங்கே?” என்றான். முதிய ஏவலன் ஒருவன் “ஆணைகளை எவரும் பிறப்பிக்கவில்லை” என்றான். அவன் விழிகளை பார்த்தபோது அங்கும் அதே வெறிப்பும் இளிப்பும் தெரிய திருஷ்டத்யும்னன் உளம் நடுங்கினான். படைத்தலைவன் “இங்கே ஆயிரத்தவர் தலைவன் யார்?” என்றான். அப்பால் நின்ற புரவியிலிருந்து கூடி நின்றவர்களை விலக்கி உள்ளே வந்த படைத்தலைவன் “வணங்குகிறேன், இளவரசே. என் பெயர் கூர்மன், இங்கு ஆயிரத்தவர் தலைவன்” என்றான். “தந்தையின் உடல் முறைப்படி தென்னிலைக்கு கொண்டுசெல்லப்படட்டும். விராடரின் படைத்தலைவர் ஒருவரை அழைத்து வந்து அவர்களின் முறைப்படி அவ்வுடலையும் தெற்கே கொண்டுசெல்ல ஒருக்கங்கள் செய்க!” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான்.

கூர்மன் “மூத்தவர் சிகண்டிக்கு செய்தி அறிவித்துவிட்டோம். இன்னும் சற்று நேரத்தில் அவர் இங்கு வருவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது” என்றான். “எனில் நன்று” என்று சொன்ன பின் திருஷ்டத்யும்னன் களைப்புடன் நீள்மூச்சுவிட்டு கால்களை நீட்டி வைத்து தன் தேரை நோக்கி நடந்தான். தேரின் பிடியைப்பற்றி உடலைத் தூக்கி தேர்த்தட்டு வரை கொண்டுசெல்ல அவனால் இயலவில்லை. மூன்று முறை கால்களால் எம்பியும் உடலின் எடைமிகுந்து அவனால் மேலெழ இயலவில்லை. பின்னர் முழு மூச்சையும் திரட்டி தேரிலெழுந்து அமர்ந்தான். “செல்க!” என்று அவன் சொன்னான். அவன் எண்ணத்தை அறியாமல் தேர்ப்பாகன் திரும்பிப்பார்த்தான். “அரசரிடம் செல்க, மூடா!” என்று திருஷ்டத்யும்னன் உரக்க கூவினான். “அறிவிலி! ஒவ்வொன்றையும் சொல்லித் தெரியவேண்டுமா உனக்கு?” என்று கைகளை வீசி உடைந்த குரலில் கூச்சலிட்டான்.

தேர் எழுந்து விசைகொண்டு காற்று அவன் முகத்தில் மோதியபோது மீண்டும் ஆறுதல் அடைந்து தேர்த்தட்டில் அமர்ந்தான். உடலெங்கும் வியர்வை பூத்திருந்தது. இரு கைகளாலும் நெற்றியை பற்றிக்கொண்டபோது இரு புழுக்கள் ஒட்டியிருப்பதுபோல் இருபுறமும் நரம்புகள் அதிர்வதை உணரமுடிந்தது. கண்களை மூடியதும் குருதிக்குமிழிகள் வெடித்துச் சுழன்றன. உடலெங்கும் நரம்புகள் துடித்து பின்னர் மெல்ல அசைவழிந்துகொண்டிருந்தன. அவன் ஒற்றைச் சொல்லொன்றை சென்று பற்றிக்கொண்டான். அச்சொல் என்னவென்று அவன் அறியும்முன்னரே சித்தம் முழுதறிந்திருந்தது. தேர் உலுக்கலுடன் நின்று “அரசே! இளவரசே!” என்று பாகன் அழைத்தபோதுதான் அவன் தன்னிலை மீண்டான். எழுந்து கையுறைகளை இழுத்துவிட்டபடி படிகளில் கால் வைத்து இறங்கி யுதிஷ்டிரரின் தேரை நோக்கி சென்றான்.

யுதிஷ்டிரரின் தேரைச் சூழ்ந்து பாஞ்சால படைவீரர்கள் காவல் நின்றனர். அவர் இரு கைகளையும் வீசி ஆணைகளைக் கூவிக்கொண்டிருந்தார். அவரது ஆணைகள் எவையும் முழவொலிகளாகவோ கொம்பொலிகளாகவோ ஒளியசைவுகளாகவோ மாறி அங்கிருந்து எழுந்து பரவவில்லை என்பதை அவர் உணரவில்லை. திருஷ்டத்யும்னன் அருகே சென்று தலைவணங்கினான். அவனை திரும்பிப் பார்த்து “என்ன நிகழ்கிறது?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். அவர் செய்தியை அறிந்திருக்கவில்லை என்று உணர்ந்து “விராடர் களம்பட்டார்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். பின்னர் “எந்தையும் சற்று முன் துரோணரால் கொல்லப்பட்டார்” என்றான். அச்செய்தி யுதிஷ்டிரரில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை. அவருடைய உள்ளம் அத்தருணத்திற்குரிய சொற்களைத் தேடி உழல்வதை அவனால் விழிகளில் காண முடிந்தது. “எந்தை பல்லாண்டுகளுக்கு முன் எடுத்த வஞ்சத்தை நிகழ்த்தினார். களத்தில் துரோணரை மண்டியிட வைத்தார். அதன் விளைவாக தன்னுயிர் அளித்தார்” என்று அவன் சொன்னான்.

அதற்குள் யுதிஷ்டிரர் உரிய சொற்களை கண்டடைந்திருந்தார். “ஆம், இப்பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டார். விழைந்ததை நோக்கி செல்வதென்பது ஒரு நோன்பு. அவர் வாழ்வு நிறைவடைக! உளமகிழ்வுடன் அவர் விண்ணேகுக! அங்கு மூதாதையருடனும் மைந்தருடனும் மகிழ்ந்திருக்கட்டும் அவர்” என்றார். திருஷ்டத்யும்னன் “மெய், அங்கு இளையோரும் மைந்தரும் முன்னதாக சென்று அவருக்காக காத்திருக்கிறார்கள்” என்றான். அச்சொற்களில் ஏளனம் உள்ளதா என்று உடனே அவனுக்குத் தோன்றியது. யுதிஷ்டிரர் அத்தகைய முறைமைச் சொற்களில் முழுதுளத்தால் ஈடுபடுபவர், அவருக்கு அவற்றின் உணர்வுகளில் ஐயமெழுவதில்லை. “விராடரும் நிறைவடைந்தார். இங்கு அவர் மைந்தர் தங்களை ஈந்து நம் வெற்றிக்கு வழிகோலினர். மைந்தரின் இறப்புக்கு வஞ்சம் தீர்க்கும் பொருட்டே அவர் வாழ்நாள் கொண்டிருந்தார். அவரும் விண்ணில் மைந்தருடன் அமர்ந்திருக்கட்டும்” என்றார்.

திருஷ்டத்யும்னன் “அவர்கள் இருவரையும் தென்னிலைக்கு கொண்டுசெல்ல ஆணையிட்டுவிட்டேன்” என்றான். தென்னிலை எனும் சொல் யுதிஷ்டிரரை தொட்டு உலுக்க அவர் உரத்த குரலில் “என் மைந்தனை தென்னிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். பதினெட்டு பேர் அவனுடலை சுமந்துகொண்டு சென்றார்கள் என்று சற்றுமுன் ஏவலன் சொன்னான். என் குடியின் முதல் மைந்தன். அவன் குருதிக்கு அதோ படைகொண்டு வந்திருக்கும் அக்கீழ்மகன்கள் மறுமொழி சொல்லியாகவேண்டும். அவர்கள் தங்கள் குருதியால் தங்கள் கொடிவழிகளின் குருதியால் அதற்கு நூறு முறை நிகரீடு செய்யவேண்டும்” என்று கூவினார். பதறும் கைகளை நீட்டி “செல்க! அங்கன் இன்றே களத்தில் விழுந்தாகவேண்டும்!” என்றார்.

திருஷ்டத்யும்னன் “அவரை நமது படைகள் சூழ்ந்துகொண்டிருக்கின்றன” என்றான். “சூழ்ந்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு கணமும் எனக்கு செய்தி வந்தாகவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அவன் இக்களத்தில் கொல்லப்பட்டாகவேண்டும். இக்களத்தில் அவன் குருதியை என் விழிகளால் நான் பார்த்தாகவேண்டும். இது என் வஞ்சினம்! என் தெய்வங்களின் மேல் தொட்டு நான் ஆணையிடும் சொல் இது” என்றார். கண்ணீர் வழிய உடல் துடிக்க கைகளை வீசி “என் அன்னை இக்கணம் எவ்வண்ணம் உணர்வார் என்று என்னால் அறியமுடிகிறது. அவர் தொட்டணைத்து நெஞ்சோடு சேர்த்து இன்சொல் உரைத்த முதல் மைந்தன் இடும்பன். அவனைக் கொன்றவன் எங்கள் குடிக்கு ஒருபோதும் அணையாத அனலொன்றை அளித்திருக்கிறான். அவன் அதற்கு ஈடு சொல்லியாக வேண்டும்…” என்றார். “செல்க! போர் தொடர்க! செல்க!” என்று கூச்சலிட்டார்.

திருஷ்டத்யும்னன் தலைவணங்கி தன் தேரை களம் நோக்கி திருப்ப ஆணையிட்டபோது தன் முன்னிருந்த தேர்த்தூணின் இரும்புக் கவச வளைவில் ஒரு மெல்லிய ஒளியை பார்த்தான். அங்கு வெவ்வேறு ஒளிகள் உலாவிக்கொண்டிருந்த போதிலும் கூட அதன் மின்னை பிறிதொன்றென அவன் உள்ளம் அறிந்தது. ஒரு சிறு பறவை சிறகடித்தெழுந்தது என தோன்றியது அது. திரும்பி வானை நோக்கியபோது அது புலரியின் முதற்கதிர் என்று உணர்ந்தான். தொலைவில் புலரியை அறிவித்து முரசுகள் முழங்கத் தொடங்கின. அன்று புலரிக்கு முன்னர் எழவேண்டிய முதற்காற்று வீசவில்லை என்று நினைத்துக்கொண்டான். கொடிகள் ஓய்ந்து கிடந்தன. பெரும்பாலான படைவீரர்கள் விழுந்து துயின்றுகொண்டிருந்த களத்தில் புலரிமுரசு எழுப்பிய ஒலி வழிதவறியதென அலைந்தது.

அதை எதிர்பார்த்திருந்தவர்கள்போல பாண்டவர் தரப்பிலும் கௌரவர் தரப்பிலும் படைக்கலங்களுடன் எஞ்சிய அனைவரும் போர் நிறுத்தி கைஓய்ந்தனர். எந்த ஆணையும் விடப்படாமலேயே ஒன்றிலிருந்து ஒன்று எனப் பிரிந்து இரு கரைகள் என மாறி அகலத் தொடங்கின படைகள். மறுபுறம் சகுனியின் முரசு முழங்கிக்கொண்டிருப்பதை அவன் கேட்டான். படைகளை மீண்டும் ஒருங்கிணைய அது ஆணையிடுகிறதென்று புரிந்துகொண்டான். புரவியில் அவனிடம் விரைந்து வந்த காவலன் “அரசே, நமது ஆணை என்ன?” என்றான். “அவர்களின் படை என்ன செய்கிறதென்று பார்ப்போம். அதுவரைக்கும் நம்மிடமிருந்து ஆணைகள் எழவேண்டியதில்லை” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். சகுனியின் ஆணை ஒலித்துக்கொண்டே இருக்க கௌரவப் படை முழுமையாகவே பின்னடைந்தது. வற்றும் எரியின் விளிம்பென அது உள்வாங்கி அகன்று செல்ல மானுட உடல்களால் ஆன பரப்பென குருக்ஷேத்ரம் தெளிந்து பரந்தெழலாயிற்று.

பாண்டவப் படைகளும் பின்னடைய போர்முகப்பிலிருந்து அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் சாத்யகியும் பின்னோக்கி வரத்தொடங்கினர். திருஷ்டத்யும்னன் அர்ஜுனனின் தேரை நோக்கி சென்றான். அர்ஜுனன் தேர்த்தட்டில் அமர்ந்து காண்டீபத்தை ஆவக்காவலனிடம் அளித்துவிட்டு தன் கையுறைகளை கழற்றி அருகே வைத்துக்கொண்டிருந்தான். திருஷ்டத்யும்னனைக் கண்டதும் விழிகளால் ஒருமுறை சந்தித்துவிட்டு தலை தாழ்த்திக்கொண்டான். திருஷ்டத்யும்னன் இளைய யாதவரிடம் “துவாரகையின் அரசே, எந்தை களம்பட்டார். விராடரும் உடன் விழுந்தார்” என்றான். “ஆம், அவர்களுக்கு உகந்த இறப்பு” என்று இளைய யாதவர் மறுமொழி சொன்னார். பின்னர் ஒரு சொல்லும் உரைக்காமல் இரு தேர்களும் இணையாக ஓடின.

தேர் படைகளின் உள்ளடுக்கு நோக்கி சென்றதும் அப்பாலிருந்து பீமனின் தேர் வருவதை திருஷ்டத்யும்னன் பார்த்தான். தேர் நிற்பதற்குள்ளாகவே பீமன் அதிலிருந்து பாய்ந்திறங்கி வந்தான். “என் மைந்தனை தெற்கே அனுப்பிய பின் வருகிறேன்… யாதவரே அவனைக் கொன்றவனின் குருதி எனக்கு வேண்டும்… அவனை கொல்லாமல் இக்களம்விட்டு நான் அகலப்போவதில்லை” என்று கூவினான். இளைய யாதவர் மறுமொழி சொல்லாமல் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். “என் மைந்தனை அவன் கொன்று வீழ்த்தினான். அவனை களத்தில் நான் கொன்றாகவேண்டும். அக்குருதிக்கு நிகர் செய்யாது இப்புவியில் நான் உயிர் வாழ்ந்து பொருளில்லை. நான்…” என்று அவன் கைதூக்க “பொறுங்கள்” என்று இளைய யாதவர் சொன்னார். “வஞ்சினங்களை நாம் வணங்கும் தெய்வங்களுடன் இணைந்தே எடுக்க வேண்டும். நம் இயல்புக்கு மீறிய பெருவஞ்சினங்கள் நம்மை தோற்கடித்து இளிவரல் தேடித்தரும்.”

“அந்த சூதன்மகன் என் கண்முன் என் மைந்தனைக் கொன்று வீழ்த்தினான். இக்குடியின் முதல் மைந்தன் அவன்…” என்று பீமன் சொன்னான். “அதற்குரிய பழிநிகரை உங்கள் குடியிலிருந்தே செய்யலாம்” என்று சொல்லி அர்ஜுனனை கைகாட்டினார் இளைய யாதவர். பீமன் தோள்கள் தளர விசும்பல் ஒலியொன்றை எழுப்பி திரும்பிக்கொண்டான். கழுத்திலும் தோளிலும் அவன் தசை இறுகி நெளிவதை திருஷ்டத்யும்னன் கண்டான். அவன் இளைய யாதவரை நோக்கித் திரும்பி “இடும்பர் எனக்கு இளையவர். அவர் முகம் என் நெஞ்சை விட்டு அகலவில்லை” என்றான். “அவன் இறப்பு பிறிதொன்றை ஈடுசெய்கிறது” என்று இளைய யாதவர் அதே புன்னகை மாறா முகத்துடன் சொன்னார். “அவன் இறந்தாலொழிய ஈடு செய்ய முடியாத ஒன்று அது. அந்த ஈடு செய்யப்பட வேண்டுமென்று பெரும் வேண்டுதலொன்று தெய்வங்களிடம் ஒவ்வொரு கணமும் முன்வைக்கப்பட்டது. தெய்வங்கள் அதை செவி கொள்ளவில்லை.” சீற்றத்துடன் திரும்பி “யார்? யாருடைய வேண்டுதல்?” என்று உரக்க கேட்டான் பீமன். இளைய யாதவர் புன்னகைத்தார். பீமன் தலையை அசைத்து தாள முடியாத வலியில் துடிப்பவன்போல் உடல் நெளிய நின்றபின் திரும்பி தன் தேரில் பாய்ந்து ஏறிக்கொண்டு கிளம்பிச்சென்றான். திருஷ்டத்யும்னன் ஏவலரிடம் “அவரைக் கொண்டுசென்று படுக்க வையுங்கள். அகிபீனா அளியுங்கள். அவர் துயிலட்டும்” என்றான். அவர்கள் பீமனைத் தொடர்ந்து சென்றனர்.

திருஷ்டத்யும்னன் “இடும்பனின் வீழ்ச்சி நம் படைகளை சோர்வடையச் செய்துள்ளது” என்றான். இளைய யாதவர் “அல்ல. நம் தரப்பு ஷத்ரியர்கள் இன்றொரு நாள் கடந்தால் உளம் தேர்வார்கள். இன்றைய போரில் இங்குள்ள ஷத்ரியர் எவருக்கும் அவன் ஈடல்ல என்பதை அவன் காட்டிவிட்டான். அவன் வாழ்ந்தால் இந்திரப்பிரஸ்தத்தின் அரசன் என அவனை அமரச்செய்யவேண்டும் என்னும் குரல் எழும். அவன் அதை விரும்பாது தன் நகருக்கே மீண்டால்கூட நாளை அவன் கொடிவழியினர் அவ்வாறு எழக்கூடும். இப்போரால் எழவிருக்கும் யுகத்தில் அரக்கர்கள் முதன்மை கொள்வார்களோ என்று ஷத்ரியரும் அந்தணரும் யாதவரும் ஐயம் கொண்டிருப்பார்கள். அரக்கர்களை நிகர்செய்யும் ஆற்றல் என்ன என்பதை இவ்விறப்பு காட்டியிருக்கிறது. இனி அவர்கள் உளம் அமைவார்கள்” என்றார். திருஷ்டத்யும்னன் நீள்மூச்செறிந்து “எழவிருக்கும் யுகத்தில் ஆளப்போகிறவர் எவர்?” என்றான். “கலியுகத்தில் கூட்டே வல்லமை எனப்படும்” என்றார் இளைய யாதவர்.

யுதிஷ்டிரர் விரைந்து வந்து தேரிலிருந்து இறங்கி அவனை நோக்கி ஓடி வந்தார். “போர் நின்றுவிட்டது. எவரது ஆணை இது? எழுந்து சென்று தாக்கவேண்டும் என்றல்லவா நான் ஆணையிட்டிருந்தேன்” என்றார். திருஷ்டத்யும்னன் “எவரது ஆணையையும் கேட்கும் நிலையில் படைகள் இல்லை, அரசே. முன்னரே பெரும்பாலானவர்கள் நின்ற இடத்திலேயே விழுந்து துயில்கொள்ளத் தொடங்கிவிட்டிருந்தனர். எஞ்சியோர் இதோ படைக்கலங்களை தாழ்த்தி பின்னடைகிறார்கள். இந்த இரவுப்போர் முடிகிறது. இவர்கள் சற்றேனும் துயில்கொள்ளாமல் மீண்டும் இங்கு போர் நிகழாது” என்றான். யுதிஷ்டிரர் “இக்களத்திலிருந்து வெற்றி கூவி அவன் திரும்பிச்செல்வானெனில் நாம் அரசன் என்றும் அரச குடியினரென்றும் தருக்கி நிற்பதில் பொருளில்லை. காண்டீபமும் மந்தனின் கதையும் வெறும் களிப்பாவைகள் என்றே பொருள்” என்றார்.

யுதிஷ்டிரரின் முகத்தை கூர்ந்து நோக்கியபடி இளைய யாதவர் “என்ன இருந்தாலும் கடோத்கஜன் அரக்கன்” என்றார். “என்ன சொன்னாய்?” என்றபடி யுதிஷ்டிரர் முன்னெழுந்து வந்தார். “ஆம், அவன் அரக்க குடியினன். அவன் இறந்தாகவேண்டும். பழுத்த சருகு உதிர்ந்தேயாகவேண்டும் என்பதைபோல. அவன் குடியில் ஷத்ரியப் பண்புகள்கொண்ட புதிய மைந்தர் எழுந்துவிட்டார்கள். அவர்களிடமிருந்து புதிய அரச மரபுகள் தோன்றவிருக்கின்றன. மண்ணில் நடக்கும் ஆற்றலற்றவனும் மரக்கிளைகளில் இயல்பாக அமைபவனுமாகிய இவ்வரக்கன் முதுமைகொண்டு பயனற்றவனாகிப் படுத்து நோயுற்று இறப்பதைப்போல கீழ்மை பிறிதுண்டா? இன்று அரக்கர் குலத்துக்கு பெருமை சேர்த்து பெருங்காவியங்களில் சொல் பெற்று களம்பட்டிருக்கிறான். உகந்த இறப்பு இதுவன்றி வேறென்ன?” என்றார் இளைய யாதவர்.

“உன் சொற்களில் இருக்கும் நஞ்சு மட்டும் எனக்கு புரிகிறது, யாதவனே” என்றார் யுதிஷ்டிரர். விம்மலை மூச்சென ஆக்கி “கொடு நஞ்சு… ஆலகாலம்” என்றார். “ஒவ்வொரு சொல்லிலும் இந்த யுகத்தை முடிக்கும் நஞ்சை நான் கொண்டிருக்கிறேன்” என்று இளைய யாதவர் சொன்னார். அப்பாலிருந்து படைத்தலைவன் வந்து “படைகள் முற்றாக விலகிவிட்டன” என்று திருஷ்டத்யும்னனிடம் சொன்னான். “படைகள் அமையட்டும். எந்த அறிவிப்பும் தேவையில்லை” என்று திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான்.

முந்தைய கட்டுரைகருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்
அடுத்த கட்டுரைகடிதங்கள்