கட்டண உரை – கடிதங்கள்

je

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்

சென்னையின் கட்டண உரையில் கலந்துகொள்ள மிக விரும்பியும் பங்கு கொள்ள  முடியாத பலரில் நானும் ஒருத்தி.  கட்டண உரையைப்பற்றி, அதில் கலந்துகொண்டவர்களின் கருத்துக்களை கேட்டபின்பு கலந்துகொள்ள முடியவைல்லையென்னும் வருத்தம் மிகவும் அதிகமாயிருக்கின்றது.

உங்களின் சென்னைக்கட்டணக்கூட்டம் பதிவையும் வாசித்தென். எத்தனை நேர்த்தியான திட்டமிடல் என்று வியப்பாக இருந்தது. இருபகுதிகள். இருபகுதிகளிலும் ஏழு துணைப்பகுதிகள். அவற்றுக்குள் சராசரியாக ஆறேழு கருத்துக்கள்.இப்படியான ethics உள்ளவர்களை,  மேடைபேச்சில் மட்டுமல்ல, வேறெந்த  துறையிலும்  இருப்பதாக கேள்விப்பட்டதேயில்லை.

வழக்கமான பேச்சாளர்கள் நீங்கள் என்னவெல்லாம் செய்வதில்லை என்று சொல்லியிருக்கிறீர்களோ அவைகளை மட்டுமே செய்வார்கள், ஒரே கருத்தை அல்லது வரியை பலமுறை சொல்பவர்களும், குட்டிகதைளையும் நகைச்சுவைகளையும் சொல்பவர்களயும் தவிர மற்றவர்கள்  இங்கே மேடையேறுவதே இல்லை.குறைந்த பட்ச முன் தயாரிப்புகள்  கூட இல்லாமல் மேடையேறும் பேச்சாளர்களின் உரைகளையே பல ஆண்டுகளாக  கேட்டுக்கொண்டிருக்கும் எனக்கு இந்த உரையைபற்றி கேள்விப்படப்பட ஆதங்கம் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது.கல்லூரியில் இப்பருவம் முடியும் தருவாயில் இருப்பதால் விடுப்பு எடுத்துக்கொளள முடியவில்லை.

கோவை பல்கலைக்கழகமொன்றில் ஒருமுறை உரையாற்ற  சென்றிருந்தபோது எனக்கு  முன்னால் ஒரு பேராசிரியை உரையாற்ற  வேண்டியிருந்தது. அவர் ppt போடச்சொல்லிவிட்டு  நீர்மேலாண்மையைப்பற்றி  தான் பேசப்போவதாய் முன்னுரையும் கொடுத்தார் ஆனால்   திரையில் ppt  கருப்பைவாய் புற்று நோயைப்பற்றியதென்று காட்டியது.அவர் அசராமல் உரைத்தயாரிப்பு மாறிவிட்டதென்றும்  கருப்பை வாய் புற்று  நோயை பற்றியும் வந்திருப்பவர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் சொல்லி அதையே பேசிவிட்டுத்தான் ஓய்ந்தார். முதுகலை பொருளாதாரம் படிக்கும் மாணவர்கள் அரங்கில் இருந்தாரக்ள் என்ன புரிந்திருக்கும் அவரகளுக்கு? இவர்களெல்லாமே உரைக்கு சன்மானம் பெறுபவர்கள் தான்

இப்படி ஏராளமான நிகழ்வுகள் கல்வி நிலையங்களில் நடந்துகொண்டே இருக்கின்றது

// கல்லூரிகளில் மாணவர்களுக்கு எந்த அறிவார்ந்த பயிற்சியும் இருக்காது என எனக்கும் தெரியும். ஆனால் அவர்களிடமும் தீவிரமாகவே பேசவேண்டும் என நினைக்கிறேன். அவர்கள் அறியாத தீவிர அறிவுலகம் ஒன்று இருக்கிறது என வேறு எப்படித்தான் அவர்கள் தெரிந்துகொள்வார்கள்? //

இதை உங்களைத்தவிர வேறு யாருமே நினத்ததும் சொன்னதுமில்லை. வாசிக்கையில் ஒரே சமயத்தில் மகிழ்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது

எனக்குத்தெரிந்த வரையில் எல்லா தளத்திலும் இருப்பவர்களுமே இக்கட்டண உரையை வரவேற்கிறார்கள்

தூரத்து உறவினர் ஒருவரை  கடைவீதியில் எதிர்பாராமல் சந்தித்தேன் அவர் காட்டில் கடலைக்காய் பிடுங்கிய கையோடு அப்படியே வந்திருந்தார் அவரின் தோட்டத்துக்கு பக்கத்திலிருக்கும் ஒரு கடைக்கு. அவரின் செருப்பின் ஓரங்களிளெல்லாம் செம்மண். அவர் மீது   பச்சைக்கடலையின் வாசம் வீசிக்கொண்டிருந்தது. கொஞ்சம் வாசிக்கும் வழக்கமும் உள்ளவர். என்னிடம் பொதுவாக பேசிக்கொண்டிருந்துவிட்டு ’’கேள்வி பட்டியா தேவி, ஜெயமோகன்னு ஒரு எழுத்தாளர் கட்டணம் வாங்கிட்டு சென்னையில் உரை  நடத்தறாராம்  அப்படி இருக்கனூம் எழுத்தாளன்னா ’’  பக்கம்பாடுன்னா நானும் போயிருப்பேன், சென்னைன்னா போகவா முடியுது  உடனே’’  என்றார். எனக்கு சந்தோஷமாக இருந்தது.

நீங்கள் இதை இன்னும் முன்னமே துவங்கி இருக்கலாம். இன்னும் பல முக்கிய நகரங்களிலும் இதுபோன்ற உரைகளை நீங்கள்  நடத்தினால் பலரும் கலந்துகொள்ள ஏதுவாக இருக்கும்

கலந்துகொள்ள முடியாத வருத்தம் இருப்பினும் இந்த உரை இத்தனை வெற்றி  பெற்று ,  கலந்துகொள்ள முடியாதவரகள்  தொடர்ந்து புலம்புவதை கேட்கையில் என்னவோ மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது

அன்புடன்

லோகமாதேவி

அன்புள்ள ஜெ ,

உங்களுக்கு இதற்கு முன் ஒரு முறை எழுதியிருக்கிறேன் – முதற்கனலும் அம்பையும் தந்த பாதிப்பில். உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்த உடனே கை ய விரல்களில் ஒரு பதட்டம் வந்து அமர்ந்து கொள்கிறது. சென்னை கட்டண கூட்டத்தின் வரலாற்று தருணத்தில் நேரில் பங்கேற்று உங்கள் உரையை கேட்ட 350+ வாசகர்களில் நானும் ஒருவன். 8 வருட வெளிநாட்டு வாழ்க்கையில் உங்கள் எழுத்துக்கள் மூலம் உங்களுடன் நிறைய உரையாடி இருக்கிறேன். அன்று நேரில் அமர்ந்து உங்கள் உரையை கேட்டது ஒரு surrealistic அனுபவம். இத்தனை தீவிரத்தன்மையுடனும் ஆழத்துடனும் ஒரு உரை , அதை கேட்க பெரும் கூட்டம். அன்று மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . உள் அரங்கில் மிக அதிமாக இளைஞர்கள் நிறைந்திருந்ததே இந்த கட்டண உரையின்  வரவேற்பிற்கு சான்று.  அந்த உரை  கட்டமைக்க பட்ட விதம் , அதை நீங்கள் மிக எளிதாக தாய் தந்தையில்  தொடங்கி வாசகர்களை உங்கள் உரையின் வெவ்வேறு ஆழமான பகுதிகளுக்கு கூட்டிச்சென்று முடித்தது என அந்த உரையும் இரவும் பேரனுபவம்.  இடைவேளையில்  நான் உங்களின் ஒரு புத்தகத்தில் கையொப்பம்  பெற வந்து , நீங்கள் என் பெயர்  கேட்டு , நான் ஒரு பகுதியை மட்டும்  சொல்லி , முழுப் பெயரை சொல்லக் சொல்லி அப்பெயர்க்கு விளக்கமும் தந்தீர்கள். உண்மையில் அந்த நொடியில் என்ன செய்வது என்று தெரியாமல்  நின்று கொண்டிருந்தேன். மீண்டும்  வெளிநாடு  செல்லும் நான் அந்த உரையின் தருணத்தின் ஒரு துளியையும் , உங்கள் எழுத்துக்களையும் எடுத்துச் செல்கிறேன். நன்றி .

– சையத் இப்ராஹிம்

அன்புள்ள ஜெ.,

நலமா?(நலமாய் இருந்தீர்கள்). உரை கேட்க வீட்டிலிருந்து பைக்கில் வந்து பழவந்தாங்கல் ஸ்டேஷனில் போட்டுவிட்டு கிண்டிக்கு ட்ரெயின் பிடித்து 54F ல் ஏறி அரங்கத்திற்கு ஐந்து மணிக்கே வந்து இறங்கிவிட்டேன். அரங்கத்தில் சினிமா ஷூட்டிங் ஒன்று நடந்து கொண்டிருந்தது. கட்டண உரையை தளத்திலேயே போடமாட்டீர்களே, எப்படி சினிமா எடுக்க ஒத்துக்கொண்டீர்கள் என்று நினைத்தேன். பக்கத்தில் போனபிறகுதான் தெரிந்தது அவர்கள் ஷூட்டிங் முடிந்து கிளம்பிக்கொண்டிருந்தார்கள். படம் பெயர் சிறகு. குட்டி ரேவதிதான் டைரக்டர் என்று பக்கத்தில் அமர்ந்திருந்த திரு.கோவிந்தராஜ் அவர்கள் சொன்னார். குடிக்கத் தண்ணீர் இல்லை. ஏ சி போட்டிருக்கவில்லை. ஸ்ருதி டிவி ஆடியோ வீடியோ சரி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.பஸ்ஸில் வரும்போதே நினைத்துக்கொண்டுதான் வந்தேன். ‘நடிகர்திலகத்’தின் நினைவிடம் அடுத்த கட்டிடம் தான். நிச்சயம் பார்த்துவிடவேண்டும் என்று. சென்று கண்டேன். தாடியோடு கூடிய அவருடைய கடைசிகாலத் திருவுருவம். நடிப்புலக பீஷ்மரைப் பற்றி அரசியலுலக பீஷ்மர் ஜெ.,கூறியவை கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தன. ஐ ஜி ஆபீஸ், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நின்று கொண்டிருந்தவரை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள். முன்னெச்சரிக்கையாக அங்கேயே வேண்டியமட்டும் தண்ணீர் குடித்துக்கொண்டேன். வேண்டியமட்டும் சிறுநீர் கழிப்பிடத்தை உபயோகிக்க நினைத்தேன், தமிழக மரபுப்படி துருவேறிய பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது. நல்லவேளையாக அரங்கில் வசதி இருந்தது.

உங்களுடைய உரை அந்த இடைவேளைக்கடுத்த ஐந்து நிமிடங்கள் (லோகியின் கணிப்பு சரிதான்) தவிர மிகச் செறிவாக இருந்தது. தாய்,தந்தை, புத்த மரபு, சமண மரபு, தொல் கற்காலம், உங்களுடைய பயண அனுபவங்கள், பக்கிம் சந்திரரின் ஆனந்தமடம், தாகூரின் தோரா(அசோகமித்திரன் இந்நாவலைப் பற்றி சிறப்பாகக் கூறியிருக்கிறார்), எம்.என்.ராயிலிருந்து உங்கள் குரு வழி, குருதிவழி மரபு, குல மரபு, அவற்றின் ஏற்றலும் விலக்கலும் முன்னோடிகளிடம் விளங்கிவந்த மாண்பு, தேரும், காரும், அவை நிலை கொள்ளுமிடம் என்று சும்மா (புகுந்துபொறப்பட்டீர்கள், பிரிச்சுமேஞ்சீர்கள் என்றும் சொல்லலாம்) கருத்துச்செறிவான ஒரு சொற்சிலம்பாடினீர்கள். அதுவும் நீங்கள் யாராவது தேர் இழுத்திருக்கிறீர்களா? என்று கேட்டபொழுது எழுந்து நின்று விடலாமென்றே நினைத்தேன். மதுரை சித்திரைத்திருவிழா(1986ல்) , ஸ்ரீவில்லிபுத்தூர்(1990ல்) ரெண்டு இடங்களிலும் கலந்துகொண்டிருக்கிறேன். அதுவும் மதுரையில்   தேர்த்தட்டிலிருந்து வருகிற “சம்போசங்கர, மீனாக்ஷிசுந்தர, சோமசுந்தர” என்கிற ஒவ்வொரு விளியும் ஆயிரம் குரல்களில் ஒலியாய் அலையாய்ப் படர்ந்து, ரத்தம் தலைக்கேறி, மூளையின் ஒவ்வொரு நியூரான்களிலும் முட்டி, சித்தம் சற்றே சிதறிவிட்ட நிலையில் நான் இருந்திருக்கிறேன்.என்னுடன் எத்தனையோ வெள்ளைக்காரர்களும் வடம் பிடித்தார்கள். தேர்த் திருவிழாவில் ஒரு போர்க்கள வீரனின் மனநிலையை ஒருவாறு ஊகிக்கமுடியும்.

நீங்கள் இத்தகைய உரைகளை இந்தியாவின் நான்கு பெரு நகரங்களிலும் வருடம்தோறும் நிகழ்த்தவேண்டியகாலம் வரட்டும். உங்கள் துணைவியாருடனும்,அஜிதனுடனும் (நல்ல அமரிக்கையான பையன்) முதன் முதலாகப் பேசினேன். டைரக்டர்களில் ரத்தினமான மணிரத்தினம் வந்திருந்தும் யாரும் அவர்மேல் ஏறிச் சாடாமல் இருந்தது உங்கள் வாசகர்களின் முதிர்ச்சியைக்காட்டியது. அவருடைய “நாயகன்” படம் வெளியாவதற்கு வெகு நாட்களுக்குமுன்னேயே மதுரை ப்ரியா காம்ப்ளெக்ஸில் ஸ்டில் வைத்துவிட்டார்கள். தமிழ் சினிமா அதுவரை பார்த்திராத அந்த ஸ்டில்களைப் பார்த்துரசித்த பரவசம் இன்னும் ஞாபகத்திலுள்ளது. சிற்றுண்டியும், தேநீரும் நன்றாக இருந்தது. என்ன அந்த தண்ணீர்பாட்டிலை உள்ளே நுழையும்போதே கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உரையின் ஆரம்பத்தில் தண்ணீருக்காகவே நடிகர்திலகத்தை இன்னொருமுறை பார்க்கச் சென்றேன். உங்கள் உரை முடிந்தபோது மணி ஒன்பதைக்கடந்து விட்டது. எதிர்த்த பஸ் ஸ்டாப்பிற்கு செல்ல சாலையைக் கடக்க பத்து நிமிடங்களானது. ‘ஸிப்ரா கிராஸ்ஸிங்’ கையும் ஒரு வாகனமும் மதிக்கவில்லை. அடிபடாமல் கிராஸ் செய்தது பெரும் பேறு. சைக்கிள் ஸ்டாண்ட் 10.30 வரைதான் இருக்கும். இல்லாவிட்டால் வீட்டிற்கு அரை மணிநேரம் நடந்துபோவது மட்டுமல்ல, காலையில் வண்டியெடுக்க அதே அரைமணி நேரம் நடந்து வரவேண்டும்(அசோகமித்திரனின் சிறுகதைக்கான தருணம்).ஒரு வழியாக பஸ்சையும் டிரைனையும் பிடித்து கடைசியில் ஸ்டாண்ட் மூடுவதற்கு ஐந்து நிமிடம் முன்னால் உள்ளேபோய் விழுந்தேன். அடை வார்க்க கல்லைப்போட மனைவிக்கு போன் செய்துவிட்டு வண்டியை கிளப்பினேன். போவதற்குள் ரெண்டு அடை வார்க்கப்பட்டிருக்கும். நேர விரயம் எரிச்சலை அதிகரிக்கும்.

என் அம்மா செய்கிற மிளகுக்குழம்புக்கு (என் மனைவியின் அடைக்கும்)  நான் அடிமை. அதை தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொண்டு சாப்பிடுவதன் மூலமும் சொர்க்கத்தைக்காண முடியும். நீண்டநாள் வைத்துக்கொண்டும் சாப்பிடலாம். உங்களுடைய உரை அந்த மாதிரியான ஒன்று. உங்களுடைய கட்டண உரைகளைக்கூட, குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு, தளத்தில் போட்டுவிடலாம். நிச்சயம் பெருங்கற்காலத் தூண்களாய் நிற்கும்.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

முந்தைய கட்டுரைநாய் பாடும் பாடல் நலமாக வேண்டும்
அடுத்த கட்டுரைபட்டி