எல்லா சம்பிரதாயங்களையும் தள்ளிவைத்து ஓரடி முன்னால் வைக்க நினைக்கும்போதே அவை யாவும் சரியே என்று விஞ்ஞானமும் இவைகளை வழிமொழியும் போது… ஆன்மிகம், விஞ்ஞானம் போன்ற எல்லாமுமே ஒரே மையப்புள்ளியை நோக்கித்தான் செல்கின்றனவா?
— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
மதத்தின் உருவகங்களையும் அறிவியலின் ஊகங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளையும் ஒன்றாகக் காண்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. ஒரு சாரார் உற்சாகம் மீதூற மதம் சொல்வதையெல்லாம் அறிவியல் ஆதரிக்கிறது என்று சொல்கிறார்கள். மறுசாரார் கொதித்தெழுந்து மதம் கூறும் எதையுமே அறிவியல் ஆதரிக்காது என்று ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தைய முதிரா அறிவியல்வாதம் பேசுகிறார்கள். இப்படிச் சொல்ல இவர்கள் மதத்தை அறியவேண்டியதில்லை என்றும் நம்புகிறார்கள். இரு எல்லைகள். இரண்டுமே இருவகைப் பற்றின் மூலம் உருவாகும் மூடத்தனங்கள்.
மனிதமனம் பிரபஞ்சத்தை அறியும் முறைகளில் ஒன்றுதான் அறிவியல். புறவயமாக நிரூபிப்பதும் தர்க்கப்பூர்வமாகப் பொதுவாக வகுத்துக் கொள்வதும் அதன் வழிமுறைகள். அதைப்போலவே மேலும் பல அறிதல்முறைகள் உண்டு. கற்பனை மூலமும் உள்ளுணர்வின் மூலமும் மனிதன் பிரபஞ்சத்தை அறியமுயன்றபடியே உள்ளான். அவ்வகையில் பார்த்தால் மனிதகுலத்தில் இன்றுவரை உருவாகியுள்ள எண்ணற்ற ஐதீகங்கள், சடங்குகள், படிமங்கள், உருவகங்கள் ஆகியவற்றிலெல்லாம் மனிதனின் பிரபஞ்ச அறிதல்கள்தான் உள்ளன. பெரும்பாலான பழங்குடிகளிடம் உலகம் உருவானது குறித்த ஒரு கதை இருக்கும் என்கிறார்கள். ஐன்ஸ்டீனின் ‘கதைக்கு’ நிகரான கதைதான் அதுவும். இப்பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்துடன் ஒப்பிடுகையில் இரண்டுக்கும் இடையேயான தூரம் அப்படியொன்றும் பெரிதுமல்ல. பழங்குடிகள் தங்கள் அறிதல்களைப் படிமங்கள் மூலமும் உருவகங்கள் மூலமும் [Images and metaphors] நிகழ்த்துகிறார்கள் என்பதே உண்மை. அவற்றிலிருந்தே சடங்குகளும் நம்பிக்கைகளும் உருவாகியுள்ளன.
நாம் நாகரிகம் அடைந்தாலும் இன்னும் நம் மனம் பழங்குடிவாழ்வில் உருவான படிமங்கள் மற்றும் உருவகங்களினாலேயே ஆகியுள்ளது. ஆகவே நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சடங்குகளையும் பிற மரபுகளையும் முற்றாக விட்டுவிட இயலாது. அப்படி விட்டுவிட்டால் ஏற்படுவது ஆழமான ஓர் சுயமிழப்பாகும். அடையாளமற்ற தனித்துவமற்ற தன்மை. அது விரும்பத்தக்கதல்ல. கலை இலக்கியம் தத்துவம் எல்லாமே பொருளிழந்துபோகும் ஒரு நிலை அது. சடங்குகளும் நம்பிக்கைகளும் ஒருவகையான பிரபஞ்ச அறிதல்கள் என்ற நிலையில் அவற்றை நாம் நம் தர்க்கத்தாலும் உள்ளுணர்வாலும் பரிசீலிக்கலாம். ஏற்கலாம் மறுக்கலாம். நடைமுறையில் நாம் பெரும்பாலும் அவற்றைப் புதிய சூழலுக்கு ஏற்ப மறு ஆக்கம்தான் செய்துகொள்கிறோம்.
அறிவியல் புறவயமானதாகவும் பெரும் தர்க்க அமைப்பு கொண்டதாகவும் இருக்கலாம். ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் தேற்றங்களுக்கும் அடிப்படையாக உள்ள முன்ஊகங்கள் [Hypothesis] மனித மனதின் ஒரு பொதுத்தளத்தில் இருந்தே வருகின்றன. எங்கிருந்து சடங்குகளும் படிமங்களும் உருவாயினவோ அங்கிருந்து. மனிதனின் இயல்தல்களின் எல்லைகள் மற்றும் வாய்ப்புகள் ஆகியவற்றைச் சார்ந்தவை அவற்றின் அறிதல்கள். ஆகவே ஓர் ஆன்மிக அறிதல் அல்லது ஒரு பழங்குடி நம்பிக்கை அறிவியல் முன்னூகமாக வேறு ஒரு வழியில் வெளிப்படக்கூடும். தனக்குரிய தர்க்கத்தை உருவாக்கிக் கொள்ளவும் கூடும். உண்மையில் அத்துவிதம், யோகாசார பௌத்தம் மற்றும் தாவோ மதம் ஆகியவற்றின் பல அடிப்படை உருவகங்கள் நவீன இயற்பியல் கோட்பாடுகளுக்கு அருகே வருகின்றன என முக்கிய நூலாசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். ‘தூய அறிவியல்வாதிகள்’ அந்த அவதானிப்பை ஏற்க மறுக்கவும் செய்கிறார்கள். இந்தப் பொதுத்தன்மை மனிதனின் மனம் அதன் ஆழத்தில் அல்லது உச்சத்தில் ஒரேவிதமான இயக்கமுறையைக் கொண்டுள்ளது என்பதன் ஆதாரங்கள் மட்டுமே.
அறிவியல் ‘நிரூபிக்கப்பட்ட’ உண்மையாகக் காணும் ஒரு அறிதலை ஆன்மிகத்தளம் ஒன்றில் நின்றபடி ஒருவர் சாதாரணமாக நிராகரிக்கக் கூடும். உதாரணமாக அறிவியலை அறிந்தவரான மாசானபு ஃபுகுவோகா அவரது உலகப்புகழ்பெற்ற ‘ஒற்றைவைக்கோல் புரட்சி’ என்ற இயற்கைவேளாண்மை பற்றிய நூலில் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை ஓர் அபத்தமான ஊகம் என்று நிராகரிக்கிறார். பிரபஞ்சம் பற்றிய ஆழமான ஓர் அந்தரங்க அறிதலில் நின்று இதை அவர் செய்கிறார். அறிதல்களின் கோணங்கள் எண்ணற்றவை. நான் அறிவியலை ஒவ்வொன்றையும் ஆராய்ந்து சரிவைக்கும் பொறுப்பும் திறனும் கொண்ட ஒரு தளமாகக் கருதவில்லை. அது ஓர் அறிதல்முறையே. அதற்குரிய வாசல்களும் அதற்கே உரிய எல்லைகளும் அதற்கு உண்டு.
ஆகவே அறிவியலை ஆன்மிகத்துக்கும் ஆன்மிகத்தை அறிவியலுக்கும் ஆதாரமாக ஆக்க வேண்டிய அவசியமில்லை. அவை தங்கள் போக்கில் மனிதனின் உச்ச எல்லையைக் காண முயல்பவை. ஆம், மனிதனின் எல்லையையும் உச்சத்தையும் தான், பிரபஞ்சத்தின் உச்சத்தையும் எல்லையையும் அல்ல. அவை ஏதேனும் புள்ளியை நோக்கி செல்கின்றன என்றால் அது மனிதனின் உச்சப்புள்ளியை நோக்கியே.
-*-
நாத்திகவாதம் என்பது இந்துமதத்தில் மட்டுமே இருக்கிறதா? வேறு எந்த மதத்தவரும் அவர்கள் மதக்கடவுள்களை மறுத்துச்சொல்லி நான் கேட்டதில்லை. மறுத்தாலும் நீயும் இந்துதான் என்று அரவணைத்துக் கொள்ளும் இந்துமதத்தின் flexibility(வளையும்தன்மை) தான் இதற்குக் காரணமா?
— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
மதம் என்ற அளவில் நாத்திகவாதத்துக்கும் இடமளிக்கும் ஒரேமதம் இந்துமதமேயாகும். காரணம் இந்துமதம் என்பது மதநோக்கு மட்டுமே ஒழிய மத அமைப்பு அல்ல. பிற மதங்களுக்கு மூலநூல், முதன்மை குருநாதர்கள், மைய இறையுருவகம், தொகுக்கப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் ஆகியவை உண்டு. இந்துமதம் என நாம் இன்று சொல்லும் நோக்கு உண்மையில் பழங்காலத்தில் பற்பல மதங்களாகவும் ஞானவழிகளாகவுமே இருந்தது. அம்மதங்களில் சார்வாகம் போன்ற முழுமையான நாத்திக மதங்களும் இறையுருவகத்தையோ ஆன்மீகத்தையோ ஏற்காத ஆதிசாங்கியம் போன்ற தரிசனமுறைகளும் இருந்தன.
பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு பக்தி இயக்கம் உருவான காலகட்டத்தில்தான் இம்மதங்கள் ஒன்றோடொன்று கலக்கப்பட்டன. முதலில் சைவமதமும் சாக்தேயமதமும் காணபத்ய மதமும் சௌரமதமும் பிரித்தறிய முடியாதபடி ஒன்றாயின. இதில் தமிழ்நாட்டில் பிற்காலச் சோழமன்னர்கள் [குறிப்பாக ராஜராஜசோழன் முதல் இரண்டாம் ராஜேந்திரன் வரையிலானவர்கள்] மற்றும் பிற்காலப் பாண்டியர்கள், குறிப்பாக ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், பெரும்பங்காற்றியுள்ளனர். சைவமும் வைணவமும் உரையாடிக் கொள்ள ஆரம்பித்து மெல்ல பொதுத்தளத்தைக் கண்டுகொண்டன. இதற்குத் தமிழ்நாட்டில் நாயக்க மன்னர்களின் பங்களிப்பு அதிகம். நாயக்கமன்னர்களின் காலத்தில் முக்கிய ஊர்களிலெல்லாம் சைவ ஆலயங்களும் வைணவ ஆலயங்களும் அருகருகே பெரிதாக எழுப்பபபட்டன. [ஸ்ரீரங்கமும் திருவானைக்காவும் ஓர் உதாரணம்] சைவ ஆலயங்களில் விஷ்ணுவுக்கு சன்னதிகள் உருவாக்கப்பட்டன. சிவராமகிருஷ்ணன் போன்ற பெயர்கள் இவ்வாறு உருவானவையே.
பிற்பாடு இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் இந்துமதம் என்ற அமைப்பு இஸ்லாமிய ஆட்சியாளர்களால் பொதுவாக அடையாளம் காணப்பட்டு மெல்ல தனித்துவம் பெற ஆரம்பித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்து மறுமலர்ச்சிக் காலத்தில் இந்துமதத்தின் தத்துவ மையச்சரடுகள் ராஜா ராம் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர், நாராயணகுரு, வள்ளலார் போன்றோரால் உருவாக்கப் பட்டன. இவ்வாறு உருவான இந்துமதத்தில் அதன் அடிப்படைக்கூறுகளில் ஒன்றாக நாத்திகமும் உள்ளது. இன்றும் இந்துமதம் ஓர் அமைப்பாக ஆகாத காரணத்தால் இதற்குள் பலவகையான போக்குகள் இருக்கவும் பலவகையான புதுப்போக்குகள் உருவாகவும் இடமுள்ளது. சமீபத்திய உதாரணம் ஓஷோ.
இந்துமதம் என்பது ஆரம்பம் முதலே பலவகையான ஞானவழிகள் இணைந்து முன்னகரும் பொதுப்போக்காகவே இருந்துள்ளது. நமக்குக் கிடைக்கும் ஆகப்பழைய இந்து ஞானநூல் ரிக்வேதமாகும். அதிலேயே பிரகஸ்பதிரிஷி போன்ற நாத்திகர் இருந்துள்ளனர். கணாதர், பரமேஷ்டி போன்ற பல நாத்திக குருநாதர்களின் பெயர்கள் கிடைக்கின்றன. சார்வாக மரபுக்கு முதல்குரு பிரகஸ்பதிதான். ‘இந்திரன் யார்? அவனைக் கண்டவர்கள் யார்?‘ ஒருவர் மற்றவரிடம் கேட்கிறார். இந்திரன் இல்லை. அப்படியானால் நாம் எந்த தேவனுக்கு அவி அளிக்கிறோம்?” [ரிக் II – 12] என்பதுபோன்ற ஐயங்களுக்கு எப்போதுமே இடமிருந்தது. ஆக அடிப்படையிலேயே நாத்திகவாதத்தை உள்ளடக்கிய ஒன்றாகவே இந்துமதம் உள்ளது. அப்படி இருக்கும்போது மட்டுமே அதன் ஆத்மா இருந்துகொண்டிருக்கும். அதன் பன்முகத்தன்மையை அழிப்பதில் இன்றுள்ள அரைவேக்காட்டு மடாதிபதிகளும் மதவாதவெறியர்களும் வெற்றிபெறுவார்களானால் நமக்கு எஞ்சுவது இந்த மகத்தான மதத்தின் மட்கி நாறும் சடலமேயாகும்.