ஆசிரியருக்கு,
அமைப்பாளர்கள் மேல் வருகையாளர்களுக்கு இருக்கும் அதிருப்தியை விட அமைப்பாளர்களுக்கு வருகையாளர்கள் மேல் கூடுதல் அதிருப்தி இருக்கும், ஆனால் ஒரு அரசியல் சரி கருதி இதை வெளியிட மாட்டார்கள்.
கடந்த காலங்களில் இலக்கியக் கூட்டங்களுக்கு நேரில் அழைப்பு விடுப்பது, அழைப்பிதழை அஞ்சலில் அனுப்பி வைப்பது, மின்னஞ்சல் செய்வது சமூக வலை தளங்களில் பகிர்வது பின்பு நினைவூட்டுவது என அத்தனை முயற்சிகளையும் எடுத்த பின்பும் நீங்கள் நூறு பேரை அழைத்தீர்கள் என்றால் 20 பேர் வந்தாலே மிகுதி. ஒருவர் தவறாமல் வருவதாக உறுதி அளிப்பார்கள் ஆனால் வர மாட்டார்கள். சென்னை தவிர்த்து பிற ஊர்களில் பெரிய மெனக்கெடல் இல்லாமல் வாசகர்கள் தாமாக பங்கு பெறுதல் என்பது மிக அரிது.
சில சமயங்களில் அதிர்ஷ்டவசமாக ஒரு வெற்றிகரமான கூட்டம் அமையும். ஆனால் மிக விரைவில் இந்த கழுதை கட்டெறும்பு ஆகிவிடும். தாமதமாகவே வருகிறார்கள் என்று தாமதமாக துவங்குவது தாமதமாக துவங்குகிறார்கள் என்று தாமதமாக வருவது. வருகையாளர்களின் ஒரு பகுதியினர் எப்பொழுதுமே கவனமற்ற பார்வையாளர்கள், அவர்கள் போக்கிடம் ஏதுமற்றவர்கள். எந்த தீவிரமும் ஆர்வமுமற்று நேரம் தவறி வருவார்கள், தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பார்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பார்கள். இது அமர்ந்திருக்கும் கவனமான பார்வையாளனுக்கு ஒரு பெரிய இடர்.
அமைப்பாளர்கள் மீதும் விமர்சனங்கள் உண்டு ஆனால் பார்வையாளர்கள் அளவுக்கு அல்ல. சென்னை கட்டண உரை வருகையாளர்களின் ஒழுக்கமான இருப்பால் அது மிக வெற்றிகரமான கூட்டமாக அமைந்தது. நெல்லை கட்டண உரையை விட ஒரு படி மேல் எனவும் சொல்லலாம்.
விழா துவங்குவதற்கு முன்பு ஒரு இருபது பேர் வந்து இருந்தாலே அது அமைப்பாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும். விழா துவங்கி அரை மணி நேரத்திற்குள் குறைந்தபட்சம் முக்கால் கூடம் நிரம்பி விடும் என யூகிக்கலாம். இந்த வகையான கட்டண கூட்டத்தில் மிகப்பெரிய அனுகூலமே முக்கால்வாசிப் பேருக்கு மேல் விழா தூங்குவதற்கு கால் மணி நேரம் முன்பாகவே வந்து அமர்ந்து விடுகின்றனர். இது அமைப்பாளர்களுக்கு அளிக்கும் நம்பிக்கையும் ஊக்கமும் சாதாரணமானதல்ல. சென்னை கட்டண உரையில் வருகையாளர்கள் 350 பேருக்கு மேல் என்றால் சுமார் 320 பேர் உரை துவங்குவதற்கு கால் மணி நேரம் முன்பாகவே வந்து அமர்ந்து விட்டனர். சிதறாமல் அமர்ந்து சாத்தியமான முழு கவனத்தையும் உங்களுக்கு அளித்தார்கள், அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.
சென்னை உரையில் உங்கள் பேச்சு அசலான புதிய சிந்தனைகளும் அதற்கு இடையேயான இணைப்புகளும் கொண்டதாக அமைந்து பல இடங்களில் மெய் சிலிர்க்க வைத்தது. அறிதலின் இன்பத்தை குறைவில்லாமல் வழங்கியது.
முதல்பாதியில் கிமு 30 ஆயிரத்தில் நடுகல்லில் இருந்து தொடங்கி கிபி 1800 வரை உண்டான நமது மரபின் தொடர்ச்சி, அதன் உட் கூறுகள் என சென்றது. இதில் மிகச் சிறப்பாக அமைந்தது குருதி மரபு மற்றும் பண்பாட்டு மரபு என்கிற எதிரீடு.
இடைவேளைக்குப் பிறகு ஒரு வசதிக்காக இந்திய மறுமலர்ச்சி நிகழ்ந்ததாக சொல்லப்படும் கிபி 1800 இல் இருந்து தற்காலம் வரை விரைவாக மாறிக்கொண்டிருக்கும் மரபும் இதற்கு காரணிகளாக அமைந்த காஞ்சி மடம் போன்ற மரபை அப்படியே தக்க வைக்கும் சிந்தனை உடையவர்களும் தயானந்த சரஸ்வதி போன்ற சீர்திருத்த மரபுவாதிகளும், அது போக மதத்திற்கு அப்பாற்பட்ட ராஜா ராம் மோகன் ராய் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளும் எதிரில் ரமாபாய் போன்ற மத மறுப்பு வாதிகளும், விமர்சன பார்வையால் மாற்றியமைக்க முனைந்தோறும் அதனால் ஏற்பட்ட விரைந்த மாற்றமும் என சென்று தாகூரின் கோராவில் கச்சிதமாக முடித்தீர்கள்.
இதில் கூறுவதற்கு எனக்கு சில ஆலோசனைகள் உள்ளன.
நிகழ்ச்சி சரியான நேரத்தில் துவங்கும் என்பதை கூடுதல் அழுத்தத்துடன் தெரிவிக்க வேண்டும் இக்கூட்டம் சுமார் 10 நிமிடம் தாமதமாக துவங்கியது அதையும் தவிர்த்திருக்கலாம்.
இது இரண்டரை மணி நேரங்களாக இரண்டு பகுதிகளாக நிகழ்த்தப்பட்ட நீண்ட உரை என்பதால் அதை முழுமையாக மனதில் தொகுத்துக் கொள்ள சிரமமாக உள்ளது. துவங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக இணையம் வழியோ அல்லது அச்சு வடிவிலோ இரண்டு பத்திகளில் இந்த உரையின் சுற்று வட்டத்தையும் உள்ளடக்க குறிப்புகளையும் வருகையாளர்களுக்கு வழங்கலாம். இது உரையை பின் தொடர்வதற்கு உதவிகரமாக இருக்கும். அல்லது உரை முடிந்த பிறகு கூட இதைத் தரலாம்.
கட்டணம் என வைத்தால் வருகையாளர்களின் வரவு குறைந்தபட்சம் இருமடங்கு கூடும் என்பது இரு முறை ஊர்ஜிதமாகியுள்ளது. ஒரு புதிய துவக்கம் பூத்துள்ளது. அதை வாடாமல் காப்பது அமைப்புகளின் கையில்தான் உள்ளது, என்றாலும் கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் இந்த நிலத்தில் இந்த கட்டண முறை ஏற்படுத்தும் அதிகபட்ச தாக்கம் என்பது சொற்பமாகவே இருக்கும். ஆகவே இன்னும் ஓரிரு மாதத்திற்குள் ஏதேனும் அமைப்பு இது போன்ற மேலும் ஒரு கட்டண உரையை நிகழ்த்த உங்களை அழைத்தால் உடன்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கிருஷ்ணன், ஈரோடு
அன்புள்ள கிருஷ்ணன்
இன்று [6-3-2019] வீட்டுக்கு ஓவியர் சந்தோஷ் நாராயணன் வந்திருந்தார். பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், அவருக்கு சொற்பொழிவு என்னும் வடிவத்திலேயே ஆர்வம் வந்ததில்லை என்று. அதில் எந்த சுவாரசியமும் இருக்கப்போவதில்லை, பெரும்பாலும் நேரவிரயம் என்ற எண்ணமே உள்ளது என்று. ஏறத்தாழ இந்த எண்ணம் கணிசமானவர்களிடம் இங்கே உண்டு.
நான் அவரிடம் எம்.என்.விஜயன், எம்.கே.சானு, சுகுமார் அழிக்கோடு, கல்பற்றா நாராயணன், சுனில் பி இளயிடம் போன்ற மாபெரும் மலையாளப் பேச்சாளர்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். தமிழிலும் பெரிய பேச்சாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்களெல்லாருமே பெருந்திரளுக்காக பேசுபவர்கள். அரங்கில் ஆயிரம்பேருக்குக் குறைந்தால் பேசமுடியாதவர்கள். பெருந்திரளுக்குப் பேசும்போது சொல்லிச் சொல்லி புரியவைப்பது, வேடிக்கைகளை கலந்து அளிப்பது, பொதுவான நம்பிக்கைகளையும் பரவலாக ஏற்கப்பட்ட கருத்துக்களையும் சொல்வது என சில நிபந்தனைகள் உருவாகிவிடுகின்றன.
இங்கே புத்தகங்களில் படிநிலைகள் உள்ளன. பொதுவாசிப்புக்கான நூல்கள் முதல் தேர்ந்த வாசகர்களுக்கான நூல்கள் வரை. அப்படி மேடைப்பேச்சில் இல்லை. நான் மேலே சொன்ன மலையாள மேடைப்பேச்சாளர்கள் பொதுவான அரங்கினருக்குரியவர்கள் அல்ல. எம்.என்.விஜயன் உளவியல் மற்றும் இலக்கியக் கோட்பாடுகளைப் பற்றி மட்டுமே பேசியவர். கல்பற்றா கவிதையின் அழகியலைப் பற்றி மட்டுமே பேசுபவர். ஆனால் அவர்களுக்கு ஊர்தோறும் சராசரியாக இரண்டாயிரம் கேள்வியாளர்கள் உருவாகியிருக்கின்றனர் அங்கே. அது இங்கே நிகழவில்லை. இங்கே மேடைப்பேச்சு என்றாலே திரளுக்குரியது. அவற்றில் சற்றே சிந்திப்பவர், வாசிப்பவர் அடைய ஏதுமில்லை.
இந்தக் கட்டண உரை அத்தகைய தேர்ந்த வாசகர்களுக்கான உரை. இதற்குச் சமானமான உரைகளை கோவையில் பொதுக்கேள்வியாளர்களுக்காக நிகழ்த்தினேன். வியாசர் உரை, சங்கரர் உரை ஆகியவை அவ்வாறு நிகழ்த்தப்பட்டவை. ஆனால் அவற்றுக்கு வந்த பொதுவான கேள்வியாளர்களால் அவற்றை புரிந்துகொள்ள, தொடர்ந்து வர இயலவில்லை. நாம் சாதாரணமாக பயன்படுத்தும் கலைச்சொற்கள்கூட அவர்களுக்குத்தெரியவில்லை. அவர்களுக்கு தெரியாதவற்றைக் கேட்டு அறிய அவர்களுக்கு ஆர்வமும் இல்லை. அவர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றை, புரியும்விதத்தில் சொல்லும்படி கட்டாயப்படுத்துகிறார்கள்.
ஆகவே அவர்களை தவிர்த்து கீதை உரை, குறள் உரை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டன. அவற்றுக்கு முந்தைய உரைக்கு வந்து சிக்கிக்கொண்ட பொது கேள்வியாளர்கள் வரவில்லை. ஆர்வமுள்ளவர்கள் வந்தனர். அவை உரியமுறையில் சென்று சேர்ந்தன. இந்தக் கட்டண உரை என்பது அவர்களை இன்னும் கொஞ்சம் சல்லடைபோட்டு தெரிவுசெய்வதற்காகவே. இந்த உரைக்கு இது எப்படி இருக்கும் எனத் தெரிந்துகொண்டு வருபவர்களே அரங்கினர். இருந்தும் சில அப்பாவிகள் வந்து சிக்கிக்கொண்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால் தொடர்ச்சியாக இத்தகைய உரைகள் நிகழ்கையில் அவர்கள் விலகிவிடுவார்கள். பொதுவாக கொஞ்சம் வயதானவர்கள், ஏதேனும் கருத்துநிலைகளில் ஊன்றிநின்றுவிட்டவர்கள் வரவேண்டாம் என்பதே என் எண்ணம்.
உரை என்பது பொதுவானவர்களுக்குரிய அறிவுக்கலை மட்டும் அல்ல, இங்கே அறிவார்ந்த தரப்பினருக்கான உரைகளும் நிகழ்த்தப்படுகின்றன, அதற்கு பணம்கட்டிச் சென்று அமர்ந்து கேட்கிறார்கள், பேசுபவர்கள் மிகுந்த தயாரிப்புடன் பேசுகிறார்கள் என்னும் செய்தி பரவலாகச் சென்றடையவேண்டும் என்பதே என் எண்ணம். இதைப்போல பிறரும் பேசும் அரங்குகள் நிகழவேண்டும்.
ஏன் அறிவியக்கத்தின் உயர்நிலையிலும் சொற்பொழிவு தேவையாகிறது? மேடைக்கலை மிக உயிர்த்துடிப்பான ஒரு தொடர்புறுத்தல். கண்ணெதிரே ஒரு மனிதன் நிற்கிறான். நம் கண்களைப் பார்த்து பேசுகிறான். நாம் அவனுடன் எளிதாக ஒழுகிச்செல்கிறோம். ஆகவே பல பக்கங்களை தொடர்ச்சியாகப் படித்து அறிவனவற்றை ஒரே வீச்சில் அறிந்துகொள்கிறோம். மேடையில் தகவல்கள், செய்திகள் பயனற்றவை. ஒரு சிந்தனைப்போக்கை ஒட்டுமொத்தமாக திரட்டிக்கொள்ளவும், ஒரு கருத்துநிலையை உணர்ச்சிகரமாகச் சென்றடையவும் மேடைப்பேச்சு மிக உதவியானது.
தொடர்ச்சியாக மேடைகளில் நான் பேசலாம்தான். ஆனால் நாலைந்துநாள் தயாரித்துக்கொள்ளமால் என்னால் பேசமுடியாது. அத்துடன் எனக்கு பயணம் கொஞ்சம் கடினமானது. வசதியாகவே பயணம்செய்யமுடியும். பயணக்களைப்பில் இரண்டுநாட்கள் வீணாகும். என் முதன்மை ஊடகம் எழுத்து. அதிலிருந்து நாளை பிடுங்கியே நான் பேசமுடியும்.
ஆகவே ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். இனி நூல்வெளியீடு போன்ற விழாக்களில் பேசுவதில்லை. தனிப்பேச்சு மட்டுமே.
ஜெ