பொதுவாக நண்பர்கள் சந்திப்பு, விவாதங்களின்போது விவாதத்தின் பொதுவான நெறிகள், வழிமுறைகளைப்பற்றி பேச்சு எழுவதுண்டு. இவை உலகமெங்கும் கல்வித்துறையில் பரிந்துரைக்கப்படுவனவே. ஆனால் நம் கல்விமுறையில் இவற்றுக்கு இடமில்லை. கல்லூரிகளில்தான் தாங்கிக்கொள்ளவே முடியாத விவாதம் நிகழும். ஓரளவு உயர்நிர்வாகத்துறையில், மக்கள்தொடர்புத்துறையில் இந்த நெறிகள் இன்று பயிற்றுவிக்கப்படுகின்றன.
ஊட்டி நித்யா குருகுலத்திற்குச் சென்று நான் கற்றுக்கொண்ட முதல் வழிமுறையே எப்படி விவாதிக்கவேண்டும் என்பதுதான். குறிப்பாக நேர் விவாதங்களில். விவாதங்களின் நெறிகளைப் பேணாதவர்களிடம் விவாதிக்கவே கூடாது என்பது அதில் முதல் நெறி. அது மரபான இந்திய தர்க்கமுறை. மேலைத்தர்க்க முறை சற்றே வேறுபட்டது.
இதன் நீட்சியே அடிப்படையான சில தத்துவப் பிழைபுரிதல்கள் [fallacies]. உதாரணமாக ஒரு விவாதத்தில் ‘இப்டியெல்லாம் ஜெனரலைஸ் பண்ணவே கூடாது, இதப்பத்தியெல்லாம் ஒண்ணுமே சொல்லிவிடமுடியாது’ என்று சிலர் பேசுவதை காணலாம். இதுவே தத்துவ விவாதத்தின் முதல் பிழைபுரிதல். ஏனென்றால் பொதுமைப்படுத்தி விவாதிக்க முடியும் என்னும் முதல் ஏற்புக்குப் பின்னரே அவர் பேச உள்ளே நுழைகிறார். அதன்பின் பொதுமைப்படுத்தவோ விவாதிக்கவோ கூடாது என்பது தன்மறுப்புதான். இப்படி சாதாரணமாக செய்யப்படும் பத்துக்கும் மேற்பட்ட பிழைபுரிதல்கள் உள்ளன.
இவற்றை மட்டும் விவாதிப்பதற்காக ஒரு பட்டறையை நிகழ்த்தினாலென்ன என்று நண்பர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நண்பர் ஒருவரின் திருமணமண்டபம் ஈரோட்டில் உள்ளது. இப்போது திருமண மாதம் அல்ல என்பதனால் அங்கே வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது.
ஏற்கனவே குழுமத்தில் அறிவித்து ஐம்பதுபேர் வரை பெயர் அளித்துள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் பெயர் அளிக்கலாம்.
ஜெ
அறிவிப்பு
நண்பர்களே
வருகிற மார்ச் 30, 31 அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஈரோட்டில் நண்பர் செந்திலின் குளிரூட்டப்பட்ட திருமண மண்டபத்தில் சுமார் 100-லிருந்து 120 பேர் பங்கு கொள்ளும் ஒரு விவாதப் பயிற்சிப் பட்டறை நடத்த உள்ளோம். பங்கு பெறுபவர்கள் அங்கேயே தங்கிக் கொள்ளலாம்.
சனிக்கிழமை காலை 10 முதல் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 வரை சுமார் பத்து அமர்வுகளாக சிந்தனை முறைமைகள், விவாத முறைமைகள் மற்றும் கேள்வி கலை குறித்து ஜெயமோகன் உட்பட வெவ்வேறு ஆளுமைகளின் வகுப்புகள் நடைபெற உள்ளன. நாம் பங்கு பெறும் ஒரு மாதிரி விவாத அரங்கமும் இதில் உண்டு.
நாம் குளிர் சாதனங்களுக்கான மின்சாரம் மற்றும் டீசல் கட்டணம், மற்றும் நமது உணவு செலவு ஆகியவற்றை பகிர்ந்து கொண்டால் போதுமானது.
வர விரும்புவோர் நமது நண்பர்களையும் அவர்கள் பெயர் விவரம் உள்ளிட்ட விவரத்தை எனக்கு முன்பே அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த சந்திப்பில் பங்கேற்க விரும்புபவர்கள்,
பெயர் :
வயது :
தற்போதைய ஊர் :
தொழில் :
மின்னஞ்சல்:
செல் பேசி எண் :
ஆகிய விபரங்களுடன் மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் இடம் உறுதி செய்யப்பட்டவுடன் சில நாட்களில் பதில் மின்னஞ்சல் அனுப்பப்படும்.
தொடர்புக்கு:
கிருஷ்ணன், ஈரோடு