சந்திப்புகள் கடிதங்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு,

ஈரோட்டில் புதிய வாசகர் சந்திப்பை நடத்தியதற்கு முதலில் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். பணிச்சுமைகளுக்கு மத்தியில், இரண்டு நாட்களை ஒதுக்கி, எங்களுக்கு பயனுள்ள வகையில் இந்நிகழ்வை கொண்டுசென்ற உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

உங்களைப் போன்ற ஆளுமையை நான் இதுவரை சந்தித்ததில்லை. எழுத்துகளின் மூலம் இலக்கியத்தில் உங்கள் தீவிரத்தை அறிந்திருந்தேன், நேரில் பார்த்த பின் அது உங்கள் பேச்சிலும், செயலிலும் எதிரொலித்தது தெரிந்தது. நிகழ்வில் நாங்கள் நினைத்தது மேல் பெற்றது அதிகம். எங்களின் சில அடிப்படை கேள்விகளுக்கும் ஆழமான பதில் அளித்தீர்கள். படைப்பை அணுகும் முறைகள் பற்றி கூறினீர்கள். ஒரு விழிப்பு நிலையில் இருந்து இனி படைப்புகளை வாசிக்க இது கைகொடுக்கும். எவ்வித தடங்கலும், கவனச் சிதறலும் இன்றி நீங்கள் உரையாடுவதை பார்க்க, தியான நிலையில் இருந்து பேசியதாகவே தோன்றியது. வியந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.  இதுபோல் அந்த இரண்டு நாட்களில் நேரடியாகவும் மறைமுகவாகவும் கற்றுக்கொண்டது ஏராளம். மேலும் பங்குகொண்ட நண்பர்களின் ஈடுபாடும், ஆர்வமும் புத்துணர்வை அளித்தன.

இலக்கியத்தின் மீது புரிதலை, ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்த உங்களுக்கும், ஒருங்கிணைப்பாளர்களுக்கும், உடன் கலந்துகொண்ட நண்பர்களுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.

சூர்ய பிரகாஷ்

 

ஜெ,
முன்பு, முக்கியமற்றவற்றை எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டுமா என்ற தயக்கம் இருந்தது.

ஆனால், யோசித்துப்பாருங்கள். வாசகர் கடிதங்களை வாசித்து ஜெமோ தனது நேரத்தை வீணடித்துவிட்டார் என்ற எண்ணமே எவ்வளவு அபத்தமாக இருக்கிறது.

மேலும், உங்களுடன் தினமும் உரையாடுவது என்பது…

// ஒரு சொல்லும் பேசவில்லை என்றாலும் என் முன் அமர்ந்திருந்தவர்களும் என்னிடம் விவாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.//

என்ற அதே வகையில், நீங்கள் பதில் அளிக்கவில்லை என்றாலும், நீங்கள் என்னுடன் உரையாடிக்கொண்டு தான் இருக்கிறீர்கள் & உங்களுடனான உரையாடல் எனக்கு ஒரு ஊந்துதலாகவும் இருக்கிறது.

மானுடம் வெல்லும் வாசிக்க தொடங்கி முதல் அத்தியாயம் முடித்துள்ளேன். கதைக்குள் செல்ல விடாமல், கூடுதலாய் தொற்றி நிற்கும் சொற்கள் கவனத்தை சிதறடித்துக்கொண்டே இருக்கிறது. 344 பக்கங்கள்… ஒரு நல்ல தொகுப்பளர் இருந்திருந்தால் 50 பக்கங்களையாவது குறைத்திருக்கலாம் என தோன்றுகிறது.

முழுதாய் வாசித்து விட்டு, விரிவாக எழுதுகிறேன்.

அன்புடன்,

லாஓசி.

ஜெ,

நேற்றைய கட்டண உரையில் தான் நான் உங்களை முதன்முதலாகப் பார்த்தேன். நடுவரிசையின் ஓரத்தில் அமர்ந்து வாயிலையே பார்த்துக்கொண்டிருந்தேன். நீங்கள் முதலில் ஒருகணம் வாயிலில் மின்னிமறைந்தீர்கள். பத்துநிமிடங்கள் கழித்து உள்ளே வந்தமர்ந்து சிறிதுநேரத்திற்குப் பிறகு மேடையில் ஏறியவுடன் அவைக்கு ஒரு சிறுவணக்கம் வைத்தீர்கள். இதுவரை உங்களது எந்த யூடியூப் உரையிலும் பதிவாகாத வணக்கம் அது. உரை வழக்கம்போல. கொஞ்சும் நாஞ்சில்நாட்டுத் தமிழ். எனக்குப்பிடித்த தமிழ்குரல்களில் ஒன்று.

தேனீர் இடைவேளையின்போது என்னருகே இருந்த இருவர் உங்களுடன் பேசுவதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். எவரும் அணுக்கமுடியாதென்றும், ராஜ குமார குமாரிகளுக்கு மட்டுமே திறக்கும் வாயிலென்றும். எனக்கு உடனே ஞாபகம் வந்தது ‘சக்கரவர்த்தியின் வருகை’ – இதே சென்னையில் நீங்கள் கநாசுவைப் பார்த்தது. பெரும்பாலான கட்டுரைகளை படித்திருந்தாலும் உங்களிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று இடைவேளையில் உரையாடும் காந்தியை வாங்கினேன்.

உரை முடிந்தபின்பு நண்பர்களிடம் சிரித்துக்கொண்டே இருக்கைகளுக்கு நடுவே நடந்துவந்து கொண்டிருந்தீர்கள். நான் பாதையின் ஓரத்தில் நின்றேன். மனதில் எந்த சொல்லும் இல்லாமல் ஒருவித தத்தளிப்புடன் நின்றுகொண்டிருத்தேன். ஒவ்வொருவராக பெயர்சொல்லி கைகுலுக்கிக் கொண்டிருந்தனர். மாறா புன்னகையுடன் நீங்கள் ஒவ்வொருவரையும் தழுவி வந்துகொண்டிருந்தனர். சூழ்ந்திருந்தவர் சொன்ன கேட்ட அனைத்தையும் உங்களது “ஓ”, “அப்படியா” என்ற குரல் என் நினைவுக்குச் செல்லாது தடுத்துவிட்டது. என்னருகில் வந்தவுடன் இயல்பாக என் கையை இடதுகையில் பிடித்துக்கொண்டு சூழ்ந்திருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தீர்கள். ஒரு அம்மா தன் குழந்தையை உங்களிடம் ஆசிர்வாதம் வாங்கச் சொன்னதை “பரவாயில்ல இருக்கட்டும். உன் பேரென்ன” என்ற உங்களின் வார்த்தைகளில் இருந்து புரிந்துகொண்டேன். நான் உங்களைப் பார்த்தவுடன் செய்யவேண்டியது என எண்ணிக் கொண்டிருந்ததும் அதுதான். என் ஆணவம் அடிபணியும் என்பதில் எனக்கு ஒரு சந்தேகமும் இருக்கவில்லை. விழுந்து வணங்கியபின் பெயரையும் உங்களுக்கு முன்பே சில முட்டாள்தனமான கடிதங்கள் எழுதியிருக்கிறேன் என்றும் சொல்லவேண்டும் என்று ஒருவாரமாக எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் என்னால் அசையாது நின்றுகொண்டிருக்க மட்டுமே முடிந்தது. என் கைகளை நீங்கள் விட்டு விலகிச் சென்றபின் தான் உணர்ந்தேன் என் பெயரைக் கூட சொல்லவில்லை என்பதை.

வாசலில் நீங்கள் செல்ஃபீயைப் பற்றி பேசி சிரித்துக்கொண்டு கூட்டம் கொஞ்சம் கலைந்தபின் வண்டியை எடுப்பதற்காக  நின்றுகொண்டிருந்தீர்கள். நான் உரையாடும் காந்தியை உங்களிடம் நீட்டினேன். ‘அன்புடன் ஜெயமோகன்’ என்று கையெழுத்துப் போட்டு தந்தீர்கள். அப்பொழுதும் அறிமுகப்படுத்திக் கொள்ளும் துணிவு எனக்கு வரவில்லை. ‘அதுதான் நாளை வளசரவாக்கத்தில் பார்க்கப்போகிறோமே’ என்று சமாதானம்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

பேருந்து கிடைக்காமல் அலைந்து திரிந்து பசியுடன் வீடுவந்து சேர்ந்தபின்பும் மனம் முழுதும் இனிமை நிறைந்திருந்தது. புன்னகையோடு தூங்கச் சென்றே பலநாட்கள் ஆகின்றன. (நினைவுக்குத் தெரிந்து அது அபிமன்யு அஸ்தினாபுரி நுழைந்த இரவு. அன்று நள்ளிரவில் வெடித்துச் சிரித்துக்கொண்டிருந்தேன். சாத்யகி தன்மக்களை யாதவனிடம் கூட்டிச் சென்ற நாள் அதைவிட இனிமையானது தான். அத்தருணம் பொன்னொளி கொண்டெழுந்த நாளினை மேலும் இனிமை கொள்ளச் செய்தது) தூக்கத்திலும் இனிமை கனவுகளில் ஊறிக் கொண்டிருந்தது.

இன்று காலை பதினொரு மணியளவில் வளசரவாக்கம் வந்து சேர்ந்தேன். நீங்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் தயங்கி நுழைந்தபோது ஈரோடு கிருஷ்ணன் அண்ணா வரவேற்றார். நீங்கள் நண்பர்களோடு தேனீர் குடிக்கச் சென்றிருந்தீர். கிருஷ்ணன் அண்ணாவும் வினோத் அண்ணாவும் பேசிச்சிரித்துக் கொண்டிருந்தனர். கொஞ்சநேரம் கழித்து கிருஷ்ணன் அண்ணா “நீங்க இன்னும் உங்கள அறிமுகப்படுத்திக் கொள்ளலியே” என்று கேட்டார். குரலை உள்ளிருந்து அகழ்ந்தெடுத்து பெயரைச் சொன்னேன். நீங்கள் நண்பர்களுடன் வந்து அறைக்குள் சென்றீர்கள்.

கொஞ்சநேரம் கழித்து நீங்கள் வந்து சோபாவில் அமரந்தவுடன் சபை களைகட்டியது. நான் உங்களுக்கு இடதுபுறம் தரையில் அமர்ந்திருந்தேன். இன்று நான் கற்றதவிட இதற்குமுன் என்றாவது கற்றிருந்தேன் என்றால் அது உங்கள் இணையதளத்தின் கட்டுரைகளை காலையில் இருந்து படித்த நாட்களாகத்தான் இருக்கும்.

ஈரோடு விவாதம் பயிற்சிப் பட்டறையை இணைய ஒளிபரப்பு செய்யலாமா என்று ஆரம்பித்த பேச்சு விவாத முறைமைகளைப் பற்றி, தமிழ்ச்சூழலின் ‘விவாத மரபைப்’ பற்றி சென்றுகொண்டிருந்தது. அங்கிருந்து அது விஷ்ணுபுரத்திற்கு வந்தபோது ராஜகோபாலன் அண்ணா வெண்முரசு விக்கியைப் பற்றிப் பேச உரையாடலை நகர்த்திக் கொண்டுவந்தார். நான் வந்ததும் விக்கியில் எழுதுவதைப் பற்றி பேசத்தான்.

விக்கியில் எழுதுவதை -முக்கியமாக எழுதக்கூடாததைப்- பற்றி நாங்கள் பேசவேண்டும் என்று வந்ததை முழுவதுமாக பேசி முடிக்கவில்லை. ஆனால், உரையாடல் எங்கள் கைகளில் இல்லாமல் நழுவிச் சென்றுகொண்டிருந்தது. ஒவ்வொரு நொடியும் கற்றுக்கொண்டிருந்ததால் நாங்களும் அந்த ஒழுக்கில் நீந்திக்கொண்டிருந்தோம். வெண்முரசின் ஒட்டுமொத்த வடிவம், பௌத்தம், சமணம் என்று என் அறிவு விரிவடைந்து கொண்டிருந்தது.

பெரும்பாலான நேரங்களில் உங்கள் பக்கவாட்டு முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். எப்பொழுதும் வாய்மூடாமல் பேசிக்கொண்டிருப்பீர் என்பது உங்கள் மீது வேடிக்கையுடன் வைக்கப்படும் குற்றச்சாட்டு. அருண்மொழி அக்காவும் இன்று வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அதைச் சொல்லித்தான் எங்களை சிரிக்க வைத்தார்கள். ஆனால் நான் பார்த்தவரை எனக்குத் தெரிந்ததெல்லாம் உங்கள் பெரிய காது தான். பிறர் சொல்வதை ஒருபோதும் கேட்காதவனுக்கு எதற்கு பெரிய காதுகள்? சிறியதாய் இருந்தாலும்கூட காதுகள் தேவையில்லாமல் தூக்கிச் சுமக்கும் எடைதானே.

உண்ணும்பொழுது காஷ்மீர் பாகிஸ்தானைப் பற்றி பேசிக் கொண்டிருந்தீர்கள். கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்த மது அண்ணாவும் ராஜகோபாலன் அண்ணாவும் சற்றே விலக, முழுவதுமாக என்னைப் பார்த்து இம்ரான் கானைப் பற்றி பேசிக்கொண்டிருந்தீர்கள். மனத்துக்கினிய ஜெ, இன்று முழுதும் நீங்கள் பேசியதில் அந்த இரண்டு நிமிடங்கள் மட்டும் எனக்குள் செல்லவே இல்லை. இனிய பதற்றம்.

உணவுக்குப்பின் ஒரே சிரிப்புதான். பலமுறை உங்கள் கட்டுரைகளில் நண்பர்களுடன் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தோம் என்று படிக்கையில் நானும் ஒருநாள் அந்தக்கூட்டத்தில் இருப்பேன் என்று நினைத்துக் கொள்வேன். இன்று நாகர்கோவில் முழுவதும் புகழ்பெற்ற, வீயாரெஸ் வாங்கி எழுத்தவந்த ‘சினிமா எழுத்துக்காரன்’ சொன்ன நகைச்சுவைக்கு நான் வெடித்துச் சிரித்துக்கொண்டிருந்தேன்.

பின்பு ஒரு தனிப்பேச்சுக்காக நீங்கள் மீண்டும் அறைக்குள் நுழைந்தபோது நான் விடைபெற்றேன். “கிளம்பிட்டீங்களா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டு எனக்கு கைகொடுத்து விடைதந்தீர்கள். அப்பொழுதும் நான் பாதம் பணியவில்லை. பெயரையும் சொல்லவில்லை. ஜெ, நிச்சயமாக என் வாழ்வின் முக்கியத் தருணங்களுள் சிலவற்றை இந்த இருநாட்களில் ஈட்டியிருக்கிறேன். ஆனாலும் உங்கள்முன் நிற்கும் போதெல்லாம் பாம்பின்முன் நிற்கும் எலியென தான் நின்றிருந்தேன். நாம் மீண்டும் சந்திப்போம். அன்று குறிப்பிடத் தக்கதாக நான் எதாவது எழுதியிருப்பேன். அன்று தயக்கத்துடன் என்பெயரைச் சொல்வேன். இன்றுபோல் அன்றும் மாறா புன்னகையுடன் என்னை அணைப்பீர்கள். ஆனால் அன்று உங்கள் கண்களும் சிறிது மின்னும்.

கிளம்பும்வரை உங்களிடம் நான் அறிமுகமாகவில்லை. நீங்களும் என்னைப்பற்றி எதுவும் கேட்கவில்லை. ஒருவேளை ஏற்கனவே நாம் அறிமுகமாகியிருப்போம் -முகம் மறந்திருக்கும்- என நீங்கள் நினைத்துக்கூட எதுவும் கேட்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய நாளையும் நான் இனிமையுடன் கடக்க நேற்று உரை முடித்து வரும்போது நீங்கள் என் கையை இரண்டு நிமிடங்கள் பிடித்திருந்ததே போதுமாயிருக்கிறது. சக்கரவர்த்தியுடன் பேசுவதற்கு கொஞ்சம் தகுதி வேண்டும் ஆனால் தேவனின் கையை எல்லாரும் பிடித்துக்கொள்ளலாம். ஒருநாள் உங்களை முதன்முதலில் சந்தித்த கணத்தை மீண்டும் எழுதுவேன்.
எனக்கே இதுவரை எழுதியது கொஞ்சம் உளரலாகத்தான் தெரிகிறது. ஆனால் இதை எழுதும்போதும் தித்திப்புடன் புன்னகையுடன், கை நடுக்கத்துடன்தான் எழுதுகிறேன். மீண்டும் சந்திப்போம் ஜெ.

அன்புடன்
செந்தில்நாதன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-77
அடுத்த கட்டுரைமேடை உரை பற்றி…