ஜெ வணக்கம்
நீங்கள் உங்களுக்கு சாகசங்களில் (adventure sports) எல்லாம் விருப்பம் இல்லை என்று கூறி இருந்தீர்கள். ஆனால் நாகர்கோயிலில் இருந்து உங்கள் காரிலியே மதுரை வரை ஒரே நாளில் சென்று வந்துள்ளீர்கள் !!!!
ஒரு உரை ஏன் குறிப்பிட்ட 200 நபர்கள் பார்வைக்கு மட்டுமே இருக்க வேண்டும்?கட்டணம் செலுத்த விருப்பம் உள்ளவர்கள் எங்கிருந்தாலும் இந்த டிஜிடல் யுகத்தில் கட்டண உரைகளை பார்ப்பதற்கு ஏதுவாக இருந்தால் நன்றாக இருக்கும்.
Vimeo தளத்தில் Vimeo-on-demand என்ற முறை இருக்கிறது. காணொளிகளை தளத்தில் பதிபவர், அதற்கு ஒரு விலையை நிர்ணயக்கலாம். அதை பார்க்க விரும்புவர் காணொளிகளை வாடகை கட்டணமோ(ஒரு முறை பார்க்க) செலுத்தியோ அல்லது முழு கட்டணம் (unlimited viewing) செலுத்தியோ வாங்கி கொள்ளலாம்.
காணொளிகளை தளத்தில் வளையேற்றுவதற்கு ஒரு சிறிய மாத கட்டணமும், வரும் விற்பனையில் குறைந்த சதவீதமும் கட்டணமும் அந்த தளத்திற்கு அளிக்க வேண்டும்.
இந்த சுட்டியில் விபரங்கள் உள்ளன
https://vimeo.zendesk.com/hc/en-us/articles/235764787-Start-selling-with-Vimeo-On-Demand
அன்புடன்
சதீஷ் கணேசன்
அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு.,
நேற்று ஒரு வாசகர், தன் நண்பர் உங்கள் ‘கட்டண உரை’ மூலம் நீங்கள் பணம் சேர்க்கிறார் என்ற அவதூறுக்கு, பேசி திருத்தமுடியாது என்று விட்டுவிட்டதாக கூறினார். இத்தளத்தில், ஏற்கனவே கட்டண உரை பற்றிய விரிவான விவாதம் நடந்தது என்றே நினைக்கிறன். அவர் அதை தன் நண்பருக்கு சுட்டிக்காட்டவில்லை போலும். அம்மாதிரி பேர்வழிகளுக்கு அரைமணி நேரமாவது ‘லக்சர்’ கொடுக்கவேண்டும். (அவர்கள் திரும்பி கொடுத்தாலும், அதை பொருட்படுத்தாது !) அவர்கள் கருத்துநிலையில், ஒரு அணுவசைவேனும் தென்படலாம். அப்படி இல்லையென்றால் “சோ” அவர்களுது பாணியை பின்பற்றலாம். பகடி செய்து அவர்களின் பொன்னான இதழ்களை மூட செய்வது. என்னிடமெல்லாம் யாரவது இதைப்பற்றி தங்களின் ‘மேலான’ கீழ்மை கருத்தை தெரிவித்தால் , இப்படித்தான் பதில் சொல்வேன்.(ஆமா.,அந்தாளு அட்லாண்டாவுல ஒரு பண்ணை வீடு வாங்கி போடணும்னு யோசிச்சிட்டிருக்காரு.! அதுக்கு காசு வேணும்ல…இப்படி நடத்துனாதாம் உண்டு. மத்த தமிழ் எழுத்தாளர்கள் மாதிரியா, ஆட்டோவுக்கு நூறு ரூவா கொடுக்க அடுத்தவர் கையை எதிர்பார்ப்பதற்கு ? எங்காளெல்லாம் வேற லெவலாக்கும்…) என்று பில்டப் கொடுப்பேன். அந்த பதிலுக்கு, அவர் வாய் திறப்பதற்குள் வைகை சென்னையிலிருந்து மதுரையை நெருங்கியிருக்கும் .
இவ்வசைகள் எல்லாம் ஒரு எழுத்தாளனின் ஆளுமையை அன்றாட நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளாது வெளியில் இருப்பவர்கள் போடும் கூச்சல்களே. இதற்கு மீண்டும் மீண்டும் விரிவான பதில்கள் அவசியமா எழுத்தாளரே ?
பின் குறிப்பு : நேற்று தங்களை நன்கு வாசிக்கும் நண்பர்களெல்லாம் பேசிக்கொண்டிருந்தபோது எழுந்த உரையாடல் ,
நண்பன் 1 : ஏன்டா , முந்நூறு சீட்டுங்கறாரே ?
நண்பன் 2: அப்படீன்னா , முந்நூறு ரூவாய சேத்தா , தொண்ணூறாயிரம்ல வருது?
நான் : எப்படியும் அந்த அரங்கத்துக்கு ஒரு இருபது னாயிரத்துக்கு மேலா கேக்க போறாங்க?
நண்பன் 1 : ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு பத்தாயிரத்த கொடுத்து தாட்டி உட்ருவாரு, இதர செலவெல்லாம் சேத்து ஒரு பத்தாயிரம்.
நான் : அப்ப, அவருக்கு அம்பதாயிரம் நிக்கும்ல.!
நண்பன் 2 : டேய்.,இதெல்லாம் காசா அந்தாளுக்கு , வருஷம் ரெண்டு பெரிய பட்ஜெட் படம் எழுதுறாரு, அதுல எப்படியும் ஒரு கோடி வராது?
“ஆமா ஆமா கண்டிப்பா” என்று ஆமோதித்து சிரித்துக்கொண்டோம். இதில், மனதார யாரும் கேலி செய்யவில்லை, எல்லாம் ஒரு ‘கிக்’காக மட்டுமே. மற்றபடி, நாங்கள் அக்மார்க் நல்ல வாசகர்கள் தான்.
கார்த்திக் குமார்
துறையூர்.
ஜெ,
யாருனு தெரியாதவன் (ங்க)லாம் standup comedy என stageல மொக்க போட காசு தரும்… காசு தருவதை பற்றி கவலை கூட கொள்ளாத சமுகம், ஒரு அறிவு பரிமாற்றத்திற்கு காசு தருவதை ஏன் எதிர்க்கிறது??
இலக்கியத்தை கேளிக்கையாக பார்த்தாலும் எல்லா கேளிக்கைக்கும் இங்கு விலை தான். சினிமாவில் தொடங்கி. இலக்கியத்தை ஒரு அறிதலாக பார்த்தாலும் எல்லா அறிதல் வகைக்கும் காசுதான். கல்வி.. பள்ளி.. கல்லூரி, டியூசன், கோச்சிங் செண்டர் என கற்பதற்கு காசு தரவும் தயஙகுவதில்லை.
உங்கள் உரையின்மேல் மட்டும் ஏன் விமர்சனம்??
கேள்விகளுடன்,
ரியாஸ்
அன்புள்ள ஜெ
கட்டண உரைக்கு வந்தகூட்டமும் அதைப்பற்றி நிகழும் பேச்சுக்களுமே உண்மையில் இந்தவகையான அறிவுப்பரிமாற்றம் தேவை என்னும் எண்ணத்தை உருவாக்கின.
சிலநாட்களுக்கு முன்பு இதே ஆகுதி பதிப்பகம் சார்பில் ஒரு நூல்வெளியீடு நிகழ்ந்தது. அதில் நான் கலந்துகொண்டேன். அதில் அகரமுதல்வன் வெளியிட்ட ஒரு நூல் வெளியிடப்பட்டது. அதில் பா.செயப்பிரகாசம் என்னும் எழுத்தாளர் பேசினார். நான்கே நான்கு வரிகள் அந்த நூல்பற்றி. அதன்பின் அகரமுதல்வன் ஏன் ஜெயமோகனிடம் நட்பாக இருக்கவேண்டும், ஜெயமோகன் யார் தெரியுமா அவர் ஈழம் பற்றி என்ன சொன்னார் என்று தெரியுமா என்று ஒருமணிநேரம் பொழிந்தார். அதற்கு ஜெயமோகனை விட ஈழம்பற்றிய கடுமையாக கருத்துகொண்டவர்கள் இன்னின்னார் அவர்களிடம் நீங்கள் நட்பாக இல்லையா, துணிவிருந்தால் அவர்களை இங்கேயே ஒருவார்த்தை கண்டித்துப்பேசுங்கள் என்று அகரமுதல்வன் சொன்னார்.
சூடான இலக்கியச்சண்டை. ஆனால் நான் திரும்பும்போது நினைத்துக்கொண்டேன். இந்தச்சண்டைதான் ஃபேஸ்புக்கிலும் நிகழ்கிறது. இதிலே நான் எதுக்காகக் கலந்துகொள்ளவேண்டும்? ஏன் என் நேரத்தை வீணடிக்கவேண்டும்? இந்த எண்ணம் இருந்ததனால்தான் நான் இந்தக்கூட்டத்திலே கலந்துகொள்ளவில்லை. கூட்டம் மிகமிக பயனுள்ள முறையில் நிகழ்ந்தது என்று தெரிந்துகொண்டேன். இனிமேல் கட்டணம் கட்டாமல் கூட்டத்துக்கே போகக்கூடாது, கட்டணம் கட்டிப்போனால் இந்த வெட்டிப்பேச்சுக்களில் இருந்து தப்பிக்கலாம் என நினைத்துக்கொண்டேன். ரிட்டயர்ட் ஆன பலர் வம்புப்பேச்சுக்காக திண்ணைதேடி அலைகிறார்கள். நான் தொழில்செய்பவன். ஒரு நாள் என்பது எனக்கு சிலஆயிரங்கள் மதிப்புள்ளது. இனிமேல் இவ்வாறு வந்து கேட்பவனை கருத்தில்கொண்டு அமைக்கும் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே செல்லவேண்டும் என நினைத்துக்கொண்டேன்
எம்.ராஜசேகர்