கட்டண உரை, ஐயங்கள்

urai

சென்னை கட்டணக்கூட்டம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

சென்னையில், உங்கள் கட்டண உரை சிறப்பாக அமைந்தது.அதனை தொகுத்துக்கொள்ள சில நாட்கள் ஆகக்கூடும்.

இக்கடிதம் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தோ தேசியகீதமோ இசைக்கப்படாதது பற்றி.

முன்பு ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது தேசியக் கொடிக்கும் தேசியகீதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தீர்கள்.எனவேதான் உங்களின் வெறுப்பாளர்கள் கேட்கும்முன் கேட்கிறேன்வேறு காரணங்கள் ஏதாவது உன்டா அல்லது நிழ்ச்சியாளரின் கவனக்குறைவினால் விடுபட்டுவிட்டதா

அன்புடன்

கா.சிவா

அன்புள்ள சிவா

இலக்கியக்கூட்டங்கள் வேறு, இலக்கியவிழாக்கள் வேறு. விழா என்பது பலர் கலந்துகொள்ள வாழ்த்துப்பண், வரவேற்புரை, நன்றியுரை என முறையாக அமைக்கப்படுவது. இலக்கியக்கூட்டம் என்பது ஒருவரோ சிலரோ ஒரு கூட்டத்திடம் பேசுவது.

இந்தியாவில் அரசு, அரசுசார் விழாக்களுக்கே நாட்டுப்பண் பாடப்படவேண்டும் என்பது சட்டம். அரசுநிகழ்ச்சிகளிலேயேகூட பிற சந்திப்புகள் உரையாடல் நிகழ்ச்சிகளுக்கு நாட்டுப்பண் பாடப்படுவதில்லை. நடைமுறைப்பபடி விழாக்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண் பாடப்படலாம்.

இது விழா அல்ல, உரைநிகழ்வே. ஆகவேதான் இங்கே தமிழ்த்தாய் வாழ்த்தோ நாட்டுப்பண்ணோ பாடப்படவில்லை.

ஜெ

urai 2

திரு ஜெமோ

சென்னை கட்டண உரையில் விஐபிக்களுக்கு இருக்கை அளிக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். யார் அந்த இலக்கிய விஐபிகள்? இலக்கியத்தில் விஐபிக்கள் சாதாரண மனிதர்கள் என்ற பிரிவினை எப்போது ஆரம்பித்தது?

கே. ராஜேஷ்

அன்புள்ள ராஜேஷ்

என் மேலும் விழாவின் மேலும் இந்தச் சிறுவிமர்சனத்தை மட்டுமே உங்களால் கண்டடைய முடிந்தது என்பது நிறைவளிக்கிறது.

இத்தனை கூர்ந்து நோக்கிய நீங்கள் அந்த விஐபி இருக்கைகளில் எவர் இருந்தார்கள் என பார்த்திருக்கலாம். சிறப்பு அழைப்பாளர்களான இதழாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மட்டுமே. சிறப்பு அழைப்பாளர்களுக்கு, அவர்கள் அழைக்கப்பட்டார்கள் என்பதனால் இருக்கை வசதி அளிக்கவேண்டியது அமைப்பாளர் பொறுப்பு. ஆகவே அந்த ஏற்பாடு.

சிறப்பு அழைப்பாளர்களாக அமைப்பாளர்களால் அழைக்கப்பட்ட எழுத்தாளர்கள் அனேகமாக எவருமே வரவில்லை என்பதனால் இறுதியில் பிறரே அவ்விருக்கைகளில் அமர்ந்தனர்.தப்பித்தவறி எழுத்தாளர்கள் வந்து அவர்களுக்கு சிறப்பு இருக்கை அளிக்கப்படவில்லை என்றால் நீங்கள் வேறு ஒரு கேள்வியை கேட்டிருப்பீர்கள்.

ஜெ

urai33

அன்புள்ள ஜெ

கட்டண உரை சிறப்பாக நிகழ்ந்தது அறிந்தேன். விழாவுக்கு நான் அரைமணிநேரம் தாமதமாக வந்தேன். இடமில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் விஐபி பகுதியில் சில இருக்கைகள் இருப்பதைக் கண்டேன். இலக்கியவிழாக்களை நீங்கள் இப்படி கறாராக நேரம் கணித்து நடத்தினால் பங்கெடுப்பவர்கள் வந்துசேரமுடியாது. இங்கே உள்ள டிராஃபிக் பிரச்சினை நீங்கள் அறியாதது அல்ல. ஒருமணிநேரம் கழித்துகூட சிலரை உள்ளே விட்டார்கள் என விழாவில் பங்குகொண்ட என் நண்பர் சொன்னார்.

ஜெயராமன்

அன்புள்ள ஜெயராமன்

சென்னையிலேயே சினிமாக்கள் சரியான நேரத்துக்குத்தான் தொடங்குகின்றன. சரியான நேரத்துக்கு தொடங்குவது ஏற்கனவே வந்திருப்பவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது.  வராதவர்கள், வருவார்களா என தெரியாதவர்கள் கண்முன் இல்லாதவர்களுக்கு அளிக்காத வாக்குறுதியை நிறைவேற்றுவதைவிட  வந்து கண்முன் அமர்ந்திருந்தவர்களுக்கு அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவதுதானே சிறப்பானது?

ஏற்கனவே கட்டணம் கட்டியவர்கள் சற்று பிந்தினாலும் அனுமதிக்கப்பட்டார்கள். சிறப்பு அழைப்பாளர்களும் அனுமதிக்கப்பட்டார்கள். அதை தவிர்க்கமுடியாது.

ஜெ

முந்தைய கட்டுரைஇரு கதைகள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெள்ளையானை கடிதங்கள்