சென்னை கட்டணக்கூட்டம்
ஆசிரியர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்கள் கட்டண உரை மிக நன்றாக இருந்ததாக கேள்விப்பட்டோம்.
ஒரு இசைக் கச்சேரிக்கு சென்று பாடல்களைக் கேட்கும் அனுபவத்தை கைக்கொள்கிறோம். அங்கு அந்த singer ஒரு performer. அவர் ஏற்கனவே இருக்கும் ஒரு composition-ஐ render செய்கிறார். அந்த experience miss ஆனால், வேறோர் இடத்தில் கிட்டத்தட்ட அதே version-ஐ கேட்டு விடலாம்.
ஆனால் ஒரு கட்டண உரையில் நீங்கள் புதிதான ஒரு thought process-ஐ create செய்கிறீர்கள். முக்கியமான வித்தியாசம் நீங்களே விரும்பினாலும் அதே version-ஐ உங்களாலேயே எங்கும் recreate செய்ய முடியாது (கட்டுரை வடிவில் நீங்களே எழுதினால் ஒழிய..). அங்கொன்றும் இங்கொன்றுமாக ideas எடுத்து கையாளப்படலாமே ஒழிய, அதே உரை இன்னொரு முறை நிகழாது.
இத்தகைய உரை அதன் ஒரிஜினல் form-ல் dvd ஆகவோ, கட்டுரையாகவோ புத்தகமாகவோ ஆவணப்படுத்தப்பட வில்லையென்றால், 300 ஜோடி செவிகளுக்கு அப்பால், it is lost forever.. யார் எவ்வளவு இதைப் பற்றி எழுதினாலும் அவை எல்லாம் அவருடைய interpretations மட்டுமே.
கட்டணம் என்பது discerning audience-ஐ பெறுவதற்காக என்பதும் புரிகிறது. ஆகையால் இத்தகைய உரைகள் paid live broadcast-ஆகவோ, paid download link-ஆகவோ, dvd ஆகவோ விருப்பமுள்ளவர் அனைவருக்கும் கிடைக்கும்படி ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். தொலைத் தொடர்பு என்பது இத்தனை சுலபமாக இருக்கும் கால கட்டத்தில், physically வேறோர் இடத்தில் இருப்பது என்பது ஒரு knowledge seeker-ஐ பழங்காலம் போல் இத்தனை limit செய்யக் கூடாது.
நன்றி,
கல்பனா ஜெயகாந்த்.
அன்புள்ள கல்பனா,
கட்டண உரை வலையேற்றம் செய்யப்படும். ஆனால் அதை கட்டணம் இல்லாமல் வலையேற்றுவது பொருந்தாது. கட்டணம் பெற்றுக்கொண்டு அதை கேட்கச்செய்ய ஏதோ அமைப்பு தேவைப்படுகிறது. விரைவில் அதை செய்துவிடுவார்கள் என நினைக்கிறேன்.
ஜெ
இனிய ஜெ சார்,
சென்னை கட்டணக்கூட்டம் பற்றிய குறிப்பை படித்தேன். வெளியூரில் வாழ்வதால் அதை கேட்க முடியாமல் போன வருத்தம் இன்னும் பெரிதாகிப் போனது. என்னை போன்ற உங்களது வாசகர்களுக்காக, முடிந்தால் ஒரு சி.டி. வகையிலோ அல்லது தளத்தில் அல்லாமல் நேரடியாக கட்டுரைகளாக புத்தக வடிவிலோ உங்களது கட்டண உரைகளை வெளியிட்டால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். நீங்களே குறிப்பிட்டது போல உங்களது உரைகள் மிகவும் செறிவானவை. அவற்றை நேரடியாக கேட்டவர்களுக்கு கூட மீண்டும் ஒரு reference க்காக புத்ததகமாக வெளியிட்டால் பயனுள்ளதாக அமையும் .
அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்.
அன்புள்ள கிருஷ்ணன் ரவிக்குமார்
விரைவிலேயே இணையத்தில் வரும் என நினைக்கிறேன்.
ஆனால் மின்வடிவில் அல்லது வேறேதேனும் வடிவில் உரையை கேட்பதற்கும் நேரில் கேட்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. நாடகங்களைப் பார்க்கும் வழக்கம் உள்ளவர்களுக்குத் தெரியும், நாடகம் சினிமாவைவிட பலமடங்கு தீவிரமான அனுபவம் என. ஏனென்றால் நம் முன் ஒரு மனிதன் தன் உணர்வுகளுடனும் கருத்துக்களுடனும் நின்றிருக்கிறான் என நம் ஆழுள்ளத்திற்குத் தெரியும். நாம் அவனை கூர்ந்து பார்ப்பது உயிரின் அடிப்படை இயல்பு. மேடைப்பேச்சில் இரண்டரை மணிநேரம் ஒருவரை கூர்ந்து நோக்கி அவர் சொல்வதை புரிந்துகொள்கிறோம். அந்தக் கூர்வு பிற வடிவுகளில் இருக்காது. அது நிகரிப்பாவை என நமக்குத்தெரியும். கற்பனையால் அதை மனிதர் என உருவாக்கிக்கொள்கிறோம். அதற்கு ஓர் எல்லை உண்டு. ஆகவேதான் கலைகளில் உயர்ந்தது மேடைப்பேச்சே என்றும் நாடகமே மேடைப்பேச்சின் இன்னொரு வடிவமே என்றும் அரிஸ்டாடில் கருதுகிறார்.
என் உரை சிறந்ததா என தெரியவில்லை, ஆனால் அதன் எல்லைக்குள்ளேயேகூட அது கூரிய சிந்தனைகளையும் உணர்வுகளையும் அளிக்கத்தக்கது. நீங்களே எண்ணிநோக்குக, நீங்கள் பல ஆண்டுகளுக்கு முன் கேட்ட உரைகளைக்கூட மறந்திருக்க மாட்டீர்கள். பல நூல்கள் முற்றாகவே மறந்துவிட்டிருக்கும். உரையை நேரடியாகக் கேட்பதற்கு நிகரே இல்லை.
ஜெ