சிவஇரவு

 si[சித்தர் காடு]

சென்னை கட்டண உரை நிகழ்வுக்கு வந்து இங்கே நண்பர்களுடன் கொட்டமடித்துக்கொண்டிருந்தபோது ராஜகோபாலன் நான்காம்தேதி  சிவஇரவு என்று சொன்னார். அவர்கள் சென்ற ஐந்தாண்டுகளாகவே அன்று இரவு முழுக்க கார்களில் சென்னையைச் சுற்றி இருக்கும் சிவன்கோயில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். சென்னையைச் சுற்றி அந்த அளவுக்கு தொன்மையான, முதன்மையான சிவன் ஆலயங்கள் உள்ளன. சென்னை எனக்கு அறிமுகமே இல்லாத ஊர். ராஜகோபாலன் சென்னையில் திளைப்பவர். அவருடன் சென்றுதான் சென்னையின் புறநகர்களை ஒட்டி இருக்கும் கோயில்களை பார்த்தேன். திருநீர்மலையே ஓர் அழகிய ஆலயம். சென்னையில் வாழ்பவர்கள் இரண்டு மணிநேரத்திற்குள் சென்று சேரும் தொலைவில் அழகிய சிற்றூர்ப்பின்னணியுடன் ஐம்பது தொன்மையான ஆலயங்களாவது உள்ளன என்று ராஜகோபாலன் சொன்னார்.

siva7

ஆகவே உரைக்குப்பின் நானும் அருண்மொழியும் இங்கேயே தங்கிவிட்டோம். நான்காம்தேதி மாலை ஐந்துமணிக்கே நண்பர்கள் கூடினர். எட்டு மணிவாக்கில் நான்கு கார்களில் அனந்தமுருகன், மாரிராஜ், சிவக்குமார் ஹரி, கே.பி.வினோத், வெண்பா கீதாயன், சண்முகம், சௌந்தர், ராஜகோபாலன், தங்கபாண்டியன், ராகவ், காளிப்பிரசாத், அருணாச்சலம் மகாராஜன், ஸ்ரீனிவாசன், சுதா, சந்தோஷ், ரவிகுமார், சுரேஷ்பாபு ஆகியோர் கிளம்பிச் சென்றோம். சென்னைக்குள்ளேயே ஏராளமான சிவன்கோயில்கள் வரிசைக்குமிழ்விளக்கொளியால் அணிசெய்யப்பட்டு பாட்டும் வாழ்த்தொலிகளுமாக கொந்தளித்துக்கொண்டிருந்தன. உண்மையில் சென்னையில் சிவஇரவு இவ்வளவு பெரிய விழா என நான் எண்ணியே பார்த்ததில்லை.

siva2

சென்னைக்கு வெளியே செல்லவே ஒன்பது மணி ஆகிவிட்டது. பத்துமணிக்கு சித்தர்காடு ஆலயம் சென்றோம். சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை செல்லும் வழியில் எட்டு கிமீ தொலைவில் உள்ளது இந்த ஆலயம். ஹரிசரணநல்லூர், சௌகந்திகாபுரம் என்றெல்லாம் இந்த ஊருக்கு பெயர் உள்ளது. இங்குள்ள கோயில்மரம் நெல்லி. நெல்லிக்கு தாத்ரி என சம்ஸ்கிருதப் பெயர். ஆகவே இந்த சிவன் தாத்ரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

siva77

நாங்கள் சென்றபோது நல்ல கூட்டம். வாசலிலேயே பக்தர்களுக்கு சாம்பார்சாதமும் டீயும் வழங்கிக்கொண்டிருந்தனர். உள்ளே அறுபத்துமூவர் பற்றிய ஒரு காணொளி ஓடிக்கொண்டிருந்தது. கோயிலைச்சுற்றிய முற்றத்தில் பாய்களை விரித்து அமர்ந்தும் படுத்தும் பெண்கள் கூடியிருந்தார்கள். படையல் ஆகிக்கொண்டிருந்தமையால் சற்று பொழுதாகும் என்றார்கள். ஆகவே ஆலயத்தை இருமுறை சுற்றிவந்தோம். உள்ளே சுற்றுப்பிராகாரத்தில் அழகிய சிலைகள் உள்ளன. வழக்கமாக சென்றால் சிலைகளை தனித்தனியாக நின்று பார்ப்போம். அன்றைய விழா உளநிலையில் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகவே பார்க்க இயன்றது.

siva3

ஆலயமுகப்பில் இருந்த மாகாளைச் சிலை மிக அழகானது. அதற்கு மூக்கணாம்கயிறு இல்லை என்பதை ஒரு சிறப்பாக சொல்கிறார்கள். அதைச்சூழ்ந்தே பக்தைகள் அகல் விளக்கு கொளுத்திக்கொண்டிருந்தனர். விளக்கை நந்தி பக்கத்திலே வைக்காதீங்க, கீழே வையுங்க என ஓர் அம்மையார் மன்றாடிக்கொண்டே இருந்தார். அவர்கள் செவிகொடுக்கவே இல்லை. கோயிலுக்குள் லட்சுமி சரஸ்வதி சிலைகளுக்கு நிகராக கன்னியம்மன் சிலை இருந்தது. இப்படி வேறெங்காவது இருக்கிறதா என்று தெரியவில்லை.

நேர் எதிரில் ஒரு பெருமாள்கோயில்.  சுந்தரவல்லி உடனுறை சுந்தரராஜப் பெருமாள். அங்கே கருடனுக்கும் தனி சிற்றாலயம் உண்டு. அதுவும் சித்தர்களின் சமாதியிடம்தான் என ஒரு நம்பிக்கை. அந்த மண்டபத்தில் அமர்ந்து ராஜகோபாலன் வகையறா வாங்கிக் கொண்டுவந்திருந்த இட்லியை சாப்பிட்டோம்.  இந்தப் பயணத்தில் சர்க்கரைப்பொங்கலை சாப்பிட முடியும் என ஆசைப்பட்டேன். கடைசிவரை அமையவில்லை. சாம்பார்சாத்ததை அருண்மொழி சாப்பிட்டாள். எனக்கு அது அவ்வளவு உகந்த உணவு அல்ல. அதுவும் இரவில்.

திருநின்றவூர்
திருநின்றவூர்

திருநின்றவூருக்குச் சென்றபோது நள்ளிரவு ஆகியிருந்தது. பழைமையான ஊர். நூறாண்டுகள் பழைமையானவை எனத் தோற்றமளித்த வீடுகள் கொண்ட தெரு.  வளையோடு போட்ட கூரைகள், தாழ்ந்த திண்ணைகள், சுதையாலான சுவர்ப்பூச்சு. திருநின்றவூர் பெரும்பாலும் சென்னைக்குள் வந்துவிட்டிருந்தது. செல்லும்வழி முழுக்க புதிய அடுக்ககங்கள் கட்டப்படுவதை கண்டேன். இங்குள்ள பெருமாள் கோயில் பக்தவத்சலப்பெருமாள். தமிழில் நச்சினார்க்கினியர் என்று சொல்லலாமா?

சைவ நாயன்மார்களில் ஒருவரான பூசலார் திருநின்றவூரில் பிறந்தார். அவர் தன் நெஞ்சிலேயே சிவனுக்கு ஆலயம் அமைத்தார். சோழன் பெருஞ்செலவில் கட்டிய ஆலயத்தின் குடமுழுக்குக்குச் செல்லாமல் சிவபெருமான் பூசலார் நெஞ்சில் கட்டிய ஆலயத்திற்கு வந்தார் என்பது தொன்மம். இங்கே பூசலாரின் சிலை கருவறைக்குள் சிவனுக்கு அருகே அமைந்துள்ளது ஒரு சிறப்பு என்கிறார்கள்.

thiruvaஇதயத்தில் வாழ்பவர் என்பதனால் ஹ்ருதயாலீஸ்வரர் என்பது சிவனின் பெயர்.  திருநின்றவூர் என்பது அதேபொருள்கொண்ட பெயர்தான். [உடனே இதயநோயாளிகளுக்குரிய கோயிலாக ஆகிவிடும் என்றார் ராஜகோபாலன்]. பெரிய கோயில். நகருக்கு அண்மையில் என்பதனால் பெருங்கூட்டம்.  ஆனால் வணங்கிச் சென்றுகொண்டே இருந்தார்கள். ஆகவே நெடுநேரம் காத்திருக்காமல் வழிபட்டோம். அங்கே மசாலா போட்ட சாம்பார் சாதம் வழங்கிக்கொண்டிருந்தார்கள். அந்த சூழலுக்கு ஒவ்வாத மணமாக இருந்தது.

 thirupasu[திருப்பாசூர்]

அங்கிருந்து திருப்பாசூர். இம்முறை சாலையில் பெரிய நெரிசல் இல்லை. ஆனால் இருபுறமும் ஏராளமான மக்கள் நடமாடிக்கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே உள்ள சிறிய சிவன்கோயில்களில் சிவஇரவு கொண்டாட்டம் நிகழ்ந்துகொண்டிருந்தது. பின்னிரவில் சாலையில் அவ்வளவு பெண்களை பார்க்கையில்தான் அவர்கள் அதை எவ்வளவு பெரிய விடுதலையாகக் கருதுகிறார்கள் என்று புரிந்தது. எங்களூரிலும் அன்றெல்லாம் திருவிழா என்றால் பெண்களுக்கு இரவில் நடமாடும் விடுதலை கிடைக்கும் நாள் என்றே பொருள்.

திருப்பாசூர் தொண்டை மண்டலத்திலுள்ள தொன்மையான சைவத்தலங்களில் ஒன்று. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடப்பட்ட இடம் இது. நெடுங்காலம் செங்கல் தளியாக இருந்த கோயில் சோழர் காலத்தில் கற்றளியாக கட்டப்பட்டது. இங்கே மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டு உள்ளது. இறைவனின் பெயர் வாசீஸ்வரர்.  பாசி என்றால் பழந்தமிழில் மூங்கில். இந்த ஆலயத்தின் கோயில்மரம் மூங்கில். பாசீஸ்வரர் என்பது வாசீஸ்வரர் ஆகியிருக்கலாம். வாசி என்றால் யோக மரபில் மூச்சு. ஆகவே இன்று மூச்சின்இறைவன் என்ற பொருளில் சொல்கிறார்கள்.

siva1

திருப்பாசூரின் கோபுரம் விந்தையானது. தொண்டைமண்டலத்தில் சில இடங்களில் இத்தகைய கோபுரங்கள் உள்ளன. கலசங்கள் நீள்வாட்டில் இருக்கும். வண்டிக்கூரை வடிவக் கோபுரத்தின் பின்பக்கம் அரைவட்டமாக அமைந்ததுபோல. கருவறையின் பின்பகுதி வளைவாக அமைந்திருப்பதை கஜபிருஷ்டம் [யானைப்புறம்] என்பார்கள். கோபுரத்திற்கு அப்பெயர் சொல்லப்படுவதுண்டா என்று தெரியவில்லை. தூங்கானை என ஒரு பெயர் உண்டு. இதுவா என கேட்டுப்பார்க்கவேண்டும். [தொங்கும் யானை?] இருளில் என்னால் கோபுரத்தை சரிவர பார்க்க முடியவில்லை. இங்குள்ள லிங்கம் தான்தோன்றி. அதை தொட்டு வழிபடுவதில்லை. அனைத்து பூசனைகளும் பாவனையே.

siva88

தாயாருக்கு தன்காதலி அம்மை என்று பெயர் உள்ளது என எழுதி வைத்திருந்தனர்.  அதன்பொருளும் சரியாகத் தெரியவில்லை. இங்கே மூவர் பாடிய பாடல்களை எழுதி வைத்திருந்தார்கள்.

முந்தி மூஎயில் எய்த முதல்வனார்

சிந்திப்பார் வினை தீர்த்திடும்  செல்வனார்

அந்திக்கோன் தனக்கே அருள் செய்தவர்

பந்திச் செஞ்சடைப் பாசூர் அடிகளே

என்னும் பாடலில் நிலவை அந்திக்கோன் என வகுத்திருப்பது அழகிய சொல்லாட்சி எனத் தோன்றியது. ஆனால்

நாறு கொன்றையும் நாகமும் திங்களும்

ஆறும் செஞ்சடை வைத்த அழகனார்

காறு கண்டத்தர் கையதோர் சூலத்தர்

பாறின் ஓட்டினர் பாசூர் அடிகளே.

siva99
என்ற பாட்டை குலத்தர் என எழுதியிருந்தனர். பலமுறை வாசித்தபின்னர்தான் சூலத்தர் என்பதே சரியான வடிவம் என தெரிந்துகொண்டேன். பாடமாறுபாடுகள் உருவாகும் வழி விந்தையானது!

பாசூரில் இப்போது திருப்பணி செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான சிலைகளை துணிபோட்டு மூடி வைத்திருந்தார்கள். எங்கும் பொடி நிறைந்திருந்தது. மிகப்பெரிய ஆலயம். ஆனால் சிவஇரவு அன்றுகூட கூட்டம் ஏதுமில்லை.  அங்கு திருப்பணிக்குழுவைச் சேர்ந்த சிலர் இருந்தனர். ஆர்வத்துடன் கோயில் பற்றிய செய்திகளை சொன்னார்கள். அங்குள்ள துர்க்கை சிலை காலில் தளையிடப்பட்டிருக்கும் என்றார். துணியை விலக்கி அது உண்மைதான் என தெரிந்துகொண்டோம்.

இறுதியாக திருவாலங்காடு. அக்காலங்களில் சுடுகாட்டில் ஆலமரம் வைக்கும் வழக்கம் உண்டு – நினைவு மரமாக.  ஆகவே சுடுகாடு ஆலங்காடு எனப்பட்டது பட்டினத்தாரின்

வீடு நமக்கு திருவாலங்காடு விமலர் தந்த

ஓடு நமக்குண்டு வற்றாத பாத்திரம் ஓங்கு செல்வ

நாடு நமக்குண்டு கேட்டதெல்லாம் தர! நன்நெஞ்சமே

ஈடுநமக்குச் சொலவோ ஒருவரும் இங்கில்லையே

என்ற வரி நினைவுக்கு வந்தது.  வீடு சுடுகாட்டில். திருவோடோ வற்றாதது. கேட்டதெல்லாம் தரும் நாடும் உண்டு. நமக்கு இணைசொல்ல எவர்? என பெருமிதம்கொள்கிறார் பட்டினத்தார் ’

s9

இவ்வூரின் சம்ஸ்கிருதப்பெயர் வடாரண்யம். வடவிருக்ஷம் என்றால் ஆலமரம்.  கிபி 11-ஆம் நூற்றாண்டில் முதலாம் ராஜேந்திர சோழனால் கற்றளியாக எடுத்துக் கட்டப்பட்டது இந்த ஆலயம்.  முதலாம் ராஜேந்திரன் காலகட்டத்தில் வெளியிடப்பட்ட திருவாலங்காட்டுச் செப்பேடுகளைப் பற்றி பள்ளியில் படித்திருப்போம். இங்குள்ள அம்மனுக்கு நிலக்கொடை அளித்ததைப் பற்றிய அரசாணைகள் அவை.  இவ்வூருக்கு அருகே பழையனூர் நீலி கோயில் உள்ளது. திருவாலங்காட்டிலும் காளி ஒரு தனிக்கோயிலில் அமைந்திருக்கிறாள். அப்பர் சுந்தரர் சம்பந்தர் காரைக்கால் அம்மையார் ஆகியோர் இந்த இறைவனை பாடியிருக்கிறார்கள்

சிவன் நடனமாடிய ஐந்தம்பலங்கள் சைவத்தில் புகழ்பெற்றவை. அவற்றில் இந்த அவை அரத்தினஅவை எனப்படுகிறது. சிதம்பரம் பொன்னம்பலம்,  மதுரை மீனாட்சியம்மை ஆலயம் வெள்ளியம்பலம்,  நெல்லையப்பர் கோயில் தாமிர அம்பலம், குற்றாலநாதர் ஆலயம் சித்திர அம்பலம். இங்கே சிவன் காளிக்கும் ஊர்த்துவதாண்டவம் ஆடிக்காட்டினார் என்பது தொன்மம்.

s7

இந்த  ஆலயத்தில்தான் காரைக்கால் அம்மையார் மூத்த திருவாலங்காட்டுப் பதிகம் பாடி இறைவனை அடைந்தார் என்பது தொல்கதை. இங்கே காரைக்கால் அம்மையாரின் அழகிய செப்புச்சிலை உள்ளது. பேயுரு கொண்டவர் காரைக்காலம்மை. அந்த முகத்தில் அன்னையின் கனிவை கொண்டுவர முடிந்தவன் பெருங்கலைஞன். ஒப்புநோக்க காந்தாரத்தின் புகழ்பெற்ற பட்டினிபுத்தரின் சிலை ஒரு படி குறைவானதே. அம்மை விண் ஏகியபோது சிவனே “வருக அம்மையே” என அழைத்ததாக சொல்வதுண்டு.

விடியற்காலை ஐந்து மணிக்கு திரும்பி வந்தோம். நினைவறிந்த நாள் முதல் கோயில்களுக்கு சென்றுகொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இப்படி இரவெல்லாம் கோயில்களுக்குச் சென்றது இதுவே முதல்முறை. எங்கும் நிறைந்திருந்த மக்கள் திரள் ஒரு கொண்டாட்ட உணர்வை அளித்தது.

karaikal-ammaiyar

இறுதியில் எஞ்சியது காரைக்காலம்மையின் பேய்ப்புன்னகை. மூத்தபதிகத்தின் இறுதிச்செய்யுள்.

புந்தி கலங்கி மதிமயங்கி இறந்தவரைப் புறங்காட்டில் இட்டு

சந்தியில் வைத்து கடமைசெய்து தக்கவர் இட்டசெந்தீ விளக்கா

முந்தி அமரர் முழலின் ஓசை திசை கதுவச் சிலம்பி ஆர்க்கஆர்க்க,

அந்தியில் மாநடம் ஆடும்எங்கள் அப்பன் இடம்திரு ஆலங்காடே.

துயரால் அறிவுமயங்கி உற்றாரை புறங்காட்டுக்குக் கொண்டுசென்று சிதையில் ஏற்றி கடமை செய்து அவர்களின் உறவினர் இட்ட செந்தீயை விளக்காகக் கொண்டு ஆடுபவன். அமரரின் முழவின் ஓசையுடன் சிலம்போசை கலக்க அந்தியில் ஆடுபவன். அவன் இடம் திருஆலங்காடு என்கிறார் காரைக்காலம்மையார்.  எவ்வளவு கருமையான அழகியல்! கடுவெளி அளவுக்கே முடிவிலாத கருமை.

முந்தைய கட்டுரைகட்டண உரை இணையத்தில் – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-74