சென்னை கட்டணக்கூட்டம்

urai y

மார்ச் 1-ஆம் தேதி கிளம்பி 2-ஆம்தேதி காலைதான் சென்னைக்கு வந்தேன். அருண்மொழி வந்திருந்தாள், அஜிதனும் வந்தான். ஒருநாள் முன்னராகவே வரமுடியுமா என அகரமுதல்வன் கேட்டார். ஏனென்றால் இது கட்டண உரை. இத்தகைய நிகழ்ச்சியின் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் ஏதேனும் காரணத்தால் நிகழ்ச்சி நடக்காமல்போனால் பணத்தை திருப்பி அளிக்கவேண்டும், பணம் வசூலிப்பதைவிட பெரிய வேலை அது. ஆகவே நான் முன்னரே வந்துவிட்டிருந்தால் பதற்றத்தை தவிர்க்கலாமென்று அவர் நினைத்தார். என் பிரச்சினை என்னவென்றால் ஒருநாள் முன்னரே வந்தால் அன்று பகலிலும் இரவிலும் நான் நண்பர்களுடன் பேசிச்சிரிக்காமல் இருக்க முடியாது. மறுநாள் களைப்புடன் இருப்பேன். சென்றமுறை பரியேறும்பெருமாள் நிகழ்ச்சியில் பேசியபோது அந்தக்களைப்பும் இருந்தது.

நிகழ்ச்சி அன்று வந்ததுமே நான் என் உரையை தயாரிக்கத் தொடங்கிவிட்டேன். முன்பெல்லாம் உரை தயாரிப்பு என்றால் முழுமையாக கட்டுரையாக எழுதிவிடுவேன். அதை மனப்பாடம் செய்து ‘ஆற்றொழுக்காக’ பேசுவேன். ஆனால் அதில் ஒரு நினைவுகூரல் அம்சமே இருந்தது. இப்போது மேடைப்பதற்றம் கொஞ்சமும் இல்லை. பேசுவது எளிதாக ஆகியிருக்கிறது. அங்கேயே சிந்தனைகள் வருவதும் நிகழ்கிறது. முழுமையாக உரையை தயாரித்துக்கொண்டோம் என்றால் அதை நினைவுகூர்வதே நிகழும். ஆகவே உரையை குறிப்புகளாகவே தயாரிப்பேன். அக்குறிப்புகளை பலமுறை திரும்ப எழுதி சுருக்கி மிகச்சிறு குறிப்பாக ஆக்கிக்கொண்டு மேடை ஏறுவேன். பெரும்பாலும் குறிப்பை பார்ப்பதில்லை. அந்தக்குறிப்புகளில் இருந்து எங்கெல்லாம் பறந்தெழுகிறேனோ அங்கெல்லாம் முன்பிலாத கருத்துக்கள் வெளிப்படும். அது புனைவில் நான் இயல்பாக வெளிப்படுவதுபோலவே படைப்பூக்கம் கொண்ட ஒரு நிகழ்வு

urai

நான் எடுக்கும் குறிப்புகள் என்பவை ஒரு அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கவே. உதாரணமாக இந்தக் கட்டண உரை இருபகுதிகள். இருபகுதிகளிலும் ஏழு துணைப்பகுதிகள். அவற்றுக்குள் சராசரியாக ஆறேழு கருத்துக்கள். இந்தக் கட்டமைப்பை உருவாக்கிக்கொள்ளாமல் நான் மேடையேறுவதில்லை. இதிலிருந்து மேலே செல்வேன், ஆனால் இதிலிருந்து அகன்று செல்லமாட்டேன். இதனால் என் உரை ஒருபோதும் முன்னரே திட்டமிட்ட நேரத்தைக் கடந்து வளர்வதில்லை. கூடிப்போனால் ஐந்துநிமிடம் நீளக்கூடும். நான் கடிகாரத்தை பார்ப்பதில்லை. முடித்துவிட்டு நேரம் பார்க்கையில் ஏறத்தாழ சரியாகவே இருக்கும்.

பிறர் உரைகளில் எனக்கு சிக்கலாக இருப்பது அவர்கள் நினைவுகூரும் போக்கில் பேசிச்செல்வது. உரை எதைநோக்கி என்பது எனக்குள் இருக்கும் என்பதனால் அவர்கள் பேசிப்பேசி வளைந்துசெல்கையில் அமைதியிழப்பேன். நினைவுகூரப்படுவன ஒன்றோடொன்று இயல்பாக இணைவுகொண்டிருப்பதும் இல்லை. இன்னொன்று பொய்உச்சங்கள். இதோ பேச்சு முடியவிருக்கிறது என எண்ணும்போது மீண்டும் ஒன்று நினைவுக்கு வர அவர்கள் தொடர்கையில் என் உள்ளத்தில் நான் உருவாக்கிக் கொண்டிருக்கும் உரையின் கட்டமைப்பு குலைகிறது. உரைக்கு கட்டமைப்பு ஒன்றை நாம் உருவாக்கிக் கொள்வது அவ்விரு பிழைகளையும் தவிர்க்கும். அதை கேரளத்தின் மாபெரும் பேச்சாளரான எம்.கே.சானு மாஸ்டரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

urai5

நாம் பேசத்தொடங்கிய சற்றுநேரத்திலேயே அந்தக் கட்டமைப்பு கேட்பவர் உள்ளத்திலும் உருவாகிவிடும் என்பதனால் அவர்களுக்கும் பேச்சு நீள்கிறது என்னும் சலிப்பு இருப்பதில்லை. இதுவரை என் அனுபவம் என் உரைகள் அரங்கின் கூர்ந்த கவனிப்பில்லாமல் சென்றதே இல்லை என்பதே. அரங்கு சற்று கவனமிழந்தாலும் என்னால் பேசமுடிவதுமில்லை. என் எழுத்துக்கு முற்றிலும் சம்பந்தமில்லாதவர்கள் நிறைந்த அரங்குகளில்கூட என்னை நோக்கி கவனம் குவிந்திருப்பதையே இதுவரை கண்டிருக்கிறேன். அவ்வாறு இருக்காது என நான் நினைக்கும் அரங்கில் ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் பேசிமுடித்துக்கொள்வேன். கூடுமானவரை அத்தகைய உரையை தவிர்ப்பேன்.

ஆனால் என் உரைகளை எங்குபேசினாலும் என்னால் முடிந்தவரை தீவிரமாக, முடிந்தவரை ஆழமாக ஆற்றவேண்டும் என்பதே என் எண்ணம். பல அரங்குகளில் என்னிடம் அமைப்பாளர்கள் நிகழ்ச்சிக்கு முன்பே “எங்க ஆடியன்ஸ் கொஞ்சம் சாதாரணம்தான்.. அதுகேத்தாப்ல பேசினா நல்லது” என்பார்கள். நான் அந்த சமரசத்தை செய்துகொள்வதில்லை. கல்லூரிகளில் மாணவர்களுக்கு எந்த அறிவார்ந்த பயிற்சியும் இருக்காது என எனக்கும் தெரியும். ஆனால் அவர்களிடமும் தீவிரமாகவே பேசவேண்டும் என நினைக்கிறேன். அவர்கள் அறியாத தீவிர அறிவுலகம் ஒன்று இருக்கிறது என வேறு எப்படித்தான் அவர்கள் தெரிந்துகொள்வார்கள்? ஆகவே வழக்கமான செய்திகள் கிடையாது. வழக்கமான உணர்ச்சிகளும் இருக்காது. குட்டிக்கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் சொல்லமாட்டேன். அனைத்தையும்விட முக்கியமாக ஒரு கருத்தை பலமுறை வெவ்வேறு சொற்களில் விளக்க மாட்டேன். என் வழி உருவகங்கள் படிமங்கள் வழியாக பேசுவது. நிகழ்வுக்குறிப்புகளை உருவகங்களாக ஆக்கிக்கொள்வது.

urai33

என்னிடம் தமிழகத்தின் தேர்ந்த பேச்சாளர் ஒருமுறை சொன்னார். “உங்க பேச்சிலே அழகான பல விஷயங்கள் சொல்றீங்க. ஆனால் என்ன பிரச்சினைன்னா சொல்லிட்டே போறீங்க. நம்மாட்கள் அப்டியே விட்டிருவாங்க. இங்க எந்தக்கருத்தையும் மூணுமுறை தொடர்ச்சியா சொல்லணும். ஒருமுறை சொன்னதும் அப்டியே இன்னொரு வகையா திருப்பிச் சொல்லணும். ஒரு உதாரணம் சொல்லிட்டு மறுபடியும் அதே கருத்தைச் சொல்லி நிறுவிட்டு அடுத்ததுக்கு போகணும்”. அவரே பேசிக்காட்டினார். “கம்பராமாயணம் ஒரு செவ்வியல்நூல். அதாவது அது ஒருகிளாஸிக், கிளாஸிக்கைத்தான் செவ்வியல்னு சொல்லுங்க. தமிழிலே பல செவ்வியல்நூல்கள் இருந்தாலும் கம்பராமாயணம்தான் செவ்வியல்களிலே உச்சம். அதனாலேதான் பாரதி யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்னு முதல்ல சொல்றான். தமிழிலே முதன்மையான செவ்வியல்நூல் கம்பராமாயணம்’. கம்பராமாயணம் ஒரு செவ்வியல்நூல் என்னும் ஒற்றைவரியாக நான் அதைச் சொல்லிச்செல்வேன். அதை தவிர்க்கவேண்டும் என்றார்.

நேர்ப்பேச்சில் குறிப்புகளும் உட்குறிப்புகளுமாக நூறுசெய்திகளை ஒரே சமயம் கொட்டும் அறிஞர் அவர். மேடையில் துளித்துளியாக பரிமாறுவார். அதுதான் தமிழ் சராசரி அரங்கினரின் அறிவுநிலை என எனக்கும் தெரியும். ஆனால் நான் அவ்வாறல்லாமலும் பேச்சு இருக்கமுடியும் என நினைக்கிறேன். அதற்காகவே என்னை வாசித்து அறிந்து எனக்காக வரும் வாசகர்கள், என் கருத்துக்களுடன் ஏற்கனவே ஒரு தொடர்பு உள்ளவர்கள் அடங்கிய அரங்குக்காக பேசுகிறேன். அதற்கு கட்டண உரை அரங்கு மிக உகந்தது, முந்நூறுரூபாய் கட்டி பேச்சைக்கேட்க வருபவர்கள் பொழுதுபோக்க வருபவர்கள் அல்ல.

sp

அதிலும்கூட ஒன்றை கவனிக்கிறேன். இன்று தமிழகத்தில் எந்தப் பொதுப் பண்பாட்டு அரங்கிலும் இளைஞர்கள் அரிதாகவே தென்படுவார்கள். ஆனால் எங்கள் அரங்கில் எப்போதும் பெரும்பாலும் அனைவருமே இளைஞர்கள். அவர்களுக்கு ஓர் நீண்ட சிக்கலான உரையை உளம்கொள்வதும் புரிந்துகொள்வதும் கடினமாக இல்லை. அரிதாக வரும் ஐம்பது அகவை கடந்தவர்களுக்கு அரைமணிநேரம்கூட செவிகூர முடிவதில்லை. மிக விரைவிலேயே விலகிவிடுகிறார்கள். அடுத்த உரைகளில், ஐம்பது கடந்தவர்கள் தவிர்க்கவும் என அறிவிக்கவேண்டும் என வேடிக்கையாக சொல்லிக்கொண்டிருந்தேன். அவர்களில் விதிவிலக்குகளே அறிவார்ந்த கூர் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எப்போதுமே அறிவியக்கத்தின் உள்ளே இருந்துகொண்டிருப்பவர்கள்.இயல்பாகவே கவனிக்கும் பழக்கம் கொண்டவர்கள்.

ஏற்கெனவே உறுதியான கருத்துநிலை எடுத்துவிட்டவர்கள், அதை சொல்லிச்சொல்லி தனக்கே நிறுவிக்கொண்டே இருப்பவர்களும் அரங்கில் எளிதில் விலக்கம் கொள்கிறார்கள் என்பதையும் கண்டிருக்கிறேன். அவர்க்ளில் பலர் வழக்கமான மேடையுரைகளுக்குப் பழகியவர்கள். என் உரைகள் ஒருவகையான கலைப்புகள்தான். ஏற்கெனவே அவர்கள் அறிந்து அடுக்கி வைத்திருப்பனவற்றை மறுகட்டமைப்பு செய்பவை. சில அடிப்படை வினாக்களை எழுப்புபவை. அதற்கான உளநிலை அரங்கினருக்கு இருக்கவேண்டும். ஆகவே அரங்கை கூட்டுவதைவிட தெரிவுசெய்வதே இன்று முக்கியமானது. கட்டணம் என்பது ஒருவகை சல்லடைதான். அதைக்கடந்து வருபவர்கள் போதும். எப்போதும் கட்டணம் கட்டி வருபவர்களிடம் ‘ஆர்வம் அற்ற வேறு ஒருவருக்கு கட்டணம் கட்டி அனுப்பாதீர்கள்’ என்பது எங்கள் கோரிக்கையாக இருந்தது.

urai

அகரமுதல்வனின் ஆகுதி பதிப்பகம் – பண்பாட்டு அமைப்பின் முதல் சொற்பொழிவு நிகழ்வு இது. [எனக்கு நேர் எதிரான கருத்து கொண்ட ஒருவரின் உரை அடுத்தபடியாக என்று சொன்னார். அவரும் என் நண்பர்தான்]  ஆகவே அவர் இதழாளர்களை சிறப்பு அழைப்பாளர்களாக கூப்பிட்டிருந்தார். அவர்களுக்காக முன்வரிசை இருக்கைகளும் ஒதுக்கியிருந்தார். அவர்களில் இருவர் மட்டுமே வந்தனர். என்னிடம் சிறப்பு அழைப்பாளர்களாக எவரையேனும் அழைக்கவேண்டுமா என்று கேட்டார். அழைக்கலாமா வேண்டாமா என குழப்பம். எழுத்தாளர்கள் கவிஞர்களில் இரண்டு மணிநேரம் அமர்ந்து இன்னொருவர் பேசுவதை கேட்பவர்கள் மிகமிகச்சிலரே. ஓரிரு வரிகளைக் கண்டு கருத்துரைப்பவர்களே மிகுதி.

அழைத்தால் வரக்கூடும் என சிலர் உண்டு. ஆனால் அவர்கள்கூட அழைத்துவிட்டானே, எப்படி தவிர்ப்பது என எண்ணலாம். மொய் வைக்க வருபவர்கள் போல வர நேரலாம். ஆகவே இரு எழுத்தாளர்களையும் இரண்டு சினிமா நண்பர்களையும் மட்டும் அழைத்தேன்.  இரு எழுத்தாளர்களும் எதிர்வினையே ஆற்றவில்லை. மணிரத்னமும் வசந்தபாலனும் வந்தார்கள். அவர்கள் இருவரும் வருவார்கள் என்றும் ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கேட்பார்கள் என்றும் எனக்குத்தெரியும். அவர்கள் வந்தது நிறைவளித்தது.

குறைந்தது 200 பேர் வந்தாகவேண்டும் என திட்டமிட்டிருந்தோம். அதிகபட்சமாக 300 பேர். அரங்கின் கொள்ளளவு 375. முழு அரங்கும் நிறைந்தது. கட்டணச்சீட்டு எடுத்து வராத 25 பேரின் இருக்கைகளுக்கும் அங்கே ஆட்கள் வந்தனர் என்பதனால் 400 பங்கேற்பாளர்கள் எனலாம். சென்னையில் இது பெரிய எண்ணிக்கைதான். உண்மையில் சாதாரண விழாக்களுக்கு, நானே பேசினால்கூட, இந்தக்கூட்டம் வருவதில்லை. அகரமுதல்வனே “கூட்டம் வரணும்னா கட்டணம் வைக்கணும்போல இருக்கே” என்று வியந்துகொண்டார்.

uraiu

ஒரு வாசக நண்பர் சொன்னார். “இப்டி ஒரு கூட்டம்ங்கிறதனாலத்தான் வர்ரேன். என் நேரம் வீணாகாதுங்கிற கேரண்டி இருக்கு. எனக்கு 300 ரூபாய் பெரிய விஷயம் இல்ல. எப்டியும் டீசல் அது இதுன்னு பணம் செலவாயிரும். புத்தக விழாக்களுக்கு போறதே இல்லை. பேசத்தெரியாதவங்க, எந்தத் தயாரிப்பும் இல்லாதவங்க பேசுவாங்க. ஒரு வரிகூட பயனுள்ளதாகவும் இருக்காது, சுவாரசியமாகவும் இருக்காது. நீங்க பேசினாக்கூட கட்டக்கடைசியிலே பேசுவீங்க. அதுக்குள்ள எனக்கு கெளம்புற நேரம் ஆயிடும்”. அதுதான் பிரச்சினை. நம் இலக்கிய அரங்குகள் உண்மையிலேயே வருபவர்களுக்கு பயனுள்ளதாக அமைகின்றனவா என நாம் கணக்கெடுக்கவேண்டிய தருணம் இது.

ஆறுமணிக்கு நிகழ்ச்சி. ஆறுமணிக்கே தொடங்கியது. ஏனென்றால் ஐந்தரைக்கே முக்கால்வாசி அரங்கு நிறைந்துவிட்டது. ஆறரைக்கு மேல்  வந்தவர்களில் முன்னரே கட்டணச்சீட்டு வாங்கிய சிலருக்கே நுழைவொப்புதல் அளிக்கப்பட்டது. அரங்கில் கட்டணச்சீட்டு விற்பனை ஆறுமணிக்கு நிறுத்தப்பட்டுவிட்டது. அரங்கு நிறைந்ததுதான் காரணம். ஆனால் சிலர் என்னிடம் அவர்களை உள்ளே விடவில்லை என முறையிட்டு கடிதம் அனுப்பினர். இருவர் நண்பர்கள்தான். நெடுந்தொலைவு பயணம் செய்து இதற்கென்றே வந்தவர்கள் அரங்கில் நுழைய முடியாமல் திரும்பிச்செல்லநேர்ந்தது.

ஆனால் நடைமுறையை நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும். கட்டண உரை என்றால் அதில் அரங்கினருடன் ஓர் ஒப்பந்தம் உள்ளது. நம் விருப்பபடி பிந்தமுடியாது. அவர்கள் பணம்கொடுத்து அமர்ந்திருப்பவர்கள்.  அவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருக்கையில்  வருகையாளர்கள் உள்ளே வந்து அமர்வது இடம் தேடுவது எல்லாவற்றையும் தொந்தரவாகவே நினைப்பார்கள். பணம் கொடுத்தமையாலேயே உரையை முழுமையாக கவனிக்கவேண்டும் என கோர அவர்களுக்கு உரிமை உள்ளது.

அத்துடன் அரங்கு நிறைந்துவிட்டது. பிற அரங்குகள்போல தரையில் அமரச்செய்யவோ நிற்கவைக்கவோ அமைப்பாளர்களுக்கு உரிமை இல்லை. பணம் வாங்கினால் இருக்கை அளித்தே ஆகவேண்டும். அதை எழுதியபோது இரு நண்பர்கள் நான் சென்னையின் போக்குவரத்துச் சிக்கலை உணராமல் பேசுகிறேன் என்றார்கள். அரங்கை கண்ணில் பார்த்தபின் யூ வட்டம் அடித்து வந்துசேர இருபத்தைந்து நிமிடம் ஆகியது என்றார்கள். அரங்கு அமைந்திருக்கும் இடம் ரயில், பேருந்து இரண்டுக்குமே வசதி குறைவானது என்றும் சொன்னார்கள். அது ஒரு சிக்கல்தான்.

urai 2

ஆனால் அரங்கு இசைநிகழ்ச்சிகளுக்குரியதாகையால் துல்லியமான ஒலியமைப்பு கொண்டிருந்தது. இது முக்கியமானது. கட்டண உரையில் அனைவருக்கும் உரை தெளிவாக கேட்டாகவேண்டும். எதிரொலிச் சிக்கல் இருக்கக்கூடாது. பல இலக்கிய நிகழ்வுகளில் அரங்குகளில் ஒன்றுமே தெளிவாக கேட்பதில்லை. ஒலியமைவு மிக மோசமாக இருக்கும். கட்டணம் என ஒன்று வைக்கும்போதுதான் நாம் அரங்கினர் என ஒரு தரப்பு இருக்கிறது என்பதையே உணர்கிறோம்.

அகரமுதல்வன் ஐந்துநிமிடம் அறிமுக உரை அளித்தபின் நான் பேசினேன். முதல் ஒருமணிநேரம் மரபு என வரையறை செய்துகொள்வதன் அடிப்படைப் பிரச்சினைகள். அடுத்த ஒரு மணிநேரம் இன்று நாம் மரபு என எண்ணுவது வரையறைசெய்யப்பட்ட முறைமை பற்றி. மொத்தம் இரண்டுமணிநேரம் இருபதுநிமிடங்கள். பெரும்பாலும் இலக்கியம் வழியாகவே நிகழ்த்தப்பட்ட உரை.

கட்டுரைகளுக்கும் உரைகளுக்கும் உள்ள வேறுபாடு உரையின் தன்னிச்சையான எழுச்சியில் உள்ளது. மேடையில் நாம் அனைத்தையும் தொகுத்து ஒற்றை ஒழுக்காக ஆக்கும்போது பல புதிய கண்ணிகள் அங்கேயே உருவாகி வருகின்றன. பல புதிய திறப்புகள் நிகழ்கின்றன. அவற்றை இன்னொருமுறை எண்ணிப்பரிசீலிக்க நேரமில்லை. உரையின் சிறப்பு என்பது அப்படி நிகழும் புதிய திறப்புகள். எதிர்மறை அம்சம் என்பது அவற்றில் சில உடனடி வெளிப்பாடுகளாக மட்டுமே இருக்கக்கூடும் என்பது. நான் பின்னர் வளர்த்தெடுக்கும் பல கருத்துக்களை மேடையில் தன்னிச்சையாக பேசியபின்னரே நானே அறிந்திருப்பேன். சிலவற்றை விரிவாக்குவேன், சிலவற்றை விட்டுவிடவும் செய்வேன்.

கேட்பவர்களுக்கும் அது ஒரு அறைகூவல். அவர்கள் உடன் ஒழுகி வரும்போது யோசிப்பதில்லை. சென்றபின்னர்தான் அந்தக்கருத்துக்களை தொகுத்து சிந்திக்கவேண்டும். இடைவெளிகளை நிரப்பிக்கொள்ளவேண்டும். விடுபட்ட இடங்களில் கேள்விகளை எழுப்பிக்கொள்ளவேண்டும். அந்த உரையில் இருந்து தங்கள் சொந்தப்பயணங்களை நிகழ்த்தவேண்டும். அதற்குரிய தவிர்க்கமுடியாத வழி ஓர் உரையின் ஒட்டுமொத்தம், சாராம்சம் ஆகியவற்றில் இருந்து மட்டுமே முன்னே செல்வதாகும். எந்த உரையும் ஓர் உரையாடலே. ஒரு சொல்லும் பேசவில்லை என்றாலும் என் முன் அமர்ந்திருந்தவர்களும் என்னிடம் விவாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

நெல்லை உரை, கிருஷ்ணாபுரம் ஆழ்வார் திருநகரி பயணம்

முந்தைய கட்டுரைஇரு கேள்விகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-72