இரு கேள்விகள்

panic-attacks

அன்புள்ள ஜெ

சமீபத்தில் ஒரு குறிப்பில் இஸ்லாமிய தீவிரவாதிகள் என சிலர் சில ஆண்டுகளுக்கு முன் உங்களை அழைத்துச்சென்று மிரட்டி உங்கள் மின்னஞ்சலை வாங்கிக்கொண்டு நீங்கள் எந்தப்புனைபெயரில் எழுதுகிறீர்கள் என சோதனை செய்ததாக சொல்லியிருக்கிறீர்கள். சென்ற பதினைந்து ஆண்டுகளில் பலமுறை இதை சொல்லிவிட்டீர்கள். நீங்கள் ஏன் பயப்படவேண்டும்? இது கோழைத்தனம் அல்லவா?

ராம்மோகன்.ஆர்

அன்புள்ள ராம்மோகன்,

கோழைத்தனம்தான். நான் கோழை அல்ல என்று சொன்னதே இல்லை. நான் எந்தப்படையிலும் போரிடவுமில்லை.

அஞ்சுவது உயிருக்கு அல்ல. அன்று அஞ்சியது பிள்ளைகளுக்காக. இங்கே எழுத்தாளன் எந்தத் தனிமனிதனையும்போல முற்றிலும் பாதுகாப்பற்றவன். இன்று அஞ்சுவது இன்னொன்றுக்காக. இன்று இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நான் கொல்லப்பட்டால் அவர்களின் ஊடகங்களால் நான் பல கள்ளத்தொடர்புகள் கொண்டவன், வட்டிக்கு பணம் கொடுப்பவன், கட்டைப்பஞ்சாயத்து செய்து வந்தவன் என முத்திரை குத்தப்படுவேன். நம் முற்போக்கு, திராவிட கும்பல்கள் அதை சொல்லிச் சொல்லி நிறுவிவிடுவார்கள். சாவதைவிடக் கொடுமை அந்த அவதூறு.

ஜெ

அன்புள்ள ஜெ

பழனிவேள் என்னும் கவிஞரின் இறப்பு பற்றி செய்திகள் வந்தன. நீங்கள் அஞ்சலி எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன். உங்களுக்கு அவர் மேல் நல்லெண்ணம் இல்லையா?

டி.ரவிச்சந்திரன்

அன்புள்ள ரவிச்சந்திரன்,

உண்மையிலேயே அப்படி ஒருவரை நான் கேள்விப்பட்டதே இல்லை. கவிதைகள் எங்கேனும் கண்ணுக்குப் பட்டிருக்கலாம். ஆனால் இன்றைய கவிப்பெருக்கத்தில் நான் கவனித்திருக்க மாட்டேன். மற்றபடி தனிப்பட்ட முறையிலோ படைப்பாளி என்றமுறையிலோ எனக்கு அவரை தெரியாது. நம் கவிஞர்களின் மதுக்கடை சந்திப்புகளில் முக்கியமானவராக இருந்திருக்கிறார். மற்றபடி எவரும் எங்கும் அவரை சொல்லியும் நான் கேள்விப்பட்டதில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைகட்டண உரையில் ஒரு தருணம்- வசந்தபாலன்
அடுத்த கட்டுரைசென்னை கட்டணக்கூட்டம்