துச்சாதனன் படைகளின் நடுவிலூடாக புரவியில் விரைந்துசென்றான். அவன் விழிகள் இருபக்கமும் துழாவி பதறிக்கொண்டிருந்தன. எதிரில் வந்த படைத்தலைவன் காஞ்சனனிடம் “மைந்தர்கள் எங்கே?” என்றான். அதன் பின்னரே தான் பன்மையில் கேட்டுவிட்டிருப்பதை உணர்ந்தான். படைத்தலைவன் குழம்பிய விழிகளுடன் “மைந்தர்கள்…” என்று தடுமாறினான். “என் மைந்தன் எங்கே?” என்று உள்ளில் எழுந்த வினா “ஆம், மைந்தர்கள் எங்கே போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்?” என்றுதான் வெளியே வந்தது. ஆனால் அதற்குள் காஞ்சனன் புரிந்துகொண்டான். “இளவரசர் துருமசேனர் அங்கே சிறிய தந்தையருடன் போரிட்டுக்கொண்டிருக்கிறார்” என்றான். “உடன் சிறிய அரசர் சுபாகு இருக்கிறார்” என்று அவன் சேர்த்துக்கொண்டான்.
அவன் தன் ஆழத்தை புரிந்துகொண்டமை துச்சாதனனை சீண்டியது. ஆகவே திரும்பிப்பார்க்காமல் புரவியில் விரைந்தான். ஓசைகள் செவிகளை மூடியிருந்த போர்க்களத்தில் புரவிக்குளம்படிகள் செவிகளை வந்தடைவதில்லை. ஆகவே போர்க்களத்தில் புரவியில் விரைவதென்பது முகில்களின் மேல் செல்வதுபோல தோன்றும். எப்போதும் அந்த விந்தையை அவன் அகம் விழைந்தது. அவனுடைய அந்த எளிய இன்பங்களை துரியோதனன் அவ்வப்போது ஏளனம் செய்வான். அது இளையவன்மேல் துரியோதனன் காட்டும் அன்பின் ஒரே வெளிப்பாடு என புரிந்துகொண்டிருந்த கௌரவர்கள் வெடித்துச் சிரிப்பார்கள். கோப்பைகளை ஒன்றினுள் ஒன்று என அடுக்கி வைப்பது, நீர் எங்கேனும் வழிந்திருந்தால் விரலால் கோடிழுத்து ஓடைகளாக ஆக்குவது, உலோகப் பொருட்களில் முகம் பார்த்தால் பற்களை இளித்து விழிகளை உருட்டி வேடிக்கை பார்ப்பது என துச்சாதனனால் செய்யாமலிருக்க இயலாத பல இருந்தன.
“அவன் கையில் அந்த வெள்ளிக்கோப்பையைக் கொடு… இன்று முழுக்க விளையாடிக்கொண்டிருப்பான். நாம் சென்று வேலையை பார்ப்போம்” என்று துரியோதனன் சொல்ல பிறர் உரக்க சிரிப்பார்கள். துர்மதன் கோப்பையை நீட்ட துச்சாதனன் நாணத்துடன் அதை வாங்குவான். அதை அருகே வைத்தபின் வேறெங்கோ விழிதிருப்பி அமர்ந்திருப்பான். அவர்கள் வெளியே சென்றதும் கோப்பையை எடுத்து தன் முகத்தை அதில் பார்த்து இளித்துக்காட்டுவான். கதவு திறந்து துர்மதன் எட்டிப்பார்த்து “ஆ, மூத்தவர் அசுரராக ஆகிவிட்டார்!” என்பான். அவனுடன் தலைநீட்டும் துச்சலனும் துச்சகனும் விந்தனும் அனுவிந்தனும் நகைப்பார்கள். ஆனால் பின்னர் துச்சகன் அவனிடம் “என்னாலும் கோப்பைகளில் முகம் பார்த்து பல்லிளிக்காமல் இருக்க இயல்வதில்லை, மூத்தவரே. இது நம்முள் வாழும் தெய்வங்களின் இயல்பா?” என்று கேட்டான். “கொன்றுவிடுவேன்… எழுந்து போடா“ என்று துச்சாதனன் கூச்சலிட்டான்.
துச்சாதனன் புரவியின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். நெஞ்சு தாளா துயரத்துடன் பெருமூச்சுவிட்டான். அவன் விழிகள் நனையவில்லை என்றாலும் விழிநீர் பெருக்கியதாகவே உணர்ந்தான். உதடுகளை கடித்துக்கொண்டு தன்னை இறுக்கி மெல்ல மெல்ல தளர்த்தி அவ்விடம் மீண்டான். களம்பட்ட உடன்பிறந்தாரின் முகங்கள் ஒவ்வொன்றாக எழுந்து எழுந்து வந்தன. எப்போது கண்களை மூடிக்கொண்டாலும் அவர்களின் முகங்களை பார்க்க முடிந்தது அவனால். களத்தில் வெறிகொண்டு போரிட்டுக்கொண்டிருக்கையில்கூட நடுவே ஒரு கனவின் அலை என அவர்கள் வந்துசென்றார்கள். சில தருணங்களில் அவன் களத்தில் இருப்பதையே மறந்து மீண்டு வந்து திகைத்தான். எப்போது தோன்றினாலும் அவர்கள் அனைவருமே துயர்மிக்கவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவர் விழிகளிலும் உதடுகளிலும் அவர்கள் ஒருபோதும் கொண்டிராத ஓர் உணர்வு இருந்தது.
துச்சாதனன் படைகள் நடுவே சென்றபோது அப்பாலிருந்து சுபாகு அவனை நோக்கி புரவியில் பாய்ந்து வந்து கடிவாளத்தை இழுத்து “மூத்தவரே, இங்கே ஏன் வந்தீர்கள்? அங்கே நீங்கள் அரசருக்குக் காவலாக நின்றிருக்கவேண்டிய பொழுதல்லவா இது?” என்றான். “அரக்கர்களின் படை விண்ணிலிருந்து பொழிகிறது. அவர்களை எதிர்கொள்ள முடியாமல் நமது படைகள் அழிந்துகொண்டிருக்கின்றன. அவனை கொல்ல என்ன முயற்சி எடுக்கப்போகிறார்கள்?” துச்சாதனன் “அவனை அங்கர் எதிர்க்கவேண்டும் என அரசர் ஆணையிட்டிருக்கிறார். அங்கர் இப்போது பீமனை எதிர்த்துக்கொண்டிருக்கிறார். பீமனை அவர் இன்றே கொல்லக்கூடும்…” என்றான். சுபாகுவின் முகம் ஒருகணம் மாறி பின் மீண்டது. “நன்று” என்றான்.
துச்சாதனன் “நம் மைந்தர் இங்குதான் இருக்கிறார்களா?” என்றான். “ஆம், மைந்தர்கள் ஓரணியாகத் திரண்டு நின்றிருக்கிறார்கள்” என்றான் சுபாகு. அடுத்த வினாவை கேட்க நாவெழாமல் துச்சாதனன் திணற அவன் உடற்தசைகள் பேரெடையை தூக்க முயல்வதுபோல் அசைந்தன. சுபாகு “அவர்கள் ஒன்றாக நிற்கையிலேயே ஆற்றல்கொண்டவர்கள்… துருமசேனனால் தலைமை தாங்கப்படுகிறார்கள்” என்றான். துச்சாதனன் “நன்று” என்று சொல்லி உளம் சோர்ந்து “நான் பார்த்துச்செல்ல வந்தேன். போர் நிகழ்க!” என்றபின் கடிவாளத்தை இழுத்து புரவியை திருப்பினான்.
சுபாகு அப்போதுதான் அவன் உளநிலையை புரிந்துகொண்டான். “ஆம் மூத்தவரே, நீங்கள் எண்ணுவது சரிதான். பீமசேனரும் மைந்தரும் இன்று துருமசேனனை முதன்மை இலக்குகளில் ஒன்றாக கொள்ளக்கூடும். ஜயத்ரதரை அர்ஜுனர் கொல்வதாக சொல்லுறுதி எடுத்தபோது துருமசேனனைக் கொல்வதாக பீமனும் சொல்லுறுதி பூண்டார் என்றார்கள்” என்றான். துச்சாதனன் தொண்டைமுழை ஏறி இறங்க விழிகள் நீர்கோக்க திரும்பிக்கொண்டான். “ஏற்கெனவே இளையோரிடம் சொல்லியிருந்தேன். மீண்டும் சொல்கிறேன். அவர்கள் துருமசேனனை சூழ்ந்து நிற்பார்கள்” என்றான் சுபாகு. துச்சாதனன் பேச முயன்றான். தொண்டை அடைத்தமையால் அவன் குரல் எழவில்லை.
சுபாகு “அவர்கள் அவனைக் காத்துநின்றிருப்பார்கள்” என்றான். “ஆம்” என்றான் துச்சாதனன். பின்னர் “அவன் இன்று மட்டுமாவது பின்னணியில் நின்றிருக்கட்டும்… படைகளுக்குப் பின்னணியில். இன்று விடிவதற்குள்…” என்றான். “ஆம், இன்று விடிவதற்குள் வஞ்சினம் நிறைவேற்றுவதாக பீமன் சொன்னதாகவே சொன்னார்கள். நான் அதை எண்ணவில்லை. நான் அவனை படைப்பின்னணிக்கு அனுப்பிவிடுகிறேன்…” என்று சுபாகு சொன்னான். துச்சாதனன் “அதை உன் ஆணையாக சொல்… இல்லையேல் மூத்தவரின் ஆணையாக. நான் சொன்னதாக வேண்டாம்” என்றான். “அது எனக்குத் தெரியாதா? செல்க, நான் பார்த்துக்கொள்கிறேன்!” என்றான் சுபாகு.
துச்சாதனன் பெருமூச்சுவிட்டான். “நான் இதை சொல்வதைப்போல் கீழ்மை வேறில்லை. அதை நன்கறிவேன். இறந்தவர் அனைவரும் என் மைந்தரே. ஆனால்…” என்றான். அவன் தோளை தொட்ட சுபாகு “தந்தைக்கு மைந்தன் எப்பொருள் பெறுவான் என நான் அறியேனா என்ன? அவன் வாழ்வான், வெல்வான். அஞ்சாது செல்க, மூத்தவரே! நமக்கு எஞ்சும் மைந்தன் அவனே” என்றான். “நாம் வெல்வோம். துருமசேனன் கௌரவமுடி சூடுவான். அது தெய்வங்களின் ஆணை என தோன்றுகிறது.” துச்சாதனன் “மெய்யாகவே எனக்கு அவன் அரசாளவேண்டும் என்று தோன்றவில்லை. அவன் அரசமகனாக வாழவேண்டும் என்றுகூட எண்ணமில்லை. எங்கேனும் அவன் உயிர்வாழ்ந்தால் மட்டும் போதும். நான் அவனை பார்க்கவேண்டும் என்பதுகூட இல்லை. அவன் இருந்தால் போதும்” என்றான்.
“அவன் வெல்வான், மண்ணாள்வான், சொல்லில் நீடுவாழ்வான். அஞ்சவேண்டாம், நம் குடித்தெய்வங்கள் உடனிருக்கும்” என்றான் சுபாகு. அவன் விழிகளிலும் நீர்மை மின்னுவதை துச்சாதனன் கண்டான். மீண்டும் பெருமூச்செறிந்தபடி அவன் திரும்பிச்சென்றான். ஓசையற்ற குதிரை நடை அவனுக்கு அப்போது அச்சமூட்டியது. நான் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டேனா? இப்போது சுபாகுவை நான் கண்டுபேசியது மெய்யாகவா அன்றி கனவிலா? மெய்யாக இப்படி நாணமில்லாது சென்று விழிநீர் விட்டு கேட்டு சொல்பெற என்னால் இயலுமா? இறந்த பின்னர் மானுடர் தன்னலம் கொண்டவர்களாக ஆகக்கூடுமா? அல்லது தசையழுகி எலும்பு எஞ்சுவதுபோல மானுடரிடம் எது பருமையோ அது மிஞ்சுமா?
அவனுக்குப் பின்னால் குரல் ஒலித்துக்கொண்டிருப்பதைக் கேட்டு துச்சாதனன் நின்றான். புரவியில் குழல்கற்றைகள் எழுந்து பறக்க துருமசேனன் அவனை நோக்கி விரைந்து வந்தான். புரவி விசையழியாது அவனை கடந்துசென்றது. திரும்பி அவனுக்கு நேர்எதிராக வந்து உரக்க மூச்சிரைத்தது. அதன் வியர்வையின் வாடை அந்தப் போர்க்கொந்தளிப்பிலும் தெரிந்தது. “தந்தையே, நீங்கள் இளைய தந்தையிடம் சொன்னது என்ன?” என்றான் துருமசேனன். “நான் ஒன்றும் சொல்லவில்லையே” என்று துச்சாதனன் சொன்னான். “இல்லை, நீங்கள் சொன்னது என்ன என்று நான் அறிவேன்… அதை உங்களால் வாயால் சொல்ல முடியவில்லை. உங்கள் நா கூசுகிறது. ஆனால் நான் அதை இயற்றவேண்டும் என ஆணையிடுகிறீர்கள்” என்று துருமசேனன் சொன்னான்.
“மைந்தா, நான் சொல்வதை நீ புரிந்துகொள்ளவேண்டும்… அளிகூர்ந்து என் சொற்களை நீ செவிகொள்ளவேண்டும்” என்றான் துச்சாதனன். “தந்தையே, சற்றுமுன் தந்தை சுபாகு என்னிடம் படைகளின் நடுவே சென்று ஒளிந்திருக்கும்படி ஆணையிட்டார்” என்றான் துருமசேனன். “நான்…” என துச்சாதனன் நாவெடுக்க “ஆம், அவர் சொன்னதற்குப் பொருள் அதுதான். படைகளின் நடுவே சென்று அணிநிலைகளை ஆளும்படி எனக்கு ஆணையிட்டார். உடனே எனக்குத் தெரிந்துவிட்டது, அவர் ஏன் சொல்கிறார் என. அக்கணமே என் கழையனை மேலேறி நோக்கச் சொன்னேன். நீங்கள் திரும்பிச்செல்வதை கண்டேன்” என்று துருமசேனன் சொன்னான். “உங்களிடம் நேரில் என் எண்ணத்தை சொல்லவேண்டும் என்பதனால்தான் ஓடிவந்தேன்.”
“ஆம், நான் சொன்னேன்” என்றான் துச்சாதனன். “பீமன் இன்று உன்னை கொல்வதாக சூளுரைத்திருக்கிறான்.” துருமசேனன் “உங்கள் நெஞ்சுபிளந்து குருதிகுடிப்பதாக சூளுரைத்திருக்கிறார்” என்றான். “நீங்கள் ஒளிந்துகொள்ள வேண்டியதுதானே? ஏன் களத்திற்கு வந்தீர்கள்?” துச்சாதனன் சீற்றத்துடன் “நான் ஒளிந்துகொள்வதா? அறிவிலி! இப்பிறவியில் என் கடன் என் தமையனுக்குப் பணிசெய்வதும் காவல்நிற்பதும் மட்டுமே” என்றான். துருமசேனன் “ஆம், அவ்வாறு சொல்லியே என்னை வளர்த்தீர்கள். என் தமையனுக்கு பணிசெய்பவனாக, காவல்நிற்பவனாக நான் வளர்ந்தேன். பிறிதொன்று அறிந்தவன் அல்ல. என் கண்ணெதிரே தமையன் கொல்லப்பட்டமைக்குப் பழிதீர்க்கவே அபிமன்யுவை கொன்றேன். களத்தில் அவன் தலையை அறைந்துகொல்கையில் எந்த இரக்கத்தையும் நான் கொள்ளவில்லை. நான் அதை செய்தாகவேண்டும். அது என் கடன்” என்றான்.
“ஆனால் அதன்பொருட்டு நான் வருந்தாமல் இல்லை… இளையவன், நான் என்றும் விழிக்குள் நோக்கி மகிழ்ந்த அழகன்… தந்தையே, அபிமன்யு எனக்கு என் ஆயிரம் உடன்பிறந்தாரில் ஒருவன் மட்டும் அல்ல, அவர்களில் முதல்வனும்கூட” என்றான் துருமசேனன். “இதோ எஞ்சும் தம்பியருக்கு மூத்தவனாக களம் நின்றுள்ளேன். தந்தையே, ஆயிரவரில் இனி எண்பதின்மரே எஞ்சியிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் உளம் சோர்ந்து களம்விட்டு மீளும் இளையோரிடம் நானும் தமையனும் சொல்வோம், இது நம் கடன் என. இங்கு களமெழுந்து உயிர்வைத்துப் போராடுவதற்கே நம் குடியும் குலமும் நாடும் நமக்கு ஆணையிட்டிருக்கின்றன. நாம் பிறந்தது அதன்பொருட்டே. கடமையில் உயிர்விடுபவர்களுக்குரிய விண்ணுலகை நாம் ஈட்டுகிறோம்… தந்தையே, இன்று என் உயிருக்கென அஞ்சி நான் ஒளிந்தேன் என்றால் என் வாழ்க்கைக்கு என்ன பொருள்?”
“ஆம், ஆனால்…” என்றான் துச்சாதனன். “இத்தனை இளையோர் இறந்தபின் நான் இந்தக் களம்விட்டு உயிருடன் மீளலாமா? சொல்க, உங்கள் உளம்தொட்டு கூறுக, அது அறமாகுமா?” துச்சாதனன் பேசாமல் நோக்கி நின்றான். “சொல்லுங்கள், தந்தையே. நான் இந்தக் களத்திலிருந்து உயிருடன் மீள்வேன் எனில் எவ்வகையிலேனும் அது பெருமையாகுமா?” துச்சாதனன் “நான் விழைவது என் செவியால் நீ மடிந்தாய் என்று கேட்கக்கூடாது என்று மட்டுமே” என்றான். “ஆனால் அச்சொல் உங்கள் செவிகளில் விழுவதுதானே அறம்?” என்றான் துருமசேனன். துச்சாதனன் முதுகெலும்பு சொடுக்குவதுபோல் உணர்ந்தான். “தந்தையே, இந்தப் பேரழிவுக்கு முதல் ஊற்று அரசரின் சொல், அடுத்தது உங்கள் செயல் அல்லவா?” என்றான் துருமசேனன். “ஆம்” என்றான் துச்சாதனன். “அதன்பொருட்டு தன் மைந்தன் களம்பட்ட செய்தியை அவர் செவிபெற்றார். நீங்களும் அதை அடைந்தாகவேண்டும் அல்லவா? அதுவல்லவா அறத்தின் வழி?” துச்சாதனன் சில கணங்களுக்குப் பின் “ஆம்” என்றான்.
“தந்தையின் சொல்மீறிச் சென்றேன் எனும் பழி எனக்கு வரவேண்டியதில்லை… ஆகவே பணிந்து கோருகிறேன். நான் களம்சென்று போரிட்டு இன்றே மடிய என்னை வாழ்த்துக!” என துருமசேனன் தலைதாழ்த்தினான். துச்சாதனன் இரு கைகளும் கல்லால் ஆனவைபோல் அசைவற்றிருக்க வெறுமனே நோக்கினான். “வாழ்த்துக தந்தையே, அதுவே ஊழின் நெறி…” துச்சாதனன் பெருமூச்சுவிட அவன் நெஞ்சு ஏறியிறங்கியது. “வாழ்த்துக, தந்தையே!” என்றான் துருமசேனன். “நீ உன் அன்னையின் மைந்தன்” என்றான் துச்சாதனன். “நீ என்னைப்போல் இல்லை என்பதை எண்ண உளநிறைவே அடைகிறேன்.” அவன் தொண்டை இறுகியிருந்தது. சொற்களை முழு மூச்சுடன் உந்தி வெளியேற்ற வேண்டியிருந்தது. “இப்போரும் பேரழிவும் இல்லையேல் நீ இந்த யுகம் புகழும் அரசனாக எங்கோ நிலம்ஆண்டிருப்பாய். தெய்வங்கள் பிறிதொன்று எண்ணுகின்றன. தெய்வங்களின் ஆணையால் நான் அதற்கான கருவியாகிவிட்டேன்.”
அவன் கைகளை அசைத்து அவ்வெண்ணத்தை கலைத்தான். “எண்ண எண்ண அதுவே நெஞ்சை உடைக்கிறது. நான் வெறும் கூழாங்கல். அருமணி நீ. உன்னை என் பொருட்டு அழித்துவிட்டேன். நீ விண்புகுந்தால் நான் அதை எண்ணி எண்ணியே உருகிக்கொண்டிருப்பேன். தெய்வங்கள் கனியவேண்டும். ஓரிரு நாட்களுக்கு அப்பால் அப்பெருந்துயரை அவை எனக்கு அளிக்கலாகாது” என்றபின் “விண்ணேகுக, மைந்தா! உனக்கு பேரியல்புகளை அள்ளி வழங்கிய தெய்வங்கள் அவற்றை திரும்பப்பெற்றுக்கொள்க! அவர்கள் மறுபிறப்பில் அவற்றை உனக்கு அளிக்கட்டும். அவற்றால் புகழும் முழுமையும் உனக்கு அமையட்டும்” என்றான். அவன் தலைதொட்டு வாழ்த்த வணங்கியபின் துருமசேனன் திரும்பிச்சென்றான்.
துச்சாதனன் மீண்டும் புரவியில் செல்லும்போது உடல் எடைகொண்டிருப்பதாக உணர்ந்தான். அங்கேயே விழுந்து துயில்கொண்டுவிட வேண்டும் என்று தோன்றியது. ஒரு சிறு துயில் அலையில் அவன் எங்கோ கொண்டுசெல்லப்பட்டான். ஓர் ஆற்றங்கரை. அங்கே அவன் இளையோருடன் நீர்விளையாடினான். விழித்துக்கொண்டதும்தான் அந்தக் கூட்டத்தில் அவன் இளைஞனாக இருந்ததை ஆனால் துருமசேனனும் மைந்தரும் அதே அகவையில் இளையோராக உடனிருந்ததை உணர்ந்தான். அங்கே அகவை இல்லை போலும் என எண்ணியபோது அவன் புன்னகைத்தான். அங்கே விரும்பிய அகவையை கொள்ளலாம். எனில் அவனும் துரியோதனனும் இளமையை விழைவார்கள். துருமசேனனும் லட்சுமணனும் முதுமையை விழைவார்கள் போலும். அவர்கள் சென்றடையாத தோற்றத்தை சூடிக்கொள்வார்கள்.
அவனைக் கண்டதும் துரியோதனன் “எங்கு சென்றாய்?” என்று சீறினான். “நான் மைந்தர்…” என்று சொல்ல வந்து விழுங்கிக்கொண்டான். துரியோதனன் “நானே எண்ணினேன். துருமசேனன் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அவன் படைமுகப்புக்கு செல்லக்கூடாது” என்றான். “ஆம்” என்றான் துச்சாதனன். போர்முரசுகளின் கதி மாறியது. துரியோதனன் செவிகூர்ந்து “மந்தன் தப்பிவிட்டான்… இதோ அவனை அங்கர் கொல்வார் என எண்ணினேன். கொல்லும்போது நீ உடனிருக்கவேண்டுமே என எண்ணி திரும்பியபோதுதான் உன்னை பார்த்தேன்” என்றான். அணுகிவந்த ஏவலனிடம் “என்ன ஆயிற்று?” என்றான். “பீமசேனரை அங்கர் கொல்லும் தருணத்தில் கடோத்கஜர் பாய்ந்திறங்கினார். அவர்கள் பொருதிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் ஏவலன்.
“நாம் அங்கருக்கு களத்துணை அளிக்கவேண்டும். அரக்கன் இருளில் ஏழுமடங்காக பெருகிவிட்டான் என்றார்கள். அவன்பொருட்டே அவர்கள் இன்று அந்திப்போர் ஒருக்கியிருக்கிறார்கள்” என்றான் துரியோதனன். துச்சாதனன் தேரிலேறி துரியோதனனை தொடர்ந்தான். கடோத்கஜனுக்கும் கர்ணனுக்கும் நடந்த போரில் அவர்களைச் சூழ்ந்து வந்து இறங்கிக்கொண்டே இருந்த இடும்பர்களை எதிர்த்து போரிட்டுக்கொண்டிருக்கையில் அவன் உள்ளம் பீமன் எங்கே சென்றான் என்றே எண்ணிக்கொண்டிருந்தது. “என்ன நிகழ்கிறது?” என்று அவன் கையசைவால் கேட்டான். “பீமன் எங்கே?” அணுக்கச்செய்தியாளன் அருகே வந்து “பீமசேனர் தெற்காக சென்றிருக்கிறார். நம் இளவரசர்கள் அவரை சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான்.
பின்னர் நெடுநேரம் அவன் எதையும் எண்ணவில்லை. சூழ்ந்து போரிட்டுக்கொண்டிருந்த இடும்பர்கள் மட்டுமே அவன் விழிகளிலும் உள்ளத்திலும் இருந்தனர். அவன் கர்ணனை நோக்கிக்கொண்டிருந்தான். அவ்விழிகளில் இருந்த வெறி அவனை அஞ்ச வைத்தது. அவன் ஒவ்வொரு முகங்களையாக பார்த்தான். அத்தனை முகங்களிலும் வெறி இருந்தது. ஒற்றைத்தெய்வம் அனைத்து உள்ளங்களிலும் குடியேறிவிட்டதைப்போல. எவருக்கு எதிராக போரிடுகிறார்கள்! இது தெய்வங்களின் வஞ்சம் எனில் இந்தப் போர் மானுடருடன் அல்ல. அப்பாலும் நின்றுள்ளது பிறிதொரு தெய்வமே. தெய்வங்கள் தெய்வங்களுடன் போரிடும் இக்களத்தில் வெறும் கலங்களும் ஊர்திகளுமே மானுடர்.
கர்ணனை சூழ்ந்துகொண்டு கடோத்கஜன் போரிட்டான். தோன்றி அக்கணமே மறைந்தான். அவன் மேல் அம்புகள் தைக்க இன்னொருவன் இறந்து விழுந்தான். இருள் திரையென அங்கே சூழ்ந்திருக்க அதை இழுத்து இழுத்து போர்த்திக்கொண்டான். இரவுப்போரில் நாம் ஏன் விளக்குகளை கொளுத்திக்கொள்ளலாகாது என சகுனி கேட்டார். அந்த ஒளி அவர்களின் ஆற்றலை குறைக்குமே என்றார். “இல்லை, அந்த ஒளியால் நாம் அவர்களை பார்க்க முடியாது. அந்த ஒளிவட்டத்திற்கு அப்பால் வெளித்திருக்கும் இருளே அவர்களின் இடம். அவர்கள் நம்மை பார்க்க நாமே ஒளி அளித்ததாகவும் ஆகும்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். ஒளியே இருட்டைப் பெருக்கும் என்று துரோணர் சொன்னார்.
அறிவிப்புவிளக்குகளின் மெல்லிய ஒளியில் ஒருகணம் தெரிந்து மறைந்த கர்ணனின் முகம் துச்சாதனனை சிலிர்ப்படையச் செய்தது. அதில் இருந்த வஞ்சம், அது தன் முகத்தின் ஆடிப்பாவையா? இந்தக் களத்தில் அனைவருமே மைந்தரையும் இளையோரையும் மூத்தவரையும் தந்தையரையும் இழந்தவர்கள்தான். இருபுறத்திலும் அனைவரும் ஒருவர் எஞ்சியிராமல் இறந்தாலொழிய இவ்வஞ்சங்கள் மண்ணிலிருந்து அகலப்போவதில்லை. ஒருவேளை இப்போர் முடிந்து சிலர் எஞ்சினால் அவர்கள் சுமக்கப்போகும் பழிகள்தான் எவ்வளவு! எத்தனை சொற்கள் அவர்களின் தலைமேல் கொடுந்தெய்வங்கள் என, குருதிகோரும் பேய்கள் என அமைந்திருக்கும்! அவர்களைப்போல் அளியர் எவர்?
செய்தியறிவிப்பாளன் புரவியில் வந்து அவன் தேருக்கு இணையாக விசையுடன் ஓடியபடி “செய்தி, அரசே” என்றான். துச்சாதனனின் கை தளர்ந்தது. “சொல்” என்றான். “இளவரசர் துருமசேனர் கொல்லப்பட்டார்.” அவன் வில்லைத் தாழ்த்தி தேர்த்தட்டில் அசைவிலாது நின்றான். “இளைய பாண்டவர் பீமசேனரால் அவர் தலை உடைக்கப்பட்டது” என்றான் அணுக்கச் செய்தியாளன். துச்சாதனன் ஏதேனும் வஞ்சினம் உரைக்கக்கூடும் என அவன் எதிர்பார்த்ததாகத் தோன்றியது. துச்சாதனன் வில்லை மீண்டும் எடுத்துக்கொண்டு “அவன் விண்ணில் நிறைவுகொள்க!” என்றான். செய்திஏவலன் தலைவணங்கி பின்னகர்ந்தான்.
ஆனால் தேர் முன்னெழுந்தபோது துச்சாதனன் உணர்ந்தான், அவனால் ஓர் அம்பைக்கூட தொடுக்க முடியவில்லை. பலமுறை அவன் அம்பை எடுத்தான். நாணில் கோத்தபின் மீண்டும் கையில் எடுத்துக்கொண்டான். பின்னர் சலிப்புடன் வில்தாழ்த்திக்கொண்டான். அப்போது வாழ்த்தொலிகள் வெடித்தெழுந்தன. “வீழ்ந்தான் கடோத்கஜன்! வீழ்ந்தான் இடும்பன்! வீழ்ந்தான் இருளுலாவி! வீழ்ந்தான் அரக்கன்!” துச்சாதனனை நோக்கி கைகளை விரித்தபடி தேரிலிருந்து பாய்ந்த துரியோதனன் “வீழ்ந்தான்! இனி நம் படைகளுக்கு இடரில்லை… அங்கரால் கொல்லப்பட்டான்” என்று கூவினான். “இளையோனே, அவன் உருவாக்கிய அழிவுகள் எவ்வளவு… நமது படைகள் எஞ்சியுள்ளனவா என்றே பார்க்கவேண்டியிருக்கிறது.”
“மூத்தவரே, துருமசேனன் களம்பட்டான்” என்றான் துச்சாதனன். துரியோதனன் ஒருகணம் திகைத்து “எப்போது?” என்றான். “சற்றுமுன்” என்றான் துச்சாதனன். “யாரால்?” என்றான் துரியோதனன். “பீமசேனனால்” என்றான் துச்சாதனன். அப்பாலிருந்து துரியோதனனை நோக்கி புரவியில் வந்த அஸ்வத்தாமன் “அரக்கன் வீழ்ந்ததை முரசுகள் கூவட்டும்… வெற்றிக்குரல் முடிந்தவரை உச்சத்தில் எழட்டும்… நம் படைகள் உளம் சோர்ந்திருக்கின்றன. இச்செய்தியால் அவர்கள் மீள்வார்கள்” என்றான். துரியோதனன் “ஆம், இளையோனே. மைந்தன் களம்பட்ட செய்தி இப்போது முரசில் ஒலிக்கவேண்டியதில்லை. நம் படைகள் வெற்றிக்கொண்டாட்டமிடட்டும்…” என்றபடி அஸ்வத்தாமனுடன் விரைந்தான். ஆணைகளை விடுத்தபடியே அவன் செல்வதை துச்சாதனன் நோக்கி நின்றான்.
புரவியில் ஏறி அவன் சென்றபோது எதிரில் சல்யரை கண்டான். “மத்ரரே, என் மைந்தன் துருமசேனன் களம்பட்டான்” என்றான். சல்யர் “கடோத்கஜன் கொல்லப்பட்டான் என செய்தி எழுகிறது… அவன் இறந்ததை இன்னொரு முறை உறுதிசெய்தாகவேண்டும்… அவர்கள் மாயக்காரர்கள்… அது அவன் உடலேதானா?” என்றார். “ஆம்” என்றான் துச்சாதனன். சல்யர் “நானே நேரில் பார்த்தாகவேண்டும்… இல்லையேல் என் உளம் அடங்காது” என்றபடி புரவியை தட்டினார். துச்சாதனன் அருகே சென்ற படைத்தலைவன் விகிர்தனிடம் “என் மைந்தன் களம்பட்டான்…” என்றான். “ஆம், அரசே. அவர் உடல் கொண்டுசெல்லப்பட்டுவிட்டது…” என்றபின் “கடோத்கஜர் இறப்பால் பாண்டவப் படை சோர்ந்துவிட்டது… இரவுப்போர் முடியவிருக்கிறது” என்றான்.
துச்சாதனன் புரவி தளர்நடையில் செல்ல அதன்மேல் தசைக்குவியல் என அமர்ந்திருந்தான். முரசுகளும் கொம்புகளும் ஒலிக்கத் தொடங்கின. முரசுகள் ஆணையிட கௌரவப் படை முழுக்க நெய்ப்பந்தங்களையும் விளக்குகளையும் கொளுத்தத் தொடங்கினர். ஒன்றிலிருந்து ஒன்றென பற்றிக்கொண்ட செஞ்சுடர்கள் வேங்கை பூத்த காடுபோல விழிகளை நிறைத்துப் பரவின. மறுபக்கம் பாண்டவர்களும் பந்தங்களையும் விளக்குகளையும் ஏற்றினர். புலரி எழுந்ததுபோல் கூரை என வானை மூடியிருந்த காலைப்பனியின் படலம் செவ்வொளி கொண்டது. அது ஒளியை திருப்பி அளிக்க போர்க்களம் செஞ்சாயத்தால் வரையப்பட்ட திரை ஓவியம்போல் விழிநிறைத்துப் பரந்தது.
கௌரவப் படைகளில் வெற்றிமுரசுகள் ஒலித்துக்கொண்டே இருந்தன. முழவுகளும் கொம்புகளும் முழக்கமிட ஊடே “வெற்றிவேல்! வீரவேல்! வெல்க அமுதகலக்கொடி! வெல்க குருகுலம்! வெல்க கௌரவப் பெரும்படை!” என்று கூச்சல்கள் பெருகிச் சூழ்ந்தன. காலைப்பனி அக்குரல்களை கார்வை கொள்ளச்செய்தது. துச்சாதனன் தன்னைச் சூழ்ந்து கொந்தளித்துக்கொண்டிருந்த மானுட உடல்களை பார்த்தான். அவனை அவர்கள் எவரும் அடையாளம் காணவில்லை. நீர்க்கொந்தளிப்பில் நெற்று என அவன் அலைக்கழிந்தான். கடிவாளத்தை இழுத்து புரவியை நிறுத்தி சூழ்ந்து அலையடித்த முகங்களை பார்த்தான். இளித்த பற்கள், வெறித்த நோக்குகள், சுழன்றடிக்கும் கைகள்.
அவன் நெஞ்சைக் கீறியபடி விம்மல் ஒன்று எழுந்தது. அதை அடக்க முயலுந்தோறும் அது விசைகொண்டது. பின்னர் பெருத்த கேவலோசைகளுடன் அவன் கதறி அழுதான். நெஞ்சில் வெறியுடன் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டு “என் மைந்தா! என் மைந்தா! என் செல்வமே! என் தந்தையே! என் அரசே! என் தெய்வமே!” என்று கூவிக் கதறினான். அவன் அழுகையோசை அந்தக் கொந்தளிப்பின் நடுவே முழுமையாக மறைந்துவிட்டிருந்தது. அவன் அங்கே நின்று அழுவதை அவனன்றி எவருமே அறியவில்லை.