நேற்று நடந்த ஜெயமோகன் கட்டண உரை விழாவில் ஒரு அரிய தருணம்.ஜெ. உரையை முழுதாக முடித்து விட்டு கீழேயிறங்கினார். மரபுசார்கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டது. இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்த ஜெ.யின் மனைவி அருண்மொழி மங்கையின் கண்களில் ஒரு பதட்டம்,ஒரு பரிதவிப்பு.அருண்மொழி கூட்டம் முடிந்து எழுந்த மணி சாரை நெருங்கி வணங்கினார்.மணி சார் அவரைப்பார்த்து நல்லாயிருக்கீங்களா என்று கேட்டார்.
அவர் பதிலுரைக்காமல் பதட்டத்துடன் அவருடைய உரை நல்லாயிருந்துச்சா? உங்களுக்கு புடிச்சிருந்துச்சா என்று வினவினார். மணி சார் அவருடைய தனித்துவமான மொழியில் பிரமாதம் என்று சிரித்தபடி மறுமொழியிட்டார். அருண்மொழியின் கண்களில் அன்பை விட மிக சிறந்த உணர்ச்சி மினுக் என்ற சப்தமின்றி உதிப்பதைக் கண்டேன்.
ஒரு கணம் தான் அது. மின்மினி பூச்சியின் ஒளியைப்போன்ற தருணம். அருண்மொழிக்கு உரை புரிந்ததை விட ஜெ.யின் உரை மற்ற அனைவருக்கும் புரியவேண்டுமே, பிடிக்க வேண்டுமே என்று பரிதவிப்பை கண்களில் காண முடிந்தது. அருண்மொழிக்கு தானே முதல் உரை. நாம் கேட்பது இரண்டாவது உரை தானே என்று மனசு சொன்னது. என்னை தவிர அந்த அற்புதமான தருணத்தை யாரும் கவனிக்கவில்லை.
அன்றிரவு அருண்மொழி சாதாரணமான மொழியில் ஜெ.யிடம் மணி சார் உரை பிடிச்சிருக்குன்னு சொன்னார் என்று தான் கூறியிருப்பார். எளிய நிகழ்வாக அது கடந்து போய்விடும். ஆனால் தாம்பத்ய வாழ்வின் உச்சக்கட்ட அன்பின் தருணம் அது.எனக்கும் அது ஏற்பட்டிருக்கிறது.
வெயில் திரைப்படம் வெளியான முதல் நாள். அப்போது எனக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது.என் வருங்கால மனைவி (இன்றைக்கும் அவள் தான் மனைவி) வெயில் திரைப்படத்தை காண தன் அம்மாவுடன் விருதுநகர் வந்திருந்தார்.வெயில் வெற்றிப்பெற்றால்தான் திருமண வாழ்க்கை எந்த சிக்கலும் இல்லாமல் நகரும் என்ற பதட்டம் அவளுக்கு இருந்தது.விருதுநகரில் வெயில் திரைப்படத்திற்கு முந்தானை முடிச்சு திரைப்படத்திற்கு திரண்டதைப்போன்ற ஒரு கூட்டம்.முதலும் கடைசியுமான காரணம் வெயில் படப்பிடிப்பு விருதுநகரில் நடந்ததுதான். முதன்முறையாக ஒரு திரைப்படம் விருதுநகரில் எடுக்கப்பட்டது ஆகவே மக்கள் விருதுநகரை பார்க்கவே திரண்டு வந்தனர்,மாலைக்காட்சியை காண வந்துருந்தாள்.படம் பார்த்து என் மனைவி என்ன சொல்வாள் என்று பதட்டத்தில் இருந்தேன். அவளுக்கு புடிக்கனுமே என்ற ஆசை அலைபேசியை பார்த்து கொண்டேயிருந்தேன், படம் முடிந்து அண்ணியை பஸ் ஏற்றி விட்டு விட்டேன் என்று என் தம்பி எனக்கு போன் பண்ணினான்.
இரவு பன்னிரண்டு மணிக்கு பேசினாள். படம் பாத்தயா உனக்கு பிடிச்சிருந்துச்சா என்று கேட்டேன். அவள் அழுதபடி நான் படத்தையே பாக்கலங்க. என்றாள்.ஏன் என்று கேட்டேன். மக்கள் எப்படி ரசிக்கிறாக்கன்னு கூட்டத்தை தான் திரும்பி திரும்பி பாத்துக்கிட்டு இருந்தேன். ஆனா படம் நல்லாயிருக்குங்க. தியேட்டர்ல நல்ல கைதட்டு விழுந்துச்சுங்க என்று கூறினாள். படம் ஹிட்டு லூசு என்றேன். அவள் அப்படியாங்க என்று அழுதாள் சிரித்தாள். அவளின் தவிப்பை புரிந்து கொள்ள முடிந்தது. வெயில் வெற்றி என்று தெரிந்த பிறகு தான் படத்தை முழுதாக பார்த்தாள்.
இன்றும் என் ஒவ்வொரு படத்திற்கும் அவளுக்கு அதுதான் நிகழ்கிறது. அந்த அரிய தருணத்தைத்தான் அருண்மொழி கண்களிலும் பார்க்க முடிந்தது.எல்லா மனைவிகளும் பெண்கள் தானே.
வசந்தபாலன் முகநூல் பக்கத்தில் இருந்து