தி.க.சியும் ஒரு கடிதமும்

திகசி

அன்புள்ள ஜெ..

பழைய இதழ் ஒன்றில் திகசியின் கட்டுரை ஒன்று படித்தேன்…

அது உங்களுக்ககு எழுதப்பட்ட “ திறந்த மடல் “ ..

அவரது இலக்கியம் என்பது மார்க்சியம் சார்ந்த வறட்டுத்தனமானது என்று நீங்கள் குற்றம் சாட்டியதற்கு பதில் அளிக்கும் கடிதம் அது

மூத்த எழுத்தாளரான அவர் , உங்களை சகோதர எழுத்தாளன் என்று விளித்திருப்பதும் , ஜெயமோகன் , உங்களுக்கு என் மகன் வயதுதான் இருக்கும் என்று பெரிய மரிய தோரணையை காட்டியதும் , அந்த பதிலடி கடிதத்துக்கு ஒரு வித்தியாசமான தொனியை அளித்தது.

மோதலில் ஆரம்பித்த அந்த உறவு பிறகு காதலில் முடிந்ததும் , அவரை நீங்கள் போற்றியதும் , என் போன்ற வயசாளிகளிக்கு புரியும்படி  சுருக்கமாக எழுது அவர் ஜாலியாக உங்களை கலாய்த்ததுமெல்லாம் தனி கதை.

அந்த கடிதத்தை இப்படி ஆரம்பிக்கிறார்

  உங்கள் கடிதம் கிடைத்தது… இது சில நாட்கள் முன்பே கிடைத்திருந்தால் நம்மிடையே நல்ல நட்பு மலர்ந்திருக்கும் “

என எழுதுகிறார்

இன்றைய இணைய யுகத்தின் மிகப்பெரிய அனுகூலம் இதுபோன்ற உரையாடல்கள் உடனுக்குடன் பதிவாகி ஆவணமாகி விடுகின்றன

அன்றைய கால கட்டத்தில் நீங்கள் எழுதிய கடிதங்களின் காப்பி உங்களிடமோ அவரிடமோ பெரும்பாலும் இருக்காது.. இது போன்ற “ திறந்த மடல்கள் “ மட்டுமே பார்வைக்கு வருகின்றன

இதில் அவர் குறிப்பிடும் கடிதம் குறித்து உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவருடனான உங்கள் நினைவுகளை பல சந்தர்ப்ப்ங்களில் எழுதி இருக்கிறீர்கள்.. ஆனாலும் அந்த ஆரம்ப கால கடிதங்கள் குறித்த உங்கள் நினைவுப்பதிவுகளை பகிர்வது நல்லது என நினைக்கிறேன்

அன்புடன்

பிச்சைக்காரன்

அன்புள்ள பிச்சைக்காரன்,

தி.க.சியுடனான என் அனுபவங்களை எழுதியிருக்கிறேன். அதில் இக்கடிதம் பற்றிய செய்தியும் உண்டு.

நான் திருப்பூரில் இருந்தபோது சுப்ரபாரதி மணியன் என் அண்டைவீட்டுக்காரர். கொஞ்சநாள் நான் அவருடைய கனவு மாத இதழை கவனித்துக்கொண்டேன். அதில் தி.க.சியின் ஒரு நூலைப்பற்றிய மதிப்புரையில் கடுமையாக அவருடைய வறட்டு மார்க்சிய அணுகுமுறையை விமர்சனம் செய்திருந்தேன்.

முதலில் தி.க.சி எனக்கு தனிப்பட்ட முறையில் எழுதிய மறுப்புக் கடிதத்தில் மிகக்கடுமையான சொற்களை பயன்படுத்தியிருந்தார். அந்தக் கடிதத்திற்கு பதிலாக நான் ஒரு கடிதம் எழுதினேன். அதில் தனிப்பட்ட முறையில் அவர்மேல் எனக்கு இருக்கும் மதிப்பை சொல்லியிருந்தேன். கூடவே அழசியல்ரீதியாக எனக்கு மார்க்ஸியத்துடன் உள்ள மாறுபாடு, அறம்சார்ந்து மார்க்ஸிய சமூக அமைப்புமேல் எனக்கிருந்த ஐயம், ஆனால் அதன் அடிப்படை வரலாற்றுநோக்கு சார்ந்து நான் கொண்டிருந்த உடன்பாடு ஆகியவற்றை விளக்கியிருந்தேன்.

தி.க.சி நெகிழ்ந்துபோய் மறுகடிதம் போட்டார். அந்த இரு கடிதங்களும் அவர் நூலில் உள்ளன என நினைக்கிறேன். நூலில் பின்னர் தான் எழுதிய கடிதங்களை பிரசுரித்தபோது  திகசி வசைகளை நீக்கிவிட்டார். [அதில்தான் முதல்முறையாக ஃபாஸிஸ ஓநாய் வந்தது என நினைவு. மண்டைக்கொழுப்பு, நயவஞ்சகம் போன்ற மார்க்ஸியக் கலைச்சொற்கள் பல இருந்தன].

பின்னர் அடிக்கடி அவரைச் சென்று சந்தித்திருக்கிறேன். அவருக்கு சாகித்ய அக்காதமி விருது அளிக்கப்பட்டபோது அதற்கான தகுதி அவருக்கில்லை, அந்த அளவுக்கு அவர் எதையும் எழுதவில்லை என எழுதினேன். [’இளைஞர்களை ஊக்குவித்தார் என்கிறார்கள். ஊக்கு விற்பதெல்லாமா இலக்கிய வேலை?’ என்ற வகையில்] அடுத்த வாரமே நேரில் சென்று சந்தித்தேன். ’டேய் நீ ஒரு ஃபாஸிஸ்ட் “ என்றார். “சரி இருக்கட்டும், நான் உங்க பேரன் இல்லியா?” என்றேன். “அது என்னவோ சரிதான்… உள்ளே வா” என்றார்.  அதன்பின் தழுவல், குலாவல். இறுதிவரை அந்த நட்பு நீடித்தது. “டேய் நீ பெரிய ஆர்ட்டிஸ்ட். என்ன வருத்தம்னா உலகத்திலே பெரிய ஆர்ட்டிஸ்டுக பெரும்பாலும் ஃபாஸிஸ்டுங்க” என்பார்.

திகசி சென்ற யுகத்தின் மனிதர். கருத்துக்களுக்காக வாழ்ந்தவர். கடந்துசென்று மனிதர்களை நோக்கக் கற்றவர்.

ஜெ

திகசி அஞ்சலி

இலக்கியநட்பு, புகைப்படங்கள்…

தி க சி

கடிதம் எனும் இயக்கம்

முந்தைய கட்டுரைமேடை உரை பற்றி…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-78