அன்பின் ஜெயமோகன் அவர்கட்கு ,
பத்து வருடங்களுக்கு பின்னர் ஈமெயில் எழுதுகிறேன். உங்களை இங்கே கான்பெராவில் சந்தித்தது நினைவிலிருக்குமென நம்புகிறேன். அதற்கு முன்னரேயே உங்கள் நாவல் ” ஏழாம் உலகம்” வாசித்திருந்தேன் மற்றும் உங்கள் இணையதளத்தை இன்று வரை நாளாந்தம் படித்து வருகிறேன்.
உங்களை சந்தித்த பிறகே “காடு”, சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள் ( முழுத்தொகுப்பு) , ரப்பர், விஷ்ணுபுரம் (மூன்றிலிரண்டு பகுதியுடன் நிற்கிறது) ஆகியவற்றை படித்தேன். உங்கள் இணையதளத்திலுள்ள ஏறத்தாழ முழு சிறுகதைகள், நாவல்களும் படித்து விட்டேன்.
அண்மையில் நான் எமது சபையில் ஆராதனைக்கு வரும் பெண்மணியுடன் உரையாடிக்கொண்டிருக்கையில் அவர் இந்தியாவில் பெற்றோருடன் நீண்ட காலம் வாழ்ந்துள்ளார் என்பதை அறிந்தேன் . தகப்பன் ஒரு மிஷனரியாக கோவாவிலும் , ஊட்டியிலும் வாழ்ந்த காலங்களை நினைவு கூர்ந்தார். உடனேயே எனக்கு உங்கள் ஓலைச்சிலுவை சிறுகதைதான் நினைவுக்கு வந்து அதை அவருடன் மேலோட்டமாக பகிர்ந்து கொண்டேன். அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா? அப்படியாயின் அறியத் தருவீர்களா? அவர் அதை படிக்க ஆவலாயிருப்பதாய் சொன்னார். இல்லாவிட்டால் பரவாயில்லை.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அன்பையும் தெரிவித்து விடை பெறுகிறேன்.
அன்புடன்
யோகன் (கான்பெரா, அவுஸ்திரேலியா )
அன்புள்ள யோகன்
பத்தாண்டுகள், முகம் நினைவில் இல்லை. மின்னஞ்சல் புரஃபைலில் முகம் வைத்துக்கொள்வது முக்கியமானது. ஆனால் நேரில் சந்தித்தால் நினைவிலெழும் என நினைக்கிறேன்
ஓலைச்சிலுவை மொழியாக்கம் செய்யப்படவில்லை.
நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?
ஜெ
அன்புள்ள ஜெ
நலம்தானே?
உங்கள் சிறுகதையான கோட்டி இப்போதுதான் வாசிக்கக் கிடைத்தது. ஒரு நண்பர் எனக்கு அனுப்பியிருந்தார். கோட்டி கதையை வாசிக்கும் வரை எனக்கு நான் அடிக்கடி சின்னவயசிலே பார்த்திருந்தாலும்கூட பூமேடை ராமையா அவர்களின் குணச்சித்திரம் புரியவே இல்லை. நானும் அவரை ஒருவகையான கிறுக்கர் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். அவர் ஒரு தியாகி, ஒரு பெரிய போராளி என அறிந்தது பெரிய ஆச்சரியமாக இருந்தது. நம்மைச்சூழ்ந்து வாழும் பெரிய மனிதர்களை நாம் எப்படி புரிந்துகொள்ளாமல் கடந்துசெல்கிறோம் என நினைத்துக்கொண்டேன்.
பூமேடை ராமையா அவர்களின் உரையை நான் நிறையவே கேட்டிருக்கிறேன். அது நேரடியான உரையாடல் போல இருக்கும். அவருக்கு சொற்பொழிவு எல்லாம் தெரியாது. அய்யா கேளுங்க அம்மா கேளுங்க என்று ஒரு பாட்டு பாடுவார். நான் அப்போது டய்ட்டஸ் டியூட்டோரியலில் படித்துக்கொண்டிருந்தேன். அவரை நன்றாகவே தெரியும். அவருடைய பேச்சுக்களை எல்லாம் நினைத்துக்கொண்டேன்
சாம் ஆசீர்