சிறுவரலாறு பெருவரலாறு என வரலாற்றை பிரிக்கிறார்கள் இன்று. இந்திய வரலாறும், தமிழக வரலாறும், தொண்டைமண்டல வரலாறும் எல்லாம் பெருவரலாறுகள். அந்தப் பெரிய வட்டம் என்பது பலவகை அடையாளங்களால் கட்டமைக்கப்பட்டது. முதன்மையாக அரசியலால். அரசியலை வடிவமைக்கும் இனம், மொழி, நிலம் போன்றவற்றால். அந்த வட்டம் கட்டமைக்கப்பட்டதுமே வரலாறு மெல்லிய திரிபை அடையத் தொடங்குகிறது. அந்த வட்டத்தை வலுப்படுத்தி அதற்கு ஒரு மையத்தையும் இயக்கத்தையும் உருவாக்கும் நோக்கம் அந்த வரலாற்றுக்கு உண்டு.
உதாரணமாக, சந்திரகுப்த மௌரியர் ஏன் இந்திய வரலாற்றின் நாயகனாக கொண்டாடப்படுகிறார்? இந்தியா என்னும் பெரிய வட்டத்தை கட்டமைத்த முதன்மையான பேரரசை உருவாக்கியவர். அதைத்தாக்கிய கிரேக்கர்களை வென்றவர். ஏன் ராஜேந்திர சோழனைவிட ராஜராஜன் கொண்டாடப்படுகிறார்? ஏனென்றால் தமிழகம் என்னும் பண்பாட்டுவெளியை உருவாக்குவதில் முன்னணியில் நின்றவர்.
பெருவரலாறுகள் இந்த வரையறையை கடக்கவியலாது. ஆகவேதான் பெருவரலாற்று மொழிபுகளுக்குள் மேலும் துணைவரலாறுகள் உருவாக்கப்படுகின்றன. இந்திய வரலாற்றுக்குள் தமிழ் வரலாறும் தமிழ் வரலாற்றுக்குள் தொண்டைமண்டல வரலாறும் உருவாகின்றன. தொண்டைமண்டல வரலாற்றுக்குள் ஒரு வன்னியர்வரலாறு உருவாக்கப்படுவதும் இன்று நிகழ்கிறது. ஆனால் பெருவரலாறுகளை அவற்றுள் இருந்து எழும் துணைவரலாறுகள் எவ்வகையிலும் நிகர்செய்வதில்லை, அவற்றை அவை மேலும் செறிவூட்டி வளர்க்கவே செய்கின்றன. ஏனென்றால் இவையும் பெருவரலாறுகளே. தமிழகவரலாறும் கர்நாடக வரலாறும் எழுதப்படும்போது இந்திய வரலாறு மேலும் தெளிவையே அடைகிறது.
பெருவரலாறுகள் விட்டுவிடுவனவற்றால் அவற்றை நிகர்செய்யும் குறுவரலாறுகள் ஒரு சிற்றூர் பற்றி, ஓர் ஆலயம் பற்றி, ஒரு சாலையைப்பற்றி, ஓர் ஏரியைப்பற்றி மட்டும் எழுதப்படுவன. இவை அந்தப்பெருவரலாற்றின் மொழிபுக்குள் தங்களை பொருத்தியாகவேண்டும் என்னும் கட்டாயத்தை துறந்துவிட்டவை. தன்னளவில் முழுமையானவையாக நிலைகொள்பவை. குறுவரலாறுகளை நாம் பெருவரலாற்றின் சிறு துண்டுகளிலிருந்து வேறுபடுத்திக்கொள்ளவேண்டும். உதாரணமாக கே.கே.பிள்ளை அவர்களின் சுசீந்திரம் பேராலய வரலாறு, அ.கா.பெருமாள் அவர்களின் திருவட்டார் பேராலய வரலாறு போன்றவை தமிழக வரலாறு என்னும் பெருமொழியின் ஒருபகுதியை விளக்கும் நோக்கம் கொண்டவை. அவற்றின் தொடக்க அத்தியாயங்கள் மிகத்தெளிவாக பெருவரலாற்று மொழிபின் பின்னணியில் தங்கள் வரலாற்றுப்பகுதியை கொண்டுசென்று பொருத்துவதை காணலாம். அவை பெருவரலாற்றின் ஒரு பகுதியாகவே அந்த வரலாற்றை விரித்துக்கொள்கின்றன.
விதிவிலக்கான முன்னுதாரண நூல் சண்முக சுந்தரனாரின் ‘கெடிலநதிக்கரை நாகரீகம்’. தமிழில் எழுதப்பட்ட குறுவரலாற்றுநூல்களில் அதுவே முன்னோடியானது. எல்லா முன்னோடி முயற்சிகளையும்போல தெளிவற்றது. எல்லைகள் முயங்குவது. ஆயினும் ஒரு புதுவழியை திறப்பது. ஆகவேதான் அது அன்று எவ்வகையிலும் கவனிக்கப்படவில்லை. இன்றும் அதற்கு வாசகர்கள் இல்லை. இன்று ஒவ்வொரு சாதியும் தனக்கான பெருவரலாற்றை எழுதி கால்திருத்தி கொண்டுசென்று மையவரலாற்று மொழிபில் சேர்க்கும் முனைப்பில் இருப்பதனால் குறுவரலாறு என்னும் கருத்துக்கே இடமில்லாமல் இருக்கிறது.
இச்சூழலில் சமயவேலின் ‘புனைவும் நினைவும்’ ஓர் அழகிய கச்சிதமான குறுவரலாற்று நூல். எட்டையபுரம் அருகிலுள்ள வெம்பூர் மற்றும் அதனருகே உள்ள கீழப்பட்டி என்னும் கிராமங்களின் வரலாற்றை தன் நினைவுகளினூடாக பதிவுசெய்கிறார் சமயவேல். அவ்வூரை அவர் விரிந்த பெருவரலாற்றுப் புலத்தில் கொண்டுசென்று இணைக்கவில்லை. அந்தச் சிற்றூரை அவ்வாறு இணைப்பதற்கான பெரிய வரலாற்றுச் சரடுகளும் இல்லை. வரலாற்றை புறவயமாக எழுதாமல் அகவயமாகவே எழுதியிருக்கிறார். நினைவுகளும் உணர்வுகளுமாகவே இந்நூல் விரிகிறது, ஒருவகையில் இதை தன்வரலாறு என்றும் சொல்லமுடியும். ஆனால் நோக்கு அந்த ஊரைப்பற்றியதாகையால் குறுவரலாறாக ஆகிறது. குறுவரலாறுகள் அகவயமாக அமைவது இயல்பு. ஏனென்றால் புறவயத்தன்மை என்னும் பாவனை பெருவரலாறுகளுக்கு தவிர்க்கமுடியாததாக உள்ளது.
வெம்பூர் கரிசல்பொட்டலில் அமைந்த ஊர். தமிழகத்தின் பாலைநிலம் அது. பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் தெலுங்கர் படையெடுப்பினூடாக மக்கள்பெருக்கம் உருவானபோது மெல்லமெல்ல இத்தகைய வறண்டநிலங்களில் ஊர்கள் எழுந்துவந்தன. அந்தச் சித்திரத்தை கி.ராஜநாராயணனின் கோபல்லகிராமம் நாவலில் காண்கிறோம். பெரும்பாலும் மழைநோக்கிய வேளாண்மை. மழைநீரை தேக்கும் ஏரி [கண்மாய்] சார்ந்தே வாழ்க்கையின் அனைத்தும் முடிவாகின்றன. வேளாண்வாழ்க்கையில் கொண்டாட்டம் என்பது ஆண்டுதோறும் வரும் பண்டிகைகளும் திருவிழாக்களும்தான். நல்லுணவும் களியாட்டும் அப்போது மட்டும்தான்.
வானம் கவிந்திருக்கும் மாபெரும் பொட்டலின் சித்திரத்தை முன்னுரையில் அளிக்கிறார் சமயவேல். வானம் மாபெரும் வட்டம் எனத் தெரியும் நிலம். அதன் செவியைக் குத்தும் அமைதி. ஓ என கத்திக் கூச்சலிட்டு அந்த மூர்க்கமான புறக்கணிப்பின் மேல் முட்டி தலையை உடைக்கவேண்டும் என்று தோன்றச்செய்யும் வெறுமை. அந்த வெறுமைக்குக் கீழ் சிறிய எறும்புப்புற்றுபோல சிற்றூர். அங்கே மனிதர்கள் தங்கள் சிறிய உலகில் மண்ணுடனும் ஒருவருக்கொருவரும் போரிட்டும் உறவாடியும் வாழ்கிறார்கள். அவர்களின் அன்றாடவாழ்க்கையின் சித்திரங்களால் ஆனது இந்நூல். ஆகவே பெரும்பாலும் ஒருவகையான பண்பாட்டுப் பதிவு.
இயல்பாகவே திருவிழாவில் தொடங்குகிறது புனைவும் நினைவும், இயல்பாகவே இரு அம்மன்களில் இருந்து. ஒருத்தி வடக்கத்தி அம்மன், இன்னொருத்தி சோலையம்மன். வடக்கத்தி அம்மன் அவ்வூரில் குடியேறிய குடும்பத்துப் பெண்மணி. ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கு வேப்பிலையால் மந்திரித்து நோய் தீர்க்கிறார். அவர் மறைந்தபின்னர் அவருக்கு கூழ்காய்ச்சி ஊற்றி வழிபடுகிறார்கள். ஒவ்வொருவரும் தானியங்களை கொண்டுவந்து இடிக்கிறார்கள். இந்த மாவு இடிக்கும்போது துள்ளுவதனால் இதற்கு துள்ளுமாவு என்று பெயர். ஊர்கூடி கஞ்சி காய்ச்சி ஊரே சேர்ந்துண்டு குடிக்கிறது.
சோலையம்மன் 21 குழந்தைகளைப் பெற்று சாகக்கொடுத்த ஓர் அன்னை. அவளும் கணவனும் எரிபுக முடிவெடுக்கிறார்கள். அவர்கள் எரிபுகக்கூடாது என்பதற்காக ஊரே அவர்களுக்கு அனல்கொடுக்க மறுக்கிறது. ஆனால் பக்கத்து ஊருக்குச்சென்று ஏமாற்றி தீ வாங்கிவந்து கொளுத்திக்கொண்டு அந்த இணை உயிர்விடுகிறது. அவர்களுக்காகவும் கஞ்சி காய்ச்சி ஊற்றுகிறார்கள். ஆனால் அவர்கள் படிநிலை குறைந்த சாதியினர். ஆகவே பிறர் அவ்விழாவில் கலந்துகொள்வதில்லை.
இரு இயல்புகொண்ட அம்மன்கள். ஒருத்தி இறப்புடன் போரிட்டவள். இன்னொருத்தி இறப்பு முன் வீழ்ந்தவள். ஒருத்தி மைந்தரை காப்பவள். இன்னொருத்தி மைந்தரிழப்பு என்னும் பெருந்துயரின் அடையாளம். ஒருத்தி உயர்குடி. இன்னொருத்தி தாழ்குடி. இந்த இரு சரடுகளும் பின்னி உருவாக்கும் ஒரு யதார்த்தமாக இச்சிற்றூரின் வாழ்க்கையை விரிக்கிறார் சமயவேல். இதில் இச்சாதிகளின் பெயர்கள் நூலில் சொல்லப்படவில்லை. ஒரு குறுவரலாறு என்ற அளவில் இது இந்நூலின் மிகப்பெரிய குறைதான்.
அறுபது எழுபதுகளில் திரைப்படங்களில் ‘காதல்சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா?” என்பதுபோன்ற பாடல்களுக்கு பெரிய இடமிருந்தது என அக்காலத் திரைக்கதையாசிரியர் ஒருவர் சொன்னார். ஒவ்வொரு தெருவிலும் கணவனால் கைவிடப்பட்ட, கணவனை இழந்த பெண்கள் பலர் இருந்தனர். பல அரசு உதவிகளுக்கு ’கணவனால் கைவிடப்பட்ட மற்றும் கணவனை இழந்த பெண்கள்’ என ஒரு தனி அட்டவணைப்பகுதியே அளிக்கப்பட்டிருந்தது. அன்றையசூழலில் பெண்களின் தற்கொலைகள் அன்றாடம் நிகழ்ந்தன. ஒற்றை உறுமியின் முழக்கமாக ஊரை நடுங்கச்செய்யும் அந்தத் தற்கொலைகளின் சித்திரத்துடன் நூல் மேலெழுகிறது. அன்னையரின் கதையில் இருந்து கைவிடப்பட்டு உயிர்விடும் பெண்களின் கதைகள் நோக்கிய தாவல் சமயவேலில் உள்ள கவிஞனை காட்டுகிறது.
இந்நூல் காட்டுவது ஒரு வீழ்ச்சியின் சித்திரம். அதன் கண்கூடான அடையாளமாக இருப்பது வறட்சி. அங்கே மழை குறைவு. ஆண்டுக்கொருமுறை விண்ணிலிருந்து விழும் நீரை ஏரிகளில் சேமித்து பகுத்து வேளாண்மை செய்கிறார்கள். மிகச்சிறந்த நீர்மேலாண்மையும் இயற்கைப்பேணுதலும் இல்லாமல் இந்த வாழ்க்கை இயல்வது அல்ல. ஐம்பதுகளில் அவர்களுக்கு நீரை அளிக்கும் சிற்றாறுகளின் ஊற்றுமுகங்களில் காடுகள் அழிக்கப்படுகின்றன. கண்மாய்கள் பராமரிப்பின்றி அழிகின்றன. ஊர்க்கட்டுப்பாடுகள் அழிந்து நீர்மேலாண்மை கைவிடப்படுகிறது. விளைவாக வறட்சி. அதையொட்டிய பூசல்கள். ஒருவரை ஒருவர் அண்டிவாழும் மக்கள் எதிரிகளாகிறார்கள்.
நான்கு அத்தியாயங்களிலாக இந்த வீழ்ச்சியின் சித்திரத்தைச் சொல்லிச் செல்லும் சமயவேல் இறுதியில் தன் நிலம் ஒரு கரியபாலைவனமாக மாறிவிட்டிருக்கும் சித்திரத்துடன் முடிக்கிறார். அரசு அலுவலகங்கள் நெடுஞ்சாலைகள் பாலங்கள் வந்துவிட்டன. ஆனால் கண்மாய் இருந்த இடமே தெரியவில்லை. குளங்கள் குப்பைமேடுகளாகிவிட்டன. விளைநிலங்கள் கைவிடப்பட்டிருக்க ஊரில் மக்கள் மிகக்குறைவாகவே வாழ்கிறார்கள்.
தோல்பாவைக்கூத்து, கார்த்திகைவிழா, சித்திரைக் கொண்டாட்டம், சேத்தாண்டி ஊர்வலம் என கிராமத்துக் கொண்டாட்டங்களின் சித்திரத்தை அளித்துக்கொண்டே செல்கிறது இந்நூல். பழைய பண்பாட்டில் சாவுகூட ஒருவகை கொண்டாட்டமே. அதை சடங்காக ஆக்கிவிட்டால் கொண்டாடமுடியும். விரிவான சாவுச்சடங்குகளை சித்தரிக்கும் சமயவேல் பிறப்பு முதல் இறப்புவரை சமூகநிகழ்வாகவே இருந்த ஒரு பண்பாட்டுவெளியை காட்டுகிறார்.
மெல்ல ஊருக்குள் வரும் இருபதாம்நூற்றாண்டின் சித்திரத்தை இந்நூல் அளிக்கிறது. ஊரின் அமைப்பே சாதியப் பகுப்பால் ஆனது. ஆகவே சாதிமேல் அடிவிழுகையில் அது ஊரின் அமைப்பை குலைக்கத் தொடங்குகிறது. ஊரில் முதல் படிப்பகத்தை உருவாக்குவதும் இரட்டைக்கோப்பை ஒழிப்புக்கான முன்னெடுப்புகளும் அதற்கு எழுந்த எதிர்ப்பும் மெல்ல மெல்ல ஊரின் அந்த சாதிய அடித்தளத்தில் இருந்து உளவிலக்கம் அடைந்து ஊர்நீங்குதலும் இந்நூலில் உள்ளன. ஊரைவிட்டு நீங்கிய பின்னரும் நினைவில் எஞ்சியிருக்கும் மானுட முகங்களைச் சொல்லி நிறைவடைகிறது நூல்.
இது ஒரு ஊரின் கதை. புனைவாக மாறத் துடிக்கும் ஒரு சித்திரத்தை கூடுமானவரை புனைவிலா எழுத்தாக கொடுக்க முயன்றிருக்கிறார் சமயவேல். ஆகவே அழகிய குறுவரலாறாக வெளிப்பட்டுள்ளது. இந்த ஊரின் கதை அப்படியே தென்னகத்தின் பலநூறு சிற்றூர்களின் கதையாக இருக்கக்கூடும். ஆனால் எழுதப்புகுந்தால் மிகநுட்பமான மாறுதல்கள் அதிலிருக்கும். அந்த மாறுபாடுகளையே பண்பாடு என்கிறோம். இரண்டுவகை வரலாறுகளில் பெருவரலாறு அதிகாரத்தை பற்றியது. குறுவரலாறு பண்பாட்டை பற்றியது. இவ்வாறு நாம் உருவாகி வந்துள்ளோம் என்கிறது பெருவரலாறு. இவ்வாறு வாழ்கிறோம் என்கிறது குறுவரலாறு.
சமீபத்தில் வாசித்த நூல்களில் மிகமிக அழகாக வடிவமைக்கப்பட்ட நூல் இது. வடிவமைப்பாளர் மாரீசுக்கு வாழ்த்துக்கள்.