முதல் அம்பிலேயே துரோணர் தன் முழு ஆற்றலையும் காட்டினார். அந்த நீளம்பு சென்று அறைந்த பாஞ்சால வில்லவன் தேரிலிருந்து தெறித்து பின்னால் சென்றுவிழ அவனை நிலத்துடன் குத்தி நிறுத்தி ஆடியது அது. பாஞ்சால வீரர்கள் ஒருகணம் திகைத்த பின்னர் வெறியுடன் கூச்சலிட்டபடி துரோணரை நோக்கி பாய்ந்தார்கள். துரோணர் அன்று முற்றிலும் வேறொருவராக எழுந்திருந்தார். அவர் பற்கள் தெரியச் சிரிப்பதை திருஷ்டத்யும்னன் கண்டான். அவருடைய கைகளில் இருந்து எழுந்த அம்புகளில் முன்பெப்போதும் இல்லாத விசை இருந்தது. அவை சென்று அறைந்த தேர்கள் சிம்புகளாக தெறித்தன. புரவிகளின் உடலில் பாய்ந்த அம்புகள் மறுபக்கம் செந்நிற மீன் என முனைநீட்டின. மத்தகம் ஒன்றில் சென்று தறைத்த அம்பு அந்த யானையை தூண்கள் சரிந்த கல்மண்டபம் என அசையச்செய்து பக்கவாட்டில் சரித்தது.
“செல்க… சூழ்ந்துகொள்க!” என்று கூவியபடி திருஷ்டத்யும்னன் துரோணரை தாக்கினான். அவனுள் அத்தனை நாண்களும் தளர்ந்து அவிழ்ந்துகிடந்தன. அங்கே தலைகொடுத்து விழப்போவதாகவே தோன்றியது. “கொல்க! ஆசிரியரல்ல அவர், நம் அரசரின் குருதிகுடித்த பேயுரு. நம் குலக்கொழுந்துகளை கொன்றழித்த அரக்கன்… கொல்லுங்கள்… கொன்று முன்னேறுங்கள்!” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். அக்கூச்சலை அவனுள் உறைந்த புண்கள் ஏற்றுவாங்கி எரிந்தேறின. அவன் நரம்புகள் அமிலம் கொண்டன. தசைகள் முறுக்கேறி துடிக்க அவன் நீளம்புகளை எடுத்து துரோணரை அறைந்தான். “கொல்லுங்கள்! கொன்றுசெல்லுங்கள்!” என கூவிக்கொண்டே இருந்தான்.
துரோணரை எதிர்த்து அம்புகளை பெய்தபடி “எந்தையின் குருதிக்கென வந்துள்ளேன்… நீ அந்தணன் என்றால் இரந்துபெறுக உன் உயிரை!” என்று கூவினான். “பொன்னுக்கும் மண்ணுக்கும் விழைவுகொண்டு வேதச்சொல் துறந்த கீழ்மகன் நீ. உன் குருதியிலாடிய என் அம்பை உருக்கி வேள்விக்கரண்டி செய்வேன். எங்கள் நாட்டு வேள்விகளில் பன்னீராயிரம் முறை அவியில் நெய்யூற்றி அது உனது கடன் கழிக்கும்… கீழ்மகனே, எழுக உன் ஆண்மை… உனது தெய்வங்களால் கைவிடப்படுவதை நீ காண்பாய்…” என்று திருஷ்டத்யும்னன் கூவினான்.
அந்த ஒவ்வொரு பழியுரையும் அவன் சினத்தை மேலும் மேலும் கிளர்த்தி உச்சவெறிகொண்டு எழச்செய்தது. அதனூடாக அவன் தன்னை பெருக்கிக்கொண்டான். கைகளாயிரம் விழிகள் பல்லாயிரமென களத்தில் எழுந்தான். ஆனால் பிறிதோரிடத்தில் அவனுள் உள்ளம் சுருண்டு பின்னடைந்துகொண்டே இருந்தது. “நேற்று உன் தந்தையைக் கொன்ற அம்பின் உடன்பிறப்பு என் ஆவநாழியில் உள்ளது. உன்னை அந்த அம்பால் கொல்கிறேன். உன் குடியில் எஞ்சிய மைந்தனை என் மைந்தன் கொன்றழிப்பான். கீழ்பிறப்பே, நீ யார்? அனலிடைப் பிறந்தவன் என்றால் என் அம்புக்கு எதிர்நில். காட்டரக்கர் வீசிச்சென்ற மைந்தன் என்றால் தப்பி ஓடு” என்று துரோணர் கூவினார்.
அந்தக் குரலில் இருந்த வெறியிலிருந்து திருஷ்டத்யும்னன் ஒன்றை உணர்ந்தான், அவரும் தன்னைப்போலவே உள்ளம் சுருண்டுவிட்டிருக்கிறார். சொல்லிச்சொல்லி அனலை ஏற்றிக்கொள்கிறார். அது அவனுக்கு மேலும் ஊக்கத்தை அளித்தது. “நான் இக்களத்தில் உன்னை கொல்வேன். இரந்து பெற்ற மண்ணை ஆளும் உனது மைந்தனை நாளை கொல்வேன். பாஞ்சாலம் விடுதலைகொள்ளும்… எங்கள் மண்சூடிய இழிவு அகலும்” என்று திருஷ்டத்யும்னன் கூச்சலிட்டான். “இரந்து பெற்ற மண்ணை ஆளும் அந்த நெறியிலா அந்தணனால் கறைபடிந்த மண்ணை உனது குடியின் குருதிகொண்டு கழுவுகிறேன்…”
அஸ்வத்தாமனைப் பற்றிய குறிப்பு துரோணரை உச்சவெறிகொண்டு எழச்செய்தது. “ஆணிலியே, கீழ்மகனே” என்று கூவியபடி அவர் மேலும் மேலும் அம்புகளால் திருஷ்டத்யும்னனை தாக்கினார். அவன் அந்த அம்புகளை அம்புகளால் முறித்தான். அவருடைய கவசங்கள் மேல் அம்புகளால் அறைந்தான். அவருடைய தேர்ப்புரவிகளில் ஒன்றின் கழுத்தை அறுத்தான். அவனுடைய வெறிக்கு இடம்கொடுத்து அவர் மேலும் மேலும் பின்னடைந்தார். அவர் பின்னடைவது இயல்பாக இல்லை என உணர்ந்தாலும் அவனை அது கிளர்ச்சிகொள்ளச் செய்தது. அவரை அறைந்து கவசங்களை உடைத்தான். அவர் இருமுறை அவன் அம்புகளிலிருந்து தப்ப தாவிப் பின்னடைந்து தேரிலிருந்து தொங்கிச்சுழன்று மேலெழுந்தார். ஒரு புள்ளியில் அவன் உள்ளம் அதுவே எல்லை என உணர்ந்த கணமே அவருடைய அம்பு வந்து அவனை அறைந்தது. அவன் அந்த அதிர்வில் நிலைகுலைந்த கணம் மேலும் மேலும் அம்புகள் வந்து அவன் கவசங்களை பிளந்தன.
பாகன் தேரை பின்னெடுக்க “மூடா! முன்னேறு… முன்னேறு… இன்றே இவனைக் கொன்று திரும்புவேன்” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். தேரைத் திருப்பவா வேண்டாமா என பாகன் தயங்க “முன்னேறு… முன்னேறு” என்று திருஷ்டத்யும்னன் அவனை உதைத்தான். பாகன் தேரை முன்னெடுத்த கணத்தில் பிறையம்பால் அவன் தலையை அறுத்தெறிந்தார் துரோணர். புரவிகளில் ஒன்று வெட்டுண்டு சரிந்தது. பிற புரவிகள் நிலையழிய தேர் சரிந்தபடி சென்றது. அவன் தாவுவதற்குள் வில்லின் நாண் அறுந்தது. அவன் ஆவக்காவலன் அலறியபடி விழுந்தான். அவன் தன் கதையை எடுத்துக்கொண்டு அலறியபடி முட்டிமோதிய புரவிகளின் முதுகில் கால்வைத்து தாவி நிலத்தில் இறங்கிய கணம் அவன் கழுத்தருகே துரோணரின் மெல்லிய அம்பு ஒன்று தைத்தது.
திருஷ்டத்யும்னனின் உடல் குளிர்கொண்டது. அத்தனை நரம்புகளும் இழுத்துக்கொண்டு அதிர செவிகளில் மூளலோசையை கேட்டான். மூக்கில் முடிபொசுங்கும் கெடுமணம் எழுந்தது. கண்களில் தெரிந்த காட்சிகள் வண்ண அலைகளாயின. அவன் கையை ஊன்றி எழ முயன்றான். அவ்வெண்ணத்தை அவன் உடல் அறியவேயில்லை. அச்சத்துடன் அவன் தன் உடலை உள்ளத்தால் உலுக்கினான். கால்களையும் கைகளையும் அறைந்து கொண்டான். உடல் பிணமெனக் குளிர்ந்துகிடக்க அதில் சிக்கிக்கொண்ட மெல்லிய ஆடைபோல் சித்தம் தவித்துப் பறந்தது. துரோணர் கொக்கி அம்பு ஒன்றை ஏவி அவன் கவசத்தில் அதை சிக்கவைத்தார். அதனுடன் இணைந்த சரடைப்பற்றி இழுத்து அவனை அருகில் கொண்டு சென்றார். கையால் சரடைப்பற்றிச் சுழற்றி தன் தேர்த்தூணில் கட்டினார்.
திருஷ்டத்யும்னன் சிக்கிக்கொண்டதைக் கண்டு வில்லுடன் வந்த பாஞ்சால வீரர்களை அம்புகளால் அறைந்து அறைந்து வீழ்த்தியபடி தேரைப் பின்னிழுத்து கொண்டுசென்றார். அவன் தேர்க்காலில் கட்டப்பட்டு தரையில் இழுபட்டு உடன்சென்றான். தன் உடல் உடைந்த சகடங்கள்மேலும் விழுந்துகிடந்த உடல்கள் மீதும் முட்டி மோதி எழுந்தமைந்து செல்வதை அவ்வுடலுக்குள் இருந்தபடி அவன் பதைப்புடன் நோக்கிக்கொண்டிருந்தான். “துரோணரே, என்னை கொல்லுங்கள்… என்னை கொல்லுங்கள்! வீரனுக்குரிய இறப்பை எனக்கு அளியுங்கள்!” என்று அவன் கூவினான். அவன் நா அச்சொற்களை அறியவில்லை. அவனால் தன் மூச்சையே அசைக்க முடியவில்லை. “என்னை கொல்க! என்னை கொல்க!” என அவன் கூவிக்கொண்டே இருந்தான்.
அப்பால் சிகண்டியின் சங்கொலி எழுந்ததை துரோணர் கேட்டார். “பாஞ்சாலர் சிகண்டி!” என எவரோ கூச்சலிட்டார்கள். வாய்விட்டு நகைத்தபடி துரோணர் திரும்பி சிகண்டியை எதிர்கொண்டார். “ஆசிரியரே, இது முறையல்ல. தாங்கள் இயற்றக்கூடும் செயலல்ல இது… அவனை விட்டுவிடுங்கள்!” என்று சிகண்டி கூவினார். “அவன் தன் சொற்களின் பொருளென்ன என்று உணரட்டும். இது ஒரு நல்ல ஊழ்கம்” என்று துரோணர் கூவி நகைத்தார். சிகண்டி அவரை நீளம்புகளால் அறைந்தார். அத்தனை அம்புகளையும் துரோணர் தன் அம்புகளால் எதிர்த்து உடைத்தெறிந்தார். அவருடைய அம்புவளையத்திற்குள் ஓர் அம்பைக்கூடச் செலுத்த சிகண்டியால் இயலவில்லை. துரோணரின் தேர் முன்னெழுந்து செல்ல தேர்க்காலில் இழுபட்ட திருஷ்டத்யும்னனின் உடல் துவண்டு துணிச்சுருள்போல அலைக்கழிந்தது.
“ஆசிரியரே, இது அறமல்ல. இதன் இழிவு உங்களை என்றும் தொடரும்… வேண்டாம். அவனை விட்டுவிடுங்கள்!” என்று சிகண்டி அழுகையுடன் கூவினார். “அறத்தை நீ எனக்குக் கற்பிக்கிறாயா? கீழ்மகனே, உன் அறத்தின் சான்றென அங்கே கிடக்கிறார் குருகுலத்துப் பிதாமகர்” என்று துரோணர் சொன்னார். சிகண்டி “அதன் கதை முழுக்க நீங்களே அறிவீர்கள், ஆசிரியரே. இது அதுவல்ல. கீழே கிடப்பவன் உங்கள் மாணவன், உங்கள் உளமைந்தன்” என்றார். அச்சொல் துரோணரை மேலும் சினம்கொள்ளச் செய்தது. “அச்சமிருந்தால் ஓடிவிலகு, ஆணிலி. இளையோன் உயிருக்கெனக் கெஞ்சி பேடியருக்கும் பழிசேர்க்காதே” என்றார்.
சிகண்டி பன்றிபோல் உறுமலோசை எழுப்பியபடி வில்குலைத்து அம்புகளால் அவரைத் தாக்கியபடி முன்னெழுந்தார். அவருடைய அம்புகள் அவர் உடலெங்கும் தைத்தன. தலையைத் தாழ்த்தி முகத்தை நீட்டி அணுகிய அவர் சிலிர்த்த முட்பன்றி எனத் தோன்றினார். அவருடைய அம்புகளால் துரோணரின் தேர்த்தூண்கள் உடைந்தன. அவருடைய கவசங்கள் தெறித்தன. வில் உடைந்தபோது துரோணர் பாய்ந்து பின்னடைந்து பிறிதொரு வில்லுடன் எழுந்தார். சிகண்டி அவருடைய வெறியால் மிக அருகே வந்துவிட்டிருந்தார். அவருடைய அம்புகளின் விசையால் துரோணரின் தேர் அசைந்தது. துரோணர் அந்த அணுக்கத்தால் சற்று நிலையழிய சிகண்டி அவர் வில்லை முறித்தார். ஆவக்காவலன் தலையறுந்து விழுந்தான். தேர்ப்பாகன் நெஞ்சில் பாய்ந்த அம்புடன் சரிய துரோணர் பாய்ந்து ஓடி இன்னொரு தேரிலேறிக்கொண்டார்.
சிகண்டி குனிந்து தேர்க்காலில் கட்டுண்டிருந்த திருஷ்டத்யும்னனை விடுவிக்க முயன்றபோது அவர் கைகளை துரோணர் அம்புகளால் அறைந்தார். சிகண்டியின் நெஞ்சிலும் தோளிலும் துரோணரின் அம்புகள் பாய்ந்தன. சிகண்டி தேரிலிருந்து தரையில் விழுந்து சடலமொன்றை அள்ளி தன்மேல் இட்டுக்கொண்டார். அதன்மேல் அம்புகள் வந்து தறைத்து நின்றன. அப்பாலிருந்து கொக்கிக் கயிற்றை வீசி சிகண்டியை பற்றி இழுத்து எடுத்தனர். அவர் உடலில் இருந்து குருதிவழிய நினைவழிந்திருந்தார். துரோணர் அம்புகளைத் தொடுத்து பாஞ்சாலர்களை அப்பால் நிறுத்தியபடி திருஷ்டத்யும்னனை எவரும் அணுகாமல் காத்து நின்றார்.
தொலைவில் பாண்டவ முரசுகள் ஒலித்தன. “பாஞ்சாலத்து இளவரசனைக் காக்க படைகள் எழுக! முதன்மை வில்லவர் களம்புகுக!” இருபுறத்திலிருந்தும் சுருதகீர்த்தியும் சாத்யகியும் அம்புகளை பெருக்கியபடி துரோணரை நோக்கி வந்தனர். துரோணர் தன் அம்புகளால் சுருதகீர்த்தியின் அம்புகளை தடுக்க அவரை வலமிருந்து சாத்யகி தாக்கினான். அம்புகள் எழுந்து எழுந்து அறைய, காற்றுவெளியெங்கும் உலோகமின்னொளிகள் மணியோசையுடன் நிறைந்திருக்க துரோணர் மெல்ல சுருதகீர்த்தி அர்ஜுனனுக்கு நிகரானவன் என்று உணர்ந்தார். இளமையின் கட்டின்மை அவனை மேலும் விசைகொண்டவனாக ஆக்கியது. அவருடைய எந்த அம்பும் அவனை சென்றடையவில்லை. அவன் செலுத்திய அம்புகளால் அவர் தேர் உடைந்துகொண்டிருந்தது.
அவனுடன் போரிட்டுக்கொண்டிருக்கையில் மெல்ல மெல்ல இளமை என்றால் என்ன என்று துரோணர் உணர்ந்தார். அர்ஜுனனைப்போன்ற தெய்வத்தன்மைகொண்ட வில்லவனே எனினும் அவன் வில்லின் கணக்குகளை உய்த்துணர முடியும். கரை உயர்ந்த நிகர்நிலத்துப் பெருநதிபோன்றவன் அவன். சுருதகீர்த்தி மலையிறங்கும் காட்டாறு. ஒவ்வொரு கணமும் அவன் புதிதெனத் திகழ்ந்தான். அனைத்து வழிகளினூடாகவும் பெருக்கெடுத்தான். ஒவ்வொரு அம்பினாலும் அவன் அவரை திகைக்கச்செய்தான். அவர் முதலில் சாத்யகிக்கும் அவனுக்கும் தன் விழிகளையும் உள்ளத்தையும் பகிர்ந்து அளித்திருந்தார். மெல்ல மெல்ல அவருடைய முழுதுளமும் அவனை நோக்கி திரும்பியது. இரு கைகளாலும் அவனை அவர் எதிர்கொண்டார்.
அவர் அவனை அம்புகளால் புரிந்துகொள்ள முயன்றார். ஒவ்வொரு அம்பும் ஒரு வினா என எழுந்தது. ஆனால் ஒவ்வொரு விடையும் முன்பிலாததாக வந்தது. அவற்றிலிருந்து அவனைச் சென்றடையும் வழியை அவரால் தொகுத்துக்கொள்ள இயலவில்லை. அவர் உள்ளம் அதனால் சீற்றம்கொண்டது. சலியாத அம்புகளால் அவனை அறைந்தார். பின்னர் உணர்ந்தார், அவன் உள்ளம் செயல்படும் ஒழுங்கை கண்டடைவதற்கு முயன்றமையாலேயே அவர் தோற்றுச்சரிகிறார் என. அவன் உள்ளத்தில் எந்த ஒழுங்கும் இல்லை. அவனைச் சென்றடைவதற்குரிய வழியை தானாகவே உருவாக்கிக் கொள்ளவேண்டியதுதான் இயல்வது. அவர் தன் அம்புப்பெருக்கில் தான் உருவாக்கிக்கொண்ட ஒழுங்கு ஒன்றை தொட்டறிய முயன்றார். ஆற்றுப்பெருக்கை பாறைகளினூடாகக் கடக்கையில் விழி சமைத்துக்கொள்ளும் காலடிப்பாதை என. பல்லாயிரம் அம்புகளினூடாக ஒரு நீள் சரடு சென்று அவனை தொட்டது.
அவர் உள்ளம் எக்களிப்படைந்தது. அதனூடாக அவர் அவன் உருவாக்கிய அம்புவளையத்தை உடைத்து உட்புகுந்தார். அவனை அறைந்து நிலைகுலையச் செய்தார். அவன் கவசங்கள் உடைந்தன. அவன் திகைத்து பின்னடைய அவர் உள்ளம் எக்களிப்பில் எழுந்தது. அத்தனை இளையோரும் துவாரகையின் யாதவனே. இதோ நான் அவனை வென்றுவிட்டிருக்கிறேன். நான் உன்னை வென்றேன். யாதவனே, ஒருகணமும் முன்பிலாதபடி திகழும் உன் மாயத்தை வென்றுவிட்டிருக்கிறேன். என் முதுமையின் தொலைவைக் கடந்து உன்னை வந்தடைந்துவிட்டேன். இதோ இதோ இதோ. அக்கணத்தை பயன்படுத்திக்கொண்டு சாத்யகி அவரை அறைந்தான். அவருடைய தேர்ப்பாகன் அம்புபட்டு விழ புரவிகளில் ஒன்று சரிந்தது. சாத்யகி தேரிலிருந்து பாய்ந்திறங்கி தலைகுனிந்தபடி ஓடி தன் வாளால் திருஷ்டத்யும்னன் கட்டப்பட்டிருந்த சரடை வெட்டி அறுத்து அவனைத் தூக்கித் தன் தோளிலிட்டபடி தேரை நோக்கி ஓடினான். துரோணர் அதை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். அவர் கைகள் சுருதகீர்த்தியை நோக்கி அம்புகளை செலுத்திக்கொண்டிருந்தன. சாத்யகி திருஷ்டத்யும்னனுடன் தேரிலேறிக்கொண்டு பின்னடைய கவசப்படை எழுந்து வந்து அவன் தேரை மூடிக்கொண்டது.
தேர்த்தட்டில் முழங்காலிட்டு விழுந்த சுருதகீர்த்தியின் தலைக்கவசத்தை துரோணர் உடைத்தார். “இளையோனே, சென்று சொல் உன் தந்தையிடம். வில்லுடன் அவனை நோக்கி வந்துகொண்டிருக்கிறேன் என்று. அவனிலெழுந்து அவனை முந்திய உன்னை இதோ வென்றிருக்கிறேன். உனக்கு உயிர்க்கொடை அளித்திருக்கிறேன். செல்க, உன் தந்தையிடம் சொல்க, அவனுக்கு நான் உயிர்க்கொடை அளிக்கப்போவதில்லை என!” என்றார் துரோணர். அவருடைய அம்புகள் அறைந்து அறைந்து சுருதகீர்த்தியை தேர்த்தட்டிலிருந்து எழமுடியாமலாக்கின. அவன் பாகன் தேரை பின்னுக்குக் கொண்டுசென்று மையப்படைக்குள் புதைந்துகொண்டான். நாணொலி எழுப்பியபடி துரோணர் அர்ஜுனனை நோக்கி சென்றார்.
அர்ஜுனன் தொலைவிலேயே துரோணரின் நாணொலியை கேட்டான். “பார்த்தா, ஆசிரியர் முழுவிசையுடன் எழுந்திருக்கிறார்” என்று இளைய யாதவர் சொன்னார். “எதிர்கொள்க… இன்றே அதற்குரிய நாள்!” அர்ஜுனன் நாணொலி எழுப்பியபடி துரோணரை நோக்கி சென்றான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அணுகுவதைக் கண்டு இரு தரப்பின் வீரர்களும் வாழ்த்தொலி எழுப்பி படைக்கலங்களை வீசினர். சங்குகளும் முழவுகளும் முழங்கின. அவர்களின் விரைவுக்கு மேல் எழுந்தது அவர்களின் உள்ளம். உள்ளத்திலிருந்து தெறித்தவை என இரு அம்புகள் வானிலெழுந்து ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டன. ஒன்றை ஒன்று நுனிக்கூர் தொட்டு அறிந்தன. இரு பொருட்கள் தொட்டுக்கொள்வதிலேயே குறைந்த இடத்தில். விண்ணவரே உணருமளவுக்கு சிறுபுள்ளியில். குறைந்தஅளவு தொட்டுக்கொள்வனவே முழுமையாக உணர்கின்றன போலும்.
அரசே, நான் இப்போது அவர்களின் போரின் உச்சநிலையையே காண்கிறேன். அது உச்சநிலையிலேயே தொடங்கியது. ஓர் அணுவும் முன்னகர இயலாது அங்கேயே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. சரபஞ்சரம் என்று நூலோர் சொல்லும் அம்புவலைக்கூடு. அதற்குள் அவர்கள் இருவரும் கைகள் சிறகுகளாக வீச பறந்து சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அர்ஜுனன் தன் ஒவ்வொரு அம்பை எடுக்கும்போதும் அதை அவர் முதலில் கற்பித்த தருணத்தை நினைவுகூர்ந்தான். அந்தச் சொற்கள், அவ்விழிகள், அப்பொழுதின் தண்மை, அதன் ஒளி. ஒவ்வொன்றும் அத்தருணத்தில் முழுமை கொண்டன. அதன்பொருட்டே அந்த முதல் தருணத்தில் எழுந்திருக்கின்றன. அவன் சிட்டுக்குருவி அலகுகொண்ட அம்புகளால் அவர் நரம்புகளை அடித்தான். மீன்கொத்தி அம்புகளால் அவர் குருதிக்குழாய்களை உடைக்க முயன்றான். வாத்துஅலகு கொண்ட அம்புகளால் அவர் தசைகளை வெட்ட முயன்றான். ஒவ்வொரு அம்பு எழுவதற்குள்ளும் அதற்கான மறு அம்புகள் எழுந்தன. சிட்டு சிட்டால் வீழ்த்தப்பட்டது. மீன்கொத்தி மீன்கொத்தியால். வாத்து வாத்தால்.
அக்கணம் அவன் அறிந்தான், கங்கைக் கரையின் முற்புலரியில் கருக்கிருளின் குளிரில் நீராடும்போதும் ஈர மரவுரியுடன் திரும்பும்போதும் அவர் அம்புத்தொழில் கற்பித்த கணங்களிலேயே அப்போர் தொடங்கிவிட்டிருந்தது என்று. தன்னிடம் உரைத்த ஒவ்வொரு சொல்லுக்கும் அவர் மறு சொல் ஒன்றை உட்கரந்திருந்தார். ஒவ்வொரு சூழ்கைக்கும் மறுசூழ்கை வைத்திருந்தார். அவன் அறிந்த ஒவ்வொன்றும் முன்னரே அவரிடமிருந்தது. அவரைக் கடந்து அவன் அறிந்த ஒன்றில்லை. தன்னைக் கடக்க ஒப்பும் ஆசிரியர் எவர்? அவர் தன்னை ஏற்கெனவே கடந்தவராக இருப்பார். துரோணரின் அம்புகள் அவனிடம் நீ நீ நீ என்று சொல்லிச் சென்றன. நீ என் மைந்தன். நீ என் மாணவன். நீ என் இனியன். நீ எனக்கு அணுக்கன். அவன் அந்த அம்புகளுக்கு நிகர் நின்றான். அணுவிடையும் குன்றாதிருந்தான். ஆனால் அவற்றின்முன் அவன் தோற்றுக்கொண்டும் இருந்தான்.
தன்னை வெல்வது எது என அவன் ஓர் மெல்லிய எண்ணமென உணர்ந்தான். அதனுடன் முழுத் தன்னிலையும் வெகுண்டெழுந்து போராடியது. அதனூடாக அதை ஆழ நிறுவிக்கொண்டது. அவர் அந்த அம்புகளை அவனுக்களித்தபோது அவன் அவரை பணிந்தான். அந்தப் பணிவாலேயே அவன் தோற்றுக்கொண்டிருந்தான். அவன் அடுத்த அம்பை எடுத்தபோது தன் உள்ளமெங்கும் சீற்றத்தை நிறைத்துக்கொண்டான். அந்த அம்பை துரோணர் முறித்து வீசியபோது அது சீற்றமல்ல, வெறும் நடிப்பே என்று உணர்ந்தான். அவரை வசையுரைத்தால், சிறுமைசெய்யும் ஒரு சொல் உள்ளத்திலூறி நாவிலெழுந்தால் வெல்வேன். அவன் அம்புகள் ஒவ்வொன்றும் எழுந்து சீறிச்சென்று அவர் அம்பின் முன் தலைவணங்கிக்கொண்டிருந்தன.
அவன் ஆழம் அவரை வெறுத்த தருணங்களுக்காக துழாவியது. துருபதரை இழுத்துச்சென்று காலடியில் கிடத்தியபோது அவரிலெழுந்த அப்புன்னகை, ஏகலவ்யனின் கட்டைவிரலை கேட்டுப் பெற்றேன் என்றபோது அவரிலிருந்த விலக்கம், அஸ்தினபுரியின் அவையில் திரௌபதி சிறுமை செய்யப்பட்டபோது அவரிலிருந்த அமைதி. அவன் உள்ளம் தொட்டுத்தொட்டுச் சென்றது. அபிமன்யுவின் அம்புதுளைத்த உடல் அருகே எனத் தெரிந்தது. அதன் மேலிருந்த அம்புகளில் பெரும்பாலானவை அவருடையவை என்று உடலை ஒருக்கிய பாஞ்சாலத்து முதியவன் சொன்னான். ஒரு நடுக்குபோல அவனில் வஞ்சம் எழுந்தது. பற்களைக் கடித்தபடி அவன் எடுத்த அம்பு அதிர்ந்தது. ஆனால் அதை நாணில் இழுத்தபோது அவரை பழிக்கும் சொல் அவன் நெஞ்சில் எழவில்லை. சோர்ந்து எழுந்த அம்பு துரோணரின் அம்பின் அறைவாங்கி சிதறிவிழுந்தது.
துரோணரின் முகத்தில் எக்களிப்பை அவன் கண்டான். அவர் சிரித்துக்கொண்டிருந்தார். மெய்யாகவா? அது சிரிப்பேதானா? அச்சிரிப்பை அவர் முகத்தில் அவன் முன்னர் கண்டதே இல்லை. இது துருபதன் காலில் விழுந்தபோது எழுந்த சிரிப்பு அல்ல. அதில் துயரமும் இருந்தது என அப்போது தெரிந்தது. இது வெறும் சிரிப்பு. வேறேதோ அறியாத் தெய்வம் ஒன்று அந்த முகத்தில் குடியேறியிருக்கிறது. அவன் அதை நோக்கி உளம் மலைத்தான். அவன் கைகளிலெழுந்த அந்தச் சிறிய தளர்வினூடாக துரோணர் உட்புகுந்தார். அவனை அவர் அம்புகளால் அறைந்தார். அவன் கவசங்களை உடைத்தார். தேர் உடைந்து சிதறிக்கொண்டிருந்தது. தலைக்கவசம் உடைய இளைய யாதவர் தேரை பின்னடையச் செய்தார். அவன் அவரை திகைத்து நோக்கிக்கொண்டிருக்க அவன் கைகள் அவருடன் போரிட்டன. அவன் அம்புவளையத்தைக் கடந்துவந்த துரோணரின் அம்பு அவன் தோளிலும் விலாவிலும் பாய்ந்தது. அவன் தன் குருதியின் மணத்தை உணர்ந்தான். அவன் உடல் வழியாக குருதி வெம்மையுடன் வழிந்தது.
இளைய யாதவர் தேரைத் திருப்பி மேலும் பின்னடையச் செய்தார். “நில், உன் மைந்தனுடன் செல்ல உன்னை அனுப்புகிறேன்” என்று துரோணர் கூவினார். “நீ கற்றவற்றை எல்லாம் இன்று கண்டேன். இனி உன்னிடம் இருப்பவை என்ன என்று காட்டு.” வெறியுடன் நகைத்து அவர் கூச்சலிட்டார். “அறிவிலி… நீ காடுமலை ஏறிச்சென்று அடைந்த அம்புகள் எங்கே? அவற்றின் திறமென்ன என்று எனக்கு காட்டு…” அர்ஜுனன் தன் உள்ளத்தில் அம்புபட்டதுபோல் உணர்ந்தான். அவர் விழிகளை கூர்ந்து நோக்கினான். அவன் நோக்கை சந்தித்து கரவுமறைந்து அவை திரும்பிக்கொண்டன. அவன் அவருக்குள் புகுந்து ஆழத்திலிருந்த ஒன்றை கண்டான். அக்கணமே அம்பை எடுத்து அவர் நெஞ்சில் அறைந்தான். அதன் விசையால் பின்னடைந்த துரோணர் ஆவநாழியிலிருந்து அம்பு ஒன்றை எடுத்து அவன்மேல் ஏவினார். இடிமுழக்கத்துடன் மின்னொளிச் சிதறல்களுடன் எழுந்த அது பிரம்மாஸ்திரம் என அவன் உணர்ந்தான். தேரிலிருந்து இறங்கி அப்பால் பாய்ந்தான். எரியுமிழ்ந்து தேரை ஓங்கி அறைந்தது அது.
எரிந்த தேருடன் இளைய யாதவர் புரவிகளை அறைந்து அறைந்து ஓட்ட அவை தேரை இழுத்தபடி சுழன்றன. தழல்கொழுந்துகள் எழுந்து வெடித்து நீலச்சுடருடன் கொப்பளித்தன. அர்ஜுனன் பாண்டவப் படையின் விளிம்பில் ஒதுங்கி நின்றிருந்த தேரை நோக்கி ஓடினான். அவனை நோக்கி மீண்டும் வந்த படைப்போன்அம்பு அவன் நின்ற மண்ணை அறைந்து வெடித்தெழுந்தது. செம்புழுதித் திரைக்கு அப்பால் அவன் ஓட எரியும் தேருடன் அவனை நோக்கி வந்த இளைய யாதவர் “இதில் ஏறிக்கொள்… இந்தத் தழலே உனக்குக் கவசம்” என்றார். அவன் அதில் பாய்ந்தேறிக்கொள்ள மீண்டுமொருமுறை மண்ணை அறைந்து இடியோசை முழக்கியது முதலோன்வாளி. துரோணர் “நில்… பேடியே, நில்” என்று கூவினார். “அமர்ந்துகொள்க… அனலைக் கடந்து அந்த அம்பு வரவியலாது” என்று இளைய யாதவர் சொன்னார். அவன் தழல்களின் நிழலில் அமர்ந்தான்.
அனல்வெம்மையால் கனைத்தபடி தேரை இழுத்துக்கொண்டு முன்னேறி விரைந்தன புரவிகள். பாண்டவப் படை அனல் கண்டு விலகி விட்ட வழியினூடாக ஓடி முழங்கால் மடிந்து விழுந்தன. தேரைச் சூழ்ந்துகொண்டது அனல். நகுலனும் சகதேவனும் தங்கள் தேர்களில் அந்தத் தேர் நோக்கி விரைந்தனர். தேர் மேலுமொருமுறை வெடித்து கொழுந்தாடியது. பாண்டவப் படைக்குள் நுழைந்ததும் இளைய யாதவர் பாய்ந்து விலக உடன் பாய்ந்து அர்ஜுனனும் அப்பால் சென்றான். தேரில் எழுந்த அனல் உறுமலோசையுடன் நின்று எரிந்தது. ஏவலர் ஓடிவந்து புரவிகளை சரடுகளை வெட்டி விடுவித்தனர். புன்னகையுடன் அதை நோக்கிநின்ற இளைய யாதவரை நோக்கியபடி அர்ஜுனன் நின்றான்.