‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-73

ele1ஓடும் புரவியின்மீது கால் வைத்து தாவி ஏறி விரைந்து திரும்பிய தேர்விளிம்பில் தொற்றி அதன் மகுடத்தின் மேலேறி பாண்டவப் படை முழுமையையும் ஒருகணம் நோக்கி மறுபுறத்தினூடாக இறங்கி தன் புரவிக்கு வந்த திருஷ்டத்யும்னன் படைமுழுக்க பரவிக்கொண்டிருந்த தளர்வை உணர்ந்தான். அரக்கில் சிக்கிக்கொண்ட ஈக்கள்போல படைவீரர்கள் தங்கள் கைகால்களை இழுத்து அசைத்தனர். நிலத்தில் இருந்து விடுபட விழைபவர்கள்போல கால்களை தூக்கி வைத்து பின்னர் தளர்ந்து நிலத்தில் முழங்கால் படிய விழுந்து கையூன்றி தலைதாழ்த்தி அமர்ந்தனர். சூழ்ந்திருந்த போர்க்களத்தின் பேரோசையை கேட்டு அதன் பின்னர் தலையுலுக்கி வில்லையும் வாளையும் தூக்கி மீண்டும் போர்முழக்கமிட்டு எழுந்தனர். அந்தப் போர்க்கூச்சலும் கனவிலிருந்து எழுவதுபோல் தோன்றியது.

ஒருகணம் அங்கு பிறிதேதோ தெய்வஆற்றல் இறங்கியிருக்கிறதென்னும் எண்ணம் அவனுக்கு எழுந்தது. கௌரவர் தரப்பிலிருந்து எழுந்த அம்புகளில் ஏதேனும் நஞ்சு கலந்திருக்குமோ என்று எண்ணினான். மீண்டும் ஒருமுறை தேர்மகுடத்தின் மீதேறி தலை திருப்பி நோக்கியபோது கௌரவப் படைகளிலும் அதே தளர்வு தெரிவதைக் கண்டான். புரவி மேல் வந்தமர்ந்ததும் அவனுக்குத் தெரிந்தது அது எதனால் என்று. படைவீரர்கள் களமெழுந்து போரிடத்தொடங்கி ஒரு முழு நாளாகப் போகிறது. அவர்கள் மேல் உயிரச்சத்தையும் போர்வெறியையும் கடந்து துயில் படர்ந்து ஏறிக்கொண்டிருக்கிறது. அவன் குதிரையைத் தட்டி விசை கூட்டி முன் சென்று சாத்யகியை அணுகினான்.

அம்புகளை தொடுத்தபடியே பின்னடைந்து அம்பறாத்தூணி நிறைக்கப்படுவதற்காக நின்று திரும்பிய சாத்யகி அவனை கண்டு முகம்கூர்ந்தான். “யாதவரே, நாம் போரை நிறுத்திவிடுவதே நன்று. நம் படைகள் தளர்ந்து விழுகின்றன” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி “என்ன சொல்கிறீர்கள்? நாம் வென்றுகொண்டிருக்கிறோம். நமது படைகள் இப்போதுதான் முன்னெழுகின்றன” என்றான். சாத்யகியின் கண்களில் தெரிந்த வெறி ஒரு கணத்திற்குப் பின் துயில்மயக்கமாகத் தோன்றியது திருஷ்டத்யும்னனுக்கு. அவன் கனவில் பேசுவது போலவே இருந்தது. “யாதவரே, இனிமேலும் நாம் படைகளிடம் போரிடும்படி தூண்ட இயலாது. அவர்கள் துயிலில் மூழ்கிக்கொண்டிருக்கிறார்கள். வெறிகொண்டு நிலைமறந்து ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டால்கூட வியப்பதற்கில்லை” என்றான்.

“இல்லை! இப்போர் இதோ முடிகிறது! இன்று புலரி எழுகையில் இந்திரப்பிரஸ்தத்தின் கொடி இக்களத்தில் எழுந்து நிலைகொள்ளும்” என்ற சாத்யகி “எழுக! சூழ்ந்துகொள்க! வெற்றிவேல்! வீரவேல்!” என்று கூவியபடி அவனைக் கடந்து மீண்டும் களமுகப்பை நோக்கி சென்றான். திருஷ்டத்யும்னன் கடிவாளத்தைப் பற்றியபடி நின்று தன்னைச் சூழ்ந்து பாண்டவப் படைவீரர்கள் சேற்று விழுதில் புழுக்கள் நெளிவதைப்போல் அசைவதை பார்த்துக்கொண்டிருந்தான். அந்தத் துயில்தளர்வு நெடுநேரம் முன்னரே தொடங்கிவிட்டிருக்கிறது என்று அப்போது தெரிந்தது. அதை அதுவரைக்கும் அவனுடைய உள்ளம் பார்ப்பதை தவிர்த்துவிட்டிருந்தது. உள்ளம் தான் விரும்பியதையே பார்க்கும் திறன் கொண்டதென்பதை அவன் அறிந்திருந்தான். அத்துயிலை அவன் பார்ப்பதற்குக் கூட அவனில் துயில் எழுந்ததே அடிப்படையாக அமைந்திருக்கும்.

துயில்கொண்டிருக்கிறதா தன் உள்ளம்? அவ்வெண்ணம் எழுந்ததுமே தன் உள்ளத்தின் ஒரு பகுதி முன்னரே துயிலில்தான் இருக்கிறதென்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். விழிப்புள்ளம் போர் உருவகங்களும் போர்த்திட்டங்களுமாக பெருகி அவை ஒன்றோடொன்று நன்றாக கோத்துக்கொண்டு விசையுடன் செயல்பட பிறிதொரு பகுதி வேறெங்கோ ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற மாயக்காட்சிகளின் பெருக்காக இருந்தது. அந்த நிழலாட்டத்தின் மீதுதான் அவனுடைய சித்தம் செயல்பட்டுக்கொண்டிருந்தது. அது துயில்தான், கனவுருதான். அப்படியென்றால் சற்று முன்னர் இளைய யாதவர் பதினெட்டு பெருங்கைகளிலும் படைக்கலங்களுடன் தேர்த்தட்டில் எழுந்து கௌரவப் படைகளுடன் போரிட்டுக்கொண்டிருந்தது கனவு. அவருக்கெதிராக பதினெட்டு கைகளுடன் பெருகும் படைக்கலங்களுடன் எழுந்து வந்த பிறிதொரு இளைய யாதவரும் கனவே.

அதை அப்போது கனவென கண்டேனா, இப்போது எண்ணிக்கொள்கிறேனா? அன்றி என் முன் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறதா? திருஷ்டத்யும்னன் திரும்பி அருகே அவனைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த ஏவலனிடம் கைநீட்ட அவன் மதுக்குடுவையை கொண்டுவந்து அளித்தான். அதை சரித்து மதுவை அள்ளி முகத்தில் விட்டு கழுவிக்கொண்டு இரு மிடறு அருந்தினான். கண்கள் நனைந்தபோது சித்தம் தெளிவுகொண்டு கனவிலிருந்து மீண்டு விழிப்புநிலையின் தெளிவான எண்ணச்சரடுகளுக்கே வந்தது. ஆனால் அவையும் விரைவிலேயே முட்டிமோதி முடிச்சுகளாயின. இறுகி அசைவிழந்தன. என்ன நிகழ்கிறது? அவன் தன் தலையை கைகளால் தட்டித்தட்டி அகத்தை எழுப்ப முயன்றான். இருமுறை கண்களை மூடித்திறந்தான், கண் திறக்கும்போது அங்கே சூழ்ந்திருக்கும் களம் புதிய ஓவியமாக எழும் என்று. அனைத்தும் தொடக்கத்திலிருந்து தெளிவுறும் என்று.

கடோத்கஜனுக்கும் கர்ணனுக்குமான போர் நடந்துகொண்டிருந்த இடத்தில் ஓலங்கள் எழுந்தன. அங்கிருந்து செய்தி ஏதும் வருவதை கேட்க முடியவில்லை. திருஷ்டத்யும்னன் தன் செய்தியாளனிடம் கையசைத்து என்ன நிகழ்கிறது என்று கேட்டான். அவனும் எச்செய்தியையும் அறியாதவனாகவே இருந்தான். அருகிலிருந்த தேரில் ஏறியபடி முன்செல்க என்று தேர்ப்பாகனுக்கு கைகளால் ஆணையிட்டான். தேர் முன்னடையும்தோறும் இருபுறத்திலும் நோக்கி என்ன நிகழ்கிறது என்று உணர முயன்றான். படையினர் அனைவரும் கால்களில் நாகங்கள் சுற்றிக்கொண்டவர்கள்போல் நடைபின்னினர். வாள்களையும் வேல்களையும் தரையிலூன்றி தள்ளாடி நின்றனர். ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டனர். அவர்களில் ஒரு சிலர் கால்கள் சேறாலானவைபோல குழைந்து துவள விழத்தொடங்கினர்.

விரைவில் பிறரும் விழுவார்கள் என்று அவனுக்குத் தோன்றியது. அருகிலுள்ளோர் விழும் அசைவை விழிகளால் நோக்கினாலே போதும், அவர்களின் உடல் அதுவரை உள்ளத்திடம் கொண்டிருந்த பணிவை இழக்கும். தசை தான் விரும்பியதை இயற்றும். “செல்க! செல்க!” என்று ஆணையிட்டு அவன் முன்னால் சென்றான். எதிரில் புரவியில் அவனை நோக்கி பாய்ந்துவந்த செய்திவீரன் இறங்கி விரைந்த குழூஉக்குறிச்சொற்களில் “இளவரசே, வலது எல்லையில் அங்கருக்கும் அரக்கர் குலத்து இளவரசருக்குமான போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அரக்க இளவரசர் அங்கரை முற்றிலும் சூழ்ந்துகொண்டிருக்கிறார். அறியாத போர்சூழ்கைகளால் அங்கரை திணறச் செய்கிறார். விண்ணில் இடியாகவும் மின்னலாகவும் எழுகிறார். மழை எனப் பெய்து திரை சமைக்கிறார். அதற்குள் புகுந்து சென்று அங்கரை தாக்கி நிலையழியச் செய்கிறார். அங்கரின் குலத்தைச் சேர்ந்த இளையோர் எழுவரை கொன்றுவிட்டார். அங்கர் பின்னடைந்துகொண்டிருக்கிறார்” என்றான்.

தொடர்ந்து வந்த பிறிதொரு செய்திஏவலன் அவனை அணுகிவந்து புரவியிலிருந்து இறங்காமலேயே கைகளை விரித்து “இளவரசே, துரோணரை பாஞ்சாலத்து அரசர் துருபதர் வெல்லும் நிலையிலிருக்கிறார். அம்புகளால் துரோணரின் கவசங்கள் அனைத்தையும் உடைத்துவிட்டார். எத்தருணத்திலும் ஆசிரியர் தேர்த்தட்டில் அம்புபட்டு விழுவாரெனத் தோன்றுகிறது. கௌரவப் படைவீரர்கள் ஆசிரியரின் காவலுக்கென வந்து சூழ்கிறார்கள். ஒவ்வொருவரையும் பாஞ்சாலத்து அரசர் தன் விசைமிக்க அம்புகளால் வீழ்த்திக்கொண்டிருக்கிறார்” என்றான். கைகள் காற்றில் நிலைக்க “இளவரசே, பாஞ்சாலத்து அரசரின் வடிவில் துரோணரின் தோற்றம் தெரிந்து மறைவதை நான் கண்டேன். துரோணரிடம் நாம் இதுவரை கண்ட அனைத்து வில்திறன்களையும் அரசரிடமும் காண முடிந்தது. அவர்கள் இடம்மாறிக் கொண்டதுபோல் இருக்கிறார்கள். வெற்றி எக்கணமும் நிகழும்” என்றான்.

இரு செய்திகளும் தன்னில் எந்த பரபரப்பையும் உருவாக்கவில்லை என்பதை திருஷ்டத்யும்னன் வியப்புடன் உணர்ந்தான். அவன் உள்ளம் நனைந்த கொடியென உடலுடன் ஒட்டிக் கிடந்தது. கைகளால் முன்செல்க என அவன் ஆணையிட்டான். அவ்வசைவு அவனுக்கு நினைவிருந்தது. மீண்டும் நினைவெழுந்தபோது தேர் சற்று தூரமே முன்னகர்ந்திருந்தது. சில நொடிகள்தான், அதற்குள் அவன் பிறிதொரு உலகிற்கு சென்று விழி திகைத்து வாழ்ந்து பல்லாயிரம் உள்ளங்கள் என பெருகி சிதைந்து துணுக்குற்று தன்னை உணர்ந்தான். எங்கோ முளைத்து நீண்டு வந்து தன் தோளைத் தொட்ட தனது கையொன்றை பற்றி அதை கொடியெனக் கொண்டு ஏறி மீண்டும் நனவுக்கு வந்தான்.

அங்கே எண்ணுந்தோறும் தலைகள் பெருகும் அரக்கப் பேருருக்களை அவன் கண்டான். யானைப் பிளிறல்களிலிருந்தும் சிம்மக்குரல்களிலிருந்தும் புலிமுரலல்களிலிருந்தும் ஓநாயின் ஊளைகளிலிருந்தும் கூகைக்குழறல்களிலிருந்தும் காட்டருவியின் ஓசைகளிலிருந்தும் சுழற்காற்றின் முழக்கத்திலிருந்தும் ஒலிகளை சேர்த்தெடுத்த மொழியொன்றில் அவை உரையாடிக்கொண்டன. விண்மீன் வெளியெனப் பெருகும் விழிகள் கொண்டிருந்தன. ஒரு சுடர் ஓராயிரம் சுடராக பற்றிக்கொள்வதுபோல. விண்ணை எண்ணியபோது அவை சிறகு கொண்டன. மண்ணை எண்ணியபோது கால்கள் கொண்டன. நீரை எண்ணியபோது மீன்கள் என்றாயின. ஆழங்களை எண்ணியபோது அரவுருக்கொண்டன.

அத்தெய்வங்களை எதிர்த்து எழுந்து நின்று போரிட்டன நாகங்கள். தங்கள் சீற்றத்திற்கேற்ப படம் விரித்தன. வஞ்சத்திற்கு ஏற்ப வளைவு பெருகின. விழைவுகொண்டு தங்களைத் தாங்களே தழுவி சுருண்டுகொண்டன. மண்ணில் தலையறைந்தெழுந்து பத்தி விரித்தன. எண்ணியெண்ணி தலைகள் பெருக்கின. நூறு தலைகள் கொண்ட மாநாகங்கள். ஆயிரம் தலைகள் கொண்ட மாநாகங்கள். பல்லாயிரம் தலைகள் கொண்ட நாகநாகங்கள். முடிவிலா தலைகள் கொண்ட விண்ணகநாகங்கள். விண் பிளந்து மோதிக்கொள்வதுபோல் அவற்றுக்கு நடுவே போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஊடே ஒளிரும் சிறகுகளுடன் கந்தர்வர்களும் தேவர்களும் பறந்துகொண்டிருந்தனர். பெருகும் விழிகளால் உலகை கணம் கணமெனப் பகுத்தனர் அரக்க தெய்வங்கள். இமையா விழியால் ஒற்றைக்கணமென காலத்தைத் தொகுத்தன நாகங்கள். ஒளிரும் அனைத்தையும் ஒன்றென்றாக்கினர் தேவர்கள்.

அங்கு போரிட்டுக்கொண்டிருந்த ஒவ்வொருவரும் ஒரு சொல் என அவன் அறிந்தான். விழிகளால் கண்டு அறியக்கூடும் சொல். அச்சொற்கள் ஒவ்வொன்றையும் அவன் முன்னரே அறிந்திருந்தான். இச்சொல் நான் நன்கறிந்தது. ஆனால் இவ்வுரு அன்றி பிறிதொரு வடிவில். இந்தத் தலையணிகளும் தோளிலைகளும் கவசங்களும் படைக்கலங்களுமின்றி. நாகச்சீறலென ஒலிக்கும் இச்சொல்லும் நான் அறிந்ததே. இதுவும் இதனருகே அதுவும் அப்பாலுள்ளதும் நான் அறிந்த சொற்களே. பின்னர் அவன் உணர்ந்தான், அவையனைத்துமே வேதச்சொற்கள் என. சொல்லில் நின்ற முன்னோர் பாடி நிறுத்திய தொல்வேதச்சொற்கள் அவை. அவை உதிர்ந்து, சிதறி, முளைத்துப் பெருகி, உருமாறி, வியனுருக்கொண்டு அங்கு நின்று பொருதின. அன்றி இவைதான் பிறிதொரு உருக்கொண்டு நால்வேதங்களில் சென்றமைந்தனவா? தங்கள் அணிகளை மாற்றி உடல் சுருக்கி ஒளி மட்டுமே என்றாகி நின்றனவா?

அது கனவென்று அவன் கனவுக்குள்ளும் அறிந்திருந்தான். ஆகவே அவ்வெண்ணங்களின் பொருளின்மையும் அப்போதே அவனுக்கு தெரிந்திருந்தது. இவையனைத்தும் தொல்வேதச் சொற்கள். அசுரவேதமென்றும் நாகவேதமென்றும் விண்ணவரின் ஒலியிலா நுண்வேதமென்றும் பெருகிய முதல்வேதங்கள் இங்கு திரண்டு போரிடுகின்றன. மிகத் தொலைவில் அவன் வேய்குழல் ஓசையை கேட்டான். வண்டு முரல்வதுபோல் கீழ்சுதியில் அது சுழன்று கொண்டிருந்தது. அப்பேரோசைக்குள் எவ்வண்ணம் அந்த மெல்லிசை எனக்கு கேட்கிறது? ஏனெனில் இது கனவு. இது கனவுதான். இத்தருணத்தில் நான் விழித்தெழக்கூடும். விழித்தெழவும் அக்கனவில் அவ்வண்ணமே திளைக்கவும் அவன் ஒரே தருணத்தில் விழைந்தான்.

மிகத் தொலைவிலிருந்து மிக அண்மைக்கு வந்து முற்றாக சூழ்ந்துகொண்டது அவ்வேய்குழல் ஓசை. ஒளிரும் பட்டுநூலாக அவனை முற்றிலும் சுற்றி செயலற்றதாக்கிப் பிணைத்து, சிலந்தி பறந்தெழ உடன் செல்லும் வலைச் சரடென அதன் உடன் சென்றது. ஒவ்வொரு அரக்கப் பேருருவையும் நாகநெளிவையும் தொட்டுத் தொட்டு சுற்றி, பட்டுநூல் பெருக்கில் புழுக்களை என அனைவரையும் அது கட்டுண்டு அமையச் செய்தது. நூல்சுற்றி உறையென்றாக ஒவ்வொருவரும் துயில் கொண்டு கூட்டுப்புழுவென சொக்கி விழிதழைவதை அவன் பார்த்தான். அரக்க தெய்வங்கள் கால் பின்னி மெல்ல நிலத்தில் சரிந்தனர். அவர்களுக்கு மேல் நாகங்கள் விழுந்தன. பெருங்காதல் கொண்டவர்கள்போல் உடல் தழுவி ஒன்றென்றாகி அவ்வெளியெங்கும் அவர்கள் மெல்ல நெளிந்துகொண்டிருந்தனர். அவன் அந்தக் குழலோசையை கண்ணில் இளநீல ஒளிநெளிவெனக் கண்டான். மின்மினியொன்று பறந்து பறந்து இருள்வெளியில் ஓவியமொன்றை வரைவதுபோல. வரைந்த அவ்வோவியம் விழிப்பாவையென நிற்க வரையப்பட்ட கணமே மறைந்துகொண்டிருந்தது. பின்னர் நினைவென்று எஞ்சியது.

அவன் விழித்து தலைதூக்கியபோது மார்பில் வாய்நீர் வழிந்திருந்தது. சற்று முன் கேட்ட மெல்லிய உறுமல் தன்னுடைய குறட்டையொலி என உணர்ந்தான். “செல்க! ஏழு பகுதிகளாக பிரிந்துகொள்க!” என்று திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான். “ஏழு வீரர்களுக்கும் எதிர்நிற்கும் நம்மவரை துணைக்கட்டும்… ஏழு முனைகளில் நம் போர் கூர்கொள்ளட்டும்!”’ அதன் பின்னரே அவ்வாணையின் பொருளின்மையை அவன் உணர்ந்தான். அது ஏற்கெனவே நிகழ்ந்துகொண்டிருந்தது. அவ்வாணையை பலநூறு முறை சொல்லிச் சொல்லி அவன் நா பழகிவிட்டிருந்தது. ஆணைகள் பெரும்பாலான தருணங்களில் மீளமீள சொல்லப்படுகின்றன. சொல்பவனுக்கு மேலும் பொருள் அளிக்கும்படி அவை மாறுகின்றன. ஆணைகளை ஊழ்க நுண்சொற்களாகக்கொண்டு தலைவன் முதன்மை கொண்டெழுகிறான்.

அவன் போர்முகப்பை நோக்கி செல்கையில் பேரொலி எழுந்தது. தரையெங்கும் பல்லாயிரம் நாகங்கள் நிழலுருக்களாக தலை சொடுக்கி எழுவதுபோல அவனுக்கொரு விழிமயக்கெழ தேர்த்தூணைப் பிடித்து நின்றான். இருபுறமும் அவனை நோக்கி ஓடி வந்த செய்திஏவலர் கையசைவாலும் குரலாலும் “வீழ்ந்தார் அங்கர்! கர்ணன் வீழ்ந்தார்!” என்றார்கள். கௌரவப் படைகளிலிருந்து பொருளற்ற பெருமுழக்கம் எழுந்துகொண்டிருந்தது. “அங்கர் வீழ்ந்தார்! ஐயமில்லை, அரக்கர் மைந்தனால் அங்கர் கொல்லப்பட்டார்” என்று ஏவலன் கூவினான். “பொறு” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “விழி நோக்காத செய்தியைச் சொல்வதல்ல செய்தியளிப்பவனின் பணி” என்றபின் செவிகூர்ந்து “நமது படைமுகப்பு ஏன் அத்தனை அமைதி கொண்டிருக்கிறது? ஏன் அங்கு ஓசை எதுவும் எழவில்லை?” என்றான்.

ஏவலன் அதை உணர்ந்து “அவ்வாறெனில்…” என்றான். போர்முகப்பிலிருந்து ஒற்றை முரசு முழங்கி “கடோத்கஜன் வீழ்ந்தான்!” என்று அறிவிக்கத் தொடங்கியது. “இடும்பர் இளவரசர்!” என்று அருகே வந்த படைத்தலைவன் உக்ரபாணன் சொன்னான். “அவரை வீழ்த்தலாகுமா! அதிலும் அவர் நூறு மடங்கு பெருகும் இவ்விரவில்! எவ்வாறு அவரை வீழ்த்த இயலும்?” தன் வில்லை எடுத்துக்கொண்டு “விரைக! விரைக!” என்று சொல்லி திருஷ்டத்யும்னன் தேர்ப்பாகனை ஊக்கினான். அவனுடைய தேர் பாண்டவப் படை நடுவே அமைந்த பலகைச் சாலையில் சென்று செறிந்த போர்வீரர் திரள் நடுவே முட்டித் தயங்க தேரிலிருந்து இறங்கி உடன் வந்த புரவியொன்றின் மேலேறி தள்ளாடி சரிந்து விழுந்துகொண்டிருந்த பாண்டவப் படைகளினூடாகச் சென்று அவன் போர்முகப்பை அடைந்தான்.

அங்கு பாண்டவப் படை உடல் செறிந்த காடுபோல் வளையமிட்டிருந்தது. “விலகுக! விலகுக!” என்று அவன் ஆணையிட்டான். அவனுடைய முகப்புக்காவலர் முட்டிமோதிக் கொண்டிருந்த வீரர்களை விலக்கினர். உள்ளே சென்றபோது அவன் தரையில் மல்லாந்து விழுந்து கிடந்த கடோத்கஜனை பார்த்தான். புரவிக்கடிவாளத்தை இழுத்து கழுத்தை தட்டி நிலைகுலைந்திருந்த அதை அமைதிப்படுத்தி மீண்டும் அப்பேருருவனை நோக்கினான். கைகால்களில் அணிந்திருந்த இரும்பு வளையங்கள் வானொளியில் மின்னி நாகக்குழவிகளோ என உளம்விதிர்க்கச் செய்தன. உடல் எங்கும் புண்ணோ குருதியோ தென்படவில்லை. “என்ன ஆயிற்று?” என்று அவன் கேட்டான். அங்கே நின்றிருந்த படைத்தலைவனாகிய சாரதன் “அங்கரின் அரவம்பு அவரைத் தாக்கியது” என்றான். “அரவம்பா? மெய்யாகவா?” என்றான் திருஷ்டத்யும்னன்.

சர்வதன் புரவியிலிருந்து இறங்கி அவனை நோக்கி ஓடிவந்து “பாஞ்சாலரே, எங்களிடமிருந்து அகன்று அகன்று சென்றார் மூத்தவர்… நாங்கள் அங்கே உத்தரபாஞ்சால வில்லவர்களிடம் சிக்கிக்கொண்டோம்” என்றான். திருஷ்டத்யும்னன் “எவ்வண்ணம் வீழ்த்தப்பட்டார்?” என்றான். “அங்கர் தன் அரவம்பை ஏவினார் என்றார்கள்” என்றான் சர்வதன். “அரவம்பையா? அவருக்கெதிராகவா?” என்றான் திருஷ்டத்யும்னன் மீண்டும். “ஆம், அதை அவர் எடுக்காமலிருந்தால் அங்கர் கொல்லப்பட்டிருப்பார். அவர் ஒரு நிலையில் தன் அனைத்து கட்டுப்பாடுகளையும் இழந்தார். இக்களத்தில் முதன்முறையாக இன்றே அவர் உயிரச்சத்தை அடைந்திருப்பார்” என்று சர்வதன் சொன்னான். அவனுக்குப் பின்னால் வந்த சுருதசேனன் “நாகஅம்பை ஏவியதுமே ஒருகணமும் திரும்பிப்பார்க்காமல் தேரைத் திருப்பி தன் படைகளுக்குள் சென்றுவிட்டார்” என்றான். திருஷ்டத்யும்னன் பெருமூச்சுவிட்டான்.

சர்வதன் கடோத்கஜனை அணுகி குனிந்து நோக்கி அவன் கால்களைத் தொட்டு தலைவைத்து வணங்கினான். கௌரவப் படைகளுக்குள்ளிருந்து வெற்றிமுழக்கம் கேட்டுக்கொண்டிருந்தது. பாண்டவப் படைகள் அப்போதும் துயிலிலென ததும்பிக்கொண்டிருந்தன. “எவரும் இப்போது விழிப்பு நிலையில் இல்லை. சென்ற நான்கு நாழிகைகளாக இப்போர் துயிலுக்குள்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றான் சாரதன். சர்வதன் சுருதசேனனிடம் “உடனே சென்று தந்தையிடம் சொல்க! இச்செய்தியை அவர் அறிந்திருப்பார் எனினும் செய்தியை நாம் சொல்வதே முறை” என்றான். திருஷ்டத்யும்னன் “அரசரிடம் நானே சொல்கிறேன். இறந்தவர் அரசமைந்தர் என்பதனால் முறையாக தெரிவிக்க வேண்டியுள்ளது” என்றபின் புரவியைத் திருப்பி படைகளினூடாகச் சென்றான்.

ele1திருஷ்டத்யும்னன் புரவியில் பாண்டவப் படைகளினூடாகச் சென்று யுதிஷ்டிரரின் தேரை அணுகினான். யுதிஷ்டிரர் தேரிலிருந்து இரு வீரர்கள் கைகொடுக்க சகடத்தின் ஆரத்தைப் பற்றி கீழிறங்கி நின்று பதற்றத்துடன் மாறி மாறி என்ன நிகழ்ந்தது என்று வினவிக்கொண்டிருக்கையில் அவன் அவரை நோக்கி தலைவணங்கி “செய்தி, அரசே. பாண்டவ மைந்தரில் முதல்வரும் இடும்பர் குலத்து இளவரசருமான கடோத்கஜன் சற்று முன்னர் மண்பட்டார். கௌரவர்களின் படைத்தலைவரும் அங்கநாட்டு அரசருமான வசுசேஷணரின் நாகஅம்பினால் அவர் வீழ்த்தப்பட்டார்” என்றான். முன்னரே அதை அறிந்திருந்தாலும் அந்த முறையான அறிவிப்பு யுதிஷ்டிரரை அனைத்துப் புலன்களையும் தளரச்செய்து மெல்ல பின்னோக்கி சரிய வைத்தது. அங்கிருந்த இரு காவலர்கள் அவரை பற்றிக்கொள்ள மெல்ல தரையில் அமர்ந்தார். பின்னர் இரு கைகளாலும் தலையை பற்றிக்கொண்டு விழிநீர் உகுத்தார்.

திருஷ்டத்யும்னன் “இப்போரை இப்போது நிறுத்திவிடலாம் என்று நான் எண்ணுகிறேன், அரசே. நம் படைகள் அனைத்தும் துயில்மீதேறி தள்ளாடிக்கொண்டிருக்கிறார்கள். எதிரிப் படையினரும் அவ்வாறே” என்றான். யுதிஷ்டிரர் சீற்றத்துடன் எழுந்துகொண்டு “இல்லை, இக்களத்தில் இப்போது நாம் பின்வாங்குவதென்பது நம் மைந்தனை விட்டுக்கொடுப்பதற்கு நிகராகும். மந்தனை அழை. அவன் களமிறங்கட்டும். உடன் நானும் செல்கிறேன். இப்போரில் என் தலை உருளினும் மைந்தனுக்காக நான் அம்பெடுத்தாகவேண்டும். அவனுக்காக நான் களம்நின்று போரிட்டு குருதி சிந்தியாக வேண்டும்” என்றார். “அரசே!” என்று சொல்ல யுதிஷ்டிரர் கைதூக்கி “மாறென ஒரு சொல்லும் தேவையில்லை. ஒருபோதும் போரை நிறுத்துவதற்கு உடன்பட மாட்டேன். போர் நிகழட்டும்!” என்று கூவினார்.

திருஷ்டத்யும்னன் சொல்லெடுக்கவில்லை. யுதிஷ்டிரர் முகம் வலிப்பு கொண்டதுபோல் இழுபட்டு அதிர, கைகால்கள் உதற திரும்பி உடன்நின்ற வீரர்களை நோக்கி “இது என் ஆணை! தொடர்க! போர் நிகழட்டும்! இடும்பனின் குருதிக்கு பழிநிகர் கொண்ட பின்னரே நாம் களத்திலிருந்து திரும்பவேண்டும்” என்றார். திருஷ்டத்யும்னன் அவருடைய சீற்றத்தை வெறுமைகொண்ட நெஞ்சுடன் நோக்கிக்கொண்டிருந்தான். உரத்த குரலில் “மந்தனிடம் எனது ஆணையை தெரிவியுங்கள். இப்பொழுதே போர் மீண்டும் விசைகொள்ள வேண்டும். நாம் நமது முழுப் படையையும் எழுப்பி அங்கனை அறையவேண்டும். அவன் அரவம்புக்கு முன் நாங்கள் ஐவரும் விழுந்தாலும் சரி. எங்கள் குல மூத்த மைந்தனின் குருதிக்கு நிகர் கொள்ளாது மீண்டால் நாம் ஆண்மகன்கள் அல்ல” என்றார் யுதிஷ்டிரர்.

திருஷ்டத்யும்னன் தலைவணங்கியபின் புரவியைத் திருப்பி படைகளினூடாகச் சென்றான். பெரும்பாலான பாண்டவ வீரர்கள் வில்லையும் வேலையும் தரையில் ஊன்றி உடலெடையால் அதற்கு மேல் சாய்ந்து மெல்ல அசைந்தபடி நின்றுகொண்டிருப்பதை அவன் பார்த்தான். துயிலில் அவர்கள் ஒருவருக்கொருவர் குழறும் சொற்களால் பொருளற்று பேசிக்கொண்டனர். மிக அப்பால் “குருகுலத்து இளவரசர் விண்ணேகினார்! இடும்பர் குலத்து மைந்தர் விண்ணேகினார்! வெற்றிகொள் வீரர் விண்ணேகினார்! சிறப்புறுக! இடும்பர் குலம் சிறப்புறுக! குருகுலம் சிறப்புறுக! வெல்க மின்கொடி!” என கொம்புகளும் முழவுகளும் துணையெழ வாழ்த்தொலிகள் ஒலித்துக்கொண்டிருந்தன. ஆனால் அவற்றை அங்கிருந்தோர் கேட்டதாகத் தெரியவில்லை. புரவிக்கால் குளம்பொலி கேட்க பலர் திரும்பி அவனைப் பார்த்தாலும் எவர் விழிகளிலும் அறிமுகம் எழவில்லை.

சிரித்தபடி ஓடிவந்து அவன் புரவியின் கடிவாளத்தை பற்றிக்கொண்டான் பாஞ்சால்யன். “இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்று அவன் கேட்டான். “பூசனைக்குரிய அனைத்தும் ஒருங்கிவிட்டன. தந்தை காத்திருக்கிறார்” என்று பாஞ்சால்யன் சொன்னான். சத்ருஞ்சயனும் உத்தமௌஜனும் அவனை நோக்கி விரைந்து வந்தனர். “பிந்திவிட்டாய், இளையோனே. தந்தை பலமுறை கேட்டார்” என்றான். “இது எந்த இடம்?” என்றான். “நாங்களும் முதல்முறையாக இங்கே வருகிறோம். காம்பில்யத்தின் எல்லைக்காட்டுக்குள் இருக்கிறது இச்சிற்றாலயம். இங்கே நூற்றெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பூசனை செய்யப்படுகிறது” என்றான் சத்ருஞ்சயன். விரிகனும் குமாரனும் யுதாமன்யுவும் ஆலயமுகப்பில் நின்றிருந்தனர். ஜனமேஜயனும் சுரதனும் விறகுகளை உள்ளே கொண்டுசென்றனர். “இங்கே அரசகுடியினர் மட்டுமே நுழைவொப்பப்படுகிறார்கள்” என்றான் சத்ருஞ்சயன்.

கரிய பாறை ஒன்றில் குடையப்பட்ட சிற்றாலயத்தின் முன் ஈச்சையோலையால் பந்தல் போடப்பட்டிருந்தது. அதற்குள் இருந்து சத்யஜித் வெளியே வந்து “வருக, மூத்தவர் காத்திருக்கிறார்” என்றார். திருஷ்டத்யும்னன் குறடுகளைக் கழற்றிவிட்டு மேலாடையை இடையில் சுற்றிக்கட்டி உடல்குறுக்கி வணங்கியபடி உள்ளே சென்றான். “மூத்தவர் வரவில்லையா?” என்று திருஷ்டத்யும்னன் விரிகனிடம் கேட்டான். “இல்லை, அவர் குருதியால் பாஞ்சாலர் அல்ல என்றனர்” என்றான். “யார் சொன்னது?” என்று அவன் சீற்றத்துடன் கேட்க “தந்தை” என்றான் விரிகன். சத்யஜித் “மூத்தவரே, மைந்தன் வந்துவிட்டான்” என்றார். புலித்தோல் விரித்த பீடத்தில் அமர்ந்திருந்த முதியவரைக் கண்டு திருஷ்டத்யும்னன் திடுக்கிட்டான். “இவர்?” என்றான். “என்ன ஆயிற்று உங்களுக்கு? தந்தையை தெரியாதா?” என்று சுரதன் அவனருகே தாழ்ந்த குரலில் கேட்டான். “இல்லை… இவர்…” அவன் அவரை அடையாளம் கண்டான். அரண்மனையின் சுவரோவியங்களில் உள்ள முகம். “இவர் நம் தந்தையின் தந்தை… பேரரசர் பிருஷதர்…” என்றான். பிருஷதர் அவனை நோக்கி “அமர்க!” என்றார். “நீங்கள் தந்தை அல்ல” என்றான். “அமர்க!” என்றார் பிருஷதர். அவன் அவர் அருகே மான்தோல் இருக்கையில் அமர்ந்தான். அங்கே கைகள் கட்டப்பட்டு போடப்பட்டிருந்த பலிவிலங்கை அப்போதுதான் பார்த்தான். அது ஒரு மானுடன். “மானுடபலியா?” என்றபின் விழிதூக்கி கருவறையை நோக்கினான். அங்கே சிலையென அமர்ந்திருந்த அன்னைதெய்வத்தைக் கண்டு அலறியபடி எழுந்தான். திரும்பி பலிமானுடனின் முகத்தைக் கண்டு மீண்டும் அலறினான்.

அவன் உடல் தொய்ந்து தலைசென்று புரவியின் பிடரி மயிரில் முட்டிக்கொண்டது. எழுந்து கண்களை மூடித்திறந்து வாயில் ஊறியிருந்த எச்சிலை இருமுறை துப்பினான். பெரும்கொடிமரத்தின்மீது அவன் உடல் கொடிக்கூறை என துடித்துப் பறந்து கொண்டிருந்தது. எங்கிருந்தோ காற்று விசையுடன் வீச இரு கைகளாலும் கொடிமரத்தைப் பற்றியபடி ஒவ்வொரு கணமும் கிழிந்து தெறித்துவிடுவோம் என்று அஞ்சியபடி அவன் பறந்துகொண்டிருந்தான். அவன் சூழப் பார்த்தபோது அங்கிருந்த அத்தனை வீரர்களும் நிலத்தில் அமர்ந்துவிட்டிருந்தனர். பின்னர் அவர்கள் ஆங்காங்கே படுத்து துயிலத்தொடங்கினர். திகைப்புடன் அவன் சூழ விழியோட்டி நோக்கியபோது அலையலையென பாண்டவ வீரர்கள் களத்திலேயே படுத்து துயிலத்தொடங்கிவிட்டிருந்ததை கண்டான்.

தனித்தனியாக அன்றி மொத்தமாகவே அவர்கள் அந்த முடிவை எடுத்தனர் என்று தோன்றியது. நோக்கி நிற்கவே பாண்டவப் படை காற்றில் புற்பரப்பு தழைந்து சரிவதுபோல குருக்ஷேத்ரத்தில் படுத்துப் பரவி துயிலத் தொடங்கியது. துஞ்சியவர்களும் துயில்பவர்களும் ஒன்றெனக் கலந்து உடல்களின் பரப்பென ஆகி களத்தை நிறைத்திருந்தனர். அவன் புரவியின் முதுகின் மேலேறி நின்று தொலைவில் பார்த்தபோது கண்ணெட்டும் தொலைவுவரை கௌரவப் படையும் நிலம் படிந்து துயின்றுகொண்டிருப்பதை கண்டான்.

முந்தைய கட்டுரைவிவாதப் பட்டறை, ஈரோடு
அடுத்த கட்டுரைசாமர்வெல்லும் பூமேடையும்