பட்டி

pattiபட்டி என்ற சொல்லில் எல்லா குமரிமாவட்டத்தினரையும் போல நானும் முட்டிக்கொண்டு மண்டை கிறுகிறுத்திருக்கிறேன். எங்களூரில் பட்டி என்றால் நாய். கோயில்பட்டி என்றால் என்ன அர்த்தம் என எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன். சரி விருதுப்பட்டி? விருதா என்றால் வீண் என்பது எங்களூர் வழக்கு. ஆரல்வாய்மொழி எல்லை கடந்தாலே பட்டிகள்தான். “அங்கிண பட்டித்தொல்லை கூடுதலுடே. கையிலே ஒரு கம்பு வச்சுகிடணும்” என்ற நையாண்டி எங்களூரில் மிகுதி.

பதினாறு வயதில் முதல்முறையாக திருச்செந்தூருக்கு செம்மண் பொட்டல் வழியாக பேருந்தில் செல்லும்போதுதான் ஆட்டுமந்தை என்பதை நேரில் பார்த்தேன். எங்களூரிலும் ஆடுகள் உண்டு. அவை பெரும்பாலும் கிழவிகள் அல்லது சின்னப்பெண்களால் வளர்க்கப்படுபவை. ஆடுகளை அவிழ்த்துவிடும் வழக்கமே கிடையாது. ஆட்டை பசுமாடு போல ஒற்றையாக நீண்ட கயிற்றில் கட்டி மேய்ச்சலுக்க்கு கொண்டுசெல்லும் காட்சியை கண்டால் தமிழக மையநிலத்தார் கலாச்சார அதிர்ச்சி அடையக்கூடும்.

இங்கெல்லாம் ஒரு வீட்டில் மிஞ்சிப்போனால் இரண்டு ஆடுகள் இருக்கும். பெரும்பாலும் குடும்பப்பாங்கான வெள்ளாடுகள். பொறுப்பானவை. பிள்ளைகளை பத்திக்கொண்டு எச்சரிக்கையாகவே செல்லும். “பத்திரம்! ஏ பத்திரம்!” என்றுதான் குரலெழுப்பிக்கொண்டிருக்கும். காரணம் எங்களூரில் எங்கே பார்த்தாலும் விவசாயம் செய்திருப்பார்கள். ஒரு சாண்நிலம்கூட மிஞ்சியிருக்காது. அரை ஏக்கர் வைத்திருப்பவன் தன்னை பண்ணையார் என நினைக்கச்செய்யும் வளமான மண். வேலியில்கூட காய்ச்சில் நீளப்பயிறு என பச்சைபடர்ந்திருக்கும்.

patti2

மேலவிளை அம்புரோஸ் ஊர்ப்பொதுவழியான ஒற்றையடிப் பாதையில் ஓரடிக்கு ஓரடி விட்டு வெண்டை நட்டு “போறதுக்கும் வாறதுக்கும் எடம் விட்டிட்டுண்டு. சாடிச் சாடி போலாமே…. மண்ணு சும்மால்லா கெடக்கு? நாலு வெண்டை காய்ச்சா வித்து பைசா பாக்கலாமே” என்று சொன்னது நினைவிருக்கிறது. ஆகவே ஆடுக்குரிய இடம் அல்ல. மேய்ச்சலுக்குக் கொண்டுசென்றால்கூட பொது இடமான ஆற்றுப்படுகையில் தவிர எங்கும் கட்டமுடியாது.

ஆனால் உணவுக்குப் பஞ்சமே இல்லை. மாலை மயங்கி, வேலைமுடிந்து வந்தபின் அரிவாளை எடுத்துக்கொண்டு சென்றால் இரண்டு ஆடுகள் நாள்முழுக்க தின்னுமளவுக்கு தழை [எங்கள் மொழியில் குழை. இரண்டுக்கும் ஒன்றே பொருள். தழைவதனால் தழை. குழைவதனால் குழை] கொண்டுவந்துவிடலாம்.

பெரும்பாலும் ஆடுகள் வீட்டுக்கு முன் ஒட்டுத்திண்ணையில் நின்று சன்னல் கம்பியில் கட்டித்தொங்கவிடப்பட்டிருக்கும் தழைக்கற்றையை மேய்ந்துகொண்டிருக்கும். அவசரமாக தின்பதைப்பார்த்தால் எவரோ அடித்து துரத்தப்போகிறார்கள் என நினைப்பது தெரியும். முற்பிறப்பு நினைவு. நடுவே காலடியோசை கேட்டால் திரும்பி வாயை பப் பப் என அசைத்துவிட்டு மீண்டும் தின்னத் தொடங்கும். அந்த வாயசைவுக்கு விட்டலாச்சாரியா ‘தின்னிட்டிருக்கோம்ல” என டப்பிங் கொடுப்பார்.

patti2

ஆகவே மேகத்திரள்போல ஆட்டுமந்தையைக் கண்டு நான் திகைத்து வாய்பிளந்து எழுந்து பேருந்தின் கம்பியை பற்றிக்கொண்டேன். ஆடுகள் கூட்டமாக ஓசையிட்டது எனக்கு வேறெங்கோ இருக்கும் பறவைகளின் ஒலியாகக் கேட்டது. “எவ்ளவு ஆடு!” என்று வியந்து மெய்சிலிர்த்தேன். “இவ்ளவும் ஒராளுக்கா?” என மாமாவிடம் கேட்டேன். “அவனுக கெடை போடுத கீதாரிங்கள்லா?” என்றார் அந்தப்பக்கம் அமர்ந்திருந்த சட்டை போடாத மூத்தநாடார். “பச்ச உள்ள எடங்களுக்குப் போவானுக. கெடைச்ச எடங்களிலே பட்டிபோடுவானுக.”

பட்டி என்னும் சொல்லை அப்போதுதான் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். பட்டை என்றால் மூங்கில் அல்லது கமுகில் இருந்து கீறிப் பிரித்து எடுக்கும் குச்சி. பட்டைகளால் ஆனது பட்டி. அது இடைவெளியே இல்லாமல் முடையப்பட்டிருந்தால் அது தட்டி. வலைபோலிருந்தால் பட்டி. பட்டி போடுவது என்றால் அந்த மூங்கில்முடைவுகளை அடுக்கி ஒரு வட்டாரத்தை உருவாக்கி அதற்குள் ஆடுகளையோ வாத்துகளையோ அடைப்பது.

வீட்டுக்கு முன்னால் மூங்கில்வலைப்பின்னல் அமைப்பதற்கும் பட்டி வைப்பது என்றே பொருள். நேராக கூரையில் இருக்கும் மரம் கழுக்கோல். அவற்றை இணைத்தபடி குறுக்காக ஓடுவது பட்டியல். அதிலிருந்தே ஒன்றை கீழ் கீழாக அடுக்குவதற்கு பட்டியல் என்று பெயர் வந்தது. மலையாளத்தில் அதை பட்டிகை என்கிறார்கள்.

நீளமாக கிழித்த வேய்மூங்கில் அல்லது பாளையை பட்டி என்பதுண்டு. அதை கால்களில் சுற்றிக்கட்டும் வழக்கம் காட்டுக்குள் வேட்டையாடச் செல்பவர்களிடம் உண்டு. பட்டி என்றால் நாடா என்றும் சொல்லப்பட்டுள்ளது. அரைக்கச்சையை அரைப்பட்டி என்பதுண்டு. யோகத்தில் அமர்ந்திருக்கும் நரசிம்மர் சாஸ்தா போன்ற தெய்வங்கள் இடையில் அணிந்திருப்பது யோகபட்டி.

அதிலிருந்து உருவான சொல்லாட்சிதான் அலங்காரப் பட்டிகை. கோயிலின் கருவறையிலும் மண்டபத்திலும் கல்பரப்பில் மிகுந்தால் இரண்டு சாண் அகலமாக சுற்றிவர அமைக்கப்படும் சிற்பங்கள் செறிந்த பரப்பு இது. வீடுகளிலும் இது அமைக்கப்படுவதுண்டு. தூண்களுக்கு அடியில் வைக்கும் அகன்ற கால்கல் பட்டிக்கல் எனப்படும், அதில் செதுக்குவேலைகள் இருந்தால்.

patti4

அந்தக்காலக் காவலர்கள் காலில் கம்பிளி நாடாவால் பட்டி சுற்றிக்கொள்வார்கள். முலைநடுவே முடிச்சு போட்டு இறுக்கும் கச்சுக்கு பதிலாக இழுவிசைகொண்ட உள்ளாடை வந்தபோது அதை பட்டிஜாக்கெட் என்று சொல்லியிருக்கிறார்கள். வீட்டுக்குள் ஓடும் மின்கம்பிகளை மூடிவைக்கும் ஃபைபருக்கும் இப்போது பட்டி என்கிறார்கள். சிமிட்டிக்கூரை போட கம்பிகளை வலையாகப் பின்னுவதற்கும் பட்டியடித்தல் என்று பெயர்.

பட்டியில் வளர்க்கப்படுவதனால் நாய்க்கு பட்டிநாய் என்று பெயர் இருந்திருக்கிறது. அது மருவி பட்டி. குமரிமாவட்டத்தில் முன்பு வேடர்கள் அல்லாதவர்கள் நாய் வளர்த்ததே இல்லை. வளர்ப்புநாய் என்பது தமிழகத்தின் பட்டிகளில் இருந்தே இங்கே வந்திருக்கிறது.

ஆடுகளையும் மாடுகளையும் மேய்த்துக்கொண்டு செல்பவர்கள் பட்டி அமைக்கும் மூங்கில்களை தாங்களும் சுமந்துகொண்டு செல்வார்கள். அந்தியில் அவற்றைக்கொண்டு பட்டி அமைத்து மேய்ச்சல் விலங்குகளை உள்ளே அடைத்து அருகே தாங்களும் குடிலமைத்து தங்குவார்கள். பட்டிக்குறி என்பது ஒவ்வொரு பட்டிக்கும் உரிய அடையாளம். சூட்டுகோலால் அதை ஆடுகளின் காதிலும் மாடுகளின் புட்டத்திலும் பதிவுசெய்வதுண்டு.

இவ்வாறு பட்டி அடித்து தங்குமிடங்கள் நிலையாக மாறி சந்தையாகின்றன. பட்டி என்றால் சந்தையும்கூட. சந்தை ஊராகிறது. ஊர்மையம் பட்டி என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அது கூடுமிடம். பட்டிக்காடு என்றால் பட்டி போட்ட இடம் மெல்ல ஊராக உருவானது. அங்கே ஊருக்கான ஆலயமோ ஊருணியோ சாலையோ சந்தையோ இல்லை என்று பொருள். அதிலிருந்தே பட்டினம் என்னும் சொல் வந்திருக்கக் கூடும். அது பட்டணம் என்றாயிற்று பின்னர்.

patti44

காலப்போக்கில் ஊர்கூடும் இடமும் சேர்ந்தமரும் இடமும் பட்டி என்றாயிற்று. பட்டிமன்றம் இன்றும் புழங்கும் சொல். பட்டிமம் என்றால் திண்ணைப்பள்ளிக்கூடம். ஆனால் பட்டிக்காரன் என்றால் ஊர்க்காவலன் அல்லது ஊருக்குப் பொதுவான ஏவலன். ஊர்மேய்ந்த பசுவை கொண்டுவந்து அங்கே கட்டுவார்கள். அதற்கு மூங்கிலால் ஆன சிறை ஒன்று இருக்கும். அதற்கும் பட்டி என்று பெயர். பட்டியாரம் என்றும் சொல்லப்படுவதுண்டு. அந்த பசு பட்டிமாடு எனப்படும்.

மாடுகளை அறுவடைசெய்த நெற்கற்றைகளை மிதிப்பதற்கோ உழுவதற்கோ கூட்டிக்கொண்டுவந்தால் அளிப்பது பட்டிப்படி. மாட்டிக்கொண்ட ஒழுக்கமில்லாதவரை பட்டிமாடு என்று சொல்வதுண்டு. பட்டிமகள் என்றால் விபச்சாரி. பட்டியடித்தல் என்றால் விபச்சாரம் செய்தல். பட்டிகன் என்றால் திருடன். பட்டிவாய் என்றால் தராதரம் இல்லாமல் பொது இடத்தில் பேசும் பேச்சு.

மண்ணை அளவிடும் வகையும் பட்டி எனப்பட்டிருக்கிறது. நிலம் அளவற்றதாக இருக்கையில் ஒருவரால் வளைத்து எடுக்கப்பட்ட நிலம் ஒரு பட்டி. பட்டிவழி என்பது இதனடிப்படையில் செய்யப்பட்ட நிலப்பங்கீடு.

இன்றும் பட்டிவாழ்க்கை நீடிக்கிறது. தென்தமிழகத்தில் ஆடுகளுடன் கிளம்பி நிலம்தேடிச்சென்று மேய்த்து அங்கேயே தங்கிவாழும் நாடோடிக்குழுக்கள் பல உள்ளன. ‘மட்டன்’ இப்போது நல்ல விலைக்குச் செல்வதனால் அது நல்ல தொழிலாகவே உள்ளது. நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் வரை ஆட்டுப்பட்டிகளை ஏராளமாகக் காணலாம்.

பொதுவாக கோடை தொடங்கும்போது பணகுடிக்கு அப்பாலிருந்து மலையிடுக்குகள் வழியாக குமரிமாவட்டத்திற்குள் கீதாரிகள் வருகிறார்கள். இங்கே பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என எல்லா மாதமும் கோடைமழை உண்டு. ஆகவே ஆடுகள் மேய பசுமை இருக்கும். இல்லையென்றாலும் பறித்திட தழைக்கு பஞ்சமிருக்காது. ஜூனில் அப்பால் தமிழ் மையநிலத்திலும் மழைச்சாரல் உண்டு. அப்போது கிளம்பிச் சென்றுவிடுவார்கள்.

இங்கு திறந்த நிலங்கள் இல்லை. ஆகவே அறுவடை முடிந்த வயல்களிலும் தோப்புகளிலும் பட்டிபோடுவார்கள். ஆட்டுப்புழுக்கை வயலுக்கு நல்லது என்பதனால் அதை நில உரிமையாளர்கள் அனுமதிப்பார்கள். தோப்பில் தங்கினாலும் ஒரு தேங்காய்கூட அனுமதி இல்லாமல் எடுக்க மாட்டார்கள் என்பதனால் இவர்கள் சிறந்த காவலர்களும்கூட.

காலையில் நடைசென்ற வழியில் சாரதாநகரிலேயே ஒரு தோப்புக்குள் ஒரு பட்டியை பார்த்தேன். அரசியல் கட்சிக்கூட்டம்போல ஒரே வாழ்க வாழ்க ஒழிக ஒழிக கூச்சல். தட்டித்தடுமாறி முட்டிமோதி பட்டிக்குள் சுற்றிக்கொண்டிருந்தன. தொங்கும் காதுகள், பிசிறுத்தாடிகள், குட்டிகளின் காரணம் தெரியாத துள்ளல், மூத்த ஆடுகளின் ‘சர்தான் இப்ப என்ன?’ என்னும் மங்கலான கண்கள்.

அருகே பெரிய கூடைபோல கவிழ்க்கப்பட்டிருந்ததுதான் கீதாரிகளின் நகரும் இல்லம். ஐந்தரை அடிதான் விட்டம். பரிசல்போல. நிலத்தில் பாய்விரித்து படுத்து மேலே அதை கவிழ்த்துக்கொள்வார்கள். விளிம்பில் ஒரு சிறு செங்கல்லை வைத்தால் உள்ளே காற்றோட்டம் வரும். நீண்டு படுக்க முடியாது. ஆனால் அதற்குள் சுருண்டு படுத்து பழகிவிட்டிருக்கிறார்கள். இரவில் சிலசமயம் கால்கள் வெளியே நீட்டித்தெரியும்.

பகலில் ஆடுகளை பல ‘ஸ்கூல் ஆஃப் தாட்’களாக பிரித்து மேய்ச்சலுக்குக் கொண்டுசெல்வார்கள். அந்தி அணைவதுதான் கடினம். நூறு ஆடு ஒரே திசையில் சென்றால் ஒன்று மட்டும் வழிதிகைத்து வேறெங்கோ நோக்கி மே மே என்று கூப்பாடு போடும். அதை துரத்தி அதட்டி கொண்டுவந்து சேர்த்தால் இன்னொன்று புல்லால் கவரப்பட்டு அப்பால் கடந்துசெல்லும். கலகக்காரர்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்கள் அல்லது பேதைகள்.

நாய்கள் இல்லையேல் இவற்றை கொண்டுசென்று சேர்க்கவே முடியாது. நாய்கள் நல்ல போலீஸ்காரர்கள். உற்சாகமாக வாலைச்சுழற்றியபடி குரைத்து அதட்டி ஆடுகளை ஒருங்கிணைக்கின்றன. முட்டன் கடாவை நெருங்கக்கூடாது என்றும் தெரிந்து வைத்திருக்கின்றன. எல்லாவற்றையும் பட்டியில் அடைப்பது மட்டும்தான் வேலை. மற்றவேளைகளில் பூச்சிபொட்டு பிடித்து தின்பது, ஈக்களை கவ்வ முயன்றபடி தூங்கி கனவுகண்டு திடுக்கிட்டு எழுவது.

ஆடுகளை   இருட்டுவதற்குள் தோப்புக்கு கொண்டுவந்து சேர்ப்பது உண்மையிலேயே ஓர் இலக்கிய மாநாட்டை ஒருங்கிணைத்து நிகழ்த்தி முடிப்பதற்கு சமம்தான். அதன்பின் அடுப்பு மூட்டி நெருப்பெழுப்பி சமைக்க ஆரம்பிக்கிறார்கள். சிலர் பீடி, வெற்றிலை வாங்க அருகே கடைக்கு வருவார்கள். பொதுவாக குமரிமாவட்டக் கடைமுகப்புகள் சட்டசபை போல கருத்துக்கள் கொந்தளிக்கும் மையங்கள். ஆனால் இந்த மேய்ச்சல் மக்கள் ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. ஓப்பியெஸும் ஈப்பீயெஸும் அவர்களுக்கு தெரிந்திருக்குமா என்றே சந்தேகம்தான். அவர்கள் வாழ்வது பிறிதொரு காலத்தில். அனேகமாக வேதகாலத்தில். கிருஷ்ணன் பிறந்து துவாரகை அமையவேயில்லை.

முந்தைய கட்டுரைகட்டண உரை – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-79