பால் – இறுதியாக…

mil

பால்- பாலா கடிதம்

அன்பின் ஜெ….

நலம் விழைகிறேன்.

நீர்க்கூடல்நகர் – 1

இந்தியா முழுக்க இன்று அருந்தப்படும் பால் பற்பல லட்சம் லிட்டர். அத்தனைபால் கறக்கும் மாடுகள் எங்கிருக்கின்றனஇத்தனை பால் வருகிறது?பால்கறக்கும் மாடுகள், அவற்றுக்கான வைக்கோல், அவை போடும் சாணி எங்கே? “

என் பள்ளி நாட்களில் (1992 வரை) எங்கள் வீட்டில் பதினைந்துக்கும் குறையாத எண்ணிக்கையில் மாடுகள் இருக்கும். இப்போது அது மூன்று அல்லது நான்கு. ஆனால்பால் உற்பத்தி அதே அளவுதான். ஒரு நாட்டுப்பசு அதிகபட்சம் 3 லி பால் கறக்கும். ஆனால் தற்போது எங்கும் அதிகக் கறவை தரும் கலப்பின மாடுகளே உள்ளன. அவை சாதாரணமாக 8-12 லி பால் தருகின்றன. உயர்தர கலப்பின மாடுகளை நவீன முறையில் கொட்டகை அமைத்து (சின்னசேலம் முதல் ஆத்தூர் சேலம் கோயமுத்தூர் வழியாக ஈரோடு வரை) இதை நீங்கள் அதிக அளவில் காணலாம். இம்மாடுகளை நீங்கள் அதிக அளவில் வெளியில் பார்க்கவியலாது, நாட்டுமாடுகளைப் போல.

கால்நடைகளின் எண்ணிக்கையும் , அதனால் பால் உற்பத்தியும்  அதிகரிக்கவே செய்துள்ளது. இது நான் கால்நடைப் பராமரிப்புத்துறையில் பணிபுரிந்தபோது நடைபெற்ற கால்நடைக் கணக்கெடுப்பின் நேரடி கள அனுபவம். முன்புபோல மேய்ச்சல் தரைகள் அதிகமில்லாததும்,  நவீனக் கொட்டகைகளில் உயர் தரத்துடன் (சில இடங்கள் WATER SPRINKLERS, Fans, AC கூட பயன்படுத்துகிறார்கள்) மாடுகள் வளர்க்கப் படுவதாலும் நீங்கள் அதிகம் வெளியில் மாடுகளை பார்க்க இயலாது.

இன்றும் மூன்று அல்லது நான்கு கறவை மாடுகளை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள பல கிராமத்து மாணவர்களை எங்கள் கல்லூரியில் காணலாம்.

ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் எடுக்கப்படும் கால்நடைக் கணக்கெடுப்பில் சிலவற்றைக் காணலாம். இந்திய அளவில்  1951 ல் முதல் கணக்கெடுப்பின் போது பசு மற்றும் எருமைகளின் எண்ணிக்கை முறையே  155.30 & 43.400 (In millions). இவை படிப்படியாக அதிகரித்தாலும் (1982 – 192.45 & 69.78; 1992 – 204.58 & 84.21) 1997 லிருந்து பசுக்களின் எண்ணிக்கை இறங்குமுகமாகவே உள்ளது ( 1997 – 198.88& 89.92; 2003 – 185.18 & 97.92; 2007 – 199.08 & 105.34; 2012 – 190.90& 108.70).

தமிழகத்தைப் பொறுத்தவரை பசு மற்றும் எருமை இரண்டுமே 1982 வரை எண்ணிக்கையில் அதிகரித்தாலும் அதன்பின் இறங்குமுகமாகவே உள்ளது (1951 – 10.22 & 2.30; 1982 – 10.37 & 3.21; 1992 – 9.10 & 2.93; 2012 – 8.81 & 0.78). இடையில் 2007 ல் பசுக்களின் எண்ணிக்கை (11.19)  மட்டும் அதிகரித்துள்ளது.

எண்ணிக்கையில் வேறுபாடுகள் இருந்தாலும் கலப்பின உயர்தர அதிக உற்பத்தித்திறன் கொண்டக் கறவை மாடுகளின் எண்ணிக்கை உயர்ந்து, குறைவான உற்பத்தித்திறன் கொண்ட நாட்டு மாடுகள் குறைந்தது. இதன் பயனாக பால்உற்பத்தியின் அளவு தொடர்ந்து ஏறுமுகமாவே உள்ளது (in million tonnes, 2000 – 78.3 & 4.57 – முறையே இந்தியா & தமிழ்நாடு. 2003 – 88.10 & 4.75; 2012 – 132.4 & 7.0; 2015 – 146.3 & 7.13).

இரண்டாவதாக தாங்கள் கூறியது

“இன்று நகரங்களில் நாம் அருந்தும் பாலின் பெரும்பகுதி மாவு யூரியா மற்றும் ரசாயன பொருட்களைக்கொண்டு செயற்கையாக தயாரிக்கப்படுவது”

எங்கள் கிராமத்தில் பால்மாடுகள் வைத்துள்ள அனைவரையும் நான் அறிவேன். கூடவே கொள்முதல் நிறுவனங்களையும்  (ஆவின்,  ஹட்சன்). முற்காலங்களில்பால்மாணியில் அளவைக்கொண்டு மட்டுமே பாலின் தரமும் விலையும் நிர்ணயிக்கப்பட்டது. அப்போது சிலர் சர்க்கரை சேர்ப்பதுண்டு. ஆனால் அதன்பிறகான கொழுப்பு மற்றும் கொழுப்பல்லாத திடப்பொருட்களைக் கொண்டு மட்டுமே பாலின் விலை நிர்ணயிக்க ஆரம்பித்த பிறகு, சர்க்கரை சேர்ப்பதும் நின்று விட்டது. இன்று குக்கிராமங்களில் கூட அந்த சிறிய இயந்திரம் Computerised இருப்பதைக் காணலாம்.

அரசு மற்றும் தனியார் பால் நிறுவனங்களில் (ஹெரிட்டேஜ், கெவின் கேர், ஹட்சன், திருமலா, நந்தினி, ஏபிடி) பால் உற்பத்தியாளர்களுடன் நேரடித் தொடர்பிலுள்ள எனது கால்நடை மருத்துவ நண்பர்களின் கூற்றுப்படியும் (அதில் ஒரு நண்பர் சொன்னார் “ கிராமங்களில் இன்றும் பாலை ஒரு divine product ஆக பார்ப்பதாக),  நான் திருவண்ணாமலையில் பணிபுரிந்த போது,  கிட்டத்தட்ட எழுபது கிராமங்களுக்கு மேல் விவசாயிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்த முறையிலும், காஞ்சிபுரம் மற்றும் சேலம் ஹட்சன் பால் நிறுவனத்தில் ஒரு ஆய்வின் போது ஏற்பட்ட அனுபவத்திலும் என்னால் உறுதியாகக் கூற இயலும்.  யூரியா கலந்து பால் தயாரிப்பதில்லை என. Whitener எனப்படுபவை பொதுப்புரிதலின் படியான டிட்டர்ஜென்ட் அல்ல. அவைபால்பவுடரோடு சேர்க்கப்படும் கேசின் எனும் புரதம். மேலும் அவற்றை சேர்த்தால் பால்எளிதில் கெட்டுப்போகும். நுகர்வோரை அடையும் பால் கெடாமல் இருப்பதற்காக குளிரூட்டுதல், பதப்படுத்துதல் (Pasteurisation & homogenisation) தவிர வேறு எந்த செயற்கையான Preservatives ம் நாம் உபயோகிக்கும் பாக்கெட் பாலில்சேர்க்கப்படுவதில்லை அதற்கு அனுமதியும் இல்லை.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாலுக்கான தரக்கட்டுப்பாடுகள் அதிகம். சந்தையில் நிலைத்திருக்க பால் நிறுவனங்கள் அதைக் கடைபிடித்தே ஆகவேண்டும், அரசு நிறுவனம் உட்பட.

ஆனாலும் இவற்றையெல்லாம் தாண்டி, எளிய மக்கள் அதே அளவு கரவும் கொண்டவர்கள் என்பதை நிரூபிப்பதாக,  அங்கொன்றும் இங்கொன்றுமாக கொஞ்சம் சர்க்கரையும், உப்பும், யூரியாவும், சோடியம் பைகார்பனேட்டும் கலக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை நிச்சயமாக அரசு நிறுவனத்திலோ நன்கு வளர்ந்த தனியார் நிறுவனங்களிலோ இருக்க வாய்ப்பில்லை.

அன்புடன்

தங்கபாண்டியன்

செங்கல்பட்டு

அன்பின் ஜெ..

பால் விவாதங்கள் செல்லும் திசை மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது.

நமக்கு ஏன் ராஜேந்திர பாலாஜி போன்ற பால்வளத்துறை அமைச்சர் வந்து வாய்த்தார் என்று புரிகிறது. மக்களாட்சியில், மக்கள் எவ்வழி, மன்னன் அவ்வழி!

எனக்குத் தெரிந்த அளவில் என் தரப்பைச் சொல்ல முயல்கிறேன்.

குளிர்க்காலங்களில் உங்கள் வீட்டுக்கு வரும் ஆவின் பால், பதப்படுத்தப் பட்ட பால். வெயில் காலங்களில், பால் பௌடரில் இருந்து மீண்டும் உருவாக்கப்பட்டிருக்கும் reconstituted milk.  ஆனால், 100% பால்.

நாகர்கோவில் போன்ற சிறுநகரங்களில், உங்களுக்கு, அருகில் உள்ள பால்காரார் தினமும் ஃப்ரெஷ்ஷாக பாலைக் கொண்டுதரும் சாத்தியங்கள் மிக அதிகம்.

மாட்டின் மடியில் இருந்து வரும் பாலுக்கும், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு வரும் பாலுக்கும், வாசனை, ருசி பேதங்கள் இருக்கும். ஏன் எனில்,

  1. உங்களுக்கு உள்ளூர் பால்காரர் கொண்டு தரும் பால், ஒரு மாட்டுப் பாலாக அல்லது ஒரு கட்டுத்தரை பாலாக இருக்கும் – அதன் வாசனையும், சுவையும் உங்களுக்கு பழகியிருக்கும். மாட்டிலிருந்து எருமைப் பாலோ அல்லது இன்னொரு கட்டுத்தரையில் இருந்து வரும் பாலோ மாறியிருந்தால் கூட, வாசனையும் சுவையும் மாறிவிடும் வாய்ப்புகள் உண்டு. செவ்வியல் காப்பிக் குடியர்கள் எளிதில் கண்டுபிடித்துவிடுவர்.
  1. பாக்கெட்டில் வரும் பால், பல்லாயிரக்கணக்கான மாடுகள்/எருமைகளில் இருந்து, கிராம கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெறப்பட்டு, அவை, உள்ளூர்க் குளிர் நிலையம் முதலில் கொண்டு செல்லப் படுகின்றன. முதலில், அவை குளிரூட்டப்ப்படுகின்றன. குளிரூட்டம், நுண்ணுயிர்ப் பெருக்கத்தை நிறுத்துகிறது.  அதன் பின், அந்தப் பால், பதப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, பாஸ்ட்யுரைஷேசன் என்னும், திடீர்ச் சூடுபடுத்தும் முறைக்கு (71 டிகிரி, 15 செகண்ட்) உட்படுத்தப்படுகிறது. இதனால், பாலில் உள்ள நுண்கிருமிகள்  அழிக்கப்படுகின்றன.
  1. பின்னர், அந்தப் பாலில் உள்ள கொழுப்பு சதவீதம் சோதிக்கப்பட்டு, அதிகமாக இருக்கும் கொழுப்பு நீக்கப்படுகிறது. பின்னர் அவை உடனே பாக்கெட்டில் அடைக்கப்பட்டு, விநியாகத்துக்கு கிளம்பி விடும். இவை 2-3 நாட்கள் வரை, ஃப்ரிஜ்ஜில் வைத்திருந்தால் தாங்கும்.
  1. இந்தப்பதப்படுத்தும் முறையில், பாலின் சுவையும், வாசனையும், இடத்துக்கு இடம் மாறுபடும்.  இந்த விதி எல்லா உணவுப் பொருட்களுக்கும் பொருந்தும்.
  1. இன்னொருமுறை பதப்படுத்தும் முறை உண்டு – ultra heat treatment  இதில் பாஸ்ட்ரைசிங் முறைய விட அதிக சூட்டில், குறைந்த நேரத்தில் (135 டிகிரி, 1- 2 செகண்ட் நேரம்).  இந்த முறையில் நுண்ணுயிர் நீக்கப்பட்ட பால், டெட்ரா பேக் போன்ற தடிமனான பேக்கிங்குகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன.  இவை தற்போது உலகில் நடைமுறையில் இருக்கும் அதி உன்னதத் தொழில்நுட்பமாகும். இவற்றில் உள்ள பால், 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். ஃப்ரிஜ்ஜில் வைக்கத் தேவையில்லை.
  1. இப்போதைய சட்டங்களின் படி, 3 தரங்கள் பாலில் உள்ளன என நினைக்கிறேன் – light, standardized and full cream – இது கொழுப்பு அளவின் படி வரையறுக்கப்படுகிறது. இதைத் தவிர வேறு பொருட்களை அதில் கலக்க முடியாது. சட்டப்படி குற்றம்.  பாலை, பாலாகவும், தயிரைத் தயிராகவும் விற்க மட்டுமே நாட்டில் அனுமதி உள்ளது.
  1. தயிர்: உங்கள் வீட்டில் உறை குத்த உபயோகிக்கப் படும் தயிரில் உள்ள பாக்டீரியா, பாலைத் தயிராக்குகிறது. அது மூடப்படாமல் இருப்பதால், பாக்டீரியாவின் எண்ணிக்கை அதிகமாகி, இரண்டு மூன்று நாட்களில் புளிக்கத் துவங்குகிறது.

ஆனால், வணிகத்தில், தயிர் புளிக்கத் துவங்கினால், அது பிரச்சினையில் முடியும் – தயிரின் சுவை சீராக இருக்க வேண்டும் என்பது நுகர்வோர் எதிர்பார்ப்பு. எனவே, முதலில், அங்கே உறை குத்த, சுத்தமான பாக்டீரியல் கல்ச்சர் (இது உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியா) பாலில் கலக்கப்பட்டு, தயிராக்கப்படுகிறது. 8-10 மணி நேரங்களில் தயிரானவுடன், அவை கடுங்குளிர் அறைக்கு மாற்றப்படுகின்றன. இதனால், தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் அழிகின்றன. எனவே வணிகத் தயிர்கள் ஃப்ரிஜ்ஜில் வைத்திருக்கும் வரை புளிப்பதில்லை. இவை குறைந்த கால ஷெல்ஃப் லைஃப் உடையவை.  இந்தத் தயிரில் இருந்து உறை குத்தினால், பால் தயிராகாது – ஏனெனில், இதில் பாலைத் தயிராக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதில்லை.

  1. இவை தவிர, யோகர்ட், மில்க் ஷேக் போன்றவை, பாலில் தயாரிக்கப்படும் பொருட்கள். அவை தயிரோ, பாலோ அல்ல. அந்தப் பாக்கெட்டுகளின் பின்னால், அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன என்பதை எல்லா ப்ராண்டுகளும் தெரிவித்தாக வேண்டும். அதில் ப்ரிண்ட் செய்யப்படும் எழுத்துக்களின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பது வரை சட்டம் துல்லியமாக வரையறை செய்கிறது.
  1. டெய்ரி வைட்னர் (Dairy whitener) எனப்படுவது, பாலில் இருந்து தயாரிக்கப்பட்டு, காஃபி போன்ற பானங்களில் கலப்பதற்காக,  உருவாக்கப்படுவது. அதின் பின்புறத்தில் அதில் இருக்கும் பொருட்களின் அளவு குறிப்பிடப்படும். பால் பௌடர் என்பது, பாலைச் சூடாக்கி, பௌடராக மாற்றுவது. அதில் வேறும் பொருட்கள் கலப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.  மலிவான பால் பௌடர்கள் – கிலோ 60 ரூபாய்க்கா? கொஞ்சம் தரவுகளுடன் இதை எழுதினால், சரி பார்க்க இயலும் – இவை போலியாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஆவின் மற்றும் இதர ப்ராண்டுகளின் விலை மலிவாக இருக்காது. லேபிள் இல்லாமல் விற்கப்படும் பொருட்களை விலக்குதல் நல்லது. டீக்கடைக்காரர் அது போன்ற ஒன்றைக் கலந்தால், அருகில் உள்ள சுகாதாரத் துறை அலுவலரிடம் புகார் செய்யவும். இது போன்ற தனிநபர் செய்யும் அநியாயங்களுக்கு நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டுமா? ஸ்கார்ப்பியோக் காரில் தீவிரவாதி குண்டு வைத்தால், ஸ்கார்ப்பியோ நிறுவனத்தலைவரைக் கைது செய்வீர்களா என்ன?
  1. ”இந்த தொழில் ‘சட்டபூர்வமான ஆவணங்களுடன்’ எல்லா அரசு அமைப்புகளுக்கும் தெரிந்து நடக்கிறது. கொள்ளைலாபம் அளிக்கும் தொழில். ஆகவே பங்கில்லாதவர்கள் மிகக்குறைவு. ஆகவே எந்தவிதமான சட்டநடவடிக்கையும் சாத்தியம் அல்ல”இது 100% தவறான கருத்து. தனிநபர் கருத்து என்பதைத் தாண்டி இதற்கு ஒரு மதிப்பும் இல்லை.

அன்புடன்

பாலா

முந்தைய கட்டுரைடு லெட்டும் விமர்சகர்களும் – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைசமணத்தில் பெண்கள்