«

»


Print this Post

கடிதங்கள்


4854

வணக்கம் ஐயா

இது ஏன் முதல் தமிழ் கடிதம்

உங்களிடம் இரண்டு விஷயம் கேட்டகவேண்டும்

  1. உங்கள் இந்திய பயணம் புத்தகம் வாசித்தேன் , தென் இந்திய வரலாற்றை அறிய வேண்டும் என்ற எண்ணம் தொற்றிக்கொண்டது , ஒரு நல்ல புத்தகம் சொல்லுங்களேன்
  1. நான் ஒரு பாமர வாசகன் , நல்ல தமிழ் புத்தகங்கள் பற்றி பேச , விவாதிக்க , தெரிந்து கொள்ள ஏதாவது வழி உள்ளதா ?

பாலாஜி ராஜகோபாலன்

அன்புள்ள பாலாஜி,

தென்னக வரலாற்றை அறிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் கே.கே.பிள்ளை எழுதிய தென்னிந்திய வரலாறு என்னும் நூல். பழனியப்பா பிரதர்ஸ் நிறுவன வெளியீடு. கே.கே.பிள்ளை குமரிமாவட்டத்தை சேர்ந்தவர். முன்னோடியான வரலாற்றாய்வாளர். அவருடைய சுசீந்திரம் ஆலயம் ஒரு முதன்மையான வரலாற்று நூல்.

தமிழ் இலக்கியம் பற்றி பேச விவாதிக்க பல தளங்கள் உள்ளன. அதிலொன்றுதான் என்னுடைய தளம். அதைப்போல பல உள்ளன. உங்களுக்கு உகந்ததை நீங்கள் கண்டடையலாம். விவாதம் எப்போது அரட்டை ஆகிறதோ அப்போது விலகிக்கொள்ளவும் தெரிந்திருக்கவேண்டும்.

வாசகரில் பாமரன் இல்லை

ஜெ

அன்புள்ள  ஜெ

நான் மறுபடியும் உயர் போட்டித்தேர்வுகளுக்கு படிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஆச்சர்யம் என்னவென்றால் டிஎன்பிஎஸ்சியின் பாடத்திட்டஙகளில் பெரும்பகுதி உங்களது தளத்திலே இருக்கிறது. உங்களது அருகர்களின் பாதை, இந்திய பயணம், நூறு மலைகளின் நிலம் போன்ற உங்களது பயணக்கட்டுரைகளின் வழியே இந்தியாவை பூகோள ரீதியாகவும் அதனுடேயே அப்பகுதிகளின் வரலாற்றையும் அறிய இயலும். காந்தியை பற்றிய கட்டுரைகள் வழியே இந்திய விடுதலை போரட்டத்தின் அடுத்தடுத்த தளங்களை காண முடியும்.இந்திய குடிமைப்பணிகள் முதன்மை தேர்வுகளில் இந்திய பண்பாடு ,கலை, இலக்கியம்,ஆகிய விருப்ப பாடஙகளுக்கு உங்கள் தளம் பொக்கிஷம். போட்டித்தேர்வு மையஙகள் உங்கள் தள கட்டுரைகளை தங்களது சொந்த மெட்டிரியல்களாக மாற்றிக் கொள்ளவும் கூடும்.

காசி பெருமாள்

அன்புள்ள காசி

போட்டித்தேர்வுகள் எழுத சிறந்த வழி என்பது செய்திகளை வெறும் தரவுகளாக நினைவு வைத்திருக்காமல் ஒரு வரலாற்றுக்கதையாக, ஒரு விவாதமாக புரிந்து நினைவில் வைத்திருப்பது. இந்தத் தளம் அதற்குத்தான் உதவுகிறது.

ஜெ

அன்புள்ள திரு ஜெ

வணக்கம்

புத்தக விழாவில், தங்களையும், திரு நாஞ்சில் நாடன் அவர்களையும் நேரில் கண்டு , புத்தகங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டது மனதிற்கு மிக அணுக்கமான தருணம். உரையின் போதும், மனம், எப்படி கிட்ட போயி ஒரு வணக்கமாவது சொல்வது என்று தான் ஓடி கொண்டிருந்து. உடன் என் மனைவியும் , மகனையும் அழைத்துவந்திருந்தேன் , என் மனைவி அங்கே இல்லையென்றால்   ,  உரை முடிந்ததும் கிளப்பியிருப்பேன் , பல தயக்கம். உங்கள் இருவரின் உரை முடிந்ததும், அவசரமாக சென்று “சுந்தர ராமசாமி நினைவின் நதியில்” வாங்கினேன் , நாஞ்சில் அவர்களின் புத்தகம் தேடிக்கொண்டிருக்கும் பொது , மனைவி தொலைபேசியில் அழைத்து நீங்கள் கிளம்புவதை சொன்னாள். அதற்குள் திருமதி அருண்மொழி அவர்களிடம் நான் வர தாமதமாவதால் ,  கையெழுத்து வாங்க ஒரு பேப்பர் கேட்டு , பின் அவர்கள் தான் தங்கள் துணைவி என்று அறிந்து sorry கேட்டு , காத்துக்கொண்டிருந்தாள்.

இருவரும் வாசகர்களுடன் உரையாடி கொண்டிருந்திர்கள், புத்தகத்தில் கையெழுத்திட்டு , சுந்தர  ராமசாமியை தெரியுமா என்று கேட்டிர்கள். உங்களுடனும், பின் நாஞ்சில் அவர்களுடனும் புகைப்படம் எடுத்து கொண்டேன்,  அவரது கையெழுத்து பெற இயலாத வருத்தம் இருந்தது, ஆனால், அவர் செல்வதுக்கு முன்னால் , ஸ்டாலுக்குள் சென்றதால் , அவருடைய “கான் சாஹிப் , நாஞ்சில் நாடன் சமீபத்திய சிறுகதைகள்” ல்  கையெழுத்து பெற்றுக்கொண்டேன்.

இன்று மிக நிறைவான நாள்!

சுந்தர்

அன்புள்ள சுந்தர்,

நினைவிருக்கிறது. புத்தகத்தில்தான் கையெழுத்திடுவார் என சொன்னதை அருண்மொழியும் சொன்னாள். நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? அவ்வப்போது இப்படிச் சந்தித்துக்கொள்ளும் வாசகநண்பர்களிடம் எதுவும் பெரிதாக பேசவில்லை என்றாலும் ஒரு நிறைவை நானும் அடைகிறேன்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/118701