டு லெட்டும் விமர்சகர்களும் – கடலூர் சீனு

to-let-tamil-movie

இனிய ஜெயம்,

பொதுவாக பிரமாதமாக டெம்ப்ட் கொடுக்கப்பட்டு, வெளியாகி அதை விட பிரமாதமாக அப்படம் தோல்வி கண்ட பிறகு, படப்பிடிப்பு துவங்கும் முன் டெம்ப்ட் கொடுப்பதற்காக, வெகுஜனப் பத்திரிகைகளுக்கு அளிக்கப்படும் பேட்டிகளை, பின்னால் தேடி சென்று வாசிப்பது எனது பொழுது போக்குகளில் ஒன்று .

உதாரணமாக, சுறா எனத் திமிறத் தயாராகி விட்டார் விஜய். சுறா சொல்லிப் பாருங்களேன். வேகம், மூர்க்கம், ஓய்வே அற்ற சுறுசுறுப்பு, தான் இருக்கும் கடலை ஆளும் ராஜா இன்னும் என்னென்னவோ மனசுல தோனுதுல்ல, அதுக்கு ஒரு உருவம் குடுத்துப் பாருங்க …அதுதான் படத்துல விஜய். இப்படி ஆரம்பிக்கும் அது. படம் தரை தட்டியவுடன், உருவாகும் அடுத்த படத்துக்கு இப்படித் துவங்கும், வில்லு …சொல்லும்போதே ஒரு பவர் வருது இல்லையா… இத்தகு தமாஷ்களை பின்னால் சென்று படித்துப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
அதைப் போல அன்றி, வணிகக் காட்சியாக டு லெட் வெளியான பிறகு உலக சினிமா ரசனை அரசர்கள் இவை குறித்து என்ன சொல்லி இருக்கிறார்கள் என பார்ப்போமே என்று, நண்பர்களை சில சுட்டிகளை அனுப்பச் சொல்லி நோட்டம் விட்டேன். பொதுவாக கடந்த பத்து பதினைந்து வருடமாக, சினிமா ரசனை மரபில் கோலோச்சிக் கொண்டிருக்கும் இந்த இளம் ரத்தங்கள், அடிப்படையில் நல்ல படிப்பாளிகள், சினிமா குறித்து என்னைப்போலவே அவர்களுக்கும் ஒன்றும் தெரியாது என நான் அறியவருவதர்க்குள், அவர்களின் உலக ஜினிமா கட்டுரைகள் ஒருநூறால் அடி பட நேர்ந்தது எனது தீயூழ்தானேயன்றி அவர்களின் பிழையன்று அது.

தேடி வாசித்தவரையில் ஒருவர் இந்தா ஒண்ணுக்கு இருத்துட்டு வந்துடுறேன் என்றவர் ஒண்ணுக்கோடு போய்விட்டார். இன்னொருவர் அவசரமாக அவரை ஆப்ரிக்கா அழைப்பதால் ஆங்காங்கே இருக்கும் அவரது அன்பர்கள் பொருத்துக்கொள்ளுமாறு விண்ணப்பித்திருக்கிறார். வேறொருவர் ரோமா படம் ஆஸ்கர் வென்றமைக்கான ரோமாஞ்சனத்தில் கிடக்கிறார். இதற்க்கு வெளியே ஒரு ஐம்பது வருஷத்துக்கு முந்தி வந்த உலக சினிமா மாதிரி இருக்கு என்பது போன்ற ‘மேலான’ பலபத்து அபிப்பிராயங்கள். அதற்க்கு மேல் மௌனம். மௌனம் மட்டுமே.

இந்த உலக ஜினிமா ரசிகர்கள் கம் தமிழ் சினிமா விமர்சகர்கள் நிற்கும் எல்லை எப்போதும் அதே இடம்தான். உலக ஜினிமா குறித்து உருகுவார்கள். உள்ளூர் சினிமா எனில் அபிப்ராயங்களி உதிர்த்து விட்டு அமைந்து விடுவார்கள் .[பின்ன நியாம்மாறு ஒரு விஷயத்த சொல்ல அந்த விஷயத்துக்கு ஒர்த் வேணாமா] உதாரணத்துக்கு செழியன் பாலுமகேந்திரா இயக்கிய வீடு குறித்து முக்கியமான கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறார். இந்த உலக ஜினிமா ரசிகர்களுக்கு பாலு மகேந்திரா ஓவர் ரேட்டட் என்று மட்டுமே அபிப்ராயத்தை உதிர்ப்பார்கள். இந்த கட்டுரைக்கு மாற்றான ஒரு வலிமையான கட்டுரை ஒன்றை எழுதச் சொல்லிப் பாருங்கள், ராஜ கம்பீரமாக ஒரு புன்னகையுடன் அதை கடந்து போவார்கள்.

அந்த குட் பாட் அக்ளில, ஈஸ்ட்வுட் ரெண்டு காலுக்கு இடைல உட்டு,காமிராவ தூக்குவாம்பாறு, அப்போ எனியோ மோரிக்கொன் ஒரு நோட் போட்ருப்பார் பாருங்க,இட்ஸ் எ ப்ளிஸ் ப்ரம் ஹெவன் என்று புழிந்து ஊற்றி இருப்பார். ஐய்யா இந்த இளையராஜாவின் திருவாசகம் பத்தி எதுனா சொல்லுங்களேன் என கேட்டுப் பாருங்கள் , பாவம் மேலுமோர் அற்ப மானிடன் எனும் பரிதாப பார்வையை பதிலுக்கு அளிப்பார்கள்.

இந்த டு லெட் திரைப்படம் தமிழில் இன்றைய சூழலில், ஒரு முக்கியமான தொடக்கம். செழியன் எதை தொடர்ந்து அறிமுகம் செய்தாரோ, அதை பேசினாரோ,அதை அடிப்படையாகக் கொண்டு, தனது கைப்பொருள் கொண்டு, ஒரு சினிமா செய்திருக்கிறார். தேசிய அளவிலும்,உலக அளவிலும்,பல விருதுகளை வென்ற இது, சரியான படமா அல்லது பிழையான படமா எனும் விவாதத்தின் கீழ் இவர்கள் ஒரு பத்து காத்திரமான கட்டுரையை இந்நேரம் எழுதி இருந்தால், இவர்களை இன்றேனும் பொருட்படுத்தத் தகுந்த நபர்கள்தான் என முடிவு செய்திருப்பேன். ஆண்டிகள் கூடி மடம் கட்டும் கனவை கண்டது போல, இவர்கள்தான் மாற்று ஜினிமா குறித்து ஓயாமல் கருத்து முத்துக்களை உதிர்த்துக் கொண்டிருந்தவர்கள். ஐய்யா நியாயம்மாறே அர்ஜன்டைனா தேசத்திலிருந்து வரும் அந்துபோச்சாம் போன்ற படங்கள் என்னவும் ஆகட்டும்,கொஞ்சம் தமிழ் நாட்டையும் கவனிக்கப்பா என்று கூவத்தான் தோன்றுகிறது

கடலூர் சீனு

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-72
அடுத்த கட்டுரைபால் – இறுதியாக…