கடந்த வருடம் புதுச்சேரி திரைப்பட விழாவை துவக்கி வைத்து பேசியவர் செழியன். அந்த விழாவில் டு லெட் முதல் திரைப்படமாக திரையிடப்பட்டது. அதில் அந்தப் படம் திரை விழாக்களை நோக்கி எடுக்கப்பட்டது என்றும், கேளிக்கை சினிமா அம்சங்கள் இதில் கிடையாது ஆகவே, பொது திரையரங்கம் நோக்கி இது எடுக்கப்பட வில்லை,இருப்பினும் இதில் உள்ள வாழ்கையை அனைவரும் ரசிக்கும் வண்ணம், டிசம்பர் இறுதிக்குள், மக்கள் பார்வைக்கான திரை அரங்குகளில் பார்க்கக் கிடைக்கும் என கூறி இருந்தார். இந்த பெப்ரவரி 21 படம் வெளியானது. அதிசயத்திலும் அதிசயமாக, அஜித் விஜய் வெறிகள் கரைபுரண்டோடும் கடலூரிலும் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
வீட்டு முதலாளியம்மா வீட்டை காலி செய்ய சொல்லி விட, குறிப்பிட்ட தேதிக்குள், பட்ஜெட் வாழ்க்கை வாழும், துணை இயக்குனர் நிலையில் இருக்கும் நாயகன், அந்த ஏரியாவுக்கு உள்ளேயே வேறு வாடகை வீடு மாற முயன்று அதில் தோற்கும் கதை. உணர்வுகளை கட்டி வைக்க ஒரு சட்டகமாக மட்டுமே கதை. இந்தக் கதையை கேமரா வைக் கொண்டு, அதன் கோணங்கள் அமையும் விதம் வழியே, அந்த கதைக்கான உணர்வு நிலையை கட்டமைக்கிறார் செழியன்.
துவக்கக் காட்சியாக அந்த வீட்டின் கதவு திறக்கப்டும் போதே, கேமரா கோணம் வழியே சொல்லி விடுகிறார் செழியன், பார்வையாளர்களான நாம்தான் அந்த வீடு. அங்கே துவங்கும் இந்த மாயம், அந்தக் குடும்பம் ஒவ்வொரு முறையும் அந்த வீட்டை விட்டு,வேறு வீடு தேட வெளியேறும் போது, அந்த வீடாக நாமிருந்து வேண்டாம் வேண்டாம் என மனதுக்குள் சினுங்குகிறோம். வீடு காலி செய்யப்படும் இறுதிக் காட்சி அந்த உணர்வு நிலையின் தவிப்பின் உச்சம். மின்விசிறி. திரைச்சீலை, பல்புகள், புகைப்படங்கள், அலமாரி கொண்ட பொருட்கள், மளிகை போத்தல்கள் , ஜன்னலோர குட்டிச் செடி. ஒவ்வொன்றாக பறிகொடுக்கிறது இல்லம்.
கிளம்பும் முன்பாக அந்த சிறுவன் அப்பாவை அழைத்துக் காட்டுகிறான், ஜன்னல் இழந்திருந்தத பூந்தொட்டிக்குப் பதிலாக சிறுவன் ஒரு பூச் செடியை அங்கே வரைந்து வைத்திருக்கிறான். இறுதியாக அந்த வீடு பூட்டப் படுவதற்கு முன், அந்த சிறுவன் அந்த வீட்டை அனாதையாக விட்டு விடாமல், அதற்குள்ளே தனது நான்கு பொம்மைகளை தங்கள் குடும்பமாக அங்கே விட்டு விட்டே செல்கிறான். குடும்பம் வெளியேற, நமது உணர்வுகளை வீட்டுக்குளே வைத்து கதவடைப்பது வழியே நிறைவடைகிறது திரைப்படம்.
வீட்டு எஜமானியம்மாவுக்கு எப்போதெல்லாம் நாயகி வேலைக்காரியாக இருக்க மறுக்கிறாளோ அப்போதெல்லாம்,வாடகை உயர்கிறது. இறுதி மறுப்பின்போது [அது கூட கடற்கரையில் இருந்ததால் அந்த சத்தத்தில் அலைபேசியை எடுக்க முடியாமல் போனதால் நிகழ்கிறது] வீட்டை காலி செய்ய வேண்டிய சூழல். அப்போ பையன் படிப்பு …என தொக்கி நிற்கும் நாயகியின் கேள்விக்கு பின்புலத்தை எது எனக் காட்டுவதே கதைக் களம்.
அந்த ஏரியாவில் அந்த வீட்டை, வாடகை வீடாக தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் வீட்டு எஜமானியம்மாவுக்கு வேலைகள் செய்துதான் ஆக வேண்டுமா? அவளுக்கு நிகழும்,[அவளுக்கு சம்பந்தமே இல்லாமல் வருவித்துக் கொண்ட] சிறு கௌரவக் குறைச்சல் முதல், எஜமான்கள் கேட்ட வாடகைத் தொகையை தயங்காமல் அள்ளி வீசும் ஐடி துறை புதிய ஊழியர்களின் பொருளாதார நிலை வரை பல்வேறு காரணங்கள் கூடி,அந்த சிறுவனின் எதிர்காலத்துக்கான நல்ல பள்ளிக்கூடத்தில் நல்ல கல்வி எனும் கனவு பறிபோவதை, துருத்தி நிற்கும் வசனங்களோ, வலிந்து உருவாக்கிய காட்சிகளாலோ அன்றி, ஒரு வாழ்வை அருகிருந்து பார்க்கிறோம் எனும் வகையில் காட்சிகளாக்கித் தருகிறது திரைப்படம்.
மிக மெல்லிய அவமானங்களை, கொஞ்சமும் மிகை இன்றி அந்த மெல்லிய தடத்தின் மேலேயே நிகழ்த்திக் காட்டுகிறது பல காட்சிகள். உதாரணமாக எஜமானியம்மா நாயகியை ஒரு நாயைப் போல வெளியே போ என நாயைச் சொல்வத்தைப் போல சொல்லிக் காட்டும் காட்சியை சொல்லலாம். மிகச் சில பலவீனமான ஷாட் களும் உண்டு. உதாரணமாக நாயகி தனது நகையை கழற்றித் தரும் ஷாட். மொத்த திரைப்படத்தின் மொத்த காட்சி ஓட்டத்தின் ஒருமை, ஒரு தைல தாரை போல இருக்க,இந்த ஒரு ஷாட் எடுக்கப்பட்ட விதம் , சற்றே உறுத்துகிறது.
கலைப்படம் காட்டுகிறேன் பேர்வழி என்று பார்ப்பவர் கழுத்தை அறுத்து அனுப்பும் ஆசாமிகள் அநேகம் பேர். எது வெகுஜன கேளிக்கை சினிமாவோ அதற்கு நேரெதிராக எடுத்தால் அது கலைப்படம் என நம்பும் அப்பாவி இயக்குனர்களால் அவ்வகைப் படங்கள் எடுக்கப்பட்டிருக்கும். மேக்கப் இல்லாமல் கோரமான நாயக நாயகியர், கேணத்தனமான காட்சி அமைப்புகள், வலிந்து ”நீக்கப்பட்ட” பின்னணி இசைக் கோர்வை …பட்டியல் நீளும்.
இந்த டூ லெட் படத்திலும் பின்னணி இசை கிடையாது. ஆனால் அந்த இசை கொண்டு ஒரு படத்துக்குள் எது ”மேலதிகமாக” கோடிட்டு காட்டப் படுகிறதோ, அது இப்படத்தில் காட்சி ஓட்டங்களில்,ஷாட் களுக்கு இடையே ஆன இசைவு வழியே, மௌனம் அளிக்கும் பல்வேறு அர்த்தங்கள் வழியே, துருத்தல் இன்றி இயல்பாக கோடிட்டுக் காட்டப்படுகிறது.
பெரும்பாலும் கேமெரா அசையாமல் நிலைத்து நின்றிருந்தாலும் பிரமாதமான ஷாட்கள் வழியே, வித விதமான இயக்கங்கள் திரைப்பட சட்டகத்துக்குள் நிகழ்ந்துக்கொண்டே இருக்கிறது. கடலலை அங்கிருந்து இங்கே வருகிறது. நாயகன் இங்கிருந்து அங்கே கதவைத் திறந்து கொண்டு போகிறார். உள்ளே இருந்து சிறுவனும் அப்பாவும் வெளியே வேடிக்கை பார்க்கிறார்கள்.வீடு ஒன்றை வெளியே இருந்து உள்ளே வேடிக்கை பார்க்கிறார்கள், இடமிருந்து வலமாக கண் தெரியாதவர்கள் ஒருவரை ஒருவரை பற்றிக்கொண்டு செல்கிறார்கள், வலமிருந்து இடமாக தொடர்வண்டி விரைகிறது, கீழிருந்து மேலாக பலூன் அடக்கு மாடி குடிஇருப்பின் சிகரம் வரை செல்கிறது. இத்தகு அசைவுகள் வழியே படம் நெடுக ஒரு கார்னிவல் உணர்வை அளிக்கிறது காட்சிகள்.
சத்யஜித் ரே பை சைக்கிள் தீவ்ஸ் படத்தில் இருந்தே முளைத்து வந்தவர், செழியன் அவர்களும் அங்கிருந்தே துவங்கியவர். பாலு மகேந்திரா இயக்கிய வீடு இன்று வரை கொண்டப்படும் திரைப்படம். செழியன் அவர்களுக்கும் மிகப் பிடித்த திரைப்படம். என் நோக்கில் வீடு திரைப்படத்தின்,தொடர்ச்சியாக நின்று, அதே சமயம் வீடு படத்தின் போதாமைகளை ”நீக்கி”, இது வாழ்க்கையேதான் என எந்த இடரும் இன்றி நம்பும் வண்ணம், கச்சிதமாக இலக்கை அடித்த படம் செழியனின் டூ லெட்.
இது. கடலூர் மொத்தமே பத்து பேர் மத்தியில் அமர்ந்தது படம் பார்த்தேன். மென் நீல நிழல் மூலை இருக்கையில் ஒருவர் தனது காரிகையின் வட்டங்களின் சுற்றளவை அதன் விட்டங்களின் குறுக்களவைக் கொண்டு,கணக்கிட முயன்றுகொண்டிருந்தார் . பிறர் திரைக்கு முன் வரிசையில் அமர்ந்தது உறங்கிக் கொண்டிருக்க, மௌனமான காட்சி ஒன்றினில் நுரையீரல் பஞ்சு போன்ற மென்மையானது என்றொரு கட்டைக்குரல் ஓலம் எழுந்தது.
வியாழன் வெள்ளி இரண்டே நாள். சனிக்கிழமை அஜித்தின் விசுவாசம் இரண்டாம் திரை இடல் அங்கே நிகழ்ந்திருந்தது. பேட்டை ரஜினிக்கு இணையாக செம அடி அடித்தார் என கேள்விப்பட்டேன். இவர்கள் மத்தியில்தான், தான் சொன்ன ஒன்றை, நம்பிய ஒன்றை கைப்பொருள் தந்து செய்து காட்டி இருக்கிறார் செழியன்.