பால் அரசியல்

download

பால் அரசியல் -நக்கீரன் வெளியீடு-  வாங்க

அன்புநிறை ஜெ,

தங்கள் தளத்தில் பால் தொடர்பாக நடைபெற்று வரும் தொடர் எதிர்வினைகளின் வரிசையில் என் கடிதமும் அமைகிறது. பால் தொடர்பாக  நக்கீரனின் பால் அரசியல் எனும் புத்தகத்தை மையமாக கொண்டு இக்கடிதம், பாலின் நிறம் வேண்டுமானால் வெண்மையாக இருக்கலாம் ஆனால் அதன் பின்னணி கறை படிந்தது என்பதை விளக்கும் முயற்சியே இந்நூல் என நூலின் பொருளை விளக்குகிறார் ஆசிரியர். இந்நூல் தாய்ப்பால், புட்டிப்பால் மற்றும் மாட்டுப்பால் என பிரிக்கப்பட்ட அதில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படையாக பேசுவதாக அமைக்கப்பட்டுள்ளது என்கிறார். தாய்ப்பாலில் இருந்து மாட்டுப்பால் வரை செய்யப்படும் கலப்பிடங்களை விரிவாக தெளிவுறுத்தியுள்ளார் என்றே நம்புகிறேன். சுமார் 70 பக்கங்களே கொண்ட இச்சிறிய நூல் ஒவ்வொரு பக்கமும் வாசிக்க வாசிக்க அதிர்ச்சியூட்டுகிறது.

பால் நுகர்வின் அவசியத்தை ஆசிரியர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்

“சுண்ணசத்து குறைந்தால் ஆஸ்டியோபெராசிஸ் எனும் எலும்பு அடர்த்திக் குறைவு நோய் ஏற்படும்.இப்பாதிப்பு உள்ளவர்களுக்கு வெகு விரைவில் எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே இதைத் தவிர்க்கச் சுண்ணச்சத்து தேவை. இச்சுண்ணசத்து பாலில் நிறைந்துள்ளதால் அன்றாட உணவில் பால் அவசியம் என்பதே பரவலான நம்பிக்கை. இதன்வழி மேற்குலகில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களிடத்தும் பால் நுகர்வு பெருகியது ஆனால் ஆஸ்டியோ பெராசிஸ்க்கு முதன்மைக் காரணம் சுண்ணச்சத்துக் குறைபாடல்ல, மிகையான புரத நுகர்வே என்பதைத்தான் மிகை புரத நுகர்வு என்பது எலும்பில் பெய்யும் அமில மழை இது எலும்பிலுள்ள கால்சியத்தைக் கரைத்துச் சிறுநீரில் கலக்கச் செய்துவிடும். மனிதருக்கு தேவைப்படுவதை விட அதிகமான புரதம் பாலில் பால் அதிகம் நுகரப்படாத ஆசிய நாடுகள் சிலவற்றில் ஆஸ்டியோபெராசிஸ் மிகக் குறைவு”

என்று தெரிவிக்கிறார்.

மேலும், தாய்ப்பாலை விட மாட்டுப்பாலில் குறைந்தளவே நிறைவுறா கொழுப்பு (polyunsaturated fat)  இருக்கிறது. இது குழந்தையில் மூளைவளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகும் ஆனால் இத்தகைய வளர்ச்சிக்கு உதவும் கொழுப்புப் பொருளான ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 பசும்பாலைவிடத் தாய்ப்பாலில் தான் அதிகமாக உள்ளது. கன்றுக்குட்டிக்கு மூளையைவிட உடல்தான் வளர்ச்சியடைய வேண்டும் இதனால்தான் பால் அருந்தும் கன்றுக்குட்டியில் உடல் மனிதக் குழந்தையில் உடலை விட மிக விரைவாக பெருத்து விடுகிறது. இத்தகைய குணம் நிறைந்த பாலைத்தான் நாம் நம் குழந்தைக்கு அருந்தத் தருகிறோம் என்று அதிர்ச்சித் தகவலையும் தருகிறார்.

இனி முக்கிய கட்டத்திற்கு வருவோம், இவ்வளவு பால் நுகர்விற்கு மாடுகள் எங்கிருக்கின்றன என்ற மையக் கேள்விக்கு ஆசிரியர் கீழ்க்கண்டவாறு மிக விரிவாக பதிலளிக்கிறார்.

1993ம் ஆண்டு நவம்பர் 5ந்தேதி, ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றில் உணவு மற்றும் மருந்துக் கழகம் உயிர்ப்பொருள் ஒன்றுக்கு வணிக ரீதியான அனுமதியை முதன்முதலில் வழங்கியது. அது rBGH (recombinant bovine growth hormone) அல்லது rBST (recombinant bovine somatotropin) என அழைக்கப்படும் செயற்கை ஹார்மோன் ஆகும். இது போசிலாக் என்ற பெயரில் விற்பனைக்கு வந்த 2000ம் ஆண்டுக்குள் கால்நடைத் தொழிலில் ஆகப்பெரும் விற்பனைப் பொருளாக மாறியது. இதன் முற்றுரிமையைக் கையில் வைத்திருந்த நிறுவனம் – மான்சான்டோ ஆகும்.

மாட்டின் உடலுக்குள் செலுத்தப்படும் இந்தச் செயற்கை ஹார்மோன் பால் சுரப்பை செயற்கையாகத் தூண்டி அதிகரிக்கச் செய்வதாகும். இச்செயல் வருமான நோக்கில் பயனுடையதாகத் தோன்றலாம். ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்பு கொடியதாகும்.  இந்த ஹார்மோன் அறிமுகமான 1993ல் அமெரிக்காவில் இருந்த பால் பண்ணைகளின் எண்ணிக்கை 1,57,000. சரியாக 13 ஆண்டுகள் கழித்து 2006ம் ஆண்டு அதன் எண்ணிக்கை 71,000 ஆக குறைந்தது. மாடுகளில் எண்ணிக்கை 95 லட்சத்திலிருந்து 91 லட்சமாக குறைந்தது. ஆனால் பாலின் உற்பத்தி மட்டும் 15 கோடி காலனிலிருந்து 17 கோடி காலனாக பெருகியிருந்தது இதற்கு காரணம் மாடுகளில் செலுத்தப்பட்ட இத்தகைய செயற்கை ஹார்மோன்களே…

இது செலுத்தப்பட்ட மாடுகளுக்கு பக்கவிளைவுகளாக குறைந்த பிறப்பு விகிதம், கன்றுக்குட்டியின் எடைக்குறைவு, பால் காம்பு அழற்சி, குளம்புகள், கால்களில் ஏற்படும் நோய் என மொத்தம் 16 பின்விளைவுகள் ஏற்படும் என்று அந்த மருந்தின் உட்புற அட்டையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். இது செலுததப்பட்ட மாடுகளின் பாலைக் குடிக்கும் மனிதர்களுக்கும் இதனால் பாதிப்படைகின்றனர்.

உலகெங்கும் 50 கோடி டன்னுக்கும் அதிகமாகப் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக 22.2 கோடி பசுக்கள் வளர்க்கப்படுவதாக உலகப் பண்ணை அறக்கட்டளை (World Farming Trust) தெரிவிக்கிறது. இம்மிகையான பால் உற்பத்திக்காக மாடுகள் நிறையக் கன்றுகளை ஈண வேண்டும். ஆனால் இயற்கையில் அது நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே கன்றுகுட்டிகளை ஈனும் செயல் செயற்கையானதாக மாற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பால் உற்பத்திக்காகவே செயற்கையாக அல்லது வலுக்கட்டாயமாகக் கன்றுகள் பிறக்க வைக்கப்படுகின்றன. இதற்கான வழிமுறைதான் செயற்கைக் கருவூட்டல்.

இம்முறையில் கன்று பிறந்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே மாடு சினையூட்டப்படுகிறது. பால் சுரப்பிற்காக செலுத்தப்படும் செயற்கை ஹார்மோன் ஊசியினால் பால் சுரப்பு மேலும் மூன்று அல்லது நான்கு மாதம் நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம் பால் கறப்பு ஆண்டுக்கு ஏழு மாதங்கள் வரை நிகழ்கின்றன. ஆனால் இயற்கையாக கருத்தரித்த ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்குள் பால் சுரப்பு நின்றுவிடுவது இயல்பு. இவ்வாறான செயற்கை முறை வழக்கமாக பத்து ஆண்டுகள் பால் கறக்கு வேண்டிய மாட்டை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பால் சுரப்பை வற்ற வைத்து விடுகிறது. இம்மாடுகள் சாலையில் கைவிடப்படுகின்றன அல்லது அடிமாட்டுக்கு அனுப்பப்படுகின்றன.

இனி பால்கலப்படம் பற்றி ஆசிரியர் கூறுவதைக் காண்போம்.

ஏறக்குறைய எல்லா வகைப் பால் பாக்கெட்களிலும் SMP (Skimmed Milk Powder) எனும் ஆடை நீக்கப்பட்ட பால்மாவு கலக்கப்படுகிறது. இது சட்டத்திற்கு உட்பட்டே செய்யப்படுகிறது. டெல்லியில் மட்டும் நாளொன்றிற்கு ஆறு லட்சம் லிட்டர் ஆடை நீக்கப்பட்ட பால் விற்பனையாவதாகக் கணக்கு. குளிர்காலத்தில் மீதமாகும் பாலைக்கொண்டு இவ்வகைப் பால்மாவு உற்பத்தி செய்யப்பட்டுக் கோடைகாலத்தில் பாலுக்கான தேவை அதிகரிக்கையில் இது சேர்க்கப்படுவதாகத் தெரிவிக்கிறார் டெல்லியின் உணவு பாதுகாப்பு ஆணையரான எஸ்.கே. சக்சேனா.

toned milk. double toned milk ஆகியவற்றில் கொழுப்பின் அளவைக் குறைக்கவும், ஈடுசெய்யவும் ஆடை நீக்கப்பட்ட பால் சேர்க்கப்படுகிறது. அதிகமாகத் தண்ணீர் சேர்க்கப்பட்ட பால் நீர்த்துவிடும். அதை ஈடுசெய்யவும் ஆடை நீக்கப்பட்ட பால்மாவு சேர்க்கப்படுகிறது. இவ்வாறு சேர்க்கப்படும்பொழுது பாலின் உறை மீது reconstituted எனக் குறிப்பிட வேண்டும் என்பது நெறிமுறை. ஆனால் இங்கு சுத்தமாக பால் என விற்கப்படும் பெரும்பாலான பால் வகைகள் reconstituted வகைப் பால்கள்தாம். இங்கு விதிமுறைகள் கடுமையாக நடைமுறையில் இல்லை என்பதால் அவ்வாறு குறிப்பிடப்படுவதில்லை.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை நிறுவனம் 2011ம் ஆண்டு பால மாநிலங்களில் நடத்திய தேசிய அளவிலான பால் கலப்பிட ஆய்வில் மொத்தம் எடுக்கப்பட்ட 1791 மாதிரிகளி்ல் 548 மாதிரிகளில் இந்த ஆடை நீக்கப்பட்ட பால்மாவு கலக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்த பின்னர் பால் உறைகளின் மீது reconstituted எனக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என உத்தரவிட்டது.  இவ்வாய்வு வெளிவந்த பிறகு குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் பயன்படுத்துகிற பாலில் எத்தனை கலப்படங்கள் நடைபெறுகின்றன என்கிற உண்மை நாடு முழுமையும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. இத்தனைக்கும் அந்த ஆய்வு முழுமையாகப் பொதுவெளிக்கு வைக்கப்படவில்லை.

பாலில் SNF (Solids-Not-Fat) அதிகமிருப்பின் அது தரம் மிகுந்த பாலால் கருதப்படும். விட்டமின்கள். தாதுக்கள். புரதம் உள்ளிட்டவை SNF ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரஉறுதி சட்டம் 2006ன் படி பாலில் இதன் அளவு குறைந்தபட்சம் 8.5 விழுக்காடு இருக்க வேண்டும். ஆனால 46 விழுக்காடு பால் மாதிரிகள் இந்த அளவுக்கும் கீழேயே இருந்தன. தண்ணீர் அதிகம் சேர்க்கப்பட்டு நீர்த்துப்போனதே இதற்கு முதன்மைக் காரணமாகும். SNF அளவை உறுதிச்செய்வது என்பது தயாரிப்பு செலவை அதிகரிப்பதால் பெரிய பெரிய பால்நிறுவனங்கள் முதற்கொண்டு இதைச் சமாளிக்க கலப்பிடங்களை உள்நுழைக்கின்றன.

பால் கலப்பிடப் பொருட்கள்

ஆடைநீக்கப்பட்ட பால் மாவு, யூரியா, ஸ்டார்ச், குளுக்கோஸ், உப்பு, டிட்டர்ஜன்ட், நியூட்ரலைசர்கள், பார்மலின் போன்றவைகள் கலக்கப்படுகின்றன. இவை FSSAI ஆய்வில் கண்டறியப்பட்ட தரவுகள் ஆகும். புரதச்சத்தைக் கூட்டிக்காட்ட யூரியா, பாலின் அடர்ததித் தன்மையைக் கூட்ட உருளைக்கிழங்கு, கோதுமைமாவிலிருந்து பெறப்பட்ட ஸ்டார்ச், உப்பு போன்றவைகள் பயன்படுத்தப்படுகின்றன.  ஆய்வில் எடுத்துக்கொண்ட பால் மாதிரிகளில் 14 விழுக்காடு டிடர்ஜன்ட் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. பாலின் அடர்த்தியையும், பிசுபிசுப்புத் தன்மையையும் அதிகரித்துக்காட்டவே இது சேர்க்கப்படுகிறது. கலப்படப் பாலில் காணப்பட்ட மற்றொரு வேதிப் பொருள் பிணங்களைப் பதப்படுதத உதவும் ஃபார்மலின் ஆகும். இது அனுமதிக்கப்பட்ட பொருள் தான் என்று FSSAI கூறினாலும், இது ஒரு புற்றுநோய் ஊக்கியாகும்.

இவை அனைத்தையும் விட மோசமான கலப்படம் பாலில் செயற்கைப் பால் கலந்திருந்ததே ஆகும். இச்செயற்கைப் பால் செய்யப் பயன்படும் பொருட்கள், வெள்ளை நிற வாட்டர் பெயிண்ட் அடிப்படை பொருள், இத்தோடு வனஸ்பதி அல்லது எண்ணெய், காரங்கள், யூரியா சேர்க்கப்பட்டு, அவரவர் பின்பற்றும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப செயற்கைப் பால் உருவாக்கப்படுகிறது. இச்செயற்கைப் பால் அசல் பாலோடு கலக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இவ்வாறு பல கலப்பிடப் பொருட்கள் பாலில் கலக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இதை நாமும் எவ்வித பயமுணர்ச்சியில்லாமல் பயன்படுத்துகிறோம். பாலில் கலப்படம் உள்ளது என்று தெரிய, பல தரவுகளின் வரிசை தேவையில்லை, அக்காலத்தில் மாட்டுத்தொழுவத்தில் நம் முன் கரந்துதரப்படும் பாலின் சுவையும், தற்பொழுது பால்பாக்கெட்டில் இருக்கும் பாலின் சுவையும் ஒப்பிட்டாலே போதுமானது. முன்பு அத்தகைய பாலில் வீட்டில் காபி குடித்திருந்த நான், இப்பொழுது அத்தகைய பால் கிடைக்காமல் நான் வீட்டில் காபி குடிப்பதையே நிறுத்திக்கொண்டேன்.

இத்தகைய பாக்கெட் பால் மட்டுமல்ல, தாய்ப்பாலில் கூட எவ்வாறெல்லாம் உலகம் முழுவதும் கலப்பிடம் நிகழ்கிறது என்று விரிவாக தன் பால் அரசியல் நூலில் தெரிவிக்கிறார் ஆசிரியர் நக்கீரன். இங்கு நான் தொகுத்து வழங்கியது அந்த புத்தகத்தின் ஒரு பகுதி மட்டுமே. இப்புத்தகத்தை முடிக்கையில் ஒவ்வொருவருக்கும் தான் குடிக்கும் பால் பற்றிய பீதி தொற்றிக்கொள்ளும். திரு. பாலா குறிப்பிட்டது போன்று போகிறவாக்கில் பாலில் யூரியா போன்ற கலப்படங்கள் செய்யப்பட்டுள்ளது என்று கூறவில்லை என்பதற்கு தகுந்த ஆதாரம் பால் அரசியல் புத்தகம் மற்றும் FSSAI தரவுகள் ஆகும்.

அன்புடன்

ரா. பாலசுந்தர்.

பால்- பாலா கடிதம்

பால்- ஒரு கடிதம்

பால் – மேலும் கடிதங்கள்

பால் – கடிதங்கள்

முந்தைய கட்டுரைவெள்ளியங்கிரியில்…
அடுத்த கட்டுரைசொற்களை தழுவிச்செல்லும் நதி