‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-74

ele1பீமன் இடும்பவனத்தின் அடர்காட்டுக்குள் மரக்கிளைகளில் இலைச்செறிவுக்குள் கொடிகளை இணைத்துக்கட்டிய படுக்கையில் துயின்றுகொண்டிருந்தான். இடும்பர்களின் அந்தப் படுக்கை முறையை அவன் அங்கு வந்த பின்னர் கற்றுக்கொண்டிருந்தான். ஓர் எடைமிக்க மானுடன் கொடிகளில் துயில்வதற்கு எட்டு மெல்லிய கொடிகளின் இணைப்பே போதுமென்பது முதலில் அவனுக்கு திகைப்பாக இருந்தது. அதில் படுத்தால் சற்று நேரத்திலேயே உடல் வலிகொள்ளத் தொடங்குமென்று அவன் எண்ணினான். முதல் முறையாக அந்தக் கொடிப்படுக்கையை அவனுக்காக அமைத்த இடும்பனாகிய கிருசன் பெரிய பற்களைக் காட்டி “படுத்துக்கொள்ளுங்கள், மானுடரே” என்றான். பீமன் தயங்க அதில் எப்படி படுப்பது என்று அவன் காட்டினான்.

உடம்பில் எட்டு பகுதிகளில் அந்தக் கொடி முடிச்சுகள் அமையும்படி வைத்து அவன் படுத்தான். தொட்டிலில் படுத்திருக்கும் பேருருக்கொண்ட குழந்தைபோல் தோன்றினான். அந்த முடிச்சுகள் உடலில் இருந்து இடம் பெயராதபடி அவற்றை உடலின் அப்பகுதியுடன் தளர்வாக கட்டிக்கொண்டான். பின்னர் கைகளையும் கால்களையும் உதைத்தும் புரண்டும் அது எவ்வகையிலும் இடம்பெயராது என்பதை பீமனுக்கு காட்டினான். “எண்கணுக்கள் என இவற்றை சொல்வோம், மானுடரே. எட்டு கணுக்களுக்கு இடையே உள்ள உடலின் எடை முற்றாகவே நிகரானது” என்றான். பீமன் அக்கொடிப்படுக்கையில் படுத்துக்கொண்டதும் இடும்பனே முடிச்சுகளை அவன் கைகளிலும் கால்களிலும் கட்டினான். எடைமிக்க உடலானதால் எப்போதும் அவன் உடலில் விழுவதைப்பற்றிய எச்சரிக்கை இருந்துகொண்டிருக்கும். ஆகவே அவன் தசைகள் விதிர்த்தன.

ஆனால் நீட்டிப்படுத்ததும் எடையற்று நீரில் மிதந்துகொண்டிருப்பது போன்ற உணர்வை பீமன் அடைந்தான். சற்று நேரத்திலேயே அந்த முடிச்சுகள் அழுத்தத் தொடங்கி குருதியோட்டம் தடைபட்டு உடல் வலிகொள்ளுமென்று எதிர்பார்த்தான். ஆனால் இடும்பன் அவ்வுடலின் அமைப்பை கூர்ந்து கருதி சில கொடிகளை தளர்த்தி சில கொடிகளை இறுக்கி சரியாக அதைப் பொருத்திய பின் புன்னகையுடன் “துயில்க!” என்று கூறி கிளைகளை கடந்து சென்றான். மிதந்து கிடப்பதே துயிலை உருவாக்கியது. மேலும் மேலும் அழுந்தி தனக்குள் புகச் செய்தது. தன்னுள்ளே நிறைந்திருந்த குருதி ஒவ்வொரு குமிழியாக கீழிறங்கி அமைய உள்ளம் விசையிழந்து அமைதியான ஒழுக்காக ஆவதை அவன் உணர்ந்தான். ஒன்றுடன் ஒன்று முட்டி வெப்பம்கொண்ட அகச்சொற்கள் பிரிந்து தனித்தனியாக மாறின. ஒவ்வொரு சொல்லும் தனித்தபோது முற்றிலும் பொருளிழந்தன.

ஏனோ “உலோகம்” எனும் சொல் எஞ்சியிருந்தது. அது தனக்கு எவ்வகையில் பொருள் கொள்கிறது என்று அவன் வியந்தான். உலோகம் உலோகம் என ஓடிக்கொண்டிருந்து மயங்கியது அகம். பின்னர் விழித்துக்கொண்டபோது நெடுநேரம் ஆகிவிட்டிருந்தது. எழ முயன்றபோதுதான் தன் உடல் கொடிகளில் கட்டப்பட்டிருப்பதை, தரையிலிருந்து மிக உயரத்தில் தழைக்குள் கொடிப்படுக்கையில் படுத்திருப்பதை உணர்ந்தான். நெடும்பொழுது ஆகியிருந்தாலும் அவன் உடல் எவ்வகையிலும் வலி கொண்டதாக இருக்கவில்லை. காற்றில் மிதப்பதுபோல. அதன் பின் எப்போதும் அவன் கொடிச்சேக்கையில் தூங்குவதையே வழக்கமாக்கிக்கொண்டான். அவன் கைகளில் எப்போதும் கொடிச்சேக்கை நுண்வடிவிலிருந்தது. அவன் அமைக்கும் கொடிச்சேக்கை அவன் உடலுக்கு மிகச் சரியாக பொருந்தியது.

“எப்படி நீங்கள் அவ்வாறு மரக்கிளைகளுக்கு மேல் துயில்கிறீர்கள்?” என்று சகதேவன் ஒருமுறை கேட்டான். “மண்ணில் துயில்கையில் என் உடலின் எடை ஏதேனும் உறுப்புகளை உறுத்துகிறது. கீழே ஒரு கல் இருப்பினும் கூட அது தசைக்குள் புக முயல்கிறது. கிளைகளுக்குள் எட்டு கைகளால் தாங்கப்பட்டவனாக நான் விண்ணில் துயில்கிறேன். உடலின் எடையை எட்டாக பகுத்துவிடுகின்றன அச்சரடுகள்” என்று அவன் சொன்னான். பின்னர் சகதேவனின் தோளில் ஓங்கி அறைந்து நகைத்து “தூங்குதல் என்றால் அதுதான். மண்ணில் படுத்திருப்பதை துஞ்சுதல் என சொல்கிறார்கள்” என்றான். அவன் தன் அறைக்குள்கூட கொடிகளால் மஞ்சம் அமைத்திருந்தான். தன் உடலுக்குக் கீழே காற்று கடந்து செல்வதை உணர்ந்தாலொழிய அவன் அகம் முற்றிலும் கரைந்து துயிலில் ஆழ்வதில்லை. “நான் என் தந்தையின் கைகளால் தாங்கப்படுகிறேன். பலனாலும் அதிபலனாலும்” என்று அவன் சொன்னான். சகதேவன் “அது நன்று, பேரெடைகளைத் தாங்க காற்றால் மட்டுமே இயலும்” என்றான்.

மரக்கிளைகளினூடாக கடோத்கஜன் வரும் ஓசையை பீமன் கேட்டான். “தந்தையே!” என்று கூவியபடி பறந்துவந்து அவன் நெஞ்சின் மேல் விழுந்தான் கடோத்கஜன். எழுந்து அவன் வயிற்றின்மேல் அமர்ந்து “நான் பறந்து வந்தேன்! அங்கிருந்து பறந்து வந்தேன்!” என்றான். கைசுட்டி உள்ளம் விம்மி விம்மி எழ “அங்கிருந்து பறந்தேன்!” என்றான். “ஆம், தெரிகிறது” என்று சொல்லி அவனுடைய மயிரற்ற பெரிய தலையை கைகளால் வருடிய பின் “வருக!” என கைநீட்டி அழைத்தான். கடோத்கஜன் தன் பெரிய தலையை அவன் மார்பில் வைத்துக்கொண்டான். அவனுடைய உந்திய உதடுகளிலிருந்து எப்பொழுதும் சற்று வாய்நீர் கசிந்து மார்பில் வழிந்திருக்கும். அந்த ஈரத்துடன் அவனை புல்கியபோது எப்போதும் எழும் உளக்கனிவை பீமன் அடைந்தான். அவன் தலையை வருடியபடி “முத்தம் கொடு. தந்தைக்கு முத்தம் கொடு” என்றான்.

“மாட்டேன்” என்று கடோத்கஜன் சொன்னான். “ஏன்?” என்றான் பீமன். “நீங்கள் என்னை வானத்திற்கு கொண்டுபோவதாக சொன்னீர்கள். அங்கே முகில்களில் தாவி ஓடலாமென்று சொன்னீர்கள்!” என்றான் கடோத்கஜன். “எப்போது?” என்று பீமன் கேட்டான். “நேற்று!” என்று கடோத்கஜன் சொன்னான். இறந்தகாலம் அனைத்தும் அவனுக்கு நேற்று என்பதனால் பீமன் சிரித்து “நான் எப்போது கூட்டிச்செல்வதாக உன்னிடம் சொன்னேன்?” என்றான். “நாளை!” என்றான் கடோத்கஜன். “நாளைதானே? இன்று ஏன் கேட்கிறாய்?” என்றான். கடோத்கஜன் விழிகளை உருட்டி எண்ணம் கூர்ந்து பின்னர் தெளிந்து மீண்டும் எழுந்தமர்ந்து வலக்கையைத் தூக்கி சுட்டுவிரலை நீட்டி “நாளை!” என்றான். அவன் உடல் முழுக்க ஒரு துடிப்பு நிகழ்ந்தது. “நாளை! நாளை!” என்றான். அச்சொல்லே அவனை அதிரச்செய்தது. “நாளை! வானில்!” என்றான். “ஆம், நாளை!” என்று பீமன் சொன்னான்.

“நாளை!” என்று கைவிரித்துக் கூச்சலிட்டபடி கடோத்கஜன் அவன் வயிற்றில் எம்பிக்குதித்தான். அவன் அகவையில் உள்ள அனைத்துக் குழவிகளுக்கும் நாளை எனும் சொல்லைப்போல் உளவிசையும் உவகையும் கொள்ளச்செய்யும் பிறிதொன்றில்லை என்று பீமன் எண்ணிக்கொண்டான். “நாளை! அங்கு! நாளை! வானில்!” என்று கடோத்கஜன் கூவினான். இரு கைகளையும் விரித்து பறப்பதுபோல் சிரித்து “முகில்களில்! நாளை! முகில்களில்!” என்றான். “ஆம். மண்டையன் நாளை முகில்களில் நீந்துவான்…” என்றான் பீமன். “நாளை நீ முகில்கள் மேல் போவாய்தானே?” என்றான். “ஆம்” என்றான் கடோத்கஜன். “அப்படியென்றால் எனக்கொரு முத்தம் கொடு” என்றான் பீமன். “சரி” என அவன் வாயைத் துடைத்தான். “இல்லை, இல்லை, ஈரமுத்தம்” என்றான் பீமன். கடோத்கஜன் சிரித்தபோது மீண்டும் வாய் சொட்டியது. அவன் பீமனின் மார்பில் கையூன்றி தன் ஈரமான உதடுகளால் பீமனின் கன்னங்களில் முத்தம் அளித்தான். பீமனின் உடல் மெய்ப்பு கொண்டது. கடோத்கஜனை தன் இரு கைகளாலும் புல்கி அவன் கன்னங்களிலும் மயிரற்ற கலமண்டையிலும் வெறிகொண்டு முத்தமிட்டான்.

விழித்துக்கொண்டபோதுதான் பீமன் புரவியிலேயே தான் இருப்பதை உணர்ந்தான். அரைத்துயிலில் உடல் சற்றே எடை மிகுந்து கடிவாளத்துடன் சரிந்திருந்தது. “இளவரசே!” என்று அவன் அருகே சென்ற ஏவலன் அழைத்தான். நெடுங்காலப் பயிற்சியினால் அவன் உடல் புரவி மீதிருந்து சரியவில்லை. கண்களைக் கொட்டி உடம்பை இறுக்கித் தளர்த்தி “ஆம்” என்றான் பீமன். “இவ்விடம்தான்” என்று ஏவலன் சுட்டிக்காட்டினான். பீமன் நெஞ்சில் பேரெடை ஒன்று வந்து அறைந்ததுபோல் உணர்ந்து, ஒருகணம் செயலற்று, பின்னர் அகம் கலைந்தெழ, கைகால்கள் நடுக்குற, உடலில் வியர்வை எழுந்து வெப்பமாகப் பரவி உடனே குளிர்ந்து மூச்சு இறுகி நின்றிருக்க அந்நிலத்தை பார்த்தான். தரையெங்கும் பல்லாயிரம் நாகங்கள் நெளிந்து அகல்வதை கண்டான். “நாகங்கள்!” என்றான். “ஆம் இளவரசே, நாகஅம்பு” என்றான் பின்னால் வந்துகொண்டிருந்த படைத்தலைவன்.

அவன் உள்ளம் அதை பொருள் கொள்ளவில்லை. அவன் தரை முழுக்க நெளிந்து இரையுண்டவைபோல் விசையழிந்து ஒன்றுடன் ஒன்று பின்னி நெளிந்து உழன்றுகொண்டிருந்த நாகங்களைப் பார்த்தபடி நின்றான். கடோத்கஜன் அலறியபடி “நாகங்கள்!” என்றான். பீமன் அவன் தோளைப்பற்றி “எங்கே?” என்றான். கடோத்கஜன் “நாகம்! நாகம்!” என்று அலறியபடி துடித்தான். பீமன் அவனைத் தூக்கி அப்பால் கொடி மீது அமரச் செய்தபின் அவன் உடலை கூர்ந்து பார்த்தான். இடும்பர்கள் நாகங்களை கூற்றென அஞ்சுபவர்கள் என்று அறிந்திருந்தான். இடும்பர் காட்டில் பச்சைப் பாம்புகளோ மரமேறும் பாம்புகளோ இல்லை. அவை நெடுங்காலமாக அவர்களால் தொடர்ந்து கொன்றொழிக்கப்பட்டுவிட்டன. கீழே உதிர்ந்த மரக்கிளைகளிலும் சருகுக்குவைகளிலும் மறைந்து சுருண்டு கிடந்த பல்லாயிரம் பாம்புகள் எதன் பொருட்டும் மரமேறக்கூடாதென்பதை கற்று தங்கள் தலைமுறைகளுக்கு ஊட்டியிருந்தன. இடும்பர்கள் எந்நிலையிலும் அங்கு கால்பதிப்பதும் இல்லை.

கடோத்கஜன் கைசுட்டி “நாகம்! நாகம்!” என்றான். அங்கு மெல்லிய கொடியின் தளிர்முனை வளைந்திருப்பதைக் கண்டு “மண்டையா, அது கொடித்தளிர். பாம்பல்ல” என்றபின் அதை கையால் ஒடித்துக் காட்டினான் பீமன். “நாகம்! நாகம்!” என்று கடோத்கஜன் மீண்டும் நடுங்கினான். அவன் அருகே கொண்டு சென்று அவன் முகத்தில் அதை தொடச்சென்றான். “நாகம்!” என்று அலறியபடி இலைத்தழைப்பிலிருந்து நழுவி கீழே விழப்போனான் கடோத்கஜன். பீமன் பாய்ந்து அவன் கையைப்பற்றி தன் உடலுடன் சேர்த்து எடுத்துக்கொண்டான். வெறியுடன் கைகால்களை உதைத்து “நாகம்! நாகம்!” என்று கடோத்கஜன் அலறினான். அவன் கைகால்கள் இழுத்துக்கொள்ள வாய் கோணலாக உடலில் வலிப்பு கூடியது. “மண்டையா! மண்டையா!” என்று கூவி அவனை உலுக்கினான் பீமன். வாயிலிருந்து நுரை வழிய கடோத்கஜன் நினைவிழந்தான்.

அவனை தன் தோளில் தூக்கியபடி பீமன் இலைகளினூடாக பாய்ந்து சென்றான். இடும்பர் குடியின் அருகே இறங்கி “மருத்துவரே!” என்று கூவினான். மருத்துவம் செய்யும் உசவர் அங்கிருந்து ஓடிவந்து கடோத்கஜனை இரு கைகளாலும் வாங்கிக்கொண்டார். புல்படுக்கைமேல் படுக்க வைத்து அவன் தலையையும் கைகால்களையும் தொட்டுப்பார்த்தார். “அனைத்து நரம்புகளும் முடிச்சிட்டுள்ளன. இப்போது விழிப்படைந்தால் அவை மேலும் இறுகவே வாய்ப்பு. இவ்வண்ணமே துயில் கொள்ளட்டும்” என அவர் சொன்னதும் இருவர் குடிலுக்குள் இருந்து சில இலைச்சருகுகளை எடுத்துவந்து அனல் காட்டி அந்தப் புகையை சிறு விசிறியால் விசிறி கடோத்கஜனை ஆழ இழுக்கச்செய்தார்கள். புகை குடித்து மெல்ல மெல்ல கடோத்கஜன் உடல் தளர்ந்தான். இறுகப் பற்றியிருந்த கைகளில் விரல்கள் ஒவ்வொன்றாக விடுபட்டன. கால்கள் தணிந்து இருபுறமும் சரிந்து மூச்சு சீரடைந்தது. மயக்கத்திலும் வலிப்பு கொண்டு இறுகியிருந்த முகத்தசைகள் நெகிழலாயின.

“துயிலட்டும்” என்று மருத்துவர் சொன்னார். கடோத்கஜன் குழறலாக “நாகம்!” என்றான். “பாம்பைக் கண்டு அஞ்சியிருக்கிறான்” என்றார் உசவர். “அது பாம்பு அல்ல” என்று பீமன் சொன்னான். “பாம்பு என்பது அரிதாகவே பாம்பில் நிகழ்கிறது. பிற அனைத்திலும் தன்னை நிகழ்த்திக்கொள்ள இயலும் என்பது பாம்புகளின் இயல்பு. எங்கு வேண்டுமானாலும் அது தன் நஞ்சை வைத்திருக்கவும் இயலும். மானுடக் கைகளில் கூட நகங்களில் நஞ்சு எழுவதுண்டு. அன்னை கையில் நாகம் எழுந்து சீறி குழவியைக் கொத்தி கொன்ற கதைகளும் உண்டு” என்றார் மருத்துவர். பீமன் மைந்தனின் முகத்தைப் பார்த்தபடி நின்றான். கடோத்கஜனின் வளைந்த கால்கள் அதிர்ந்துகொண்டிருந்தன. அங்கே நுண்வடிவ நாகங்கள் சுற்றிப்பின்னியிருப்பதாகத் தோன்றியது.

“உடல் இங்கு உள்ளது, இளவரசே” என்றான் படைத்தலைவன். அதை பார்க்கவேண்டியதில்லை என்று முதலில் பீமனின் உளம் எண்ணியது. ஆனால் ஒன்றும் சொல்லாமல் அவன் புரவியில் முன்னால் சென்றான். “விண்ணிலிருந்து பேரெடையுடன் விழுந்ததனால் சற்று சிதறிவிட்டிருக்கிறது” என்று இன்னொரு வீரன் சொன்னான். பீமன் வருவதைக்கண்டு அங்கு கூடியிருந்த இடும்பர்கள் தங்கள் கைகளால் அறைந்து ஒற்றைக் குரலில் நீள் ஊளையிட்டு துயரை அறிவித்தனர். பீமன் தன் உடலெங்கும் விதிர்ப்பு குடியேறுவதை உணர்ந்தான். நோக்க வேண்டியதில்லை திரும்புக என்று அவன் உள்ளம் ஆணையிட்டது. ஆனால் அவன் உடலிலிருந்து ஆணைகளைப் பெற்று புரவி முன்னால் சென்றுகொண்டே இருந்தது.

இடும்பர்கள் வளைந்த மெலிந்த கால்களை நிலத்தில் ஊன்றி அலையலையாக உடலை எழுப்பி நெஞ்சில் இரு கைகளாலும் அறைந்துகொண்டு தலையை மேலே தூக்கி ஊளையிட்டனர். அவ்வோசையின் அலையையே அவர்கள் உடலில் காண முடிந்தது. சூழ்ந்து அலையடித்த உடல்களின் அலைநடுவே இரு கால்கள் தெரிந்தன. பீமன் கடிவாளத்தை இழுத்து புரவியை நிறுத்தினான். சற்று முன்னால் சென்ற படைத்தலைவன் “தாங்கள் பார்க்கவிரும்பவில்லையென்றால்…” என்றான். “இல்லை” என்றபின் பீமன் இரு கால்களாலும் குதிமுள்ளை அழுத்தி புரவியை முன்செலுத்தினான். அது உடலைச் சிலிர்த்து தலை சிலுப்பி நீள்மூச்சுவிட்டபடி எடையுடன் காலடியை எடுத்து முன்னால் சென்றது.

பீமன் கடிவாளத்தை விட்டுவிட்டு கால்சுழற்றி இறங்கி நிமிர்ந்த தலையுடன் கைகளை வீசியபடி கடோத்கஜனை நோக்கி சென்றான். அவன் அணுகியதும் இடும்பர்கள் அமைதி அடைந்து ஒருவரோடொருவர் உடல்ஒட்டி பின்னால் விலகி பெரிய வளையமென்றாயினர். அதன் நடுவே இரு கைகளையும் கால்களையும் விரித்து விண்ணை நோக்கி கடோத்கஜன் படுத்திருந்தான். கொடிப்படுக்கையில் படுத்திருப்பதுபோல் என்று பீமன் எண்ணினான். அவன் உடலெங்கும் நாகநஞ்சு ஏறியிருந்தமையால் நரம்புகள் புடைத்து கொடிகள் சுற்றி படர்ந்த கரும்பாறைபோல் உடல் தெரிந்தது. பற்கள் கிட்டித்திருக்க முகம் வலிப்பு கொண்டமையால் அவன் நகைப்பதுபோல் தோன்றியது. விழிகள் திறந்து வானை உறுத்திருந்தன. அருகணைந்து அவன் காலருகே நின்ற பீமன் “அனல் எஞ்சியுள்ளதா?” என்றான். “இல்லை. விரைவிலேயே குளிர்ந்துவிட்டது” என்று குனிந்து அமர்ந்திருந்த மருத்துவர் சொன்னார்.

பீமன் தன் உள்ளிருந்து குளிர்ந்த மூச்சை ஊதி வெளியேவிட்டான். கடோத்கஜனின் உடலை நோக்கியபடி மெல்ல சுற்றி நடந்தான். விழிகளால் அவன் கால்களிலிருந்து நெஞ்சினூடாக தலைவரை வருடினான். எதற்காக தயங்குகிறேன்? இத்தருணத்தில் நான் செய்யவேண்டியது முழங்காலறைந்து விழுந்து அவன் கால்களிலும் நெஞ்சிலும் தலையை அறைந்துகொண்டு கதறி அழவேண்டியதல்லவா? எதன் பொருட்டு இறுக்கிக்கொள்கிறேன்? எவருக்காக இதை நடிக்கிறேன்? கடோத்கஜனின் முகத்தை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தபோது பீமனின் இடதுகால் மட்டும் துடித்து துள்ளிக்கொண்டிருந்தது. எக்கணமும் அறுந்து விழுந்துவிடுவோம் என்ற அச்சம் அவனுக்கு ஏற்பட்டது. எக்கணமும் பித்தனைப்போல் அலறியபடி நெஞ்சிலும் தலையிலும் அறைந்து கூவி அழுதபடி அங்கிருந்து அவன் ஓடக்கூடும். மண்ணில் தலையறைய விழுந்து தலையை புழுதியில் புரட்டியபடி பொருளழிந்த சொற்களைச் சொல்லி அலறக்கூடும். இரு கைகளையும் விரித்து விண்ணை நோக்கி அசைத்து தெய்வங்களிடம் முறையிடக்கூடும்.

தெய்வங்கள் விண்ணில் காத்து நின்றிருக்கின்றன. மானுடனின் ஆணவம் முறியும் தருணத்தில் அவை புன்னகைக்கின்றன. தெய்வங்களே, என்னை நோக்கி நீங்கள் புன்னகைக்கும் ஒரு தருணத்தை நான் அளிக்கப்போவதில்லை. ஒருபோதும் என்னை நீங்கள் இரக்கத்துடன் பார்க்கப்போவதில்லை. கை சுட்டி இதோ எளிய மானுடன் என்று உரைக்கப்போவதில்லை. ஒருதுளி விழிநீரையும் நீங்கள் பார்க்கப்போவதில்லை. பீமன் சற்று பின்னடைந்தான். சூழ்ந்து நின்றிருந்த இடும்பர்களைப் பார்த்தான். அவர்கள் எவர் விழிகளிலும் ஒருதுளி நீருமில்லை. இரு கைகளையும் விரித்து சற்றே உடல் குனித்து பெருங்குரங்குகளின் உடல்மொழி காட்டி அவர்கள் நின்றிருந்தனர். பீமன் தன் வலக்கையால் ஓங்கி நெஞ்சை அறைந்தான். பின்னர் தலை தூக்கி நீண்ட ஊளை ஒலியை எழுப்பினான். இடும்பர்கள் அனைவரும் தங்கள் நெஞ்சை அறைந்து அவ்வொலியை எழுப்பினர். நெஞ்சில் மாறி மாறி அறைந்துகொண்டு ஊளையொலிகளை இணைத்து ஒற்றைப்பேரொலியாக அவர்கள் மாற்றினார்கள். சுழன்று சுழன்று அடியிலா ஆழம் நோக்கி அருவியெனப் பொழிந்து சென்றது அவ்வலறல் ஓசை.

ele1பீமன் தரையில் படுத்திருந்தான். அவன் உடலுக்கு அடியில் மண் நெகிழ்ந்து உள்ளிழுத்துக்கொண்டது. மென்சேற்றுக் கதுப்பென அது ஆகிவிட்டதுபோல. அவன் கைகளும் கால்களும் கல்லால் ஆனவை என எடைகொண்டிருந்தன. மேலும் புதைந்து இறங்கினான். இருபுறத்திலிருந்தும் சேற்றுப் பரப்பு பிதுங்கி வந்து அவன் உடலை மூடி ஒன்றுடன் ஒன்று இணைந்துகொண்டது. மேலும் அவன் அழுந்திச்சென்றபோது முகத்தையும் கண்களையும் மண் மூடியது. வாய்க்குள்ளும் மூக்குக்குள்ளும் மண் புகுந்தது. மூச்சுப்பைகளும் உணவுப்பைகளும் மணலால் நிறைந்தன. உடற்குகை முழுக்க மணல் சென்று நிறைந்து குருதியை உறைய வைத்தது. அனைத்து உறுப்புகளும் மண்ணாலானவை என மாறின. மணல் அவன் நெஞ்சத் துடிப்பை நிறுத்தியது. மூச்சு ஓட்டத்தை அணைத்தது. உடலெங்கும் அனலை மூடி புகைத்து அணைத்து குளிரச்செய்தது.

அவனை கல்லென்றாக்கியது அவ்வெடை. மீண்டும் மீண்டும் மண்ணில் ஆழ புதைந்து சென்றுகொண்டிருந்தான். மணலுக்கும் அவனுக்குமிடையே ஒரு சிறு தன்னுணர்வின் இடைவெளி மட்டுமே இருந்தது. மண்ணுக்கடியில் குளிராக இருந்தது. மெல்லிய புழுக்கள் அவன் உடலை நோக்கி நீண்டு வந்தன. சிவந்த குழவியின் விரல்கள் போன்ற புழுக்கள். அவை அவனை குளிரக் குளிர தொட்டன. பல்லாயிரம் தொடுகைகள். முலைதேடும் குழவிகளின் அழைப்புகள். அவன் மேல் மெல்ல மெல்ல சுற்றி கவ்விக்கொண்டன. அவன் உடலுக்குள் துளைத்திறங்கி ஆழச்சென்று அங்கிருந்த குருதி நனைந்த சேற்றில் கிளைவிரித்தன. நெளிந்து நெளிந்து இடைவெளியிலாது ஒன்றையொன்று பற்றிக்கொண்டு அவனை முழுமையாக உண்டன. அவன் உடல் பெரிய வேர்ப்பின்னல் தொகையென்றாகியது. அது மண்ணைத் துளைத்து மேலெழுவதை அவன் பார்த்தான்.

முளைகள் மேலெழுந்து இலைவிட்டன. தண்டுகள் பருத்து செடிகளாகி கிளைகொண்டு எழுந்தன. மரங்களாகி கிளைகள் ஒன்றையொன்று பின்னி இலைத்தழைப்பு கொண்டு வெயிலில் செறிந்துபரவி சோலையென நின்றிருந்தன. அதன் மேல் குரங்குகள் துள்ளி விளையாடுவதை அவன் நோக்கினான். ஒன்றையொன்று பிடித்துத் தள்ளியபடி, வாய்திறந்து பற்கள் தெரிய கூச்சலிட்டு, ஒருவர் மேல் ஒருவர் தாவிப் பற்றியபடி, விளையாட்டில் தவறி கீழே விழும் குரங்கை அள்ளி கைபற்றித் தூக்கி மீண்டும் மேலெழுப்பி ஏளனம் செய்து கூச்சலிட்டபடி அவை களியாடிக்கொண்டிருந்தன. மயிரடர்ந்த பெரிய குரங்கை அவன் பார்த்துக்கொண்டிருந்தான். அது பிற அனைத்துக் குரங்குகளையும் தூக்கி வானில் வீசியது. துள்ளிப்பாய்ந்து அவற்றின் மேலிறங்கி அவற்றை விளையாட்டாக அடித்து வெற்றி வெற்றி என்று கூச்சலிட்டது. பற்கள் தெரிய இளித்து வானை நோக்கியபடி இரு கைகளாலும் மார்பை அறைந்து வெற்றி கொண்டாடியது.

அவன் விழித்துக்கொண்டபோது பாடிவீட்டிற்கு வெளியே புலரியின் மென்குளிரில் படுத்திருந்தான். அவனருகே மதுக்குடங்களும் அனலணைந்த அகிபீனாக்கலங்களும் சிதறிக்கிடந்தன. சற்று அப்பால் வேலுடன் காவல் வீரர்கள் அமர்ந்திருந்தனர். பீமன் விண்மீன்கள் நிறைந்த வானையே நோக்கிக்கொண்டிருந்தான். முகில்கள் வானில் நிறைந்திருந்தன. சில பகுதிகளில் வெறும் இருள் மட்டுமே நிறைந்திருந்தது. அவன் உள்ளம் துயர் நிறைந்து அசைவற்று பாறை போலிருந்தது. ஒவ்வொரு எண்ணமும் சிதைந்து விழுந்தது. இத்தருணத்தில் தந்தையர் விழிநீர்விடுவார்களா? பிறிதொருவர் நோக்க அழாதவர்கள்கூட தனிமையில் அழுவார்கள் அல்லவா? என்னால் ஏன் ஒரு துளி விழிநீர்கூட அவனுக்காக சிந்த முடியவில்லை? தொல்லரக்கன்போல் உணர்வுகள் அற்றவனாக ஆகிவிட்டேனா? அல்லது விண்தெய்வங்கள்போல் அனைத்து உணர்வுகளையும் கடந்திருக்கிறேனா?

அவ்வெண்ணங்கள் பிறிதொரு ஒழுக்கென்று ஓட அசைவற்ற அவன் உள்ளத்தை சூழ்ந்து பதைத்துக்கொண்டிருந்தன சொற்கள். குரங்குகள். குரங்குகளைப்பற்றி இறுதியாக எண்ணினேன். நாகம் பற்றி. அந்த நாகஅம்பு! இப்போது எங்கிருக்கிறது அது? அதில் அமைந்த அந்தத் தொல்நாகம் எங்கிருக்கிறது? அதன் வாழ்நாள் இலக்கு முற்றிலும் பிழைத்துவிட்டது. எங்கு திரும்பிச்செல்லவிருக்கிறான் அவன்? வஞ்சத்துடன் செல்பவன் திரும்பிச் சென்றடைய ஓர் இடம் இங்கு எங்குமில்லை. விண்மீன்களுக்கிடையே அந்த இருளில் ஓர் அசைவென தெரிந்தது. அவன் கூர்ந்து பார்க்கையில் இருளின் முடிவின்மையை கண்டான். முகிலசைவா? ஓரவிழியால் தன் வலப்பக்கம் ஓர் நகர்வை அவன் கண்டான். “யார்?” என்று பதறிய குரலில் அழைத்தான்.

அங்கு ஓசையின்றி வந்து நின்றவனை அவன் அடையாளம் கண்டுகொண்டான். “பெரீந்தையே!” என அழைத்தபடி சிறுவனாகிய குண்டாசி அவனருகே அணுகினான். அவனுக்குப் பின்னால் சுஜாதன். “பெரீந்தையே, என்னை தூக்கு” என அவன் கைநீட்டினான். “நீயா?” என்று பீமன் கேட்டான். அவர்கள் கௌரவ மைந்தர்களான வாசவனும் வக்ரனும் என்று கண்டான். அப்பாலிருந்து கௌரவ மைந்தனாகிய சுராசதன் “பெரீந்தையே, இங்கு நிறைய இடமிருக்கிறது. எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் ஓட முடியும். இவர்கள் எவராலும் என்னை பிடிக்க முடியாது” என்று கூவினான். “பொய் சொல்கிறான், பெரீந்தையே” என்றபடி சுதமன் அவனுக்குப் பின்னால் வந்து நின்றான். “பெரீந்தையே, பெரீந்தையே, பெரீந்தையே” என்று சுதமன் சொன்னான். “நான் யானையை கொன்றேன்.” பீமன் சிரித்தபடி “யார், நீயா?” என்றான். அவனுக்குப் பின்னால் நின்ற அவனைவிடச் சிறியவனாகிய சுகீர்த்தி “ஆமாம்” என்று சொன்னான்.

உதானன் “பெரீந்தையே, என்னை யாருமே பிடிக்கமுடியாது” என அவன் ஆடைபற்றி இழுத்தான். “இவன் பொய் சொல்கிறான். இவனை நான் நூறுமுறை துரத்திப் பிடித்தேன்” என்றான் கவசன். “இல்லை! இல்லை!” என்று அவனை பிடித்துத் தள்ளினான் இன்னொருவன். அவன் பெயர் பீமனுக்குத் தெரியவில்லை. “பெரீந்தையே, பெரீந்தையே” என்று அனைத்துப் பக்கங்களிலும் ஓசை கேட்டது. கௌரவ மைந்தர்கள் எழுந்து வந்துகொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொரு முகத்தையாக தொட்டறிந்தான். ஒவ்வொருவரின் தோள்களையும், கண்களையும் நன்கறிந்திருந்தான். அவர்கள் நடுவே ஒளிரும் பெரிய மண்டையுடன் கடோத்கஜன் நின்றிருந்தான். மீண்டும் சிறுவனாகிவிட்டவன்போல். “இங்கே எப்படி வந்தாய்?” என்றான் பீமன். “தந்தையே, நான் இங்கேதான் இருக்கிறேன்” என அவன் சொன்னான். அவனருகே லட்சுமணன், துணையாக துருமசேனன். லட்சுமணன் “சொன்னால் கேட்கமாட்டார்கள், தந்தையே” என்றான்.

“பெரீந்தையே, இவன் எங்களைவிட பெரியவன். ஆனால் நாங்கள் அனைவருமாக சேர்ந்து இவனை பிடித்து தூக்கிவிட்டோம்” என்றான் சுப்ரஜன். “பொய்! பொய் சொல்கிறான்! என்னை எவரும் பிடிக்கவில்லை” என்று கடோத்கஜன் பாய்ந்து அவனை பிடித்துத் தள்ளினான். அவர்கள் அனைவரும் கூச்சலிட்டபடி சிரித்துப் பாய்ந்து அவன் மேல் விழுந்தனர். கரிய உடல்கள் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து நெளிவுகளாயின. இரு தோள்களில் இருவரை தூக்கியபடி கடோத்கஜன் எழுந்தான். இருவர் சிரித்தபடி அவன் கால்களை பற்றி இழுக்க கடோத்கஜன் மல்லாந்து தரையில் விழுந்தான். மேலும் பலர் அவன் மேல் விழ அவர்கள் கட்டிப் புரண்டனர். குண்டலன் “பெரீந்தையே, அவனை வென்றுவிட்டோம்! அவனை வென்றுவிட்டோம்!” என்று கூவினான். கடோத்கஜன் தன்னைப் பற்றியிருந்தவர்களை உதிர்க்கும்பொருட்டு திமிறியபடி இரு இடைவெளிகளுக்கு நடுவே ஒளிமிகுந்த பற்களைக் காட்டி நகைத்து “நான் தோற்கவில்லை. இவர்கள் யாரும் என்னை பற்ற முடியாது” என்றான். பீமன் “விளையாடுங்கள்! விளையாடுங்கள், மைந்தர்களே!” என்றான். ஆனால் அவன் உள்ளிருந்து விம்மல் எழுந்தது. கண்ணீர் பெருகி காதுகளை நனைக்க அவன் பெரும்கேவல்களுடன் அழுதுகொண்டிருந்தான்.

முந்தைய கட்டுரைசிவஇரவு
அடுத்த கட்டுரைஇரு கதைகள் – கடிதங்கள்