அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இரண்டு நாட்களுக்கு முன் அறிந்த வேதாரண்ய மீனவர் கொல்லப்பட்ட செய்தி என்னை அதிர்ச்சிகுள்ளாக்கியது, (அடிக்கடி நடக்கும் சம்பவமாக இருந்தாலும்), பலர் உயிர் இழப்பது தொடரும் போதும் இதற்கு ஒரு முடிவு எட்டப்படாமல் உள்ளது மிகவும் வருத்தமளிகிறது
மீனவர்கள் கடலில் எல்லை தாண்டுவது மிகவும் சகஜம் என்று என் மீனவ இனத்தை சேர்ந்த நண்பர்கள் சொல்லியுள்ளார்கள்,
அதற்காக கொலை செய்வது கொஞ்சமும் ஏற்று கொள்ள முடியாதது, சில சமயங்களில் நம் எல்லைகுள் வந்தும் சுடுகிறார்கள், இலங்கை கடற்படைக்கு அவ்வளவு கொடூர செயலை செய்யச் சொல்வது அல்லது கண்டு கொள்ளாமல் விடுவது யார்?
தெற்காசியாவின் பலமான நாடான இந்திய எல்லைக்குள் வந்து நம் பிரஜையை கொன்று திரும்பும் சிங்களவனைக் கண்டு சினம் கொண்டு எச்சரிக்காமல் நம் அரசு மிக மந்தமாக(அறிக்கை, கடிதம், கண்டனம்) செயல்படுவது எதனால்?,(கசாபையே A/Cயில் வைத்து அழகுபார்பவர்கள் தானே! ), ஜனநாயக முறைப்படி மக்கள் என்னதான் செய்ய வேண்டும்?. இங்கு வேறு அரசை அமர்த்திவிட்டு கடலுக்கு சென்று சுடுகிறனா என்று பார்க்க முடியுமா? இல்லை வேலை நிறுத்தம் செய்யலாமா? (இது என்ன சரக்கு லாரிகள் சங்க வேலை நிறுத்தமா அரசின் உடனடி கவனம்பெற) கடலுக்கு செல்லாவிட்டால் அவன் குடும்பதின் வயிறு தான் காயும் என்ன செய்வது?…
இந்நிலையில் பிரிவினைவாதிகளின் பேச்சில் சுலபமாக வீழ்ந்து விட மாட்டார்களா? இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடையை என் போன்றோர் அரசை எப்படி துரிதப் படுத்துவது……. இவ்விசயம் உடனடி அரசியல் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
வருத்ததுடன்
கார்த்திகேயன்
அன்புள்ள கார்த்திகேயன்,
’தெற்காசியாவின் பலமான நாடான இந்தியா’ என்ற வரியை வைத்துத்தான் இதைப்பற்றி பேச ஆரம்பிக்க வேண்டும். இந்திய அரசில் உயர்தளத்தில் உள்ள ஒருவர் ஒருமுறை தனிப்பட்ட உரையாடலில் சொன்னார். ‘இந்திய வரலாற்றில் இன்றிருப்பதுபோல இந்தியா எப்போதுமே பலவீனமாக இருந்ததில்லை’ அதுவே உண்மை.
இலங்கையில் மட்டும் அல்ல பர்மா, நேபாளம், வங்கதேச எல்லைகளிலும் அந்தந்த நாடுகளின் ராணுவங்கள் இந்தியாவை ஒரு பொருட்டாக நினைக்காமல் நடந்து கொள்கின்றன. அடிக்கடி துப்பாக்கிச் சூடுகளும், கொலைகளும் நிகழ்கின்றன. குறிப்பாக பர்மிய எல்லை பேணப்படுகிறதா என்றே சந்தேகமாக இருக்கிறது என்கிறார்கள். பல நிகழ்வுகள் இங்கே நம் செய்தித்தாள்களில் செய்திகளாகக்கூட வருவதில்லை– இந்த மீனவப் படுகொலைகள் வட இந்திய செய்தித்தாள்களில் வருவதில்லை என்பதைப்போல.
சீன எல்லையை முழுக்க முழுக்க சீனாவுக்கே விட்டுக் கொடுத்து விட்டார்கள். கணிசமான பனிமலைகள் நடைமுறையில் சீனாவிடம்தான் இன்றிருக்கின்றன. அங்கே செல்ல அவர்கள் சாலை அமைத்திருக்கிறார்கள். நாம் ஹெலிகாப்டரில் மட்டுமே செல்ல முடியும். பிரம்மபுத்திராவின் குறுக்கே ஒருதலைப்பட்சமாக அணைகள் கட்டப்படுகின்றன. அருணாச்சலப்பிரதேசம் நடைமுறையில் சீனாவுடன் இணைந்தது போல எல்லைகள் அழிந்த நிலையில் உள்ளது. ஒப்புக்குக்கூட ஓர் எதிர்ப்பை இந்தியா காட்டுவதில்லை.
காரணம் இன்றுள்ள அரசுதான். நம் அமைப்பில் ஓர் அரசியல் கட்சியே ஆட்சியை நடத்துகிறது. அந்த கட்சியின் கொள்கைநிலை அரசின் கொள்கைகள் அனைத்திலும் எதிரொலிக்கும். அந்தக்கட்சியே உண்மையில் மக்களின் தேசியவிருப்புறுதியின் அடையாளமாக நிற்கிறது. அந்த கட்சியின் பிரதிநிதிகளாக உள்ள பிரதமரும் அமைச்சர்களும் அதை அமல்படுத்துவார்கள். இதுநாள்வரை இந்திய தேசியம் என்ற உணர்வு இவ்வாறுதான் நடைமுறையில் இருந்து வருகிறது.
சென்ற சில வருடங்களாக அத்தகைய வழிநடத்துதல் எதுவுமே அரசு சார்பில் இருந்து ஆட்சிக்கும், ராணுவத்திற்கும் இல்லை என்கிறார்கள். அரசு என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை என்றுகூட சொல்கிறார்கள். பிரதமர் அனேகமாக எதிலுமே ஆர்வமற்றவராக இருக்கிறார். அவரிடம் எந்த அதிகாரமும் இல்லை என்பது வெளிப்படையாகவே இருப்பதனால் அவருக்கு எந்த மதிப்பும் இல்லை. அமைச்சரவையில் உள்ள பிறகட்சிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றன. ராணுவமும், அரசும் முழுக்க முழுக்க அரசதிகாரிகளின் முடிவுக்கு விடப்பட்டுள்ளன.
அதிகாரிகளின் மனநிலை என்ற ஒன்று குறிப்பாக கவனிக்கத் தக்கது. எக்காலத்திலும் அதற்கென சில சிறப்பியல்புகள் உண்டு. அதை ஒரு ‘நமக்கென்ன’ மனநிலை எனலாம். அவர்கள் எதையும் ஒத்திப் போடவும் தவிர்க்கவுமே முயல்வார்கள். கூடுமானவரை எதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருப்பார்கள். ஏனென்றால் எந்த நடவடிக்கையும் அவர்களுக்கு கூடுதல் வேலையையும், பொறுப்பையும், சிக்கலையும் அளிக்கும். மேலும், நம் அமைப்பில் எதையும்செய்யாமலிருப்பதற்காக எவரும் தண்டிக்கப் படுவதில்லை. எதையாவது செய்து தவறாக ஆகுமென்றால் அனைவரும் ஒதுங்கிக் கொள்ள சம்பந்தப் பட்டவர் மட்டுமே அதைச் சுமக்க வேண்டியிருக்கும்.
இந்தியாவின் தலைக்குமேல் சீனாவின் அழுத்தம் ஒவ்வொரு கணத்திலும் ஏறி வருகிறது. திபேத், நேப்பாளம், பர்மா, வங்கதேசம்,இலங்கை,பாகிஸ்தான் என சீனா இந்தியாவைச்சூழ்ந்துள்ள எல்லா நாடுகளையும் தன்வயமாக்கிவிட்டிருக்கிறது. இலங்கை ராணுவம் இந்தியாமேல் துணிந்து கைவைக்கிறதென்றால் அது சீனாவின் பின்பலத்தால் மட்டுமே.
இந்நிலையில் ’சீனாவை நம்மால் ஒன்றும் செய்யமுடியாது, பணிந்துபோவோம்’ என்ற ஆலோசனைகளே அரசுக்கு அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்படுகின்றன. மின்பொருட்களின் இறக்குமதி மேல் தரக்கட்டுப்பாடு விதிப்பதில் ஆரம்பித்து குறைந்தது இருபது விஷயங்களிலாவது இந்த நான்குவருடங்களில் இந்திய அரசு சீனாவின் நிர்ப்பந்தங்களுக்கு குப்புற விழுந்து அடிபணிந்திருக்கிறது
வடகிழக்கில் பழங்குடிகளின் பிரிவினைப் போர்களையும் நடு இந்தியாவில் மாவோயிசக்குழுக்களையும் சீனா உருவாக்கி நிலைநிறுத்தி இந்தியாவின் உள்நாட்டுக்கட்டுப்பாட்டையே தன் கையில் வைத்திருக்க முயல்கிறது. அவற்றின்முன்னாலும் இந்திய அரசு செயலிழந்து நிற்கிறது.
அனைத்துக்கும் மேலாக, இந்திய ஊடகத் துறையிலும் அறிவுத் துறையிலும் சீன ஆதரவு மனநிலை ஓங்கி ஒலிக்கிறது. இந்தியாவை ஒரு மாபெரும் அடக்குமுறை தேசமாக, ஜனநாயகமற்ற தேசமாக, எதிர்மறைச் சக்தியாக இந்திய மக்களிடையே சித்தரிக்கும் குரல்களே நம் ஊடகங்களில் நிறைந்துள்ளன. அவர்களுக்கு சீனாவின் உலக ஆதிக்கப்போக்கு, சர்வாதிகாரம், தங்கள் மக்கள் மேல் அந்நாடு செலுத்தும் அடக்குமுறை எல்லாமே முற்போக்காகத் தெரிகின்றன.
தயக்கமே இல்லாமல் ‘சீனாவின் தார்மீக அழுத்ததுக்கு இந்தியா ஒத்துப்போக வேண்டும்’ என எழுதுகிற ’தி இண்டு’ போன்ற நாளிதழ்கள் ஒரு புறம். மழுப்பி மழுப்பி பலவகைகளில் சீன ஆதரவு அரசியலை நிகழ்த்துகிற நாளிதழ்கள் மறுபுறம். இந்தச் செய்தி ஊடகங்களுக்கும் சோட்டா அறிவுஜீவிகளுக்கும் அஞ்சி வாழும் நிலையில் இருக்கிறது இந்திய அரசு.
மீனவர்படுகொலை விஷயமாக பிரணாப் முக்கர்ஜி அது ‘விரும்பத்தக்கதல்ல’ என்று கருத்து சொல்கிறார். இத்தனை வருட இந்திய வரலாற்றில் இத்தனை சோதாத்தனமான ஒரு சொல் சொல்லப் பட்டதில்லை. அந்த பேச்சை எழுதிய வெளியுறவுத் துறை அதிகாரியின் மனநிலையை யோசித்துப் பாருங்கள். அதுவே இன்று இந்திய அரசின் மனம்.
இந்த ராஜதந்திர பேச்சுகள் எல்லாமே வீண்சொற்கள் என அரசை கொஞ்சம் அறிந்த எவரும் சொல்லமுடியும். இவர்கள் ‘கடுமையாக வருத்தம் தெரிவிக்க’ அவர்கள் பதிலுக்கு ‘கடுமையான வருத்தத்தை’ தெரிவிக்க ஒரு நாடகம் நடந்துகொண்டிருக்கிறது.
உண்மையில் இந்தியாவுக்கு அக்கறை இருந்தால் அந்த ராணுவக்குழு மீது இலங்கை என்ன நடவடிக்கை எடுத்தது என்று கேட்கவேண்டும். அந்த ராணுவ வீரர்களையும் அவர்களுக்கு பொறுப்பாக உள்ள அதிகாரியையும் கோர்ட்மாஷியல் செய்து தண்டிக்கச்செய்யவேண்டும். அதன்பின் இலங்கை ராணுவம் இந்தியாமேல் கையை வைக்குமா? இன்று அவர்கள் அங்கே கைவிடப்பட்டு கிடக்கும் இந்த மாபெரும் தேசத்தை எண்ணி சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா அதன் ஐம்பதாண்டுக்கால ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் பொருளியல் நலன்களை அறுவடைசெய்யும் நேரம் இது. இந்நேரத்தில் இத்தகைய சோதாக்களின் செயலின்மையால் இந்நாடு அழிவை நோக்கிச் செல்கிறது. தன் வயிறு கிழிக்கப்படுகையில் அதை வேடிக்கைபார்க்கும் ஆமைபோல வலியுணராத தேசமாக இது ஆகிவிட்டிருக்கிறது.
குடியரசு தினத்தில் இந்த நாட்டின் எதிர்காலம் பற்றிய அச்சமே மனதைக் கவ்வுகிறது
ஜெ